R2654 (page 195)
“நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.” (1 பேதுரு 3:8; 5:5,6)
அப்போஸ்தலர் இங்குச் சபையின் மூப்பர்களிடம், தேவனுடைய மந்தை யைப் பராமரிக்கும் விஷயத்தில் அவர்கள் கவனம் செலுத்தும்படிக்குப் புத்திக்கூறி, இப்படிப்பட்ட ஊழியம் புரிவதற்கு எது நெருக்கி ஏவும் செல்வாக்காகக் காணப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். அவருடைய அனுதாபம் அவர்கள் மேல் காணப்படுகின்றது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளத்தக்கதாக தானும் ஒரு மூப்பன் என்பதைச் சுட்டிக்காண்பிக்கின்றார்; பின்னர்ச் செல்வாக்குள்ள எந்த ஸ்தானத்திலும் காணப்படும் விழுந்துபோன மனுக்குலத்தின் சகல அங்கத்தினருக்கும் இயல்பாகக் காணப்படும் ஒரு தன்மைக்கு எதிராக – அதாவது தங்களுடைய ஸ்தானத்தைக் குறித்துத் தவறாய்ப் புரிந்துகொள்வதும் மற்றும் மந்தைக்குத் தங்களை வேலைக்காரர்கள் என்று எண்ணுவதற்குப் பதிலாக, தங்களைத் தேவனுடைய சுதந்தரத்தின் மீது இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக எண்ணிக்கொள்வதுமாகியவைகளுக்கு எதிராக அவர்களை எச்சரிக்கின்றார்.
சகல கிறிஸ்தவ பிரிவுகளிலும், சபையின் ஊழியக்காரர்களை மந்தையிலிருந்து வேறுபட்ட வகுப்பாராக, அதாவது தேவனிடமிருந்து அதிகாரம் பெற்றுக்கொண்ட ஒரு வகுப்பாராக மற்றும் சரீரத்தின் சகல அங்கங்களும் உட்படுத்தப்பட்ட அதே கட்டுப்பாடுகளுக்கு, உட்படாத வகுப்பாராகக் கருதும் நீண்டகாலமாக நிலவி வரும் வழக்கத்தினால், நம்முடைய நாட்களில் இவ்விதத்திற்கு நேரான மனப்பான்மையே அதிக அளவில் காணப்படுகின்றது. ஆனால் இது எவ்வளவு பெரிய தவறு! ஊழியக்காரன் ஆளுகிறவன் அல்ல என்றும், ஊழியக்காரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அப்போஸ்தலர் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றார். உண்மை சபையைப் பொறுத்தமட்டில், சபையின் தலையாகிய கர்த்தருக்கும், அவருடைய வார்த்தைகளுக்கும், அவருடைய வாய்க்கருவிகளாக இருக்கும்படிக்கு அவரால் விசேஷமாக தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய அப்போஸ்தலர்களின் வார்த்தைகளுக்கும்தான் அதிகாரம் உள்ளது.
இவர்கள் ஒரு விஷயமாக பேசுகையில், கிறிஸ்துவினுடைய சரீரத்திலுள்ள அனைவரும் செவிகொடுப்பதற்குக் கவனித்திருக்க வேண்டும். இவர்கள் ஒரு விஷயத்தில் அமைதலாய் இருக்கும் போது, ஒருவருக்கும் பேசுவதற்கு அதிகாரம் இல்லை. போதிப்பதற்கான (எக்காரியம் தொடர்பான நமது கர்த்தர் மற்றும் அப்போஸ்தலர்களுடைய அறிவுரையைச் சுட்டிக்காட்டுவதற்கான) விசேஷித்த திறமையின் காரணமாக, மந்தையைப் போஷிப்பதற்காகவும், மந்தைக்கு ஊழியம் புரிவதற்காகவும் உரிய ஸ்தானத்திற்கு மூப்பர் தெரிந்தெடுக்க வேண்டியிருப்பினும் மற்றும் இப்படியாக மூப்பர், இந்த விதத்தில் கிறிஸ்துவின் சரீரமாகிய