Q50:1
கேள்வி – (1910)-1- குணலட்சண வளர்ச்சியினுடைய எந்த ஒரு கட்டத்தில், கிரீடம் நம்முடையது என்றும், நாம் ஜெயம்கொண்டவர்களாய் இருக்கின்றோம் என்றும் சொல்லலாம்?
பதில் – பூரண அன்பினுடைய இலக்கை நாம் அடையும் போதே, நாம் இப்படியாய்ச் சொல்ல முடிகின்ற சரியான கட்டமாய் இருக்கும் என்று அருமை நண்பர்களே நான் கருதுகின்றேன். இதோ அதை விவரிக்கின்றேன்: நீங்கள் கர்த்தரிடத்திற்கு வந்தீர்கள் மற்றும் உங்களை அர்ப்பணம் பண்ணினீர்கள்; கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் பிரவேசித்து, அவரைக் குறித்துக் கற்றுக்கொள்ளத் துவங்கினீர்கள். அப்போதுதான் உரிய, தகுதியினுடைய அளவின் விஷயத்தில் நீங்கள் எவ்வளவு குறைவுப்பட்டிருக்கின்றீர்கள் என்று கண்டுகொண்டீர்கள். உங்களில் கர்த்தர் எதையேனும் வளர்த்திட கூடுமோ? என்று எண்ணினீர்கள். கர்த்தரோ உங்களுடைய மனதின் அடிப்படையில் உங்களை அளவிடப்போகின்றார் மற்றும் பூரண குணலட்சணத்திற்கான தரநிலையாகிய பூரண அன்பு எனும் இலக்கை நீங்கள் அடையும்படிக்குக் கர்த்தர் காத்துக்கொண்டிருக்கின்றார்; ஏனெனில் இப்பொழுதும் சரி, ஆயிர வருட யுகத்திலும் சரி இந்த இலக்கை அடைபவர்களே தவிர, மற்றப்படி எவரும் இராஜ்யத்திற்கோ அல்லது நித்திய ஜீவனுக்கோ தகுதியானவர்களாய் இருக்க முடியாது. தன் மனதிலும், இருதயத்திலும் அந்தத் தரநிலையை/அளவுகோலை அடைந்தவனுக்கே தவிர, மற்றப்படி வேறு யாருக்கும் தேவன் எதையும் வைத்திருக்கிறதில்லை. ஒருவனிடம் பெலவீனங்கள் முதலியவைகள் இருக்கலாம் மற்றும் நீங்கள் பின்பு மனஸ்தாபம் அடையவும், மன்னிப்புக் கேட்க அவசியமாகும் அளவுக்கும் ஏதேனும் காரியங்களைப் பேசியிருந்திருக்கலாம்; ஆனால் உங்கள் இருதயமானது பூரண அன்பிற்கான இலக்கில் காணப்படுகின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள் – மேலும் பூரண அன்பின் இலக்கினை நீங்கள் அடைந்திருப்பதினால் நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இருக்கின்றீர்கள். நீங்கள் தேவனையும், மனுக்குலம் முழுவதையும் அன்புகூருகின்றீர்கள் மற்றும் உங்களுக்கு வாய்ப்புக் கிடைப்பதற்கு ஏற்ப அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்கள். தன் சத்துருக்களை மன்னிக்கக்கூடிய நிலைமைக்கு ஒருவன் வருவானானால், அவன் பூரண அன்பின் இலக்கில் காணப்படுபவனாய் இருப்பான். அவன் மாம்சத்தில் பூரணமாய் இருப்பதில்லை; ஏனெனில் இது இந்த யுகத்தில் கூடாத காரியமாகும். இன்னமும் அநேகர் தங்கள் நாவுகளுக்குக் கடிவாளம் போடவேண்டியவர்களாய் இருக்கின்றனர். நீங்கள் பழைய சுபாவத்தை அடக்கி வைக்க வேண்டும். இதை நான் எப்பொழுதும் புதுச்சிருஷ்டிக்குக் கட்டுப்பட வேண்டியதான பழைய சுபாவத்தை ஒரு மோசமான