Q243:2
கேள்வி (1911)-2- ஒருவேளை தான் ஏற்றுக்கொள்ளப்படும் விஷயத்தில் எவ்விதமான மறுப்புமிராது என்று எந்த ஒரு சகோதரனுக்கு உறுதி இருப்பினும், தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் அவர் சபையில் வழிநடத்துபவராக, போதகராக, பிரதிநிதியாகப் பொதுப் பொறுப்புக்களை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நாம் சில இடங்களில் வாசித்துள்ளோம். மற்ற இடங்களிலும் கூட இப்படியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படியாக இருக்குமானால், சபையில் பத்தொன்பது உதவிக்காரர்களையும் மற்றும் சபையாரையும் சேர்க்காமல், நம்முடைய மூப்பர்கள், கூட்டங்கூடி ஓர் உதவிக்காரரைச் சபையின் மூப்பராக அல்லது போதகராக அல்லது பிரதிநிதியாக நியமிப்பது என்பது – அதாவது முறையான விதத்தில் ஏற்படுத்தப்பட்ட மூப்பர் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் கூறும் மூப்பர் ஸ்தானத்திற்கு நியமிப்பது என்பது தவறுதானே?
பதில் – இக்கேள்வியைக் கருத்தில் எடுத்துக்கொள்ளும்போது, நாம் அப்போஸ்தலருடைய வார்த்தைகளையும், கொடுக்கப்பட்டுள்ள வேதாகம உதாரணத்தையும் நினைவில் கொள்ளவேண்டும். பரிசுத்தவானாகிய ஸ்தேவானின் சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா? அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகத்திலுள்ள பதிவின்படி அவர் சபையில் உதவிக்காரராகத் தெரிந்து கொள்ளப்பட்டார். மேலும் பரிசுத்தவானாகிய ஸ்தேவானுக்குப் பிரசங்கம் பண்ணுவதற்கான நல்லதொரு வாய்ப்புக் கிடைத்தது. வாய்ப்புக் கிடைத்தபோது அவர்: “சகோதரரே, நான் மூப்பனாகத் தெரிவு செய்யப்படவில்லை, அதனால் என்னால் உங்களுக்குப் பதில் தெரிவிக்க முடியாது என்று கூறவில்லை. மாறாக அவர் நேரே சென்று பிரசங்கம் பண்ணினார் மற்றும் கர்த்தரும் அவரை அதிகளவில் ஆசீர்வதித்தார்; அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது மற்றும் பிற்பாடு கல்லெறிந்து கொல்லப்பட்டார். இன்னுமாக இவர் தனது கர்த்தருக்கு அடுத்தபடியாக, முதலில் இரத்தசாட்சியாக மரித்து, கிறிஸ்தவன் என்ற நற்சான்றும் வாங்கினார். அப்போஸ்தலர் கூறுகின்ற காரியங்களை நாம் மீண்டும் நினைவில் கொள்வோமாக – அவர் கூறின வார்த்தைகளில் கொஞ்சத்தை நான் இங்குக் குறிப்பிடுகின்றேன் – யாரொருவர் உதவிக்காரராக இருந்து, தனக்கான ஸ்தானத்தின்படி ஊழியம் புரிந்து, தன்னுடைய ஊழியத்தில் தாழ்மை காட்டுகின்றாரோ, அவர் தனக்கு நல்ல நிலையைப் பெறுவார் என்று அப்போஸ்தலர் கூறுகின்றார் (1 தீமோத்தேயு 3:13). அதாவது சுயாதீனம், சிலாக்கியம் மற்றும் வாய்ப்பாகிய நல்ல நிலையைப் பெறுவார்கள். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் யார் மூப்பர்களாக ஊழியம் புரியலாம் என்பதற்கு வாக்குச் (vote) செலுத்தும்போது, சபையார் தாங்கள் முந்தின முறை உதவிக்காரர்களாகத் தேர்ந்தெடுத்தவர்களையும், அந்த உதவிக்காரர்கள் எவ்வளவு கவனமாய் இருந்தார்கள் என்பதையும் மற்றும் அந்த உதவிக்காரர்கள் எவ்வளவு உண்மையுடன் இருந்தார்கள் என்பதையும் கவனித்தவர்களாய் இருக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் உதவிக்காரர்கள் என்ற விதத்தில், temporal / ஆவிக்குரியதல்லாத சில வேலைகளைச் செய்வதிலேயே ஒருவேளை உண்மையற்றவர்களாக இருப்பார்களானால், இவர்கள் மூப்பர்களுக்குரிய ஊழியங்களில் உண்மையுடன் இருப்பார்களென்று எவ்விதத்திலும் எதிர்பார்க்க முடியாது. இவ்விதமாக இந்த உதவிக்காரர்கள் தங்களுடைய உதவிக்காரருக்குரிய ஸ்தானத்தில் உண்மையாய் இருந்ததினிமித்தம் சபையில் கனமும், முன்னுரிமையுமாகிய நல்ல நிலையைத் தங்களுக்கென்று