Q541:1
கேள்வி (1913)-1- மற்றவர்களுடைய ஜெபங்கள்மூலமே ஒழிய, மற்றப்படி நம்மால் பெற்றுக்கொள்ள முடியாது என்றுள்ள ஆசீர்வாதங்கள் காணப்படுகின்றன என்று வேதம் போதிக்கின்றதா?
பதில் – கர்த்தர் தம்மிடத்தில் அநேகம் ஆசீர்வாதங்ளை அருளுவதற்கென்று வைத்திருக்கின்றார்; மேலும் ஜெபத்திற்கு விடையாகவே சில ஆசீர்வாதங்களை அருளிடுவதற்கு அவர் சித்தமாயிருக்கின்றார் என்று சில வேதவாக்கியங்களிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம். ஆகையால் அப்போஸ்தலன் அவர் நாட்களில் காணப்பட்ட சிலரிடம் “சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்” என்று கூறினார். அவர் தனக்காக தான் ஜெபம்பண்ணிக் கொள்ளமுடியவில்லை என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை மற்ற அப்போஸ்தலர்களினால் தங்களுக்குத் தாங்களே ஜெபம்பண்ணிக்கொள்ள முடியவில்லை என்ற அர்த்தத்தில் அவர் சொல்லவில்லை அவர்கள் ஒருவருக்கொருவர் ஜெபம்பண்ணிக்கொள்ள முடியவில்லை என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை பிதாவுடனான ஐக்கியத்தினை இழந்துவிட்டார் மற்றும் பிதா அவரின் ஜெபத்தினைக் கேட்பதில்லை என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை மாறாக கிறிஸ்துவின் சுவிசேஷத்தினைப் பரப்பிடுவதற்கான வாய்ப்புக் கிடைக்கத்தக்கதாக எங்களுக்கு ஒரு கதவு திறக்கப்படும்படியாகச் சகோதரரே ஜெபம் பண்ணிடுங்கள் என்றே அப்போஸ்தலன் கூறினார். அப்போஸ்தலன் வெறும் மேல்பூச்சாக (formality) பேசினார் என்றும், வெறும் சம்பிரதாயமாக எங்களுக்காக ஜெபம்பண்ணுங்கள், எங்களுக்காக ஜெபம்பண்ணுங்கள் என்று மாத்திரம் கூறினார் என்றும் நீங்கள் எண்ணுகின்றீர்களா? இல்லை, அப்போஸ்தலன் சம்பிரதாயமாக மாத்திரம் இப்படிக் கூறினார் என்று எடுத்துக்கொள்வதற்கு நாங்கள் விரும்பவில்லை மாறாக ஒரு குறிப்பிட்ட பாடத்தினை அவர் போதித்துக்கொண்டிருக்கின்றார் என்று, அதாவது அப்போஸ்தலர்களை ஜெபத்தில் நினைவுகூருவதன்மூலம் ஒரு குறிப்பிட்ட ஆசீர்வாதம் வருமெனப் போதித்துக்கொண்டிருக்கின்றார் என்று எடுத்துக்கொள்ள நாங்கள் விரும்புகின்றோம். இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராகவும், அருளிடுவதற்கு அநேகம் ஆசீர்வாதங்களை உடையவராகவும் காணப்படும் தேவன், தம் ஜனங்களை ஜெபிப்பதற்கு ஊக்கமூட்டிடுவதில் பிரியமாயிருக்கின்றார் – நம்மை ஜெபிக்கப்பண்ணுவதில் பிரியமாயிருக்கின்றார் என்று நான் எண்ணுகின்றேன். உங்களை ஜெபிக்கப்பண்ணுவதில் தேவன் ஏன் பிரியமாயிருக்கின்றார்? சிறியவர்களாகிய நீங்கள் அல்லது சிறியவனாகிய நான் முழங்கால்படியிட்டு ஜெபிக்கிறோமா அல்லது இல்லை என்று தேவன் அங்கு அமர்ந்திருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றாரா? ஓ! இல்லை, இது கருத்தல்ல! ஜெபத்தின் விஷயத்தில் ஒருவேளை நீங்கள் விசுவாசம் வைத்தால், அது உங்களுக்கு மிகுந்த நன்மைபயக்கும் என்றும், ஜெபத்தில் நான் ஒருவேளை விசுவாசம் வைத்தால், அது எனக்கு மிகுந்த நன்மைபயக்கும் என்றும் தேவன் காண்கின்றார். ஆகையால் அவர் நமக்குச் செய்ய விரும்புபவைகளைக்குறித்து நீங்களும், நானும் அவரிடம் கேட்பதன்மூலம் நீங்களும், நானும் அவரால் ஆசீர்வதிக்கப்படும் வழிவகையினை ஒரு பாகமாக ஏற்படுத்தியிருக்கின்றார். இப்படியாக ஜெபம்பண்ணிடுவதற்கு நம்மை ஊக்குவிக்கின்றார். உதாரணத்திற்குப் பரிசுத்த பேதுரு சிறையில் காணப்பட்டு, கர்த்தருடைய தூதனானவர் அவரிடத்தில் வந்து, அவரை விழித்தெழப்பண்ணினபோது, பேதுரு ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கவில்லை. தேவதூதன் பேதுருவின் கரங்களினின்று சங்கிலிகளை உடையப்பண்ணினார் மற்றும் கதவுகள் பேதுரு முன் திறக்கப்பட்டு, காவல்காரர்கள் தூங்கிக்கொண்டிருக்கையில், அவரை வெளியே கொண்டுவந்து, அவர் வழியே சந்தோஷமாய்ப் போகும்படிக்குத் தேவதூதனானவர் அனுப்பிவைத்தார்; கனவா