அனைவரின் கவனத்தையும், வேதவாக்கியங்களின் தெய்வீக அதிகாரத்திற்குத் திருப்புவதன் மூலம் விசேஷித்த விதமாய் உதவிகரமாய் இருப்பினும், கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள எந்த ஓர் அங்கத்திற்கும் இதே சிலாக்கியம் உள்ளது – அதாவது அதிகாரம் செலுத்துவதாக இராமல், மாறாக வேதவாக்கியங்களுடைய அதிகாரத்திடம் சகல சகோதரருடைய கவனத்தைத் திருப்பும் இதே சிலாக்கியம் உள்ளது. மூப்பர்கள் சபையில் எவ்விதத்திலும் அதிகாரி ஸ்தானத்தை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, “மந்தைக்கு மாதிரிகளாக இருக்கும்படிக்கு மூப்பர்களுக்கு அப்போஸ்தலர் புத்திமதியைக் கூறுகின்றார். சாந்தத்திற்கும், பொறுமைக்கும், சகோதர சிநேகத்திற்கும், இணக்கத்திற்கும் மூப்பர்கள் மாதிரியாக இருக்க வேண்டும்; இதினிமித்தம் சகோதரர்கள் அதிகமாக இந்த மூப்பர்களைப் பார்த்துப் படிக்கும்போது, மந்தையின் மத்தியில் கர்த்தருடைய ஆவி அதிகமாகக் காணப்படும் மற்றும் ஆவியின் கனிகளும், கிருபைகளும்கூட வெளிப்படும். மாறாக ஒரு சிறு கூட்டமான கர்த்தருடைய ஜனங்களுக்கான மூப்பர் (அ) வழிநடத்துபவர் தனது உரிமைகளை வலியுறுத்துபவராகவோ / பிடிவாதமானவராகவோ, கர்வமிக்கவராகவோ, நடத்தையிலும், தொனியிலும் அல்லது பார்வையிலும் அதிகார தோரணை உள்ளவராகவோ இருப்பாரானால் இதன் விளைவாக இப்படிப்பட்ட மூப்பருடைய செல்வாக்கின் கீழ்க் காணப்படுபவர்கள் மத்தியில் யார் பெரியவன் என்பதற்கான போராட்டங்களும், போட்டிமனப்பான்மைகளும், பேராசைகளும், சண்டைகளுமே ஏற்படும்.
கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில், மூப்பர் ஸ்தானத்தில் காணப்படும் ஒருவர், ஜனங்களின் எண்ணிக்கை எவ்வளவு கொஞ்சமாக இருப்பினும், அவர் – கர்த்தருக்கும், மந்தைக்கும், பொறுப்புகளையும் மற்றும் தனக்கு நெருக்கங்களையும் உள்ளடக்கின ஸ்தானத்தில் காணப்படுகின்றார். சபையில் மூப்பர்கள் (அ) வழிநடத்துபவர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் முடிந்தமட்டும் இந்த ஊழியத்திற்கான சிலாக்கியத்தின் மூலம் தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திக்கொள்ளாதவர்களைத் தேர்ந்தெடுப்பதில், அதாவது தாழ்மையிலும், கர்த்தருடைய ஆவியின் சகல கிருபைகளிலும் மந்தைக்கு உண்மையில் மாதிரிகளாக இருக்கக்கூடியவர்களை இந்த ஸ்தானத்திற்கெனத் தேர்ந்தெடுப்பதில் கர்த்தருடைய ஜனங்கள் அடங்கிய ஒவ்வொரு கூட்டத்தாரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். சபையில் ஊழியம் புரிவதற்கான இந்த ஸ்தானத்தை வகிப்பவர்களுக்குரிய விசேஷமான சோதனை குறித்துதான், “என் சகோதரரே, அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து, [R2654 : page 196] உங்களில் அநேகர் போ தகராகாதிருப்பீர்களாக என்று அப்போஸ்தலர்; கூறுகின்றார் என்பதாகத் தெரிகின்றது (யாக்கோபு 3:1).
