Q459:2
கேள்வி (1909)-2- மில்லினியல் டாண் பத்திரிக்கையில் விசுவாசிகளுக்கு திருமண உறவின் ஏற்புடைமை என்பது பற்றின உங்களது கண்ணோட்டம் என்ன?
பதில் -அருமையான நண்பர்களே இதில் நாம் எந்த ஒரு நிலைப்பாட்டினையும் எடுத்துக்கொள்கிறதில்லை. இக்காரியமானது மற்றவர்கள் முடிவெடுக்கும் காரியமாய் இராமல், மாறாக தனிப்பட்ட நபர்கள் முடிவெடுக்க வேண்டிய காரியமாயிருக்கின்றது. நீங்கள் திருமணம்பண்ணிட வேண்டும் என்றோ, நீங்கள் திருமணம்பண்ணிக் கொள்ளக்கூடாது என்றோ சொல்லிடுவதற்கான உரிமை எனக்கில்லை அது உங்கள் காரியமாகும்; அது என் காரியமுமில்லை, வேறு யாருடைய காரியமுமல்ல. மில்லினியல் டாண் பத்திரிக்கையானது அப்போஸ்தலனாகிய பவுலினால் 18- நூற்றாண்டுகளுக்கு முன்னதாகச் சொல்லப்பட்டவைகளை மாத்திரமே சொல்லுகின்றது: அதாவது “விவாகம்பண்ணுகிறவன் நன்மை செய்கின்றான்; விவாகம்பண்ணாதவனும் அதிக நன்மை செய்கிறான்” என்று கூறுகின்றது. ஒருவேளை இப்பொழுது இராமுழுக்க நான் பேசிட்டாலும், அப்போஸ்தலன் கூறியவைகளோடுகூடச் சேர்த்துக் கூறிடுவதற்கு நான் எண்ணுகிறதில்லை அப்படிச் செய்வதற்கு எனக்கு உரிமை இல்லை அல்லது அவர் பேசினதை மாற்றிக்கூறிட எனக்கு விருப்பமும் இல்லை. மற்றவர்களுடைய இந்த விஷயத்தில் உங்களுக்கோ, எனக்கோ தலையிடுவதற்கு உரிமையும் இல்லை. ஒருவேளை அவர்கள் நம்முடைய சிறுபிள்ளைகளாக இருப்பார்களானால், அப்போது அறிவுரை வழங்கிடுவதற்கான உரிமையினை நாம் பெற்றிருப்போம். ஒருவேளை அவர்கள் சிறுபிள்ளைகளாக இருப்பார்களானால், அவர்கள் வளர்வதுவரையிலும் அவர்களுக்கு நாம் வழிகாட்டிடுவோம் என்று அவர்களிடம் சொல்லிடுவதற்கான உரிமையினை நாம் பெற்றிருப்போம்; ஆனால் அவர்கள் வயது வந்தவர்களாகுகையில், பெற்றோர்கள் அறிவுரைக்கூறி அவர்களைக் குறுக்கிட்டுக்கொண்டிருக்கக் கூடாது. இந்த விஷயத்தில் அநாவசியமாய்த் தலையிடுவதற்கு முயலும் யார் ஒருவனும், தனக்குத்தானே, பிரச்சனையை மாத்திரம் கொண்டுவருகின்றவனாய் இருப்பான். தேவன் விட்டுவிடுவதுபோன்று, நாமும் காரியத்தினை அவர்களிடத்திலேயே விட்டுவிடுவோமாக.