Q256:2
கேள்வி (1916)-2- ஒரு குறிப்பிட்ட வாட்ச் டவர் வெளியீட்டில் (அதன் தேதி எனக்கு ஞாபகமில்லை) ஐம்பது சதவீத (nominating vote) முன்மொழிதலின் வாக்கினையாகிலும் பெற்றிருக்கும் முன்மொழியப்பட்டவர்கள் யாவரும் ஏகமனதாய்த் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனும், ஒரு தேர்ந்தெடுத்தல் வழிமுறையினை நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். பிரச்சனைகளும், பிணக்குகளும் உள்ள ஒரு சபையில் இந்த வழிமுறையைக் கையாளுவது நலமாய் இருக்குமா? அல்லது மூப்பராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்மொழியப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் 75 சதவீத வாக்குகள் வேண்டுமென்று வலியுறுத்துவது நலமாய் இருக்குமா?
பதில் – என்ன செய்யப்படலாம் என்று வேதாகமம் நமக்குத் தெரிவிக்கிறதில்லை என்று முதலாவதாக நாம் நினைவில்கொள்ள வேண்டும். இப்படியிருப்பதினால் இதைச் செய்வதில் மிகவும் அனுகூலமிக்க வழிமுறையாக எது காணப்படும் என்று கண்டுபிடிப்பதில் பகுத்தறிதலே காரியமாகும். எது சிறந்த வழி என்று கண்டுகொள்வதில் பகுத்தறிதலே காரியமாய் இருக்கின்றது. உங்களுடைய பகுத்தறிதலின் அளவிற்கு, என்னுடைய பகுத்தறிதலானது நலமாய்க் காணப்படாமல் இருக்கலாம். இதுபோன்ற எந்த ஒரு தலைப்பின் விஷயத்திலும் வாட்ச் டவர் வெளியீட்டில் எந்தவொரு ஆலோசனைகளையும் முன்வைக்கையில், அவைகள் என் அபிப்பிராயங்களாக மாத்திரமே இருக்கின்றன. சகோதரர் ரசல் கட்டளையிடுவதற்கோ அல்லது எவ்விதத்திலும் சர்வாதிகாரியாகக் காணப்படுவதற்கோ விரும்புகிறது இல்லை. வேதாகமம் எதுவும் பேசிடாத இம்மாதிரியான விஷயங்களில் அவர் தனது அபிப்பிராயத்தைத் தெரிவித்திட முயற்சித்திட மாத்திரமே செய்கின்றார். நான் அறிந்திருக்கிறதைவிடச் சபையார் சில சிறந்த வழியை அறிந்திருப்பார்களாகில் அதில் எனக்குத் திருப்தியே. தேவனுடைய சித்தமானது சபையாரினால் தெரிவிக்கப்பட வேண்டும் மற்றும் சபையாருடைய சித்தத்தைத் தள்ளிவிடுகிறவன் தவறு செய்கிறவனாகவும், கர்த்தருடைய அங்கீகரிப்பைப் பெற்றுக்கொள்ளாதவனுமாய் இருப்பான். விரும்பியதை அடையத்தக்கதாக இரகசியமாய்ச் சிலர் தங்களது செல்வாக்கினைப் பயன்படுத்துவது குறித்தும், இப்படியாகத் தற்போதைக்குச் சபையாருடைய நலனுக்கடுத்தவைகள் குறுக்கிடப்படுகிறதைக் குறித்தும் மற்றும் இது நிச்சயமாய்ச் சரியற்றது என்பது குறித்தும் நான் அறிந்திருக்கின்றேன். கர்த்தர் ஏற்பாடுபண்ணியுள்ளவைகளுக்கு மிஞ்சி செல்வதற்கு நாம் முயற்சித்திடக்கூடாது. இப்படியான எதிலும் கர்த்தர் பிரியப்படுகிறது இல்லை. நாம் கர்த்தருக்கும், சகோதரருக்கும் நேர்மையாய்க் காணப்பட்டு, சகோதரர் அனைவரும் பின்வரும் சரியான