Q514:1
கேள்வி (1915 – Z.5807)-1- சுவிசேஷத்தின் ஊழியக்காரனாய் நீங்கள் எப்பொழுது மற்றும் யாரால் மற்றும் எப்படி ஏற்படுத்தப்பட்டீர்கள்?
பதில் – இக்கேள்விக்கு நான் பதிலளிக்கிறதற்கு முன்னதாக, ஏற்படுத்துதல் (ordination) தொடர்புடைய வேதவாக்கியங்களின் போதனைகளை நான் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். வேதாகமத்தினுடைய கண்ணோட்டத்தின்படி இரண்டு சரியான ஏற்படுத்துதல்கள் காணப்படுகின்றது என்று நாம் நம்புகின்றோம். ஒன்று தேவனால் ஏற்படுத்தப்படுதல்; ஒன்று மனுஷனால் ஏற்படுத்தப்படுதல் ஆகும். பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுதல் என்பது தேவன் சார்பிலான ஏற்படுத்தப்படுதலாக இருக்கின்றது. இது இல்லாமல், யாருக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கக்கூடிய அதிகாரம் இருப்பதில்லை. இந்த ஏற்படுத்துதல் இல்லாமல் பிரசங்கிக்கும் எவரும், நாங்கள் புரிந்திருக்கிறவரையில் திவ்விய ஏற்படுத்துதல் இல்லாமல் பிரசங்கிக்கிறவர்களாய் இருப்பார்கள். இவர்கள் தாங்கள் செய்யும்படிக்கு அங்கீகாரம் பெறாத ஒன்றைச் செய்கின்றவர்களாய் இருக்கின்றனர்.
தாம் எப்படிப் பிரசங்கிப்பவராகுவதற்கு ஏற்படுத்தப்பட்டார் என்று நமது கர்த்தர் கூறியுள்ளார்; மற்றும் நாம் அவரது அடிச்சுவடுகளில் நடக்க வேண்டும் என்றும், அநேக விதங்களில் அவரைப்போன்றே அனுபவங்கள் உடையவர்களாய் இருக்க வேண்டும் என்றும் வேதவாக்கியங்கள் நமக்குத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. சிலுவையின் ஊழியக்காரர்களென, நம்மால் முடிந்தமட்டும் முழுமையாக நாம் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிட வேண்டும். ஆனால் அவர் பூரணராய்க் காணப்பட்டார் மற்றும் நாம் அபூரணர்களாய்க் காணப்படுகின்றோம். ஆகையால் நம்முடைய பாவங்களுக்காக நாம் மன்னிப்புப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது; ஆனால் அவருக்கோ எந்தப் பாவங்களுமில்லை. ஆகையால் அவர் தம்முடைய இரத்தத்தின் மீதான விசுவாசத்தின் வாயிலாகப் பிதாவினிடத்திற்கு வருபவர்கள் யாவருடைய மன்னிப்பிற்கும் வழிவகையானார். “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார் என்று கூறி, அவர் தம்முடைய ஏற்படுத்தப்படுதலைக் குறித்துக் குறிப்பிடுகின்றார் (ஏசாயா 61:1). இயேசுவின் மீது வந்த அந்த ஏற்படுத்துதலானது, பிற்பாடு பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்கள் மீது கடந்துவந்ததாய் இருக்கின்றது மற்றும் சுவிசேஷயுகம் முழுவதிலும் அந்த ஏற்படுத்துதலானது கிறிஸ்துவின் பின்னடியார்கள் மீது வந்து, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படியாக அவர்களை அபிஷேகித்ததாய் இருந்தது (லூக்கா 4:17-21; 1யோவான் 2:27).
