Q161:1
கேள்வி (1912)-1- ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமை மாநாடுகளுக்கு நீங்கள் முழு ஒப்புதலளிக்கின்றீர்களா? வெகு சிலரே ஒவ்வொரு கூட்டத்திலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிக எண்ணிக்கையில் கூட்டங்களை ஒரு சபையார் கொண்டிருக்க வேண்டுமென நீங்கள் எண்ணுகின்றீர்களா?
பதில் – ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமை மாநாடுகள் குறித்து எனக்குக் கொஞ்சம் தெளிவில்லை. ஆனால் தெளிவு இல்லாதபோது, காத்திருக்க வேண்டும் என்பதே, எனக்குள் நான் கொண்டிருக்கும் கோட்பாடாகும். அவை பிரயோஜனமானதா அல்லது பிரயோஜனமற்றதா எனும் விஷயத்தினை நான் ஒப்பிட்டுப்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்; எனினும் நிச்சயம் இல்லாததால், அதைக்குறித்து நான் எதையும் சொல்வதற்கில்லை. ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமை மாநாடுகளைக் குறித்துக் குறிப்பிடும் கடிதம் ஒன்றினை நான் வாட்ச் டவரில் வெளியிட்டது எனக்கு ஞாபகம் இருக்கின்றது. அது சிலரால் எனது ஒப்புதலாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் கவனித்திருந்தேனாகில், கடிதத்தினுடைய அப்பகுதியினை வெளியிட்டிருந்திருக்க மாட்டேன் என்று எண்ணுகின்றேன். எனினும் என்னால் கிரகிக்க முடிந்த வரையின்படியான என்னுடைய அறிவுரை என்னவெனில்: இவ்விஷயத்தில் ஒவ்வொரு சபையாரும் பரத்திலிருந்து வரும் ஞானத்தினை நாடிடுவார்களாக; ஒருவேளை அது ஆவிக்குரிய காரியத்திற்குப் பிரயோஜனமானதாக இருப்பதாகக் கண்டுகொள்வார்களானால், அதைத் தொடருங்கள். அதன் பிரயோஜனத்தைக் குறித்து உங்களுக்கு ஐயப்பாடு இருக்குமானால், அதைத் தொடராதிருங்கள். ஒருவேளை நான் அறிவுரை கொடுக்கவேண்டுமெனில், என் அறிவுரை அதற்கு எதிராகவே காணப்படும்; எனினும் அதுகுறித்து நான் போதுமானளவுக்கு உணர்ந்துகொள்ளவில்லை என்பதால், எதிரிடையான அறிவுரையினை வழங்கிடுவதற்கு நான் ஆயத்தமாயில்லை.
ஒரு சிலரே பங்கெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிக எண்ணிக்கையில் கூட்டங்களைப் பெற்றிருத்தல் தொடர்பாக நான் எண்ணுவது என்னவெனில்: சபையார் பொதுவாகக் கலந்துகொள்ளக்கூடிய பாட வகுப்புகளைப் பெற்றிருப்பது சிறந்ததாய் இருக்கும். பொதுவாகவே வேதாகம ஆராய்ச்சி வகுப்புகளில் அதிக எண்ணிக்கை இருப்பதில்லை. ஞாயிற்றுக்கிழமைக் கூட்டங்களைத்தவிர, மற்றப்படி நான் எப்போதுமே புதன்கிழமை இரவில் ஜெபம் மற்றும் சாட்சிக் கூட்டங்களைப் பெற்றிருக்க நண்பர்களை ஊக்குவிப்பதுண்டு. பின்வரும் வியாழக்கிழமையினுடைய மன்னாவினை அடுத்த கூடுகைக்கான மையக்கருத்தாகப் பயன்படுத்துவதில், தாங்கள் மிகுந்த ஆசீர்வாதத்தினை அடைவதாக அவர்கள் என்னிடம் கூறுகின்றார்கள். அவ்வாரத்தினுடைய அனுபவங்களானது, அடுத்துவரும் புதன்கிழமையன்று திரளான மற்றும் உதவிகரமான சாட்சியங்களைப் பகிர்ந்திடுவதற்கு ஏதுவாகின்றது. இந்த இடைவாரக் கூட்டங்களானது மிகவும் பரவலாக நண்பர்களினால் நடத்தப்பட்டு வருவதைக் காண்கையில் நாங்கள் மகிழ்ச்சியுறுகின்றோம்.