எண்ணத்தினைப் பெற்றுக்கொள்ள உதவிட வேண்டும் அதென்னவெனில் – “நான் மூப்பராகத் தெரிந்தெடுக்கப்படுவதோ, அல்லது தெரிந்தெடுக்கப்படாமலிருப்பதோ என்னுடைய காரியமல்ல. சபையாருக்கு நலமாய்த் தோன்றுகிறதை அவர்கள் செய்யட்டும். ஒருவேளை அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்களானால் என்னால் முடிந்த மட்டும் அவர்களுக்கு நன்றாய் ஊழியம் புரிந்திடுவதற்கு நான் முயற்சித்திடுவேன்; ஆனால் ஒருவேளை அவர்கள் என்னைத் தேர்ந்தெடுக்காவிட்டாலும், எந்தவிதத்திலும் என்னால் முடிந்தமட்டும் அவர்களுக்கு நன்கு ஊழியம் புரிந்திட முயற்சித்திடுவேன் என்பதேயாகும். ஒருவேளை நாம் இத்தகைய ஓர் ஆவியினைப் பெற்றிருப் போமானால் அதை நிச்சயமாய்ச் சபையார் ஏற்றகாலத்தில் காண்பார்கள். கர்த்தர் அதை எப்போதுமே கண்ணோக்கிக் கொண்டிருக்கின்றார் மற்றும் தேவனிடத்தில் நீங்கள் சரியாய்க் காணப்பட்டீர்கள் என்றால், மற்றவர்களிடத்தில் உங்களது நிலைப்பாடு எப்படிக் காணப்படுகின்றது என்பது ஒரு பொருட்டல்ல. ஒருவேளை நாம் 80 அல்லது 75 சதவீதத்தை அல்லது வேறு எதையாகிலும் வைத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் சொல்வீர்களானால், சதவீதம் தொடர்புடைய விஷயத்தில், அதை விதிக்குட்படுத்த எதுவுமில்லை – வேதாகமத்தில் எதுவுமில்லை. வாக்கு விஷயத்தில் 75 அல்லது 80 சதமானவர்களைப் பிரியப்படுத்துவதைக் காட்டிலும், உங்கள் மனசாட்சியினால் முடிந்தமட்டும் சபையரரிலுள்ள அனைத்துச் சகோதரர்களையும் பிரியப்படுத்துவதற்கும், அனைவருக்கும் திருப்திகரமாய் இருக்கும் ஓர் தேர்ந்தெடுத்தலைப் பெற்றுக்கொள்வதற்கும் விரும்புவது நலமாய் இருக்கும் என்று நாங்கள் யோசனை கூறுவோம். சபையாரிலுள்ள ஒவ்வொருவருக்காகவும் அக்கறை கொள்ள வேண்டும் மற்றும் ஒவ்வொருவனும் சரி என்று, தான் கருதுபவைகளைச் செய்திடவும் வேண்டும். அனைவருமே முழுமையாய்த் திருப்தி அடைய மாட்டார்கள் என்று அறிந்த நிலையில், சிறுபான்மையினரின் எண்ணங்களைப் பொருட்படுத்தாமல், பெரும்பான்மையினர் தங்கள் எண்ணங்களின்படி நடந்தேற்றுவது என்பது நிச்சயமாய்ச் சரியாய் இராது. ஒருவேளை ஒரு குறிப்பிட்ட சகோதரன் மூப்பராகிட வேண்டுமென்று நீங்கள் எண்ணுகின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம் மற்றும் அச்சகோதரனிடத்தில் எக்குறையினையும் நான் காண்கிறது இல்லை என்று வைத்துக்கொள்ளலாம். நீங்கள் அவர் மூப்பராகிட வேண்டுமென்று விரும்புகின்றீர்கள் என்ற காரியமே, நான் அவருக்காக வாக்களிப்பதற்கு ஒரு காரணமாக அமைகின்றது; எனினும் அவரைத் தகுதியற்றவர் என்று கருதிடுவதற்கு ஏதுவாய் அவரது குணலட்சணம் குறித்து நான் எதையேனும் அறிந்திருப்பேனானால், இச்சூழ்நிலையில் அவருக்கு