Q-23
(a) ஜெபத்தின் வழியாக
R2005 (col.2 P8) – R2006 (col.1)
இதை தொடர்ந்து நாம் விசேஷமாக பார்க்கும்போது, ஜெபத்திற்கான சிறப்புரிமை அல்லது தேவனிடத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் எந்தவிதமான கிருபைகளும் சுயநலமானக்காரியத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. உகந்த காரியத்தை விரும்பி அதை கேட்கும் பட்சத்தில், அதே காரியம் மற்ற நோக்கத்துடன் கேட்கும்போது அது தவறாகக் காணப்படும். ஆகவே நம்முடைய சகோதரர்கள் மத்தியில் நாம் மகிமைப்படும்படி எந்த நன்மையானக் காரியங்களை தேவனிடத்தில் விண்ணப்பித்தாலும், அது தவறாகும். ஏனெனில் அந்த நோக்கம் தவறானதாக இருக்கிறது.
ஆகவே நம்முடைய வசதிக்காகவும், சௌகரியத்திற்காகவும், நன்மையானக் காரியங்களை விரும்புவது தவறு. இப்படிப்பட்டவர்களைக் குறித்து அப்போஸ்தலர் – “நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.” (யாக் 4:3) சோதிப்பதற்காக நாம் ஏதோ நன்மையான காரியத்தைக் கேட்டு, அதற்குப் பின் நம்முடைய விசுவாசத்தை ஸ்தாபிப்பது போன்ற காரியங்கள் ஒழுங்கற்ற செயலாகும். ஆனால் முழுமையான விசுவாசிகளுக்கு அனைத்தும் வாக்களிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், தேவனுடைய திட்டத்தைப் பொறுத்தவரையில், நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். ஆகவே அங்கீகாரம் பெறாத எந்தக் காரியத்தையும் நாம் விண்ணப்பிக்கக்கூடாது. நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவே இருக்கவேண்டும். ஆவிக்குரிய காரியங்களுக்காக நாம் வேண்டுதல் செய்தாலும், அவைகள் இன்னவிதத்தில் நாம் பெற்றுக்கொள்வோம் என்று எதிர்பார்க்கக்கூடாது. அதாவது நம்முடைய ஜெபங்களுக்கானப் பதிலை எந்தவிதமான அற்புதத்தின் வழியாக அல்ல இயற்கையான முறையிலேயே நாம் எதிர்பார்க்கவேண்டியவர்களாக இருக்கிறோம். இயற்கையான வழிகள் குறைவுபடும்போது இயற்கைக்கு அப்பாற்பட்ட முறைகளை தேவன் பயன்படுத்துவார்.
நாம் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்காக வேண்டுதல்களும், விண்ணப்பங்களும் உடனடியாகப் பதில் அளிக்கப்படும் என்று நாம் உறுதியளிக்கப்படுகிறது. “பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.” (லூக் 11:13)
அநேகர் சந்திக்கும் பிரச்சனை என்னவெனில், கிறிஸ்துவையும் அவருடைய வார்த்தைகளையும் காத்து நடப்போரின் ஆவிக்குரிய தேவைகளுக்காக தேவன் சேர்த்துவைத்திருக்கும் தெய்வீக கிருபைகளைப் பயன்படுத்தாமல் விட்டுவிடுவதேயாகும். அனைத்து ஜெபங்களும் சுய நலமானவைகள் என்று ஒருவரும் கருதவேண்டாம். இதற்கு எதிராக நாம் தேவனுடைய சித்தத்தின்படியும் அவருடைய வார்த்தைகளின்படியும், நாம் ஜெபிப்பதற்கு முழு சுதந்திரம் பெற்றிருக்கிறோம்.
விசுவாசம் மற்றும் பொறுமையை சோதிக்கும் ஒவ்வொரு சோதனையும் நமக்களிக்கப்பட்டிருக்கும் வாக்குத்தத்தங்களை நினைவுக்கூறும் ஜெபங்களை ஏறெடுப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. ஒவ்வொரு தோல்வியும் வெற்றி பெறுவதற்காகவும், மன்னிப்பைப் பெறுவதற்காகவும், தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகவும் ஜெபிக்க வாய்ப்பாக இருக்கிறது. நம்முடைய பலவீனங்களுக்காகவும், அடுத்தமுறை நாம் ஏற்ற நேரத்தில் கிருபாசனத்தண்டைக்குப் போகும்படி நமக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கு நாம் ஜெபங்களை ஏறெடுக்கலாம். ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும், நம்மை நாம் உயர்த்தாதபடிக்கு தாழ்த்திக்கொள்வதற்கும், மேட்டிமையான சிந்தை கொள்ளாமல் இருப்பதற்கும், அடுத்து சாத்தானின் வஞ்சகமான சோதனையை கவனிப்பதற்கும் நாம் ஜெபிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுகிறது. சத்தியத்திற்கு நாம் ஒவ்வொருமுறையும் ஊழியம் செய்யும்போதும், அப்படிப்பட்ட வாய்ப்புகள் மேலும் கிடைத்து, அதை ஞானமான முறையில் பிரயோஜனப்படுத்திக்கொள்ளவும் தேவனுக்கு நன்றிகளை ஏறெடுப்பதற்கு ஜெபிக்க வாய்ப்புகள் கிடைக்கிறது.