நினைவா என்று உணர்ந்துகொள்ள முடியாமல் காணப்பட்ட பேதுரு தெருவின் வழியே நடந்துபோனார்; அவருக்கு அந்தத் தெருவை நன்றாய்த் தெரியும்; மேலும் கூட்டம் நடைபெறுகிற இடத்தின் கதவண்டைக்கு வந்தார்; அது நள்ளிரவாய் இருந்தது, ஆனாலும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது அவர்கள் பேதுருவுக்காய் ஜெபம்ப்பண்ணிக்கொண்டிருந்து, “ஓ! ஆண்டவரே! அப்போஸ்தலனாகிய யாக்கோபும் கொல்லப்பட்டு விட்டார்; இப்போதும் அதிகாரிகள் எங்கள் அன்புக்குரிய சகோதரனாகிய பேதுருவுக்கும் அச்சுறுத்தல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். அப்போஸ்தலர்கள் அனைவரும் எங்களிடமிருந்து எடுக்கப்பட்டு, கொல்லப்பட்டார்களானால், நாங்கள் என்ன செய்வோம்” என்று கூறிக்கொண்டிருந்தனர். அவர்கள் முழு இரவு ஜெபக்கூட்டத்தினைக் கொண்டிருந்தார்கள். பரிசுத்த பேதுரு கதவண்டைக்கு வந்து, தட்டினபோது, திறக்கும்படிக்கு வந்த சிறுபெண் பரிசுத்த பேதுருவைக் கண்டு, தான் ஆவியைப் பார்த்தாளோ என்று ஐயப்பட்டாள். அவள் நிச்சயமாகவே பேய்களைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கின்றாள்; மேலும் அவள் பரிசுத்த பேதுரு கதவண்டையில் நிற்கின்றார் என்பதைச் சொல்லும்படிக்கு ஓடிச்சென்றாள். இது எப்படியாகும்! பேதுரு சிறையில் அல்லவா இருக்கின்றார்! என்று அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். அவர்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஜெபத்திற்கு விடையாகத் தேவன் அவர்களுக்கு ஒரு மாபெரும் ஆசீர்வாதத்தினைக் கொடுத்திருக்கின்றார் என்று உங்களால் உணரமுடிகின்றதா? ஒருவேளை அவர்கள் ஜெபிக்கவில்லை என்றால், இவ்வளவான ஆசீர்வாதத்தினை அடைந்திருப்பார்களா என்று யோசிக்கின்றீர்களா? (அவர்கள் ஜெபம்பண்ணவில்லை என்றாலும்) கர்த்தர் பரிசுத்த பேதுருவை விடுதலைப்பண்ணியிருந்திருப்பார், ஆனாலும் ஜெபத்திற்கான விடையாக இது சம்பவித்திருக்கும் காரியம் என்பது, அந்த அருமையான சீஷர்களுக்கு அத்தகையதொரு ஆசீர்வாதமாய் இருந்திருக்கும், அவர்களது விசுவாசத்திற்கு அத்தகையதொரு பலப்படுத்துதலாக இருந்திருக்கும் மற்றும் அத்தகையதொரு சந்தோஷமாகவும், ஆசீர்வாதமாகவும் அவர்களுக்கு இருந்திருக்கும். ஆகையால கர்த்தருடைய ஒழுங்குகளுக்கு இசைவாகக் காணப்பட்டு, பல்வேறு இடங்களிலுள்ள கர்த்தருடைய வேலைகளைக்குறித்து ஜெபித்து, நினைவுகூருகிறவன், தன் சொந்த இருதயத்தில் ஓர் ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்கின்றவனாய் இருப்பான் மற்றும் இது சில தாக்கத்தினைக் கொண்டிருக்கும் என்று கர்த்தர் சுட்டிக்காட்டுகின்றார். என்னால் இதனுடைய கோட்பாட்டினைப் புரிந்துகொள்ள முடியவில்லை மற்றும் புரிந்துகொண்டதாகவும் நான் காண்பித்துக்கொள்கிறதில்லை ஆனாலும் உங்களுடைய, என்னுடைய ஜெபங்களுக்காகத் தேவன் தம் திட்டத்தினை மாற்றுவதில் பிரியங்கொள்ளார் என்பது நமக்குப் புரியவைக்கப்பட்டிருக்கின்றது — இல்லை, இல்லை, நமக்குப் பொருத்தமாய் இருக்கத்தக்கதாகத் தேவன் அண்டசராசரத்தை மாற்றப்போவதில்லை அவர் என்ன செய்ய வேண்டும் என்று நம்முடைய ஜெபங்களில் அவருக்குக் கூறுமளவுக்கு நாம் ஞானவான்களல்ல; மாறாக நம் ஜெபங்களைக் கேட்டு, நமக்கு ஆசீர்வாதங்கள் வழங்குமளவுக்கு அவர் ஞானமுள்ளவராய் இருக்கின்றார். ஜெபம்பண்ணிடுவதில் நாம் கொண்டிருக்கும் உண்மை, விசுவாசம் முதலியவைகளின் அளவிற்கேற்ப அவர் காரியங்களை ஒழுங்கு பண்ணியுள்ளார். ஜெபத்தின் வல்லமைக்குறித்து அறிந்திடாத கர்த்;தருடைய ஜனங்கள், பெலவீனமான கிறிஸ்தவர்கள் ஆவார்கள். ஆகையால் கர்த்தருடைய ஜனங்கள் எப்போதும் ஜெபம்பண்ணும்படிக்கும் ஜெப சிந்தையில், ஜெப மனநிலையில் எல்லா வேளைகளிலும் காணப்படுவதற்கும், தேவனுக்கு முழுக்க நன்றி ஏறெடுத்துக் காணப்படுவதற்கும் வேதவாக்கியங்கள் அவர்களை ஊக்குவிக்கின்றதாய் இருக்கின்றது.
