R5981 (page 327)
இந்தச் சுவிசேஷயுகத்தினுடைய நிறைவு பகுதியானது முழு உலகத்தின் மேலும் கடந்துவரும் “சோதனைகாலமாய் இருக்குமெனக் கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு அறிவுறுத்தனது வீணா? (வெளிப்படுத்தல் 3:10). நிச்சயமாகவே கர்த்தரினால் நாம் வீணாய்க் கற்பிக்கப்படவில்லை! மற்றும் அவருக்கு நேர்மையாய் இருப்போர் அனைவரும் மார்க்கவசத்தையும், தலைச்சீராவையும், பாதரட்சைகளையும் இறுக்கிக் கட்டிக்கொண்டிருக்கின்றனர் மற்றும் பட்டயத்தையும்,கேடகத்தையும் கையில் எடுக்கப்பெற்றிருக்கின்றனர். ஒருவேளை நாம் இதுவரையிலும் கடுமையான போராட்டங்களுக்குள்ளாக வில்லையெனில், அவைகளைச் சீக்கரத்தில் எதிர்ப்பார்க்கலாம் என்றும், நாம் ஆயத்தமாய்க் காணப்பட வேண்டும் என்றும், “சோதனைகாலத்தின்போது வல்லமையுடன் எதிர்க்கொள்ளச் செய்திடும் அத்தகைய பயிற்சியினையும், அனுபவத்தையும் நாம் பெற்றிருக்க வேண்டும் என்றும் நாம் அறிவோம்.
இந்தச் “சோதனைகாலமானது முழு உலகத்தின் மீதும், சபையின் மீதும் கடந்துவருமென்று நாம் கற்பிக்கப்பட்டிருக்கின்றபடியால், அது அனைவரையும் பாதிக்கும் வகையில், ஆகாயத்தில் சம்பவிப்பதாக இருக்க வேண்டுமென நாம் புரிந்திருக்கின்றோம். இந்தச் சோதனையானது, ஒவ்வொரு திசையிலும் படிப்படியாகப் பரவக்கூடிய ஒன்று என்றும் நாம் நம்புகின்றோம்; மற்றும் அந்த நாட்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தம் இராஜ்யம் ஸ்தாபிக்கப் படுவதன் மூலம் குறைக்கப்படாதிருந்ததானால், மாம்சம் ஏதும் பிழைப்பதில்லை என்று ஆண்டவர் நமக்கு உறுதிப்படுத்தியும் இருக்கிறார்.
ஜாதிகள் மத்தியில் ஏற்கெனவே செயல்பட்டுவருகின்றதும் மற்றும் வணிக விஷயத்தில் மேல்நிலையை அடைய யுத்தம் புரிவதற்கென அவர்களை வெறித்தனமாய் இயக்கிக் கொண்டிருக்கின்றதுமான சுயநலம் மற்றும் பேராசையின் ஆவியானது, அதிகமதிகமாய்ப் பெருகி, அனைவரையும், அனைத்தையும் தாக்கத்திற்குள்ளாக்கிடும் என்று நாம் புரிந்திருக்கின்றோம். இந்த ஆவியானது, நம்முடைய தேசங்களில் நடைபெறும் வேலை நிறுத்தம் ( Strike ) முதலானவைகளில் பார்க்கப்படலாம் – அனைவருமே சுயம் திருப்தி அடைவதற்கே கவலைப்படுகின்றனர் மற்றும் கனங்கள், உரிமைகள், ஸ்தானங்கள் முதலானவைகளுக்காகப் போராடுவதற்கே விரும்புகின்றனர்.
ஆனால் நாமோ சபை மீதும், எப்படி இந்தச் “சோதனைகாலம் கர்த்தருடைய ஜனங்களுக்கு வரும் என்பதன் மீதும்தான் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளோம். எப்படி நடக்குமென நாம் எண்ணுகிறவைகளுக்கு அப்பாற்பட்டவைகளையே நாம் இங்கு எழுதப்போகின்றோம்; மேலும் இதை எழுதுவது என்பது கர்த்தருடைய காரணங்கள் மற்றும் ஜனங்கள் தொடர்புடையதான நம்முடைய கடமையாக இருக்கின்றதென நமக்குத் தோன்றுகின்றது. வேத மாணவர்கள் மீது ஒரு மாபெரும் ஆபத்துக் காணப்படுகின்றது என்று நாம் நம்புகின்றோம் மற்றும் அது எத்தனை சீக்கிரமாய்க் கண்டுணரப்படுகின்றதோ, அவ்வளவாய் அச்சோதனையானது மிக வெற்றிகரமாய்க் கடந்துபோகப்படும். இது பிரிவினைகளை அர்த்தப்படுத்துகின்றதாய் இருக்கலாம்; மேலும் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உபதேசங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முறைமைகள் உணர்ந்துகொள்ளப்படத்தக்கதாகவும் மற்றும் உண்மையான போதகர்கள் மிக முழுமையாய் அடையாளம் கண்டுகொள்ளப்படத்தக்கதாகவும், அப்போஸ்தலர் கூறியுள்ளதுபோன்று பிரிவினைகள் சிலசமயம் அவசியமாகவே இருக்கின்றன (1 கொரிந்தியர் 11:18,19).
அத்துயரளிக்கும் அம்சத்தினைக் குறிப்பிடுவதற்கு முன்னதாக, யாவரும் ஊக்கமடைவதற்கு ஏதுவான ஒன்றை நாம் குறிப்பிடுகின்றோம்; அதென்னவெனில் மாநாடுகளில் கூடிடும் நண்பர்களுடனான உரையாடல் வாயிலாக, நாம் அறிந்திருக்கிறவரை முன்னொருபோதும் இல்லாதளவுக்கு வேத மாணவர்கள் சாந்தம், தயாளம், பொறுமை, அன்பு, பக்தி, விசுவாசம், சந்தோஷம் என்பவைகளைப் பெற்றவர்களாக இப்பொழுதே காணப்படுகின்றனர்.
சபைக்கான பெரும்பான்மையான அபாயமும், இடர்பாடும், மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் வாசலருகேயே காணப்படுகின்றது என்று எழுதிடுவது உண்மையாய்த் துயரமளிக்கின்றதாய் இருக்கின்றது – எனினும் அனைவருக்கும் இப்படியாகக் காணப்படுவதில்லை என்பதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகின்றோம்; திகைப்படைந்து காணப்படும் ஆடுகள், தாங்கள் மேற்கொள்ள வேண்டிய சரியான வழிமுறை குறித்த அறிவுரையினைக் கேட்டு அவ்வப்போது அலுவலகத்திற்கு எழுதி அனுப்பும் கடிதங்களை வைத்துப்பார்க்கையில், மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களில் ஒரு சிறு சிறுபான்மையினரே இப்படி அபாயகரமாகக் காணப்படுகின்றனர் என்பதாகத் தெரிகின்றது. உண்மையான மூப்பர்கள், [R5981 : page 328] உதவிக்காரர்களுக்கும் மற்றும் உண்மையற்ற மூப்பர்கள், உதவிக்காரர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தினைக் கர்த்தருடைய ஜனங்களால் உணர்ந்து கொள்ளப்படுவதற்கேற்ப, சபையிலுள்ள உண்மையுள்ள, நேர்மையுள்ள ஊழியக்காரர்கள் கர்த்தருடைய ஜனங்களினால் மதிக்கப்படுவார்கள். உண்மையற்றவர்களைச் சோர்வுப்படுத்தும் கண்ணோட்டத்தில் நாம் எழுதாமல், மாறாக அவர்கள் எதிராளியானவனுடைய கண்ணியினின்று நீக்கப்படுவதற்கும், இடையூறாளர்களாய் இருப்பதற்குப் பதிலாகக் கர்த்தருடைய மந்தைக்கு உதவுபவர்களாகிடுவதற்கும் ஏதுவாய், உண்மையான சூழ்நிலைக்கு இவர்களது கண்கள் திறக்கப்படுவதற்கே நாம் எழுதுகின்றோம்.
“உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே (தம் குமாரன்) சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று அப்போஸ்தலன் எபேசு பட்டணத்திலுள்ள சபையின் மூப்பர்களுக்கு அறிவுறுத்தினபோது, அவர்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதே சூழ்நிலைமைகளே, நாம் அறிந்திருக்கிறவரை இன்று, வேத மாணவர்கள் மத்தியில் நிலவி வருகின்றது (அப்போஸ்தலர் 20:28). “நான் போனபின்பு மந்தையைத் தப்ப விடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். ஆனபடியால், நான் மூன்று வருஷக்காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டு வந்ததை நினைத்து விழித்திருங்கள். இப்பொழுதும் சகோதரரே… தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்” என்று கூறின அப்போஸ்தலர் பவுலின் தீர்க்கத்தரிசனம் உண்மையாயிற்று (அப்போஸ்தலர் 20:29-32).
பேராசையே லூசிபரை முதலில் தவறாய் வழிநடத்தி, தேவனுடைய ஒரு மகிமையான ஊழியக்காரனை, எதிராளியானவனாக மாற்றிப்போட்டதுபோன்றே, அவனது ஆவியானது இன்றுவரையிலும் அபாயமானதாகவே இருந்துவருகிறது. இதற்கு முற்றிலும் எதிர்மாறானதாக நமது ஆண்டவருடைய ஆவி காணப்பட்டுள்ளது. பிதாவின் சித்தத்தைச் செய்வதில், “அவர் தம்மை மரணபரியந்தம் தாழ்த்தினவரானார். பெருமை அல்லது பேராசையின் ஆவியில் அல்லது சுயநல நாட்டமான ஆவியில் எதையும், எந்த விதத்திலும், நம்முடைய ஆண்டவரிடத்தில் நம்மால் காணமுடிகிறதில்லை. நாம் அவரோடுகூட, அவருடைய இராஜ்யத்தில் உயர்த்தப்படும்படிக்கு விரும்புவோமானால், நாமும் அவரது மாதிரியின்படி, நம்மைத் தாழ்த்திக்கொள்ளும்படிக்கு, அப்போஸ்தலனால் நமக்குப் புத்திமதி கூறப்பட்டுள்ளது.
ஆனால் இராஜ்யத்தில் எந்தவொரு ஸ்தானத்தை நாம் அடைவதற்கும் அவசியமாயிருக்குமென நாம் கர்த்தருடைய ஜனங்களின் கவனத்திற்கு அடிக்கடி கொண்டுவந்துள்ளதான இந்த வேதவாக்கியங்களை, எத்தனைபேர் முற்றிலும் மறந்துபோனவர்களாய்க் காணப்படுகின்றனர்! எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தகவலின்படி, தேர்ந்தெடுத்தல் நடக்கவிருக்கும்போது, சில சபையார் மத்தியில் பயங்கரமான சூழ்நிலைகள் நிலவுகின்றன. சபையின் ஊழியக்காரர்கள் இறுமாப்பாய் ஆளுவதற்கு, சர்வாதிகாரியாய் ஆளுவதற்கு முற்படுகின்றனர் – சிலசமயங்களில் தாங்களும், தங்களது விசேஷித்த நண்பர்களும் மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களாகத் தேர்ந்தெடுக்கப்படத்தக்கதாய்ப் பார்த்துக்கொள்ளும் படிக்குக் கூட்டங்களுக்குக் கூட்டத்தலைவராய்த் தலைமைத்தாங்கியும் நடத்துகின்றனர். சபையாரில் ஒருவர் தனக்கு வாக்குகள் (Vote) செலுத்தாததினால், அவரிடம் மூப்பர் பேச மறுத்துள்ள சம்பவங்களையும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். எனினும் அந்தக் குறிப்பிட்ட மூப்பர், தான் தன்னடக்கத்திற்கும், தாழ்மைக்கும் மற்றும் சாந்தத்திற்கும் எடுத்துக்காட்டாய் இருப்பதாகச் சந்தேகத்திற்கிடமின்றி எண்ணுகின்றார்.
வேதவசனத்தினுடைய போதனைகள் குறித்தும், ஆண்டவரோடுகூட உடன்சுதந்தரர்களாகுவதற்கான நிபந்தனைகள் குறித்துமான எந்த அறிவையும் பெற்றிருப்பவர்கள் மத்தியில் மேல்கூறப்பட்டுள்ள இத்தகைய ஓர் ஆவி காணப்படுவது என்பது, ஓ! எத்துணை அவமானத்திற்குரியதாகும்! ஆம் நிச்சயமாகவே இம்மாதிரியான காரியங்களில், வெட்கக்கேடுகள் பல்வேறு அளவுகளில் காணப்படும். சிலர் தங்களுக்கும், தங்களது நண்பர்களுக்கும் விசேஷமாய்ச் சாதகமாய்க் காணப்படும் ஏதோ சில சமயங்களில் தேர்ந்தெடுத்தலைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக வாய்ப்புகளைப் பயன்படுத்திடுவதற்கு அமைதியாய் முயற்சிக்கின்றனர். சபையில் தொடர்ந்து கலந்து கொள்வதற்கான எந்த எண்ணமும் இல்லாமல், தங்களது நண்பர்களில் ஒருவருக்கு வாக்களிப்பதற்கென நட்பிணக்கத்தின் அடிப்படையில் மாத்திரம் வருகைத்தரும் சிலரை – தங்கள் நண்பர்களைக் கூட்டத்தில் பெற்றிருப்பதற்குச் சிலர் நாடுகின்றனர்.
இன்னுமாக இப்படியாக வழிநடத்துபவர்களாகவும், போதகர்களாகவும் ஆக வேண்டி இப்படியான பேராசையினை/இலட்சியத்தினை வெளிப்படுத்துபவர்களும், பொன்னான பிரமாணத்தினையும், புதுச்சிருஷ்டிக்கான விசேஷத்த அறிவுரைகளையும் புறக்கணிப்பவர்களுமானவர்கள் பொதுவாகவே தவறான உபதேசங்களைக் கொண்டுவருபவர்களாக இருப்பார்களென எதிர்ப்பார்க்கப்படலாம். சபையில் கனத்தினை நாடும்படிக்கு இவர்களை வழிநடத்துகின்றதான, எதிராளியானவனின் அதே பேராசையின் / இலட்சியத்தின் ஆவியானது, இவர்களை மாபெரும் போதகர்களென – புது வெளிச்சத்தைக் கொண்டுவருபவர்களெனக் காண்பித்துக்கொள்ள வழிநடத்துவதாகவும் தெரிகின்றது. இதுவும்கூடச் சாத்தானின் தன்மைகளாக இருக்கின்றதென அப்போஸ்தலன் விவரிக்கின்றார். “அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே (2 கொரிந்தியர் 11:14). ஒளியின் பிள்ளைகள் மத்தியில் தன்னை ஒரு வழிநடத்துபவராகக் காண்பித்துக் கொள்ளுவான் என்று அப்போஸ்தலன் கூறுகின்றார்.
அநேகம் சந்தர்ப்பங்களில் சபையாரே, அவர்களது அறிக்கையை வைத்துப்பார்க்கையில் குற்றஞ்சாட்டப்படுவதற்கு ஏதுவாயிருக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் கர்த்தருக்குத் தங்களை அர்ப்பணம் பண்ணியுள்ளதாக அறிக்கைக் கூடப்பண்ணிடாத அல்லது தங்களது அர்ப்பணிப்பினை அடையாளப்படுத்திக் காண்பித்திடாத நபர்கள் மூப்பராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். ஏன்? ஏனெனில் சபையார் மத்தியில் விசேஷித்த தாலந்துடையவர்கள் யாரும் இல்லாத காரணத்தினால், சகோதரனே இல்லாத ஒருவர், கிறிஸ்துவுக்குள்ளாக புதுச்சிருஷ்டியாக இல்லாத ஒருவர், பேச்சாற்றல் சிலவற்றைப் பெற்றிருப்பதினால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். இப்படி வேதத்தின் மாணவர்கள் மத்தியில் போதகருடைய ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கும் இத்தகைய ஒரு நபரிடமிருந்து நாம் என்னதான் எதிர்ப்பார்த்திட முடியும்? கர்த்தருடைய காரணங்களுக்குத் தீங்கினையும், இவ்விதமாய்க் கர்த்தருடைய வார்த்தைகளின் கட்டளைகளுக்கு முரணாக முன்னுக்குத் தள்ளப்படுகின்ற அந்நபருக்குப் பாதகத்தினையும் மாத்திரமே ஏற்படுத்திடும் என்பதை நாம் எதிர்ப்பார்த்திட முடியும். ஜென்ம சுபாவமுள்ள மனுஷன் ஆவிக்குரியவைகளை நிதானிக்க முடியாதவனாய் இருக்க, அவனால் எப்படிக் கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கு ஆவிக்குரியவைகளைப் பகிர்ந்தளித்திட முடியும்? இத்தகையவரை, அதாவது கர்த்தருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிடுவதற்கெனத் தனது ஜீவியத்தினையும் மற்றும் அவரது வார்த்தைகளினால் கற்பிக்கப்படும்படிக்கும் ஒப்புக்கொடுத்திடாத ஒருவரைக் கர்த்தர் வழிநடத்திடுவாரென எப்படி நம்மால் எதிர்ப்பார்த்திட முடியும்?
தகுதியற்ற வழிநடத்துபவர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது நிச்சயமாகவே பாவமாகும் மற்றும் அது தகுதியற்ற வழிநடத்துபவர்களைப் பெற்றிருக்கும் சபையாருக்குப் பழிச்சொல்லுக்கு ஏதுவானதாயிருக்கும். சபையாருடைய வாக்குகள் (Vote) இல்லாமல் இத்தகையவர்கள் கர்த்தருடைய ஜனங்களின் பிரதிநிதியாயிருக்கும் ஸ்தானத்திற்கு எப்படி வரமுடியும்? கூடுகைகளில் பேசிடுவதற்கான திறமை என்பது மூப்பர்களுக்கான பல தகுதிகளில் ஒன்று மாத்திரமேயாகும் என்பதைக் கர்த்தருடைய ஜனங்கள் எப்போது கற்கபோகின்றார்கள்? பெயர்ச்சபையினர் செய்வதுபோன்று, ஆவிக்குரிய ரீதியில் இல்லாமல், சரளமாகப் பேசும் ஆற்றல் உடையவர்களை முன்நிறுத்துவதினால், எப்படிக் கர்த்தருடைய காரணங்களுக்கு இடையூறளிக்கப்பட்டிருக்கின்றது என்றும், எப்படிச் சகோதரர் மத்தியில், ஆவிக்குரிய விஷயத்தில் திணறடிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் நாம் அவ்வப்போது கவனித்திருக்கின்றோம்.
இம்மாதிரியான சந்தர்ப்பங்களுக்கு, சபையாரின் சார்பிலான பெருமைதானே – உலகத்திற்கு முன்பு மாம்சத்தில் பகட்டாய்க் காண்பித்துக் கொள்வதற்கான விருப்பம்தானே காரணம். இல்லை என்றால், பின்னர் ஏன் இத்தகைய நபர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்? ஒருவேளை அவர்கள் தவறு செய்திருந்தார்களானால், அவர்கள் ஏன் அமைதியாயும், உறுதியாயும் அதை உடனே சரிப்படுத்திடவில்லை? மூப்பர்கள் சபையாரைத் தங்கள் வல்லமை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டுவருவதற்கு நாடி, வெற்றிக் காணும்போது, இது கர்த்தர் விரும்புவதாக நம்மிடம்கூறும் அந்த ஒரு தன்மையில் – தைரியத்தில், ஜெயங்கொள்ளுதலில் – சபையார் குறைவுப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறதல்லவா? இறுமாப்பாய் ஆள விரும்பும் அவரை, வேதவாக்கியங்களுக்கு முரணான முறைமைகளில் வெற்றிக்காணும்படிக்கு அனுமதித்ததில் – அவருக்கும் மற்றும் தங்களுக்கும் சபையார் தீங்குபண்ணுகிறார்கள் அல்லவா?
ஒழுங்கின்மைக்கு நேராய் வழிநடத்திக்கொண்டு செல்லும் உலகத்திலுள்ள பேராசை மற்றும் சுயநலமான ஆவியினை நாம் ஏற்கெனவே குறிப்பாகக் காட்டிவிட்டோம்; மற்றும் எப்படி அதே சுயநலமான, பேராசையின் ஆவியானது, சபையிலும் ஒழுங்கின்மைக்கு நேராக நடத்திக்கொண்டிருக்கின்றது என்றும் நாம் சற்று முன்புதான் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். இதன் காரணமாக உலகத்தின் மீதுவரும் ஓர் உபத்திரவக்காலத்தினையும் மற்றும் சபைமீது வரும் ஓர் உபத்திரவக்காலத்தினையும் நாம் எதிர்ப்பார்க்கின்றோம். உலகத்தாரால் இந்த வகுப்பாரிடமிருந்து, தானாகவே அதனை விடுவித்துக்கொள்ள முடியாது; ஏனெனில் தலைவர்களும், வழிநடத்தப்படுபவர்களும் உலகத்தின் ஆவியினைப் பெற்றிருக்கின்றனர் மற்றும் அது நிச்சயமாகவே மிக மோசமாய்ப் பெருகிடும். ஆனால் கிறிஸ்துவின் சபையில் இப்படியல்ல. ஆண்டவருடைய ஆவியாகவும், சத்தியத்திற்கு நேர்மையாய் இருக்கும் ஆவியாகவும், பொன்னான பிரமாணத்தினுடைய ஆவியாகவும், சகோதர அன்பின் ஆவியாகவும், சுயாதீனத்தின் ஆவியாகவும், உதவும் ஆவியாகவும், சத்தியமென்று நம்மால் நம்பப்படுகிறவைகளுக்கு உண்மையாயிருக்கும் ஆவியாகவும் – நம்முடைய ஆவிக் காணப்படுகின்றது. இந்த ஆவியினையுடைய சபையானவள் பேராசைமிக்க புருஷர்களின் (சில சமயங்களில் பேராசைமிக்க ஸ்திரீகளின்) அதிகாரத்தின் கீழ்த் தொடர்ந்துகாணப்படுவது என்பது பொறுக்க முடியாத ஒன்றாகும். சபையார் தங்கள் சபை காரியங்களைச் சரியான காரியங்களின் அடிப்படையில் நடத்திக்கொண்டு வராமல் இருந்தார்களானால், சரியாய் நடத்துவதற்கு அவர்கள் உடனே செயல்பட வேண்டுமல்லவா? இதுவே கர்த்தருடைய வீட்டை ஒழுங்குமுறைக்குள் கொண்டுவருவதற்கான காலம் என்று நாம் நம்புகின்றோம்.
ஆனால் யாராகிலும் பின்வருமாறு கூறலாம்; “எங்கள் மீது எங்களது அதிகாரிகளாகவும், வழிநடத்துபவர்களாகவும் தங்களை ஏற்படுத்திக் கொண்டவர்களின் விருப்பங்களுக்கு எதிர்மாறாக நாம் எதையேனும் செய்ய முற்படுவோமானால், அது மிகுந்த கலக்கத்தினை ஏற்படுத்திவிடும். ஒரு பிரயாசம் எடுக்க முற்பட்டாலுங்கூட அது சபை பிரிந்து போவதற்குரிய அபாயத்தைக் கொண்டுவரும் மற்றும் இத்தகைய பேரழிவை உண்டுபண்ணும் காரியத்தினைக் குறித்து எப்படி எங்களால் சிந்திக்க முடியும்?
[R5982 : page 329]
ஆனால் நாமோ: கர்த்தர் சுட்டிக்காட்டினவைகளுக்கு இசைவாகக் குறைந்த எண்ணிக்கையினாலான சபையைப் பெற்றிருப்பது நலமா? அல்லது கர்த்தர் அருளியுள்ளவைகளுக்கு முரணான கொள்கைகளை ஆதரித்து, தங்களைத் தீங்கிற்குள்ளாக்கி, தங்கள் செல்வாக்கிற்கு இடையூறு உண்டாக்கி மற்றும் “ஓநாயாக அல்லது “ஓநாயின் ஆவிக்குள்ளாகத் தவறுதலாய் நடத்தப்பட்டுள்ள ஒரு செம்மறியாடாக இருக்கும் ஒருவரை, அதாவது வழிநடத்துபவராக இருப்பவரை ஆதரிக்கும் அதிக எண்ணிக்கையிலுள்ள சபையைப் பெற்றிருப்பது நலமா? என்று கேள்விக்கேட்கின்றோம். இம்மாதிரியான பிரச்சனைக்குள் காணப்படும் அருமையான சகோதரர்கள், வீரமாய்ச் செயல்படும்படிக்கு நாம் ஊக்குவிக்கின்றோம்; எதையும் வீண்பெருமையினாலாவது அல்லது வாதினாலாவது செய்யாமலிருக்கத்தக்கதாகப் பார்த்துக் கொண்டு, தாங்கள் கிறிஸ்து உண்டாக்கின சுயாதீன நிலைமையை மீண்டுமாகப் பெற்றுக் கொள்ளத்தக்கதாவும், எந்த மனித அடிமைத்தனத்திற்குள்ளாக மீண்டும் சிக்கிக் கொள்ளாமல் இருக்கத்தக்கதாகவும், அனைத்தையும் சாந்தம் மற்றும் அன்பின் ஆவியில் செய்யும்படி பாருங்கள்.
