R5954
எப்போது விவாகரத்துப் பெற்றுக்கொண்டவர்கள் திருமணம் பண்ணிடுவதற்குச் சுதந்தரமாய் இருக்கின்றனர்?
அன்புக்குரிய சகோதரர் ரசல் அவர்களே:-
வேதாகம பாடங்களுடைய 6-ஆம் தொகுதியானது, ஒவ்வொரு அனுபவங்கள், சிரமங்கள் மற்றும் புதுச்சிருஷ்டியாகிய கர்த்தருடைய ஜனங்களுக்கான சரியான வழிமுறைகள் குறித்துத் தெரிவிக்கின்றது என நான் நன்கு அறிவேன்; எனினும் ஒரு குறிப்பிட்ட கேள்வியானது எழும்பி, எங்களது சபையில் சில குழப்பங்களை உருவாக்கிக்கொண்டிருக்கின்றது மற்றும் பிரிவினையை உண்டுபண்ணிவிடும்போன்று தோன்றுகின்றது. எங்கள் சபையின் அங்கத்தினர்களாகிய ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் எங்கள் ஐக்கியத்தினை அனுபவித்து வந்தனர்; ஆனால் அச்சகோதரிக்கு முன்பும் ஒரு திருமணம் நடந்திருக்கின்றது என்றும், அவளது முதலாம் கணவன் இன்னமும் ஜீவனோடு காணப்படுகின்றார் மற்றும் மறுமணம் செய்துகொண்டுள்ளார் என்றும் எங்களுக்குத் தெரியவந்தது.
எங்கள் சபையாரில் சிலர் இந்தச் சகோதரனையும், சகோதரியையும், கூடுகைகளில் கலந்து கொள்வதற்குத் தடைப்பண்ணிட வேண்டுமென்று விரும்புகின்றனர். மத்தேயு 19:9-ஆம் வசனத்தில் இடம்பெறும் இயேசுவின் பின்வரும் வார்த்தைகளின் அடிப்படையிலேயே முக்கியப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது “எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்.” இவ்விஷயத்தில் அச்சகோதரியுடைய முதலாம் கணவன் வேசித்தனம் குற்றத்தைப் புரிந்துள்ளார் என்று வலியுறுத்தப்படுகின்றது; ஆனால் இது அவள் மறுமணம் செய்துகொள்வதற்கு அவளை விடுவித்துவிடுகிறதில்லை என்று மற்றவர்கள் வலியுறுத்துகின்றனர்; ஏனெனில் (முறையே விவாகரத்துப்பண்ணியோ அல்லது இல்லாமலோ இருக்கும்) விவாகரத்தான ஸ்திரீயைத் திருமணம் பண்ணும் எவனும், வேசித்தனம் புரிந்தவனாய் இருப்பான் என்று இயேசு கூறியிருக்கின்றார். இது விஷயமாக எங்களுக்குக் கொஞ்சம் அதிகமான வெளிச்சத்தினைத் தயவாய்க் கொடுத்தருளவும்.
உங்கள், உண்மையுள்ள சகோ,___________________
[பதில்:- இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இக்காரியமானது பிரிவினையை அல்லது குழப்பத்தை உண்டுபண்ண அனுமதிப்பதில் சபையார் நிச்சயமாகவே தவறே செய்கின்றனர். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கூடுகையில் கலந்துகொள்வதற்குத் தடைப்பண்ண அவர்களுக்கு எந்த முகாந்தரமும் இல்லை. அதிகப்பட்சமாக சபையாரால், சம்மந்தப்பட்டவர்களுக்கு ஐக்கியத்தினை மறுப்பதும் மற்றும் சம்மந்தப்பட்டவர்களின் இல்லங்களுக்குச் செல்வதற்கு அல்லது சபையாரின் இல்லங்களில் அவர்களை வரவேற்பதற்கு மறுப்பதும் மற்றும் அச்சகோதரனை மூப்பர் அல்லது உதவிக்காரன் ஊழியத்திற்கு நியமிப்பதற்குச் சபையார் மறுப்பதும் கூடும். ஆனால் பொதுக்கூடுகைகளில் கலந்துகொள்ளும் சிலாக்கியங்களை அவர்களுக்கு மறுப்பது என்பது மிகவும் முரண்பாடான காரியமாய் இருக்கின்றது; ஏனெனில் எல்லா வகையான பாவங்களில் வாழும் அனைத்து வகையான ஜனங்களும் கூடுகைகளுக்கு அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றனர் மற்றும் இப்படியாக வருகையில் அவர்கள் பிரயோஜனமடைந்து, குணமடைவார்கள் என்று நாம் நம்புகின்றோம்.
