Q455:2
கேள்வி – (1908)-2- சபை போர்வீரர்களெனப் போராடத் துவங்குவதற்கு முன்னதாகவே தங்கள் ஓட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றனவா அல்லது சந்தோஷத்தோடு முடிக்கத்தக்கதாக நாம் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கையில், முடிவுவரை நாம் போராடிட வேண்டுமா?
பதில் – வெவ்வேறு கருத்துக்களை நம் மனங்களுக்கு முன்வைத்திடும் வெவ்வேறு வேதவாக்கியங்கள் காணப்படுகின்றன. இக்காரியத்திற்கு அநேகம் பக்கங்கள் இருக்கின்றன; எப்படி நாம் இங்கு இருக்கும் கட்டிடத்தை வெவ்வேறு கோணங்களில் படம் பிடிப்போமோ, அதுபோலவேயாகும். Nashville-இல் உள்ள அரங்கம் எப்படி இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். இதோ அதை இங்கு நின்றும், இதோ அங்கு நின்றும் அதன் காட்சியினைப் படம் பிடிக்கலாம். அவைகள் வெவ்வேறு புகைப்படங்களாக இருப்பினும், அவை அனைத்துமே அந்த அரங்கத்தினுடைய படங்களாகவே இருக்கும். பின்னர் நீங்கள் கட்டிடத்திற்கு வெளியே போய் நின்று முன்பக்கத்தைப் படம் பிடிக்கலாம் மற்றும் பின்னர் அதன் பக்கங்களில் போய், பக்கவாட்டில் படம் பிடிக்கலாம் மற்றும் பின்புறம் போய், பின் புறத்தைப் படம் பிடிக்கலாம். இப்படியே கர்த்தரும், அப்போஸ்தலர்களும் நமக்குக் கொடுத்து இருக்கின்றனர் – தேவன் தம் பரிசுத்த ஆவியின் மூலம், இந்தப் பல்வேறு வழிகளின் வாயிலாகச் சத்தியத்தின் மற்றும் ஜீவியத்தினுடைய நமது அனுபவங்களின் காட்சிகளை/படங்களைப் பல்வேறு கண்ணோட்டங்களில் கொடுத்திருக்கின்றார். அவைகளில் ஒன்று நம்மை ஓட்டத்தில் ஓடுபவர்களெனச் சித்தரிக்கின்றது. நீங்கள் ஏதோ ஒன்றிற்காகவேதான் ஓடிட வேண்டும். நீங்கள் என்றென்றுமாய்த் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்து, பின்னர் ஓட்டத்தினுடைய இறுதி தருணத்தில் மரித்துப் போகிறதில்லை. சில இடங்களில் வேதவாக்கியங்களானது நாம் தொடர்ந்து ஓடிட வேண்டும் என்றும், நம்முடைய கிறிஸ்தவ ஓட்டம் என்பது சில விஷயங்களில் ஓட்டப்பந்தயத்திற்கு ஒத்திருக்கிறது என்றும், அதில் சரியானவைகளைச் செய்திடுவதற்கான நம் பிரயாசத்தினை நாம் ஒருபோதும் நிறுத்திடக்கூடாது என்றும் முன்வைப்பது உண்மையாய் இருப்பினும், நாம் ஓர் இலக்கை நோக்கியே ஓடிட வேண்டும் எனும் மிகச் சரியான கருத்தை விவரிக்கும் மற்றுமொரு காட்சியும் உள்ளது. இதோ அங்கு இருக்கிற அந்த மேஜைதான் இலக்கு என்று வைத்துக்கொள்ளுங்கள். சரி, இலக்கு என்றால் என்ன? நாம் அடைய வேண்டும் எனும் விதத்தில் ஏன் அது இலக்காய் இருக்கின்றது? நான் அந்த இலக்கை நோக்கி ஓடுகின்றேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்;. நான் இங்கேயே, பாதித் தூரத்திலேயே நின்றுவிடுகின்றேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்; இந்தப் பாதித் தூரத்திற்குமேல் நான் வரவேயில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்; அப்படியானால் நான் ஒருபோதும் இலக்கை அடையவில்லை என்பதாக இருக்கும். அநேகம் நல்ல ஜனங்கள் இலக்கை ஒருபோதுமே அடையவில்லை என்று