Q213:1
கேள்வி (1913)-1- மேசியாவின் இராஜ்யமானது பூமியில் ஸ்தாபிக்கப்பட்ட பிற்பாடு, யாரேனும் ஆதாமின் நிமித்தமான மரணத்தை அடைவார்களா?
பதில் – “பூமியில் ஸ்தாபிக்கப்படுதல்” எனும் வார்த்தைகளுக்கு நாம் கொடுக்கும் அர்த்தத்தினுடைய அழுத்தத்தின்மீது, சில விஷயங்கள் சார்ந்துள்ளது என்று நான் எண்ணுகின்றேன். என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி, இராஜ்யமானது ஸ்தாபிக்கப்படும் விஷயத்தில், கொஞ்சம் கொஞ்சமாகவே ஸ்தாபிக்கப்படும். அது ஸ்தாபிக்கப்படுவதற்கு காலம் எடுக்கும்; ஏனெனில் நான் புரிந்திருக்கிறபடி பார்த்தால், ஜனங்கள் இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாய் இருக்கையில், இராஜ்யத்தை ஸ்தாபிக்கக் கர்த்தர் நோக்கம்கொண்டிருக்கின்றார். மேசியா உலகத்தின்மீது அதிகாரம் செலுத்தி, தம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்கும் தருணம் வருகையில், அநேகம் ஜனங்கள் காணப்படுவார்கள்; இவ்வுண்மையைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில் ஆயிரம் ஆயிரமான ஜனங்கள் இருப்பார்கள்; அநேகமாக இவைகளைப் பற்றின அறிவு இவர்களுக்குக் கடந்துவர கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்ளும் – வாரங்கள், மாதங்கள், ஒருவேளை வருஷங்கள் எடுத்துக்கொள்ளலாம் – வருஷங்கள் என்று சொல்லலாமா என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் நீண்டகாலம் எடுத்துக்கொள்ளும் – மேலும் வேதவாக்கியங்களை நான் வாசிக்கையில், இது முறையான விதத்தில் நடைபெறும் என்று பார்க்கின்றேன். போதகரையும், இராஜ்யத்தையும் ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாக ஒரு குறிப்பிட்ட வகுப்பார் காணப்படுவார்கள்; முற்பிதாக்கள் காணப்படுவார்கள்; மேலும் இராஜ்யத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களாகவும், கர்த்தரைப் பற்றின அறிவிற்குள்ளாகக் கடந்து வந்தவர்களாகவும் உள்ள மற்ற சில ஜனங்களும் காணப்படுவார்கள்; இவர்களோடு யூதர்கள், விருப்பமுள்ள யூதர்கள் காணப்படுவார்கள்; இவர்களில் அநேகர் ஆயத்தமான நிலைமையில் காணப்பட்டு: “இதோ ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் சகல தீர்க்கத்தரிசிகள்! அவர்கள் இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்று நம்மிடம் கூறுகின்றார்கள்; நாங்களும் அதை ஒத்துக்கொள்கின்றோம்; மேசியாவின் இராஜ்யம் வந்திருக்குமானால், அதோடு இசைந்திருக்க நாங்கள் நாடுவோம்” என்று கூறுவார்கள். இவர்கள் மீது ஆசீர்வாதம் வருகையில், இன்னுமாக கட்டுப்பாடுகளும் இவர்களைச் சிறப்பாக்கி, மேம்படுத்தி வருகையில், இன்னுமாக இவர்களுடைய அறுவடைகள் மீது ஆசீர்வாதம் காணப்படுகையில், இன்னுமாக நன்மையான அனைத்தும் இவர்கள் மீது காணப்படுகையில், மற்றவர்கள்: “யூதர்கள் அனைத்தையும் பெற்றிருக்கின்றார்களே” என்றும், “கர்த்தரின் பர்வதத்துக்குப் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்,” யூதர்களும் போதிப்பார்கள், காரணம் “சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்,” இது