R2951 (page 43)
அப்போஸ்தலர் 6:7-15
“ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்.”
ஸ்தேவான் இரண்டாம் கிறிஸ்தவ இரத்தச்சாட்சி என்று ஒப்புக் கொள்ளப்படலாம் – ஏனெனில் நிச்சயமாகவே நமது கர்த்தர் இயேசுவே முதலாவதாவார். இந்தப் பாத்திரமிக்கச் சிலுவையின் போர்வீரனுடைய சரித்திரத்தை அறிந்து கொள்வதற்காக, நம்முடைய பாடத்திற்கு ஆதாரமாய்த் தெரிந்துகொண்டுள்ள அதிகாரத்தினுடைய முதலாம் வசனம் துவங்கி நாம் பார்த்திட வேண்டும். சபையில் எழும்பின ஒரு நெருக்கடியின் காரணமாக, ஆவிக்குரியதல்லாத பல்வேறு காரியங்களைப் பார்த்துக்கொள்வதற்கு ஏழு உதவிக்காரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் இந்த ஏழு பேரில் ஒருவராக ஸ்தேவான் காணப்பட்டார் மற்றும் இந்த ஏழு பேரும் அப்போஸ்தலர்களினால் இல்லை, மாறாக சபையாரால் பரிசுத்த ஆவியும், ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற மனுஷர்களென அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தச் சம்பவமானது, ஆதிசபையினுடைய அமைப்பின் தளர்வான அம்சத்தினை நமக்குத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. அது – கர்த்தராகிய மீட்பரே சபையின் தலையானவராய் இருக்கின்றார் என்றும், இன்னுமாக அவரைத் தங்கள் இரட்சகரும், கர்த்தரும் என்று அங்கீகரித்து, அவருக்கு அர்ப்பணம்பண்ணி, அவரது ஆவியினைப் பெற்றுக்கொண்டு, அவரது நியமித்தலின்படியும், பரிசுத்த ஆவியினுடைய ஏற்படுத்தலின்படியும் விசேஷித்த விதமாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டதான அவரது அப்போஸ்தலர்கள், சபைக்கான அங்கீகரிக்கப்பட்ட போதகர்களாக இருக்கிறார்கள் என்று அடையாளம் கண்டுகொள்பவர்கள் மாத்திரமே அங்கத்தினர்களாக இருப்பார்களே ஒழிய, வேறு எவரும் இல்லை என்றும் உள்ளவைகள் தவிர – வேறு எந்த இருப்புக்கோல் சட்டங்களையும், பிரமாணங்களையும் பெற்றிருக்கவில்லை. இதுதவிர ஒவ்வொரு தருணத்திலும் எழும்பின தேவைகளுக்கு, வழிநடத்துதல் கிடைத்தது; சபையினுடைய ஏற்பாடுகள் அனைத்தின் விஷயத்திலும் மற்றும் அப்போஸ்தலர்களுடைய வார்த்தைகள் மூலம் கர்த்தரை யுகம் முழுவதும் விசுவாசிக்கிறவர்களுடைய பிரயோஜனத்திற்காகவும், அப்போஸ்தலருடைய போதித்தலின் விஷயத்திலும் பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதல் இருந்தது என்று நாம் நம்பிக்கையுடன் எண்ணிடலாம்.
வேறொரு பாடத்தில் பொதுவுடைமைக் கொள்கையானது சபையில், ஆரம்பத்தில் ஓரளவுக்கு நிறுவப்பட்டது என்று பார்த்தோம்; ஆனால் இப்பாடத்தினுடைய சம்பவமானது, அக்கொள்கையானது வரையறைக்குட் பட்டிருந்தது என்றும், ஆஸ்திகள் முழுவதுமாக பங்கிடப்படவில்லை என்றும் தெளிவாய்ச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. வாழ்வதற்குப் பிழைப்பு இல்லாமல் தங்கள் மத்தியில் காணப்படும் ஏழைகளின் காரியங்களைச் சந்திக்க வேண்டும் என்பது ஆதிசபையினுடைய நோக்கமாக இருந்தது என்பது உறுதியே. இப்படிச் சந்திக்கப்பட்டவர்களில் முக்கியமாய் வருமானம் இல்லாமல் காணப்பட்ட விதவைகளும் அடங்கினார்கள்; இத்தகையவர்கள் அக்காலங்களில் உதவியற்றவர்களாகவும், தருமங்களைச் சார்ந்திருப்பவர்களாகவும் காணப்பட்டனர்; ஏனெனில் ஸ்திரீகளுக்குப் பிழைப்பிற்காக வேலை செய்வதற்குரிய வாய்ப்புகள் வெகுகுறைவாகவே காணப்பட்டது.
