CD-FAITH-Q-23
R2642 – “விசுவாசத்தின் முழு உறுதி”
“என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.” – சங் 23:6
சரியான நிலையில் இருக்கும் தேவ ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முழு நம்பிக்கையின் காப்புறுதியையும், விசுவாசத்தின் முழு காப்புறுதியையும் பற்றி பரிசுத்தவானாகிய பவுல் பேசுகிறார். (எபி 6:11,10:22) இதே கருத்தை தாவீது பக்தனும் வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் – “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி…” (பிலி 1:5) இப்படிப்பட்ட வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருந்தாலும், வெகு சில கிறிஸ்தவர்கள் மட்டுமே, விசுவாசத்தை முழுமையாக நம்புகிறார்கள். “நாங்கள் தேவனை நேசிப்பதினால், தேவனால் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களின்படி நாங்கள் பரலோக இராஜ்யத்தில் மகிமையான நிலையை அடைவதற்கு தேவனுடைய சகலவிதமான நன்மைகளும், கிருபைகளும் எங்களைத் தொடரும் என்று சந்தேகத்திற்கு இடமின்றி தைரியமாக சிலர் மட்டுமே இப்படி சொல்லமுடிகிறது. இந்தச் சிலர் மட்டுமே மிகுந்த சந்தோஷத்துடன், ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். இப்படிப்பட்ட இருதயத்தை மற்றவர்களிடம் காணமுடிகிறதில்லை. இப்படிப்பட்ட இருதயத்தைப்பெற அவர்களைத் தடுப்பது எது? ஆகவே விசுவாசத்திற்குள் இளைப்பாறுகிறவர்களின் எண்ணிக்கை இவ்வளவு சிறிதாக இருப்பதன் காரணத்தை நாம் காணலாம். இவர்களின் தடுக்கல் அதாவது தடைகள் என்ன? இந்தத் தடைகள் எப்படி அகற்றப்படுவது?
இரண்டு விதமான தடைகள் உள்ளது
(1) தேவனுடைய பக்கத்தில் இருக்கும் அநேகர், அவரால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், சத்தியத்தின் அறிவை அதிகம் பெற்றவர்கள், இயேசுவின் ஈடுபலியின் மேல் விசுவாசம் வைத்தவர்கள், வருங்கால ஜீவியத்திற்கு பலியின் ஜீவியமே முக்கியம் என்று உணர்ந்தவர்கள், இப்படியாக நீதிமானாக்கப்பட்டவர்கள், அடுத்து தேவனுடைய குடும்பத்தில் அவருடைய பிள்ளையாகவும், கிறிஸ்துவின் உடன் சுதந்தரராகவும், அவருடைய வாக்குத்தத்தங்களுக்குப் பங்காளிகளாவதற்கான அடுத்த நிலையை அவர்கள் இன்னும் கடக்காமலிருக்கிறார்கள். நம்முடைய அர்ப்பணிப்புக்கான முழு நோக்கம் இதுவே. நம்முடைய விருப்பங்களையும், நோக்கங்களையும், எதிர்காலத்தைக் குறித்தக் கவலைகளையும், இலக்குகளையும், நம்முடைய நேரங்களையும், செல்வாக்குகளையும், நாம் பெற்ற யாவையும் முழுமையாக தேவனுக்கென்று கொடுத்துவிட்டு, அவரிடம் சரணடைய வேண்டும். இப்படிப்பட்ட முயற்சிகளை எடுக்காவிட்டால், நாம் இன்னும் கிறிஸ்துவின் சிலுவையை எடுத்து அவர்பின் செல்லவில்லை என்று பொருளாகும். இப்பெரும்பாலான கிறிஸ்தவர்கள், தேவனுடைய வாக்குத்தத்தங்களை இக்காலத்துக்குரியதா? அல்லது வருங்காலத்திற்குரியதா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. ஒரு கோணத்தில் பார்க்கும்போது சரியாகவும் தோன்றுகிறது. ஏனெனில், அவர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்து, தங்களுடைய சரீரங்களை தேவனுக்கு ஏற்ற பலிகளாக நம்முடைய ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் மூலம் செலுத்தாவிட்டால், இந்தக் கேள்விக்கானப் பதிலை நிச்சயமாக அவர்களால் உணரமுடியாது.
