R2442 (page 67)
“நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.” (யாக்கோபு 3:8-10)
அப்போஸ்தலன் இருவகை ஞானம் இருப்பதாக, பரலோக வகையான ஞானமும், பூமிக்குரிய வகையான ஞானமும் இருக்கின்றது என்றும், இதைக் கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் வேறுபாடறிந்து கொள்ள வேண்டும் என்றும் மற்றும் தாங்கள் பரலோக வகையான ஞானத்தினைப் பெற்றிருக்கத்தக்கதாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார். தங்களையே சபையாகக் கருதிக்கொள்கின்றவர்களும், உலக ஞானத்தின் அடிப்படையிலான நோக்கங்களினால் தங்களைச் சபையோடு இணைத்துக் கொண்டவர்களும், தாங்கள் விரும்புகின்றதும், தங்களுக்குச் சாதகமாக ஒருவேளை தங்களால் மாற்றிட முடிகின்றதுமான சில ஞானமும், நியாயமும் வேதவாக்கியங்களுடைய போதனைகளில் காணப்படுகின்றதென அடையாளம் கண்டுகொண்டவர்களுமான சிலர் சபையில் காணப்படுவார்கள் என்றே அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார். இவர்கள் இறுமாப்படைவார்கள் என்றும், தங்கள் ஞானத்தைப்பகட்டாகக் காண்பித்துக்கொள்வார்கள் என்றும், அதனால் பெருமைக்கொள்வார்கள் என்றும், இவர்கள் சகோதர சிநேகம், தயவு, சாந்தம், பொறுமை, அன்பு ஆகிய கிறிஸ்தவ குணலட்சணங்களானது ஏற்புடையது என்று வெளிப்புறத்தில் ஒப்புக்கொண்டாலும், இவர்கள் தங்கள் இருதயங்களில் கசப்பான பொறாமைகளையும், போராட்டங்களையும் – அதாவது பெயரும், புகழும் பெற்றிடுவதற்கான போராட்டத்தினை – இவைகளை அதிகமாய்ப் பெற்றிருப்பவர்களாகக் [R2446 : page 74] காணப்படுவோரின் மீது பொறாமையினைக் கொண்டிருப்பார்கள் என்று அவர் குறிப்பிடுகின்றார்.
இத்தகையவர்கள் சகோதரரைச் சபிப்பதைத் (தீமை பேசுவதை, காயப்படுத்துவதை) தவிர்ப்பதற்குச் சிரமப்படுபவர்களாக, தவிர்ப்பதற்கு முடியாதவர்களாகக் காணப்படுவார்கள் என்று அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார். இவை இவர்களுக்கு மிகவும் இயல்பான தன்மைகளாக இருப்பதினால், இதை இவர்களால் தவிர்க்க முடியாது; காரணம் இவர்கள் சுத்தமான இருதயங்களைப் பெற்றிருப்பதில்லை – மறுபடியும் புதுப்பிக்கப்பட்ட இருதயங்களை இவர்கள் பெற்றிருப்பதில்லை. இவர்களது இருதயங்களானது, மறுபடியும் புதுப்பிக்கப்பட்டிருப்பினும், நாய் தான் கக்கினதைத் தின்னவும், பன்றி சேற்றிலே புரளவும் திரும்பிடுவது போன்று திரும்பினவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர். தங்கள் இருதயங்களில் பொறாமையான மற்றும் கசப்பான உணர்வுகளைப் பெற்றிருப்பவர்களுக்கான அப்போஸ்தலனுடைய அறிவுரையானது:- இவர்கள் பெருமையடித்துக்கொள்வதற்கோ அல்லது மகிமைப் பாராட்டிக்கொள்வதற்கோ எந்தக் காரணமும் இல்லை மாறாக இவர்கள் இருதயத்தில் இத்தகைய தீமையான நிலைமையினைக் கொண்டிருப்பதால், தாங்கள் கிறிஸ்தவர்களே அல்ல என்று ஒப்புக்கொள்ள வேண்டும்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்ப் பேசுதலை நிறுத்திக்கொள்ள வேண்டும்; மாய்மாலமாய், போலியாய் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்; புதுப்பிக்கப்பட்ட இருதயங்களை உடையவர்கள் என்றும், கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் என்றும் தொடர்ந்து உரிமை பாராட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
இவர்களது ஞானமானது, இவர்களது அறிவானது தேவனிடமிருந்து, பரிசுத்த ஆவியிடமிருந்து வருபவை அல்ல என்று அவர் தெளிவாய்க் கூறுகின்றார். “இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகீக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்தது மாயிருக்கிறது. வைராக்கியம் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச் செய்கைகளுமுண்டு” (யாக்கோபு 3:15,16).
அப்போஸ்தலனுடைய கண்டனமானது, உத்தம இஸ்ரயேலனாகத் தன்னை அறிக்கைப்பண்ணிக்கொள்ளும் யாருக்கும் பொருந்துகின்றதாய் இருப்பினும், அவர் விசேஷமாய்ச் சபையில் போதகர்களாக, போதுமான ஞானம் இருப்பதாக அறிக்கைப்பண்ணுகிறவர்களுக்கு தனது வார்த்தைகளைக் குறிப்பாய்ப் பேசுகின்றார். இவரது வார்த்தைகளானது, சபைக்குப் பகிர்ந்துகொடுக்கப்பட்டதான பல்வேறு வரங்களைக் குறித்துப் பேசுகையில், அதிகமான அறிவுடையவர்களுக்குரிய அபாயங்களைச் சுட்டிக்காட்டும் அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளையும் நமக்கு நினைப்பபூட்டுகின்றதாய் இருக்கின்றது மற்றும் யாக்கோபு அடிகளார் முன்வைத்ததான இந்தக் கொள்கையைச் சித்தரிக்கும் வண்ணமாக பவுலடிகளார் கூறுவதாவது:-
“நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். நான் தீர்க்கத்தரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கத்தரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்” (1 கொரிந்தியர் 13:1-8).
அறிவும், நாவன்மையும் மிகவும் முக்கியமான பரீட்சைகளாக இருப்பதில்லை என்றும், இதயத்தில் ஊடுருவி, ஜீவியத்தின் போக்கனைத்திலும் கடந்துவந்து, நம்முடைய அழிந்துபோகும் சரீரங்களை இயக்கி, செயல்படுத்தும் அன்பே, உண்மையான பரீட்சையாக – நம்முடைய திவ்விய உறவிற்கான மெய்யான நிரூபணமாக இருக்கின்றது என்றும் அப்போஸ்தலன் தெளிவாய்ச் சுட்டிக்காட்டுகின்றார். தேவனுடைய வரங்களைப் பெற்றிருப்பவர்கள் அன்பை ஒருவேளை இழந்திருந்தால், கிறிஸ்துவின் ஆவியினை ஒருவேளை இழந்திருந்தால் சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருந்து “ஒன்றுமில்லாதவர்களாகிவிடுவார்கள்” என்று அவர் சுட்டிக்காட்டுகின்றார்; காரணம், “கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல” (ரோமர் 8:9).