நீங்கள் மேற்கொள்ளத்தக்கதான சோதனைகள் வந்தபின், பொறுமை, அனுபவம், சகோதர அன்பு, இரக்கம் மற்றும் பல நல்ல குணங்கள் உங்களுக்குள் அதிகரிக்கும்போது, தேவன் கொடுத்த தெய்வீக கிருபைக்காகவும், உதவிகளுக்காகவும் களிகூர்ந்து அவருக்கு நன்றிகளை ஏறெடுங்கள். உங்கள் சோதனைகள் உங்களால் சுமக்கமுடியாத அளவு பாரமாக இருந்து, உங்களை நசுக்கிப்போடும் என்று நீங்கள் எண்ணினால், பாரம் சுமக்கிறவரிடத்திற்கு அதை கொண்டுபோங்கள். நீங்கள் நன்மைகளைப் பெறும்படி எதை சுமக்கவேண்டும் என்பதையும், உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தாத காரியங்களை எவ்வாறு அகற்றுவது என்றும் உங்களை சேதப்படுத்துவது எது என்றும் அறிந்துகொள்வதற்கு அவரிடத்தில் உதவி கேளுங்கள். நீங்கள் உங்கள் முழு மனதோடு ஆண்டவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று விரும்பினால் – “சபை கூடுதலை மறந்துவிடாதீர்கள்”. நீங்கள் காரணமின்றி உங்கள் வழிகளில் தடுக்கப்பட்டு, அதை மேற்கொள்ள உங்களால் முடியாமல் போனால், தேவனிடத்தில் ஜெபத்தில் தெரிவியுங்கள். அதற்கு பின் உங்களுடைய ஜெபத்திற்கு இசைவாக கிரியை செய்து காத்திருங்கள், வெகு சீக்கிரத்தில் தெய்வீக வல்லமை உங்கள் சார்பில் செயல்படுவதை நீங்கள் உணரலாம். ஒரு உண்மையான சகோதரன் சோதனையிலோ, வேறு எந்த அபாயத்திலோ அகப்பட்டதை நீங்கள் கண்டால், உங்கள் இருதயம் சகோதர அன்பினால் நிரம்பி வழியட்டும். அவரை விடுவிப்பதற்காக நீங்கள் வேகமாக செயல்படுவதோடு, அவரை விடுவிக்கும் வரை அல்லது அவரை மீண்டுமாக இடுக்கமான பாதையில் வழிநடத்தும் வரை அவருக்காக நீங்கள் கிருபாசனதண்டையில் ஏறெடுக்கும் ஜெபங்கள் தொடர்ந்து ஏறெடுக்க வேண்டும். நீங்கள் குறைவுள்ளவர்களாக இருந்தாலும், உங்களுடைய ஜெபங்களும், முயற்சிகளும் ஆசீர்வதிக்கப்பட்டு நீங்கள் நன்மையடைய வழிவகுக்கும். இந்த நற்செய்தியை அறிவிப்பதற்குப் பற்றி எரிகிற வைராக்கியம் உங்களுக்குள் இல்லாவிட்டால், தேவனிடத்தில் விசுவாசத்தோடு ஜெபியுங்கள், அவைகளை நீங்கள் பெறக்காத்திருங்கள். சீக்கிரத்தில் பெற்றுக் கொள்வீர்கள். உங்களுக்கு சுவிசேஷத்தின் மேல் அதிகமான அன்பும், வைராக்கியமும் இருந்தும் அவைகள் அறிவிக்க உங்களுக்கு வல்லமையில்லாதிருந்தால், தேவனிடத்தில் ஜெபியுங்கள். உங்களுக்கு சத்தியத்தை அறிவிக்க வாய்ப்பில்லை என்றாலும் ஜெபியுங்கள், நீங்கள் பெற்றிருக்கும் சின்னசின்ன வாய்ப்புகளை சந்தோஷத்துடனும் மனத்தாழ்மையோடும் பயன்படுத்துங்கள். தேவன் அதிகமான வாய்ப்புகளை உங்களுக்குக் கொடுப்பார்.