பெற்றுக்கொள்வார்கள் என்பதே அப்போஸ்தலனுடைய கருத்தாகும். என்னுடைய கருத்து என்னவெனில், ஆதிசபையில் உதவிக்காரர்கள் எனும் வகுப்பார் படிப்படியாக மூப்பர் ஸ்தானத்திற்கும் மற்றும் சத்தியத்திற்கு மிக முக்கியமான ஊழியம் புரியும் ஸ்தானத்திற்கும் முன்னேறுவதற்கு ஏதுவாக ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தார்கள். ஆகவே உதவிக்காரர்கள் ஆரம்பத்தில் சில விதமான வேலைகளுக்கென்று தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால் இவர்கள் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தப்படுபவர்களாக வைக்கப்பட்டிருப்பார்கள். ஆகையால் ஏதேனும் வேலை புரிவதற்கு ஒரு மூப்பர் இல்லாமல் இருந்தாரானால், committee / மூப்பர் குழுவினர் உதவிக்காரர்களைப்பற்றி: “இன்றைய இரவிலுள்ள கூட்டத்தில் இந்தச் சகோதரனை நாம் பயன்படுத்திப் பார்ப்போமா? என்றும், வேறொரு தருணத்தில் இதே committee / குழுவினர்: “இன்றைய இரவில் நடக்கும் கூட்டத்திற்கு நாம் அந்த இன்னொரு உதவிக்காரரைப் பயன்படுத்திப் பார்க்கலாமா? இன்றைய இரவு கூட்டத்தில் நமக்கு ஒருவர் அவசியம், இவருக்கு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாம் என்பார்கள். இவ்விதமாக உதவிக்காரர்களின் ஆற்றலைக் காணத்தக்கதாக அவர்களைப் பயன்படுத்திப் பார்த்து அறிந்துகொள்வார்கள். இல்லையேல், உதவிக்காரர்கள் வளர்வதற்கோ அல்லது சபைக்கான ஊழியம் தொடர்புடைய விஷயத்தில் தங்களுடைய திறமை என்னவென்பதை வெளிக்காட்டுவதற்கோ வாய்ப்புகள் இல்லாமல் இருப்பார்கள். இக்கருத்துக்கு எதிரான ஒன்றும் வேதாகம ஆராய்ச்சிப் பாடங்களில் (volumes) எழுதப்படவில்லை. ஏனெனில் இக்கருத்தையே நாம் எப்போதும் கூறிவருகின்றோம். மேலும் இக்கருத்து வேதவாக்கியங்களின் அடிப்படையிலானது என்றும் நாம் நம்புகின்றோம்; இது புரூக்கிளினிலும், மற்ற இடங்களிலும் செயல்படுத்தப்பட்டும் வருகின்றது.
சகோதரன் கேள்வியில் என்ன கேட்க வருகின்றார் என்பதை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனினும் என்னுடைய பதில் பின்வருமாறு உள்ளது. ஒருவேளை சபையார் தங்களுக்கு நான்கு அல்லது ஐந்து மூப்பர்களைத் தேர்ந்தெடுத்திருக்க, அந்த நான்கு அல்லது ஐந்து மூப்பர்கள் ஊழியத்திற்கு வந்த பிற்பாடு, உதவிக்காரர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அந்த உதவிக்காரரை
மூப்பராக்குவது என்பது, சரியான காரியமாக இருக்கும் என்று நான் எண்ணுவதில்லை. இப்படிச் செய்வது அவர்களுக்கடுத்த அதிகாரம் இல்லை என்று எண்ணுகின்றேன். ஒருவேளை சபையார் அந்த உதவிக்காரர் சகோதரனை மூப்பராகவும், முறையான ஊழியனாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவார்களானால், அவரை நியமிப்பது அவர்களுடைய பொறுப்பாய் இருக்கும். ஒருவேளை மூப்பர்கள் தங்களுக்குள் போதுமான மூப்பர்கள்; இல்லையென்று எண்ணினால், அவர்கள் சபையார் கூடிவரும் ஒரு நாளில் இன்னொரு மூப்பர் தேவையாக இருப்பதினால், இன்னொரு மூப்பரைக் கூடுதலாகத் தேர்ந்தெடுப்பதில் சபையார் பிரியம் கொள்வார்களா எனக் கேட்கலாம். ஆனால் ஒருவேளை தேவைத் தற்காலிகமான தேவையாகத்தான் இருக்கும் பட்சத்தில், தற்காலிகமான அத்தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்கு ஏதாவது சில திறமைகளை வெளிப்படுத்தும் உதவிக்காரர்களை அவ்வப்போது மாத்திரமே இந்த மூப்பர்கள் தெரிவுசெய்யச் சபையார் விரும்புகின்றார்கள் எனில், இது சரியான காரியமாக இருக்கும் என்று நான் எண்ணுவேன். ஆனால் சபையார் ஓர் உதவிக்காரனை மூப்பராகத் தெரிந்தெடுக்காதபட்சத்தில், அவரை மூப்பராக நியமிப்பது சரியான காரியமாக இராது.