R3638 (page 295)
தானியேல் 6:10-23
பொய்யான புகழ்ச்சியும், வீண் புகழ்ச்சியும், கர்த்தருடைய ஜனங்களுக்குத் தீங்குபண்ணுவதற்கான எதிராளியானவனுடைய கருவிகளாய்க் காணப்பட்டிருக்கின்றன மற்றும் அநேகந்தரம், தீங்கும் விளைவித்துள்ளது மற்றும் இந்த உண்மையினை அடையாளம் கண்டுகொள்பவர்கள் யாவரும் விசேஷமாய் ஜாக்கிரதையாய்க் காணப்பட வேண்டும். உண்மைதான் கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களில் எவருமே தரியு இராஜா போன்று அதிகாரம் அல்லது கீர்த்தியின் உப்பரிகையில் வைக்கப்படுகிறதுமில்லை, சொல்லர்த்தமாய்த் தொழுதுகொள்ளப்படுவதற்கும் வாய்ப்புமில்லை எனினும் சிறு உலகங்கள், சிறு சாம்ராஜ்யங்கள், அதாவது அதே கொள்கைகள் ஏறத்தாழ செயல்படுத்தப்படுகின்றதான அறிமுகமான சிறுவட்டாரங்கள் காணப்படவே செய்கின்றன. கர்த்தருடைய ஜனங்கள் அடங்கின ஒவ்வொரு சிறு கூட்டங்களிலும், தாலந்துகள் காரணமாகவோ அல்லது வேறு தேவ செய்கையினால் ஏற்பட்டச் சந்தர்ப்பங்கள் காரணமாகவோ கூட்டத்தாருடைய அன்பிலும், மதிப்பிலும் முதன்மையாய்க் காணப்படுகிற ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் இருப்பார்கள் மற்றும் இது நியாயமானது மாத்திரமல்லாமல், நீதியானதும்கூட என்று கர்த்தருடைய வசனமானது சுட்டிக்காட்டுகின்றது. அவர்கள் உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாய் இருப்பார்களானால், அவர்களது ஊழியத்தின் நிமித்தமாக அவர்கள் அன்புகூரப்பட வேண்டும் மற்றும் கனப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அவர்கள் இன்னமும் சகோதரர்கள்தான் என்றும், கர்த்தருக்கு மாத்திரம் உரியதான கனமும், மரியாதையும் எவ்விதத்திலும் அவர்களுக்குக் கொடுக்கப்படக்கூடாது என்றும் நினைவில்கொள்ளப்பட வேண்டும். தேவனானவர் எல்லா விதத்திலும் பிரதானமானவராகவும், தொழுதுகொள்ளுவதற்குப் பாத்திரமான ஒரே ஒருவராகவும் இருக்கின்றார் என்ற இந்தக் கொள்கையில், எந்தச் சபை அல்லது தேசக்கூட்டமைப்பினாலும் தலையிட முடியாது. சபையிலுள்ள சகோதரர்களும், சகோதரிகளும் உண்மையுள்ள வழிநடத்துனர்களை மிகவும் உயர்வாய் எண்ணுகையில், தங்களால் கர்த்தருடைய மற்றும் அவரது மந்தையினுடைய ஊழியக்காரர்களென ஒப்புக்கொள்ள முடிபவர்களை முகஸ்துதி அல்லது தற்பெருமைக்கொள்ளச் செய்து, அல்லது எவ்விதத்திலாகிலும் இறுமாப்படையச் செய்து, இப்படியாய் அவர்களைச் சீரழித்துப் போடாதபடிக்குப் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுபோலவே தேவனுடைய குடும்பத்தில் காணப்படும் ஒவ்வொரு வழிநடத்துனனும், பெருமை, பேராசை மற்றும் இச்சையினுடைய நயவஞ்சகமான தாக்கங்களுக்கு எதிராகவும் மற்றும் சத்தியத்தின் நிமித்தமும், அதுபற்றின அறிவின் நிமித்தமும், அதை மற்றவர்களுக்கு முன்வைத்திடுவதற்கான ஏதோ சில திறமைகள் நிமித்தமும், தேவனுக்குச் சேரவேண்டிய கனத்தினைத் தனக்கென ஏற்றுக்கொள்ளும் காரியத்திற்கு எதிராகவும் விழிப்பாய் இருந்திட வேண்டும். தாழ்மை என்பது சந்தேகத்திற் கிடமின்றி நமக்கான படிப்பினைகளில் மிகவும் முக்கியமானதொன்றாய் இருக்கின்றது – இதை எந்த அளவிலாகிலும் புறக்கணிப்பவர்கள், நிச்சயமாக இதன் காரணமாக துன்பத்திற்குள்ளாவார்கள்.
