Q58:1
கேள்வி (1911)-1- பொறுப்புணர்வு வரும் வயதை அடைவதற்கு முன்னதாக, மரித்துப்போகும் அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகளானவர்கள், முற்பிதாக்கள் வரும் அதே தளத்திற்கு வருவார்களா… அதாவது உடனே பரிபூரணத்திற்கு வருவார்களா?
பதில் – இல்லவே இல்லை. முற்பிதாக்கள் (எதிர்காலத்தில்) இருக்கப்போகிற தளத்திற்கு, முற்பிதாக்கள் வருவதற்கு அநேகம் அனுபவங்கள் வாயிலாகவே கடந்துவந்தார்கள். ஆபிரகாமின் விஷயத்தில், அது அவரது விசுவாசத்திற்கான பரீட்சையாக, அவரது நேர்மையினை நிரூபிப்பதற்கான அனுபவமாய் இருந்தது! தீர்க்கத்தரிசிகளுக்கு அவ்வனுபவங்கள் என்னவாக இருந்தது என்றும், இதற்காய் எத்தனை பாடுபட்டார்கள் என்றும் சிந்தித்துப்பாருங்கள்! ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் அனைத்துத் தீர்க்கத்தரிசிகள் மற்றும் இராஜ்யத்தின் பூலோக பிரதிநிதிகளுடன், மனித பூரணத்தில் பங்கடைவதற்குப் பாத்திரவான்களாய்க் கருதப்படத்தக்கதாக, உங்கள் பிள்ளைகள் எந்த அனுபவங்களுக்குள்ளும் கடந்து செல்லவில்லை. குழந்தைக் குற்றமற்று (innocent) இருக்கும் காரியம் மிகவும் நலமே, ஆனால் இது பிள்ளைகளுக்கு எந்த ஒரு ஸ்தானத்தையும் பலனாகக் கொடுத்திடாது. பிள்ளை ஏதேனும் பலன் அடைய வேண்டுமெனில், அது குணலட்சணத்தினை வளர்த்திடுவது அவசியமாகும். சிறுமந்தைக்குள் வருபவர்கள் குணலட்சணத்தினுடைய வளர்ச்சியின் விளைவாகவே அங்கு வருவார்கள். முற்பிதாக்கள் வகுப்பாரில் இடம்பெறுபவர்கள், குணலட்சணத்தினுடைய வளர்ச்சியின் காரணமாகவே அந்த வகுப்பில் காணப்படுவார்கள். அப்படியானால் விசுவாசிகளினுடைய பிள்ளைகளின் நிலைமை என்ன? விசுவாசிகளினுடைய பிள்ளைகள் விசேஷித்த தெய்வீகப் பராமரிப்பின்கீழ்க் காணப்படுகின்றனர் என்று வேதவாக்கியங்கள் தெளிவாய்ச் சுட்டிக்காட்டுகின்றன என்று நான் பதிலளிக்கின்றேன். அது எப்படியிருக்கும் என்று என்னால் உங்களுக்குச் சொல்லமுடியாது. நான் அதை நம்புகின்றேன், காரணம் தேவ வசனமானது அப்படியாகச் சொல்கின்றது. இதோ அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளை உங்களுக்கு மேற்கோளிடுகின்றேன்: “அவிசுவாசியான மனைவி தன் விசுவாசியான புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகின்றாள்” – அதாவது பிள்ளைத் திவ்விய மேற்பார்வையின்கீழ்க் காணப்படுவதற்கென்று பிள்ளையின் பெற்றோர் இருவரும் கர்த்தருக்குள் காணப்படவேண்டும் என்கிற அவசியமில்லை. பெற்றோரில் ஒருவர் கர்த்தருக்கு அர்ப்பணம் பண்ணியிருந்தால், பிள்ளையானது அந்த அர்ப்பணம்பண்ணின பெற்றோருடையதாகக் கருதப்படுகின்றது மற்றும் தேவ ஆசீர்வாதமும் கடந்துவரும். இதுபோலவே அவிசுவாசியான கணவனும், விசுவாசியான மனைவியினால் பரிசுத்தமாக்கப்படுகின்றான்; இல்லையேல் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாய் இருப்பார்கள். ஆனால் அதற்கென்று பிள்ளைகளைக் கர்த்தர் பரலோகத்திற்கு எடுத்துச்செல்வார் என்பதாகாது. பிள்ளைகள் வளர்கையில், அவர்கள் சிறுமந்தைக்குள் வரத்தக்கதாகக் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்றாகாது. பிள்ளைகளுடைய ஜீவியத்தின் காரியங்களானது, அவர்களுடைய நன்மைக்கு ஏதுவாக நடத்தப்படும் எனும் விதத்தில் தயவு பாராட்டப்படுவார்கள், ஆனாலும் பிள்ளையினுடைய சித்தமானது குறுக்கிடப்படுகிறதில்லை. தேவன் தம்முடைய எந்த ஒரு சிருஷ்டிகளினுடைய சித்தங்களையும் ஒருபோதும் அத்துமீறுதல் பண்ணுகிறதில்லை. அந்தப் பிள்ளையிடம் சித்தம் இல்லாமல் இருப்பதுவரையிலும், பிள்ளைப் பகுத்தறிவில் முதிர்ச்சியடையாமல் இருப்பதுவரையிலும் திவ்விய மேற்பார்வையின்கீழ்ப் பிள்ளைக் காணப்படும். இதையே நான் – யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் உண்டாயிராத உபத்திரவ காலம் வருவதை வேதாகமம் கூறுவதைக்குறித்துக் கொஞ்சம் பயத்துடன் காணப்படும் பெற்றோர்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன். நீங்கள் ஒருவேளை உங்கள் பிள்ளைகளோடு காணப்பட்டால் உங்களால் அவர்களைப் பராமரித்துக் கொள்ள முடிகிறதைக்காட்டிலும், கர்த்தர் அவர்களைப் பராமரிக்க முடிகிறவராக இருக்கின்றார் என்ற முழு நம்பிக்கையுடன், அந்தப் பிள்ளைகளைக் கர்த்தரிடத்தில் ஒப்படைத்துவிடுங்கள்.