Q298:1
கேள்வி: (1909)-1- எவ்வாறு திரள் கூட்டத்தார் குறிப்பாக உலகத்தினுடைய மனப்பூர்வமான பாவங்களுக்கான தண்டனையினை ரத்து செய்கின்றனர்? எவ்வாறு போக்காடானது தேவனிடத்தில் ஒரு நிவிர்த்தியினை ஏற்படுத்துகின்றது?
பதில்: பாவத்தினை ரத்து செய்திடும் விஷயத்தில், திரள் கூட்டத்தாருக்கு எந்தப் பங்குமில்லை; சிறுமந்தைக்கும் இதில் எந்தப் பங்குமில்லை. அந்த வேலையினைப் பிரதான ஆசாரியனே செய்கின்றார். அவர் தமது பல்வேறு நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக பல்வேறு காரியங்களைப் பயன்படுத்திடலாம், ஆனாலும் அதைச் செயல்முறைப்படுத்துகின்றவர் (application) அவரே; திரள் கூட்டத்தாரும் சரி, சிறுமந்தையினரும் சரி “ரத்து செய்திடும் விஷயத்தில்” எதையும் செய்கிறதில்லை.
போக்காடானது திரள் கூட்டத்தாரை அடையாளப்படுத்துகின்றது எனும் கருத்தினை நாங்கள் ஆசரிப்புக்கூடார நிழல்கள் புஸ்தகத்தில் குறிப்பிட்டிருந்தோம் மற்றும் அதே கருத்தை இன்னமும் உடையவர்களாக இருக்கின்றோம். அநேகர் திரள் கூட்டத்தார் அல்லது போக்காடானது பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளாகச் செல்லவில்லை என்கின்றனர். காளையோ அல்லது கர்த்தருடைய ஆடோ உள்ளே செல்லவில்லை என்று நான் பதிலளிக்கின்றேன். அப்படியானால் உள்ளே சென்றது எது? பலியின் மதிப்பினை அடையாளப்படுத்திடும் காளை மற்றும் கர்த்தருடைய ஆட்டினுடைய இரத்தமானது, பாவநிவிர்த்தி செய்யப்படத்தக்கதாக உள்ளே எடுத்துச்செல்லப்பட்டது. பிரதான ஆசாரியனின் சரீரம் அல்லது வீட்டார், ஆசாரியனின் குடும்பத்தார் என்று அழைக்கப்படும் ஆசாரியர்களை உள்ளடக்கின லேவி கோத்திரத்தின் பாவங்களுக்கான நிவிர்த்தியினைக் காளையின் இரத்தம் செய்யவேண்டியிருந்தது; இவர்கள் அனைவரின் – சரீர அங்கத்தினர்களின் அல்லது உடன் ஆசாரியர்களின் பாவங்களுக்காகக் காளையினுடைய இரத்தம் நிவிர்த்தி செய்தது. பின்னர் உடன் ஆசாரியர்களை அடையாளப்படுத்தின வெள்ளாட்டுக்கடாவின் இரத்தமானது எடுத்துச்செல்லப்பட்டது. வெள்ளாட்டுக்கடாவினுடைய இரத்தமானது, வெள்ளாட்டுக்கடாவினால் தெளிக்கப்படவில்லை; மாறாக பிரதான ஆசாரியனால் தெளிக்கப்பட்டு, ஜனங்கள் அனைவருக்காகவும் செயலாற்றப்பட்டது (applied). பிரதான ஆசாரியனே அனைத்தையும் செய்தார்; ஒருவேளை இதில் எதையேனும் நாம் செய்தோமென எண்ணம்கொள்ளுவோமானால், நாம் தலையைச் சரியாய்ப் பற்றிக்கொள்ளாதவர்களாய் இருப்போம். நாம் அவரது சரீரத்தினுடைய அங்கத்தினர்களாக மாத்திரமே கருதப்பட்டிருக்கின்றோம்.
