Q233:1
கேள்வி (1910)-1- ஒவ்வொரு சபையிலும் அல்லது பல்வேறு சபையிலும் உள்ள மூப்பர்கள் தாங்கள் பொறுப்பேற்றுள்ள சபைகளின் நலன்களுக்கடுத்தவைகளைக் குறித்துப் பேசுவதற்கு ஒன்று கூடுவது சரியான காரியமாக இருக்கும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? மற்றும்; இதனை வேதவாக்கியங்கள் ஆதரிக்கின்றனவா?
பதில் – இதனை வேதவாக்கியங்கள் ஆதரிக்கின்றன என்றும், இது பரிந்துரைக்கப்பட வேண்டியது என்றும் நான் எண்ணுகின்றேன். அப்போஸ் தலனாகிய பவுல், எபேசுவிலுள்ள சபையின் மூப்பர்களை ஒன்றுகூட அழைத்தது நம்முடைய நினைவுக்கு வருகின்றது. சபையின் நலனுக்கடுத்த விஷயங்களைக் கலந்து ஆலோசிக்கும்படிக்கு அவர் மூப்பர்களை ஒன்றுகூடும்படி அழைத்தார். அவர் ஒரு மூப்பருக்கான அல்லது பாஸ்டருக்கான பொறுப்பை உடையவராய் இருந்து, சபையாரின் நலனுக்கடுத்த விஷயங்களை அங்கே அவர்களோடு கலந்து பேசிக்கொண்டிருந்தார். ஒருவேளை சபையாரின் நலனுக்கடுத்த விஷயங்கள்பற்றி கலந்துபேச மூப்பர்கள் ஒன்றுகூடுவது தவறாக இருக்குமாயின், என்னுடைய கணிப்பின்படி இப்படியானதொரு கூட்டத்தை அப்போஸ்தலனாகிய பவுல் நடத்தினதும் தவறாய் இருந்திருக்கும். சபையாரின் நலனுக்கடுத்த விஷயங்களைக் கலந்து ஆலோசிப்பதற்கு மூப்பர்கள் ஒன்றுகூடுவது சரியென்று நான் எண்ணுகின்றேன். ஆனாலும் ஒரு விஷயத்தைக் குறித்து நான் உங்களை எச்சரிக்க வேண்டும். சபையை நடத்துவதற்கடுத்த கருத்துகளைத் தெரிவிப்பது அல்லது இது சம்மந்தமாக முடிவு எடுப்பது தொடர்பானவிதத்தில் ஒருவேளை மூப்பர்கள் ஒன்று கூடுவார்களானால், இது கெடுதலான காரியமாக இருக்கும் என்றே நான் எண்ணுகின்றேன். இது வேறே காரியமாகும். சபையாரின் நலனுக்கடுத்த விஷயங்கள் முதலானவைகள் குறித்துச் சிந்திப்பதற்கு ஒன்றுகூடுவதும் மற்றும் பின்னர்ச்சபையை நடத்துவதற்கடுத்தவைகளை மேற்கொள்ள முற்படும் விஷயமும், இரு வேறுபட்ட காரியங்களாகும். மூப்பர்கள் ஒன்றுகூடுவதற்கான வாய்ப்பு வருகின்றது என வைத்துக்கொள்ளுங்கள், மேலும் மூப்பர்களின் கணிப்பின்படி சபையாருக்கு நலமாயிருக்கும் ஏதோ ஒரு காரியத்தை அவர்கள் மனதில் வைத்திருக்கின்றார்கள் என வைத்துக்கொள்வோம். சபையாரால் முழுமையாகப் புரிந்துகொண்டு வாக்கெடுப்பின் (vote) மூலம், மூப்பர்களிடம் விசேஷமாக ஒப்படைக்கப்பட்ட காரியமாய் இருந்தால் ஒழிய மற்றபடி – ஒருவேளை சந்தேகம் அல்லது கேள்விகள் எழும்புவதற்கு ஏதுவான புதிதான திட்டமாக இருக்கும்பட்சத்தில், இந்த மூப்பர்கள் அக்காரியத்தைச் சபையார் முன் வைத்து: “நாங்கள் சபையாரின் நலன்கருதி, இப்படிப்பட்ட ஒரு கருத்தை மனதில் கொண்டுள்ளோம், இப்பொழுது அதை உங்கள் முன் வைத்து, இதற்கான உங்கள் வாக்கை (vote) கேட்கின்றோம் எனப் பரிந்துரைப்பது