நான் எண்ணுகின்றேன். இலக்கு என்பது எது என்று நாம் காண்பது முக்கியமாகும்; அப்போதுதான் நாம் ஞானமாய் ஓடுகிறவர்களாகவும், காற்றில் சிலம்பம் பண்ணுகிறவர்களாக மாத்திரம் காணப்படாதவர்களாகவும் இருக்க முடியும். உங்களால் எவ்வளவு பிரயாசம் எடுக்க முடியும் என்பதல்ல, மாறாக அந்தப் பிரயாசத்தை ஒரு நோக்கத்திற்காக வேண்டி நீங்கள் ஏறெடுக்க வேண்டும்; ஏதோ ஒன்று அடையப்பட வேண்டும்; ஏதோ ஒன்று பற்றிக்கொள்ளப்பட வேண்டும். குறிக்கோளின்றி ஓடுகிற நபர், ஏதோ ஒரு சாலையில் ஒடித்திரிகிறவராய் இருப்பார். “எங்கே போய்க்கொண்டிருக்கின்றாய்?” என்று அவனிடம் கேட்கப்பட்டால், “எனக்குத் தெரியாது” என்பது அவன் பதிலாயிருக்கும். அவனால் தொடர்ந்து பலத்தோடு ஓடிக்கொண்டிருக்க முடியாது; ஆனால் ஒரு பாதையில் போக வேண்டும் என்று அவன் அறிவானானால், நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட தொடங்குமிடத்திலிருந்து துவங்க வேண்டும் என்றும், ஓடுவதற்கு எத்தனை நிமிடங்கள் தேவையெனப் பார்க்க வேண்டும் என்றும் அவன் அறிவானானால், அப்போது அவன் தன் பார்வைக்கு முன் ஓர் இலக்கைப் பெற்றிருப்பான்; மனதிற்கு முன்பாக நோக்கம் ஒன்றினைப் பெற்றிருப்பான் மற்றும் இப்படி இருக்குமானால், அவனால் நன்கு ஓட முடியும். தேவன் நமக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்திருக்கின்றார் மற்றும் அந்த இலக்கை நோக்கி நாம் ஓடிட வேண்டும். இலக்கை வந்து அடைந்துவிட்டோமெனில், நாம் என்ன செய்ய வேண்டும்? சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்க வேண்டும் இலக்கில் நிற்க வேண்டும்; அதை விட்டு விலகி ஓடாதீர்கள். இலக்கிலேயே நிற்பது கடினமான காரியமா? ஆம்! நீங்கள் இலக்கை வந்தடைந்த பின்னர், அதினின்று உங்களை விலகச் செய்திடுவதற்கு அநேகமான பிரயாசங்கள் மேற்கொள்ளப்படும். இலக்கை அடைவதிலிருந்து உங்களைத் தடைப்பண்ணினதைக் காட்டிலும், இலக்கினின்று உங்களை விலகிபோகப் பண்ணுவதற்கே எதிராளியானவன் கடினமாய் முயற்சி செய்வான். நீங்கள் இலக்கை வந்து அடைந்த பின்னர், கடுமையான போராட்டமானது உங்கள் மீது கடந்துவரும். இலக்கை வந்து அடைவதற்கு முன்னதாக ஒரு குறிப்பிட்ட அளவிலான பாதுகாப்பு உங்களுக்குக் காணப்படும்; ஆனால் இலக்கை வந்தடைந்த பிற்பாடு, அங்குதானே நீங்கள் உங்களுக்கான கடுமையான பரீட்சைகளை அடைவீர்கள். “தேவனுடைய சர்வாயுதவர்க்கங்களைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்பது இன்னொரு காட்சியாகும்/கோணமாகும். எங்கிருந்து சர்வாயுதவர்க்கம் கிடைக்கும்? தேவ வசனத்திலிருந்து ஆகும். நீங்கள் நிற்கத்தக்கதாக இந்த ஆயுதங்களை, தேவனுடைய சர்வாயுதவர்க்கங்களைத் தரித்துக்கொள்ளுங்கள். ஆயுதங்களைத் தரித்துக்கொண்டிருக்கையில், அதைத் தரித்துக்கொள்வதற்குப் போதுமான நேரம் கிடைப்பதற்கு முன்னதாகத் தாக்கப்பட்டுப் போகாதபடிக்கு, கர்ததர் ஒரு குறிப்பிட்ட அளவிலான கிருபை மற்றும் பாதுகாப்பைக் கொடுத்தருளுவார்; அதைத் தரித்துக்கொள்ளத்தக்கதாக நியாயமான காலப்பகுதியை