தேவனுடைய ஏற்படுத்தப்படுதலைப் பெற்றுக்கொண்டுள்ள அனைவரும் தங்கள் வாய்ப்புகள் மற்றும் திறமைகளுக்கேற்ப பிரசங்கிப்பதற்கான அதிகாரத்தினை உடையவர்களாய் இருக்கின்றனர். அவர்களில் சிலர் செவிடர்களும் – ஊமையர்களுமாய் இருந்து, மற்றவர்களுக்குக் கேட்கும் விதத்தில் பிரசங்கிக்க முடியாதவர்களாய்க் காணப்படுகின்றனர். வேறு சிலர் பாலினத்தினால் வரையறைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்; சகோதரர்கள் போன்று சகோதரிகளால் பிரசங்கம்பண்ணிட முடியாது; ஆனாலும் “அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும் விதத்தில் அவர்களால் பிரசங்கம் பண்ணிடக்கூடும் (1 பேதுரு 2:9). இன்னுமாக அவர்கள் நற்செய்தியினைத் தெரியப்படுத்திடுவதற்கு முழுமையாய் ஏற்படுத்தப்பட்டவர்களாய் (fully ordained) இருக்கின்றனர்; ஆனாலும் அப்போஸ்தலனாகிய பவுலினுடைய வார்த்தைகளுக்கேற்ப பொதுவிடங்களில் அல்ல. தாலந்து அல்லது வாய்ப்பு இல்லாததன் காரணமாக, பொதுவிடங்களில் பிரசங்கிக்க முடியாதவர்களாக சில புருஷர்கள் காணப்படுகின்றனர்; ஆனாலும் அனைத்துப் புருஷர்களும் தங்களை அந்தகாரத்தினின்று ஒளியினிடத்திற்கும் தூக்கியெடுத்தவரும், உளையான சேற்றினின்றும், பயங்கரமான குழியினின்றும் தூக்கியெடுத்து, தங்களது கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, தங்கள் அடிகளை உறுதிப்படுத்தினவருமான மாபெரும் மற்றும் அன்பான தேவனுடைய மகிமையையும், கனத்தையும் தங்களது ஜீவியங்கள் வாயிலாகவும், சம்பாஷணைகள் வாயிலாகவும் அறிவித்திடலாம் (சங்கீதம் 40:2).
இப்பொழுது சுவிசேஷத்தில் ஊழியக்காரர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கான மற்றொரு விசேஷமான ஏற்படுத்துதலுக்கு நாம் வரலாம்; இவ்வகுப்பாரில் நானும் அடங்குபவனாகக் கருதுகின்றேன். இது சபையினால் பண்ணப்படும் ஏற்படுத்தப்படுதலாகும் மற்றும் இது எங்குமுள்ள சபை பிரிவினர் யாவராலும் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளதாய் இருக்கின்றது; இது சிலரால் வெறும் சடங்கெனக் கருதப்படுகின்றது; சிலரினால் இது மகா புறஆச்சாரத்துடன் ஆசரிக்கப்படுகின்றது மற்றும் வேறு சிலரால் சிறு புற ஆச்சாரத்துடன் ஆசரிக்கப்படுகின்றது. ஆனால் ஒவ்வொரு சபையாரும் தாங்கள் தெரிந்துகொள்பவர்களை, கைகளை நீட்டுவதன் மூலம் – வாக்கு (vote) மூலம் – அதாவது வேதவாக்கியம் முன்வைக்கும் விதத்தில் ஏற்படுத்திட வேண்டும் என்பது எங்களுடைய புரிந்துகொள்ளுதலாய் இருக்கின்றது.
அப்போஸ்தலர் 14:23-ஆம் வசனத்தில் இடம்பெறும் காரியங்களும் மற்றும் அனைத்துச் சபைகள் தொடர்பாக மூப்பர்கள் குறித்து இடம்பெறும் மற்ற வேதவாக்கியங்களும், ஏற்படுத்துதல் என்பதே ஆதிசபையின் நிலையான வழக்கமாய்க் காணப்பட்டு வந்தது என்னும் கூற்றினை நியாயப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. இவ்வசனத்தில் இடம்பெறும் “மூப்பர்கள் என்னும் வார்த்தையானது சுவிசேஷகர்களையும், மேய்ப்பர்களையும், போதகர்களையும் மற்றும் பொதுவில் விரிவுரையளிப்பவர்களாகிய தீர்க்கத்தரிசிகளையும் உள்ளடக்குகின்றதாய்க் காணப்படுகின்றது. ஆகையாலே “ஏற்படுத்துதல்” (ordained) எனும் வார்த்தையின் அர்த்தம் என்னவென்று நாம் கற்றுக்கொள்வது முக்கியமானதாய்க் காணப்படுகின்றது.