இவர்கள் இனி ஒருபோதும் காலம் தாமதிக்கக்கூடாது என்று நாம் அவர்களுக்கு புத்திசொல்லுகிறோம். சர்வவல்லமையுள்ள தேவனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த மிகப்பெரிய வாய்ப்பை அவர்கள் நழுவ விடக்கூடாது. இனி மேலும் அவர்கள் அதே நிலையில் நின்றுவிட்டு, தேவனுடைய கிருபைகளைப் பயன்படுத்த தவறிவிட்டால் இதுவரைக்கும் நாம் பெற்ற தேவனுடைய சகல காரியமும் வீணாய்போய்விடும். (2கொரி 6:1) இயேசு கிறிஸ்துவின் மீட்பின் அறிவைப் பெற்ற யாவரும், பாவ மன்னிப்பைப் பெறவும், விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்கப்படவும், தேவனுடைய கிருபை இலவசமாகப் பொழியப்படுகிறது. நாம் செலுத்தக்கூடிய ஜீவ பலிகள், கிறஸ்துவின் பலியின் மூலம் தேவனுடைய பார்வையில், அவருடைய பலிபீடத்தின் மேல் அங்கீகரிக்கப்படுவதற்காகவே இப்படிப்பட்ட இலவசமான கிருபை கொடுக்கப்படுகிறது. தேவன் கொடுக்கும் கிருபைக்கு ஒரே நோக்கம் இதுவே.
ஆகவே யாதொருவர் இவைகளை உணர்ந்து, வாய்ப்புகளை அறிந்தும், தான் பெற்றிருக்கும் மிகச்சிறிய பங்கை அர்ப்பணிக்க மறுக்கிறார்களோ! அவர்கள் கிறிஸ்துவின் அன்பைப் பெறாதபடிக்கு தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு, தங்கள் மேல் பொழியப்படும் கிருபையையும், இரக்கத்தையும் உணர மறுக்கிறார்கள். தாங்கள் பெற்ற வாய்ப்புகளைப் புறக்கணிக்கும் இவர்கள், தங்களுடைய அபூரணமானப் பலிகளைச் செலுத்தத்தவறிய இவர்கள், இயேசுவின் இராஜ்யத்தில் அதற்கு அதிகமான நஷ்டத்தை அடைவார்கள். இவர்கள் தேவனுடைய கிருபையை வீணிலே வழங்கி, எந்த நன்மையையும் பெறாமல், எல்லாவற்றிற்கும் மேல் இருளில் இருக்கும் உலகக் காரியங்களில் மூழ்கிவிடுகிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் என்ன செய்யவேண்டும்? உடனடியாக, தங்களை தேவனுடைய பணியில் அர்ப்பணிக்கவேண்டும். காரியம் சிறிதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி. ஆனால் இக்காலத்தில் எந்தவிதமான நன்மைகளும் பெறாவிட்டாலும், அவர்கள் பெற்றக் கிருபையை அவர்களின் கிரியைகளினால் எப்படியாவது வெளிப்படுத்தவேண்டும். நாம் பெறும் சிறுசிறு தெய்வீகக் கிருபைகளையும் நாம் புரிந்துகொண்டு போராடவேண்டும். ஆனால் பலவீனமான சிந்தை, நியாயத்தீர்ப்புகள் நம்மை மீண்டும் இந்த உலகக் காரியங்களில் இழுத்து விடாதபடிக்கு எச்சரிப்போடிருக்கவேண்டும். ஏனெனில், விழுந்துபோன சிந்தையானது சகலத்தையும் சீர்தூக்கிப்பார்க்க மறுக்கும். நாம் உபத்திரவப்படவேண்டியது இன்னும் கொஞ்சம் காலம் தான், ஆனால் நம்முடைய ஆண்டவரோடு, அனுபவிக்கப் போகிற நித்திய சந்தோஷத்திற்கும், ஆசீர்வாதங்களுக்கும், மகிமைக்கும் அளவே இல்லை.