அவர் தருகின்றார். திராணிக்கும் மேலாகத் தாக்கப்படுவதற்கு அவர் அனுமதிக்கிறதில்லை; ஆகையால் அதைத் தரித்துக்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் கிடைக்கப்பெறுகின்றது. ஆயுதவர்க்கங்களைத் தரித்தாயிற்று; அடுத்து என்ன? அடுத்து போர்ப்புரியுங்கள். நாம் ஓட வேண்டியதான இலக்கு என்ன என்று நீங்கள் கேட்கின்றீர்கள். என் அருமை நண்பர்களே அது என்னவெனில்… தேவன் அங்கீகரிக்கக்கூடிய குணலட்சணத்திற்கான ஒரு குறிப்பிட்ட இலக்கு இருக்கின்றது மற்றும் அதற்குக் குறைவான எதையும் அவர் அங்கீகரிக்கிறதில்லை மற்றும் நீங்கள் அந்தக் குணலட்சணத்தைப் பெற்றிருக்கவில்லையெனில், உங்களால் இராஜ்யத்தில் காணப்பட முடியாது. எவைகள் இருந்தாலும் பரவாயில்லை, தேவன் இராஜ்யத்திற்குள் ஏற்றுக்கொள்வார் என்ற காரியமே கிடையாது; அவர் ஒரு குறிப்பிட்ட தரநிலையை/அளவுகோலை நிர்ணயித்திருக்கின்றார் மற்றும் அந்தத் தரநிலையை அடைவதற்கு உங்களுக்கும், எனக்கும் அநுகூலம் பண்ணியிருக்கின்றார்; அவர் எல்லா உதவியும் பண்ணுவதாக வாக்களித்துள்ளார்; ஆனால் அந்தத் தரநிலையை அடையும் விஷயத்தில் நீங்களும், நானும் ஆர்வமும், பிரயாசமும், நாட்டமும், வெளிப்படுத்திட விரும்புகின்றார். நமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள தரநிலை என்ன? அதில் எவ்வளவு குறைந்த பட்சம் செய்திடலாம் என்று கேட்கின்றீர்களா? இல்லை, இது கருத்தல்ல. நம்மால் முடிந்த அனைத்தையும் செய்திடுவதற்கும் மற்றும் அதிகமாய்ச் செய்திடுவதற்குமான வாஞ்சை நம்மிடம் இருக்க வேண்டும்; நாம் செய்து முடித்தவைகளில் ஒருபோதும் திருப்திக்கொள்ளக் கூடாது. ஒரு குறிப்பிட்ட தரநிலை இருப்பதையும், அதில் நீங்கள் குறைவுப்பட்டால் இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது என்பதையும் நீங்கள் உடனே காணலாம்; ஏனெனில் தேவன் அதைக்குறித்துத் தீர்மானித்து வைத்திருக்கின்றார். ரோமருக்கு எழுதின எட்டாம் அதிகாரத்தில் “தேவன் முன்குறித்துள்ளார்” என்னும் அப்போஸ்தலன் பவுலினுடைய உறுதியான வார்த்தைகள் உங்களுக்கு ஞாபகமிருக்கும் – “முன்குறித்திருக்கிறார்” என்பது பலமான வார்த்தையாகும். தேவன் எதை முன்குறித்தார்? சிறுமந்தையினராய் இருப்பவர்கள் யாவரும் தம்முடைய குமாரனுக்கொத்த சாயலில் காணப்பட வேண்டும் என்றும், அப்படித் தம் குமாரனுக்கொத்த சாயலில் இல்லாதவர்கள் இராஜ்யத்தில் காணப்பட முடியாது என்றும் முன்குறித்திருக்கிறார். தேவனுடைய பிரியமான குமாரனின் சாயலே, அந்த இலக்காய் இருக்கின்றது. தேவனுடைய பிரியமான குமாரனின் சாயலாய் இருக்கும் இலக்கை வந்தடையாததுவரை, நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக இருக்க முடியாது என்று தேவன் முன்தீர்மானித்துள்ளார்; மேலும் அந்த இலக்கை நீங்கள் வந்தடைந்து, அந்நிலைமையைத் தக்கவைத்துக்கொள்வீர்களானால், நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக இருப்பீர்கள். ஆகவே இலக்கு என்பது மிகவும் முக்கியமானதல்லவா? ஒரு காலத்தில் தெளிவற்ற நிலையில் வேதாகமத்தை