Q486:1
கேள்வி. (1911) -1- ஏன் நீங்கள் கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்கெடுக்கின்றீர்கள்?
பதில்:ஏனெனில் அது நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதலாய் இருக்கின்றது. மேலும் “புசித்து … பானம் பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” என்று அப்போஸ்தலன் கூறும்போது, கர்த்தருடைய ஜனங்களானவர்கள், தாங்கள் மறுரூபமடைந்து, முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைந்து, திரைக்கு அப்பால் அவரோடுகூட மேலானவைகளில் பங்கெடுப்பதற்கான காலம்வரையிலும், கர்த்தருடைய மரணத்தைத் தங்களுடைய விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் அனைத்திற்குமான அஸ்திபாரம் என்று நினைவுகூருவது சரியானது என்று நாம் புரிந்து இருக்கின்றோம். இதை இன்னொரு நோக்கத்திற்காகவும் நாம் செய்கின்றோம். கர்த்தருடைய இராப்போஜனமானது, நமது அருமை மீட்பருடைய சரீரத்தையும், இரத்தத்தையும் மாத்திரம் அடையாளப்படுத்தாமல், நம்முடைய பங்கெடுத்தலையும்கூட அடையாளப்படுத்துகின்றது என்பது நம்முடைய புரிந்துகொள்ளுதலாய் இருக்கின்றது; ஏனெனில் அப்போஸ்தலன் “கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா!” என்று கூறுகின்றார். (1 கொரிந்தியர் 10:16; திருவிவிலியம்) வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமெனில் இந்த இராப்போஜனத்தில் பங்கெடுப்பவர்கள், தாங்கள் இயேசுவோடுகூட, அவரது பாடுகளிலும், அவரது மரணத்திலும் பங்காளிகளாக இருப்பதை வெளிப்படுத்துகின்றவர்களாய் இருக்கின்றனர் என்றே அப்போஸ்தலன் கூறுகின்றார். நாம் அதே சரீரத்திலுள்ளவர்களாய் இருக்கின்றோம். ஆகையால் நாம் அவரோடுகூட ஆளுகை செய்யத்தக்கதாக, இப்பொழுது அவரோடுகூடப் பாடுபடுவது என்பது நம்முடைய தற்போதைய கடமையின் பாகமாக இருக்கின்றது.