Q-20
“எபி 12:3 – “ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதபடிக்கு, நமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக் கொள்ளுங்கள்”.
R2313 (col. 2 P2)
நம்முடைய ஆண்டவர் நமக்காக நீடிய பொறுமையோடு பட்ட அவமானங்களை எண்ணுகையில் நம்முடைய நெஞ்சைத் தொடுகிறது. மேலும் அதைத் தொடர்ந்து தியானிக்கும்போது, நாம் மனம்வருந்தி, சீர்பொருந்துவதற்கு ஏதுவாக இருக்கிறது. நம்முடைய ஆண்டவரை ஏற்றுக் கொண்டு, உணர்வுப்பூர்வமாக அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டவர்களிடத்தில் இந்த வல்லமை குறைந்து போவதுமில்லை. இந்த சிந்தனை நம்மை உருகவைக்கும். ஏனெனில் அவர் நமக்காக செலுத்தின பலியினாலும், அவருடைய பாடுகளினாலும் உபத்திரவத்தினாலும் நாம் ஜீவனைப் பெற்றிருக்கிறோம். ஆகவே இயேசுவைப் பின்பற்றுபவர்கள் நீடிய பொறுமையோடும், சாந்தத்தோடும், கிறிஸ்துவுக்காக அனுபவிக்கும் துன்பத்திலும், அநீதியின் நிமித்தம் வரும் பாடுகளிலும், சோர்ந்துப் போகாமல் அனைத்தையும் சகிக்க நம்முடைய ஆண்டவராகிய இயேசுவை நினைத்துக் கொள்ளும்படி நமக்கு பாடம் கற்பிக்கிறார். (எபி 12:3) ஐசுவரியவானாக இருந்த அவர் நமக்காக தரித்திரரானாரே என்றும், நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ள அவர் மனப்பூர்வமாக தம்முடைய ஜீவனையே கொடுத்தாரே என்றும் மீண்டுமாக, அப்போஸ்தலர் கிறிஸ்துவின் பாடுகளைக் குறிப்பிடுகிறார். இப்படியாக “நாமும் சகோதர்களுக்காக நம்முடைய ஜீவனைக் கொடுக்க மனப்பூர்வமாக சம்மதிக்கவேண்டும்.
R2879 (col.2 P2)
பொதுவாக போராடுகிற ஜனங்கள் (மாம்சத்தில்) பழிவாங்கும் உணர்வுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் நம்முடைய ஆண்டவரிடத்தில், சுயகட்டுப்பாடு, சாந்தம், சகோதர சிநேகம், பரிவு, இரக்கத்தையும் கற்றுக்கொண்டவர்கள் – “தீமைக்குப் பதிலாகத் தீமை செய்யவேண்டாம்” – என்ற காரியத்தைச் செய்ய ஆயத்தப்பட்டவர்களாக இருப்பார்கள். நம்முடைய ஆண்டவர் வையப்படும்போது பதில் வையாமலிருந்தார் என்பதை அவர்கள் மாதிரியாக நோக்குவார்கள். அவர் பாவம் செய்து விட்டு, அதற்காக அவர் மெளனமாக இருந்தார் என்பது பொருள் அல்ல, மேலும், அவருடைய எதிரிகள் பூரணமாக இருந்தபடியால் அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை என்பதும் பொருள் அல்ல. அவர் தன்னை முழுமையாக தெய்வீக சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்திருந்தபடியால், ஜனங்களுடைய இகழ்ச்சியையும், தூஷணங்களையும் பொறுமையோடும், தாழ்மையோடும் சகித்தார். அழைக்கப்பட்டவர்களும் நீடிய பொறுமையுள்ளவர்களாக வாழ்ந்து, இப்படிப்பட்ட பாடங்களைக் கற்றுக்கொண்டு, நம்முடைய விசுவாசத்தை மெய்ப்பித்து, இயேசுவின் உண்மையான குணலட்சணங்களை நமக்குள் வளர்த்து, நம்முடைய வாழ்க்கையில் செயலாற்றி, அவர் ஜனங்களிடத்தில் இரக்கமுள்ளவராக இருந்ததுப்போல, நாமும் குருடராகவும், அறியாமையிலும் இருக்கக்கூடிய ஜனங்களுக்கு இரக்கம் பாரட்ட வேண்டும்.