இக்கருத்துச் சரியானது என்று நான் எண்ணுகையில், தினந்தோறும் ஜெபம் ஏறெடுக்கப்படாத எந்த வீடும், சரியான இல்லம் அல்ல – இப்படியாக உங்கள் இல்லமோ, என் இல்லமோ காணப்படக்கூடாது என்னும் கருத்தைத் தெரிவிப்பதற்கும் இவ்வாய்ப்பினை நான் இங்குப் பயன்படுத்திக்கொள்கின்றேன். எங்கு நீங்கள் ஜீவித்தாலும், எங்கு நான் ஜீவித்தாலும், எங்கெல்லாம் கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களிலுள்ள யாரொருவரும் ஜீவித்தாலும், அங்குக் குடும்ப ஜெபம் காணப்பட வேண்டும் – எப்படித் தினந்தோறும் காலை உணவு பரிமாறப்படுகின்றதோ, அதுபோலத் தினந்தோறும் குடும்பமாகக் குடும்ப ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கென்று நீங்கள் உங்களது வளர்ந்த பிள்ளைகள், அவர்கள் மதித்து உணர்ந்திடாத தொழுதுகொள்ளுதலில் பங்கெடுக்கும்படிக்கு அவர்களை நீங்கள் வற்புறுத்த வேண்டும் என்றாகாது; அல்லது ஒருவேளை உங்கள் கணவன் அல்லது மனைவி இதில் விருப்பமற்றும், இசைவில்லாமலும் காணப்படுகையில், குடும்ப ஜெபத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வேண்டி நீங்கள் வற்புறுத்திச் சண்டைச் சச்சரவை எழுப்ப வேண்டும் என்றும் ஆகாது; ஏனெனில் இம்மாதிரியான நிலைகளில் தேவன் பிரியங்கொள்வதில்லை. மாறாக தேவனுடைய பிள்ளையானவன் எப்படியாவது ஜெபம்பண்ணிட வேண்டும் என்று தன் இருதயமானது எப்போதும் விரும்புமளவுக்கு ஜெப சிந்தையில் காணப்பட வேண்டும்; மேலும் ஏற்றவேளையில் மனைவியானவள் ஜெபத்தில் இணைந்துகொள்ள விரும்புகின்றாளா என்று மனைவியிடம் அமைதியாய்க் கேட்டுக்கொள்ளப்படுவதாக. கூடுமானமட்டும் நுட்பமான விதத்தில் கேட்கப்படுவதாக. ஒருவேளை கணவன் இசைவில்லாதவராக இருப்பாரானால், மனைவி அவரை அணுகி, “கணவனே, நம்முடைய இல்லத்தில் நாம் குடும்ப ஜெபத்தைப் பெற்றிருந்து, நம்முடைய சிருஷ்டிகரையும், நம்முடைய இரட்சகரையும் கனப்படுத்தினால் அது மிகவும் அருமையாய் இருக்கும் என்று எண்ணுகின்றீர்களா?” என்று கேட்கலாம். அநேகம் உலகப்பிரகாரமான கணவன்மார்கள்: “ஆம்! அது நல்லது என்று எண்ணுகின்றேன்” என்று கூறிடுவார். மேலும் ஒருவேளை கிறிஸ்தவ மனைவியானவள் இப்படியாக யோசனையை முன்வைக்கவில்லையெனில், உலகப்பிரகாரமான கணவனோ: “என் மனைவியைப் போன்று நான் ஒரு கிறிஸ்தவனாக என்னை அறிக்கைப் பண்ணிக்கொள்வேனாகில், என் இல்லத்தில் குடும்ப ஜெபத்தைப் பெற்றுக்கொள்ள நான் விரும்பியிருப்பேன் என்று நான் எண்ணுகின்றேன்” என்று அநேகமாகச் சொல்லிட வாய்ப்புண்டு. இதுபோலவே ஒருவேளை கிறிஸ்தவ கணவன் இப்படியான யோசனையை முன்வைக்கவில்லையெனில், உலகப்பிரகாரமான மனைவியானவளோ: “ஒருவேளை நான் என் கணவனுடைய இடத்தில் காணப்பட்டு, கிறிஸ்தவன் என்று என்னைக்குறித்து அறிக்கைப்பண்ணுகிறவளாய் இருந்திருப்பேனாகில், இல்லத்தில் குடும்ப ஜெபத்தினைப் பெற்றிருக்க நான் விரும்பியிருந்திருப்பேன்” என்று சொல்வதற்கு வாய்ப்புண்டு. ஆனாலும் உலகப்பிரகாரமான மனைவி இப்படி வெளிப்படையாய்ச் சொல்ல விரும்பமாட்டாள்; உலகப்பிரகாரமான கணவனும் இப்படி வெளிப்படையாகச் சொல்ல விரும்பமாட்டார். ஆகையால் ஜெபத்தின் மதிப்பை உணர்ந்திருப்பவரே