பூமியின் கடையாந்தரங்களுக்குக் கடந்துசெல்லும் என்றும் சொல்வார்கள். ஆனால் அறுவடையிலுள்ள ஆசீர்வாதங்களும், மற்ற விஷயங்களும், வேதவாக்கியங்கள் சுட்டிக்காண்பிப்பதுபோன்று, ஜனங்களை நம்பவைப்பதற்குச் சிலகாலம் எடுத்துக்கொள்ளலாம்; ஒரே ஒரு மோசமான அறுவடை அவர்களை நம்பவைக்கப் போவதில்லை. அநேகமாக அவர்கள் இரண்டு அல்லது மூன்று மோசமான அறுவடைகளைப் பெற்றுக்கொள்ளும்போது பின்வருமாறு: “மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து வந்துள்ள தங்களது தீர்க்கத்தரிசிகளில் சிலரைத் தங்களது ஆதரவாகப் பெற்றிருப்பதே, தங்களது வளமைக்கான காரணம் என்று இந்த யூதர்கள் கூறுகின்றார்கள், ஆனால் இது எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கின்றது” என்று சொல்வார்கள். ஆனால் காலங்கள் போகப்போக, ஆசீர்வாதங்கள் தொடர்ந்து (யூதர்கள் மீது) காணப்படுகையில், ஜனங்கள்: “அவர்கள் சொல்லும் காரணம் முட்டாள்தனமானதோ, இல்லையோ, அவர்கள் முதல்தரமானவைகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்களே” என்பார்கள். பிற்பாடு சூழ்நிலைகள் தங்கள் ஜீவியங்களைப் பாதிக்கும்போது, காரியங்களை மிகத் தெளிவாக யோசித்துப் பார்ப்பவர்களாகக் காணப்பட்டு, இணக்கத்திற்குள் வருவார்கள்; அவர்கள் அனைவரும் இஸ்ரயேலர்களாகுவார்கள், ஆபிரகாமின் சந்ததியாகுவார்கள்; ஏனெனில் ஆபிரகாமின் சந்ததி பூமியை முழுவதுமாக நிரப்புவார்கள்; ஆபிரகாமின் சந்ததியாகாத அனைவரும் இரண்டாம் மரணம் அடைவார்கள். ஆகையால் அது படிப்படியாக நடக்கும் வேலையாக இருக்கும் என்று நான் எண்ணுகின்றேன்; பத்து வருஷங்கள் எடுக்குமா அல்லது அதற்கு மேலாக எடுத்துக்கொள்ளுமா என்பது எனக்குத் தெரியாது; ஆனால் ஐந்து வருஷமே நீண்டகாலமாக இருக்குமென நான் எண்ணுவேன். அக்காலப்பகுதியில் மரணம் உலகத்தில் செயலாற்றிக்கொண்டிருக்கும் என்றும், இப்போதுபோலவே ஜனங்கள் பெலவீனங்களினாலும், வியாதியினாலும் அக்காலப்பகுதியில் மரித்துக்கொண்டிருப்பார்கள் என்றும், இணக்கத்திற்குள் கடந்துவருபவர்கள் விஷயத்தில் மாத்திரம் மரிக்கும் செயல்பாடும், பெலவீனங்களும் கடந்துபோகத் துவங்கும் என்றும், மற்றவர்கள் தொடர்ந்து ஆதாமின் நிமித்தமான மரணம் மரிப்பார்கள்/அடைவார்கள் என்றும், அவர்களின் மரணத்திற்கும், அவர்களது மூதாதையர்களின் மரணத்திற்கும் எந்த வித்தியாசமும் இராது என்றும் நாங்கள் நம்புகின்றோம். பாவத்தின் விளைவாக வரும் மரணம் அனைத்துமே, அது எப்போது வந்தாலும், அது ஆதாமின் நிமித்தமான மரணமேயாகும்; அது பல நூற்றாண்டுகள் தாண்டிவந்தாலும், அது இன்னமும் ஆதாமின் நிமித்தமான மரணமேயாகும். பாவத்திலிருந்து விலகும் யார் ஒருவரும் ஜீவன் அடையலாம் என்பதாகவும், ஒருவேளை அவர்கள் பாவத்தையே விரும்புவார்களானால், அவர்கள் இராஜ்யத்துடன் இசைவிற்குள் வராதவர்களாய் இருப்பதினால், அவர்களின் மரணம் இரண்டாம் மரணமாக இருக்கும் என்பதாகவும் கர்த்தருடைய வாக்குத்தத்தம் காணப்படுகின்றது; எனினும் அவர்களுக்கும்கூட நூறு வருஷங்கள் கொடுக்கப்படும்; இக்காலப்பகுதியில் அவர்கள் அக்கிரமக்காரர்களாய்க் காணப்படலாம்; எனினும் இரண்டாம் மரணத்திற்குப் பாத்திரவான்கள் என்று உடனே தீர்க்கப்படுவதில்லை.