எபிரெய ஸ்திரீகளைப்பார்க்கிலும், கிரேக்க ஸ்திரீகள் புறக்கணிக்கப்பட்டார்கள் அல்லது அவர்கள் விஷயத்தில் வேண்டுமென்றே ஏதோ பாரபட்சம் பார்க்கப்பட்டது என்று நாம் எண்ணிவிடக் கூடாது. வேண்டுமென்று செய்யப்படவில்லை என்பது தெளிவாய்த் தெரிகின்றது மற்றும் அப்போஸ்தலர்களாகிய அவ்வூரார், அந்நிய ஊர் விதவைகளின் தேவைகளைக் காட்டிலும் சொந்த ஊர் விதவைகளின் தேவைகளை மிகவும் கூர்மையாய் உணர்ந்திருந்தபடியாலே இவ்விஷயம் எழும்பியிருக்கக்கூடும். இந்த ஸ்திரீகள் பாலஸ்தீனியாவில் பிறந்திருந்தாலும் அல்லது கிரேக்க நாட்டில் பிறந்திருந்தாலும், அவர்கள் யாவரும் யூத ஸ்திரீகளாகவே இருந்தனர். அக்காலக்கட்டம் வரையிலும் சுவிசேஷமானது மற்றவர்களுக்கு – புறஜாதிகளுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை. முறையிடுதல் வந்ததற்கு ஏதோ சில நியாயமான காரணங்கள் இருந்தது என்பதில் ஐயமில்லை. எப்படி இருப்பினும் பிரச்சனையைச் சரிப்பண்ணுவதற்கென உடனடியாக நடவடிக்கை எடுத்ததில், தங்கள் நோக்கத்தின் நேர்மையினை அப்போஸ்தலர்கள் வெளிப்படுத்தினார்கள். இதில் கர்த்தருடைய ஜனங்கள் அனைவருக்கும் பின்வரும் படிப்பினை உள்ளது, அதென்னவெனில்: “ஆவிக்குரியதல்லாத காரியங்களின் அடிப்படையில் பிரச்சனைகள் எழும்பி “கசப்பின் வேரினை” முளைக்கப்பண்ண ஏதுவாயிருக்கிறது என்றால் அல்லது சபையில் பிரிவினை உண்டாக்குவதற்கு ஏதுவாயிருக்கிறது என்றால், முழுச்சபையாருடைய தோள்களின்மேல் பொறுப்பினை வைத்துவிடுவதும் – அக்காரியத்திற்கு அதிகம் கவனம் செலுத்த முடிகிறவர்களும், அனைவருக்கும் நியாயமாய்ச் செய்யப்பட்டுள்ளதா என்று பார்க்கின்றவர்களுமான சிலரைச் சபையாரிலிருந்து தேர்ந்தெடுப்பதற்குச் சபையாரிடம் கேட்டுக்கொள்வதும் முறையான நடவடிக்கையாக இருக்கும்.” மற்றச் சம்பவங்களிலும், இச்சம்பவத்திலும் கர்த்தரானவர் – ஒட்டு மொத்தச் சபையும் [R2951 : page 44] தம்முடைய மேற்பார்வை, தம்முடைய பராமரிப்பின் கீழ்க் காணப்படுகின்றனர் என்றும், இதன் காரணமாகச் சபையின் பொதுவான காரியங்களானது ஒரு தனி மனிதனாலோ, குருமார் வகுப்பினராலோ நடத்தப்படாமல், சபையாரால் நடத்தப்பட வேண்டும் என்றும் தெளிவாய்ச் சுட்டிக்காண்பித்துள்ளார்.
பணம் திரட்டுவதும், உணவு விநியோகிப்பதுமான பந்தி விசாரித்தலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சிலர் கிரேக்க சகோதரருக்குப் பிரதிநிதிகளாய் இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை கிரேகக் சகோதரருக்குப் பிரதிநிதியானவர்கள், கிரேக்க வழக்கங்களின் அம்சங்களை அறிந்தவர்களாய் இருப்பதினால், இவர்கள் கிரேக்க விதவைகளுடைய நலனுக்கடுத்தவைகளை நன்கு பார்த்துக்கொள்ள முடிகிறவர்களாய் இருப்பார்கள். இங்குதான் உதவிக்காரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டர்களில் ஒருவராகிய ஸ்தேவான் நமக்கு அறிமுகமாகுகின்றார். “Deacon” என்ற வார்த்தையானது, பணியாளர், வேலைக்காரர், உதவிக்காரர் எனும் அர்த்தத்தினைக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. சபைக்கான “மூப்பர்கள்” என்பவர்கள் மிகவும் குறிப்பாக அவர்களது கிறிஸ்தவ குணலட்சணம் மற்றும் போதிப்பதற்கான திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், ஆனால் உதவிக்காரர்கள் என்பவர்கள் கிறிஸ்தவ குணலட்சணம் மற்றும் ஆவிக்குறியதல்லாத பணிக்கடுத்த திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இருத்தரப்பினரின் விஷயத்திலும் கிறிஸ்தவ குணலட்சணமும், ஆவியில் பரிசுத்தமும், ஞானமும் கருத்தில் எடுத்துக் கொள்வதற்குரிய அடிப்படையான விஷயங்களாய் இருக்கின்றன. இப்படியாகவே இன்றுள்ள கர்த்தருடைய ஜனங்கள் விஷயத்திலும் காணப்பட வேண்டும் – அதாவது எந்த ஓர் ஊழியத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், சபையாரில் சிறந்தவர்களாகவும், ஞானமிக்கவர்களாகவும் முதலாவது அடையாளங்கண்டு கொள்ளப்பட்டிருக்க வேண்டும் – விலையேறப்பெற்ற பரிசுத்தமான, சாந்தமான மற்றும் அமைதலின் ஆவி உடையவர்களா என்று கவனமாய்க் கவனிக்கப்பட வேண்டும் – அடுத்துத் திறமைகளானது கவனிக்கப்பட வேண்டும்.
