Q242:3
கேள்வி (1911)-3- ஒருவேளை மூப்பராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு சகோதரன் புதிய ஏற்பாட்டின் காரியங்களுக்கு இசைவாகத் தகுதியுடன் காணப்பட்டபோதிலும், அவர் எவர் மூலமாகவும் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளவில்லையெனில், இப்படிப்பட்ட சகோதரன் மூப்பராக நியமிக்கப்படாமல் இருப்பதற்கு இதுவே போதுமான காரணமாக இருக்கும் என்பது உங்கள் கணிப்பாக இருக்குமா?
பதில் – அப்படிதான் இருக்கும். நம்முடைய பேப்டிஸ்ட் சபைபிரிவு (Baptist) நண்பர்கள் நினைக்கும் அதே கண்ணோட்டத்தில் நாம் தண்ணீர் ஞானஸ்நானம் முக்கியமானது என்று எண்ணுவதில்லை – அதனை ஓர் அடையாளமாகத் தவிர மற்றபடி நாம் எதுவும் எண்ணுவதில்லை. ஆனால் ஞானஸ்நானமாகிய மிக எளிமையான ஓர் அடையாளத்தை இதுவரையிலும் பார்க்க / உணர்ந்துகொள்ள முடியாத சகோதரன் இவ்விஷயத்தில் குருடனாகவே இருக்க வேண்டும். ஒருவேளை அவர் ஒரு விஷயத்தில் குருடனாக இருப்பாரானால், வேறு எத்தனை விஷயங்களில் அவர் குருடராக இருக்கக்கூடும்? இவரை மற்றவருக்குப் போதிப்பதற்கு அனுமதிப்பதற்கு முன்பு, அதாவது ஒருவேளை இவரைக்காட்டிலும் அதிகமாக ஏற்கெனவே கண்டிருக்கும் ஒருவருக்குப் போதிப்பதற்கு அனுமதிப்பதற்கு முன்பு – அவர் ஞானஸ்நானம் காரியத்தைப் பார்க்க ஆரம்பிப்பது வரையிலும் நான் காத்திருப்பேன். சகோதரத்துவத்திற்கான பரீட்சையாக நாம் தண்ணீர் ஞானஸ்நானத்தை ஆக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளாத ஒரு சகோதரன், நாம் புரிந்துகொண்டவரைக் கர்த்தருடைய பந்தியில் வரவேற்கபட வேண்டும் அல்லது எல்லாவிதத்திலும் கர்த்தருக்குள் சகோதரனாக வரவேற்கப்பட வேண்டும். ஆனால் ஒருவரைக் கர்த்தருடைய சகோதரனாகவும், சரீரத்தினுடைய அங்கமாகவும் எல்லாவிதத்திலும் அடையாளம் கண்டுகொள்வது என்பது ஒரு காரியமாகவும் மற்றும் அவர் போதிப்பதற்கான தகுதியுடையவர் என்று அடையாளம் கண்டுகொள்வது என்பது வேறுகாரியமாகவும் உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் புதிய ஏற்பாட்டின் மிகவும் எளிமையான விஷயத்தை – கர்த்தரும், அனைத்து அப்போஸ்தலர்களும் உண்மையான முழுகுதலாகிய அர்ப்பணிப்பிற்கான அடையாளமாகத் தண்ணீர் ஞானஸ்நானத்தில் பங்குகொண்டதுமான விஷயத்தை – ஏற்கெனவே உணர்ந்தவனே போதிப்பதற்குத் தகுதியுடையவனாவான்.