இவ்விஷயத்தில் வேசித்தனமே விவாகரத்திற்கான அடிப்படையாக இருக்கின்றது என்றும், தவறு கணவனிடத்தில்தான் இருந்துள்ளது என்றும் ஒப்புக்கொள்ளப்படுகின்றபடியால், இவ்விஷயமானது “வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி” என்று நமது கர்த்தரினால் குறிப்பிடுகின்ற விதி விலக்கிற்குள்ளாகவே வந்துள்ளது. அன்றியும் ஒருவேளை இது உண்மையிலேயே பிரிதலுக்கான காரணமாய் இல்லாமல் இருப்பினும், முன்னாள் கணவன் மறுதிருமணம் செய்துள்ள காரியமானது, அவர் திருமண பந்தம் முறிக்கப்பட்டதாகக் கருதியுள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றது; ஆகையால் அவனது முதல் மனைவி, அதன் கடமைகளினின்று விடுதலைப்பண்ணப்பட்டுள்ளாள். இக்கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள சகோதரியானவள் அவள் பக்கத்தில் இந்த இரண்டு நிரூபணங்களையும் பெற்றிருக்கின்றாள் மற்றும் மறுமணம் செய்வது ஞானமான மற்றும் சரியான காரியமாய் இருக்குமென அவள் எண்ணும்பட்சத்தில், மறுமணம் செய்வதற்குரிய எல்லா உரிமையையும் உடையவளாய் இருக்கின்றாள்.
கணவன் மற்றும் மனைவியின் இடையிலான ஒரு பிரிவினையை மாத்திரமே நமது கர்த்தர் குறிப்பிட்டார் என்று எண்ணிக்கொள்ள முடியாது; ஏனெனில் ஒருவேளை அவிசுவாசி பிரிந்துபோனால், பிரிந்துபோகட்டும் – அதைத் துன்பமாகக் கருதாமல், அதை ஓர் ஆசீர்வாதமாய்க் கருதுங்கள் என்று பரிசுத்த பவுலடிகளார் ஆலோசனை கூறுகின்றார். கணவனோ அல்லது மனைவியோ இப்படிப் பிரிந்து போவது, விவாகரத்தாகுவதாகும் என்று அவர் கூறவில்லை. விவாகரத்து என்பது உண்மையான திருமண ஒப்பந்தத்தை முழுமையாய் முறித்துப் போடுவதாகும். திருமண பந்தத்தை மிகவும் அக்கறையற்ற விதத்தில் கையாளப்படுவதை இயேசு குறையாய்க் கூறி, கண்டனம்பண்ணினார். வேசித்தனத்தினால் மாத்திரமே தவிர மற்றப்படி திருமண ஒப்பந்தமானது முழுமையாய் முறிக்கப்பட முடியாது.
நம்முடைய நாட்களில் இக்காரியங்களானது நீதிமன்றங்களினால் நடத்தப்படுகின்றது. இதோடுகூட வேதமாணவர்கள் தேவவசனத்தினால் தங்களைச் சரிப்படுத்திக்கொள்கின்றனர். ஆண்டவரால் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே காரணம் காணப்படும் பட்சத்தில் மாத்திரமே தவிர, மற்றப்படி நீதிமன்றமானது விவாகரத்து அளிக்கும் காரியமானது, திருமண ஒப்பந்தத்திலிருந்து விடுதலையாக்குவதாக ஒரு வேதமாணவனால் கருதப்படக்கூடாது. ஆனால் வேசித்தனத்தின் காரணமான நீதிமன்ற விவாகரத்தானது அல்லது பிரிந்திருப்பவரின் இரண்டாம் திருமணம் காரணமான நீதிமன்ற விவாகரத்தானது மதிக்கப்பட வேண்டும்].