R5501 (page 218)
“இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” என்ற ஆண்டவருடைய வார்த்தைகளே – சகோதர சகோதரிகளாக நாம் ஒன்று கூடுவதற்கு, நமக்கு அதிகாரம் கொடுத்தது என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. (மத்தேயு 18:20) இது கர்த்தருடைய ஜனங்களெனக் கூடுவதற்கு நமக்கான உரிமை பத்திரமாக இருப்பதினால் இதன் அடிப்படையில் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அவருடைய நாமத்தில் கூடி வர விரும்பும் தேவனுடைய ஜனங்கள் அனைவருக்கும் சரிசமமான உரிமை இருப்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்தக்கொள்கைப் பற்றின வேதாகமத்தின் உதாரணத்தை நாம் நினைவில்கொள்ள வேண்டும்: ஒரு தருணத்தில் பன்னிரண்டு சீஷர்களும், பிரசங்கம் பண்ணிவிட்டு திரும்பினபோது, பரிசுத்த யோவான், இயேசுவை நோக்கி, “ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான். அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்” என்று கூறினார். (லூக்கா 9:49,50) இங்கு யோவான் தடுத்த அந்நபர், இன்று நாம் கலந்துகொள்ளும் கூடுகைகளையல்லாமல் வேறே கூடுகைகளை நடத்திவரும் சிலருக்கு ஒத்திருக்கின்றார். இயேசு என்ன கூறினார்? “அவனைத் தடுக்க வேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ் செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான்” என்றார் (மாற்கு 9:39; 38-40).
இதுபோன்ற காரியங்களிலுள்ள தேவனுடைய சித்தம் தொடர்பாக, அவருடைய ஜனங்களுக்குப் போதிப்பதற்கு உதவும் பொதுவான கொள்கை இங்குக் காணப்படுகின்றது. நம்முடைய ஏற்பாடுகள் / ஒழுங்குகள் கர்த்தருக்கு மிகவும் பிரியமாய் இருக்கின்றது என்றே நாம் எண்ணுகின்றோம், இல்லையேல் இந்த ஒழுங்குகளை நாம் நடைமுறைப்படுத்தியிருக்க மாட்டோம். ஒருவேளை மற்றவர்கள் வித்தியாசமாக எண்ணினார்கள் என்றால், பொறுப்பு அவர்களுடையதும், கர்த்தருடையதுமாய் இருக்கின்றது. அவர்களைத் தடுப்பது நமக்கடுத்தக் காரியமல்ல, மாறாக அவர்களை ஆசீர்வதிப்பது (அ) அவர்களை ஆசீர்வதிக்காமல் இருப்பது என்பது, கர்த்தருடைய வேலைகளை நிர்வகிக்கும் விஷயத்தில், அவரது ஞானத்தின் அடிப்படையிலான, அவருடைய காரியமாய் இருக்கின்றது.
இந்தக் கருத்தின்படிச் செயல்படுத்தப்படுவது என்பது, கர்த்தருடைய ஜனங்களின் கூடுகைகளை மிகச் சிறிய வகுப்புகளாகப் பிரித்துவிடுவதாக இருக்காதா எனச் சிலர் கேட்கலாம். இது அந்தச் சகோதர சகோதரிகளைச் சார்ந்துள்ளது என்று நாம் பதிலளிக்கின்றோம். இரண்டு பேராகவும், மூன்று பேராகவும் அல்லது அதிக எண்ணிக்கைக்கொண்டவர்களாகவும் கூடுவதற்கு இவர்கள் உரிமை உடையவர்களாய் இருக்கின்றனர். ஒருவேளை இவர்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதை அநுகூலமானதாகக் கண்டார்களானால், இப்படியாக இவர்கள் கூடுவதில் மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் ஐயமில்லை. இது இயேசுவினுடைய நேரடியான மற்றும் அப்போஸ்தலர்கள் வாயிலான போதனைகளின் வார்த்தைகளுக்கும், ஆவிக்கும் உட்பட்ட நிலையில், சபையில் அதிகளவிலான சுயாதீனம் இருப்பதைக்குறிக்கின்றதாய் இருக்கின்றது.