ஜெபத்திற்கான ஒழுங்கு மற்றும் அவசியம் குறித்தும் நாம் பார்க்கலாம். கிறிஸ்துவின் பின்னடியார்கள் என்று தங்களைக்குறித்து அறிக்கைப்பண்ணுகின்ற சிலர் – முழு ஜீவியமே ஜெபமாக இருக்க வேண்டும் என்றும், தொழுதுகொள்ளும் போதும், ஸ்தோத்திரிக்கும்போதும், கர்த்தருக்கு முன்பாக முழங்கால்படியிடும் ஒழுங்குமுறை கடைப்பிடிக்கப்படக்கூடாது என்றுமுள்ள – ஒழுங்கில்லாத ஜெபத்தினை வலியுறுத்துவது குறித்து அவ்வப்போது கேட்கையில் நாங்கள் ஆச்சரியமடைகின்றோம். இத்தகைய புதுக்கருத்துக்களானது எங்களுக்கு அதிர்ச்சியுண்டாக்குகின்றது – இக்கருத்துக்களின் காரணக்காரியமானது, புரிந்துகொள்ள முடியாதவைகளாகக் காணப்படுகின்றன. உண்மைதான் நாம் இடைவிடாமல் ஜெபம்பண்ணிட வேண்டும். கர்த்தருக்காகவும், அவரது காரணங்களுக்காகவும் நம்முடைய முழு ஜீவியமே மிகவும் அர்ப்பணிக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அவரது காருண்யத்தினைக் குறித்த நன்றியுணர்வால் நம்முடைய மனங்களானது மிகவும் நிரம்பிக் காணப்பட வேண்டும் மற்றும் அவரிடத்திலான நம்முடைய விசுவாசமானது, மிகவும் உறுதியாகவும், மிகவும் பிரகாசமாகவும் காணப்பட வேண்டும் – இப்படி இருந்தால் ஒவ்வொரு காரியத்திலும் மனதில் அவர் சித்தத்தினையே எப்போதும் நாம் பெற்றிருப்போம் மற்றும் இப்படியாய்த் தொடர்ச்சியாக இருதயத்தில் ஜெப சிந்தையுடன் காணப்படுவோம்;. ஆனாலும் இந்த இருதய நிலையினை – மிகவும் குறிப்பான மற்றும் ஒழுங்கான விதத்தில் ஒருவேளை விரும்பும்பட்சத்தில் முழங்காற்படியிட்டு மற்றும் கூடுமானால் சிலசமயங்களில் தனிமையிலாகிலும் கர்த்தரிடம் செல்லாமல், எந்தக் கிறிஸ்தவனாலும் தக்கவைத்திட முடியாது – “உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு.”
இது குடும்ப ஜெபங்கள் அல்லது கர்த்தருடைய குடும்ப வட்டாரமாகிய சபையில் ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் பற்றின சிந்தனைக்குத் தடைவிதிக்கிறதில்லை. நமது கர்த்தர் இதற்குத் தமது ஒப்புதலைத் தெரிவிக்கும் வண்ணமாக, அவர் தனித்து ஜெபம்பண்ணத்தக்கதாக தனிமையில் மாத்திரமல்லாமல், சில சமயங்களில் சீஷர்களுக்காக, சீஷர்களோடு ஜெபித்துமுள்ளார். உதாரணத்திற்கு, யோவான் 17-ஆம் அதிகாரத்தில் பதிவு பண்ணப்பட்டுள்ளதான ஜெபம் காணப்படுகின்றது மற்றும் சபையில் ஜெபம் பண்ணுதல் தொடர்பான அப்போஸ்தலர்களின் வார்த்தைகள் காணப்படுகின்றன மற்றும் ஜெபத்தில் கலந்து கொள்ளும் மற்றவர்களாலும் புரிந்துகொள்ளப்படத்தக்கதான தொனியிலும், குரலிலும் ஜெபம் ஏறெடுக்கும் ஒழுங்கினைக் குறித்துக் கவனத்திற்குக் கொண்டுவருகின்றதான அப்போஸ்தலரின் வார்த்தைகளும் காணப்படுகின்றன. இவைகளுக்கு எதிர்மாறாகப் போராடுகின்றவர்கள், தங்களால் புரிந்துகொள்ளப்படாத காரியங்களுக்கு எதிராக போராடுகின்றதாக அப்போஸ்தலன் தெரிவிக்கின்றார். இவர்கள் எவ்வளவுதான் திறமிக்கவர்களாய் இருப்பினும், இவர்களுக்குக் கர்த்தருடைய ஜனங்களின் கூடுகைகளில் முதன்மையான ஸ்தானங்கள் கொடுக்கப்படக்கூடாது. மந்தையில் வழி நடத்துனர்களாக இருக்கும்படிக்கு, இவர்கள் அழைக்கப்படுவதற்கு முன்னதாக, முதலாவதாக இவர்கள் கற்றுக் கொள்வார்களாக. இதே கொள்கையானது – ஞானஸ்நானம் மற்றும் கர்த்தருடைய இராப்போஜனம் ஆசரித்தல் தொடர்புடைய விஷயத்திற்கு எதிராகப் போராடுகிறவர்களுக்கும் பொருந்துகின்றதாய் இருக்கின்றது. இத்தகையவர்கள் அன்பாய் நடத்தப்பட வேண்டும்; ஏனெனில் நம்முடைய சத்துருக்கள்கூட அன்பாய் நடத்தப்பட வேண்டும்; ஆனால் இவர்கள் – அதாவது பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்தின் அறிவும், அவ்விசுவாசத்திற்கு மதிப்பும் கொண்டிராதவர்கள் மற்றும் கர்த்தரினாலும், அவரது அப்போஸ்தலர்களினாலும் நிறுவப்பட்ட நடைமுறைகள் யாவற்றிற்கும் மதிப்புக் கொண்டிராதவர்கள் – கர்த்தருடைய மந்தைக்கான ஊழியக்காரர்களாகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது.