R4929 (page 442)
நாம் “அறுவடையின் காலங்களில்” இருக்கின்றோம் என்று நாம் அடையாளம் கண்டு கொண்டுள்ளது போன்று, கர்த்தர் இப்பொழுது விசேஷமாய்க் “கோதுமையை” முதிர்வுறப்பண்ணிக் கொண்டிருக்கின்றார் என்றும், அதைக் “களைகளினின்று” பிரித்துக்கொண்டிருக்கின்றார் என்றும் மற்றும் கோதுமையை இருவகுப்பாராகப் பிரித்துக்கொண்டிருக்கின்றார் என்றும் நாம் கருதிட வேண்டும். இந்த அறுவடைகாலத்தினுடைய இந்த விசேஷித்த சோதனையைக் குறித்துதான் வேதவாக்கியங்களானது, குறிப்பாய் நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவந்து கொண்டிருக்கின்றது மற்றும் தேவனுடைய முழுச்சர்வாயுதவர்க்கங்களை நாம் தரித்துக்கொள்வதின் அவசியத்தினைக்குறித்தும் மற்றும் அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருந்து, ஆவியிலே அனலாயிருந்து, கர்த்தருக்கு ஊழியம்புரிதலின் அவசியத்தினைக்குறித்தும் அடிக்கடி அறிவுறுத்துகின்றது.
நாம் எதிர்ப்பார்த்திருக்கும் அந்தச் சோதனைகளானது, கர்த்தருடைய முதிர்ந்த கோதுமை நிலம் எங்கும் வளர்ந்துவருவதை நாங்கள் காவல் கோபுரத்திலிருந்து காண்கின்றோம். தெய்வீக வழிநடத்துதல்களானது, அன்பிற்கான, நேர்மைக்கான, விசுவாசத்திற்கான, கீழ்ப்படிதலுக்கான, சகோதர சிநேகத்திற்கான, பொறுமைக்கான சோதனைகளை அனுமதித்து வருகின்றது. மந்தைக்கு உதவ வேண்டிய, அவர்களைப் பாதுகாக்க வேண்டிய, அவர்களை எச்சரிக்க வேண்டிய, ஆதரிக்க வேண்டியவர்களாகிய மூப்பர்கள் வாயிலாகச் சோதனைகளானது சிலசமயம் சபையாருக்கு வருகின்றது. [R4930 : page 443] சிலசமயங்களில் மூப்பர்கள் திவ்விய வசனத்திற்கும், மாதிரிக்கும் முற்றிலும் எதிர்மாறாய், இறுமாப்பாய் ஆளும் மனநிலையினைக்கொண்டிருந்து, சகோதரர்களின் பொறுமையையும், அன்பையும் சோதனைக்குள்ளாக்குகின்றனர்.
சிலசமயங்களில் சோதனையானது மறுபக்கத்திலிருந்து வருகின்றது. சபையாரில் சில அங்கத்தினர்கள் மிகவும் பூரணத்தை எதிர்ப்பார்க்கின்றவர்களாக, கொசுவில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குவதற்கு மகிவும் ஆயத்தமாயிருக்கிறவர்களாக, மேலும் மூப்பர் எவ்வளவுதான் உண்மையானவராய் இருப்பினும், அவர் செய்யும் எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்க மிகவும் ஆயத்தமாயிருக்கிறவர்களாக இருந்திடலாம். இத்தகைய அனுபவங்களானது இப்பக்கத்திலிருந்து வந்தாலும் சரி அல்லது அந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும்சரி, இவைகள் சோதனைகளாக இருக்கின்றன மற்றும் இது கர்த்தருடைய ஜனங்களில் ஒவ்வொருவனும் எவ்வாறு இந்தச் சோதனைகளை ஏற்றுக்கொள்கின்றான் என்றும், அவைகள் எத்தகைய தாக்கத்தினை அவனது சொந்த இருதயம் மற்றும் குணலட்சணத்தின் மீது கொண்டிருக்கின்றன என்றும் பார்த்துக்கொள்வதை இன்றியமையாததாக்குகின்றது. ஒருவேளை இவ்வனுபவங்களானது அவனைக் கசப்புக்கொள்ள, கோபங்கொள்ளச் செய்கின்றதானால் அல்லது அவனது பெருமையினை ஆழமாய்த் தொட்டுப் புண்படுத்துகின்றதானால், இது – அவனது குறைவினை அவனுக்கு வெளிப்படுத்துவதற்கும் மற்றும் இரக்கத்திற்காகவும், உதவிக்காகவும் பரலோக கிருபையின் சிங்காசனத்தை அவனுக்குச் சுட்டிக்காட்டி, இத்தகைய கடிந்து கொள்ளுதலின் அனுபவங்கள் அவனுக்கு அவசியமாயிருக்கின்றது என்று நிரூபிக்கின்றதாய் இருக்கின்றது.
இன்னுமாக அருமையான சில சபையார் தவறான உபதேசங்கள் வாயிலாக எதிராளியானவனால் தாக்கப்படுகின்றனர் மற்றும் சத்தியத்தை, யுகங்களுக்கடுத்த தெய்வீகத் திட்டத்தை ஆதரிப்பதற்கும், அதற்கு இசைவாகத் தங்களுடைய நிலைபாட்டினைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்குமுரிய பிரயாசங்களில் கஷ்டங்களைப் பெற்றிருக்கின்றனர். இல்லையேல் அருமையான நண்பர்களில் சிலர் குற்றம் கண்டுபிடிப்பவர்களாக இருப்பதினாலும் மற்றும் எவ்வித கருத்து வேறுபாடுகள் இல்லாதிருக்க, கருத்து வேறுபாடுகளை உருவாக்கிட முயற்சிப்பதினாலும், இணக்கத்தின் ஆவியைவிட சண்டையின் ஆவியினை – அன்பைவிட உடன்பாடின்மையைத் தூண்டிடுவதினாலும் கஷ்டங்கள் ஏற்படலாம்.
அன்புக்குரிய சகோதரர்களே மற்றும் சகோதரிகளே, நாம் யாவராலும் ஒப்புக்கொள்ள முடிகிற காரியத்தையே நாம் அறிவுறுத்துகின்றோம்; அதாவது நாம் சோதனை காலத்தில் காணப்படுகின்றோம் மற்றும் இந்தப் பல்வேறு காரியங்களானது நமக்கான சோதனைகளாக இருக்கின்றன என்பதேயாகும். சத்தியத்திற்காகவும், சகோதரருக்காகவுமான அதிக அனலான ஆவியையும், அதிக வைராக்கியத்தையும் நாம் செயல்படுத்துவதினால் மாத்திரமே, நாம் உண்மையாய் நிற்கவும், மற்றவர்கள் உண்மையாய் நிற்க உதவுபவர்களாக இருக்கவும் நாம் எதிர்ப்பார்த்திடலாம். சோர்ந்துபோகாமல் இருப்போமாக. நாம் சோர்ந்துபோகாமல் இருப்போமானால், நாம் நம்முடைய பலனைச் சீக்கிரத்தில் அறுப்போம் மற்றும் “நல்லது, உத்தமும், உண்மையுமுள்ள ஊழியக்காரனே, உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று ஆண்டவர் கூறுவதைக் கேட்போம்.
பரவலாக அமைதியின்மை, அதிருப்தி முதலானவைக் காணப்படும் காலக்கட்டத்தில் நாம் காணப்படுகின்றோம். ஒரு கணம்கூட இத்தகைய அதிருப்திகளையும், முறுமுறுப்புகளையும், “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்டதான விசுவாசத்திற்கான” போராட்டங்களென எண்ணாதிருப்போமாக. மாறாக பரிசுத்த ஆவியினுடைய கனிகளையும், கிருபைகளையும் அதிகமதிகமாய் வளர்த்துப் பேணிடுவோமாக. இவைகளை “விசுவாச வீட்டாரின்” நமது சகோதரர்கள் தொடர்பாக விசேஷமாய்ச் செயல்படுத்திடுவோமாக; நிச்சயமாய் “நமக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சகல மனுஷருக்கும் நன்மை செய்வதையும்” புறக்கணியாமல் இருப்போமாக மற்றும் ஒருவருக்கொருவர் பொறுமையாயும், ஒருவரையொருவர் தாங்கியும் இருப்போமாக. “ஜீவனுள்ள தேவனுடைய சபையாகிய” கிறிஸ்துவின் சரீரத்தில் சமாதானத்தையும், சந்தோஷத்தையும், நன்மையையும், வளமையையும், கிருபையில் வளர்ச்சியையும் அபிவிருத்திச் செய்திடுவதற்கு விசேஷமாய் நாடுபவர்களுக்குக் கர்த்தருடைய விசேஷித்த ஆசீர்வாதம் கடந்து வந்திடும்.