CD-FAITH-Q-8
ரோமர் 5:1 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
A231 (P4)
சபை மகிமையடைவதற்குக் கடக்கவேண்டிய அதே படிகளை நம்முடைய ஆண்டவரும், போதகருமானவர் கடந்ததினால், “நாம் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றும்படி அவர் ஒரு மாதிரியை ஏற்படுத்தினார்” – நாம் மரண நிலையிலிருந்து இந்த ஓட்டத்தைத் துவக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆனால் நம்முடைய ஆண்டவர் இந்த உலகத்திற்கு பூரண நிலைமையில் வந்ததால் (N) அந்நிலையிலிருந்து, இந்தப் பயணத்தைத் துவங்கினார். நாமோ ஆதாமின் சந்ததியாராக இருப்பதினால் மரண நிலையில் இருந்தோம். (R) – இது பாவமுள்ள, அபூரணம் மற்றும் தேவனுடைய சத்துருக்கள் என்ற நிலையையும் குறிக்கிறது. ஆகவே முதலில் நாம் இந்த மரண நிலையிலிருந்து, (R) பூரண நிலைக்கு (N) வருவதே, நமக்குத் தேவைப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இது எவ்வாறு சாத்தியப்படும்? இது நற்கிரியைகளால் கூடுமா? எந்தப் பாவிகளும் நற்கிரியைகளை நடப்பிக்க முடியாதே. நாம் எவ்விதத்திலும் இதை தேவனிடம் கேட்க தகுதியற்றவர்களாக இருக்கிறோம். ஆகவே தேவன் – “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” (ரோமர் 5:8) இப்படியாக, நம்முடைய பாவங்களுக்காக இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்டு, மரணநிலையிலிருந்த நம்மை “அவருடைய இரத்தத்தின் மேலுள்ள விசுவாசத்தினால்” அவர் இரட்சித்து, ஆதாம் படைக்கப்பட்ட நிலையும், அதிலிருந்து அனைவரும் விழுந்துபோன அந்தப் பரிபூரண நிலைக்கு மறுபடியும் மேலே தூக்கி எடுத்தார். இப்படியாக, “நாம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுகிறோம்.” (N) நிலைமைக்கு உயர்த்தப்படுகிறோம். விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுபவர்கள் தேவனோடு சமாதானம் கொண்டிருப்பார்கள். (ரோமர் 5:1) இனி அவர்கள் ஒரு போதும் தேவனுடைய எதிராளிகளாக எண்ணப்படாமல், தேவனுடைய புத்திரர்களாகக் கருதப்படுகிறார்கள். இயேசு இந்த உலகத்திற்கு வந்த அதே பூரண நிலையில் நாமும் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம். இயேசு உண்மையில் பரிபூரணராக இருந்தார் ஆனால் நாமோ பரிபூரணமானவர்கள் என்று கருதப்படுகிறோம். நாம் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டு, இரட்சிக்கப்பட்டு, நீதிமானாக்கப்படுகிறோம். இப்படிப்பட்ட ஒரு நிலைமையை – தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக நாம் உணர்ந்துகொள்ளலாம். விசுவாசத்தினால் நாம் அணிந்திருக்கும் கிறிஸ்துவினுடைய நீதியின் சால்வையினால் போர்த்தப்பட்ட நிலைமையில் நாம் இருப்பதினால், தேவனுடைய பார்வையில், குற்றமற்றவர்களாகவும், கறையற்றவர்களாகவும், பரிசுத்தமாகவும் தோற்றமளிக்கிறோம். நம்முடைய பாவங்களை அவர் சுமந்து, ஒரு பாவியை போலாகி, அதற்குரிய தண்டனையை அவர் பெற்றுக்கொண்டு, நமது சார்பாக அவர் மரித்தார். ஆகவே அவருடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும், மனுக்குலம் பாவத்தில் விழுமுன் பெற்றிருந்த எல்லா உரிமைகளும், ஆசீர்வாதங்களும் மீண்டும் கொடுக்கப்படுகிறது. இந்த சிலாக்கியம் நம்மை ஜீவனுக்குள் வழிநடத்தி, தேவனோடு தொடர்பு கொள்ள செய்கிறது. விசுவாசத்தின் பயிற்சியின் மூலம் இந்த உறவை நாம் துவங்குகிறோம். அதை தக்கவைத்துக் கொள்ளும் பட்சத்தில் தேவன் “குறித்தக் காலத்தில்” அவரோடு நித்தியமாக என்றுமே ஜீவிப்போம்.
