Q673:3
கேள்வி (1910)-3- உண்மையுள்ள உக்கிராணக்காரனாய் இருப்பதற்கும், அர்ப்பணிப்பை நிறைவேற்றிடுவதற்கும் வேண்டி, ஒருவர் தன் வீட்டை விற்கும்படிக்குக் கர்த்தர் எதிர்ப்பார்ப்பார் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா அல்லது எப்படி மற்றும் எப்போது செய்திட வேண்டும் என்று கர்த்தர் தம் உண்மையுள்ள உக்கிராணக்காரனுக்குக் காண்பித்திடுவாரா?
பதில்- இக்கேள்வியானது எழுதப்பட்டுள்ள விதத்தைப்பார்க்கையில், இதற்குப் பதிலளிப்பது கொஞ்சம் சிரமமே ஆகையால் இதற்குப் பதிலளிக்க நான் முற்படுவதில்லை மாறாக இது விஷயத்திலுள்ள என்னுடைய கருத்தினைப் பொதுவான விதத்தில் சொல்லிடுவேன். கர்த்தர் உங்களுக்குச் சில தாலந்துகளையும், அதிகாரங்களையும் கொடுத்திருக்கின்றார் மற்றும் இதில் பணமும் அடங்குகின்றது; மேலும் நீங்கள் அந்தப் பணத்தைப் பயன்படுத்தும்படிக்குக் கர்த்தர் எதிர்ப்பார்க்கின்றார். நீங்கள் உங்களையும், உங்களிடத்திலுள்ள அனைத்தையும் கர்த்தருக்குக் கொடுத்துவிட்டபோது, உங்கள் பணம் அனைத்தையும் நீங்கள் அவருக்கென்று அர்ப்பணித்துவிட்டீர்கள். இது உங்களிடத்திலுள்ள ஒவ்வொரு பைசாவையும் உள்ளடக்குகின்றது; மேலும் அவற்றை அவர் உங்களிடத்திற்குத் திருப்பித் தருகையில் அவர்: “உன்னை நான் உக்கிராணக்காரனாக்குகின்றேன்; இதை எப்படிப் பயன்படுத்தப் போகின்றாய் என்று நான் பார்க்கப் போகின்றேன்; மேலும் இதை வைத்து, அதாவது உன் கரத்தில் காணப்படும் இந்தச் சிறிய தொகையைப் பயன்படுத்துவதிலுள்ள உன் உண்மையினை வைத்து, உன்னை நம்பி எதிர்க்காலத்தில் எவ்வளவு காரியங்களை ஒப்படைத்திடலாம் என்று நான் கணிக்கப்போகின்றேன்” என்று கூறுகின்றார். ஒருவேளை என்னிடத்தில் ஐந்து டாலர்கள் பணம் மாத்திரம்தான் இருக்கின்றது என்றாலும் – எனக்கு வீடு இருக்கின்றதோ இல்லையோ, அந்த ஐந்து டாலர்கள் பணத்திற்கு நான் உக்கிராணக்காரனாய் இருப்பேன்; ஒருவேளை 5000 டாலர்கள் என்னிடத்தில் இருக்குமானால், அதற்கும் நான் உக்கிராணக்காரனாய் இருப்பேன்; ஒருவேளை ஐந்து மில்லியன் டாலர்கள் என்னிடத்தில் இருக்குமானால், அதற்கும் நான் உக்கிராணக்காரனாவேன்; மேலும் எனக்குக் கிடைக்கும் வாய்ப்பிற்கு ஏற்பவும், என்மீது காணப்படும் பொறுப்புகளுக்கு ஏற்பவும், நான் கர்த்தருக்குப் பிரியமாய் இருக்கும் என்று எண்ணுகிற விதத்தில் அவற்றைப் பயன்படுத்திட விரும்புவேன். ஒருவேளை எனக்கு ஒரு குடும்பம் இருந்து, அவர்கள் தேவைகளுக்காய் என்னைச் சார்ந்திருக்கையில் மற்றும் பிள்ளைகள் மிகவும் சிறியவர்களாய் இருக்கையில்… இப்பிள்ளைக்குரிய தேவைகளுக்கான நியாயமான ஏற்பாடுகளை நான் பண்ணிடுவது என்பது தேவ சித்தமாக இருக்கும் மற்றும் நானும் நல்ல உக்கிராணக்காரனாய்ச் செயல்படுகிறவனாயும் இருப்பேன் – ஆனால் அதற்கென்று ஒருவேளை என்னிடத்தில் ஐந்து மில்லியன் டாலர்கள் இருக்கையில், பிள்ளைகள் அனைவரும் ஐசுவரியவான்களாகவும், ஆள் ஒன்றிற்கு ஒரு மில்லியன் டாலர் வீதம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகவும் புரிந்துகொள்ளப்படக்கூடாது. இப்படியாக நான் புரிந்துகொள்ள மாட்டேன்; மாறாக பிள்ளைகள் அதிகம் பணம் பெற்றுக்கொள்ளாமல் இருந்தால், அது