வாட்ச் டவர் சொசைட்டியின் வெளியீட்டுக் கட்டுரைகளை வேதாகம ஆராய்ச்சி வகுப்புகளில் பயன்படுத்துவதற்குத் தங்களது மூப்பர்கள் தங்களுக்குத் தடைவிதிப்பதாக அடிக்கடி வேத மாணவர்கள் நமக்கு எழுதிவருகின்றனர். இந்த மூப்பர்களில் சிலர் இந்தக் கட்டுரைகளிலுள்ள அநேக விஷயங்கள் முரணானவைகளாக இருக்கின்றன என்றும் கூடச் சபையாருக்குச் சொல்லுமளவிற்குக் காணப்படுகின்றனர். சில சமயங்களில் வகுப்புகளில் இப்புத்தகங்கள் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் போல் தடைப்பண்ணுகின்றனர்.
இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் என்ன செய்ய வேண்டுமென்று நம்மிடம் கேட்கப்படுகின்றது.
இத்தகைய வழிநடத்துபவர்களைப் பின்பற்ற விரும்புகின்றவர்கள் அப்படியே செய்யட்டும் – இப்படிச் செய்வது அவர்களுக்கான உரிமையாய் இருக்கின்றது என்று நாம் பதிலளிக்கின்றோம். அவர்களுக்கு அனைத்தும் நன்றாய்க் காணப்படும்படிக்கு வாழ்த்துகின்றோம். ஆனால் நாம் அவர்களைப் பின்தொடராமலிருப்போமாக் ஒரு கணம்கூட இத்தகைய ஏற்பாடுகளுக்கு அடிப்பணியாது இருப்போமாக. இப்படியான விஷயத்தில் அந்த வழிநடத்துபவர் தலையிடுவதும் மற்றும் சபையார் என்ன செய்ய வேண்டும் என்றும், என்ன செய்யக்கூடாது என்றும் சபையாருக்குச் சொல்ல முற்படுவதும், அந்த வழிநடத்துபவரின் சார்பிலான உச்சபட்ச அவமதித்தலாகும். தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் சபையாரின் கரங்களில் காணப்படுவதுபோன்று, நீக்கிடுவதற்கான அதிகாரமும், அவர்களுடைய கரங்களில் காணப்படுகின்றது. அப்படிப்பட்ட மூப்பரிடம் அவரது ஊழியங்களானது இனிமேல் விரும்பப்படுகிறதில்லை என்று அன்புடன் கூறி, அவரை அவ்வூழிய ஸ்தானத்திலிருந்து நீக்கிடுவதற்குச் சபையார் வாக்குகள் (Votes) செலுத்திடும்படிக்கு நாம் பரிந்துரைக்கின்றோம். அநேகமாக அவர் கொஞ்சக்காலம் பின்னிருக்கையில் அமர்ந்து, அக்காரியம் குறித்துச் சிந்திக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்கையில் அது அவருக்குப் பிரயோஜனமாய் இருக்கும் மற்றும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிடுவதற்குத் திறமையுடையவரோ அல்லது வகுப்புகளை நடத்திடுவதற்குப் பழக்கப்பட்டவரோ சபையில் யாரும் இல்லாமலிருந்தாலும் சபையார் இத்தகைய ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டதின் நிமித்தம் பெரிதும் உதவப்படுவார்கள். உங்கள் சுயாதீனத்தைத் தக்கவைத்துக்கொள்ளத்தக்கதாகவும் மற்றும் ஆராதனையையும், ஆராய்ச்சி வகுப்புகளையும், உரிய ஒழுங்கின் அடிப்படையில் தொடரத்தக்கதாகவும், உங்களில் யாரையாகிலும் கூட்டத்தலைவராக நியமித்துக் கொள்வதோ அல்லது கூட்டத்தைத் துவக்கும் மற்றும் முடிக்கும் காரியத்தில் ( take turns ) சுழற்சியில் மாறிமாறிச் செய்திடுவதற்கு என நியமித்துக்கொள்வதோ நல்லதாய் இருக்கும்.
வேதாகமத்தை – கிறிஸ்துவின் உபதேசங்களைத் திட்டவட்டமாய்ப் போதிப்பதற்கும் மற்றும் அந்த உபதேசங்களைச் சிறிது வேறுபாடான விதத்தில் போதிப்பதற்கும் இடையிலான வேற்றுமையை வகைப்படுத்திப்பார்ப்போமாக. எந்த இரண்டு நபர்களும் ஒரேமாதிரியான வார்த்தைகளைத் துல்லியமாய்ப் பயன்படுத்திடுவார்கள் என்று நாம் எதிர்ப்பார்த்திட முடியாது; ஆனால் பெரும்பான்மையான வேத மாணவர்களின் கண்ணோட்டத்தில் உறுதியானதும், அசைவுறாததுமான சில குறிப்பிட்ட உபதேசங்கள் காணப்படுகின்றன. அவைகளுக்கு நல்லிசைவுடன் காணப்படாத எவரும் கொஞ்சமேனும் ஊக்குவிக்கப்படாமல் தடைப்பண்ணப்பட வேண்டும். ஒருவேளை அவனுக்கு வேறான கண்ணோட்டங்கள் இருக்குமாயின் அவனைத் துன்புறுத்தாதீர்கள் – இருண்ட யுகத்தின் வழிமுறைகளைப் பின்பற்றாதீர்கள், மாறாக அவனைத் தனியே விட்டு விடும் அல்லது அவன் காண்கிற விதத்தில் காரியங்களைக் காண விரும்புகிறவர்களோடு விட்டுவிடும் சரியான வழிமுறையைக் கையாளுங்கள்.
இதுவரையிலும் இத்தனை பலமான / கடுமையான அறிவுரைகளை நாம் கொடுத்ததில்லை அருமையான ஆடுகளில் அநேகர் பாதிப்பிற்குள்ளாகி, வளர்ச்சியடைவதற்குத் தடைப்பண்ணப்பட்டுப் பலவந்தம்பண்ணப்பட்டுள்ளனர் என்று நாம் உணர்கின்றோம். இதற்கேற்ப இத்தகையதான மூப்பர்களும், உதவிக்காரர்களும் அதிகம் துணிச்சல்கொள்வதையும் நாம் பார்க்கின்றோம் மற்றும் சரியான ஆவியுடையவர்களும், யுகங்களுக்கடுத்த தெய்வீகத் திட்டத்தினுடைய நம்முடைய ஆராய்ச்சியிலுள்ள, கர்த்தருடைய வழிக்காட்டுதலின் கீழ் – நாம் “தந்திரமான கட்டுக்கதைகளை பின்பற்றினவர்களாக இருக்கவில்லையென்று உணர்ந்துகொண்டவர்களுமான அனைவரும், தங்களுக்கான நலனுக்காகவும், தவறான ஆவியை வெளிப்படுத்தும் வழிநடத்துபவர்களுக்கான நலனுக்காகவும் மற்றும் ஒருபோதும் முன்பில்லாத அளவிற்குக் கர்த்தருடைய வழியைக்குறித்து விசாரிக்கும் ஜனங்களுடைய நலனுக்காகவும் வேண்டி, உறுதியான நிலைப்பாட்டினை இப்பொழுது எடுத்துக்கொள்வது மிகுந்த அவசியமானதாய் உள்ளது.
உறுதித்தன்மையையும், தைரியத்தையும் நாம் ஊக்குவிக்கையில், தாழ்மையான ஆவியை வெளிப்படுத்துபவர்களும், சபையாருடைய உரிமைகளுக்கும், சுயாதீனங்களுக்கும் இசைந்து செல்பவர்களும், நன்றாய் ஊழியஞ்செய்ய நாடுபவர்களுமாகிய கர்த்தருடைய உண்மையுள்ள ஊழியக்காரர்களின் மத்தியில் சண்டைச் சச்சரவு அல்லது குற்றம் கண்டுபிடிக்கும் மற்றும் குற்றம் சாட்டும் ஆவியினை ஊக்குவிக்க நாம் விரும்புகிறதில்லை. தேர்ந்தெடுக்கப்படக் கூடாதவர்களின் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டபோது சரியான நிலைமையில் காணப்பட்டும், பிற்பாடு மாறுபாடான மற்றும் பேராசையான ஆவியினை வெளிப்படுத்தினவர்களின் செல்வாக்கின் கீழிலிருந்து, சபையை மாற்றிட வேண்டும் எனும் கண்ணோட்டத்தின் அடிப்படையிலான ஒரே நோக்கத்துடன், “ஒன்றையும் வாதினாலாவது, வீண் பெருமையினாலாவது செய்யாமல் அனைத்தையும் தேவனுக்கு மகிமை உண்டாகும்படிச் செய்யுங்கள் என்று கூறுகின்றோம். இன்னுமாக சபை உறுதியாய் இருப்பதோடுகூடப் பரிவையும் கொண்டிருக்க, மேற்கூறியவர்கள் மனந்திரும்பும் பட்சத்தில் இவர்களுக்கென இரக்கத்தையும் கொண்டிருக்க நாம் அறிவுரை கூறுகின்றோம், அதாவது பிற்பாடு அவர்களை நம்பிக்கைக்குப் பாத்திரமான நிலையில் திரும்ப ஏற்றுக் கொள்வதற்குரிய கண்ணோட்டத்தில் நீங்கள் இவைகளையும் பெற்றிருக்க நாம் அறிவுரை கூறுகின்றோம். “நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்; உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு, மார்க்கப் பேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்க வேண்டியதே (1 கொரிந்தியர் 11:18,19) என்று அப்போஸ்தலன் எழுதியுள்ளார். பிரிவினைகள் இங்குக் கண்டிப்பாய் வந்தாக வேண்டும்; மற்றும் அது எத்தனை சீக்கிரமாய் வருகின்றதோ அவ்வளவிற்கு அது சத்தியத்திற்கும், அதனை அன்புகூருகிற யாவருக்கும் நலம் பயக்கின்றதாய் இருக்கும்.
