Q239:1
கேள்வி (1910)-1- மூப்பராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சகோதரனிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டதெனில், அவருடைய மூப்பருக்கான பணிக்காலம் நிறைவடையும்போது, மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் மறுப்புத் தெரிவிப்பது என்பது ஞானமான முறையாக இருக்குமா என்று அறிய விரும்புகின்றேன்?
பதில் – ஒருவேளை நான் இப்படிப்பட்டதான சூழ்நிலையில் காணப்பட்டால், நான் இவ்வாறாகவே நடந்துகொள்வேன் என்று நம்புகின்றேன். சபையிலுள்ள வேறொரு சகோதரனை என் மனதில் நான் கொண்டு, அவரை முன்மொழிவேன் (nominate). ஆனால் ஒருவேளை நான் முன்மொழியப்பட்டால், நான் பின்வருமாறு : “சகோதர சகோதரிகளே, என்னால் முடிந்தமட்டும் உங்களுக்கு ஊழியம் புரிந்துள்ளேன் மற்றும் உங்களைத் திருப்திப்படுத்துவதில் குறைவுபட்டுள்ளேன் என்பதையும் அறிவேன். ஆனாலும் என்னால் முடிந்ததை உங்களுக்குச் செய்தேன் என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று விரும்புகின்றேன். எனினும் நான் உங்களை திருப்திப்படுத்தவில்லை என்று அறிவேன். ஏனெனில் நான் திருப்தியாய் நடந்துகொள்ளவில்லை என்பதை உங்களில் அநேகர் என்னிடம் தெரிவித்தீர்கள். மேலும் என்னால் முடிந்தமட்டும் சீர்த்திருத்திக்கொள்ள முயற்சித்தேன். ஆனாலும் போதுமானளவு நான் முன்னேற்றம் அடையவில்லை. இதனால் உங்களில் சிலர் என்னிடத்தில் இன்னமும் குற்றத்தைக் கண்டீர்கள். நான் உங்களைக்குறித்து இப்பொழுது குற்றம் சாட்ட வரவில்லை – குற்றம் என்னிடத்தில் இருக்கின்றது என ஏற்றுக்கொள்கின்றேன். இன்னின்னப்படி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறபடியெல்லாம் என்னால் இருக்க முடியவில்லை மற்றும் நான் உங்களுக்கு எப்படி ஊழியம் புரிய விரும்புகின்றேனோ அப்படி என்னால் ஊழியம் புரியமுடியவில்லை. ஆகவே என்னுடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்வது உங்களுக்கு நலமாய் இருக்குமென நான் எண்ணுகின்றேன். நான் இன்னின்ன சகோதரரை முன்மொழிந்துள்ளேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு – மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் அல்லது உங்கள் விருப்பத்திற்கேற்ப இச்சகோதரனை நீங்கள் தேர்ந்தெடுக்க உங்களுக்கு ஆலோசனை கூறுகின்றேன் – அநேகமாக இவர் நம் அனைவரையும் நன்கு திருப்திப்படுத்தலாம். நான் இவருக்கு உதவி செய்ய முயற்சிப்பேன் என்றும், இவருடைய கரங்களைத் தாங்கிபிடிப்பதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் நான் வாக்களிக்கின்றேன்” என்று கூறிடுவேன். மேலும் மற்றச் சகோதரன் தேர்ந்தெடுக்கப்படத்தக்கதாக நான் உண்மையாய் முயலுவேன். ஆனால் இப்படியெல்லாம் கூறின பிற்பாடும் சபையார் என்னிடம் – “இல்லை. உம்மிடத்தில் நாங்கள் குறைவுகள் கண்டுபிடித்திருந்தாலும் கூட உம்மைதான் நாங்கள் தேர்ந்தெடுக்கப்போகின்றோம் என்று கூறுவார்களேயானால், நான் அவர்களிடம் பின்வருமாறு : “ஒருவேளை கடந்த காலத்தில் நான் செய்தவைகளைக் காட்டிலும் அடுத்தமுறை என்னால் செய்யமுடியாமல் கூடஇருக்கலாம். அதற்கான பொறுப்பு உங்களிடத்திலேயே உள்ளது. காரணம் என்னால் முடிந்தவைகளையே நான் இப்பொழுது செய்து கொண்டிருக்கின்றேன் என்று நான் உங்களிடத்தில் தெரிவிக்கின்றேன். ஆகையால் ஒருவேளை நான் உங்கள் அனைவரையும் திருப்திப்படுத்தாமல் காணப்படும்போது, என்னைக் குறித்து மனஸ்தாபத்திற்குள்ளாகாதீர்கள் என்று கூறுவேன். இவைகளை நான் சபையாரிடம் உறுதியாகப் பேசிவிடுவேன். இதனால் அவர்கள் என்னைக்குறித்த முடிவிற்கு வரமுடியும். ஆனால் ஒருவேளை அவர்களில் பெரும்பான்மையானவர்கள் (majority) உதாரணத்திற்கு, தொன்னூறு சதவிகிதம் அல்லது சபையாரின் ஓரளவு எண்ணிக்கையானவர்கள் என்னைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்; நான் அதைக் கர்த்தருடைய சத்தமாகக் கருதி, இப்பொழுது நான் மறுப்புத் தெரிவிக்கமாட்டேன் என்று கூறுவேன். எந்தவிதத்திலும் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் நான் நிச்சயமாய் மறுப்புத் தெரிவிக்கவுமாட்டேன் மற்றும் நான்: “இல்லை. நீங்கள் என்னிடத்தில் குற்றம் கண்டுபிடித்தீர்கள், ஆகையால் இப்பொழுது மூப்பர் ஊழியத்தை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று கூறவுமாட்டேன். இப்படிக் கூறுவது தவறாயிருக்கும். இப்படிப்பட்டதான ஆவி நம்மிடத்தில் இருக்க வேண்டாம். இச்சூழ்நிலையில் காணப்படும் சகோதரன் குற்றஞ்சாட்டுவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றது என நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவ்வப்போது ஏதாகிலும் விதத்தில் குற்றம் காணப்படாமல் இருப்பதற்கு நம்மில் எவரும் பூரணர்கள் இல்லை. மேலும் ஒருவேளை சகோதரர்கள் குற்றம் கண்டுபிடிப்பார்களானால், நாம் அதைச் சகிப்போமாக மற்றும் அதன் மூலம் நன்மை பெற்றுக்கொள்ள முயற்சிப்போம். மேலும் அவ்விஷயத்தில் தாழ்மையாயிருப்போம். ஒருவேளை இது நாம் இறுமாப்பு அடையாதபடிக்கும், வீழ்ச்சிக்குள்ளாகப் போகாதபடிக்கும் நம்மைக் காத்துக்கொள்ளும்.