R4121 (page 23)
அன்புக்குரிய சகோதரர் ரசல் அவர்களே:-
நான் விஷயத்திற்குள் கடந்துபோவதற்கு முன்னதாக, இப்படி எழுதுவதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்.
என்னுடைய இந்தக் கேள்வியானது, அநேக வாரங்களாக, மிகவும் விடாப்பிடியாய் மனதை அழுத்திக்கொண்டிருந்தது மற்றும் அடக்கிப்போடப்படவும் முடியவில்லை. அதை நான் அடக்கவும், மறக்கவும், என் காரியமல்ல என்று விவாதித்து, அதை அசட்டைப்பண்ணவும் முயன்றேன்; “என் சகோதரனுக்கு நான் காவலாளியோ? என்பதானது என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது மற்றும் அது என்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது மற்றும் அதை என்னால் மாற்றிப்போடவும் முடியவில்லை. அதை நான் கர்த்தரிடத்தில் எடுத்துச் சென்று, என்னுடைய பேனா எழுத்துக்களுக்குக் வழிக்காட்டும்படிக்கு அவரிடம் ஜெபித்துக்கொண்டேன்.
முதலாவது காரியம் – மனைவியின் கீழ்ப்படுத்தப்படுதல் குறித்தும், புருஷனுடைய தலைமைத்துவம் குறித்தும் அடிக்கடி குறிப்பிடுவதும், இவ்விஷயங்களை மிகவும் மிகைப்படுத்திக் கூறுவதும் சிலர் மத்தியிலான வழக்கமாய் இருக்கின்றது (ஐயத்திற்கிடமின்றி தங்களையும் அறியாமல்தான் இப்படிக் கூறுகின்றனர்); ஆனால் இவர்கள் (என் காதுகளுக்கு எட்டினது வரையிலும்) புருஷனுக்குரிய தலைமைத்துவம் தவிர, மற்றப்படி புருஷனுக்குரிய கடமைகளைக் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கு முற்றிலுமாகத் தவறிவிடுகின்றனர்; “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்தார் என்றும், “உங்கள் மனைவியர் வலுகுறைந்தவர்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு மதிப்புக்கொடுங்கள் எனும் கட்டளைகளைச் சுட்டிக்காட்டாமல் விட்டுவிடுகின்றனர் (எபேசியர் 5:25; 1 பேதுரு 3:7 திருவிவிலியம்). வேதவாக்கியங்களை இப்படி ஒரு சார்பாகச் செயல்படுத்துதல் என்பது ஒரு குறிப்பிட்ட வகை புருஷனை, துரதிருஷ்டவசமாக அரிதான வகையாய் இராதபுருஷனை, குறுகிய மனப்பான்மையுடைய கொடுங்கோலனாக்கி/அடக்குமுறையாளனாக்கி, மனைவி தனக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று எப்போதும் அவளை நினைவுப்படுத்துகிறவனாக்கி, தான் யார் மீதோ எஜமானாக இருப்பதுபோன்ற எண்ணத்தினால் அவனைப் பெருமிதம்கொள்ளச் செய்கின்றது மற்றும் தன் சார்பிலான அவனது கடமையினை அவன் புறக்கணித்துவிடச்செய்கின்றது மற்றும் ஒருவேளை அவள் தாழ்வுபடுகிறவளாக இருப்பாளானால், அவளை அடிமை நிலைக்குத் தாழ்வுப்படுத்துகின்றான். இப்படியாக அவளை அவன் வற்புறுத்துகையில், அவளை மதிப்பதை அவன் நிறுத்திவிடுகின்றான். இம்மாதிரியான போதித்தல்களானது சில குறிப்பிட்ட மனப்பண்பாற்றலுடைய புருஷர்களை (இத்தகைய அநேகரை), டெனிசீ அவர்களால் வாட்ச் டவர் நவம்பர்-15-ஆம் வெளியீட்டில் இடம்பெற்ற அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதான பாத்திரங்களாக்கிவிடுகின்றது.