வாக்குவாதங்கள் இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தினருக்கு, சகோதரர்களுக்கு பாரமான மற்ற தீய பழக்கவழக்கங்கள் இருந்தால், அவைகளைத் தேவனிடத்தில் ஜெபத்தில் ஏறெடுங்கள். இந்தப் பழக்கங்களை மேற்கொள்ள வல்லமையைக் கேளுங்கள். இதற்கு இடையில் உங்கள் ஜெபங்களுக்கு இசைவாக அந்தப் பழக்கங்களிலிருந்து விடுபட நீங்கள் கடும் முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஞானத்தில் குறைவுள்ளவர்களாக இருப்பதால் தேவனுடைய காரியங்களைச் செய்வதிலும், சத்தியத்தின் ஊழியங்களிலும் நீங்கள் தோல்வியடைந்தால் “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” (யாக் 1:5) என்ற வாக்குத்தத்தத்தை நினைவுப்படுத்திக் கொண்டு தேவனிடத்தில் முறையிடுங்கள்.
உங்கள் அஜாக்கிரதையினால் அல்லது மிகுந்த இரக்கத்தினால் அல்லது தவறானத் தீர்ப்பினால் உங்களுடைய தொழிலில் ஏதேனும் பிரச்சனைகளா? இது உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சியைப் பாதிப்புக்குள்ளாக்குகிறதா? தேவனுடைய கிருபாசனத்தண்டையில் இதைக் குறித்து நீங்கள் ஜெபிப்பது மிகவும் ஏற்றதாக இருக்கும். உங்களுக்கு எந்த வழியிலிருந்து விடுதலை வரவேண்டும் என்ற கட்டளையை நீங்கள் கொடுப்பதற்குத் தகுதியற்றவர்களாக இருந்தாலும், அந்தச் சூழ்நிலையில் நீங்கள் ஞானமாக செயல்படுவதற்கு ஏற்ற வழி நடத்துதலை நீங்கள் கேட்கலாம். அப்பொழுது உங்களுடைய ஞானத்திற்கு மேல் தேவனுடைய ஞானம் செயல்பட்டு நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல முடிவுகளைக் கொடுக்கும்.
(b) அறிவில் வளர்ச்சியடைய வேண்டும்
R3136 (col. 1 P5)
“அனைவரிடமும் பொறுமையாயிருங்கள்” என்ற காரியம் தேவனுடைய ஜனங்கள் மத்தியில் தேறினவர்கள் மற்றவர்களிடம் பொறுமையாக இருக்கவேண்டும் என்று குறிப்பிடுவதைப் போல் தோன்றுகிறது. ஆனால் அனைவரிடமும் நாம் நீடிய பொறுமையோடிருக்க வேண்டும். “உங்களுக்கு பொறுமை மிக அவசியம்” என்று அடிக்கடி வேத வசனங்கள் குறிப்பிடுகிறது. நாளுக்கு நாள் வளரக்கூடிய தேவனுடைய பிள்ளைகள் இதன் உண்மையைப் புரிந்துகொண்டு, பொறுமை கிறிஸ்துவின் சிறந்த குணங்களில் முக்கியமான ஒன்று எனப்புரிந்துகொள்வார்கள்.
(1) ஞானத்தில் வளர்ச்சியடைவது நமக்குள் பொறுமையை அதிகரிக்கும், நாம் பரலோகப் பிதாவின் பொறுமையை அறிந்துகொள்ளும்போது, நாமும் மற்றவர்களிடத்தில் இந்த குணத்தை அதிகதிகமாகப் பயன்படுத்த உதவிசெய்யும்.