வாசிப்பதினால், நாம் இலக்கையும் சரி, மற்றவைகளையும் சரி, பார்க்கவே இல்லை; கண்மூடிக்கொண்டு செயல்பட்டுக்கொண்டிருந்தோம். தேவன் என்ன சொல்லியிருக்கின்றார் என்பதை நாம் அறியாமல் இருந்தோம். தேவன் என்ன சொல்லியிருக்கின்றார் என்று நாம் போதுமான அளவுக்குக் கவனம் செலுத்தாமல் இருந்தோம். நாம் (கத்தோலிக்க வேத நூல்) கேட்டிகிஸங்களை (catechism) வாசித்திருந்தோம் மற்றும் அவைகளினால் குழம்பியிருந்தோம். தேவன் தம் வார்த்தைகளில் என்ன சொல்லியிருக்கின்றார் என்று காணும் ஒரு காலகட்டம் வந்தது மற்றும் தேவன் கிறிஸ்துவை மாதிரியாகவும், முன்மாதிரியாகவும் நமக்குக் கொடுத்திருக்கின்றார். நாம் அனைவரும் கிறிஸ்துவைப் போன்று காணப்பட வேண்டும் என்று நான் சொல்ல வருகின்றேனா என்று கேட்கின்றீர்களா? ஆம்! நாம் அனைவரும் கிறிஸ்துவுக்கு ஒத்திருக்க வேண்டும். ஆனால் கிறிஸ்து பூரணமானவராய் இருந்தார்; நாம் அனைவருமே பூரணர்களாக இருக்க வேண்டுமா என்று கேட்கின்றீர்களா? என் அருமை சகோதரனே மாம்சத்தின்படி கிறிஸ்துவைப் போன்று இருக்க வேண்டும் என்று நான் இக்கேள்வியில் சொல்லவில்லை; எந்த விதத்தில் கிறிஸ்துவைப் போன்று என்று நான் இதுவரையிலும் சொல்லவில்லை; அது பின்வரும் விதத்திலேயாகும்: நமது கர்த்தர் இயேசு பரிபூரணமாய்க் காணப்பட்டார் மற்றும் நீங்கள் அபூரணர்கள் மற்றும் நானும் அபூரணமானவன்; நம்மால் மாம்சத்தில் கிறிஸ்துவைப் போன்று ஒருபோதும் காணப்பட முடியாது; இப்படியான விதத்தில் கர்த்தர் நம்மைச் சோதிக்கிறதில்லை. அவர் பின்வருமாறு கூறுகின்றார்: “நீங்கள் மாம்சத்தில் இல்லை; மாறாக ஆவியில் காணப்படுகின்றீர்கள்; அப்படியானால் கிறிஸ்துவின் ஆவியானது உங்களில் வாசமாயிருக்கும்.” அவர் உங்களை மாம்சத்தின்படியாக இல்லை, மாறாக ஆவியின்படியாகவே நியாயந்தீர்க்கின்றார். நம்முடைய மாம்சத்தின் காரியமென்ன? உங்கள் மாம்சமானது நீதிமானாக்கப்பட்டதாகக் கருதப்பட்டுள்ளது; கிறிஸ்துவின் புண்ணியமானது உங்களுக்கு மாம்சத்தின்படியாகச் சாற்றப்பட்டு, அந்தக் குறைகள், நிலைமைகள் அனைத்தையும் மூடுகின்றதாய் இருக்கின்றது; கிறிஸ்துவுக்கும் மற்றும் மாம்ச பூரண நிலைமைக்கும், மாம்சத்திலுள்ள உங்கள் அபூரண நிலைமைக்கும் இடையில், அவரது பலியின் புண்ணியமானது இந்தக் குறைவுகளை மூடத்தக்கதாக, உங்களுக்கும், எனக்கும் சாற்றப்பட்டுள்ளது. உங்கள் மாம்சமானது உண்மையில் அபூரணமாக இருக்க, உங்கள் மாம்சமானது பூரணப்படுத்தப்பட்டதாகக் கருதப்பட்டுள்ளதை உங்களால் காண முடியவில்லையா? நம்மை ஜீவபலிகளாக ஒப்புக்கொடுக்க முடிகிறவர்களாக நம்மை ஆக்குவதே, இப்போது நாம் தேவனால் பூரணர்களாகக் கருதப்படுவதற்கான நோக்கமாகும். கறைதிரை இல்லாததும், குறைவுகளற்றதுமான பலிகளை அல்லாமல், மற்றப்படி வேறெந்த பலிகளும் தேவனுடைய பலிபீடத்தில் வரக்கூடாது என்பதே தெய்வீகச் சித்தமாய் இருக்கின்றது. கறைதிரையற்றதும், குறைவற்றதுமான தேவாட்டுக்குட்டியாக நம் கர்த்தர் இயேசு காணப்பட்டார் மற்றும் அவர் அங்கீகரிக்கவும்பட்டார். உங்களுக்கும், எனக்கும் மாம்சத்தில் கறைதிரைகள் மற்றும் குறைவுகள் காணப்படுகின்றன