இப்படியான ஒரு துன்பம் எனக்கு இருக்கின்றதெனக் கற்பனைப் பண்ணப்படாதபடிக்கு, எனக்கு இப்படி ஒரு துன்பம் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். எனது கணவர் சிறந்த கிறிஸ்தவ கண்ணியவான்களில் ஒருவராவார் மற்றும் என்னைப் பொறுத்தவரையில் அவர் விழுந்துபோன மனுஷீகத்தில் முடிந்தமட்டிலும் குடும்பத்தலைவருக்குரியவைகளை நிறைவேற்றுபவராகக் காணப்பட்டு, என்னுடைய ஜீவியத்தைப் பாசத்தினாலும், பாதுகாப்பினாலும், பராமரிப்பினாலும் அழகுபடுத்தியுள்ளார்.
இரண்டாவது காரியம் கல்வி கற்பிப்பவர்கள் அனைவரும், பொதுத் திறமைகளின் கல்வி கற்பிப்பவர்கள்கூட, மாணவர்களிடம் கேள்வி கேட்பதின் முக்கியத்துவத்தைக்குறித்துத் தெரிந்திருக்கின்றனர் மற்றும் புரிந்திருக்கின்றனர் (என் கணவரும், நானும் இப்படிப்பட்ட பணியினை 20-வருடங்களுக்கு மேலாகச் செய்துவருகின்றோம்; அவர் மருத்துவக் கல்லூரிகளிலும், நான் பொதுப் பள்ளிக்கூடங்களிலும் செய்துவருகின்றோம்); ஆனாலும் டாண் புத்தகங்களோடு அல்லது ஆசரிப்புக்கூடார நிழல்கள் புத்தகத்தோடு வேதாகம ஆராய்ச்சி பண்ணிடுவதற்காகக் கூடிக்கொள்ளும் எளிய வகுப்பில், ஒரு கேள்விகூடச் சகோதரிகள் ஒருவரிடம் கூடக் கேட்கப்படுகிறதில்லை. அவள் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறாள்; வாரம் முழுக்கக் கூட உழைத்திருந்திருக்கலாம்; ஞாயிற்றுக் கிழமையிலுங்கூட அவள் உழைத்திருந்திருக்கலாம்; ஆண்களைத் திகைக்கப்பண்ணும் சுமையான வேலைகளை அவள் செய்கிறாள் – துணிகளைத் துவைக்கிறாள், துணிகளைச் சலவைச் செய்கிறாள், துப்புரவுச் செய்கிறாள், ரொட்டி சுடுகிறாள், துணி தைக்கிறாள், கணவனுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் சமைக்கிறாள், இப்படியாக வீட்டுவேலையோடு சம்பந்தப்பட்ட ஆயிரமாயிரமான வேலைகளைச் செய்கிறாள் – இதனால் வாசிப்பதற்கோ அல்லது கற்பதற்கோ நேரமில்லாமல் காணப்படுகிறாள்; ஆனாலும் அவள் வேதாகம வகுப்பில் கலந்துகொள்கையில், இந்த முக்கியமான உதவியானது அவளுக்கு மறுக்கப்படுகின்றது. அவளைச் சிந்திப்பதற்கு வழிநடத்துகிற, அவளது ஆவலைத் தூண்டுகிற அல்லது அவளது மனதைக் கவர்ந்து, அவளது கவனத்தை ஈர்க்கிற ஒரு கேள்விக்கூட அவளிடம் கேட்கப்படுகிறதில்லை. இதைக்குறித்துச் சிந்தித்துப் பாருங்கள்! கூட்டம் சுவாரசியமற்றுக் காணப்படுகிறதில் ஆச்சரியப்படுவதற்கில்லையே.
