R5644 (page 73)
“ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.”
(1 தெசலோனிக்கேயர் 5:15)
ஒருவேளை நீங்கள் காயப்படுத்தப்பட்டிருப்பீர்களானா ல் அதைச் சரி செய்துகொள்ள நீங்கள் விரும்புகிறதற்குக் காரணமும் காணப்படும். சரி செய்துகொள்ளும் விருப்பம் காணப்பட்டாலும், பழிக்குப்பழி வாங்கும் விஷயம், எவ்விதத்திலும்
காணப்படக்கூடாது. நாம் தீமைக்குத் தீமை செய்யக்கூடாது, நாம் எவருக்கும் தீமை செய்யக்கூடாது என்ற கடமையின் கீழ்க் காணப்படுகின்றோம். “ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பாருங்கள்” என்ற
வார்த்தைகளானது, கிறிஸ்தவன் பொதுக்காவலன் போன்று இருந்து, தனது சகோதர சகோதரிகள், அயலார்கள் மற்றும் அனைவரும் தீமை செய்யாதபடிக்குப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றது எனத் தவறாக
சிலரால் புரிந்து கொள்ளப்படுகிறது. இது தவறான கருத்தாகும். குடும்பத்தின் தலைவர்கள் மாத்திரமே, இவ்விஷயத்திற்கு விதிவிலக்காகக் காணப்படுகின்றனர். குடும்பத்தாரின் தலைவராக இருக்கும் ஒருவர், தனது வீட்டாரின் நடத்தைகளைக்
கவனிப்பதற்கு, சட்டத்தின் கீழும், தெய்வீகப் பிரமாணத்தின் கீழும் கடமைப்பட்டுள்ளார்.
சிலர் அப்போஸ்தலரின் இந்த வார்த்தைகள், ஒவ்வொரு சபையாரின் மூப்பர்கள், தங்களுடைய சபையாரின் அங்கங்கள் தவறு செய்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமாகின்றது என எண்ணுகின்றனர். இதுவும்
சரியான கருத்தல்ல. மற்றொருவன் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வேதவாக்கியங்கள் மூப்பர்களுக்கு எங்கும் அதிகாரம் கொடுப்பதில்லை. அவ்வசனத்தின் அர்த்தமாவது: உங்களில் ஒவ்வொருவரும், நீங்கள்
தீமைக்குத் தீமை செய்யாதபடிக்கு உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதேயாகும்.
குடும்பத்திலுள்ள ஒரு நபர் தவறு செய்யும்போது, அக்குடும்பத்திலுள்ள மற்ற நபர், தவறு செய்தவருக்கு உதவி செய்யும் சில சரியான வழிமுறைகள் உள்ளன. உதாரணத்திற்கு, ஒருவேளை C என்ற நபருக்கு, B என்ற நபர் அநீதி செய்வதை A
என்ற நபர் கண்டால், A என்ற நபர் அதை… விளக்கி எடுத்துக்கூறலாம். A என்ற நபர்: சகோதரனே (சகோதரியே) என B என்ற நபரை அழைத்து, நீங்கள் இவ்விஷயத்தைக் குறித்து இப்படி, இப்படியாகச் சிந்திக்கவில்லையா? என்று சொல்லலாம்.
இப்படியாகவேதான் சபையிடத்திலும் செயல்பட வேண்டும். சபையின் நலனுக்கடுத்த விஷயங்களைப் பார்க்கவே மூப்பர்கள் விசேஷமாகப் பொறுப்பேற்றுள்ளார்கள். ஒருவேளை மூப்பர்கள், சபையில் ஒருவர் வேதவாக்கியங்களின் நியமங்களின்படி
ஜீவிக்கவில்லை என்பதைக் கண்டால், அவ்விஷயத்தைக் குறித்த யோசனைகளைக் கொடுப்பது சரியான முறையாகும். ஆனால் மற்றவர்களின் விஷயங்களில், வீண் அலுவல்காரராய் நாம் காணப்படக்கூடாது.
நாம் ஒருவரையொருவர் கட்டியெழுப்பிட வேண்டும், ஏனெனில் இவ்விதத்திலேயே, மணவாட்டி தன்னை ஆயத்தம் பண்ணிக்கொள்கிறாள். நாம் நன்மையை அல்லாமல், தீமையைச் செய்துவிடாதபடிக்கு, ஜெபத்தில் வைத்த பின்னர்,
இவ்விஷயங்கள் கூடுமானமட்டும் ஞானமான முறையிலேயே அணுகப்பட வேண்டும். நாம் அனைவரும், நம்மை நீதிக்கு அர்ப்பணித்திருக்கின்றோம் என்றும், நன்மையானவைகளைச் செய்வதற்கும் அர்ப்பணித்திருக்கின்றோம் என்றும் நினைவில்
கொள்ள வேண்டும். நாம் அனைத்துச் சந்தர்ப்ப, சூழ்நிலைகளிலும் நன்மையானவைகளைச் செய்வோம் என நம்முடைய ஜீவியத்தை அர்ப்பணித்துள்ள காரணத்தினால், நாம் சபையார் மத்தியில் மாத்திரமல்லாமல், சகல ஜனங்கள் மத்தியிலும்,
அவர்கள் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தேவனுடைய வார்த்தைகளில் உள்ள நியமங்களின்படி, கிறிஸ்துவின் சீஷர்கள், சகல ஜனங்களின் மத்தியில் மிகவும் மெருகூட்டப்பட்டவர்களாகவும், மிகவும் நேர்த்தியானவர்களாகவும், மிகுந்த நற்பண்புகள் உடையவர்களாகவும், மிகுந்த அன்பும்,
கரிசனையும் கொண்டவர்களாகவும் காணப்பட வேண்டும். இந்தப் பண்புகள், உலகத்தாரிடம் காணப்படுவது போன்று வெளித்தோற்றமாகக் காணப்படாமல், இவர்களிடம் கர்த்தருடைய ஆவியும், நீதியின் ஆவியும், இரக்கம் மற்றும் அன்பின்
ஆவியும் காணப்படுவதால், இருதயத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் அன்பும், தயவும் காணப்பட வேண்டும். இவ்விதமாக இவர்கள் தங்களிடத்திலுள்ள ஒளியை, தங்கள் ஜீவியத்தில் பிரகாசிப்பிக்க வேண்டும்.