அடுத்து, உண்மையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்கள், முழுமையாக இக்காலத்தில் பெற்றிருக்கும் ஆவிக்குரிய ஜுவியத்தில் முழுமையாக மகிழ்ச்சியடைவார்கள். உண்மையில் இந்த உலகம் கொடுக்க முடியாததும், எடுக்கமுடியாததுமான தெய்வீக சமாதானத்தை அவர்களின் உள்ளம் பெற்றிருக்கும். இந்த முழு உலகம் தேடியும், தவித்தும் பெறமுடியாததை, தேவனிடம் தங்களை முழுமையாக அர்ப்பணித்து அவருடைய ஜனங்கள் பெற்றுக்கொள்கிறார்கள். ஆகவே நிர்விசாரமானவர்களைத் தேவனோடு அவர்களின் உடன்படிக்கையை புதுப்பித்துக்கொள்ள நாங்கள் வேண்டுகிறோம். இதுவே தேவனுடைய சுதந்தரத்திற்கு அவர்களைப் பங்காளிகளாக ஆக்கமுடியும். ஆகவே அவர்கள் “விசுவாசத்தின் முழு காப்புறுதியின்” மற்றும் “தேவனுடைய கிருபை, நன்மை இந்தக் காலத்திலும், வருங்காலத்திலும் அவர்களை பின் தொடர்ந்து, பரலோக வீட்டில் நித்தியமாக பிரவேசிப்போம் என்ற முழு நம்பிக்கையின்” அஸ்திபாரத்தை அடித்தளமிட்டு, அதற்குள் பிரவேசிக்க வேண்டும்.
(2) உண்மையான கிறிஸ்தவர்கள் மத்தியில், தங்களை முழுமையாக ஜீவபலியாக தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்தவர்களில் அநேகர் – “தேவனுடைய நன்மைகளையும் கிருபைகளையும் இப்போதே நாங்கள் உணருகிறோம். இவைகள் எங்களுடைய வாழ்க்கையில் தொடர்ந்து எங்களை நடத்தும். நாம் நித்தியமான தேவனுடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிப்போம். ஆகவே எங்களிடம் முழுமையான நம்பிக்கையும், விசுவாசத்தின் உறுதியும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். நாங்கள் கர்த்தரை ஏற்றுக்கொண்டோம், ஆவருடைய கிருபையினால் நாங்கள் அனைத்தையும் மேற்கொள்ளுவோம்” என்று தைரியமாக கூறுகிறார்கள். ஆனால் இந்த வகுப்பாரின் குறை என்ன? இவர்கள் தேவன் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தில் சற்று குறைவு படுகிறார்கள். “விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்துவது கூடாதக் காரியம், “நம்முடைய விசுவாசம் உலகத்தை ஜெயிக்கும் ஜெயமாக இருக்கவேண்டும்” விசுவாசத்தின் கேடயத்தைப் பிடித்திராதவர்கள் சாத்தானை எதிர்க்கமுடியாது. (எபி 11:6, 1யோவ 5:6)
நம்முடைய விசுவாசத்தின் குறைச்சலை மேற்கொள்வதற்கும், விசுவாசத்தை அதிகரிப்பதற்கும் நாம் என்னசெய்யவேண்டும்? “ஆண்டவரே எங்கள் விசுவாசத்தை அதிகரித்தருளும்” என்று நாம் அப்போஸ்தலரைப்போல் ஜெபித்து விட்டு, அதற்கு இசைவான கிரியைகளை நடப்பித்து, நம்முடைய இருதயத்தில் விசுவாசத்தை வளர்க்கவேண்டும்.
(a) தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நம்முடைய நினைவில் ஓயாமல் சிந்தித்து, தேவனுடைய வார்த்தைகளில் பரிட்சயமாக இருக்கவேண்டும்.
(b) நாம் தேவனோடு செய்த உடன்படிக்கையைத் தொடர்ந்து நினைவில் கொள்வதற்கு நம்முடைய இருதயத்திலும், உதடுகளிலும், அறிக்கையிட்டு அவருக்கு நன்றிகளை ஏறெடுக்க வேண்டும். நம்முடைய சிந்தையிலும், சகோதரர்களோடு சம்பாஷிக்கும் போதும் பரிசுத்தமான சிந்தைகளோடு அவைகளைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.