பாஸ்டர் ரசல் அவர்களே, இப்படியாகக் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் (ஒரு பகுதியினரிடமிருந்து) அங்கத்தினர்களிடமிருந்து, அறிவைப் பெறுவதற்கு ஏதுவான விலையேறப்பெற்றதாய் இருக்கும் இந்த உதவியானது பிடுங்கப்படுவதைத் தாங்கள் அங்கீகரிக்கின்றீர்கள் என்பதை, தங்களது கையெழுத்துடன் பார்த்தாலொழிய, மற்றப்படி நான் நம்பமாட்டேன். தனிப்பட்ட விதத்தில் சொல்ல வேண்டுமானால், என்னிடம் கேள்விக் கேட்கப்பட்டாலும் அல்லது கேள்விக் கேட்கப்படாமல் இருந்தாலும், அதினால் எனக்கு ஒன்றுமில்லை. சிந்திப்பதற்கும், வாசிப்பதற்கும், கற்பதற்கும், ஜெபிப்பதற்கும் எனக்கு நேரம் இருக்கின்றது மற்றும் இப்படி எனக்கு எப்போதும் இருக்கின்றபடியால் தேவனை ஸ்தோத்தரிக்கின்றேன்; ஆனால் நேரம் இல்லாதவர்களுக்காகவும் மற்றும் உள்ளடங்கும் கொள்கைகளுக்காகவும் நான் வேண்டிக்கொள்கின்றேன்.
எங்களுடைய கூடுகைகளில் முதன்மையடைய வேண்டும் என்று அல்லது என்னுடைய பிரயாசங்களினால் நான் அடையப்பெற்றவைகளை விளம்பரப்படுத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறதன் காரணத்தால் இப்படி மேலே நான் எழுதியுள்ளதாக எண்ணம் ஏற்படாதபடிக்கு, நான் மறுபடியுமாகத் தெரிவிக்க விரும்புகிறதென்னவெனில்… ஒருவேளை இவைகளை நான் விரும்புகின்றேன் என்றால், இவைகள் எனக்கு எட்டின தொலைவிலேயே காணப்படுகின்றது; இவற்றை நான் எங்கள் சிறு சபையார் மத்தியில் தேட வேண்டிய அவசியமுமில்லை. வேதவாக்கியங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளவைகளுக்கு மேலாக, சபையில் எந்த ஒரு சிலாக்கியத்தினையும் அடைந்திட நான் ஒருபோதும் விரும்பினதில்லை. ஒரு ஸ்திரீ கண்காணியாகவோ அல்லது உதவிக்காரராகவோ காணப்படவேண்டுமென்று நான் ஒருபோதும் எண்ணினதில்லை 1 தீமோத்தேயு 1:13-ஆம் வசனமானது, அவளையும், அநேகம் புருஷர்களையும் விலக்கிவைக்கின்றது. பெண்ணின் சுபாவத்திலுள்ள ஏதோ ஒன்றானது, இத்தகைய அதிகாரம் செலுத்துதலை அவளுக்கு மறுத்திடுவதற்கு ஏதுவாக்கி இருக்கின்றது. கடந்தகாலங்களில் சபையில் என்னுடைய பணியானது ஜெபக்கூட்டங்கள் அல்லது சுவிசேஷக் கூட்டங்களில் (இதை ஜெபம்பண்ணுதல் மற்றும் தீர்க்கத்தரிசனமுரைத்தல் என்று நான் காண்கின்றேன்) பங்கெடுப்பதும், ஞாயிறு பள்ளிகளில் போதிப்பதுமாக இருந்தது மற்றும் இவைகளில் நான் உற்சாகத்தையும், தேவ ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டதை நான் அறிவேன்.
[R4121 : page 24]
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தீமைகள் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் என்று நான் நம்புகின்றேன்.