கர்த்தர் தம்முடைய ஜனங்களைத் தம்முடைய ஊழியத்தில் படிப்படியாக அபிவிருத்திப்பண்ணுவதற்குக் கையாளும் அவரது வழிமுறைகளுக்கான விளக்கத்தினை ஸ்தேவானின் விஷயத்தில் நாம் காணலாம், அவை: (1) ஸ்தேவான் சத்திய அறிவை அடையும் சிலாக்கியமடைந்தவராய் இருந்தார்; இதனை அவர் ஏற்றுக்கொண்டு உண்மையாய் இருந்து, கர்த்தருக்காக வைராக்கியம் கொண்டிருந்து, நீண்ட காலமாய் இப்பண்புகளை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார் மற்றும் பரிசுத்த ஆவியினுடைய வழிகாட்டுதலில், இவர் உதவிக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (2) இதில், பந்திவிசாரிக்கும் பணியில் உண்மையாய் இருந்திட்டக்காரியமானது, இன்னும் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாய் அவரை ஆயத்தமாக்கிற்று மற்றும் (3) சத்தியத்திற்கான தனது ஊழியத்தினை உறுதிப்படுத்துவதற்கென அவர் அடையாளங்களை நடப்பிக்கிறதையும் மற்றும் சுகமளிக்கும் வரங்களைச் செயல்படுத்துவதையும் நாம் பார்க்கின்றோம்; இது சபையில் ஸ்தேவான் மூப்பருக்கானதொரு நிலையினை உண்மையில் அடைந்துவிட்டதைச் [R2952 : page 44] சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. அப்போஸ்தலர்கள் அனைவரும் மூப்பர்களாய் இருக்க, எருசலேமில் தங்கியிருந்த அப்போஸ்தலர்கள் அநேகமாக அவசியமில்லாமல் மூப்பர்களுக்கான தேர்ந்தெடுத்தலைப் பண்ணினார்கள். (1 பேதுரு 5:1). ஸ்தேவான் சத்தியத்தின் ஆவியினால் மிகவும் நிறைந்திருந்தவராகவும், அதன் ஊழியங்களுக்கடுத்த விஷயங்களில் அர்ப்பணிப்புமிக்கவராகவும் காணப்பட்டப்படியால், (4) அவர் பலியின் மரணத்தில் ஆண்டவருடைய அடிச்சுவடுகளைப் பின்தொடரும் சகோதரரில் முதல் நபராய் இருப்பதற்குரிய கனமடைந்தவரானார். இங்கு ஊழியத்திலும், அதன் கனங்களிலும் அபிவிருத்தி அடைந்தது என்பது கர்த்தருடைய ஜனங்கள் யாவரையும், அதே ஆண்டவருக்கு ஊழியஞ்செய்வதற்கும் மற்றும் அவரைப் பிரியப்படுத்துவதற்கும் அதிகமாய்ப் பிரயாசம் எடுப்பதற்கு ஊக்குவித்து, உற்சாகப்படுத்திடும். அர்ப்பணம்பண்ணின ஸ்தேவானை இப்படியாக ஏற்றுக்கொண்டு, தம்முடைய ஊழியத்தில் அவரைப் படிப்படியாக அபிவிருத்திப் பண்ணின ஆண்டவர், அதே போன்று அர்ப்பணம் பண்ணி, பரலோக வைராக்கியத்தினால் எரிந்து கொண்டிருப்பவர்களை எடுத்து, பயன்படுத்திடுவதற்கு இன்றும் விருப்பமுள்ளவராகவும், ஆயத்தமுள்ளவராகவும் காணப்படுகின்றார். இத்தகையவர்கள் ஏற்றகாலத்தில் தம்மோடுகூட மகிமைப்படத்தக்கதாக, தம்மோடுகூடப் பாடுபடுவதற்கு விரும்பும் பட்சத்தில், இவர்களைச் சபையில் எரிகிற மற்றும் பிரகாசிக்கிற விளக்குகளாக்கிடுவதற்கு விருப்பமுள்ளவராய் இருக்கின்றார் (ரோமர் 8:17).