“மூப்பர் என்ற வார்த்தை, “வயதில் முதிர்ந்தவர் என்ற அர்த்தத்தைக் கொடுக்கக்கூடியதாக இருப்பினும், கர்த்தருடைய சகோதரர் மத்தியில், மாம்சீக வயது கணக்கு மாத்திரம் கருத்தில் எடுத்துகொள்ளப்படக் கூடாது; கர்த்தருடைய குடும்பத்தில், சில சமயம் நாம் நரை முடியுள்ள “குழந்தை போன்றவர்களைக் காண்கின்றோம். அதேசமயம் ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டது முதல் கடந்துபோன வருடங்களின் கணக்குப்படியும் ஒருவரை மூப்பர் என நாம் எடுத்துக்கொள்ள முடியாது, ஏனெனில் சிலர் வேகமாக வளர்ந்து, விரைவாக (ஆவியில்) முதிர்ச்சியடைந்து விடுகின்றனர்; சத்தியத்தை ஏற்றுக்கொண்ட சிலரோ இவ்வுலகத்தின் கவலைகள் மற்றும் ஐசுவரியத்தின் மயக்கமாகிய, “முட்களை, சத்திய வார்த்தையை நெருக்கிப்போடும்படிக்கு அனுமதித்து விடுகின்றனர், இதினிமித்தம் இப்படிப்பட்டவர்கள் “குழந்தைகள் நிலையிலிருந்து ஒருபோதும் தாண்டுவதேயில்லை, அதாவது ஆவியின் முதிர்ந்த கனிகளை ஒருபோதும் கொடுப்பதில்லை.
அதே சமயம் ஒருவர் தெய்வீகத் திட்டம் தொடர்பான அறிவைப் பெற்றிருக்கும் அளவிற்கு ஏற்ப, அவரை மூப்பர் என்றும் நாம் எண்ணிக் கொள்ள முடியாது, ஏனெனில் சிலர் அதிகமான அறிவைப் பெற்றுக்கொண்டிருந்தும், கர்த்தருடைய கணிப்பின் கண்ணோட்டத்தில் “சத்தமிடுகிற வெண்கலம் போன்று காணப்படவும் வாய்ப்புண்டு என அப்போஸ்தலர் நமக்கு உறுதியளிக்கின்றார். ஆகவே மூப்பர் ஒருவர், “போதகசமர்த்தனாக இருப்பதற்கென ஓரளவிற்கு தெய்வீகத் திட்டம் குறித்த அறிவை அடைந்திருக்க வேண்டியதாய் இருப்பினும், அவர் மூப்பர் ஊழியத்திற்கான தகுதியை உடையவர் என்பதற்கான உண்மையான சான்று, அவருடைய அறிவின் அடிப்படையில் மாத்திரம் கணிக்கப்படாமல், இன்னும் ஆவியின் கிருபையில் உள்ள அவருடைய வளர்ச்சியின் அடிப்படையிலும் காணப்பட வேண்டும். தெய்வீகத் திட்டம் குறித்த தெளிவான அறிவு பெற்றவர்களாகவும், போதகசமர்த்தம் உள்ளவர்களாகவும், இன்னுமாக கிருபையில் வளர்ந்துள்ளார்கள் என்பதற்கான துல்லியமான சாட்சியை வெளிப்படுத்துகிறவர்களாகவும், அன்றாட ஜீவியத்தில் கர்த்தருடைய ஆவியின் கனிகளை, போதுமான அளவு முதிர்ச்சியுடன் கொடுப்பவர்களாகவும் இருப்பவர்கள், மூப்பர்களுக்கான [R2655 : page 196] தகுதியுடையவர்களாகக் கருதப்படலாம் மற்றும் இப்படிப் பட்டவர்களை, இவர்களுடைய மாம்சீக வயது என்னவாக இருந்தாலும் கூட, சகோதர சகோதரிகளால் மூப்பர் ஊழியத்திற்குத் தெரிந்துகொள்ளலாம்.
மாம்சத்தின்படி பேதுருவும், அப்போஸ்தலர்களில் அநேகரும் நம்முடைய கர்த்தரைக் காட்டிலும் வயதில் மூத்தவராக இருந்தாலும்கூடத் தேவனுடைய குடும்பத்திற்குள்ளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அனைவருக்கும் ஆவியின்படி நமது கர்த்தரே மூத்த சகோதரனாக இருக்கின்றார். மாம்சத்தில் தீமோத்தேயுவும், தீத்துவும் இளைஞர்களாக, அதாவது வயதில் சிறியவர்களாக இருந்தார்கள், ஆகவே இவர்களில் ஒருவருக்கு, “உன் இளமையைக்குறித்து அசட்டைப் பண்ணாதபடிக்கு ஜாக்கிரதையாயிரு என்று அப்போஸ்தலர் எழுதுவது அவசியமாய் இருந்தது. எனினும் இந்த இளைஞர்களை அப்போஸ்தலர் சபையின் மூப்பர்களாக அங்கீகரிக்கின்றார். இவர்கள் கொண்டிருந்த ஆவிக்குரிய வளர்ச்சியின் காரணமாகவும், தெய்வீகத் திட்டம் குறித்துக்கொண்டிருந்த அறிவின் காரணமாகவும், போதக சமர்த்தர்களாக இருந்த காரணமாகவும், தேவனுடைய மந்தையைப் போஷிப்பதற்கும், அதன் மேல் கண்காணிகளாகவும் இருப்பதற்குத் தகுதியுடையவர்களாகக் காணப்பட்டார்கள். ஆனால் இவர்கள் மந்தையின் மீது ஆளுகை செய்கிறவர்களாகவும், அதிகாரிகளாகவும், ஆண்டவன்மார்களாகவும் இருக்கவில்லை மற்றும் இவர்களுக்கு எவ்விதமான அதிகாரமும் அளிக்கப்படவுமில்லை, மாறாக மாபெரும் மேய்ப்பன் மற்றும் அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட பன்னிரெண்டு உதவியாளர்களின் சத்தத்திடம் மந்தையின் கவனத்தைத் திருப்புவதும் மற்றும் அவர்களைத் தெய்வீகச் சத்தியத்தின் பசுமையான புல்களிடமும், அமர்ந்த தண்ணீர்களிடமும் வழிநடத்துவதுமாகிய சிலாக்கியத்தை மாத்திரமே பெற்றிருந்தார்கள்.