கிறிஸ்துவுக்குள்ளான தங்கள்,
M. E.
மேற்கூறப்பட்டவைகளுக்குப் பதில்:
விழுகையின் காரணமாகச் சில புருஷர்களிடத்தில் புருஷனுக்குரிய தன்மையினுடைய குறைப்பாடும் மற்றும் கொடுங்கோன்மையும், சில ஸ்திரீகளிடத்தில் ஸ்திரீக்குரிய தன்மையினுடைய குறைப்பாடும் மற்றும் கொடுங்கோன்மையும் அதிகமாய்க் காணப்படுகின்றது என்று நாம் ஒப்புக்கொள்கின்றோம். பரம அழைப்பினால் அழைக்கப்பட்டவர்கள் மத்தியில்கூட, இந்த இழிவான பண்புகளானது வெளிப்படுகின்றது; காரணம் தேவன் சிறந்தவர்களைப் பிரதானமாய் அழைக்காமல், இழிவானவர்களையே அழைத்துக்கொண்டிருக்கின்றார். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மத்தியில் ஐசுவரியவான்கள் அநேகரில்லை, ஞானவான்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை முதன்மையாய் உள்ளவைகளை அவமாக்கும்படி உலகத்தின் இழிவானவைகளையும், பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி உலகத்தில் பலவீனமானவைகளையும் தேவன் தெரிந்து கொண்டார் (1 கொரிந்தியர் 1:26-28). இதற்குக் காரணம் பிரபுக்களும், மேன்மையானவர்களும் தங்கள் மீதே அதிகம் நம்பிக்கைக்கொள்பவர்களாகவும், கொடுக்கப்பட்டுள்ள ஒரே நாமத்தின் வாயிலாக மன்னிப்பையும், உதவியையும் மன்றாடிக் கேட்டுக் கொள்வதற்கும் மற்றும் ஏற்றுக்கொள்வதற்கும் ஆயத்தமற்றிருப்பவர்களாகவும் இருப்பார்கள் என்று நாம் காண்கின்றோம். ஆகையால் புருஷனுக்குரிய தன்மையினுடைய குறைபாட்டையும், ஸ்திரீக்குரிய தன்மையினுடைய குறைபாட்டையும் நாம் காண்கையில், அது நம்மைக் கோபங்கொள்ளவோ, கர்த்தரினால் அழைக்கப்பட்டவர்கள் யாவருக்குமான – சகோதரருக்கான நமது அன்பினைத் தடைப்பண்ணிடவோ கூடாது.
ஆனால் இன்னொரு பக்கத்தில், கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அனைவரும், போதகர்களிலேயே மகா பெரிய போதகரைப் பெற்றிருக்கின்றனர் மற்றும் இவர்கள் தங்கள் மனோபாவத்தில் சிறந்தவர்களிலேயே தலைச்சிறந்தவர்களாகிட வேண்டும்; ஏனெனில் “அவர்கள் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. வசனத்தின் வாயிலாக மனதில் பதியவைக்கப்படுகின்றதான ஆவியின் இந்தப் படிப்பினைகளானது, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் யாவரிடத்திலும் பரிசுத்த ஆவியின் கிருபைகளாகிய சாந்தம், நற்குணம், பொறுமை, சகோதர சிநேகம், அன்பு ஆகியவற்றை வளர்க்கின்றதாய் இருக்கின்றது. சிலர் மற்றவர்களைக் காட்டிலும் ஆவியின் இந்தக் கனிகளை மிகச் சீக்கிரமாயும், மிக ஏராளமாயும் வளர்த்துக்கொள்கின்றனர்; ஆனால் இவர்கள் இராஜ்யத்தில் சுதந்தரர்களென ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு அனைவரும் இவைகளை இருதயத்தில் அடையப்பெற்றிருக்க [R4122 : page 24] வேண்டும் (மற்றும் நிச்சயமாய்க் கொஞ்சம் வெளிப்புறத்திலும் பெற்றிருக்க வேண்டும்). எழுதப்பட்டிருக்கிறது போன்று, இவர்கள் அனைவரும் தேவனுடைய பிரியமான குமாரனும், நம்முடைய மீட்பருமானவருடைய சாயலாகிட வேண்டும்.
ஆனால் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளவர்கள் மத்தியில், இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று சிலருக்கு அடக்குமுறையாகத் தோன்றும் செயல்பாடுகள் சிலசமயங்களில் எப்படி நடைபெறுகின்றது? உதாரணத்திற்கு, பெரோயா வேதாகமக் கேள்விகளைக் கேட்கையில், சகோதரிகளிடம் கேள்விக் கேட்பதைத் தவிர்த்து கடந்து செல்லுதலாகும். இச்செய்கைக்கு ஒரு நல்லக் காரணம் இருக்குமென நம்மால் கருதிக்கொள்ள முடிவதுவரையிலும், இச்செய்கைக்குக் கெட்டக் காரணத்தினை / நோக்கத்தினைக் சாற்றிட வேண்டாம் என்று நாம் யோசனை தெரிவிக்கின்றோம். உதாரணத்திற்குக் கூட்டத்தினை வழிநடத்துபவர், “உபதேசம்பண்ண ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவுக் கொடுக்கிறதில்லை எனும் அப்போஸ்தலனின் வார்த்தைகளை, தேவன் கொடுத்துள்ள பிரமாணமெனத் தன் மனதில்கொண்டிருக்கலாம். ஒருவேளை ஒரு சகோதரியிடம் கேள்விக் கேட்பது என்பது, அவளை உபதேசம்பண்ண வரவேற்பதாய் இருக்கும் என்றும், இப்படிச் செய்வது என்பது, தான் அப்போஸ்தலனுடைய கட்டளையை மீறுகிற காரியமாய் இருக்கும் என்றும் அவர் யோசித்திருக்கலாம். ஒருவேளை “யாரேனும் பதில் சொல்கிறீர்களா? என்று கூறி சகோதரிகளுக்கு ஒரு வாய்ப்பினைக் கொடுத்திடுவதன் வாயிலாக, அவர் தனது மனசாட்சி அனுமதிக்கும் அளவுக்குச் செயல்பட்டு – ஒவ்வொரு சகோதரியும் தனது மனசாட்சியின்படி இது விஷயமாகத் தீர்மானம் எடுத்து, அதன்படி செயல்படுவதற்கு விட்டுவிடலாம் என்று எண்ணியிருக்கலாம். இத்திட்டமானது பொறுப்பினைப் பிரிக்கின்றதாய் இருக்கின்றது. மிகவும் முதன்மை வகிக்கும் சகோதரர்கள், பதிலளிக்கும் சகோதரிகளிடத்தில் நிதானமின்மைக் காணப்படுமெனக் கருதுவதே இந்த விஷயத்திலுள்ள பிரதான சிரமமாகத் தோன்றுகின்றது.
சகோதரிகள் எந்த நற்கருத்துகளையும் பெற்றிருக்க மாட்டார்கள் மற்றும் அவைகளை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் திறமையற்றவர்கள் என்றும், சகோதரிகளால் தங்கள் சொந்த குமாரர்களுக்கும், குமாரத்திகளுக்கும் நன்கு போதிக்க முடியாது என்றுமுள்ள கண்ணோட்டத்தினைச் சகோதரர்களில் யாரும் பெற்றிருக்கமாட்டார்கள் என்று நாம் விசுவாசிக்கின்றோம். போதிக்கும் விஷயத்திலும், சிந்திக்கும் விஷயத்திலும், நிர்வகிக்கும் விஷயத்திலும் ஸ்திரீகள் ஆச்சரியப்படத்தக்கதான ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதை அனைவருமே ஒப்புக்கொள்ள வேண்டும். அனைத்து உயர் பண்புள்ள புருஷர்களும், விசேஷமாக வளர்ச்சியடைந்துள்ள சகோதரர்கள் யாவரும் “கனம்பண்ண வேண்டியவர்களைக் கனம்பண்ணிட விரும்பிட வேண்டும் மற்றும் உயர்ப்பண்புள்ள தாய்மார்களையும், சகோதரிகளையும், மனைவிகளையும், மகள்களையும், பொதுவாயுள்ள பெண் இனத்தையும், அவர்களது அநேகம் உயர்ப்பண்புகள் மற்றும் நற்பண்புகளின் நிமித்தம் மிகவும் கனம்பண்ணிட வேண்டும். நிச்சயமாக இதுவே என்னுடைய இருதயத்தின் அணுகுதலாய்க் காணப்படுகின்றது.