இன்றுவரையுள்ள கர்த்தருடைய ஜனங்களுக்கு விசுவாசம் மற்றும் வல்லமை எந்த விஷயங்களின் அடிப்படையில் கடந்து வந்ததோ, அதே விஷயங்களின் அடிப்படையில் ஸ்தேவானுக்கும் அவரது விசுவாசமும், வல்லமையும் மற்றும் ஊழியத்திற்கான வாய்ப்புகளும் கடந்துவந்ததாய் இருந்தன – அதாவது கர்த்தருக்கும், அவருடைய ஜனங்களுக்கும் மற்றும் சத்தியத்திற்குமான முழு இருதயத்துடன்கூடிய அர்ப்பணிப்பின் அடிப்படையிலேயே கடந்துவந்தது. “தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.” ஒருவேளை ஸ்தேவான் சுயநாட்டம் உடையவராகவும், மனுஷர்கள் அல்லது சகோதரர்கள் மத்தியில் கனத்திற்கு ஆசைக்கொண்டவராகவும் இருந்திருப்பாரானால், அதைக்குறித்து நாம் கொஞ்சமேனும் தெரிவிக்கப்பட்டிருந்திருப்போம் என்பதில் நமக்கு நிச்சயமே; இல்லாவிட்டால் இவர் பாராட்டு எதிர்ப்பார்த்திருந்திருப்பாரானால், இவரும் அனனியா போன்று, தீயச் செய்கைக்கு உதாரணமாகியிருந்திருப்பார். இது சபையினால் எந்த ஓர் ஊழியத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு சகோதரனையும் சூழும் அபாயமாய் இருக்கின்றது. ஆகையால்தான், “உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக” என்று அப்போஸ்தலன் எச்சரிக்கின்றார். ஆகவேதான் சபையானது தாழ்மையுள்ளவர்களை மாத்திரமே அதன் ஊழியக்காரர்களாய்த் தேர்ந்தெடுப்பது அவசியமாயிருக்கிறது. எதிராளியானவனுடைய கண்ணிக்குள் விழாதபடிக்கும், மற்றவர்களுக்குப் பிரசங்கித்த பிற்பாடு, தாங்கள் ஆகாதவர்களாய்ப் போகாதபடிக்கும் இந்த ஊழியக்காரர்கள் கவனமாய் இருப்பதும் அவசியமாயிருக்கிறது (யாக்கோபு 3:1; 1 தீமோத்தேயு 3:6-7; 1 கொரிந்தியர் 9:27).
பிரசங்கித்துக்கொண்டிருக்கையில், ஸ்தேவான் தன்னுடைய நாட்களில் காணப்பட்ட சிலருடன் வாதத்திற்குள்ளானார் மற்றும் அவர்களால் அவருக்கு இணையாகக் காணப்படமுடியவில்லை. “அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று” (அப்போஸ்தலர் 6:10) என்று நாம் வாசிக்கின்றோம். நாவன்மை உடையவர்களிலேயே ஸ்தேவானே பெரியவர் என்றோ, அவர் வாதம்பண்ணிக்கொண்டிருந்தவர்களில் திறமையுடையவர்கள் எவரும் இருக்கவில்லை என்றோ நாம் எண்ணிவிடக்கூடாது. இவருடைய விஷயத்தில், “தன்னுடைய நிலைப்பாட்டினை நீதியான விதத்தில் கொண்டிருப்பவன் மூன்று மடங்கு பலசாலியாவான்” எனும் பழமொழி நன்கு பொருந்துகின்றதாய் இருக்கின்றது. ஸ்தேவான் சத்தியத்தினை உடையவராகவும், வாதத்தினுடைய சரியான கோணத்தினைக் கொண்டவராகவும் இருந்ததினாலும் மற்றும் தேவன் அவரோடுகூட இருந்ததினாலும், அவரது எதிராளிகள் எவரும் அவருக்கு நிகரானவர்களாக இருக்கவில்லை.
அதே தேவன் இன்னமும் தம்முடைய ஜனங்களுடன் காணப்படுகின்றார்; மற்றும் “உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்” (லூக்கா 21:15) எனும் கர்த்தருடைய வார்த்தையானது இன்னமும் உண்மையாக இருக்கின்றது. கர்த்தருடைய ஜனங்கள் மத்தியிலுள்ள தாழ்மையுள்ளவர்களுக்கு, அவர்களது எதிராளியானவர்கள் யாவரும் நிகரற்று இருக்கையில் – இதே கொள்கையானது விளங்குவதை நாம் பார்க்க முடிகின்றதல்லவா? சத்தியமானது ஜெயம்கொண்டது என்று எப்போதும் ஒப்புக்கொள்ளப்படவில்லை என்றாலும், ஸ்தேவானின் சத்துருக்களினால் ஒப்புக்கொள்ளப்படவில்லை என்றாலும், அது வல்லமையுள்ளதானபடியால், அது ஜெயங்கொள்கின்றதாய் இருக்கின்றது.
சத்தியத்தினைப் பொதுவிடங்களில் விவாதம்பண்ணுவதை நாங்கள் ஆதரிக்கிறதில்லை. விவாதங்கள் அதிகம் நன்மைப் பயக்கிறதில்லை என்று நாங்கள் நம்புகின்றோம்; ஏனெனில் சத்தியத்தினை எதிர்ப்பவர்கள் – தங்கள் விவாதங்களை நியாயமற்ற விதத்திலும், வஞ்சனையான விதத்திலும் செய்ய வல்லவர்கள் – சத்தியத்திற்காக நாடிடுவதற்குப் பதிலாக, வெற்றியடைவதற்கென நாடுவதில் வல்லவர்கள். எனினும் ஸ்தேவானுடைய இந்தச் சந்தர்ப்பத்தினைப் போன்று, இன்றும் காணப்படும் சந்தர்ப்பங்களில் சத்தியத்தினை எதிர்ப்பவர்கள், வெறியர்களாய் / சண்டைக்காரர்களாய் இருக்கின்றனர்; மேலும் இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் சத்தியத்தினை உடையவர்கள் அதனை குறித்து வெட்கப்படாமல் மற்றும் பயங்கொள்ளாமல், அத்தருணத்திற்குத் தேவையான வார்த்தைகள் மற்றும் ஞானத்திற்கான கர்த்தருடைய வாக்குத்தத்தத்தில் விசுவாசம்கொள்ள வேண்டும். ஸ்தேவான் பண்ணின விவாதம் குறித்து நமக்கு விவரங்கள் கொடுக்கப்படவில்லை ஆனால் பிற்பாடு ஸ்தேவானால் கொடுக்கப்பட்டதான செய்தியிலிருந்து நன்கு விளங்கும் அவரது குணலட்சணம் குறித்து நாம் அறிந்திருக்கும் விஷயத்திலிருந்து, அவர் இரக்கமான, பரந்த மனப்பான்மையான, நியாயமான விதத்தில் எதிர்ப்பவர்களிடத்தில் பேசினார் என்றும், ஆத்திரமடையவோ, சீற்றமடையவோ, தவறான விவாதங்கள் செய்ய முற்படவோ இல்லை என்றும் சொல்ல வேண்டியது அவசியமாயிருக்கின்றது. அவர் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்திலும் கருக்கானதான சத்தியத்தினைப் பெற்றிருந்தார் மற்றும் அப்போஸ்தலருடைய கட்டளைக்கேற்ப, அவர் சத்தியத்தினை அன்போடு பேசினார் என்பதில் நமக்கு உறுதியே (எபேசியர் 4:15).
ஸ்தேவானோடு விவாதம்பண்ணினவர்கள் நிச்சயமாகவே கிரேக்க யூதர்களாய் இருந்தனர் மற்றும் ஸ்தேவானும்கூட அநேகமாக இவ்வகுப்பாரைச் சேர்ந்தவரேயாவார். பிற்காலங்களில் அப்போஸ்தலனாகிய பவுலாக மாறின, தர்சுவின் சவுலும், ஸ்தேவானோடுகூட விவாதம்பண்ணினவர்கள் மத்தியில் காணப்பட்டார்; ஏனெனில் அவரைக் கொன்றவர்கள் மத்தியில், கலகத்தலைவன் போன்று தான் காணப்பட்டதாக பவுல் அடிகளார் தாமே நமக்குக் கூறுகின்றார் (அப்போஸ்தலர் 22:20). கமாலியேலினால் கற்பிக்கப்பட்டவரும், தர்க்கவாதங்களில் திறமிக்கவரும், நியாயசாஸ்திரியுமான வாலிபனாயிருந்த சவுல், ஸ்தேவானின் விவாதத்திலிருந்து எந்தளவுக்குப் படிப்பினைகள் சிலவற்றினைப் பெற்றிருந்திருப்பார் மற்றும் கருத்துகள் சிலவற்றினைக் கிரகித்திருந்திருப்பார் என்று நாம் யோசிக்கின்றோம்; எனினும் அவரது வாழ்க்கைப் போக்கினை மாற்றிடும் அளவுக்குப் போதுமானதாய் இல்லை.