மந்தையில் இப்படியாக மிகுந்த வளர்ச்சியும், அதிகமான தகுதியும் கொண்டிருப்பவர்களுக்குத் தன்னடக்கம் மற்றும் தாழ்மை குறித்து விசேஷமாகக் கட்டளையிட்ட பிற்பாடு, கர்த்தருடைய மந்தையிலுள்ள ஒவ்வொருவரும் அதிகாரி (அ) ஆளுகிறவன் (அ) எஜமான் என்றவிதத்தில் வழிநடத்துனனாக வேண்டுமென நாடுவதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் கீழ்ப்படிய நாட வேண்டுமென அப்போஸ்தலர் வலியுறுத்துகின்றார், அதாவது மந்தையில் உள்ளவர்களிலே மிகவும் எளியவராய் இருப்பவருடைய கருத்துக்களை மகிழ்ச்சியுடன் கேட்பதற்கும் மற்றும் தனது கணிப்பும், மனசாட்சியும் அனுமதிக்கும் பட்சத்தில் சொந்த விருப்பங்களை விட்டுக்கொடுத்துவிட விருப்பம் கொள்வதற்கும் என அப்போஸ்தலர் வலியுறுத்துகின்றார். இப்படியாக இந்த ஆவியின் கீழ்ச் செயல்படும் சபையானது, சண்டைகள் இல்லாது காணப்படும், ஏனெனில் ஒவ்வொருவரும் கர்த்தருடைய காரணத்தின் நலன் தொடர்பான விஷயத்தில் மிகவும் அக்கறை கொண்டவர்களாகக் காணப்படுவார்கள் மற்றும் மற்றவர்களுடைய விருப்பங்களுக்குப் பணிந்துபோக மிகவும் விரும்புவார்கள், மேலும் எந்த ஒரு காரியத்திலும் பெரும்பாமையானவர்களின் விருப்பத்தை எடுத்துக்கொள்வதிலும் திருப்திக் கொள்ளாமல், மாறாக அனைவருமே, முடிந்தமட்டும் கிட்டத்தட்ட ஏகமனதாய் ஒப்புதல் அளிக்கத்தக்கதான மாற்றம் செய்யப்பட்ட முடிவை அடையவே நாடுபவர்களாய் இருப்பார்கள்.
மூப்பர்களின் சார்பிலும், மற்ற அனைவரின் சார்பிலும் இப்படியான சரியான நடத்தை காணப்படுவதற்கு அவசியமான பண்பு தாழ்மையென அப்போஸ்தலர் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றார். “மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள் என்ற அவரது புத்திமதி எவ்வளவு அருமையாய் உள்ளது. “மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள் (1 பேதுரு 5:5; திருவிவிலியம்); அதாவது அனைத்துக் குணலட்சணத்தின் அலங்கரிப்பின் மீது, அதாவது அனைத்து மற்றக் குணலட்சணங்களை மூடினவிதத்தில், பெருமைக்கு எதிரான பண்பாகிய இந்த மனத்தாழ்மையின் வஸ்திரம் காணப்பட வேண்டும் என்பதே வசனத்தின் கருத்தாகும்.