மற்றும் இவற்றோடு நாம் பலிபீடத்தினிடத்திற்கு வரமுடியாது என்று கர்த்தர் சொல்கின்றார். நாம் என்ன செய்வது? நாம் அவைகளை ஒழிக்க வேண்டுமே. எப்படி ? அவைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். நமக்காக எது அவற்றை மூடிடும்? விசுவாசத்தின் வாயிலாய்க் கிறிஸ்துவினுடைய பலியின் புண்ணியமானது சாற்றப்படுகின்றது மற்றும் செயல்படுத்தப்படுகின்றது. இது அந்தக் குறைவுகள் அனைத்தையும் மூடிவிடும். இதனால்தான் நாம் தேவனுடைய பலிபீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றோமா என்று என்னிடம் கேட்கின்றீர்களா? அதுதான் முக்கிய கருத்து; என் அன்பு சகோதரர்களே இதைத்தான் அப்போஸ்தலன் பின்வருமாறு கூறுகின்றார்: “அப்படியிருக்க சகோதரரே, (அவர் உங்கள் பாவங்களை மன்னித்து, இந்த மூடலை உங்களுக்குக் கொடுத்துள்ளபடியால்) நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை” (ரோமர் 12:1). “பரிசுத்தமான” ஜீவபலியா என்று கேட்கின்றீர்களா? ஆம்! பரிசுத்தமான ஜீவிபலிதான். நம்மைப் பரிசுத்தமாக்கத்தக்கதாக நாம் என்ன செய்திருக்கின்றோம்? உங்களைப் பரிசுத்தமாக்கும் காரியத்தினைக் கிறிஸ்து செய்தார். “பரிசுத்தம்” எனும் வார்த்தையின் அர்த்தம் “முழுமை அல்லது நிறைவு ஆகும்”. கிறிஸ்துவினால் தரிப்பிக்கப்படுகின்ற நீதியானது, நம்மைப் பாவத்திலிருந்து, குறைவுப்பட்ட நிலையிலிருந்து நம்மை முழுமையானவர்களாக, பூரணமானவர்களாகக் கருதப்படும் நிலைக்குக் கொண்டுவருகின்றது. ஆகவே அப்போஸ்தலன் இனிமேல் நீங்கள் மாம்சத்தின்படியானவர்கள் இல்லை, மாறாக நீங்கள் ஆவியின்படியானவர்களாக இருக்கின்றீர்கள் என்றும், மனித கண்ணோட்டத்தில் நீங்கள் இல்லை என்றும், கர்த்தருக்கான புத்தியுள்ள ஆராதனையென அந்த மனுஷீகத்தினை நீங்கள் பலிசெலுத்தியுள்ளீர்கள் என்றும்; இதுமுதற்கொண்டு பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட புதுச்சிருஷ்டிகளென நீங்கள் உங்களைக் கருதிக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றார். இப்பொழுதோ கிறிஸ்து இயேசுவில் புதியதாய் ஜெநிப்பிக்கப்பட்டுள்ளதான புதுச்சிருஷ்டி, கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினன், பழைய மனுஷனிடமிருந்து, முற்றிலும் வேறுபட்டவனாக இருக்கின்றான்; ஆகவே இந்தக் கண்ணோட்டத்திலிருந்து அப்போஸ்தலன் தன்னைக்குறித்து, “பழைய மனுஷனாகிய நான்” என்றும், “புதிய மனுஷனாகிய நான்” என்றும் பேச முடிகிறவராய் இருக்கின்றார். அவர் “நான்” என்று சொல்லுகின்றார், எனினும் “நானல்ல” என்றும் கூறுகின்றார். இங்குத்தான் பழையதும், புதியதும் காணப்படுகின்றது. இங்குத்தான் பழைய பவுலும், புதிய பவுலும் காணப்படுகின்றனர். மாம்சத்தின்படியான பழைய பவுல் மரித்துள்ளதாகக் கருதப்பட்டுள்ளார், ஆவியின்படியான புதிய பவுல் உயிரோடிருப்பதாகக் கருதப்படுகின்றார். ஆகவே நாம் நம்முடைய பலிகளை ஏறெடுக்க முடிகிறதும் மற்றும் புதுச்சிருஷ்டிகளென நாம் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவர்களாய் இருக்கிறதும் மற்றும் நல்ல