ஆலோசனை சங்கத்தார் முன்னிலையில், தன் ஜனங்களின் அதிகாரிகளுக்கு, இயேசு மற்றும் அவரது உயிர்த்தெழுதலை அடிப்படையாகக் கொண்டிருக்கும் சுவிசேஷத்தின் பிரசங்கத்தினைப் பிரசங்கிக்கத்தக்கதாக ஸ்தேவானுக்கு வாய்ப்பு வந்தது. விவாதத்தில் அவரைத் தோற்கடிக்க முடியாத அவரது பகைஞர்கள், அவரை அழித்துப்போடுவதற்குத் [R2952 : page 45] தீர்மானமாய் இருந்தார்கள்; மூடநம்பிக்கையினால் வஞ்சிக்கப்பட்ட மத வெறியர்கள் போன்று, இவர்களும் தங்களது உயர்கொள்கையினால் ஏவப்பட்டவர்களாக, அவரைச் சட்டப்பூர்வமாய் அழித்திட – அதாவது சட்டத்தின்படி செய்வதுபோன்ற தோற்றத்தில் அழித்திட விரும்பிட்டார்கள். அந்தோ பரிதாபம்! இப்போதும், அப்போதும் சிறந்த மனமுள்ள அநேகம் ஜனங்கள், ஒரு தவற்றினைச் சட்டத்தின்படியான தோற்றத்தில் செய்தால், அந்தத் தவறானது சரியானதாகிவிடும், நன்மையானதாகிவிடும் என்று எண்ணுமளவுக்குத் தங்களையே வஞ்சித்தவர்களாய் இருக்கின்றனர்! கர்த்தருடைய ஜனங்கள் நியாயப்பிரமாணத்தின் ஆவியினை, நியாயத்தின் ஆவியினை, நீதியின் ஆவியினை உடையவர்களாய் இருப்பது அவசியம்; இவை இல்லாத பட்சத்தில் வைராக்கியம், மூடநம்பிக்கை அல்லது தப்பறையினுடைய அழுத்தத்தின் கீழ் சமச்சீரான மனங்களுடைய சிறந்தவர்கள்கூடத் தவறாய் வழிநடத்தப்பட்டுவிடுவர்.
நியாயசாஸ்திரிகளும், ஆலோசனை சங்கத்தின் அங்கத்தினர்களும் (தர்சுவின் சவுலும் இதில் அங்கத்தினனாய் இருந்திருக்கக்கூடும்) குற்றச்சாட்டுகளை நேரடியாய்ச் சொல்லும் வகுப்பினராய் இருக்கவோ, சிறந்த ஒரு மனுஷனை அழிப்பதில் தாங்கள் விருப்பம் கொண்டிருப்பதுபோன்று தோற்றமளிக்கவோ விரும்பவில்லை. ஆகையால் அவர்கள் தங்களது சிதைந்துபோன பகுத்துணர்தலைக்கொண்டும், மனச்சாட்சியைக்கொண்டும் மரணத் தீர்ப்பினை அளிக்கத்தக்கதாக வாய்ப்பளிக்கும் வகையான சாட்சியினைச் சொல்வதற்கு மற்றவர்களை ஏற்பாடுபண்ணினார்கள். விநோதமாகவே இரண்டாம் இரத்த சாட்சியும், முதலாம் இரத்த சாட்சியினைப் போலவே தேவனுக்கும், ஆலயத்திற்கும் எதிராக தூஷணம் புரிந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார் மற்றும் தனக்கு முன்மாதிரியான ஆண்டவரின் விஷயத்தில் இருந்ததுபோலவே, ஸ்தேவானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கும் எவ்வித அடிப்படையும் இல்லாமல் இருந்தது. குற்றச்சாட்டுகள் திரித்துக்கூறப்பட்டன என்பது உண்மைதான், எனினும் அதில் கொஞ்சம் உண்மையும் இருந்தது. இப்படியாகக் கர்த்தரையும், ஸ்தேவானையும் குற்றவாளி என்று தீர்த்திட்டவர்களுக்கு எவ்வளவாய் இவ்விஷயத்திற்கெனச் சலுகைப் பாராட்டப்படலாம் என்பதைப் பகுத்துணர்தல் என்பது அநேகமாக நமக்குச் சிரமமான காரியமாகும். பகுத்துணர அவசியமுமில்லை, ஏனெனில் இத்தகைய காரியங்களில் பகுத்துணர்தல் / நியாயந்தீர்த்தல் என்பது நம்முடைய கரங்களில் வைக்கப்படவில்லை. தவறான அபிப்பிராயம் கொண்டுள்ள மனமானது, எந்தளவுக்குச் சத்தியத்தினைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், வெளிச்சம் இருளாகவும், சத்தியம் தப்பறையாகவும் காணப்படத்தக்கதாகக் பகுத்துணர்தலை குருடாக்குவதில் எதிராளியானவன் எந்தளவுக்கு விஜயம் கொண்டுள்ளான் என்றும் கர்த்தர் மாத்திரமே அறிவார்.