சகோதர சகோதரிகள் சபையாராகக் கூடுகையில், தங்களுடைய தனிப்பட்ட சுயாதீனங்கள் மற்றும் சிலாக்கியங்களில் சிலவற்றை விட்டுக்கொடுக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தனிப்பட்ட விருப்பங்கள் என்பது சபையாரின் விருப்பத்திற்கென ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும். சபையில் பெரும்பான்மையானவர்கள், சிறுபான்மையானவர்களின் விருப்பங்களைக்கூடக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்; கூடுமானால் அனைவருக்கும் அறையில் இடம் இருக்கத்தக்கதாகவும், செய்தியாளர்கள் விஷயத்திலும், கூட்டம் நடைபெறும் இடத்தின் விஷயத்திலும், கூட்டத்தின் வகை திருப்திகரமாய் இருக்கத்தக்கதாகவும், ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஒருவரும் தன்னுடைய விருப்பங்களையும், நன்மைகளையும், சுயநலமாய்க் கருத்தில்கொள்ளக் கூடாது. ஒத்துழைக்கும் சிந்தையும், பொன்னான பிரமாணமும், அன்பின் ஆவியும் நிலவ வேண்டும். ஆண்டவருடைய ஆவியில் நிரப்பப்பட்டு, அவரோடு நெருக்கமாய் வாழும் அனைவரும், அனைவரின் நலன்கருதி, தனிப்பட்ட விருப்பங்களை விட்டுக்கொடுத்து, ஒருவருக்கொருவர் ஐக்கியம்கொள்வார்கள்.
மனசாட்சியின் விஷயங்கள் எனும் காரியம் மாத்திரமே, பெரும் பான்மையானவர்களின் சித்தத்திற்கென்று ஒப்புக்கொடுக்கப்பட வேண்டியதில்லை. ஒருவனும் தன்னால் பாவம் என்றும், அநீதி என்றும், [R5502 : page 219] தவறு என்றும் நம்புகிற விஷயத்தை, மீதமான சகோதர சகோதரிகள் அனைவரும் அதைச் சரியான விஷயம் என்று எண்ணினாலும் கூட அவன் அதைச் செய்யக்கூடாது. ஒரு காரியத்தை ஒருவனுடைய மனசாட்சியானது செய்வதற்கு வழிநடத்துகையில், மீதமான சகோதர சகோதரிகள் அதைச் செய்யாமல் விட்டுவிட்டாலும், அவன் அதைச் செய்யாமல் விடக்கூடாது.
மனசாட்சியானது, எப்பொழுதும் மதிக்கப்பட வேண்டும், ஒருபோதும் அது கொல்லப்படக்கூடாது (அ) மீறப்படக்கூடாது. தன்னுடைய மனசாட்சிக்கு உண்மையாய் நிற்கும் எவர் ஒருவரும், அவருடைய சகோதர சகோதரிகள் அக்காரியத்தை வித்தியாசமான கண்ணோட்டத்திலிருந்து பார்த்தாலும்கூட, அவரை அவமதித்திடக்கூடாது. மாறாக அவருடைய திடமான நம்பிக்கையில் அவர் தைரியமாய் நிற்பது மதிக்கப்பட வேண்டும்.
இந்தக்கொள்கைகளின் அடிப்படையில் கிறிஸ்துவின் சரீரத்தில் சுயாதீனம் தக்கவைக்கப்படலாம்; மேலும் எந்தளவுக்கு ஒத்த மனமுடையவர்கள் ஒருவரோடொருவர் ஐக்கியம்கொள்ள முடிகின்றதோ, அவ்வளவாய் நாம் ஆசீர்வாதத்தை அடைய முடியும். ஐக்கியம் தக்கவைக்கப்படாத இடங்களில், ஒன்று கூடுதல் என்பது விரும்பத்தகாததாகவும், தெய்வீக ஒழுங்குகளுக்கு இசைவற்றதாகவும் காணப்படும். மேலும் வெவ்வேறு கூட்டங்களில் கூடுவது, அநுகூலமாய் இருப்பதாகச் சகோதர சகோதரிகள் காண்பார்களானால், உண்மையில் தனிப்பட்ட சுயாதீனத்தின் மீது மிகுந்த கட்டுப்பாடு செலுத்தப்பட்டுள்ளது என்றும், சிறுபான்மையாக இருக்கும் சகோதர சகோதரிகளுடைய உணர்வுகளுக்குப் பெரும்பான்மையாய் இருக்கும் சகோதர சகோதரிகள் மிகவும் அக்கறையற்று இருந்துள்ளனர் என்றும் நாம் நம்புகின்றோம்.
ஒரே பட்டணத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட கர்த்தருடைய ஜனங்களின் கூடுகை அவசியமானதாக (அ) விரும்பத்தக்கதாகக் காணப்பட்டாலும்கூட, நிச்சயமாய் அவர்கள் ஒரே மனமும், ஒரே இருதயமுமே கொண்டிருக்க வேண்டும்; இன்னுமாக அபிஷேகிக்கப்பட்ட தலையின் கீழ் ஒரே சகோதரத்துவம் உடையவர்களாகவும் இருக்க வேண்டும். இவர்கள் ஒருவருக்கொருவருடைய நலன்கருதி ஒருவரையொருவர், “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவும்படிக்குத்” தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் (எபிரெயர் 10:24).