நாயைக்கொண்டு அடையாளப்படுத்தி, உதாரணப்படுத்தி விவரிப்பதுண்டு. பழைய மனுஷனை நாம் அடக்கி வைக்க வேண்டும். சோதனையினுடைய அழுத்தமும், பரபரப்பும் தணிகையில், நம் இருதயமானது நீதியின் கொள்கையினிடத்திற்குத் திரும்பி, பிதாவிடத்தில் மன்னிப்பைக் கேட்டுக்கொள்ளும் காரியத்திலிருந்து, நம்முடைய நோக்கங்கள் நல்லவைகளாகவே இருந்துள்ளது என்பது வெளியாகுகின்றது; செய்யப்பட்ட எதற்கும் மன்னிப்புக் கேட்பீர்கள். தவற்றைச் செய்யாமல் இருப்பதைவிட, செய்த தவற்றைச் சரிப்படுத்துவதே கடினமான காரியமாய் இருக்கின்றது என்று நீங்கள் சொல்லலாம். அது உண்மைதான். எனினும் உங்கள் இருதயம் நீதியின் மீது அன்பு கொண்டு இருக்கின்றது என்று கர்த்தரிடத்தில் நீங்கள் நிரூபிக்க விரும்புவீர்களானால், இப்படித்தான் நீங்கள் செய்ய வேண்டும்; நீங்கள் தவறு செய்துள்ளீர்கள் என்று காணும்போதெல்லாம், நீங்கள் அதைச் சரிசெய்ய வேண்டும். நீங்கள் இப்படியான நிலைமைக்கு வந்திருப்பீர்களானால், என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி தேவன் பேரிலும், மனுஷர் பேரிலும் பூரண அன்பு கொண்டிருக்கும் இலக்கில் நீங்கள் வந்துள்ளீர்கள். நீங்கள் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்றும், யாருக்கும் தீமை செய்யக்கூடாது என்றும் விரும்புகின்றீர்கள். அதுமுதல் என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி, நீங்கள் கிரீடம் கொடுக்கப்பட்டவராகக் கர்த்தரால் கருதப்படுவீர்கள். இது ஒரு காரியமாகவும், உன் கிரீடத்தை ஒருவனும் எடுத்துப் போடாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு என்பது இன்னொரு காரியமாகவும் இருக்கின்றது. கிரீடம் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பின்னரும்கூட ஒருவேளை இலக்கினின்று விலகிப்போய்விடுவீர்களானால், பிரச்சனைகளின் நிமித்தம் இலக்கினின்று தள்ளிவிடுவீர்களானால்… நீங்கள் இப்பரீட்சையில் நிலைநிற்காதவர்களாய் இருப்பீர்கள் மற்றும் ஜெயம் கொண்டவராய் இருப்பதற்கு அபாத்திரராகிவிடுவீர்கள். ஆகவே குணலட்சணத்திற்கு ஓர் இலக்கு இருக்கின்றது என்பதைக் கவனியுங்கள் மற்றும் இதை அடையாமல் யாரும் ஆவிக்குரிய அல்லது பூமிக்குரிய இராஜ்யத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இப்பொழுது நம் அன்பையும், அர்ப்பணிப்பையும் நாம் நிரூபித்தாக வேண்டும் மற்றும் இதற்காகவே நாம் இன்றைக்கும், நாளைக்கும், கிறிஸ்துவினுடைய பள்ளிக்கூடத்திற்குள் பிரவேசித்தது முதற்கொண்டுள்ள நம் கிறிஸ்தவ அனுபவ காலங்கள் முழுவதும் ஜீவித்துக்கொண்டு வருகின்றோம்; கூடுமானமட்டும் விரைவாக நாம் அவரிடம் கற்றுக்கொண்டு, அனைவர் மீதுமுள்ள பூரண அன்பிற்கான இலக்கில் வந்துவிட வேண்டும்.