R2651(col. 2P5) – R2652 (col. 1P1)
“அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது” (ரோமர் 6:29) என்ற ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு உண்டான விளக்கத்தைக் காண்போம். இங்கு விசுவாசத்தோடு கிரியையும் சம்பந்தப்பட்டிருக்கிறது. இது கரங்களினால் செய்யப்படும் வேலை அல்ல, மாறாக, நம்முடைய தலையினாலும், நம்முடைய இருதயத்தினாலும் செய்யப்படுவதாக இருக்கிறது. நம்முடைய கரத்தினால் செய்யப்படும் எந்தவிதமான கிரியைகளைக் காட்டிலும், இருதயத்தினால் செய்யப்படும் கிரியைகளையே கர்த்தரின் பார்வையில் மேன்மையாக அங்கீகரிக்கப்படுகிறது. ஏனெனில், நம்முடைய விழுந்துபோன நிலையில் எந்த ஒரு கிரியைகளையும் பூரணமாக செய்ய இயலாது என்று நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம். ஆனால் தேவன் பூரணமானவர், அவருடைய வேலைகள் அனைத்தும் பூரணமாகவே உள்ளது. ஆகவே அவர் ஒருகாலத்திலும், இந்த அபூரணமான கிரியைகளை அதாவது சிறிதளவும் பாவமுள்ள செயல்களோடு, ஏற்றுக்கொள்ளமாட்டார். மிகச் சிறந்த முறையில் நாம் செய்த வேலைகளை தேவனுக்கு அர்ப்பணித்தாலும், விசுவாசம் இல்லாமல் அந்தக் கிரியைகள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
தேவன் ஒரு மிகப்பெரிய வேலையை நமக்காகச் செய்ய ஆலோசித்திருக்கிறார் – நாம் பந்தய சாலையில் ஓடுவதற்காக தன்னுடைய ஜீவனை ஈட்டு கிரயமாகக் கொடுப்பதற்கு நமக்காக ஓர் இரட்சகரைத் தந்ததின் மூலமாக இந்த மாபெரும் காரியத்தை செய்தார். இப்பொழுது தேவன் இயேசுவின் மேல் விசுவாசம் உள்ளவர்களை நீதிமான்களாக்குகிறார். ஆகவே, நாம் நியாயத்தீர்ப்பின் கீழ் இருப்பதினால், இயேசுவை நாம் விசுவாசிக்கும் வரைக்கும், நம்முடைய எந்த வேலைகளும் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆனாலும், அவர் தாமே செய்த முன்னேற்பாட்டினால், கிறிஸ்துவின் மேலுள்ள நம்முடைய விசுவாசத்தை அவர் ஏற்றுக்கொண்டு, இந்த விசுவாசத்தின் மூலமாக நம்மை நீதிமானாக்குகிறார். இதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இதன் அடிப்படையில் செய்யப்படாத எந்த வேலைகளையும் தேவன் ஏற்றுக்கொள்வதில்லை. தேவனுடைய பார்வையில், அனைவரும் விசுவாசத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளும்படியாக இப்படி செய்தார். “விசுவாசம் இல்லாமல் தேவனை மகிழ்விப்பது கூடாத காரியம்.” அதிகமாக விசுவாசத்தில் பயிற்சி பெற்றால், தேவனை அதிகமாக மகிழ்விக்கலாம் – நிச்சயமாக கட்டுக்கதைகள், தேவன் சொல்லாதக் காரியங்கள் மற்றும் நாம் அல்லது மனிதர்களின் கற்பனைகளை நம்புவது விசுவாசம் அல்ல. தேவன் சொன்னவைகளை உறுதியாக நம்புவதே விசுவாசம், இதையே தேவனும் ஏற்றுக்கொள்கிறார். இதை அப்பியாசப்படுத்தும் ஒவ்வொருவரையும் அவர் நீதிமானாக்குகிறார் – “இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.” (ரோமர் 5:1)
இதற்கு மேல் சுவிசேஷ யுகத்தில் அழைக்கப்படும் பரம அழைப்பைக் குறித்து ஆண்டவர் இங்கு வேறொன்றும் விவரிக்கவில்லை. அதைக் குறித்து நாம் காணலாம். தேவனை தேடுவதற்கான முதல் படி – நீதிமானாக்கப்படுதல் – இதை குறித்தே அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையை நாம் பெற, கிறிஸ்துவை நம்முடைய ஜீவனுக்குரிய அப்பமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். தந்தையாகிய ஆதாமின் மீறுதல்களினால், மரணம் நம் அனைவரின் மேலும் வந்தது. நமக்குள் தேவன் தந்த பூரணமான ஜீவன் நமக்குள் இல்லை என்பதை, நாம் அனுபவ ரீதியாக முதலில் உணரவேண்டும். நம்முடைய பிதாவாகிய ஆதாமின் மேல் வந்த மரணத்தை நீக்க ஆண்டவராம் இயேசு மாம்சமாகி, தன்னுடைய ஜீவனையே ஈடுக் கிரயமாகக்கொடுத்ததினால் இப்பொழுது, கிறிஸ்துவுக்கு தேவனுடைய இந்த இலவசமான கிருபையை ஏற்றுக்கொள்பவர்கள், கிறிஸ்துவின் பலியின் நன்மைகளைத் தனக்குள் ஏற்றுக்கொண்டு, இதினிமித்தம் இந்த உலகத்திற்குத் தன்னுடைய ஜீவனையே ஈடு பலியாகக் கொடுத்து அபிஷேகம் செய்தவரின் மூலமாக தேவன் கொடுக்கும் சகல ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் பெற்றுக் கொள்பவர்கள், மனரீதியாக இந்த உண்மைகளை ஒப்புக்கொண்டு, இருதயப் பூர்வமாக ஏற்றுக்கொள்பவர்கள், மனுஷகுமாரனின் மாம்சத்தைப் புசிப்பவர்களாக இருக்கிறார்கள் – இவர்கள் இந்த யுகத்தில் கிறிஸ்துவுக்குள் கொடுக்கப்பட்ட சகல வாய்ப்புகளையும், ஆசீர்வாதங்களையும், மனித உரிமைகளையும், பயன்படுத்திக் கொள்வார்கள்.