அப்போஸ்தலன் தன்னுடைய வாதத்தை உறுதிபடுத்தும்படியாக, நமது கர்த்தர் தம்முடைய மந்தையையும், மற்றவர்கள் அனைவரையும் கையாளுவதற்குப் பயன்படுத்தும் கொள்கையைக் குறித்து நமக்கு நினைப்பூட்டுகின்றார், அதாவது கர்த்தர் பெருமையை அங்கீகரிப்பதில்லை என்றும், பெருமையினால் இயக்கப்படுபவர்கள் கர்த்தரினால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்குப் பதிலாக, ஐக்கியத்திற்குள்ளாகக் காணப்படுவதற்குப் பதிலாக, வழிநடத்தப்படுவதற்குப் பதிலாக, ஆசீர்வதிக்கப்படுவதற்குப் பதிலாக, கர்த்தரினால் எதிர்க்கப்பட்டு, அவரிடமிருந்து தள்ளிவிடப்படுவார்கள் என்றும் உள்ள நமது கர்த்தருடைய கொள்கையை நினைப் பூட்டுகின்றார். இப்படியாகக் கர்த்தரினால் எதிர்க்கப்படுவதினால், இவர்கள் பெருமை மற்றும் புகழார்வத்தின் ஆவியினுடைய செல்வாக்கின் கீழ்க்காணப்படும் காரணமாக இவர்களுடைய மனப்போக்கு, சத்தியத்திற்கும், எவ்விதமான ஆவியின் கனிகள் மற்றும் கிருபைகளுக்கு நேராகக் காணப்படாமல், மாறாக இவைகளிடமிருந்து வெகுத்தொலைவிலேயே காணப்படுகின்றது. “பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கின்றார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கின்றார். ஆகவே அன்பான சகோதரர்களே வாருங்கள், கர்த்தர் மிகவும் விரும்பும் மற்றும் அங்கீகரிக்கும் மற்றும் பலன் கொடுப்பதாக வாக்களித்துள்ள இந்தத் தாழ்மையை விருத்திச் செய்வோமாக என அப்போஸ்தலர் கூறுகின்றார், “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் (1 பேதுரு 5:6).
பொதுவாய் இருக்கும் மனுக்குலத்தையும் மற்றும் அதன் காரியங்களையும் கையில் எடுத்து குழப்பங்களைச் சரிபடுத்தத்தக்கதாக, கர்த்தருடைய வல்லமையுள்ள கரம் இதுவரையிலும் நீட்டப்படவில்லை மாறாக கர்த்தருடைய வல்லமையுள்ள கரம் இன்று அவருடைய மந்தையாகிய, அவருடைய சபையின் மீது நீட்டப்பட்டுள்ளது. நாம், “அவருடைய ஆடுகளாய் இருக்கும்படிக்கு அவர் நம்மை அழைத்தார் மற்றும் நாமும் அவருடைய அழைப்புக்கு இணங்கி, அவருடைய பராமரிப்பின் கீழ், வழிக்காட்டுவதற்கு, வழிநடத்துவதற்கு உரிய அவருடைய வல்லமையுள்ள கரங்களின் கீழ் – நாம் “ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைபவர்களாகவும், “நாம் தேவனுடைய சுதந்தரராகவும், கிறிஸ்துவுக்கு உடன்சுதந்தரராகவும், கிறிஸ்துவுடன் பாடுபட்டு, அவருடனேகூட மகிமை அடைகின்றவர்களாகவும் இறுதியில் ஆகுவதற்கும் ஏதுவாக நம்மை ஒப்புக்கொடுத்துள்ளோம் (ரோமர் 8:17; கொலோசெயர் 1:12). [R2655 : page 197]