நான் வாக்களிப்பது என்பது கர்த்தருடைய சித்தத்திற்கு விரோதமாய் இருக்கும். அப்படியானால் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக என்னால் அவருக்கு வாக்களித்திட முடியாது. (வாக்களித்தல் தொடர்புடைய விஷயத்தில் என்னுடைய அபிப்பிராயத்தைத் தெரிவிக்க மாத்திரமே செய்கின்றேன்.) முடிந்தமட்டும் நம்முடைய தேர்ந்தெடுத்தலை ஏக மனதுடன் பெற்றிருக்க விரும்புகின்றேன். எனினும் ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் என்னால் அவருக்கு வாக்களிக்க இயலவில்லை. அச்சகோதரனும் இதைச் சரியாய் எடுத்துக்கொண்டு, அவர் பின்வருமாறு: “உங்களது நேர்மையினையும், யதார்த்தத்தையும் நான் பாராட்டுகின்றேன். நான் ஓர் உயர் தரத்திற்கு என்னையே கொண்டுவந்திடுவதற்கு முயற்சித்திடுவேன் என்று கூறிட வேண்டும். இதுவே சரியாய் இருக்கும்; அதாவது சரியாய்ச் செயல்பட்டு, பின் முழுச்சபையாரையுமே பிரியப்படுத்துவதாயிருக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாகும்; அதுவும் அவர்களைப் பிரியப்படுத்துகிறதாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், சரியானவற்றைச் செய்வதாகும். அதுவும் எவ்வித சுயேட்சையான ஆவியினால் இல்லாமல், மாறாக ஒவ்வொருவரின் மற்றும் அனைவரின் கருத்துக்களையும் முறையே கருத்தில் எடுத்துக்கொள்வதற்குரிய பெருந்தன்மையின் ஆவியினால் செய்யப்பட வேண்டும். 85 சதமான விதியானது நிலைநாட்டப்பட்டும், சபையாரினுடைய சித்தம் உண்மையில் நிறைவேற்றப்படாத நிலையில் காணப்பட்ட சில சந்தர்ப்பங்களை நான் அறிவேன். அது எப்படி? 85 சதமானம் அடையப்பெற்றிருக்குமானால், ஏன் அது சபையாருடைய சித்தமாகக் காணப்பட முடியவில்லை? ஏனெனில் 15 சதமானவர்கள் கட்டுக்கடங்காதவர்களாகிடுவதற்குத் தீர்மானிக்கக்கூடும் மற்றும் 85 சதமானவர்களின் விருப்பத்தினை அடையவிடக்கூடாது என்று தீர்மானிக்கக்கூடும். பெரும்பான்மையினரைச் சிறுபான்மையினர் ஆளமுயல்கின்றனர் மற்றும் இணங்கி விட்டுக்கொடுப்பதில்லை. எனினும் சபையாரினுடைய விருப்பத்தைத் தீர்மானிப்பதற்குப் பெரும்பான்மை மாத்திரமே தேவையாய் இருக்கின்றது; 51 சதமானம் என்பது பெரும்பான்மையாகும். ஒருவேளை 85 சதவீதம் வேண்டுமென்று முன்வைக்கப்படுகிறதென்றால், அது சிறுபான்மையினரைப் பிரியப்படுத்துவதற்கென்றுள்ள பெரும்பான்மையினரின் சார்பிலான சலுகையேயாகும். 