Q526:1
கேள்வி (1916)-1- செய்யும்படிக்கு மேய்ப்பரால் கொடுக்கப்பட்டிருக்கும் வேலையில், ஒரு சபையிலுள்ள மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்கள் சகோதரிகளோடு ஒத்துழைத்து வேலைபுரிவது குறித்து இன்னும் கொஞ்சம் அதிகம் விளக்கம் தாருங்கள்.
பதில் – அனுப்பப்பட்டிருக்கும் கடிதங்களில் ஏற்கெனவே விவரிக்கப் பட்டுள்ளவைகளுக்கும் அதிகமாக என்னால் விளக்கமளிக்க இயலாது. செய்யும்படிக்கு மேய்ப்பரால் கொடுக்கப்பட்டிருக்கும் வேலை தொடர்பான காரியங்களையுடைய இரண்டு கடிதங்களானது, ஒவ்வொரு சபையாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடிதங்களில் ஒன்று வேலையாளாகவும், லெப்டினன்டாகவும் மேய்ப்பரின் கீழ் வேலைபுரியப்போகும் சகோதரிக்கு அனுப்பப்பட்டுள்ளது; இன்னொன்று மூப்பர்கள் மற்றும் சபையாருக்குப் பொதுவாக அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதங்களானது நான் விவரிக்க விரும்பிய அனைத்தையும் விவரிக்கின்றதாய் இருக்கின்றது மற்றும் அவைகளை விவரிக்க இப்பொழுது நேரமெடுப்பது விருதாவாகவே இருக்கும். அக்கடிதங்களானது என்னைத் தங்களது மேய்ப்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ள சபையார்களுக்கு மாத்திரமே அனுப்பி வைக்கப்பட்டிருந்தன என்பதை நான் மறுபடியுமாகக் குறிப்பிடுகின்றேன். அக்கடிதங்களானது காரியங்களை முழுமையாய் விவரிக்கின்றதாய் இருக்கின்றது. ஒருவேளை ஒருமுறை வாசித்ததில் அக்காரியங்களை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையெனில், மறுபடியும் வாசித்துப்பாருங்கள் மற்றும் தேவைப்படும்; பட்சத்தில் உங்களுக்குத் தெளிவாகும்வரைக்கும் இரண்டு, மூன்றுமுறை வாசித்துப் பாருங்கள். ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியாய் எடுத்து வாசியுங்கள். அவைகளில் ஒன்று பொதுவான சபையாருக்கு உரியதாயிராமல், மாறாக இவ்வேலை திட்டத்தினை நடத்தேற்றுகிறவர்களுக்கான அறிவுரைக் குறிப்புகளையும் பெற்றிருக்கும்; மற்றொன்று மூப்பர்களுக்குரியதாகவும், அவர்கள் எப்படி அதில் ஒத்துழைப்புக்கொடுக்கலாம் என்று அவர்களுக்குக் காண்பிக்கிறதாகவும் காணப்படும்.
இந்த வேலையானது நல்லமுறையில் நடைபெறும்போது, இது மிகவும் உற்சாகமளிக்கக்கூடிய ஊழியம் புரிவதற்கான வாய்ப்பினைச் சகோதரிகளுக்குக் கொடுக்கிறது மாத்திரமல்லாமல், இன்னுமாக மூப்பர்கள் இப்பொழுது செய்துகொண்டிருக்கும் வேலைகளைக் காட்டிலும் அதிகமாய்ச் செய்வதற்குரிய வழிகளை, மூப்பர்களுக்குத் திறந்துகொடுக்கின்றதாகவும் மற்றும் மிகவும் தகுதிவாய்ந்த உதவிக்காரர்கள் மூப்பராகிடுவதற்கான வழிகளைத் திறந்து கொடுக்கின்றதாகவும் காணப்படும். செய்யும்படிக்கு மிக அதிகமாய் வேலை காணப்படுவதினால், நாம் கர்த்தருடைய வேலை செய்வோமா அல்லது இல்லையா? என்பதுதான் கேள்வியாய் இருக்கின்றது. நாம் அறுவடையின் காலத்தில்தான் காணப்படுகின்றோம் என்பதில் நாம் மிகவும் உறுதியாய் இருப்பது போன்று, கர்த்தர் நாம் செய்யும்படிக்கு அளிக்கும் எதையும் செய்திட வேண்டும் என்றும் நாம் மிகவும் உறுதியாய் இருப்போமாக.