முதல் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்; அதுவும் அமைதியான விதத்தில் மேற்கொள்ள வேண்டும்; சாதகமற்றத் தருணத்தில் இல்லாமல், நல்ல வாய்ப்பாய்க் காணப்படும் தருணங்களில் மேற்கொள்ள வேண்டும் – வேறு ஏதாகிலும் காரியங்கள் விறுவிறுப்பாய்ப் போய்க்கொண்டிருக்கும்போது மற்றும் கருத்தில் எடுத்துக்கொள்வதற்கு நேரம் இல்லாதளவுக்கு வேறு ஏதோ காரியங்கள் போய்க்கொண்டிருக்கும் போதல்ல, மாறாக கருத்தில் எடுத்துக்கொள்வதற்கு நேரம் இருக்கும்போது இப்படி முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். கணவனிடத்தில் அல்லது மனைவியினிடத்தில் அல்லது பிள்ளைகளிடத்தில் எப்படி நாம் காரியத்தினை முன்வைப்பதற்கென்றுள்ள ஞானத்தினை நாடிடுவோமாக. இதை ஞானமான விதத்தில் செய்திடுங்கள் – சர்ப்பத்தைப்போன்று ஞானமுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு தருணத்திலும் ஞானத்தினைப் பயன்படுத்துங்கள் மற்றும் உங்கள் ஜீவியம் அல்லது உங்களது குடும்பம் தொடர்புடைய விஷயத்தில் எப்படி எந்த ஒரு முக்கியமான முயற்சியை எடுப்பதுகுறித்தும் தேவனிடம் ஜெபம்பண்ணுங்கள். நீங்கள் உங்கள் கணவனிடம் அல்லது மனைவியிடம் ஒத்துழைப்பிற்காகக் கேட்பதற்கு முன்பு, உங்கள் இல்லத்தில் குடும்ப ஜெபத்தைப் பெற்றுக்கொள்வதைக்குறித்துத் தேவனிடம் கேட்டுக்கொள்ளுங்கள். பின்னர் ஒருவேளை உங்கள் மனைவி மறுப்புத் தெரிவித்து, “இல்லை, இந்த இல்லத்தில் கர்த்தருக்கான எந்த ஜெபத்தையும் பெற்றிருக்க நான் விரும்பவில்லை” என்று சொல்வாள் என வைத்துக்கொள்ளுங்கள்; இப்படியாக அநேகர் கூறிடமாட்டார்கள். மேலும் காரியத்தினை முன்வைத்திடுவதற்கு நல்லதொரு வழிமுறை இருக்கின்றது. நீங்கள்: “மனைவியே, நான் பார்க்கிற விதமாய் நீ காரியங்களைப் பார்க்கவில்லை என்பதை நான் அறிவேன்; ஆனால் என்னைப் போன்று நீயும் மாபெரும் சிருஷ்டிகரில் நம்பிக்கை வைத்திருக்கின்றாய்; மேலும் சிருஷ்டிகரைத் தொழுதுகொள்வது என்பது ஒவ்வொரு சிருஷ்டிக்கும் தகுதியான காரியமாகும்; மேலும் நாம் பிள்ளைகளைப் பெற்றிருக்க, தேவனைத் தொழுதுகொள்வதற்கான முன்மாதிரியினை அவர்கள் முன்னிலையில் வைப்பதும், நம் இல்லத்தை முன்மாதிரியான இல்லமாகப் பெற்றிருப்பதும் நலமாயிருக்குமென நான் யோசனை தெரிவிக்கின்றேன். மனைவியே இதுகுறித்து நீ என்ன நினைக்கின்றாய்? நாம் ஆரம்பிக்கலாமா? ஒவ்வொரு காலை வேளையிலும் குறைந்தபட்சம் மூன்று நிமிஷமாகிலும் நாம் தேவனை அணுகிடலாமே அல்லது கூடுமானால் ஐந்து நிமிஷங்களோ அல்லது இதற்கும் அதிகமான நிமிஷங்களோ அல்லது காலவரையறையை நிர்ணயிக்காமல் தேவனை அணுகிடலாமே ஒருவேளை ஜெபம் ஏறெடுக்கப்படுவதற்கு முன்னதாகத் துதி கீர்த்தனை ஒன்றைக்கூடப் பாடிடலாமே” என்று கேட்கலாம். ஆனால் இதற்கு ஏதேனும் மறுப்புத் தெரிவிக்கப்படுமானால்… “வெறும் மூன்று நிமிஷங்கள் ஜெபம்பண்ணப்படுவதற்கு மறுப்புத் தெரிவிப்பாயா? மூன்று நிமிஷ ஜெபத்திற்கு நீ ஒத்துழைப்பாயா?” என்று நீங்கள் கேட்டுக்கொள்ளலாம். நானாக இருந்தால் “மறுப்புத் தெரிவிப்பாயா?” என்று கேட்கமாட்டேன். இதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படாது