ஆண்டவரின் குணலட்சணங்களில் வளர்ச்சியடைபவர்கள், தங்களை இகழ்வோரையும், தூஷிப்பவர்களையும் பொருட்படுத்தமாட்டார்கள். அனைத்தையும் இழந்தாலும், பாடுகளை சந்தோஷமாக அனுபவிக்க ஆயத்தமாக இருப்பார்கள். ஆகவே இக்காலத்தில் உங்கள் உபத்திரவங்களில் சந்தோஷமாகக் களிகூறுங்கள், ஏனெனில், இந்தப் பாடுகள் நாம் பெறப்போகிற மிகப்பெரிய மகிமைக்காக இன்று அனுமதிக்கப்படுகிறது. “உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை துன்பப்படுத்துபவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்” என்ற நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளோடு பேதுருவின் வார்த்தைகள் எவ்வளவு இசைவாக இருக்கிறது. (பிலி 3:8, 2 கொரி 4:17, மத் 5:44, ரோமர் 12:14) ஆகவே நாம் மற்றவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று அப்போஸ்தலர் வலியுறுத்துகிறார். ஓட்டப்பந்தயத்தின் இறுதி கட்டமாகிய இந்தக் குணத்தை நாம் இன்னும் பெறாமலிருந்தால், பூரண அன்பின் குறிப்பாக – நம்முடைய எதிராளிகளையும் சிநேகிக்கும் அன்பும், அவர்களை மனமுவந்து ஆசீர்வதிக்கும் உணர்வு, அவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம், அவர்களை இருளிலிருந்து தூக்கிவிடும் விருப்பம், மற்றும் அனைத்துக் காரியங்களும், தேவனுடைய தெய்வீகத் திட்டத்திற்கு இசைவாக இல்லாவிட்டாலும், நாம் தொய்ந்து போகவேண்டாம். வெகு சீக்கிரத்தில் இந்த இலக்கை எட்டிப்பிடிக்க நாம் முயற்சிப்போம். ஏனெனில், நிச்சயமாக ஓர் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
R2616 (col. 2 P1)
அப்போஸ்தலர் சில உபதேசங்களைச் சொல்லிவிட்டு, அதை நீடிய பொறுமையோடு சகித்தால், தேவனுடைய உண்மையான ஊழியக்காரர்கள் என்ற நிலையைப் பெறுவோம் என்று அறிவிக்கிறார் – “மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும், கற்பிலும், அறிவிலும், நீடியசாந்தத்திலும், தயவிலும், பரிசுத்தஆவியிலும், மாயமற்ற அன்பிலும், சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும், நீதியாகிய வலதிடது பக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும், கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும், எத்தரெனப்பட்டாலும் நிஜஸ்தராகவும், அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும், துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும், அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப் பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப் பண்ணுகிறோம்” (2 கொரி 6:4-10) நம்முடைய ஆண்டவர் உண்மையானவராக இருக்கும் பட்சத்தில், எப்பேர்பட்ட வஞ்சகன் என்று நினைக்கப்பட்டார். ஒளியின் பிரபுவாக இருக்கும்போது, அவர் பெயல்செபூலுக்கு தலைவன் என்று அழைக்கப்பட்டார். இப்படிப்பட்ட பழிகளை எவ்வளவு நீடிய பொறுமையோடு சகித்தார். அவரை பின்பற்றுகிற நாம் அனைவரும் சாத்தானின் நயவஞ்சகத்தினால் தவறாக குற்றம் சாட்டப்படும்போது, இப்படிப்பட்ட துன்பங்களை பொறுமையோடு சகிக்க கட்டாயமாக எதிர்பார்க்கப்படுகிறோம். இப்படிப்பட்ட துன்பங்கள் நம்முடையப் பாடுகளின் ஒரு பகுதி என்று நம்முடைய பிதாவாகிய தேவன் கூறுகிறார். ஏனெனில் – “என்னிமித்தம் உங்களை நிந்தித்து துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூறுங்கள், பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்” என்று இயேசு குறிப்பிட்டார்.
R3543 (col. 2 P2)
நமக்கு எதிராக இருப்போரிடம் நாம் எப்படியாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை நம்முடைய ஆண்டவர் யூதாஸோடு நடந்து கொண்ட விதத்தைத் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது, அதை மட்டும் அல்ல, அவர்கள் மனந்திரும்புவதற்கு நாம் செய்யவேண்டிய இறுதி முயற்சிகளையும் நமக்கு பாடமாக அங்கு வைத்திருக்கிறார் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், இயேசு தம்முடைய சீஷர்கள் கெட்டுப்போகாமலிருக்க நீடிய பொறுமையோடிருந்து, அவர்களை கடைசிவரைக்கும் செம்மையானப் பாதையில் வழி நடத்தி, அவர்களின் தவறுகளைத் திருத்தி, சீஷர்களாக மாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, சகல நன்மையான சூழ்நிலைகள் மத்தியிலும், தங்களுக்குள் இருக்கும் சுய நலத்தை வளர்த்து, மிகக் கடுமையானவர்களாக மாறுபவர்கள் ஆண்டவருடைய நேரடியான கண்டிப்பைக் கூட உணராமல், வசனங்களினால் எந்த மாற்றத்தை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளாமலிருப்பார்கள் என்ற பாடத்தையும் நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம். “அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்” என்ற பவுலின் வார்த்தைகளை இங்கு நாம் நினைவுகூறலாம். தேவனுடைய ஆவியை முழுமையாக தங்களுடைய இருதயத்தில் உள்ள சுய நலத்திற்காக முழுமையாக பயன்படுத்தும் போது, அவர்களை என்றுமே மனந்திருப்ப முடியாது.