உயர்ப் பண்புள்ள அப்போஸ்தலனாகிய பவுலை, ஸ்திரீகளை வெறுப்பவராகவோ அல்லது ஸ்திரீகளை அவமதிப்பவராகவோ நாம் எண்ணிட முடியாது. நிச்சயமாகவே அவரது நிருபங்களானது, அவரும் உண்மையான பெண்ணின் தன்மைகளைக் கனப்படுத்தியுள்ளதைத் தெளிவாய்ச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான் (எபேசியர் 5:25,28) என்று அப்போஸ்தலன் எழுதினபோது, அவரைவிட இவ்வளவுக்குக் குறிப்பாய் ஸ்திரீகளுக்கான மதிப்பினை வேறுயாராகிலும் வெளிப்படுத்தினதுண்டோ? சபையில் ஸ்திரீகளுடைய செயல்பாடு எல்லைத்தொடர்பாக அவர் எழுதிடுவதற்கான காரணம், சந்தேகத்திற்கிடமின்றி தேவனுக்கு – கடமைக்கு, அவரது நேர்மையே ஆகும். நமது கர்த்தர் தம்முடைய அப்போஸ்தலர்களைக்குறித்து, “பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று கூறினார் (மத்தேயு 16:19). நிச்சயமாகவே மற்ற அப்போஸ்தலர்களைக் காட்டிலும் பரிசுத்த பவுலடிகளாரையே – நியாயப்பிரமாணத்தினின்று கட்டவிழ்க்கப்படுகிறதைக் குறித்தும் மற்றும் “புதுச்சிருஷ்டிகள் மீது கட்டப்படுகின்றதான கடமைகள் மற்றும் பொறுப்புகளைக் குறித்தும் தெரிவித்திட நமது கர்த்தர் பயன்படுத்திட்டார்.
இது விஷயம் குறித்து அதிக ஜெபமும், தியானமும் செய்தப் பிற்பாடு, “உபதேசம்பண்ண ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை எனும் வார்த்தைகளுக்கு மிகுந்த நியாயமான ஒரு கண்ணோட்டத்தினைப் பொருத்திடலாம் என்று நாம் எண்ணுகின்றோம். அது பின்வருமாறு:
போதித்தல் என்பது சகோதரர் யாவருக்கும் அடுத்த காரியமல்ல; மாறாக தெய்வீக ஏற்பாட்டினால் விசேஷமாய்ச் சுட்டிக்காண்பிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமே உரிய காரியமாகும். இது பல்வேறு வேதவாக்கியங்களினால் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, எபேசு சபையின் மூப்பர்களிடம் பரிசுத்த பவுலடிகளார், “உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் (சபைக்குப் போதிப்பதற்கு) பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக (மூப்பர்களாக, மேய்ப்பர்களாக, கண்காணிகளாக) வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள் என்று கூறினார் (அப்போஸ்தலர் 20:28). மறுபடியுமாக “தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார் என்ற அப்போஸ்தலனின் வார்த்தைகளைக் கவனியுங்கள் மற்றும் இவர்கள் மத்தியில் “போதகர்கள் காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றார் (1 கொரிந்தியர் 12:18,28). மீண்டுமாக யாக்கோபின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “என் சகோதரரே, அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக (யாக்கோபு 3:1). இன்னுமாக மூப்பர்களைத் தேர்ந்தெடுக்கையில், கவனிக்கப்பட வேண்டிய தகுதிகளில் ஒன்று, அவர்கள் “போதகசமர்த்தனாய் இருக்க வேண்டியது என்பதாகும் (1 தீமோத்தேயு 3:2). இன்னுமாக ஆசாரிய அல்லது போதக ஊழியம் தொடர்புடைய விஷயத்தில், “ஆரோனைப்போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை என்று நாம் வாசிக்கின்றோம் (எபிரெயர் 5:4). தம்முடைய (புருஷர்களையும், ஸ்திரீகளையும், அடிமையையும், சுயாதீனனையும் உள்ளடக்குகின்ற – இவர்கள் யாவரும் கிறிஸ்துவில் ஒன்றாய் இருக்கின்ற) சரீரமாகிய சபை வாயிலாகப் பேசுகிற கர்த்தர் மூப்பர் ஊழியத்திற்கு, “போதகசமர்த்தனாய் காணப்படும் குறிப்பிட்ட சகோதரரைத் தேர்ந்தெடுக்கின்றார் மற்றும் அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுவதுபோன்று, கர்த்தருடைய மந்தையை மேய்ப்பது தொடர்புடைய விஷயத்தில் இவர்கள் மீது விசேஷித்த பொறுப்புக் காணப்படுகின்றது. “எல்லாரும் போதகர்களா?” என்று அவர் கேட்கின்றார் (1 கொரிந்தியர் 12:29).