என்று நான் அனுமானிக்கின்றேன். நானாக இருந்தால்: “இந்த இல்லத்தில் கர்த்தருக்காய்ச் சிறு குடும்ப ஜெபத்தை நாம் ஏற்படுத்துவோமானால், ஜெபத்தில் இணைந்துகொள்ளும் விதத்தில் ஒத்துழைப்பதற்கு விரும்புவாயா? இது நம் இருவருக்கும் மற்றும் பிள்ளைகளுக்கும் ஆசீர்வாதமாய் இருக்குமென்று நம்புகின்றேன். இப்படியாக நம் இருதயங்களானது நன்கு தேவனிடத்திற்கு நெருங்கிடும் மற்றும் நம் குடும்பத்தின்மீது அவர் ஆசீர்வாதத்தை அதிகமாய்ப் பெற்றுக்கொள்வோமென்று நம்புகின்றேன்” என்று கூறிடுவேன். இது நன்கு வேலைசெய்யும் என்று நான் எண்ணுகின்றேன். ஓ! என் கணவனிடத்தில் அல்லது என் மனைவியினிடத்தில் கேட்பதில் பிரயோஜனமேயில்லை, அவர்கள் ஜெபத்திற்கு எதிராய்க் கசப்புக்கொண்டிருக்கின்றனர் என்று சிலர் எண்ணிடுவீர்கள் என்பதை நான் அறிவேன். அநேகமாகக் காரியத்தை முன்வைப்பதில் ஞானமாய் நடந்துகொள்ளாததே சில சமயங்களில் கசப்பு அநேகமாக ஏற்படுவதற்குக் காரணமாகும். வெகு சில ஜனங்கள்தான் உண்மையில் தேவனுக்கு எதிராய்க் கசப்புக்கொண்டிருப்பார்கள். பொதுவாக ஜனங்கள் சிருஷ்டிகரை மதிப்பார்கள் மற்றும் அதிலும் விசேஷமாக நாம் பரிவாகவும், தயவாகவும், அன்பாகவும் இருப்பதற்கு நாடுவதற்கு ஏற்பவும், நாம் அவர்களுடைய நலனுக்கடுத்த காரியங்களிலும், அவர்களின் உரிமைக்கடுத்த காரியங்களிலும் நாம் அக்கறையாய்க் காணப்படுவதையும், குடும்பத்தை நாம் நீதியாய்க் கையாளுவதையும் அவர்கள் காண்பதற்கு ஏற்பவும், அவர்கள் நம் மதத்தை மதிக்கிறவர்களாகவும், நம் தேவனை மதிக்கிறவர்களாகவும், நம் தொழுதுகொள்ளுதலை மதிக்கிறவர்களாகவும் காணப்படுவார்கள். ஆனால் அவர்கள் ஒருவேளை மறுப்புத் தெரிவித்து . . . “இல்லை இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்பார்களானால், நீங்களோ: “அப்படியானால் இத்தகைய ஏற்பாட்டினை நான் எனக்காகப் பெற்றிருப்பதற்கு மறுப்புத் தெரிவிக்கமாட்டீர்கள் என்று எண்ணுகின்றேன்; நான் பிள்ளைகளிடத்திலும் கேட்டுக்கொள்கின்றேன். முதலாவது உங்களிடத்தில் தெரிவித்துக்கொள்ளலாம் என்று எண்ணினேன். ஒருவேளை பிற்பாடு இதைக்குறித்து நீங்கள் சிந்தித்து, எங்களோடுகூட ஜெபத்தில் இணைந்துகொள்வீர்களானால், அது மிகவும் அருமையாய் இருக்கும்” என்று சொல்லிடலாம். பின்னர் நீங்கள் காரியங்களை நடப்பியுங்கள். தடை இருப்பதுபோல் அல்லது தடை ஏற்படுவதுபோல் எண்ணாதிருங்கள். நாம் நமது மனசாட்சியையும், நமது உரிமைகளையும் செயல்படுத்தி நடக்க வேண்டும் என்று பகுத்தறிவுள்ள ஜனங்கள் அனைவரும் விரும்பிடுவார்கள். ஆனால் அதற்கென்று நீங்கள் காலையில் எழுந்து, ஜெபம்பண்ணிக் கொண்டிருக்கையில், உங்கள் கணவன் எழுந்து, அவருக்கான காலை உணவைத் தயாரித்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமாகாது; இது சரியான காரியமாகவே இராது; இது நம் மார்க்கத்தின்மீது அவமதிப்பைக் கொண்டுவருகின்றதாயிருக்கும்; மாறாக கணவன் மற்றும் மனைவியென உங்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தையும் ஜாக்கிரதையாய் நிறைவேற்றுகிறவர்களாக இருந்து, ஜெபம்பண்ணிடுங்கள்; ஞானமாய்ச் செய்யுங்கள்.