இப்படியாக நாம் தேவனுடைய இந்த வல்லமையுள்ள கரங்களின் கீழ் இருக்கும்போது, அதுவும் நம்முடைய சொந்த விருப்பத்திற்கு ஏற்றாற்போலவே தேவனுடைய இந்த வல்லமையுள்ள கரங்களின் கீழ் இருக்கும்போது, நாம் எப்படிச் செயல்பட வேண்டும்? நாம் நம்மை அவருடைய சித்தத்திற்கென்று ஒப்புக் கொடுத்துவிட்டு, “அவருடைய தயவுள்ள சித்தத்தின்படி, நம்மில் விருப்பத்தையும், செய்கையையும் உண்டு பண்ணத்தக்கதாகவும் , இறுதியில் நாம் உயர்த்தப்படும் படியாகவும் அவரை அனுமதிப்போமா அல்லது கர்த்தருடைய வல்லமையையும், அறிவுரை கூறும் அவருடைய வார்த்தைகளையும் எதிர்த்து நின்று, தேவனுடைய ஆட்டுக்குட்டியானவரிடத்தில் நமக்கு முன் வைக்கப்பட்ட சாந்தத்தையும், தாழ்மையையும் எதிர்த்து நின்று, உலகத்திலோ (அ) சபையிலோ நம்மை நாமே குறிப்பிடத்தக்கவராக உயர்த்த நாடுவோமா? இல்லை, தெய்வீக ஒழுங்கிற்கு எதிராக கிரியை புரிய முயற்சிப்பது என்பது அறிவீனமான காரியமாக இருக்கும் என்பதை நினைவில்கொள்வோமாக. நாம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வெற்றி அடைந்துள்ளது போன்று தோன்றலாம் மற்றும் இப்படியாக எதிர்த்து நிற்பதன் காரணமாக, தவறான ஆவியினிமித்தம் நாமும், மற்றவர்களும் தேவனிடமிருந்து பிரிந்து செல்பவர்களாகவே இருப்போம்; மேலும் தாழ்மையுள்ளவர்களுக்கு மாத்திரமே தேவன் அளிப்பதாக வாக்களித்துள்ள இப்போதுள்ள ஆவியில் ஐக்கியம் தொடர்பான விஷயத்திலும், பிற்பாடு மகிமையில் ஐக்கியம் தொடர்பான விஷயத்திலும் உள்ள தேவதயவுகளை முடிவில், முற்றிலும் இழந்து விடுகிறவர்களாகக் காணப்படுவோம். தகுதியான தூண்டுதல்கள் அனைத்துமே நமக்குக் கூறுவதாவது: உங்களைத் தாழ்த்துங்கள்; சிறு பிள்ளைகள் போலாகுங்கள்;சுயத்தை மறந்து, சுயநலமான ஆசைகள் அற்றவர்களாக அதிகமாய் மாறுங்கள்; கர்த்தருக்கு ஊழியம் புரிவதற்கும், அவருடைய மந்தைக்கு ஊழியம் புரிவதற்கும், அவருடைய நோக்கத்திற்காக, சத்தியத்திற்காக ஊழியம் புரிவதற்கும் உரிய வாஞ்சையினால் மாத்திரமே இயக்கப்படுகின்றவர்களாய் இருங்கள்; சுயத்தை முற்றிலுமாக மறந்துவிடுங்கள் என்பதேயாகும்.
அநேகமாக இதன் காரணமாக, தற்கால ஜீவியத்தில் ஊழியம் புரிவதற்கான நமது வாய்ப்புகளையும், பொறுப்புகளையும் கர்த்தர் அதிகமாக்கலாம் மற்றும் ஒருவேளை அவர் அதிகமாக்காமலும் இருக்கலாம், இது ஒரு பொருட்டல்ல. தற்கால ஜீவியத்திற்கானவைகளுக்காக நாம் நாடுகின்றவர்களாக, தேடுகின்றவர்களாக இல்லை, மாறாக கர்த்தரை அன்புகூருகிறவர்களுக்கு – அதாவது அவருடைய வார்த்தைக்குச் செவிசாய்த்து, அவருடைய பார்வைக்குப் பிரியமாய் இருக்கும் குணலட்சணங்களை வளர்க்க நாடி, தேவனுடைய அருமையான குமாரனுடைய சாயலுக்கு ஒப்பான சாயலை அடைய அதிகமாய் நாடும் அளவுக்கு அவரை மிகவும் அன்புகூருகின்றவர்களுக்கு அவர் வாக்களித்துள்ள மகிமை, கனம் மற்றும் அழியாமைக்கே நாம் நாடி, தேடுகின்றவர்களாக இருக்கின்றோம்.
“உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள் என்றும் அப்போஸ்தலர் கூறுகின்றார். தேவனுடைய உண்மையான பரிசுத்தவான்கள் அனைவரும் முழுமையாய்க் கவலைக் கொண்டவர்கள் ஆவார்கள். அவர்கள் கர்த்தருடைய வேலையில் அக்கறை கொண்டுள்ளனர்; இதைக்குறித்த கவலை அவர்களுக்கு இருக்கின்றது. அவர்களால் சீயோனின் நலனுக்கடுத்த விஷயங்களில் கவலையற்றவர்களாக இருக்கமுடியாது. அவர்களுடைய இருதயங்களும், கவலைகளும், நேசங்களும், மதப்பிரிவினர் வட்டாரத்துக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், பரலோகத்தில் பெயர் எழுதப்பட்டவர்களாகிய ஆவிக்குரிய சீயோனின் உண்மையான ஜனங்கள் மீதே வைக்கப்பட வேண்டும். ஆகவே சபையிலுள்ள ஒவ்வொரு மூப்பரும், “கிறிஸ்துவின் மந்தையைப் போஷிக்கும் வேலைக்கென, தான் நியமிக்கப்பட்டுள்ள மந்தை தொடர்பான விஷயத்தில், இத்தகைய கவலையைப் பெற்றிருக்க வேண்டும்… மந்தையைப் பிரித்துவிடக்கூடாது, மந்தையைப் பயமுறுத்தக் கூடாது, மந்தையை அடிக்கக்கூடாது, மந்தையின் மீது இறுமாப்பாய் ஆளுகை செலுத்தக்கூடாது, மாறாக மந்தையைப் போஷிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மூப்பர்களிடம் (மற்றும் அனைத்து மூப்பர்களிடமும் அல்லது சபையில் வளர்ச்சி அடைந்துள்ளவர்களிடம்) காணப்பட வேண்டிய இந்தக் கவலை சரியானதாக இருப்பினும், இது ஆபத்தாகக்கூட மாறிவிடலாம். மூப்பர்கள் தனித்தனியாக அல்லது சேர்ந்து, பரிசுத்த ஆவிக்குள்ளான தங்களது சொந்த சமாதானத்தையும், சந்தோஷத்தையும் இழந்துபோகுமளவுக்கு மந்தையைக் குறித்து மிகவும் நடுநடுங்கி கவலையுடன் காணப்படுகின்றனர்; மேலும் இதனால் மந்தையின் நலனுக்கு அவசியமென இவர்கள் தங்களுடைய மிஞ்சின வைராக்கியத்துடனான கணிப்பின்படி காரியங்களைக் கருதி, பல்வேறு சரியற்ற நடவடிக்கை எடுக்கவும் வழிநடத்தப்படுகின்றனர். கடந்த காலங்களில் அநேகர் இத்தகைய கவலையின் தாக்கத்தினால், இந்த (அ) அந்த (அ) மற்றக் காரியங்களில் மந்தையின் சுயாதீனம் பாதகமாக இருக்கும் என்ற அச்சத்தில், மந்தையின் சுயாதீனத்தை எடுத்துப்போட்டுவிடும் பல்வேறு வழிகளுக்குள் நடத்தப்பட்டுள்ளனர். இப்படியான கவலையின் ஆவியும், மிதமிஞ்சின கவலையின் ஆவியும் கடந்த காலங்களில் வேதவாக்கியங்களுக்கு எதிராகவும், கிறிஸ்து தம்முடைய ஜனங்களை விடுவித்த சுயாதீனத்திற்கு எதிராகவும் கர்த்தருடைய மந்தை மீது விதிக்கப்பட்ட பல்வேறு விசுவாச பிரமாணங்களிலும், கட்டுப்பாடுகளிலும் மற்றும் கட்டளைகளிலும் தெளிவாய்த் தெரிகின்றன. கவலைப்படுவதற்கான நோக்கங்கள் சில விதங்களில் சந்தேகத்திற்கு இடமின்றி நல்லதுதான்; சில மூப்பர்களிடம், சில வளர்ச்சியடைந்துள்ள ஆடுகளிடம் உள்ள பிரச்சனை என்னவெனில், இவர்கள் மந்தையின் நலனுக்கடுத்த விஷயங்களில் கவலை/அக்கறை கொள்ளும்போது, இவர்கள் தாங்கள் மந்தையின் ஊழியர்கள் மாத்திரமே என்பதையும், மந்தையின் எவ்விஷயத்திலும் எவ்விதமான சட்டங்களை அல்லது கட்டுப்பாடுகளை ஏற்படுத்திட அதிகாரம் இல்லாதவர்கள் என்பதையும் மறந்துவிடுகின்றனர். கர்த்தர் இன்னமும் தமது மந்தைக்கு நல்ல மேய்ப்பராக இருக்கின்றார் என்பதையும், மந்தையின் மீதான தமது பராமரிப்பையும், தமது அதிகாரத்தையும் அவர் யாருக்கும் கொடுக்கவில்லை என்பதையும், மந்தையை இறுமாப்பாய் ஆளுவதற்கு அல்லது மந்தைக்குத் தேவையான அனைத்துச் சட்டங்களையும், ஒழுங்குகளையும் அவரே ஏற்படுத்தியுள்ளபடியால், மந்தைக்கு (இவர்கள்) எவ்விதமான சட்டங்களை ஏற்படுத்துவதற்கு அவர் அனுமதி வழங்கவில்லை என்பதையும், தாம் மந்தைக்கு அளித்திட்ட சுயாதீனத்தில் தமது மந்தை முழுமையாகக் காணப்பட வேண்டும் என விரும்புகின்றார் என்பதையும் இவர்கள் மறந்துவிட்டனர்.