காளையினுடைய இரத்தம் விசுவாச வீட்டாருடைய ரத்து செய்கின்றபடியால் மற்றும் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தமானது புறம்பே இருக்கும் அனைவரின் பாவங்களை ரத்து செய்கின்றபடியால், எந்தப் பாவங்கள் போக்காடு தொடர்பில் விடப்படுகின்றன? பிரதான ஆசாரியன் இஸ்ரயேல் சபையாரின் பாவங்களை எடுத்து, அவைகளைப் போக்காட்டினுடைய தலைமீது அறிக்கையிட்டார் என்பதே பதிலாகும். எந்தப்பாவங்களுக்காய் இரத்தம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மேலே குறிப்பிடப்பட்டுள்ளதோ, அந்தப் பாவங்களைத் தவிர்த்து வேறு எந்தப் பாவங்கள் இருக்கின்றன? பரிசுத்த ஸ்தலத்திலும், மகா பரிசுத்த ஸ்தலத்திலும் பாவநிவிர்த்தி செய்யப்பட்ட பாவங்களானது ஆதாமிடமிருந்தும், அவரிடமிருந்து சுதந்தரிக்கப்பட்ட அபூரணங்களிடமிருந்தும் கடந்துவந்த ஆதி பாவங்களாய் இருக்கின்றன என்று நான் பதிலளிக்கின்றேன். கிறிஸ்துவினுடைய சரீரத்தின் வாயிலாகக் கடந்துவரும் அவரது புண்ணியமானது, இந்தப் பாவங்கள் அனைத்திற்குமாகச் செயல்படுத்தப்படுகின்றது. வேறு என்ன பாவங்கள் இருக்கின்றன? ஆதாமின் பெலவீனத்தினால் உண்டாயிராதவைகள் இருக்கின்றன. உலகமானது அதனால் செய்ய முடிந்த சிறந்ததைச் செய்துகொண்டு வருகிறதில்லை; ஆகையால் ஆதாமின் பெலவீனத்தினால் உண்டாயிராத அநேகம் பாவங்களை அவர்கள் செய்கின்றனர். சில மனுஷருடைய பாவங்கள் முந்திக்கொள்ளும் மற்றும் சிலருடைய பாவங்கள் பின்பாகத் தொடர்கின்றது; ஆனால் அனைத்துப் பாவங்களுக்கான கணக்குச் சரிக்கட்டப்படத்தக்கதாகக் கர்த்தர் பார்த்துக்கொள்வார். அறிந்து செய்த ஒவ்வொரு பாவமும் இவ்வகைப் பாவமாகும்; இந்தப் பாவங்களே போக்காடு வகுப்பாரினுடைய தலைமீது அறிக்கையிடப்படுகின்றது. ஓர் உதாரணத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்: “நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்” (மத்தேயு 23:35) என்று வாசித்த வசனம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும். எந்த இரத்தம்குறித்து இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது? ஆம்! மனுக்குலத்தினால் செய்யப்பட்ட இந்தத் தவறான கிரியைகள், ஆதாமின் பெலவீனத்தினால் உண்டானவையல்ல. மனுக்குலம் அறிந்து தெரிந்து செய்த பாவங்கள் ரத்து செய்யப்படத்தக்கதாக, கர்த்தர் சில வழிகளைப் பார்த்திருக்கின்றார் மற்றும் நீங்களும், நானும் இக்கொள்கையினைக் காண்கையில், இது சரி என்று கூறுவோம். ஆகையாலே வேதவாக்கியங்களானது உலகத்துடன் இன்னுமொரு கணக்குச் சரிக்கட்டப்படுதல் காணப்படுவதைச் சுட்டிக்காடுவதாகக் காண்கின்றோம். பலிபீடத்தின்கீழ்க் கூக்குரலிடும் ஆத்துமாக்களைக்குறித்துக் குறிப்பிடும் வேதவாக்கியம் உங்களுக்கு ஞாபகமிருக்கும்: “அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்” (வெளிப்படுத்தல் 6:10). கர்த்தர் துல்லியமாய்க் கணக்குப் பதிவுகளை உடையவர் ஆவார் மற்றும் சரியாய் அல்லது தவறாய்ச் செய்ததற்கேற்ப அவர் ஒவ்வொருவருக்கும் பலன் அளிப்பார் மற்றும் தண்டிப்பார். அறிந்து புரிந்து பாவங்கள் செய்தவர்கள், கணக்குகள் சரிக்கட்டித்தீர்த்துவைக்கப்படுவதற்கு முன் ஒரு குறிப்பிட்ட தண்டனையைத் தங்களுக்கு வரப்பெற்றிருப்பார்கள். நாம் இன்றைய காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றபடியால் மற்றும் “இருண்ட யுகங்களைத்” திரும்பிப்பார்க்க முடிகின்றபடியால், வரவிருக்கின்ற காரியங்களை நாம் ஒத்துக்கொள்ளவே வேண்டும். இந்த யுகத்தினுடைய முடிவில் ஒரு மகா உபத்திரவ காலம் வந்து கொண்டிருக்கின்றது மற்றும் திரள் கூட்டத்தார் அந்த உபத்திரவத்தில் பங்கடைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். தங்கள் ஜீவியங்களை ஒப்புக்கொடுக்கத்தக்கதாக இவர்கள் பங்கடைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்; ஏனெனில் இவர்கள் மரிக்கவில்லையெனில், இவர்களால் ஆவிக்குரிய ஆசீரவாதங்களில் பங்கடைய முடியாது.