“ஜென்ம சுபாவமுள்ள மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் ஆவிக்குரிய பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான் (1 கொரிந்தியர் 2:14) என்ற அப்போஸ்தலனின் அறிவுரையை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. பரிசுத்த ஆவியினால் நாம் ஜெநிப்பிக்கப்பட்டப்பிற்பாடுங்கூட ஆவிக்குரியவைகளைப் புரிந்துகொள்வதற்கான நமது ஆற்றலானது – நம்மை ஞானவான்களாக்கிடுவதற்கு ஏதுவான வேதவாக்கியங்களின் மீதான நம்முடைய ஆராய்ச்சியின் மீது மாத்திரம் சார்ந்ததாயிராமல், நாம் பெற்றிருக்கும் பரிசுத்த ஆவியினுடைய அளவைச் சார்ந்ததாகவும் இருக்கின்றது என்று அனுபவங்களும் கூட நமக்கு நிரூபித்துள்ளது. ஆகவேதான், “ஆவியில் நிறைந்திருங்கள் – என்று அப்போஸ்தலர் புத்திமதி கூறுகின்றார் (எபேசியர் 5:18).
இது ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்கள் மாத்திரமே தேவனுடைய ஆழமான காரியங்களைப் புரிந்துகொள்வார்கள் என்று குறிக்கின்றதாய் இருக்கின்றது; மேலும் அவர்கள் பரிசுத்தத்தின் ஆவியினால், தேவ ஆவியினால், கிறிஸ்துவின் ஆவியினால், சத்தியத்தின் ஆவியினால் அதிகமதிகமாய் நிரம்புவதற்கேற்ப, அவர்களது புரிந்துகொள்ளுதலும் காணப்படும் என்றும் குறிக்கின்றதாய் இருக்கின்றது. ஒவ்வொரு வேத மாணவனும் புதுச்சிருஷ்டியாகிய தான், மாம்சத்தின்படியாக நடந்து ஆவியின்படியாக நடவாமலிருந்தால், அவனது மனமானது ஏறத்தாழ இருளடைந்துவிடும் மற்றும் தேவனுடைய ஆழமான காரியங்கள் குறித்துள்ள அவனது புரிந்துகொள்ளுதலின் ஆற்றலானது குறைவதோடு மாத்திரமல்லாமல் கர்த்தருடைய வசனம்குறித்த அவனது நினைவாற்றலும் குறையும் என்று உணர்ந்துகொள்ள வேண்டும்; இன்னுமாக அவன் இப்படியாக இல்லாமல் கர்த்தருக்கு நெருங்கி ஜீவித்தும், மாம்சத்தின்படியாக நடக்காமல் ஆவியின்படி நடப்பானானால், திவ்விய வார்த்தைக்குறித்த அவனது நினைவாற்றலும் மற்றும் அவ்வார்த்தையினுடைய ஆவிக்குரிய புரிந்துகொள்ளும் ஆற்றலும் பெருகிடும் என்று உணர்ந்துகொள்ள வேண்டும்.
கல்வியறிவு உடையவர்களும், தாலந்து உடையவர்களுமான அனைவரும் கர்த்தருடைய வார்த்தைக்குறித்த சரியான புரிந்துகொள்ளுதலை அடைவதில்லை. மாறாக சாந்தமுள்ள மற்றும் கற்பிக்கப்படத்தக்கதான நிலையில் இருப்பவர்களுக்கே மற்றும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கற்றும், அதன்படி ஜீவித்தும், அதன் ஆவியை உள்வாங்கியும் இருப்பவர்களுக்கே சரியான புரிந்துகொள்ளுதல் கடந்துவருகின்றது என்று நினைவில்கொள்வோமாக. “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (சகரியா 4:6) என்ற திவ்விய வார்த்தை நமக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு சகோதரனோ (அ) சகோதரியோ அவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்களாகவும், எவ்வளவு திறமையுடையவர்களாகவும் இருப்பினும், இது இவர்களைக் கர்த்தருடைய ஜனங்களுக்கு வழிநடத்துபவர்களாக்கிடுவதற்குத் தகுதியாக்கிடாது. இதோடுகூடச் சகோதரருக்கு முக்கியமான அம்சங்கள் அனைத்தும் காணப்பட வேண்டும்; அவை முதலாவதாகக் கர்த்தருடைய வார்த்தைக்குறித்த அறிவு மற்றும் இரண்டாவதாகச் சத்தியத்தின் ஆவியினைப் போதுமானளவில் பெற்றிருத்தல் – கர்த்தருடைய ஸ்தானாபதியென எப்போதும் நம்பப்படுவதற்குப் பாத்திரமாய் இருத்தல் ஆகும். வேறு எவரும் கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் போதகர்களாக அல்லது வழிநடத்துபவர்களாக அடையாளம் கண்டு கொள்ளப்படக்கூடாது. உயர்ந்தவர்களும், கல்விமான்களும், திறமையுடையவர்களுமாய்க் காணப்படுபவர்கள் மாத்திரந்தான் கர்த்தருடைய வார்த்தைகளுக்கான ஊழியர்களாய் இருக்க வேண்டும் என்பது திருச்சபைமயமான சார்ந்திருத்தலுக்கு ( Churchianity ) உரிய கருத்தாய்க் காணப்படுகின்றது; ஆனால் இதற்கு எதிர்மாறானதாகவே வேதாகமம், காரியத்தை முன்வைக்கின்றதாய் இருக்கின்றது. “கர்த்தராகிய தேவனுடைய ஆவி என்மேல் இருக்கிறது; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார் (ஏசாயா61:1).
[R5982 : page 330]
கர்த்தருடைய ஆவியையும், சாந்தத்தின் ஆவியையும், தயாளத்தின் ஆவியையும், பொறுமையின் ஆவியையும், நீடிய பொறுமையின் ஆவியையும், சகோதர சிநேகத்தின் ஆவியையும் மற்றும் அன்பின் ஆவியையும் வெளிப்படுத்துபவர்களும்- வேதவசனம் மற்றும் தெய்வீகத் திட்டம்குறித்து நல்லறிவைப் பெற்றிருப்பவர்களும் – சத்தியத்தின் ஆவியையும், பரிசுத்தத்தின் ஆவியையும் மதிக்கிறதை வெளிப்படுத்துபவர்களும் – போதகசமர்த்தனுமாயும் இருக்கும் மூப்பர்களை இரட்டிப்பான கனத்துடன் எண்ணிடுவதற்கும் மற்றும் மற்றவர்களை மறுத்திடுவதற்கும் எவ்விடத்திலுமுள்ள வேத மாணவர்களின் சபையாரை வலியுறுத்துவது, மேற்கூறிய கண்நோக்கங்களினுடைய கண்ணோட்டத்தின்படி பார்க்கையில் நியாயமாய் உள்ளது என்று எண்ணுகின்றோம்.