சரியான மற்றும் தகுதியான வழிமுறையாகக் காணப்படும் என்று நான் கருதுகின்றேன். இதுவே பாதுகாப்பான திட்டமாக இருக்கும். மிகச் சிறந்த நோக்கங்களையும், மிக நல்ல யோசனைகளையும் உடைய மிகச் சிறந்த சகோதரர்களில் சிலர், சபையாரிடம் கலந்து ஆலோசிக்காமலேயே அந்த ஆலோசனைகளைச் செயல்படுத்த முற்பட்டபோது, அது சபையாருடைய விருப்பத்திற்கு மாறாக இருந்துள்ளதை நான் பார்த்திருக்கின்றேன். ஊதாரணத்திற்கு நீங்கள் நாயினுடைய மயிரை எதிர்திசையில் கோதிவிட முயற்சிப்பீர்களாகில், அப்படிச் செய்வது மென்மையாக இருக்காததால், நாய்க்கு அது பிடிக்காது. இதுபோலவே சபையாரும் இப்படியாகச் செய்யப்படுவதை விரும்புவதில்லை; ஏனெனில் இப்படிச் செய்வது என்பது, அவர்களை ஆளுவது போன்றும், இன்னுமாக அவர்கள் விசேஷமாக அங்கீகாரம் கொடுக்காத ஒன்றைச் செய்வதுபோலும் அவர்களுக்குத் தோன்றும். ஒருவேளை நீங்கள் நாயின் மயிரைக் கோதிவிட வேண்டுமானால், மயிர் வளர்கின்ற திசையில் அதற்குக் கோதிவிடுவது எப்போதும் ஞானமான காரியமாய் இருக்கும் என்பதே என்னுடைய கருத்தாகும். அதுபோலச் சபையாரைக் கையாளும் விஷயத்தில், மனித சுபாவம் ஒரு குறிப்பிட்ட நடைமுறையைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொண்டு, அந்நடைமுறைக்கு இசைவாகவே நடக்க முயற்சியுங்கள் மற்றும் தேவைக்கு மிஞ்சி மனித சுபாவத்தைத் தொல்லைக்குள்ளாக்காதீர்கள். சபையின் ஒவ்வொரு அங்கத்திற்கும் மனித சுபாவம் உள்ளது; அவனுக்கு அழியக்கூடிய சரீரமுள்ளது; மேலும் கொஞ்சம் அல்லது மிகுதியாக எதிர்த்துப்போரிடும் மனப்பான்மையைக் கொண்டிருப்பான்; தான் அலட்சியம் பண்ணப்படக்கூடாது எனும் விருப்பத்தைக் கொஞ்சமாகவோ அல்லது மிகுதியாகவோ கொண்டிருப்பான்; சத்தியத்தில் இருக்கும் அனைவரிடமும் விசேஷமாக, அதிக அளவில் இக்குணங்கள் காணப்படுவதை உங்களால் பார்க்க முடியும். இவர்கள் ஆற்றல்மிக்க குணநலன்கள் கொண்டிருக்க வேண்டும், இல்லையேல் இவர்கள் ஒருபோதும் ஜெயங்கொண்டவர்களாக ஆக முடியாது. மேலும்; இன்று அவர்கள் காணப்படும் நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளதும் மற்றும் பாபிலோனிலிருந்து வெளியேறுவதற்கு அவர்களுக்கு உதவியதுமான இந்த பண்புதான் – கொஞ்சம் வாதாடவும், சிலசமயம் கொஞ்சம் போராடவும் விரும்புகின்றது. ஒருவேளை நீங்கள் பின்வருமாறு: “இப்பொழுது நாம் ஒரு புதிய திட்டம்/காரியம் வைத்திருக்கின்றோம்; அதற்கு வாக்குகள் (vote) இன்னமும் பெறப்படவில்லை. சபையார் இதை விரும்புவார்கள் என்று எங்களுக்கு நிச்சயம் உள்ளது; அதை எங்களுடைய பரிந்துரையுடன் கூடச் சபையார் முன் வைக்கின்றோம் என்று சொல்வீர்களானால் – இப்பொழுது சபையார் உங்களுக்கு ஆதரவாய் இருப்பார்கள்.