போராட்டம் போராடுகிறதும் மற்றும் ஜெயங்கொள்வதும் மற்றும் வழி முழுவதிலும் கர்த்தரினால் நாம் உதவப்படுவதுமே நம்முடைய மகிமையான நிலைமையாய் இருக்கின்றது. ஆனால் புதுச்சிருஷ்டிகளென நாம் இந்த நிலைக்கு வர வேண்டும்; நாம் நின்றுவிடக்கூடாது; தேவனுடைய பிரியமான குமாரனுக்கொத்த சாயலாகிய இலக்கு என்ற ஒன்று இருக்கின்றதெனத் தேவன் புதுச்சிருஷ்டிகளாகிய நம்மிடத்தில் கூறுகின்றார். நீங்கள் இலக்கினை வந்து அடைந்துவிட்டீர்களா? “என் மரணத்தருவாயின் போதே இலக்கை அடைவேன்; இதற்கு முன்னதாக அடைய நான் எதிர்ப்பார்க்கிறதில்லை” என்று ஒருவர் சொல்லலாம். “மரணமடைவதற்கு முந்தைய நாட்களைவிட, மரணத்தருவாயின்போதே நீங்கள் இலக்கை நெருங்கியிருப்பீர்கள் என்று எதன் அடிப்படையில் நீங்கள் எண்ணுகின்றீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டால்… பதில் இருப்பதில்லை. இந்த இலக்கு என்பது, குணலட்சணத்திற்கான இலக்காய் இருக்கின்றது என்றும், குணலட்சணத்தின் விஷயத்தில் நீங்களும் நானும் அந்த இலக்கை வந்தடைய வேண்டும் என்றும் நான் கூறுகின்றேன். என்ன சொல்லுகின்றீர்கள்? என்று நீங்கள் கேட்கலாம். இதோ இவ்விதத்திலாகும்: கிறிஸ்துவின் குணலட்சணம் எது? எவ்விதத்தில் அவர் பலி ஒன்றை ஏறெடுத்தார்? பின்வரும் விதத்திலாகும்: “அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்” (எபிரெயர் 10:7). இதுவே அவர் நிலைப்பாடாகும் பிதாவின் சித்தத்திற்கு முழுமையான அர்ப்பணிப்பாகும்; இதற்குக் குறைவானதல்ல. நீங்களும், நானும் இந்நிலைக்கு வர வேண்டுமா என்று கேட்கின்றீர்களா? ஆம்! என்று பதிலளிக்கின்றேன். சரி, பிதாவின் சித்தம் என்ன? நாம் இருதயத்தின்படி ஒத்திருக்க வேண்டும் என்பதும், கண்டிப்பாக மாம்சத்தின்படி ஒத்திருக்கவேண்டும் என்று இல்லை என்றாலும், நம்மால் முடிந்தமட்டும் மாம்சத்தின்படி ஒத்திருக்க முயற்சிக்க வேண்டும் என்பதும், இருதயத்தில் அவர் சித்தத்தைக் கைக்கொண்டிட வேண்டும் என்பதும் பிதாவின் சித்தமாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆன்மாவோடும், முழுப்பலத்தோடும் நீங்கள் அன்புகூர வேண்டும் என்பது அவர் சித்தமாய் இருக்கின்றது. இந்நிலைக்கு நாம் வரமுடியுமா என்று கேட்கின்றீர்களா? முடியும் என்று நான் எண்ணுகின்றேன். கர்த்தரும் இப்படியாகவே எண்ணுகின்றார். நம்முடைய மனங்களில் இந்நிலையினை நாம் அடைந்திட முடியும். “என் மனதில் தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கு ஊழியஞ்செய்கின்றேன்; என் மாம்சத்தைக்கொண்டு கொஞ்சம் பாவப்பிரமாணத்துக்கு ஊழியஞ்செய்கின்றேன்; ஆனால் மாம்சம் மரித்ததாகக் கருதப்பட்டுள்ளது மற்றும் கர்த்தர் மாம்சத்தின்படி நியாயந்தீர்க்கிறதில்லை” என்று அப்போஸ்தலன் கூறியுள்ளார். நாம் கிறிஸ்துவினுடைய மனதை உடையவர்களாக இருப்போமானால், நாம் மாம்சத்தில் நம்மால் முடிந்ததைச் செய்வோம்; அதைக் கர்த்தருடைய சித்தத்திற்கு இசைவாய்க் கீழ்ப்படுத்தி வைப்பதற்கு முயன்று கொண்டிருப்போம். ஆனால் நாம் மாம்சத்தின்படியாக