V.D.M, கேள்விகள்
பெயர்ச் சபையால் தங்கள் ஊழியர்களுக்குச் சாற்றப்படும் பெயர்களில் அநேகமானவைகள் முற்றிலும் வேதவாக்கியங்களுக்கு முரணாக, போற்றுதலுக்குரிய ( Reverend ), மிகவும் போற்றுதலுக்குரிய ( Most Reverend ), வேதசாஸ்திரி ( Doctor of Divinity ) என்பதாகவெல்லாம் காணப்படுகின்றது என்று நீண்டகாலத்திற்கு முன்பாகவே நாம் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தோம். இவைகள் வேதவாக்கியங்களினுடைய எழுத்துக்களுக்கு மாத்திரமல்லாமல், அதன் ஆவிக்கும்கூட எதிரானவையாகக் காணப்படுகின்றது. மூப்பர், உதவிக்காரர் மற்றும் பாஸ்டர் எனும் வார்த்தைகளானது வேதவாக்கிய வார்த்தைகளாக இருக்கின்றது என்ற உண்மையையும் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தோம். Verbi Dei Minister (V.D.M) என்ற இலத்தீன் பெயரையும் நாம் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தோம் மற்றும் இந்தப் பெயரானது பொதுவிடங்களில் பிரசங்கிக்கும் கிறிஸ்துவின் ஒவ்வொரு பிரதிநிதியும், திவ்விய வார்த்தையினுடைய ஊழியக்காரனாய் இருக்கின்றான் – மனித விசுவாசப்பிரமாணங்களினுடைய அல்லது சுயத்தினுடைய ஊழியக்காரன் அல்ல என்ற வேதாகமத்தின் கருத்தினை அப்படியே வெளிப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. தேவனாலும், அவருடைய ஜனங்களினாலும் அங்கீகரிக்கப்படும் வேத மாணவர்கள் அனைவரும் தங்கள் தாலந்துகள், வாய்ப்புகள் மற்றும் வேதவாக்கியத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதான வரையறைகளுக்கு ஏற்ப – திவ்விய வார்த்தையினுடைய ஊழியக்காரர்களாய்
இருக்கின்றனர்.
தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களின் தகுதிகள் தொடர்புடைய விஷயத்தில் போதுமானளவிற்கு விவரங்கள் தெரியாத நிலையில் வேத மாணவர்கள் அடங்கிய அநேகம் சபையார் காணப்படுகின்றனர் என்ற கண்ணோட்டத்தில், V.D.M. கேள்விகள் என்று அழைக்கப்படும் அநேகம் கேள்விகளை நாங்கள் தொகுத்துள்ளோம் மற்றும் இந்தக் கேள்விகளை ஆராய்கையில் அது அனைவருக்கும் பிரயோஜனமாய் இருக்கும் என்றும், அவைகளுக்கான பதில்களானது திவ்விய வார்த்தைக்குறித்த நியாயமானதொரு அறிவைப் பெற்றிருப்பவர்களை அறிய உதவிடும் மற்றும் அத்தகையவர்களின் ஊழியங்களானது பாதகமாய் இராமல் பிரயோஜனமாய் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படலாம். இந்தக் கேள்விகள் சபை பிரிவுணர்ச்சி சார்ந்தது அல்ல, எந்தவொரு பிரிவிலும் காணப்படும் எந்தவொரு ஊழியக்காரனுக்கும் பொருத்தமானதாய் இருக்கும். அவை கவனமற்றவர்களை இடறச் செய்யும் நோக்கமுடைய, சிக்கவைக்கும் கேள்விகளும் அல்ல. அவைகள் எளிமையான நல்நம்பிக்கைகளின் அடிப்படையிலான கேள்விகள் ஆகும் மற்றும் அவைகளுக்குப் பதிலளிப்பது என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் உதவிகரமானதாய் இருக்கும் மற்றும் கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் போதகர்களாகவும், வழிநடத்துபவர்களாகவும், இருப்பதற்குப் பொருத்தமானவர்களை நியமிப்பதற்கும் விசேஷமாய் உதவியாய் இருக்கும்.
இவைகளை நாம் ஆயத்தம்பண்ணி, பயண ஊழியர்களுக்கு – Watch Tower Bible and Tract Society -இன் சார்பிலாக அனுப்பிவைக்கப்படும் பயண பிரசங்கிமார்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது மற்றும் எங்குமுள்ள சொசைட்டியினுடைய பிரதிநிதிகள் யாவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பின்னர்ப் பல்வேறு இடங்களிலுள்ள மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களிடமிருந்தும் மற்றும் வேத மாணவர்களிலுள்ள மற்றவர்களிடமிருந்தும் இக்கேள்விக்கான விண்ணப்பங்கள் வந்தது. அனைத்து வேத மாணவர்களும் கேள்விகளை வாசித்து அதற்குப் பதிலளிக்கும்படிக்கு நாம் அறிவுறுத்தினோம். நாம் அநேக விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டோம் மற்றும் கேள்விகளுக்கான பதில் நிரப்பப்பட்டு எங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. நியாயமானவிதத்தில் இக்கேள்விகளுக்குப் பதில்கூற முடியாத எந்தச் சகோதரனும் பொருத்தமான பிரதிநிதியாகக் கருதப்பட வேண்டாம் என்பது அனைத்துச் சபைகளுக்குமான நம்முடைய பரிந்துரையாகும்.
அனைத்து வேத மாணவர்களும் இக்கேள்விகளைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாகவும், அவற்றின் எளிமையினைக் கண்டுகொள்ளத்தக்கதாகவும் அவற்றைக் கீழே நாம் வெளியிடுகின்றோம். சகோதரர்கள் Sturgeon, Burgees மற்றும் Stephenson பயண ஊழியர்களால் அனுப்பப்படும் பதில்களை மதிப்பிடுவதற்கென்றுள்ள குழுவினராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அனைவருடைய பதில்களும் திருப்திகரமாக இருக்கும் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை. நற்காரணங்களினால் அல்லாமல் மற்றபடி யாரும் நிராகரிக்கப்படுகிறதில்லை மற்றும் காரணங்களானது முறையாய்ச் சுட்டிக்காண்பிக்கப்படும். இந்தக் கேள்விகளுக்கு நியாயமான, திருப்திகரமான பதிலை அளிக்காதவர்கள் மூப்பர்களாகவோ அல்லது உதவிக்காரர்களாகவோ தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்று நியூயார்க் பட்டணத்திலுள்ள சபையார், வாக்கினால் (Vote) தீர்மானம் எடுத்துள்ளனர். இதே மாதிரி அனைத்துச் சபையார் மத்தியிலும் பின்பற்ற நாம் யோசனை கூறுகின்றோம். கேள்விக்கான பதிலை மதிப்பிடுபவர்கள் சபையார் மத்தியிலிருந்து ஏற்படுத்தப்படும் ஒரு குழுவினராக இருக்கலாம் அல்லது மேலே கூறப்பட்டுள்ள சொசைட்டியின் பிரதிநிதியானவர்கள் பதில்களை மதிப்பிடவும் மற்றும் தங்கள் விமர்சனத்தைத் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படலாம்.
வளர்ச்சியடைந்துள்ள வேத மாணவர்களுக்கான V.D.M. கேள்விகள்
1. தேவனுடைய முதலாவது சிருஷ்டிப்பின் செயல்பாடு எது?
2. தேவகுமாரனோடு தொடர்புடைய லோகோஸ் (logos) என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன? மேலும் பிதா மற்றும் குமாரன் என்ற வார்த்தைகள் எதைத் தொடர்புபடுத்துகிறது?
3. உலகில் எப்பொழுது, எப்படிப் பாவம் நுழைந்தது?
4. பாவிகள்மேல் வந்த பாவத்திற்கான தெய்வீகத் தண்டனை என்ன? மேலும் பாவிகள் யார்?
5. மாம்ச சாயலை எடுக்க, “லோகோசுக்கு ஏன் அவசியமாயிற்று? அவர் அவதாரம் எடுத்தாரா?
6. மனிதனாகிய கிறிஸ்து இயேசு, குழந்தைப்பருவத்திலிருந்து மரணம் வரை என்ன சுபாவத்திலிருந்தார்?
7. இயேசு உயிர்த்தெழுந்தது முதல், என்ன சுபாவத்திலிருக்கிறார்? மற்றும் யேகோவா தேவனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் என்ன?
8. இந்தச் சுவிசேஷ யுகத்தின்போது, பெந்தெகொஸ்தே முதல் தற்போது வரை இயேசுவின் பணி என்னவாக இருக்கின்றது?
9. யேகோவா தேவனால் உலக மனுக்குலத்துக்கு இம்மட்டும் செய்யப்பட்டது என்ன? அதுபோலவே இயேசுவினால் செய்யப்பட்டது என்ன?
10. சபை நிறைவடைந்த பிறகு, அதனை குறித்த தெய்வீக நோக்கம் என்ன?
11. உலக மனுக்குலத்தைப் பொறுத்தவரையில், தெய்வீக நோக்கம் என்ன?
12. சீர்திருத்த முடியாதவர்களைக் குறித்த இறுதி முடிவு என்ன?