தற்காலத்தில் “ஏற்படுத்துதல் (ordination) எனும் வார்த்தையானது, பொதுவாக ஸ்தானத்தில் அமர்த்தப்படுவதற்கான அனுசரிப்புச் சம்பந்தமாகப் பயன்படுத்தப்படுகின்றது; ஆனால் இது இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘Cheirotoneo” எனும் கிரேக்க வார்த்தையினுடைய அர்த்தமல்ல. இதன் அர்த்தம் “கைகளை நீட்டுவதன் மூலம் தேர்ந்தெடுத்தலாகும்,” vote / வாக்குக் கொடுப்பதற்கான பொதுவான வழக்கமுறையாகும். இந்த ஓர் அர்த்தமானது பேராசிரியர் Young’s ‘Analytical Concordance to the Bible” -இல் கொடுக்கப்பட்டுள்ளது. இது Presbyterian சான்று மேற்கோளாகக் கருதப்படலாம் என்பதினால் நாம் ‘Exhaustive Concordance of the Bible”-இல் இடம்பெறும் விளக்கத்தையும் கொடுக்கின்றோம் மற்றும் இது Methodist சான்று மேற்கோளாகக் கருதப்படலாம். Strong’s இவ்வார்த்தைக்கு (கைகளை நீட்டுவதன் வாயிலாக) வாக்களிப்பவர் அல்லது கைகளை நீட்டுபவர் என்று விளக்கம் கொடுக்கின்றார்.
வாக்குச் செலுத்துவதற்கெனக் கைகளை நீட்டுவதன் வாயிலான சபையாரின் தேர்ந்தெடுத்தலே, அனைத்துச் சபைகளிலும் மூப்பர்களை ஏற்படுத்துவதற்கான வேதவாக்கிய முறைமையாக இருக்கின்றது. இதைத் தேர்ந்தெடுத்தலுக்கு முன்னதாகச் சபையாருக்கு வலியுறுத்துவது என்பது, வேதவாக்கிய ஒழுங்குமுறையைப் பின்பற்றுவதாக இருக்கும்; இது மூப்பரைப் பலப்படுத்திடும் மற்றும் தேவனுடைய சித்தத்தை, தேவனுடைய தெரிந்தெடுத்தலைத் தெரிவிக்கிறவர்களாய்க் கர்த்தருடைய நாமத்திலும் மற்றும் ஆவியிலும் மூப்பர்களை நியமித்தவர்களெனச் சபையார் கொண்டிருக்கும் அதன் கடமைகளையும், பொறுப்புகளையும் சபையாருக்கு நினைப்பூட்டுகின்றதாய் இருக்கும். இதோடுகூட இந்த வேதவாக்கிய ஏற்பாடானது சபையாரின் அங்கத்தினர்களை – மூப்பர்களுடைய வார்த்தைகள் மற்றும் கிரியைகள் யாவற்றிலும், அவர்களைத் தங்களது ஊழியக்காரர்களென மற்றும் பிரதிநிதிகளெனக் கண்டுகொள்ளச்செய்திடும். இது சபையார் மூப்பர்களுக்குச் சொந்தமானவர்கள் மற்றும் சபையாரை ஆளுகிறவர்கள் என்று நிலவும் பிரபலமான கருத்தினை எதிர்க்கின்றதாகவும், “கர்த்தருடைய ஜனங்கள் என்பதற்குப் பதிலாக “எனது ஜனங்கள் என்ற மூப்பர்களுடைய சிந்தைக்கு முற்றுப்புள்ளியும் வைக்கின்றதாயும் இருக்கும்.
இந்த இரண்டு விதங்களில் ஏற்படுத்தப்படாத எவரும் வேதவாக்கியங்களின் அடிப்படையில் சுவிசேஷத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஊழியர்களல்ல. முதலாவதாகத் திவ்விய ஏற்படுத்துதல் அவசியமாய் இருக்கின்றது; இரண்டாவதாக பூமிக்குரிய ஏற்படுத்துதல் அவசியமாய் இருக்கின்றது; தேவனுடைய கிருபையினால், நான் இந்த இரண்டையும் பெற்றிருக்கின்றேன்.
Watch Tower Bible And Tract Society – இன் பெயரில் பொது ஊழியங்களில் ஈடுபட்டிருப்பவர்கள், மொத்தத்தில் ஏற்படுத்தப்பட்டவர்களாய் இருக்கின்றனர். இவர்கள் சொசைட்டியின் பணியாளர்களால் அனுப்பி வைக்கப்படுகின்றனர்; மற்றும் எங்கும் காணப்படுகின்றதான பெரும்பான்மையான சபையார்கள் சொசைட்டியினால் அடையாளங்கண்டு கொள்ளப்பட்டவர்களாக இருக்கிறபடியாலும் மற்றும் அவர்களும் society – ஐ அடையாளங்கண்டு கொண்டுள்ளதினாலும், அவர்கள் சொசைட்டியின் வாயிலான இந்த ஏற்படுத்துதல்களை அடையாளங்கண்டு கொள்கின்றனர்.