R5517 (page 245)
மத்தேயு 12:36
மனுஷர்களின் ஒவ்வொரு கேடான வார்த்தைக்கும், அவர்கள் கணக்குக்கொடுக்க வேண்டும் என்று கர்த்தர் கூறியிருந்தாலும், அவர் பேசப்படும் வார்த்தைகளுக்குப் பின்னாகக் காணப்படும் எண்ணங்களைச் சுட்டிக்காட்டுகின்றார். இருதயத்தின் மனப்பான்மையே, அவருக்குப் பெரும் வேதனையை அளித்தது. பரிசேயர் மற்றும் சதுசேயரின் இருதய நிலைமை, அவர்களுக்கே பாதிப்பைக் கொண்டுவரும் என்று கர்த்தர் அறிந்திருந்தார்.
கர்த்தருடைய ஜனங்கள் நீதியாய் இருப்பது எப்படி என்பதைக்; கற்றுக்கொள்வதைக் காட்டிலும், அவர்களுக்கு வேறு எதுவும் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. அன்பாக இருப்பதும், இரக்கத்துடன் இருப்பதும், பெருந்தன்மையாய் இருப்பதும் சரியான காரியங்களாக இருந்தாலும்கூட, நீதியே குணலட்சணத்தின் ஆதாரமாய் இருக்க வேண்டும். நீதியை ஆதாரமாகக் கொண்டிராத அன்பும், இரக்கமும் கர்த்தருக்குப் பிரியமானதாகவும் இருப்பதில்லை, அவரைத் திருப்திப்படுத்துகிறதாகவும் இருப்பதில்லை. மற்றவர்களுடனான விஷயங்களில், ஒரு தேவனுடைய பிள்ளையானவன் – மற்றவர்களிடமிருந்து எதை எடுத்துப்போடலாம்? என்று யோசிக்காமல், மற்றவர்களுடைய உரிமைகள் என்ன? மற்றும் நான் என்ன செய்ய வேண்டும் என என்னுடைய பரம தந்தை விரும்புவார்? என்றே யோசிப்பான்.
எந்த ஒரு விஷயத்திலும், ஒரு மனுஷன் தனக்கான சொந்த உரிமைகளை அடையாளம் கண்டுகொள்வது இயல்பான காரியமாகும். ஆனால் விழுந்துபோன சுபாவமோ மற்றவருடைய உரிமைகளை உடனடியாக உணர்ந்துகொள்வதில்லை. ஆகவே கர்த்தருடைய ஜனங்கள், மற்றவர்கள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புவார்களோ, அதையே அவர்களும், மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும், அதாவது நீதியாய்ச் செய்ய வேண்டும் என்பதே அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான படிப்பினைகளில் ஒன்றாகும்.
கர்த்தருடைய அருமையான ஜனங்களில் அநேகர், புதிய சுபாவத்திற்குரிய சட்டங்களுக்குக் கீழ்ப்படிதல் என்பது, மற்றவர்களுடைய விஷயத்தில் தாங்கள் “பொன்னான பிரமாணத்திற்கு முழுமையாய்க் கீழ்படிவதைக் குறிக்கின்றதாய் இருக்கும் என்பதை முழுமையாய் உணர்ந்துகொள்ளவில்லை என நாம் அஞ்சுகின்றோம். கர்த்தருடைய ஜனங்கள் தங்களுக்கு மற்றவர்கள் என்ன செய்ய வேண்டுமென விரும்புகின்றார்களோ, அதையே மற்றவர்களுக்கும் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிரியையிலும், வார்த்தையிலும், முடிந்தமட்டும் ஒவ்வொரு எண்ணத்திலும் நீதி ஆளுகை செய்யத்தக்கதாக, சரீரத்தைக் கீழ்ப்படுத்துவது என்பது புதிய சிருஷ்டியின் கடமையாகும். ஒருவன் தன்னுடைய செயல்களில் நீதியாய் இருப்பதற்கு முன்பு, அவன் தன்னுடைய எண்ணங்களில் நீதியாய்க் காணப்பட வேண்டும். அநீதியான எண்ணங்களை உடையவன், எவ்வளவுதான் நீதியான செயல்களைச் செய்ய முயற்சித்தாலும், அவன் அநீதியாகச் செயல்புரிகின்றவனாகவே இருப்பான்.