(2) இந்த முழுமனுக்குலத்திற்கு மேல் வந்திருக்கும் மிகப் பெரிய அழிவை நாம் உணரும்போது அதாவது நம்முடைய விழுந்துபோன நிலைமையையும், அதனால் ஏதோ ஒரு வகையில் அனைவர் மேலும் வந்த பாதிப்புகள் – நம்மை இந்த மனுக்குலத்தின் மேல் மனதுருகச்செய்கிறது. குறிப்பாக விசுவாச வீட்டாரிடம் இது உண்மையாகக் காணப்படுகிறது. ஏனெனில் நாம் மற்றவர்களைவிட குறைவானவர்களாக இருந்தபோதிலும், தேவனிடத்தில் விசேஷித்த அழைப்பைப் பெற்றிருக்கிறோம். தேவன் எப்படிப்பட்டவர்களை அழைத்திருக்கிறார் என்பதை நாம் முதலில் உணர்ந்து அவர் விரும்புகிறபடி அவருக்கு இசைவாக செயல்படுவதில் கவனமாக இருக்க வேண்டும். அதாவது கிறிஸ்து இயேசுவின் பாதையில் நடக்க அழைப்பு பெற்ற யாவரையும் அந்தப் பாதையில் நடத்த நம்மால் முடிந்தவரைக்கும் முயற்சிக்க வேண்டும். இந்த விசேஷ பணிக்கு நமக்குள் பொறுமை இருக்கவேண்டும். ரோமர் 14:15. 1 கொரி 8:11
(c) நம்முடைய விசுவாசத்தை அதிகரிப்பதன் மூலம்
R3245 (col. 1 P6)
“பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது” என்றும் “விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்றும், நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.” என்று அப்போஸ்தலன் விவரிக்கிறார். பொறுமையினால் அநேக நல்ல குணங்கள் வளர்ச்சியடையும் என்று ஆதாரத்தோடு நிரூபிக்கப்படுகிறது. தேவனுடைய ஜனங்களுக்குள் பொறுமையானது, விசுவாசத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். மேலும் பொறுமையில் அளவு, நமக்குள்ளிருக்கும் விசுவாசத்தின் அளவை எளிதில் கணித்துவிடும். எப்போதும் பதற்றமாகவும், அமைதியற்ற மன நிலையையுடைய கிறிஸ்தவர்கள் விசுவாசம் இல்லாதவர்கள். அவருக்குள் விசுவாசம் இருந்தால், தேவனுடைய வாக்குறுதிகள் மேல் நம்பிக்கை வைத்துப் பொறுமையாகக் காத்திருப்பார்கள். எந்த சூழ்நிலையிலும், நமக்களிக்கப்பட்ட பொறுப்புகளை நாம் முடித்துவிட்டு, சகலத்தையும் தேவனிடத்தில் ஒப்படைத்துவிட்டு, பொறுமையோடு தேவனுக்காக காத்திருக்கவேண்டும்.
(d) தேவனுடைய திட்டத்தின் காலங்களுக்குரியவைகளை அறிந்து கொள்ளுவதின் மூலம்
R2155 (col. 1 P5)
நான்காவது கூடுதலான காரியம் – பொறுமை. நன்மையான எந்தக் காரியத்தையும் பூரணப்படுத்துவது – காலம். காலத்திற்கு முன் பறிக்கப்படும் பழங்கள் பழுக்காமல், கடினமாகவும், கசப்பாகவும் இருக்கும். ஆனால் ஏற்றக்காலம் நிறைவேறும்வரை அதற்குத்தேவையான உரம், தண்ணீர் மற்றும் அனைத்தையும் கொடுக்கும் பட்சத்தில் ருசியுள்ள பழுத்தப்பழங்களைப் பறிக்கலாம். அதே போல் தேவனுடைய திட்டங்களும் நோக்கங்களும் அமைந்திருக்கிறது. தேவனுடைய ஆழமான திட்டங்கள் மிகப்பொறுமையாக கிரியை செய்யும். உலகில் இருக்கும் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல ஒவ்வொரு சிருஷ்டிகளின் இருதயத்திலும் இப்படியாகவே நடக்கும். தேவன் அனைத்துக் காரியங்களையும் அவருடைய அனந்த ஞானத்தின்படியும் வகையறுக்கப்பட்ட நீதியின் சட்டத்தின்படியும் செயல்படுகிறார். பொறுமையற்ற நிலையில் நாம் இதை அனுபவிக்க வேண்டும் என்றால் அது பழுக்காத, கசக்கக்கூடிய கடினமான காய்களைப் புசிக்கக்கூடிய மதியீனமான செயலாக இருக்கும். ஆனால் பொறுமையோடு காத்திருப்பவர்களுக்கு தேவன் பக்குவமாக அதை கொடுத்தால் அது எவ்வளவு இன்பமாக இருக்கும். ஆகவே பொறுமை பூரணமாக கிரியை செய்யும் வரையில் தேவனுடைய குறித்த காலத்திற்காகக் காத்திருப்போம். தேவனுக்குள் இளைப்பாறுவோம். கர்த்தருக்குக் காத்திருப்போம். அவருடைய வேலைக்காகக் காத்திருப்போம், நம்மைக் குறித்தும் மற்றவர்களைக் குறித்தும் அவருடைய சித்தத்தைத் தெரிவிக்கும் வரையில் பொறுமையோடு காத்திருப்போம். தேவன் மேல் விசுவாசம் வைத்தோர் என்றுமே குழப்பமடையமாட்டார்கள்.