மற்றக் கூட்டங்கள் தொடர்பாக: பொதுவான கூடுகைகளில் வேதாகமப் பாடங்கள் வாசிக்கப்படுவதை நான் பரிந்துரைப்பதில்லை. ஒவ்வொருவரும் முன்னமே வீட்டிலோ அல்லது பேருந்தில் வரும்போதோ வாசித்துக்கொள்ள வேண்டும். சபையாராய்க் கூடி ஆராய்வது என்பது முற்றிலும் வேறுபட்ட காரியமாகும். கேள்விகளை நிச்சயமாகவே நீங்கள் தனிப்பட்ட விதத்தில் படிக்கும்போது பயன்படுத்திக்கொள்ளலாம் மற்றும் அதிலிருந்து மிகுந்த நன்மையும் அடையலாம்; ஆனால் சபையாராய்க் கூடிப்படிக்கையில், கேள்விகள் பயன்படுத்தப்படுவது என்பது மிகவும் உதவிக்கரமாய் இருக்கும். நம்முடையது மிகவும் ஓட்டை ஒழுக்கான பாத்திரங்களாய் இருப்பதினால், நாம் வேதாகமத்தினைத் திரும்பத்திரும்ப வாசிப்பது பலன் தருவதாய் இருக்கும். மேலும் வேதாகமப் பாடங்களானது, வகைப்படுத்தப்பட்ட வடிவிலுள்ள வேதாகமம் மாத்திரம்தான்; தலைப்புவாரியாகப் பிரிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டுள்ள வடிவமைப்பானது என்று சொல்லப்படலாம். நீங்கள் டாண்களை /Dawns வாசிக்கையில், நீங்கள் வேதாகமத்தையே வாசிக்கின்றீர்கள். இவ்விதமாய் வேதாகமத்தினை வாசிப்பவர்கள், வேதாகம அறிவினை மிக அதிகமாய்ப் பெற்றுக்கொள்பவர்களாய் இருப்பார்கள். இங்குமங்குமாகத் தொடர்பில்லாமல் வேதாகமத்தினை வாசிப்பது என்பது, தலைப்புவாரியான ஆராய்ச்சி அளவுக்கு அதிகம் தகவல்களைக் கொணர்வதாய் இராது.
சகோதரர்களில் சிலர் தாங்கள் சார்ந்துள்ள சபைகளில், அவர்கள் டாண் ஆராய்ச்சிக் குழுக்களை / Dawn Study League உருவாக்கிக்கொண்டதாக எனக்குத் தெரிவித்தனர். இதன் ஒவ்வொரு அங்கத்தினனும், தன்னால் முடிந்தமட்டும் ஒவ்வொரு நாளும் இத்தனை பக்கங்களை வாசிப்பதாக ஒப்புக்கொள்கின்றான். இது நன்றாய்ப் போய்க்கொண்டிருக்கிறதென என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது. வாட்ச் டவரில் வெளியிட்ட கடிதம் ஒன்றில், யாரோ ஒருவர் கொடுத்திருந்த யோசனை உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அந்த யோசனையை அநேகர் பின்பற்றிக்கொண்டு ஆறு தொகுதிகளையும் ஆறு முதல் பன்னிரண்டு மாதக் காலம் – நாள் ஒன்றிற்கு இருபத்துநான்கு அல்லது பன்னிரண்டு பக்கங்கள் கொண்டு வாசித்து வருகின்றனர். தொகுதிகளை ஒவ்வொரு வருஷமும் வாசிப்பது என்பது, சத்தியத்தினை ஞாபகத்திலும், இருதயத்திலும் புத்துணர்வுடனும், தெளிவுடனும் வைத்துக்கொள்ளும். அநேகரால் தனிப்பட்ட விதத்தில் பின்பற்றப்பட்டுள்ளதான இத்திட்டமானது, சபையாராய்க் கூடி முயற்சிக்கையில், சந்தேகத்திற்கிடமின்றி நன்மையானதாய் இருக்கும்.