13. மேசியாவின் இராஜ்யத்திற்குக் கீழ்ப்படிவதன் மூலமாக, உலக ஜனங்களுக்கு வரவிருக்கின்ற வெகுமதி அல்லது ஆசீர்வாதங்கள் என்ன?
14. பரலோக பிதாவோடும், கிறிஸ்துவோடும் உறவுக்குள் நுழைய, பாவிகள் என்ன படிகளை எடுக்கவேண்டும்?
15. தேவனுடைய வசனத்தில் வழிகாட்டியபடி, ஒரு கிறிஸ்தவன் பரிசுத்த ஆவியால் ஜெநிப்பிக்கப்பட்ட பிறகு, அவனது நடைமுறை எப்படி இருக்க வேண்டும்?
16. ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்யும்படிக்கு நீ பாவத்திலிருந்து மனந்திரும்பியிருக்கிறாயா?
17. கர்த்தருடைய ஊழியத்துக்கு உன் எல்லா வல்லமைகளையும், தாலந்துகளையும் செலவிட, உன்னை அவருக்கு முழுத்தத்தம் செய்திருக்கிறாயா?
18. அடையாளமான தண்ணீர் முழுக்கின் வழியாக உன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாயா?
19. வேத மாணவரின் பரிசுத்தமான வாழ்வு வாழ வாக்குறுதி எடுத்திருக்கிறாயா?
20. வேதாகமப்பாடங்களின் ஆறு தொகுதிகளையும் முழுமையாகவும், கவனத்தோடும் படித்திருக்கிறாயா?
21. அந்த ஆறு தொகுதிகளிலிருந்து அதிக வெளிச்சமும், ஆதாயமும் பெற்றிருக்கிறாயா?
22. வேதாகமத்தின் மெய்யானதும், நிரந்தரமுமான அறிவைப் பெற்றிருக்கிறேன் என்றும், இந்த அறிவு கர்த்தருடைய ஊழியக்காரனாக, உன் எஞ்சியுள்ள வாழ்க்கையில் அதிக திறம்படச் செயல்படுவதற்கு உதவும் என்றும் நம்புகிறாயா?
குறிப்பு: இதை நிரப்பும் ஒவ்வொருவரும் தங்கள் அறிவின்படியே நிரப்ப வேண்டும். மற்றவரிடம் கேட்டோ அல்லது மற்றவரின் பதில்களைப் பார்த்தோ எழுதக்கூடாது. வேதாகமம் மற்றும் வேதாகமப்பாடங்கள் மற்றும் ஆசரிப்புக்கூடாரத்தின் நிழல்கள் பயன்படுத்தப்பட்டு, வேதவாக்கியங்கள் குறிப்பிடப்படலாம்.
எதிர்ப்புகளுக்கான பதில்
இதற்கு எழுந்துள்ளது ஒரே ஒரு எதிர்ப்பு, இது பாபிலோனிய தன்மையுடையதாய், சபை பிரிவுணர்ச்சியாய் இருக்குமோ என்ற பயமாகும். ஆ! சரியானதை தவறு என்றும், வெளிச்சத்தை இருள் என்றும் காட்டுவதற்கு எப்படி மாபெரும் எதிராளியானவன் எப்போதும் நாடுவதைக் காண்கையில் வியப்பாகவே உள்ளது. எல்லா வல்லமையையும் மற்றும் அதிகாரத்தையும் தேவனுடைய ஜனங்களின் கைகளிலிருந்து எடுத்து, அதை ஒரு நபரிடமோ அல்லது கண்காணியிடமோ அல்லது மூப்பரிடமோ அல்லது போதகர்களின் குழுவிடமோ கொடுப்பதே பாபிலோனிய முறைமையாகும். ஒவ்வொரு எக்ளீஷியாவின் சுயாதீனத்தைப் பாதுகாத்திடுவதும், ஒவ்வொரு எக்ளீஷியாவும் அதன் சொந்த அதிகாரம் மற்றும் கடமையை அடையாளம் கண்டுகொள்ள செய்வதும்தான் எங்களுடைய நோக்கமாக எப்போதும் இருந்துள்ளது.
எதிர்ப்புத் தெரிவித்துள்ள சகோதரனுக்கு நாங்கள் கொடுத்த பதில் வாசகர்களுக்கு பிரயோஜனமாய் இருக்கும். ஆகவே அதை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்:
அன்புள்ள சகோதரனுக்கு:-
தேவனுடைய சபையின் உரிமைகள் மற்றும் சுயாதீனம் பற்றின காரியங்களில் நீங்கள் கவனமாய் இருப்பதையும் மற்றும் சபை பிரிவுணர்ச்சியின் தன்மையில் தோற்றமளிக்கும் எதையும் எதிர்த்திட வேண்டும் என்று நீங்கள் கவனமாய் இருப்பதையும் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
சபை பிரிவுணர்ச்சி என்பது – உபதேசம் மற்றும் நடைமுறை விஷயத்தில் ஒருவரையொருவர் அடக்கி ஆளத்தக்கதாக அநேகம் கூட்டத்தார் அல்லது சபையார் ஏறெடுக்கும் முயற்சியாய் இருக்கின்றது என்று நான் உங்களுக்கு நினைப்பூட்டுகின்றேன். நாங்கள் இதைப்போல் எந்த ஆலோசனையையும் முன்வைக்கவில்லை மற்றும் இதைப்போன்ற செயல்களுக்கு, உங்களைப் போன்று நாங்களும் எதிர்ப்பையே தெரிவிக்கின்றோம். நாங்கள் தேவனுடைய ஜனங்கள் காணப்படும் சபையாரை நிர்வகிக்கும் எந்தச் சட்டங்களையோ அல்லது விதிமுறைகளையோ கொண்டு வர முயற்சிக்கவில்லை மாறாக அவர்களைக் கொண்டே அவர்கள் மத்தியில் நியமத்தையும், ஒழுங்கையும் ஏற்படுத்த ஆலோசனை மாத்திரம் சொல்கின்றோம்.
உதாரணத்திற்கு ஒவ்வொரு சபையாரிலுமுள்ள ஒவ்வொரு அங்கத்தினனும் மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களுக்கு வாக்குகள் செலுத்திடும் விஷயத்தில், வாக்குச் செலுத்துவதற்கு முன்பு, தான் வாக்களிக்கும் நபர்களின் தகுதிகளைக் கண்டிப்பாக எண்ணிப்பார்க்க வேண்டும். [R5983 : page 331] அதாவது: (1) வேதத்தின் அடிப்படையான சத்தியங்கள் பற்றின அந்த நபரின் விசுவாசம் தொடர்புடையதான அறிக்கைகள் என்ன? (2) சத்தியத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு அதை மற்றவருக்கும் போதிப்பதற்கு ஏதுவாக, வாக்களிக்கபடுகிறவர் சத்தியத்தைத் தெளிவாய்ப் புரிந்துள்ளாரா அல்லது இல்லையா? (3) அந்த நபர் கர்த்தருக்குத் தன்னைத் தத்தம் செய்துள்ளாரர் மேலும் அதை அடையாளத்தில் காண்பித்துள்ளாரா அல்லது இல்லையா? (4) உயர் நன்னெறி கொள்கைகள் அவரிடத்தில் வெளிப்படுகின்றதா? மற்றும் வாக்குறுதியின் உயர்வான கொள்கைகளுக்கு உடன்பாடு தெரிவிக்கின்றாரா அல்லது இல்லையா?
இதுவரையிலும் சபையார் இந்தக் காரியங்களை ஊகித்து அறிய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டிருந்தனர்; ஆனால், இப்பொழுதோ சபையார் ஊக மதிப்பீடு செய்யாமல் சகோதரர்களிடம் இந்த வி. டி. எம் கேள்விகளையோ அல்லது சபையார் விரும்பும் வேறே வகையான கேள்விகளையோ கேட்கலாம் என்றும், சபையாருக்குத் தகுதியான பிரதிநிதிகள், ஊழியக்காரர்கள் யார் என்று தீர்மானிக்கும் முன்பு அவர்களிடம் கேள்விகள் கேட்டு, பதில்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நாங்கள் யோசனை கூறுகின்றோம். இப்படிச் செய்வதன் மூலம் சபையாரின் அதிகாரம் தக்கவைக்கப்படுகின்றது; இதைப்போல, பிரிவுணர்ச்சியின் அடிப்படையிலான எந்த அமைப்பும், செய்ய முடியாது; மேலும் இது சபையாரைப் பிரதிநிதிகளின் தகுதிகளை நிதானிக்க செய்து, அதை வேதத்தில் சொல்லப்பட்ட வண்ணமாக கைகளை நீட்டி, ஒருவரைச் சபையாருக்குப் பிரதிநிதியாக ஊழியம்செய்ய அங்கீகரிக்க அல்லது ஏற்படுத்த ஏதுவாக்குகின்றது.
