CD-EVILSPEAK-Q-6
R3594 (col.1 P1-5): –
தொட்டா சினுங்கி போல, மற்றவர்களால் எளிதில் துன்பப்படாதீர்கள். மற்றவர்களின் வார்த்தைகளையும், செயல்களையும் அன்புள்ளதாக ஏற்றுக்கொள்ளுங்கள். அற்பமான காரியங்களும், சிறிய தர்க்கங்களும், அன்பு என்னும் வஸ்திர மூடலினால் கவனியாமல் விட்டுவிடலாம். முக்கியமான குற்றங்கள் தற்செயலாகவோ, அறியாமையினாலோ நடந்து விட்டதாக நாம் அனுமானிக்கலாம். மேலும் இவைகளை விசாரிக்கும்போது, கோபத்தை கிளறிவிடாமல், கிருபை பொருந்திய வார்த்தைகளினால், கனிவோடு பேசவேண்டும். அநேக பிரச்சனைகளில், குற்றங்களை பொருள்படுத்தாமல் எளிதில் அவர்களை மன்னித்துவிடலாம்.
“தீமையான அனுமானங்கள்” – மற்றவர்களின் வார்த்தைகளுக்குள்ளும், கிரியைகளுக்குள்ளும் உள்ள நோக்கங்களைத் தீமையாக கற்பனை செய்யக்கூடாது, என்ற பிரமாணத்தின் கீழ் இந்தக் கட்டளை கொடுக்கப்படுகிறது. நம்முடைய ஆண்டவராம் இயேசுவின் தெய்வீகத்திற்கு – “தீமையான அனுமானங்கள்” முற்றிலும் எதிரான நிலையில் இருப்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுகிறார். மேலும் கறைப்பட்ட சிந்தனை, மாம்சம் மற்றும் சாத்தானின் கிரியைகள், பொறாமைகள், சண்டைகளையும் இதற்கு ஒப்பாக பேசுகிறார். – 1 தீமோ 6:3-5, கலா 5:19-21
பாடத்தின் மறுபக்கத்தில், புதிதாக ஜெநிப்பிக்கப்பட்ட தேவனுடைய ஜனங்கள், நித்தமும் வளர்ச்சி அடைய வேண்டிய, ஆவியின் கனிகளை பற்றிய கட்டளைகளை, பவுல் வரிசைப்படுத்துகிறார். இதில் வளர்ச்சி அடைவதே “வெற்றி பெற்றதற்கு” முக்கிய ஆதாரமாக நிரூபிக்கப்படுகிறது. “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது,… தீங்கு நினையாது,… அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.” (1 கொரி 13:4-7) என்று அவர் கூறுகிறார்.
இப்படிப்பட்ட தீமையான எண்ணங்கள் அடிக்கடி தூண்டப்பட்டு, தீமையான விருப்பங்கள் உருவாக வற்புறுத்தப்படும். ஆனால் அன்பின் ஆவியை பெற்றவர்கள் மிகவும் மிருதுவாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் பெற்ற அனுபவத்தினால், “தேவனுடைய பக்தியையும், பயத்தையும் உடனடியாக புரிந்துகொள்ளும் திறனும்” அதிகரித்து, அன்பில் வளர்ச்சி அடைந்த நிலையை பெறுவார்கள். மேலும், தீமையை பார்க்கும் போதே, அவர்கள் எச்சரிப்பாக இருப்பார்கள். தீமையான எண்ணங்கள் மறுக்கமுடியாதளவுக்கு உண்மையான ஆதாரங்களோடிருப்பினும் அவர்கள் எச்சரிக்கையாயிருப்பார்கள். அறியாமையில் உள்ள மனுஷனை பழிச்சொல்லி, அபாய நிலையை அடைந்து, சில இழப்புகளை சந்திப்பதற்கு பதிலாக, அற்பமான காரியங்களை விட்டுவிடுவது நலமாயிருக்கும். நாம் இந்தக் கட்டளைகளை பின்பற்றுவதினால், சந்திக்கும் இழப்புகளை, சரியாகவும், அதற்கு மேலாகவும், சரிகட்டுவதற்கு இப்படிப்பட்ட, ஆலோசனையைக் கொடுத்த தேவன், வல்லமையுள்ளவராக இருக்கிறார். அவரை உண்மையாக நேசிப்பவர்களுக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் அனைத்தும் நன்மைக்கு ஏதுவாக நடக்க அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார். அவருடைய முன்னேற்பாட்டில், கீழ்ப்படிதலை முதலில் வைத்திருக்கிறார். “நீங்கள் என்னுடைய சீஷர்களாக இருந்தால் என்னுடைய கட்டளைகளை கைக்கொள்ளுங்கள்”
“தீமையான அனுமானங்கள் அல்லது அவதூறு பேசி.” தேவனுடைய கற்பனைகளை புறக்கணிக்கும், ஒருவர் தனக்கு தானே வலையை பின்னிக் கொண்டு எவ்வளவு சாதுரியமாக மற்ற காரியங்களில் நடந்துகொண்டாலும் தானே அதில் விழுந்துவிடுவார், ஏனெனில், சகோதரரைப் பொறுத்தவரையில் அவரின் இருதயம் சந்தேகங்களினாலும், அவ நம்பிக்கையினாலும் நிறைந்திருப்பதால் தேவனையும் சந்தேகிக்க மனது ஆயத்தப்படுகிறது. அதாவது கசப்பான ஆவி தேவ ஆவியோடும், அன்பின் ஆவியோடும் போராடுகிறது என்று பொருள்படுகிறது. ஏதோ ஒன்று மற்றொன்றை ஜெயிக்கும். தவறான ஆவி விரட்டப்படவேண்டும். இல்லாவிட்டால் புது சிருஷ்டியை மாசுபடுத்திவிட்டு, அழித்துவிடும். இதற்கு எதிராக புது சிருஷ்டி ஜெயித்துவிட்டால் – தீமையான எண்னங்கள் மேற்கொள்ளப்பட்டு, பிரச்சனைகள் மற்றும் விரோதிகளுக்கு எதிரான போரட்டம் மேற்கொள்ளப்படும். எண்ணங்கள் இருதயத்திலிருந்து தோன்றும், அவைகள் நம்மை நன்மையான வார்த்தைகளுக்கும் கிரியைகளுக்கும் அல்லது தீமையான வார்த்தைகளுக்கும் கிரியைகளுக்கும் வழி நடத்துகிறது.