அவர்களுக்கு மிகவும் நலமாயிருக்கும், கர்த்தருக்கும் மகிமை சேர்க்கின்றதாயிருக்கும். எனினும் என்னிடம் ஐம்பது டாலர்கள் அல்லது ஐயாயிரம் டாலர்கள் மாத்திரமே இருந்திருக்குமானால் நான் என் மகன்கள் மற்றும் மகள்களுக்குக் கொடுத்திருப்பதைக் காட்டிலும், ஒருவேளை நான் ஐந்து மில்லியன் டாலர்களைப் பெற்றிருக்கையில் அவர்களுக்கு அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிடுவேன். இப்படி எண்ணுவதை நியாயமானதாகக் கருதி, நான் ஐந்து மில்லியன் டாலர்களை ஒருவேளை பெற்றிருக்கையில், அவர்களுக்கு ஆளுக்கு ஐம்பதினாயிரம் டாலர்கள் கொடுக்க எண்ணிடுவேன். இந்தமட்டும் நான் தாராளமாய் இருக்க வேண்டும் என்று எண்ணிடுவேன். இதற்கும் அதிகமாய் நான் தாராளமாய் இருக்கக்கூடாது என்று எண்ணுகின்றேன். மகன்கள் மற்றும் மகள்களில் யாரேனும் இவ்வளவு அதிகமாய்ப் பங்கு கொடுக்கப்படுவதின் நிமித்தம் விசேஷமாய்ப் பாதகத்திற்குள்ளாகுவார்களானால், பங்கை நான் இன்னும் குறைத்துவிடுவேன். ஆனாலும் எல்லா விஷயத்திலும் உங்கள் கடமையே உங்கள் முன்னிலையில் காணப்பட வேண்டும் – நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகின்றார்? என்பதே உங்கள் முன்னிலையில் காணப்பட வேண்டும். கர்த்தருக்குப் பிரியமாய் எப்படிக் காணப்படும் என்று எண்ணுகின்றீர்களோ, அதன்படி செய்யுங்கள். இது உங்களுடைய உக்கிராணத்துவம், என்னுடையதல்ல. உங்கள் உக்கிராணத்துவத்தின் விஷயத்தில், நீங்கள் கர்த்தருடைய பிள்ளைகளையும், கர்த்தருடைய வேலையையும் குறித்துச் சிந்திப்பதைவிட, உங்கள் பிள்ளைகளைக்குறித்து அதிகமாய்ச் சிந்திக்கின்றீர்கள் என்றால், இது நீங்கள் அவருக்கும், அவரது வேலைக்கும் உரிய மதிப்புக்கொண்டிருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றது என்பதை நினைவில்கொள்ளுங்கள். ஆகையால் உங்கள் கரங்களில் காணப்படுபவைகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று நீங்கள் தீர்மானிப்பதற்கு முன்பாக, இக்கருத்துகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை எனக்கு மனைவியும், குடும்பமும் இருப்பார்களானால், ஒருவேளை மிக நல்ல வீடு அதிகம் அவசியமில்லாமல் காணப்பட்டால் தவிர மற்றப்படி, வீட்டை விற்பதற்கு நிச்சயமாய் எண்ணமாட்டேன். மாறாக என் குடும்பத்திற்காக வீட்டை வைத்துக்கொள்வதற்கே நிச்சயமாய் எண்ணிடுவேன்; இவ்விதத்தில் தேவையைச் சந்திப்பது என்பது ஒரு தகப்பனாக மற்றும் கணவனாக உள்ள எனக்குரிய கடமையின் ஒரு பாகமாயுள்ளது என்று எண்ணிடுவேன். தேவனுடைய ஜனங்கள் அனைவரும் வீடுகள் பெற்றிருக்க விரும்புகின்றேன் – ஆடம்பரமான வீடுகளல்ல, பெரிய வீடுகள் அல்ல, மாறாக இல்லம் என்று அவர்களால் அழைக்க முடிகின்ற சிறு இடங்களைப் பெற்றிருக்க நான் விரும்புகின்றேன். உண்மைதான் இயேசு தமக்கெனச் சொந்தமாய் வீட்டைப் பெற்றிருக்கவில்லை எனினும் இயேசு மரிக்கையில், அவர் தம் தாயாகிய மரியாளைத் தாம் அன்புகூர்ந்த சீஷனிடத்தில் ஒப்படைத்த காரியத்தை வாசிக்கையில், அவரது சீஷனாகிய யோவான் வீட்டைப் பெற்றிருந்தார் என்பதும் உண்மையே. இயேசு அன்புகூர்ந்த அந்தச் சீஷன் மரியாளை தன் வீட்டில் சேர்த்துக்கொண்டான். அவருக்கு ஒரு வீடு இருந்தது.