உங்கள் கடிதத்தில் வி.டி.எம். கேள்விக்கான பதில்களை மதிப்பீடு செய்ய நியமிக்கப்படும் மூன்று சகோதரர்களுக்கான ஏற்புடைமை பற்றிக் கேள்வி எழுப்பி உள்ளீர்கள்.
ஓவ்வொரு சபையாரும் இறுதியான முடிவை எடுக்கத்தக்கதாக – இக்கேள்விகளுக்கான பதில்களை மதிப்பீடு செய்யவும், திருப்திகரமான விதத்தில் பதில்கள் வராதபட்சத்தில் அது குறித்துத் தகவல் கொடுக்கவும் தக்கதாக, இது விஷயத்தில் நம்பிக்கைக்குப் பாத்திரமான பகுத்துணர்தலை உடைய சில சகோதரர்களை அடையாளம் கண்டுகொள்ள அல்லது நியமிக்க நிச்சயமாகவே சபையார் உரிமைபெற்றிருக்கின்றனர் என்று நான் பதிலளிக்கிறேன். வாக்கெடுப்பிற்குமுன் சபையாரிலுள்ள ஒவ்வொருவரும், கேள்விக்கான பதில்களைத் தெரிவிப்பதைவிட, இதுவே சுலபமான வழியாய்க் காணப்படும் என்று நம்புகின்றோம். எனினும் சபையாரே இதைக் குறித்துத் தீர்மானம் செய்ய வேண்டும். ( New York City ) நியூயார்க் பட்டணத்தின் சபையார் விஷயத்தில், மதிப்பீடு செய்யும் குழுவினராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்று சகோதரர்களின் பரந்த மனப்பான்மையின்படியான தீர்மானத்தின் மீது, எல்லோரும் நம்பிக்கைக் கொள்வோம் என்று ஏகமனதாய் வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளது.
“வாக்குறுதி” பகுதி:
இதைக் குறித்து நீங்கள் கொஞ்சம் எதிர்ப்பதும், உங்கள் கடிதத்தில் தெரிய வருகிறது மற்றும் அதனுடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்வது தேவையில்லை என்ற எண்ணம் இருப்பதும் தெரிகிறது. அந்த வாக்குறுதியில் எது மறுப்பிற்கிடமாய் உள்ளது என்று நேரிடையாய்த் தெரிவிப்பதற்குப்பதிலாக, வாக்குறுதியின் வார்த்தைகளானது அப்படியே வேதவாக்கியங்களில் இல்லை என்ற உங்களது கருத்திற்குப் பின்பாக ஒளிந்து நிற்கின்றீர்கள். ஆங்கிலமொழியில் காணப்படும் யாதொன்றையும் வேதவாக்கியங்களில் காணமுடியாது; ஏனென்றால், அது வேறு மொழியில் எழுதப்பட்டிருந்தது என நினைவூட்ட விரும்புகிறோம். நம்முடைய பாடல்களை வேதவாக்கியங்களில் காணமுடியாது. நமது விசுவாசத்தினை அறிக்கையிடுவதற்கு நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை அப்படியே வேதவாக்கியங்களில் நாம் இன்று காணமுடியாது. வேதவாக்கியங்களானது, நீதியான வாழ்க்கை வாழத் தேவையான பொதுவான கொள்கைகளையும் மற்றும் பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்டதான விசுவாசம் பற்றின அடிப்படை சத்தியங்களையும் நமக்கு முன்வைக்கின்றன. நாம் பாடும் பாடல்கள், போதிப்பவைகள், ஜெபங்கள், எழுதுபவைகள் மற்றும் செயல்கள் அனைத்தும் வேதம் முன்வைக்கும் இந்த அடிப்படையான கொள்கைகளுடன் இசைவாய்க் காணப்படத்தக்கதாக நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வாக்குறுதியின் சொல்நடையானது, தேவனுடைய வார்த்தையின் ஆவி மற்றும் சாரத்திற்கு முழு இசைவுடன் இருக்கின்றது என நம்புவதாக, வாட்ச் டவரின் பெரும் திரளான வாசகர்கள் தகவல் கொடுத்துள்ளார்கள். எந்த ஒரு சகோதரனும் இதற்கு எதிர்த்து நின்றால், அவன் தேவனுடைய வார்த்தையின் ஆவிக்கு விரோதமாகச் செயல்படுகிறான் என்று அர்த்தமாகாதா? இப்படி இருப்பவர் மூப்பர் அல்லது உதவிக்காரராக வேதமாணவர்களின் சபையாருக்குத் தகுதியான பிரதிநிதியாக இருக்க முடியுமா? இல்லை என்றே நாங்கள் நினைக்கிறோம். “வாக்குறுதியில் ஏதேனும் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால், அதாவது அது தேவனுடைய வார்த்தையின் எழுத்துக்கள் மற்றும் சாரத்திற்கு இசைவு இல்லாமல், மாறானதாகக் காணப்படுமாயின் அதை அறிய விரும்புகின்றோம் – அதை எல்லா வேதமாணவர்களும் அறிய விரும்புவார்கள். இதுவரையிலும் யாரும் இந்த வாக்குறுதியின் வார்த்தைகள் மற்றும் ஆவியானது, தேவனுடைய வார்த்தைக்கும், ஆவிக்கும் எதிராக இருக்கின்றது எனக் காண்பிக்கவில்லை. ஆகவே, ஒருவன் வாக்குறுதிக்கு இசைவாய் இருக்க மறுத்தாலும், அதைத் தன்னுடையதாக ஆக்கிக்கொள்ள விருப்பமற்று இருந்தாலும், அவனிடத்தில் ஏதோ ஒரு காரியம் உள்ளது – அவனுடைய சிந்தை அல்லது இருதயம் தேவனுடைய வார்த்தைக்கும், அதன் ஆவிக்கும் இசைவற்று இருக்கின்றது என்பது எங்களது பகுத்துணர்தலாய் இருக்கின்றபடியால், அவன் பொருத்தமான மூப்பராகவோ அல்லது உதவிக்காரனாகவோ இருக்கமாட்டான் என்று எல்லாச் சபையாருக்கும் ஆலோசனை கூறுகின்றோம்.
[R5984 : page 331]
ஆகவே அன்பான சகோதரனே, நீங்கள் இதை வாசித்து, சிந்தித்து, ஜெபம் பண்ணும்போது, நீங்கள் தவறாய் முதலில் கணித்துவிட்டீர்கள் என்று உணர்ந்துகொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன் அல்லது நான் முழுமையாகப் பதில் அளிக்கவில்லை, சிலவற்றை விட்டுவிட்டேன் என்று நீங்கள் கண்டால், அதை எனக்கு நீங்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சிக் கொள்வேன்.
நான் நினைப்பூட்டுவது என்னவென்றால்: இந்த வாக்குறுதியினை நாம் கர்த்தரிடத்தில் பண்ணுகிறோம்; சகோதரரிடத்தில் அல்ல; ஆகையால் யார் ஒருவர் தான் வாக்குறுதி பண்ணினதாக அறிக்கை செய்கிறாரோ, அதன்மூலம் அவர் எந்த ஒரு சகோதரனுக்கும் அடிமையாகி விடுவதில்லை மாறாக தான் அடையாளம் கண்டுகொண்டுள்ள கடமையினையும், அதைத் தேவனுக்கு அறிக்கைப் பண்ணியுள்ளதையும் மாத்திரம் சகோதரருக்கு அறிக்கை செய்கிறார். ஆகவே வாக்குறுதி எடுத்துள்ள சகோதரனின் காரியத்தில் தலையிட்டு ஆராய்ச்சி செய்வது, சகோதரர்களுக்கடுத்த காரியமல்ல. வாக்குறுதியை உண்மையாகத் தக்கவைப்பது என்பது, கர்த்தருக்கும் அவனுக்கும் இடையில் உள்ள காரியம். வாக்குறுதியானது அவனுடைய சகோதரர்கள் மற்றும் சபையாருக்கான அவனது பொறுப்பினைக் கூட்டவோ குறைக்கவோ செய்யாது. வாக்குறுதி பண்ணினதாக அவன் அறிக்கை பண்ணுவது என்பது நன்னெறியோடு ஜீவிப்பதற்கு, தான் அடையாளம் கண்டுகொண்டுள்ள மற்றும் பின்பற்ற நாடுகின்றதான உயர் நிலைப்பாட்டினைச் சகோதரர்களுக்குத் தெரிவிப்பதாய் மாத்திரமே இருக்கும்.