தனக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஸ்தேவான் கேட்டு, விவகாரத்தின் போக்கினைக் கவனித்தபோது, தனக்கு எதிராக சாட்டப் பட்டுள்ளதான குற்றச்சாட்டுகளுக்கும், தனது ஆண்டவருக்குச் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் இடையிலான ஒற்றுமையினை மனதில் கவனித்தார் என்பதில் ஐயமில்லை. மனதின் சந்தோஷத்தினால் மிகவும் வியக்கத்தக்க விதத்தில் அவரது முகம், ஒளிவீசினபோது அவர் மனதில் இத்தகைய சில எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது என்பதினாலேயே, ஆலோசனை சங்கத்தில் உட்கார்ந்திருந்த யாவரும் “அவர்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவர் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதில் நமக்கு நிச்சயமே. ஆனால் தேவதூதன் முகம்கூட அத்தகைய இருதயங்களை இத்தருணத்திலும், ஆண்டவருடைய தீர்ப்பின்போதான தருணத்திலும், உட்கார்ந்திருந்த அதே நபர்கள் சிலருடைய இருதயங்களை அசைத்திடவில்லை. ஸ்தேவானுடைய சாட்சி பகருதலானது, அவர் பேசினவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் விஷயத்தில் பலனளிக்கவில்லை போன்று தோற்றமளிக்கின்றது; இப்படியாகவே நமது ஆண்டவருடைய விசாரணை மற்றும் சாட்சியின் விஷயத்திலும் காணப்பட்டது. எனினும் ஆண்டவருடைய சாட்சியானது பெந்தெகொஸ்தே நாளிலும், அதற்குப் பிற்பாடும் பலன் கொடுத்ததாய் இருந்தது; ஆகவே ஸ்தேவானுடைய சாட்சியும் பின்நாட்களில் பலன்கொடுத்ததாய் இருந்தது. சுடர்விட்ட அந்தத் தேவதூதன் முகமானது – தமஸ்குவிற்குப் போகிற வழியில் கர்த்தரால் குறுக்கிடுவது வரையிலும், தர்சு பட்டணத்துச் சவுலினால் சிலகாலம் எதிர்த்துப் போராடி வரப்பட்ட “முட்களுள்” ஒன்றாய் இருந்தது என்பதினை யாரால் மறுத்திட முடியும்?
இந்த இரத்தசாட்சியின் விஷயத்தில் காணப்பட்ட அனுபவங்களானது சவுலுக்கு மாத்திரமல்லாமல், மற்றவர்களுக்கும்கூட விலையேறப்பெற்றதாய் அமைந்தது என்று யாரால் மறுத்திட முடியும்? சம்பவங்களானது நன்மையினை அதிகமாகவோ அல்லது கொஞ்சமாகவோ கொணர்ந்ததாகத் தோற்றமளித்தாலும், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், அனைத்துச் சூழ்நிலைகளிலும் உண்மையாய் இருப்பது என்பதே, என்ன நடந்தாலும் நம்முடைய கடமையாய் இருப்பது போல, ஸ்தேவானுக்கும் கடமையாகவும் இருந்தது. கர்த்தருடைய வேலையானது, அவரது கரங்களில் இருக்கின்றது என்றும், அவருக்கும், சத்தியத்திற்கும், நமக்கு அருளப்பட்டிருக்கும் வாய்ப்புகளுக்கும் உண்மையாய் இருப்பதே நம்முடைய காரியமாய் இருக்கின்றது என்றும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
இதழாசிரியரானவர் தானும், பயண ஊழியர்கள் யாவரும், எங்குமுள்ள சபை மூப்பர்கள் யாவரும் மற்றும் பொதுவிடங்களிலோ அல்லது தனிமையில் சந்தித்தோ, இயேசுவின் நாமத்தில் பேசுகிறவர்களாகிய சகோதரர் யாவரும், பிரகாசித்த ஸ்தேவானின் முகத்தினைத் தங்கள் ஞாபகங்களில் பதியப்பெற்றிருக்க விரும்புகின்றார். இப்படிச் செய்வோமானால் நமது கர்த்தருடைய பிரதிநிதிகளென நாம் தனிமையில் அல்லது பொதுவிடங்களில் மனுஷர் முன் நிற்கும் ஒவ்வொரு தருணத்திலும், நாம் அவரது ஆசீர்வாதத்தினையும், அவரது ஊழியக்காரர்களாய் இருப்பதற்குரிய நமக்கான சிலாக்கியத்தினையும் உணரமுடிந்தவர்களாகி, அதினால் நம் இருதயங்கள் நிரம்பி, நம்முடைய முகங்கள் – ஊழியம் புரிவதற்குரிய சிலாக்கியத்திற்கான நன்றியில், மகிழ்ச்சியில் பிரகாசித்திடும்;; அப்போதுதான் நாமும் உயர்வான ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்வோம் மற்றும் சந்தேகத்திற்கிடமின்றி சத்தியத்திற்காய் ஆயத்தமான இருதயமுடையோர் யாவருக்கும் மற்றும் இன்னுமாகச் சத்தியத்திற்காக இன்னமும் ஆயத்தமடையாமல், தர்சு பட்டணத்துச் சவுல்போன்று, சத்தியத்திற்காக ஆயத்தமாகும் வண்ணமாகக் கர்த்தருடைய வழிநடத்துதல் மற்றும் பயிற்சியின் கீழ்க் காணப்படுபவர்களுக்கும் – பெரிய அளவிலான ஆசீர்வாதத்தினை நாம் கொண்டுவருபவர்களாய் இருப்போம்.