இப்பொழுது பிள்ளைகளுக்கு வரலாம்; ஒருவேளை பிள்ளைகள் வளர்ந்தவர்களாக இருப்பார்களானால், அவர்கள் வித்தியாசமாய் அணுகப்பட வேண்டும். தங்கள் பிள்ளைகள் வளருவதை மறந்துபோவதன்மூலம் அநேகம் பெற்றோர்கள் மாபெரும் தவறு செய்கின்றனர் என்று நான் எண்ணுகின்றேன். இவர்கள் எப்போதும் தங்கள் பிள்ளைகளைச் “சிறிய ஆனி (annie-பெயர்)” என்று எண்ணுகின்றனர்; ஆனி உயர உயரமாய் வளருகின்றாள், ஆனால் அவள் பெரிய மனுஷி ஆகுவதற்கு முன்புவரையிலும் “குட்டி ஆனியாகவே” இருப்பதாகப் பார்க்கப்படுகின்றாள். இப்படியே “குட்டி ஹேரியும்” பார்க்கப்படுகின்றான். இவர்களிடம் பெற்றோர்கள் பிள்ளைகளெனப் பேசிய காலங்களையே பெற்றோர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். குழந்தைப்போல் நடத்தப்படுவதை எந்தப் பிள்ளையும் விரும்புகிறதில்லை. சீரான மனநிலைமையுடைய ஒவ்வொரு பிள்ளையும் குட்டி மனுஷனாக அல்லது குட்டிப்பெண்மணியாக நடத்தப்பட வேண்டும்; மேலும் இதைப் பெற்றோரினால் செய்திட முடியும்; மேலும் இதை முகஸ்துதியாய்ச் செய்திடாமல், மிகவும் சரியான விதத்தில் பண்ணிட வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளை நோக்கி: “இப்போது ஹேரி அல்லது மேரி, நீ ஒரு முன்மாதிரியான குட்டி மனுஷனாக / ஜென்டில்மேனாக அல்லது பெண்மணியாகக் காணப்பட வேண்டும் என்று விரும்புகின்றேன். மற்றச் சிறுவர்களும், சிறுமிகளும் எவ்வளவுதான் அநாகரிகமானவர்களாய்க் காணப்பட்டாலும், நீ எப்போதுமே ஒரு குட்டி ஜென்டில்மேனாக அல்லது பெண்மணியாகக் காணப்பட வேண்டும் என்று விரும்புகின்றேன்” என்று கூறிடலாம். பிள்ளைகளுக்கு இது பிடிக்கும். பிடிக்காததுபோன்று அவர்கள் காண்பித்துக்கொள்ளலாம், ஆனாலும் ஆழ்மனதில் பிள்ளைகளுக்கு இது பிடிக்கும்.
“மற்றச் சிறுவர்களுடன் நான் விளையாட வேண்டும்” என்று பிள்ளைகள் கூறுவார்கள்.
அதற்கு நீங்கள்: “என் அருமை மகனே, அந்தச் சிறுவர்களில் சிலர் எத்தனை அநாகரிகமாக நடந்துகொள்கின்றனர்; உன்னையும் நான் அப்படியாக எண்ணிக்கொள்ள நீ விரும்பமாட்டாயே – பார் அச்சிறுவர்கள் எத்தனை அநாகரிகமாய் விளையாடுகின்றனர். பார் அந்தச் சிறுமிகள் சிலர் கும்மாளம் அடித்துக்கொண்டிருக்கின்றனர் – அது உனக்கும் பிடிக்காதே. நீ நல்நடக்கையை வளர்த்துக்கொள்; நல்ல விதத்தில் வளர்ந்து குட்டி ஜென்டில்மேனாக அல்லது குட்டிப் பெண்மணியாகிடு அல்லது நீ வளர்ந்து, அநாகரிகமுள்ளவனாகவும் ஆகிடலாம். நீ நல்லபடியாக வளரவில்லையெனில், நீ நல்ல சமுதாயத்திற்குப் பொருத்தமற்றவனாய் இருப்பாய். இந்தச் சுற்றுவட்டாரத்திலேயே உன்னை மிகவும் நல்நடக்கையுள்ள சிறுவனாக அல்லது சிறுமியாகக் காண விரும்புகின்றேன், ஆகையால் நீ போகும் இடமெல்லாம் ஜனங்கள் “அந்தச் சிறுவனைப் பாருங்கள்!” “அந்தச் சிறுமியைப் பாருங்கள்!” என்று சொல்வார்கள். இப்பொழுதும் என் குழந்தையே, இப்படியாக நீ வளர வேண்டும். நீ பெருமிதம் கொண்டு சுற்றித்திரியத்தக்கதாக, உன்னில் பெருமையினை நிரப்பிடுவதற்கு நான் முயற்சிக்கவில்லை. பெருமைக்கொண்டுள்ள சிறுவனும், பெருமைக்கொண்டுள்ள சிறுமியும் தங்கள் சக விளையாட்டு தோழர்களின் வெறுப்பினைச் சம்பாதித்துக்கொள்வார்கள். நீ பெருமைக்கொள்ளக்கூடாது, மாறாக பரிவாயும், தயவாயும், காணப்பட வேண்டும்; மேலும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் காணப்பட வேண்டும்; உன் வஸ்திரங்கள் எவ்வளவு ஏழ்மையானதாக இருப்பினும், உன்னால் அதை