ஆகையால் “உபதேசம்பண்ண ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை எனும் அப்போஸ்தனின் வார்த்தைகளானது, “சபையில் ஒரு பெண்-மூப்பர் காணப்படுகிறதற்கு நான் அங்கீகாரம் அளிக்கிறதில்லை என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறதாக நாம் விளக்கலாமல்லவா. இப்படியாக ஒரு சிரமம் மாற்றப்படுகின்றது மற்றும் இந்தக் கண்ணோட்டத்திற்கு இசைவாய் நாம் பின்வருமாறு வாசிப்பது சரியாய் இருக்கும், அதாவது “சபையில் ஒரு ஸ்திரீ ஜெபமோ அல்லது தீர்க்கத்தரிசனமோ உரைக்கிறாள் (கூடுகைகளில் பேசுகிறாள்) என்றால்… அவள் தன் தலையை மூடிக்கொள்வாளாக ஏனெனில் சபையில் ஸ்திரீயானவள் சபைக்கு அடையாளமாகவும், புருஷன் சபையின் தலையாகிய கர்த்தருக்கு அடையாளமாகவும் காணப்படுகின்றனர்.
இது மேலே வெளியிடப்பட்டுள்ளதான கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காரியத்திற்குத் தீர்வாய் இருக்கும். ஆகையால் சகோதரர்களிடம் கேட்கப்படுவது போலவே சகோதரிகளிடமும் பெரோயா கேள்விகள் கேட்கப்படுவது நிச்சயமாகவே சரியான காரியமாய் இருக்கும்; ஏனெனில் காரியத்தினைக் குறித்த இந்தக் கண்ணோட்டத்தின்படி, பெரோயா கேள்விக்குப் பதில்கொடுப்பவர்கள் யாரும் போதகராக இருப்பதில்லை, இது போதிப்பதாகவும் இராது; மாறாக கற்றுக் கொண்டிருக்கும் ஒருவர் அவன் அல்லது அவள் கற்றுக்கொண்டவைகளை அல்லது கர்த்தருடைய பாத்திரங்கள் அல்லது போதகர்கள் வாயிலாக [R4122 : page 25] தனக்குக் கற்பிக்கப்பட்டவைகளென்று தன்னால் கருதப்படுபவைகளை ஒப்புவிக்கின்றார் / எடுத்துரைக்கின்றார்.
இதழாசிரியருக்கு இக்கண்ணோட்டம் மிகவும் திருப்திகரமாகக் காணப்படுகின்றது மற்றும் இப்படியாகவே வாட்ச் டவர் வாசகர்கள் யாவருக்கும் காணப்படும் என்று அவர் நம்புகின்றார். ஒருவேளை கடந்தகாலங்களில் வசனமானது மிகவும் கடுமையாய்க் கைக்கொள்ளப்பட்டதன் காரணமாக அருமையான சகோதரிகளில் சிலர் காயமடைந்துள்ளார்களெனில், அவர்கள் குறுகிய சிற்றுணர்ச்சிகளைக் கடந்தவர்களாகக் காணப்பட்டு, இந்தக் கடுமைக்குக் காரணம் ஸ்திரீகளுக்கான அன்பின்மை என்று எண்ணாமல், மாறாக கர்த்தருக்கும், அவரது வார்த்தைகளுக்குமான பெரிதான அன்பேயாகும் என்று எண்ணிடுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். கடுமையான / கண்டிப்பான கண்ணோட்டத்தினால் சரியாய்ப் பயிற்றுவிக்கப்படுபவர்கள் எவரும், இதற்கேற்ப ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்வார்கள்; ஏனெனில் நமது கர்த்தர் தம்முடைய உண்மையுள்ளவர்கள் யாவருக்கும் மற்றும் ஒவ்வொருவருக்கும், அனைத்தையும் நன்மைக்கு ஏதுவாய் மாற்றிட வல்லவராயிருக்கின்றார்.
“மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன் (கலாத்தியர் 6:6).