R5315 (page 283)
எண்ணாகமம் 20:1-13
“என் கன்மலையும் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின்
தியானமும், உமது சமூகத்தில் பிரீதியாயிருப்பதாக.”- சங்கீதம் 19:14
இஸ்ரயேலர்கள் எகிப்தை விட்டு வெளியேறிய நாற்பதாவது வருடமே அவர்கள் கானானுக்குள் நுழைய தேவன் குறித்திருந்த காலமாக இருந்தது. மோசேக்கு வயது நூற்றி இருபதாக இருந்தது. ஆனால் அவர் நல்ல பலமுள்ளவராக இருந்தார். அவரது சகோதரி மிரியாம் முன்னரே இறந்துபோனாள். அவரது மூத்த சகோதரன் ஆரோன் இன்னும் உயிரோடிருந்து அதே வருடத்தில் இறந்து போனான். இஸ்ரயேலின் பிள்ளைகள் வனாந்தரத்தில் முப்பத்தி எட்டு வருடங்கள் தங்கியிருந்தார்கள். காதேஸ் பர்னேயாவை மையமாகக் கொண்டு பெரும்பாலான காலப்பகுதியை தங்கள் ஆடு, மாடுகளுடன் வனாந்தரத்திலே கழித்தார்கள்.
நாற்பதாவது வருடம் ஏப்ரல் மாதத்தில் மோசேயின் மூலமான தெய்வீக கட்டளையின்படி அவர்கள் காதேசில் கூடி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைய தயாரானார்கள். ஆனால் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. ஜனங்களும் அவர்களது கால்நடைகளும் தாகமாயிருந்தார்கள். முறுமுறுப்புகள் எழும்பின. அங்கே தாகத்தினால் சாகிறதைக் காட்டிலும் எகிப்திலேயே அல்லது வேறு எங்கயோ அழிந்து போயிருந்தால் நலமாயிருக்கும் என்ற பேச்சு எழுந்தது.
இந்த சுமை இயற்கையாகவே மோசே மற்றும் ஆரோன் மேல் விழுந்தது. கனம் மற்றும் செல்வாக்குள்ள சகல தலைவர்களும் இந்த கனமான பொறுப்புகளை சுமந்தார்கள். மோசேயும் ஆரோனும் இந்த காரியத்தை உன்னதமானவரிடம், அவரது வழிநடத்துதலுக்காக குறையாக இல்லாமல் வேண்டுகோளாக இஸ்ரயேலரின் உண்மையான தலைவரிடம் எடுத்துச் சென்றார்கள். அவர்கள் சென்றது வீணாகவில்லை. கர்த்தர் தம்மை கிருபையாக வெளிப்படுத்தினார். “கர்த்தருடைய மகிமை அவர்களுக்கு காணப்பட்டது.” பார்த்துக்கொண்டிருந்த இஸ்ரயேல் ஜனங்களுக்கும் வெளிப்படுத்தினார். இந்த மகிமை ஒரு ஒளிக்கதிராக மகா பரிசுத்த ஸ்தலத்தின் கிருபாசனத்திலிருந்து வெளிப்பட்டதாக கருதப்பட்டது.
அவர்கள் கோலை, “ஆரோனின் துளிர்த்த கோலை” எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அது மகா பரிசுத்த ஸ்தலத்தில் கிருபாசன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த கோல், ஆரோன் பிரதான ஆசாரியனாகவும் மோசேக்கு உதவியாளனாகவும் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு ஒரு ஞாபகார்த்தமாக இருந்தது. அது அவர்களுக்கு தெய்வீக கிருபையின் ஒரு அடையாளமாக இருந்தது. அது கர்த்தரிடத்திலும், அவரது வல்லமையின் சத்துவத்திலும் நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் அவர்களது தேசத்தை இதுவரை வழி நடத்தியது போல இன்னும் தொடர்ந்து வழி நடத்துகிறதாக இருந்தது.
கர்த்தர், மோசேயிடம் கன்மலையை பார்த்து பேசச்சொன்னார். அந்த வார்த்தைக்கு, தண்ணீர் கன்மலையிலிருந்து ஏராளமாய் புறப்பட்டு வந்திருக்கும். கடந்த முறை சுமார் முப்பத்தி எட்டு வருடங்களுக்கு முன்பு, சீனாய் மலைக்கு அருகே இதே போன்ற அனுபவத்தில், மோசே கன்மலையை அடிக்கும்படி கட்டளையிடப்பட்டிருந்தார்; ஆனால் இந்த முறை கன்மலை அடிக்கப்படக் கூடாது. இங்கே மோசேயும் ஆரோனும் பாவம் செய்தார்கள். “பூமியிலே சகல “மனிதரிலும் சாந்த குணமுள்ள மனிதன்” தன்னை மறந்து, ஒரு கனத்தில் பெருமைக்கு ஒத்த ஆவியையும், தன்னிறைவும் கோபமும் தன்னைக் கட்டுப்படுத்தும்படி அனுமதித்தார். கன்மலையை அடித்து அவர் ஜனங்களை நோக்கி, “கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்த கன்மலையிலிருந்து, நாங்கள் தண்ணீர் புறப்படப் பண்ணுவோமா என்று கத்தினார்.”
கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தது போல, தண்ணீர் வந்தது. ஜனங்கள் உண்மையிலேயே தேவையான ஆசீர்வாதத்தை பெற்றார்கள். ஆனால் மனிதரிலும் தேவனுடைய ஊழியரிலும் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் தெய்வீக மறுதலிப்பில் விழுந்தார். மோசேயோ, ஆரோனோ கானானுக்குள் நுழைய மாட்டார்கள் என்பதே கர்த்தரின் தீர்ப்பாக இருந்தது. எனினும் மோசே, ஜனங்களுடன் அவர்களது பிரயாண முடிவு வரை செல்லவும், நெபோ மலையிலிருந்து யோர்தானின் குறுக்கே தேசத்தை பார்க்கவும் அனுமதிக்கப்பட்டார்.
இந்த ஆக்கினைத் தீர்ப்பு, நித்திய ஆக்கினையில் போடுவதையோ, நீண்ட கால அவமதிப்பையோ குறிக்காது. தேவனுடைய பரிசுத்தவான்களைப்போல, மரணத்துக்கு முன்பே மோசே அவ்வப்போது அவரது முழு தண்டனையை பெற்றார். தற்கால வாழ்க்கையில் செய்த தவறுகளுக்காக மனுக்குலத்திற்கு பொதுவாக கிடைக்கப்போகிற அடிகள், தண்டனைகள் இருந்தாலும் பரிசுத்தவான்களுக்கு அப்படி ஏதும் இல்லை. அவர்கள் உலகத்திற்கு சீக்கிரத்தில் வரப்போகிற ஆக்கினைத் தீர்ப்புக்கு வராதபடி தற்கால வாழ்க்கையிலேயே அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்று அப்போஸ்தலர் விளக்குகிறார்.
கன்மலையை அடிப்பது ஒரு நிழலான காரியம் என்றும் பரிசுத்த பவுல் நமக்கு குறிப்பிட்டு கூறுகிறார். வானத்திலிருந்து வந்த அப்பம், மன்னா, இயேசுவை குறித்தது போல, கன்மலையை அடித்தது கூட இயேசுவைக் குறித்தது. கன்மலையிலிருந்து வந்த புத்துணர்ச்சி தரும் தண்ணீர் கிறிஸ்துவின் பலியினால் வருகிற ஆசீர்வாதங்களை குறிக்கிறது. இஸ்ரயேலர்களின் அனுபவத்தில் முதல் தடவை கன்மலையை அடித்தது தேவனால் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தது. துன்பத்தின் கோல் அவரது மரணம் வரை இயேசுவின் மேல் விழுவது அவசியமானதாக இருந்தது:
1. “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் (மரண தண்டனையை) விழப்பண்ணினார்.”
2. “அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்.” – ஏசாயா 53:5,6
பரிசுத்த பவுலின் வார்த்தைகளாவன: “எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில் அவர்களோடேகூடச் சென்ற ஞான கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள். அந்த கன்மலை கிறிஸ்துவே.” – 1 கொரிந்தியர் 10:4
தேவன் அங்கீகரிக்காத, இரண்டாவது தடவை கன்மலை அடிக்கப்பட்டது எதை நிழலாக காண்பிக்கிறது என்பது குறித்து பரிசுத்த பவுல் விளக்கவில்லை. இந்த இரண்டாவது அடித்தல் தண்டிக்கப்பட்டதால், அது தவறு என்பதை நமக்கு கூறுகிறது. அது தேவனுடைய ஜனங்களின் சில தவறான மார்க்கத்தை அர்த்தப்படுத்துகிறது. இரண்டு யோசனைகள் நமக்கு வருகிறது. அதில் ஒன்றோ அல்லது இரண்டும் பொருந்தக்கூடியதாக இருக்கின்றது.