நியாயந்தீர்க்கப் படுகிறதில்லை; மாறாக ஆவியின்படி, மனதின்படி, புதுச்சிருஷ்டியின்படி நியாயந்தீர்க்கப்படுகின்றோம். ஆகையால் அருமையான நண்பர்களே: உங்கள் மனதைக் கொண்டு தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கு ஊழியஞ்செய்யுங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு மனதோடும், உங்கள் முழு ஆன்மாவோடும், உங்கள் முழுப்பெலத்தோடும் செய்யுங்கள். இப்படிச் செய்வீர்களானால், நீங்கள் இலக்கில் காணப்படுகின்றீர்கள். “உங்களை நீங்கள் அன்புகூருவதுபோன்று, உங்கள் அயலாரை அன்புகூருகின்றீர்களா?” என்று உங்களிடம் கேட்கப்பட்டால் நீங்களோ “ஆம்! நான் அனைவரையும் அன்புகூருகின்றேன் மற்றும் அனைவருக்கும் நன்மை செய்ய விரும்புகின்றேன் மற்றும் இதில் பிரியமாய் இருக்கின்றேன்” என்கிறீர்கள். “அப்படியானால் சகோதர சகோதரிகளை அன்புகூரும் நிலைக்கு உண்மையில் வந்துவிட்டீர்களா?” என்று உங்களிடம் கேட்கப்பட்டால்,… நீங்களோ “ஆம்!” என்கிறீர்கள். “தேவனை அன்புகூருகின்றீர்களா?” என்று உங்களிடம் கேட்கப்பட்டால்… “ஆம்!” என்கிறீர்கள். “முழு மனுக்குலத்தையும் அன்புகூருகின்றீர்களா?” என்று உங்களிடம் கேட்கப்பட்டால்… “ஆம்!” என்கிறீர்கள். “யாருக்கேனும் தீங்கு செய்ய வேண்டும் என்று தோன்றுகின்றதா?” என்று உங்களிடம் கேட்கப்பட்டால் “இல்லை!” என்கிறீர்கள். “ஏதேனும் தவறு செய்ய உங்களுக்குத் தோன்றவில்லையா அல்லது தவற்றைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லையா?” என்று கேட்கப்பட்டால்… “இல்லை!” என்கிறீர்கள். “நீங்கள் சகோதரரை அன்புகூருகின்றீர்களா? அவர்களுக்கு நன்மை செய்யப்படுவதைப் பார்க்க விரும்புகின்றீர்களா?” என்று உங்களிடம் கேட்கப்பட்டால்… நீங்கள் “ஆம்!” என்கிறீர்கள். நீங்கள் இலக்கில் இருக்கின்றீர்கள் என்று நான் எண்ணுகின்றேன். இதைத்தான் கர்த்தர் இலக்காக வைத்திருக்கின்றார். இதைத்தான் கிறிஸ்துவும் செய்தார். அவர் உலகத்தை அன்புகூர்ந்து, அதற்காகத் தம்மையே கொடுத்துவிட்டார். அவர் பிதாவை அன்புகூர்ந்து, பிதாவின் சித்தத்தைச் செய்வதில் தம் ஜீவனையே கொடுத்துவிட்டார். அவர் சீஷர்களை அன்புகூர்ந்தார்; அவர்களைத் தம்முடையவர்களென அவர் அன்புகூர்ந்தபடியால், முடிவுபரியந்தம் அவர்களை அன்புகூர்ந்தார். ஆகையால் இப்படியே நம் ஆவியும் காணப்பட வேண்டும் மற்றும் அனைவரையும் அன்புகூருகிற நிலைமைக்கும், உங்கள் சத்துருக்களை அன்புகூருகிற நிலைமைக்கும் நீங்கள் வருகிற மாத்திரத்தில், நீங்கள் இலக்கில் வந்து நிற்கின்றீர்கள். உங்கள் சத்துருக்களை அன்புகூருவது என்பது கடினமான காரியமாகும், ஆனாலும் உங்கள் சத்துருக்களை நீங்கள் அன்புகூர வேண்டும்; “உங்களை இழிவாய் நடத்துகிறவர்களுக்கு, நன்மை செய்யுங்கள்” என்று கர்த்தர் சொல்லியிருக்கின்றார். உங்கள் சத்துருக்களை அன்புகூரும் நிலையினை நீங்கள் அடையவில்லையெனில், நீங்கள் பரிசை வென்றுதரும் இலக்கில் இல்லை; ஏனெனில் குறைவான தரநிலையை உடைய எவரும் தெரிந்தெடுக்கப்பட்ட