நம்முடைய பாடத்தின் ஆதார வசனம், இவ்விஷயத்திற்கு மிகவும் பொருத்தமானதாய்க் காணப்படுகின்றது. கர்த்தருடைய ஜனங்கள் விசேஷமாகச் சத்தியம் தொடர்பான தங்களது உண்மை பற்றின விஷயத்தில் சோதனைக்குள் காணப்படுகையில், ஆண்டவருடைய இந்த வார்த்தைகளை நினைவில்கொள்ள வேண்டும். மனிதர்கள் நம்முடைய சரீரங்களைக் கொன்றுபோடலாம் அல்லது நம்மைக் குறித்துத் தீமையாய்ப் பேசிடலாம் அல்லது நிந்தித்திடலாம்; எனினும் நம் புதுச்சிருஷ்டிகளுக்கு அவர்களால் தீங்குச் செய்யவோ அல்லது எதிர்க்கால ஜீவியம் குறித்த நம்முடைய நம்பிக்கைகளை அழித்துப்போடுவதோ அவர்களால் கூடாத காரியமாய் இருக்கின்றது. கர்த்தர் தம்முடைய உண்மையுள்ளவர்களுக்கு வாக்களித்துள்ளதான அந்த ஜீவனோ – உயிர்த்தெழுதலின் ஜீவனோ – மனுஷனுடைய வல்லமைக்கு அப்பாற்பட்டது. அது நித்தியகாலமான, விலைமதிக்கமுடியாத ஜீவனாகும். தற்கால ஜீவன் மற்றும் அழிந்துபோகும் சரீர நிலைமை தொடர்புடைய விஷயத்தில் இழப்புகளைப் பொருட்படுத்தாமல், அந்த ஜீவனை அடைவோமானால், நாம் மகா விலை பேசி, மாபெரும் பரிசினை அடைந்தவர்களாய் இருப்போம். அதனை உண்மையாய் உணர்ந்துகொள்பவர்கள் யாவரும், அதனை “விலையுயர்ந்த ஒரு முத்தாக” காண்கின்றனர்; இதற்காக ஆண்டவர் போன்று அனைத்தையும் ஒப்புக்கொடுக்க விரும்புகின்றனர் – அதனை தாங்கள் அடையத்தக்கதாக, தாங்கள் பெற்றிருக்கும் அனைத்தையும் விற்பதற்கு விரும்புகின்றனர். [R2953 : page 45]
தேவன் ஆத்துமாவினைக் கொல்ல வல்லவராய் இருக்கின்றார் – ஜீவனை முற்றிலுமாய் அழித்துப்போட வல்லவராய் இருக்கின்றார் மற்றும் முழுமையான வெளிச்சம் மற்றும் அறிவிற்கு எதிரான துணிகரமான பாவம் செய்யப்படும் சந்தர்ப்பங்கள் அனைத்திலும், இப்படியாக அழித்துப்போடுவார் என்று அவர் எச்சரித்தும் இருக்கின்றார். இது ஆறுதலடையவும் மற்றும் அச்சமடையவும் வேண்டிய விஷயமாகும். இது திரளான ஜனங்கள் நித்தியகாலமும் வேதனையடைவார்கள் என்ற தவறான மனித போதனைக்கு எதிராய், ஆறுதலளிக்கின்றதாய் இருக்கின்றது; இது தெய்வீகக் கிருபையினை ருசிப்பார்த்தும், அவருக்குக் கீழ்ப்படிபவர்களுக்குரிய தேவனுடைய கிருபையான ஏற்பாடுகளைக் கற்றறிந்த பிற்பாடும், நம்மில் எவரேனும் பின்வாங்கிப்போய், நம்முடைய அனைத்தையும் – ஜீவனை இழந்து போகாதபடிக்கு நம்மைப் பயமடையச் செய்கின்றது!
ஜீவியத்தில் சரியான ஓட்டம் மேற்கொள்ள வேண்டுமெனில், நமக்குவரும் ஜீவியத்தின் பிரச்சனைகள் மற்றும் சோதனைகளை எதிர்க்கொள்ள முடியவேண்டுமெனில், உபத்திரவத்தில் களிகூரும் ஆவியில் மற்றும் கர்த்தர் வழிகாட்டியுள்ள பிரகாரம் இத்தகைய அனுபவங்கள் அனைத்தையும் சந்தோஷமாய் எண்ணி சோதனைகளையும், பிரச்சனைகளையும் சரியான ஆவியில் எதிர்க்கொள்ள வேண்டுமெனில் – கண்ணியைக் கொண்டுவரும் மனுஷனுக்கான சகல பயத்தையும் அகற்றிடுவது அவசியமாகும். யேகோவா தேவனுக்குப் பயப்பட வேண்டும் என்றும், அழிந்துபோகிற சக மனிதர்களுக்குப் பயப்பட வேண்டாம் என்றும் நமது கர்த்தருடைய கட்டளைக் காணப்படுகின்றது. நீதிமான் சிங்கத்தைப்போன்று தைரியமுள்ளவனாகவும், புறாவைப் போன்று கனிவாயும் மற்றும் ஆட்டுக்குட்டியினைப் போன்று சாந்தமாகவும் காணப்படுவார். இந்த விநோதமான கலவை ஒவ்வொரு கிறிஸ்தவனிடத்திலும் காணப்பட வேண்டும்; மற்றவர்களிடத்தில் இப்படிக் காணப்படுமா என்பது சந்தேகத்திற்குரியதேயாகும்.