சீயோனின் நலன் கருதின இத்தகைய அங்கீகரிக்கப்படாத மிதமிஞ்சின கவலைகள் அனைத்திற்குமான மருந்தாக, அப்போஸ்தலர், “(மந்தையின் மேய்ப்பனாகிய) அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் (அனைவரின்) கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள் என்று கூறுகின்றார். ஒவ்வொரு ஆடும் மேய்ப்பனின் வல்லமையுள்ள கரம் (வல்லமை) இன்னமும், தம்முடைய ஜனங்கள் மத்தியிலேயே காணப்படுகின்றது என்பதையும், அவருடைய பராமரிப்பு இருப்பதினால் நாம் நம்மையே கவலையினால் அதிக பாரபளுவுக்குள் ஆக்கிக்கொள்ள தேவையில்லை மற்றும் நாம் கற்பனை பண்ணிக்கொள்ளும் புதிய நெருக்கடிகளைச் சந்திக்கத்தக்கதாக அவருடைய திட்டங்களிலும், ஏற்பாடுகளிலும் நாம் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என எண்ணவேண்டியதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இப்படியாக மிதமிஞ்சின கவலைகள், பயத்தை ஏற்படுத்துகின்றது மற்றும் பயமானது, மேய்ப்பனிடத்திலான விசுவாசக் குறைச்சலையும், நம்பிக்கைக் குறைவையும் சுட்டிக்காட்டுகின்றது மற்றும் இந்தப் பயம், கர்த்தருடைய ஜனங்களைத் தவறான பாதையில் வழிநடத்துவதற்கு மாபெரும் எதிராளியானவனால் பயன்படுத்தப்படும் அவனுடைய மிகுந்த பலமிக்க ஆயுதங்களில் ஒன்றாகும்.
ஆகவே நாம் அனைவரும் (வளர்ச்சியடைந்துள்ள அனைவரும் அல்லது மூப்பர் அனைவரும்) மந்தைக்காகக் கவலைக்கொள்வோமாக. ஆம், ஆழமான கவலைக்கொள்வோமாக. ஆனால், இந்தக் கவலையின் பளுவைக் கர்த்தர் மேல் வைத்துவிடுவோமாக மற்றும் இப்பொழுது தம்முடைய வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ள “யுகங்களைக் குறித்த திட்டம் என்னும் மிகுந்த பிரமாண்டமான மற்றும் மகிமையான திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டுவருகிறவர், அனைத்துச் சந்தர்ப்பங்களுக்கும், அனைத்துச் சூழ்நிலைகளுக்கும், அனைத்துக் காரியங்களுக்கும் முழு ஏற்பாடுகள் பண்ணியுள்ளார் என நமது விசுவாசம் அவரை நம்பக்கடவது மற்றும் அவருடைய வார்த்தைகளுக்கு இசைவாக நாம் அவருடன் ஒத்துழைப்பதற்கு ஆயத்தமாகக் காணப்படுவோமாக. நாம் அனுப்பப்படாத இடத்திற்கு நாம் ஓடவும் கூடாது, நமது கர்த்தருடைய ஸ்தானத்தை எவ்விதத்திலும் நாம் எடுக்கக்கூடாது, கர்த்தருடைய வேலையைச் செய்ய நாம் முயற்சிக்கவும் கூடாது. தாழ்மையான மனம் கொண்டவர்கள் மாத்திரமே தற்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ, நமது கர்த்தருடைய கரங்களிலிருந்து ஏதேனும் நித்திய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும், ஏனெனில் பெருமையுள்ளவர்களுக்குக் கர்த்தர் எதிர்த்து நிற்கின்றார் மற்றும் தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கின்றார் என்று பார்க்கின்றோம்.