எப்போதும் சுத்தமாய் வைத்துக்கொள்ள முடியும்; நீ எங்கேபோனாலும், உன் உடைகள் மண்ணினாலும், அழுக்கினாலும் அழுக்காகாதப்படிக்குப் பார்த்துக்கொள். உன்னை யாரேனும் பெருமைகொண்டவன் என்று அல்லது பெருமைக்கொண்டவனாய்த் தோன்றுகிறாய் என்று சொல்வார்களானால், அதைக்குறித்து வெட்கப்பட்டு; நீ எப்போதும் சிறு பெண்மணி அல்லது ஜென்டில்மேன் / கண்ணியவான் போன்றுதான் காணப்படுகின்றாயா என்பதைப் பார்த்துக்கொள்” என்று கூறிடுங்கள். பிள்ளைகளுக்கு இப்படிக் கூறினால் பிடிக்கும்; ஒருவேளை பெற்றோர்கள் இப்படியாகக் காணப்பட்டு, பிள்ளைகளின் விஷயத்தில் அவர்களின் தகப்பன் மற்றும் தாயே மிகவும் அக்கறைக்கொண்டவர்களாய் இருக்கின்றார்கள் என்று பிள்ளைகளை எண்ணும்படியாகச் செய்வார்களானால், பிள்ளைகள் இதை வளரும்போது நினைவில்கொள்வார்கள். பிள்ளையை நடத்த வேண்டிய வழியிலே நடத்து, அப்போது முதிர்வயதாகுகையிலும், அவன் அவ்வழியினின்று விலகமாட்டான். பெரும்பாலான ஜனங்கள் உணர்ந்திருப்பதாகத் தோன்றும் செல்வாக்கைக்காட்டிலும் அதிகம் செல்வாக்கு இதற்கு இருக்கும். உலகில் பிள்ளைகள் விஷயத்தைப்பார்க்கும்போது, வெட்கமே பட வேண்டும். பிள்ளைகள் ஏதோ பெற்றோருடைய வளர்ப்பைப் பெறாதவர்கள் போன்று மிகவும் அநாகரிகமாகத் தென்படுகின்றனர். இப்படியான நிலைமையிலுள்ள பிள்ளையைவிட, சத்தியத்திலுள்ள யார் ஒருவரும் சிறந்த விதத்தில் பிள்ளைகளைப் பெற்றிருக்க அறிந்திருக்க வேண்டும். நான் பெனின்சிலேவேனியாவில் காணப்பட்டபோது, அங்கு ஒரு சகோதரனோடுகூட இரா உணவு உண்டேன். அவர் அந்நாட்டிலுள்ள ஜெர்மானியன் ஆவார்; இரா உணவு முடிந்து, கூட்டத்திற்குப் போவதற்கு முன்னதாக, நாங்கள் அறைக்குச் சென்றுகொண்டிருக்கையில், அவர் என்னிடம்: “சகோதரர் ரசல் அவர்களே, உணவு மேஜையில் எனது மகன்களையும், மகள்களையும் பார்த்தீர்களே” என்றார்.
நானோ: “ஆம் பார்தேன். அவர்கள் மிகவும் அருமையாயும், மரியாதையோடும், அமைதியாயும் காணப்பட்டார்கள்; அநாகரிகமான எதுவும் அவர்களிடத்தில்இல்லை; அதைக் கண்டு மகிழ்ந்தேன்” என்றேன்.
அதற்கு அவர் பிரதியுத்தரமாக: “சகோதரர் ரசல் அவர்களே, என் மகன்கள் மற்றும் மகள்கள்குறித்து நான் பெருமிதம்கொள்கின்றேன்; சராசரியான பிள்ளைகளைவிட அவர்கள் மேலான நிலைமையில் காணப்படுகின்றனர் என்று நான் உணர்கின்றேன், ஆனாலும் அவர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும்போதே ஒருவேளை நான் ஆறாம் தொகுதியினைப் பெற்றிருந்தேனாகில், அவர்கள் எப்படி இருந்திருப்பார்களோ, அப்படியாக இப்பொழுது இல்லை என்று உணர்கின்றேன். மரம் வளருகையில் அதன் வளைவுகளை நிமிர்த்துங்கள் என்று நீங்கள் சொல்வதுபோன்று, என்னால் முடிந்தமட்டும் நிமிரச்செய்துள்ளேன். இதற்கும்மேலாக பிரச்சனை ஏற்படாத விதமாய்ப் பார்த்து என்னால் எதுவும் செய்யமுடியாது மற்றும் பிரச்சனைப்பண்ணி செய்வது ஞானமாயும் இராது என்று நான் அறிவேன்; நாம் ஞானமாய்ச் செயல்பட வேண்டியுள்ளது. ஆகையால் அவர்கள் நல்ல பிள்ளைகளாக இருக்கின்றனர், எனினும் சகோதரனே நீங்கள் சொல்லியுள்ளதுபோன்று தொட்டில் முதற்கொண்டு அல்லது அவர்கள் பிறப்பதற்கு முன்னர் இருந்தே, அவர்களைப் பயிற்றுவிப்பது எப்படி என்று நான் அறிந்திருப்பேனாகில் மற்றும் அப்படி அறிந்து ஒருவேளை வளர்த்தியிருக்கும்போது, அவர்கள் எப்படி இருந்திருப்பார்களோ, அப்படி நல்லவர்களாக இப்பொழுது இல்லை” என்று கூறினார்.