51 சதமானவர்கள் நாங்கள் தீர்மானிப்போம் என்றும், எங்கள் வழியின்படி செய்வோம் என்றும் சொல்ல முடியும், ஆனால் அது மற்றவர்களைப் புறக்கணிக்கிற காரியமாய் இருந்து பிரிவினையை உண்டுபண்ணிடலாம். இப்படிச் செய்வது ஞானமான அல்லது அன்பான காரியமாய் இராது. பெரும்பான்மையானவர்கள் சிறுபான்மையினரைக்குறித்துக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்; கூடுமானால் ஒவ்வொருவரையும் உள்ளடக்கின நிலையில் 100 சதவீதத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றோம் என்று தெரிவித்திட வேண்டும். ஆனால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரைக் கவனத்தில் கொள்ளாமல் இருந்து, இதனால்; சிறுபான்மையினர் சபையாருடைய வேலைக்குத் தடங்கலும், இடர்பாடும் உண்டு பண்ணுவதும், இந்த 85 சதமானவர்களுக்கு இடையூறு உண்டுபண்ணத் தக்கதாக, தங்களால் முடிந்த யாவற்றையும் செய்வோம் என்று கூறுவதும், இவர்கள் – நல் நோக்கங்களை முன்னிலையிலிருந்து நிறைவேற்றுபவர்களைத் தடைச்செய்கிற நோக்கோடு அரசியலில் பயன்படுத்தப்படும் தந்திரமான முறைமைகளை எடுத்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும். இது முற்றிலும் தவறாக இருக்கும். இந்தக் காரியங்கள் குறித்த சரியான கண்ணோட்டங்களை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். புரூக்கிளினிலும், நியூயார்க்கிலும் உள்ள சபைகளில் ஏகமனதுடன் கூடிய வாக்கை எப்போதும் நாம் பெற்றிருப்போம். ஏனெனில் வேலை தொடர்புடைய விஷயத்தில் நாம் அறிந்திருக்கிற எல்லாவற்றையும் செய்திடுவதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டிருக்கின்றோம். ஒருவேளை யாரேனும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட சகோதரனை மூப்பனாகவோ அல்லது உதவிக்காரனாகவோ பெற்றிருக்க விரும்பினால் அவரைப் பெற்றிருப்பதற்கு நாமும் மகிழ்வோம். இப்படியாகவே கிட்டத்தட்ட எல்லாவிடங்களிலும் காணப்படும் சபையார்களின் மனநிலையாக இருக்கும் என்று நாம் நம்புகின்றோம்; ஆனால் சிலசமயங்களில் நம்முடைய மனங்களானது திரித்துக் காணப்படுகின்றது. 85 சதவீதம் பெற்றுக்கொள்ளாததுவரையிலும், எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று சிறுபான்மையினர் கூறும்போது, நான் ஒரு மாற்றத்தை முன்வைத்து அதை 51 சதவீதமாக்கிடுவேன் மற்றும் 51 சதமானவர்கள் தங்களால் முடிந்தமட்டும் மற்றவர்களிடத்தில் அன்பாய் இருப்பார்களாக; ஆனால் கர்த்தருடைய வேலைக்குத் தடங்கல் உண்டு பண்ணும் எந்தவொரு வழிமுறையையும் நாங்கள் அனுமதிப்பது இல்லையென்று மற்றவர்கள் தெரிந்து கொள்வார்களாக. சபையாரிலுள்ள பெரும்பான்மையானவர்கள் சபையாரை நடத்திடவும், அதன் நடைமுறைகளைத் தீர்மானித்திடவும் வேண்டும் என்று தேவன் விரும்புகின்றார்; எனினும் பெரும்பான்மையானவர்கள், சிறுபான்மையானவர்களிடத்தில் மிகவும் அன்பாய்க் காணப்படவும் கர்த்தர் விரும்புகின்றார்; அவர்கள் ஒருமித்த மனதில் காணப்படமுடியுமென்றால் அது இன்னும் சிறப்பாய் இருக்கும்.