1. நாற்பது வருட முடிவில், ஜனங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் வழிநடத்தப்படும் போது, இந்த இரண்டாவது அடித்தல், தேவனுடைய ஜனங்களை, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை அடித்தலை குறிக்கலாம். கிறிஸ்துவின் சரீர அங்கங்களாகிய சில பரிசுத்தவான்கள் இந்த யுக முடிவில் அவமானத்திற்கும் ஒருவேளை மரணத்திற்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டு, ஆண்டவர் அடிக்கப்பட்ட போது, அவர் செய்தது போல செய்து இப்படியாக மகிமைக்குள் நுழைவார்கள் என்று சுவிசேஷ யுகத்தைப் பற்றிய அநேக வேதவாக்கியங்கள் நமக்கு கூறுகின்றன. ஆண்டவர் விஷயத்தில், ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்கும் என்று பிரதான ஆசாரியன் அறிவித்தான். (யோவான் 11:50)
மத ஆளுனர்கள் தேவனுக்கு மகிமை என்று நினைத்து ஆண்டவருக்கு விரோதமாக சதி செய்தார்கள். இந்த சுவிசேஷ யுக முடிவில் இதே மாதிரியான யோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மதத்தலைவர்கள் சுய பாதுகாப்பில் இதே போன்ற நோக்கங்களில் கர்த்தருடைய பிள்ளைகள் சிலருக்கு எதிராக சதி செய்து, அடிக்கவும் காயப்படுத்தவும் செய்வார்கள். இது ஒரு சரியான விளக்கமாக இருக்குமானால், அடிக்கிறதற்கு பதிலாக, தண்ணீருக்காக, சத்தியத்திற்காக, புத்துணர்ச்சிக்காக கன்மலையிடம் பேசுகிற நல்ல மார்க்கத்தை பின்பற்றுவதின் மூலம் பெரிய ஆசீர்வாதங்கள் வராது என்பதையும் தவறான மார்க்கத்திலிருந்து தேவ கிருபையின் கீழ் ஆசீர்வாதங்கள் பாய்ந்தோடும் என்பதை குறிக்கும்.
2. இரண்டாவது கருத்து, கன்மலையை இரண்டாவது தடவை அடிப்பது, அர்ப்பணம் செய்த அவரது சீஷர்கள் இரட்சகரை மறுதலித்து, அவரை அவமானப்படுத்தும் படியாக மறுபடியும் சிலுவையில் அறைவதை குறிக்கும். ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும் பரம ஈவை ருசிபார்த்தும் இனிவரும் உலகத்தின் பெலன்களை ருசிபார்த்தும், கிறிஸ்துவின் வார்த்தையை மறுதலிப்பவர்கள் பரலோக இராஜ்யத்திலுள்ள எந்த இடத்திற்கும் அபாத்திரர் என்று கருதப்பட்டு இரண்டாம் மரணத்தில் மரிப்பார்கள் என்று பரிசுத்த பவுல் விளக்குகிறார். (எபிரேயர் 6:4-7)
மோசே மற்றும் ஆரோன் இருவரும் இந்த மாதிரியில் பங்குபெற்று, கானான் தேசத்தில் நுழையாதது, ராஜரீக ஆசாரிய பிரகாசிப்பிக்கப்பட்ட அங்கங்களும், மிகவும் உயர்ந்த உத்தியோகஸ்தர்களும் இரண்டாவது மற்றும் அங்கீகரிக்கப்படாத கன்மலையை அடித்தலினால் சித்தரித்துக் காண்பிக்கப்பட்ட பாவத்தை செய்யும் ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதை குறிக்கிறது. மாறாக, முதல் தடவையாக [R5315 : page 284] மெய்யான கன்மலையை அடித்தவர்கள், இயேசுவை சிலுவையில் அறைந்தவர்கள், அறியாமல் செய்தார்கள் என்றும் வேதவாக்கியங்கள் நமக்கு உறுதியளிக்கின்றன. “சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்கள்.” “அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.” (அப்போஸ்தலர் 3:17; 1 கொரிந்தியர் 2:8)
“பூமியிலுள்ள சகல மனிதரிலும் சாந்தகுணமுள்ளவனாயிருந்தவன்.” அநேக வருடங்கள் பயிற்சியும் அனுபவமும் உள்ளவர் இப்படிப்பட்ட ஒரு தவறைச் செய்தார். இந்த பாடம் ஆவிக்குரிய தலைவர்களுக்கு மனதில் நன்கு பதியக்கூடிய ஒன்றாக இருக்கும். பரிசுத்த ஆவியினால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள் நமக்கு கூறுவதாவது: “தன்னை நிற்கிறவன் என்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 10:12) மோசே மற்றும் ஆரோனின் பாவம் அவிசுவாசத்தில் ஒன்று என்று கர்த்தர் கூறினார். “இஸ்ரயேலரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி நீங்கள் என்னை விசுவாசியாமற்போனபடியினால்” என்று கர்த்தர் கூறினார். (எண்ணாகமம் 20:12)
மோசே கன்மலையை அடிப்பதற்கு தேவனிடத்தில் விசுவாசம் தேவைப்பட்டது. அவரது விசுவாசக் குறைவு ஜனங்களிடத்தில் இருந்தது. அவர் ஒரு தெளிவான விளைவை ஏற்படுத்த விரும்பினார். ஒரு நிரந்தரமான பாடத்தை அவர்களில் பதியவைக்க விரும்பினார். “கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்த கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப் பண்ணுவோமா?”அதன் விளைவு தெளிவானதாக இருந்தது. ஜனங்கள் மோசேயுடன் பணிவுடன் கூடிய அச்சத்தில் நின்றிருக்கலாம். ஆனால் காரியத்தை கையாளுவதற்கு இது சிறந்த வழியல்ல. ஏனெனில் அது தேவனுடைய வழியல்ல. யேகோவாவின் நாமத்தில் கன்மலையிடமிருந்து கேட்பதற்கு மோசே தன்னை மறைத்திருந்தால், தன்னை தாழ்த்தியிருந்ததால் நன்றாக இருந்திருக்கும்.