பிள்ளைகள் பிறப்பதற்கு முன்னதாகவே, கொடுக்கப்பட வேண்டிய பயிற்சியினை மறவாதீர்கள்… இது பயிற்சியிலேயே மிகவும் முக்கியமானதாகும்; இதற்கு அடுத்தப்படியாக அவர்கள் கைக்குழந்தைகளாக இருக்கும்போதே பயிற்சியானது துவங்கப்பட்டு, தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். உங்கள் பிள்ளைகளைக்குறித்து ஒருபோதும் ஏளனம் செய்து நகைக்காதீர்கள். பிள்ளைகளைப்பார்த்து இப்படி நகைப்பதன் மூலம் அநேகம் பெற்றோர்கள் தங்கள் செல்வாக்குகளைப் பாதிக்கப்பண்ணுகின்றனர். பிள்ளையானது மென்மையாய்க் காணப்படும், அது வேதனைக்குள்ளாகும். “என் தந்தையிடம் நான் ஏதாகிலும் கூறினால், அவர் என்னை நகைப்பார்… ஆகையால் இனிமேல் அவரிடம் நான் எதையும் சொல்லமாட்டேன்” என்று பிள்ளை எண்ணிடும். உங்கள் மகன் மற்றும் மகளுடைய நம்பிக்கையை நீங்கள் பெற்றவர்களாய் இருக்க வேண்டும்… இதனால் அவர்கள் வயதுவந்தவர்களாய் இருக்கையிலும், அவர்கள் எதிர்ப்பாலின நண்பர்கள் முதலானவைகளைப் பெற்றிருக்கையில், அவர்கள் தந்தை மற்றும் தாயிடம் “எனக்கு ஓர் எதிர்ப்பாலின தோழமை (காதலர்) இருக்கின்றது” என்று சொல்லிடுவதற்கும் விரும்பிடுவார்கள். பொதுவாக இப்படிச் சொல்லிக்கொள்ள விரும்பமாட்டார்கள், ஆனாலும் சொல்லும் அளவுக்குக் காணப்பட வேண்டும். பெற்றோர்களாகிய உங்களை அவர்கள் அன்புகூருவதாலும், உங்களிடமிருந்து காரியங்களை மறைக்க விரும்பாததாலும், “எனக்கு ஓர் எதிர்ப்பாலின தோழமை (காதல்) இருக்கின்றது. அந்நபரைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?” என்று கேட்கும் அளவுக்கு அவர்கள்மீதாக உங்கள் செல்வாக்குக் காணப்பட வேண்டும். எதிர்ப்பாலின தோழர்மீதான உங்களது அபிப்பிராயத்தினைக் கேட்டுக்கொள்ள விரும்புவார்கள். தங்களுக்குப் பொருத்தமான துணை என்று தகப்பனும், தாயாரும் சொல்லுகிறவரைத் தவிர வேறு எவரையும் திருமணம் செய்திடுவதற்கு எண்ணவே மாட்டார்கள்; காரணம் அத்தகைய ஒரு நம்பிக்கையினைப் பெற்றோராகிய உங்களின் கணிப்பின்மீது பிள்ளைகள் பெற்றிருப்பார்கள். ஆனால் இத்தகைய செல்வாக்கினைப் பெற்றுக்கொள்வதற்கு, பெற்றோர்களாகிய நீங்கள் சர்ப்பங்களைப்போன்று ஞானமுள்ளவர்களாய்க் காணப்பட வேண்டும் மற்றும் கர்த்தருடைய வார்த்தைகளின் அறிவுரைகளைப் பின்பற்றிட வேண்டும். ஒருவேளை மீண்டும் வாழுவதற்கு ஜீவியம் கிடைக்கப்பெற்றால் அல்லது நூறு வயதாகும்வரை ஒருவேளை ஜீவித்தால், இது விஷயத்தில் நமக்கு ஏதாகிலும் தெரிய வாய்ப்பிருக்கும்; ஆனால் இப்பொழுது நமக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் வெளிச்சத்திற்காகவும், அறிவிற்காகவும் நன்றியுள்ளவர்களாக நாம் காணப்பட்டு, அறிவு வருகையில், அதை நன்கு பயன்படுத்திக்கொள்வோமாக; ஒருவேளை தவறுகள் செய்துள்ளீர்களானால், உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். ஒருவேளை நீங்கள் கர்த்தரை அறிந்து, அவரது வார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்கு முன்னதாகப் பிள்ளைகளைப் பெற்றிருந்து, அவர்கள் காட்டுக்களைகள்போன்று வளர்ந்துள்ளார்களானால், நீங்கள் வருத்தப்படக் காரணங்கள் உண்டு, ஆனாலும் உங்களால் ஒன்றுஞ்செய்ய முடியாது. பரிவுடனும், பொறுமையுடனும் இருங்கள், தயவாய் இருங்கள்; கூடுமானமட்டும் உதவுங்கள்; உண்மையான தகப்பனாகவும், தாயாகவும் இருங்கள் பிள்ளைகளிடம் காணப்படும் குறைவுகளானது, உங்களால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவையாகும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்; பிள்ளைகள் தங்கள் பெலவீனங்களை மேற்கொள்வதற்கு என்று அதிகமான நேரமும் / அவகாசமும், உதவியும் பிள்ளைகளுக்கு அளித்திடும் விதத்தில், அவர்களின் அந்தக் குறைவுகள் விஷயத்தில் மிக அதிகமாய்ப் பரிவுகொண்டிருங்கள்.