வகுப்பாரில் காணப்படுகிறதில்லை. இவர்கள் அனைவரும் தேவனுடைய பிரியமுள்ள குமாரனுக்கொத்த சாயலாக வேண்டும் மற்றும் இதுவே இலக்காகும். நீங்கள் இந்நிலைக்கு இன்னும் வரவில்லையெனில், ஓடுங்கள்; உங்களால் முடிந்தமட்டும் வேகமாய் வந்து சேருங்கள். ஜீவியத்தில் அனைத்தையும் விட்டுவிட்டு, அந்நிலைமைக்கு வந்துவிடுங்கள். “என்னால் ஒரே ஒரு நபரை அன்புகூர முடியவில்லை; அவன் சத்துருவாவான் மற்றும் அவன் என்னைக் குறித்து இன்னென்ன விதமாய்ப் பேசியிருக்கின்றான்” என்று நீங்கள் சொல்லலாம். அவன் பேசினதையோ அல்லது செய்ததையோ ஒருபோதும் பொருட்படுத்தாதீர்கள். நீங்கள் உங்களுக்காக ஜீவிக்கவில்லை, அப்படித்தானே? நீங்கள் கர்த்தருக்காய் ஜீவிக்கின்றீர்கள். “அனைத்துப் பொல்லாப்புகளையும், பொறாமைகளையும், தீயதாயுள்ள அனைத்தையும் உங்கள் இருதயத்தினின்று களைந்துபோடுங்கள்; சத்துருக்களை அன்புகூருகின்ற மற்றும் அவர்களுக்கு நன்மை செய்ய விரும்புகின்ற நிலைமைக்கு உங்கள் இருதயத்தைக்கொண்டு வந்துவிடுங்கள்” என்று கர்த்தர் கூறுகின்றார். இதுவே இலக்கை வந்தடைவதாகும். இலக்கை வந்து அடைந்த பின்னர், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதில் நில்லுங்கள்! “அங்கு நிற்க வேண்டுமா, அது சுலபம்தானே!” என்று எண்ணுகின்றீர்களா? கொஞ்சம் காத்திருங்கள்; அங்குக் கொஞ்சம் நின்றுகொண்டு, பின்னர்ப் பாருங்கள். பல்வேறு வழிகளில் உங்களை எதிராளியானவன் தாக்குவான் மற்றும் அவன் உங்களைப் பல்வேறு வழிகளில் தாக்குவதற்குக் கர்த்தர் அனுமதித்திடுவார். உங்கள் சத்துருக்களை அன்புகூருவதற்கும், கர்த்தரை அன்புகூருவதற்கும், சகோதரரை அன்புகூருவதற்கும், உலகத்தாரை அன்புகூருவதற்கும் எதிர்மாறாக நீங்கள் செய்யத்தக்கதாக, எதிராளியானவன் பல்வேறு காரியங்களைச் செய்வான். கிறிஸ்துவின் மகிமையான இந்தத் தரநிலையினின்று உங்கள் மனம் திசைமாறத்தக்கதாக அவனால் முடிந்த அனைத்தையும் செய்வான். இலக்கை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது இருந்த தாக்குதல்களைக் காட்டிலும், இலக்கை வந்து அடைந்த பிற்பாடே நீங்கள் பல்லாயிர விதங்களில் தாக்கப்படுவீர்கள்; ஏனெனில் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிற காலபகுதியில், கர்த்தர் உங்களைப் பாதுகாத்துக்கொண்டிருந்தார் மற்றும் “உங்கள் திராணிக்கு மேலாகச் சோதிக்கப்படுவதற்கு உங்களை நான் அனுமதிக்கிறதில்லை” என்று கூறியிருந்தார்; ஆனால் நீங்கள் இலக்கை வந்து அடைந்த பிற்பாடு, நீங்கள் நிற்க திராணியுடையவர்களாய் இருப்பீர்கள். உங்கள் திராணி என்னவென்று அவர் அறிவார் மற்றும் உங்கள் திராணியின் அளவுகேற்ப உங்களைச் சோதிக்க விரும்புகின்றார்; ஏனெனில் அந்தத் தெரிந்துகொள்ளப்பட்டு, மகிமைப்படுத்தபடும் வகுப்பாரில் காணப்படும் அனைவரும் முழுமையாய்ச் சோதிக்கப்படவேண்டும் மற்றும் நிரூபிக்கப்பட வேண்டும் மற்றும் அவர்கள் தேவனுக்கும், சகோதரருக்கும் நேர்மையாய் இருக்கின்றார்கள் எனவும், உயர்ந்த, சிறந்த விதத்திலான அன்பைப் பெற்றிருக்கின்றார்கள் எனவும் நிரூபிக்கப்பட வேண்டும்.