கிறிஸ்துவின் சபையின் தலைவர்கள் வகுப்பார், மூப்பர்கள், ஊழியர்கள் தேவன் ஏற்பாடு செய்திருக்கிற ஆசீர்வாதங்கள், அடிக்கப்பட்ட இயேசுவிடமிருந்து பாயும் என்பதையும் நன்றாக நினைவுகூருவார்கள். அவர்கள் கன்மலையை அடிக்கவோ அல்லது கிருபை மற்றும் சத்தியத்தின் வெள்ளத்தை வழங்குவதற்கு தேவனுடைய ஜனங்களுக்கு முன்பாக வியக்கத்தக்க வகையில் பாவனை செய்யவோ அனுமதிக்கப்படவில்லை என்பதையும் நினைவுகூருவார்கள்.
இன்னொரு வகையில் தற்காலத்தில் வரவேண்டிய கிருபை மற்றும் சத்தியத்தில் தாகமாயிருக்கிற ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள், கர்த்தரின் ஜனங்கள், போதிக்கிற வேலையை எடுத்துக் கொண்டிருப்பவர்களிடம் தயவு காண்பிக்க வேண்டும். கர்த்தருடைய ஊழியர்களை நேர்மை மற்றும் விசுவாசத்தில் தீவிரமாக சோதிப்பதற்கு இந்த காலத்தைக் காட்டிலும் வேறுகாலம் இருந்ததில்லை. அனைவருக்கும் சாந்தம், பொறுமை, நீடிய பொறுமை, சகோதர அன்பு, அன்பு, தேவனிடத்தில் விசுவாசம் மற்றும் அவர்களது உடன்படிக்கைக்கு உண்மைத்தன்மை ஆகியவை தேவையாயிருக்கிறது.
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் வசித்த பல்வேறு ஜாதிகளின் அக்கிரமம் நிறைவடைந்திருந்து, இஸ்ரயேலர்களால் அகற்றப்பட வேண்டியவர்களாக இருந்தார்கள். இவர்கள் ஆபிரகாமுக்கு உறவினர்கள் அல்ல. ஆனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் தெற்கு மற்றும் கிழக்கில் குடியிருந்த ஏதோமியர்கள், மோவாபியர்கள் மற்றும் மீதியானியர்கள், இஸ்ரயேலருடன் இரத்த சம்பந்தமான உறவுக்காரர்கள். [R5316 : page 284] மீதியானியர்கள், கேத்தூராளின் மூலம் பிறந்த ஆபிரகாமின் பிள்ளைகள். மோவாபியர்கள் ஆபிரகாமின் சகோதரன் மகன் லோத்தின் பிள்ளைகள். ஏதோமியர்கள், யாக்கோபின் சகோதரன் ஏசாவின் சந்ததியினர். இஸ்ரயேலர்கள் தாக்குதல் செய்யும் போது உறவின் ஜனங்கள் தொல்லைப்படுத்தப்படாமலிருப்பது தெய்வீக திட்டமாக இருந்தது.
