R4709 (page 356)
அந்தோ பரிதாபம்! சுயாதீனம் என்பது எத்தகைய ஆபத்தான ஒன்று என்றும், நமக்குப் பிரயோஜனப்படும் வகையில் அது எத்தனை ஜாக்கிரதையாய்ப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மற்றும் நம்முடைய நித்திய அபாயத்திற்கு ஏதுவாய் அது எத்தனை சுலபமாய்த் தவறாய்ப் பயன்படுத்தக்கூடும் என்றும், எத்தனை சொற்பமானவர்களே உணர்ந்திருக்கின்றனர்! தேவன் நம்மைச் சுதந்தரமாய்ச் செயல்படுபவர்களாய்ச் சிருஷ்டித்திருப்பதன் காரணத்தினால், இது அவரது சாயலின் ஒரு பாகமாய் இருப்பதன் காரணத்தினால், முன்னேறுகிற ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் குறிக்கோள் என்பது ஒரு பாகமாகக் காணப்பட வேண்டும் என்ற காரணத்தினால், சுதந்தரமாய்ச் செயல்படும் இத்தன்மையும், குறிக்கோளும் சேர்ந்து, நம் அனைவரையும் குணலட்சண பரீட்சையின் கீழாகக் கொண்டு வருகின்றது. நம்முடைய திறமைகள் அதிகமாய்க் காணப்படுகையில், நம்முடைய தாலந்துகள் அதிகமாய்க் காணப்படுகையில் மற்றும் நம்முடைய செல்வாக்கு பரந்துவிரிகையில், குறிக்கோளின் வல்லமையும் பலமாகுகின்றது. பின்னரே சோதனை வருகின்றது. அதாவது இந்த நலமான குறிக்கோள் திவ்விய சித்தத்திற்குக் கீழ்ப்படுத்தப்படுமா – மரணம் வரையிலும் கர்த்தருடைய சித்தத்தைச் செய்யத்தக்கதாக முற்றும் முழுமையாய் அர்ப்பணிக்கப்பட்டிருக்குமா? என்ற சோதனைக் கடந்து வருகின்றது.
ஒருவேளை கர்த்தருக்கான நமது அர்ப்பணிப்பானது முழுமையாகக் காணப்படுமானால், நம்முடைய எண்ணங்களையும், வார்த்தைகளையும், கிரியைகளையும் முழுக்கக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்போமானால், நம்முடைய சுயாதீனமும், பெரிதான குறிக்கோளும் சரியாய்ச் செயல்படுகிறதாயும், நமக்கும், மற்றவர்களுக்கும் இறுதியில் ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறதாயும் இருக்கும். ஆனால் ஒருவேளை திவ்விய சித்தமானது முதலாவதாகக் காணப்படாமலும், நம்முடைய சித்தங்களை முழுமையாய்க் கட்டுப்படுத்துகிறதும் இல்லையெனில், நாம் அதிகம் குறிக்கோளும், அதிகம் சுயாதீனமும் கொண்டிருப்பதற்கேற்ப, நமக்கான அபாயமும் அதிகமாய் இருக்கும். எங்குக் கர்த்தர் தொழுதுகொள்ளப்படுகிறதில்லையோ மற்றும் இருதயத்தோடும், மனதோடும், ஆத்துமாவோடும் மற்றும் பலத்தோடும் அவருக்குக் கீழ்ப்படிகிறதில்லையோ – வேறு யாரோ, அதாவது கணவனோ (அ) மனைவியோ, பெற்றோர்களோ (அ) பிள்ளைகளோ அல்லது சுயமோ – நமது இருதயங்களில் செல்வாக்கு கொண்டிருக்கின்றனர் என்பதாயிருக்கும். நம்முடைய இருதயங்களானது கர்த்தருக்கு முற்றிலும் நேர்மையாகவும், சுய சித்தமும், மற்ற ஒவ்வொரு சித்தமும் முற்றிலுமாய்த் திவ்விய சித்தத்திற்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இல்லையேல், நாம் ஜெயங்கொள்பவர்களாகிட முடியாது. இதுவே ஜெயம் கொள்பவர்களுக்கான ஜீவியம் முழுவதுமான படிப்பினையாக இருக்கின்றது. ஒவ்வொரு போராட்டங்களின் போதும், இறுதியில் தேவ கிருபையால் நாம் சமநிலையடைகையில் நாம் எவ்வளவாய்க் களிகூருகின்றோம்!
இந்த விஷயங்களில் மிகவும் முதன்மை வகிக்கும் சகோதரர்கள், மிகவும் கடுமையான சோதனைக்குள்ளாகுகின்றனர் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த நிலைமையின் காரணமாகத்தான், “என் சகோதரரே, அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக” (யாக்கோபு 3:1) என்று அப்போஸ்தலன் நம்மை முன்னெச்சரிக்கைப் பண்ணுகின்றார். போதகர்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் சிலரின் திசைமாறுதல் என்பது, போதகர்களல்லாத மற்றவர்களுக்கு விசேஷித்த சோதனைகளை உண்டாக்குகிறதாய் இருந்து, கர்த்தரிடத்தில் எந்தளவுக்குத் தனிப்பட்ட உறவைக்கொண்டிருக்கின்றனர் என்பதை நிரூபிக்கின்றதாகவும் இருக்கும் – அதாவது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளின் வாயிலாகவும், அவருக்கான தனிப்பட்ட அர்ப்பணிப்பின் வாயிலாகவும் மற்றும் கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் அவரது வார்த்தைகள் மற்றும் தீர்க்கத்தரிசனங்கள் மூலமான அவரது அறிவுரைகள் வாயிலாகவும், கர்த்தரிடத்தில் எந்தளவுக்குத் தனிப்பட்ட உறவைக் கொண்டிருக்கின்றனர் என்பதை நிரூபிக்கின்றதாகவும் இருக்கும். அநேகர் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் பழக்கத்தில் காணப்படுகின்றனர்; இந்த மற்றவர்கள் இடறி விழுகையில், இந்த அநேகருக்கு விபரீதங்களைக்கொண்டு வருகின்றதாயிருக்கும். இந்தக் கொள்கையினை நாம் நீண்டகாலமாக அடையாளம் கண்டு கொண்டுள்ளபடியாலே, நாம் எழுதுகையில், நாம் கர்த்தருடைய செய்தியை, அவருடைய செய்தியாகவே முன்வைத்துள்ளோமே ஒழிய, எங்களுடைய செய்தியாக அல்ல; ஒவ்வொரு உபதேசத்திற்கான வேத அதிகாரத்தையும், வசனத்தையும் கொடுத்துள்ளோம்.