இவ்வகையான ஊழியத்தில் முன்பு அனுபவம் பெற்றிராத சகோதரர்களை வேலையில் ஈடுபட வைப்பதற்கு, இவ்வேலை நல்ல வாய்ப்பாக இருக்குமா என்று யாரேனும் கேள்வி எழுப்புகின்றீர்களா? இல்லை இது அனுபவமற்றவர் வேலைபுரிவதற்குரிய வேலையல்ல என்றே எங்கள் பதில் காணப்படும். இவர்கள் முன்னதாக அனுபவம் பெற்றுக்கொள்ள வேண்டும். இம்மாதிரியான வேலையில் எங்களுக்குக் கற்றுக்குட்டிகள் வேண்டாம். உபதேசத்தின் விஷயத்திலோ அல்லது பேசுவதிலோ “கற்றுக்குட்டிகளாய் இருப்பவர்கள் class extension work / புதிய வகுப்புகளை உருவாக்கும் இவ்வகையான வேலைகள் எதிலும் ஈடுபடுத்தப்படக்கூடாது. கற்றுக்குட்டிகள் அனுபவம் பெற்றுக்கொள்ள வேண்டும்; ஆனால் எப்படி? ஒரு சமயத்தில் பிட்ஸ்பர்கில் (இதை நியூயார்க்கில் காணப்பட்ட போது முயற்சித்தேன்) நாங்கள் தீர்க்கத்தரிசிகளின் பள்ளிக்கூடம் என்று அழைக்கப்படும் ஒன்றைத் துவங்கினோம்; இந்தப் பெயரானது ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டபோது, அதற்கிருந்த அர்த்தம் அல்ல, மாறாக புதிய ஏற்பாட்டினுடைய வெளிச்சத்தில் பார்க்கப்படும்போது நம்முன் இருக்கும் வேலைக்கு அது முற்றிலும் பொருத்தமான பெயராய்க் காணப்பட்டது. வேதாகம கோணத்தில் தீர்க்கத்தரிசி என்பவர் பொதுப்பேச்சாளர் ஆவார்; ஞானதிருஷ்டிக்காரனோ, வெளிப்படுத்துதல்களைப் பெற்றவரோ அல்ல, மாறாக ஒரு பொதுப்பேச்சாளாராவார்; மேலும் இந்த ஒரு விதத்தில்தான், “ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கத்தரிசன வரத்தை விரும்புங்கள் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறினபோது, இந்த ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினவராய் இருந்தார்; இவ்வசனமானது பொதுப் பேச்சாளர்களெனத் திறமை பெற்றுக்கொள்ள நாம் நாடவேண்டும் எனும் கருத்தைத் தெரிவிக்கின்றதாய் இருக்கும். சில சகோதராகள் பொதுப்பேச்சாளர்களுக்கான திறமையுடையவர்களாக இருக்கின்றார்கள் என நாம் உணர்ந்துகொண்டோம் மற்றும் இவர்கள் ஒரு சிறு வகுப்பாய் ஒன்றுகூடிவரவும், பேசும் விஷயத்தில் ஒருவரையொருவர் விமர்சனம் செய்வதற்கும், குறைகளைச் சுட்டிக்காண்பிப்பதற்கும் நாம் யோசனை தெரிவித்தோம். இவர்கள் பொது ஜனங்களிடத்திலோ அல்லது சபையாரிடத்திலோ பேசவைக்கப்படவில்லை. இவர்கள் விசேஷமாகப் பேசுவதறக்கான தகுதிகளைப் பெற்றவர்கள் அல்ல. வெளிக்கொண்டுவரப்படுவதற்கும், அபிவிருத்திச் செய்யப்படுவதற்கும் உரிய ஒரு தன்மையினைப் பெற்றிருந்தனர். தகுதியில்லாத பேச்சாளர்கள் பேசுவதைக் கேட்கவைப்பதற்குச் சபையாரை நாம் கட்டாயப்படுத்துவதற்கு விரும்பவில்லை. சபையாரையோ அல்லது வேறு யாரையோ சலிக்கப்பண்ணுவதற்கு (bore) யாரும் விரும்பிடக்கூடாது. தகுதியுடையவர்களாகவும் மற்றும் தாலந்தும், திறமையும் இருப்பதை வெளிப்படுத்தி உள்ளவர்களும் மாத்திரந்தான், சபையாருக்கு அல்லது பொது ஜனங்களுக்குப் பேசிடுவதற்கெனத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். இந்நோக்கத்திற்கான நம்முடைய அறிவுரைகளும், பயிற்சிகளும் தனித்து, பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் மற்றும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். இந்த வகுப்புகளில் ஒருவரை விசேஷித்த விமர்சகராக / ஆய்வுபண்ணுபவராக நாங்கள் நியமித்திருந்தோம் மற்றும் அதில் பங்கெடுத்த அனைவரும் பேசுபவரை விமர்சிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றிருந்தனர். இந்த வகுப்புகளில் கலந்துகொள்ளும் இந்த இளையப் புருஷர்களில் சிலர், அனைவரும் சோர்ந்து போவதற்கு ஏதுவாக ஒருவரையொருவர் மிகவும் கடுமையாய் விமர்சித்தவர்களாய்க் காணப்பட்டனர். ஆகையால் தோலும், எலும்புகளும் தவிர வேறெதுவும் மிஞ்சிக் காணப்படாத அளவுக்கு மிகவும் கடுமையாய் விமர்சிப்பதற்கு எதிராய் நான் அவர்களை எச்சரிக்க வேண்டியதாய் இருந்தது. சபையாருக்கும், பொதுப்பேச்சாளர் களுக்கும் பயிற்சியளிக்கத்தக்கதாக இத்தகைய பள்ளிக்கூடங்களைப் பெற்றிருப்பதும் மற்றும் தகுதியில்லாத, அனுபவமில்லாத கற்றுக்குட்டிகளைப் பேச்சாளர்களாகக் கொடுத்து பொது ஜனங்களை அல்லது சபையாரைச் சிரமத்திற்குள்ளாக்காமல் இருப்பதும் நலமாயிருக்கும் என்று நான் எண்ணுகின்றேன்.
இது மேய்ப்பரது வேலை வெற்றிகரமாய் நடப்பது தொடர்புடைய விஷயத்தில் மிக முக்கியமான காரியமாய் இருக்கும் என்று நாம் நம்புகின்றோம் மற்றும் சகோதரிகளுடன் இணைந்து வேலைபுரிய ஒத்துழைப்பதற்கும் இது சிறந்த மற்றும் மிகவும் பலனுக்கேதுவான வழிகளில் ஒன்றாய் இருக்கும் என்றும் நாம் கருதுகின்றோம்.