காதேஸிலிருந்து கானானுக்குள் நுழையும் நேரம் வந்த போது, ஏதோம் வழியாக செல்வதுதான் அருகில் உள்ள பாதையாக இருந்திருக்கும். இஸ்ரயேலர்கள் ஏதோம் வழியாக செல்ல அனுமதி கேட்டார்கள். அவர்களது ஜனங்களுக்கோ, உடைமைகளுக்கோ எந்த நஷ்டமும் ஏற்படாது, அப்படி ஏற்பட்டால் நஷ்ட ஈடு கொடுப்போம் என்று உத்தரவாதம் கொடுத்தார்கள். ஆனால் ஏதோமியர் அனுமதி கொடுக்கவில்லை. ஆகையால் ஏசாவுக்கும் யாக்கோபுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கைக்கு இசைவாக, இஸ்ரயேலின் சேனைகள் தெற்கே செல்ல தடுக்கப்பட்டு லோத்தின் பிள்ளைகளின் தேசமாகிய மோவாப் தேசத்தின் வழியாக சென்றார்கள்.
பாலைவனம் வழியாக செல்லும் இந்த மாற்றுப்பாதை மாபெரும் கூட்டத்திற்கு மனச்சோர்வாக இருந்தது. “வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.” மறுபடியும் ஜனங்களிடமிருந்து அவர்களுக்கு உண்மையிலேயே தேவனிடம் பிரதிநிதியாக இருந்த மோசேக்கு முறுமுறுப்பு வந்தது. அவர்களது முறுமுறுப்பு சரியானபடி தண்டனைக்குள்ளானது. அருகிலேயே இருந்த சர்ப்பங்களிடமிருந்து அவர்கள் காக்கப்படவில்லை. விளைவு பயங்கரமானதாக இருந்தது. மோசே பித்தளையினால் ஒரு சர்ப்பத்தை செய்து அதை ஒரு மரத்தில் தூக்கி நிறுத்தும் வரை சர்ப்பங்களினால் அநேகர் மரித்தார்கள். பித்தளை சர்ப்பத்தை நோக்கி பார்த்து விசுவாசத்தை அப்பியாசப்படுத்தி வியாதியிலிருந்து சுகமடையும்படி பாளையமெங்கும் செய்தி அனுப்பப்பட்டது.
இப்படியாக மாம்சீக இஸ்ரயேலர்கள் மாத்திரம் தண்டிக்கப்பட்டு, சரிபடுத்தப்படவில்லை. ஆனால் ஆவிக்குரிய இஸ்ரயேலரின் அனுகூலத்திற்கும் ஒரு நிரந்தர பாடமாக இருக்கும்படி எழுதப்பட்டிருந்தது. பாவமாகிய கொடிய சர்ப்பத்தினால் நமது இனம் கடிக்கப்பட்டிருக்கிறது. அதனிமித்தம் நாம் சாகிறோம். சிலுவையிலறையப்பட்டவரில் விசுவாசத்தை அப்பியாசப்படுத்தினால் மட்டுமே நாம் குணமடைய முடியும். பாவம் மற்றும் மரணத்தின் ஆளுகையில் பாவத்தினால் கடிபட்டவர்களை இரட்சகரை நோக்கி பார்க்கச் சொல்வதே நம்முடைய ஊழியமாக இருக்கிறது. “சர்ப்பமானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டது போல, மனுஷ குமாரனும் உயர்த்தப்பட வேண்டும்.” “நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன்” என்று இயேசு கூறினார். (யோவான் 3: 14; 12:32)
தற்காலத்தில் சிலர் மட்டுமே இந்த செய்தியை கேட்கிறார்கள் அல்லது சிலுவையிலறையப்பட்டவரை விசுவாசக் கண்களால் பார்க்கிறார்கள். திரளானவர்கள் புறஜாதிகளின் இருளில் மரித்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் மட்டுமே கிறிஸ்துவில் விசுவாசத்தை அப்பியாசப்படுத்தும் சந்தர்ப்பத்தை பெற்றிருக்கிறார்கள். தேவனுக்கு ஸ்தோத்திரம். கல்வாரியில் உயர்த்தப்பட்டு அதன் பிறகு உயிர்த்தெழுதல் வல்லமையிலிருந்து உயர்த்தப்பட்டவர் வல்லமையிலும் மகா மகிமையிலும் வெளிப்படுத்தப்படும் நாள் நெருங்குகிறது. “உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.” அதற்குத்தக்கதாக அவர்கள் இயங்கவில்லை என்றால், தவறு அவர்களுடையதாகவே இருக்கும். (மத்தேயு 24:30; யோவான் 1:9-11) “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று நாம் இன்னும் ஜெபித்துக்கொண்டிருக்கிற மேசியாவின் ராஜ்யத்தின் மூலம் மகிமையின் நிலைமை வரும்.