R5552 (page 301)
மத்தேயு 26:14-25, 47-50; 27:3-10
“எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ.”” மத்தேயு 26:24
இயேசுவின் பதினொரு சீஷர்கள் கலிலேயர்களாக இருக்க, யூதாஸ் பாலஸ்தீனியாவின் தெற்குப் பகுதியைச் சார்ந்தவராக இருந்தார். வணிகத்தில் திறமைமிக்கவராக யூதாஸ் இருந்தபடியால், அவர் அப்போஸ்தலர்களின் கூட்டத்திற்குப் பொருளாளராக அமர்த்தப்பட்டார் என்று அனுமானிக்கப்படுகின்றது. இயேசுவின் நண்பர்கள், இராஜ்யத்தைக் குறித்து அறிவிப்பதற்கு, தாங்களும், இயேசுவும், தங்களுடைய முழு நேரத்தையும் கொடுக்க வேண்டிய அவசியம் குறித்ததான உண்மையை உணர்ந்திருந்தனர். ஆகவே அவர்களைத் தாங்கும் வண்ணமாக சிலர் தானாகவே முன்வந்து பண உதவி பண்ணினார்கள் என்று நாம் வாசிக்கையில் நமக்கு விநோதமாக எதுவும் தோன்றவில்லை.
இயேசுவும், அவருடைய அப்போஸ்தலர்களும் பணத்திற்காக கெஞ்சியிருப்பார்கள் என்றோ அல்லது பணம் வசூலிக்க முயன்றிருப்பார்கள் என்றோ நம்மால் எண்ணிகூடப் பார்க்க முடியாது. இப்படியாக, செய்யப்பட்டிருக்குமாயின், அது “”சகல பொன்னும், சகல வெள்ளியும், பர்வதங்களில் திரிகிற ஆயிரமாயிரமான மிருகங்களும் என்னுடையவைகள்” என்று பிதாவாகிய தேவன் பேசினதின் மதிப்பைக் குறைத்துப் போடுவதாகவும், உதவிக்காக அவர் கேட்டுவாங்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றார் என்பதாகவும் ஆகிவிடும். மாறாக, ஆண்டவருக்கு ஆதரவாக சிலர் தானாகவே முன்வந்து கொடுத்தார்கள் என்றே வேதவாக்கியங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. உதாரணத்திற்கு, ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், இன்னும் சிலரும் இதைச் செய்தார்கள் என்று வாசிக்கின்றோம் (லூக்கா 8:3). இப்படியாக, முன்வந்து கொடுக்கப்பட்ட நன்கொடையின் நிமித்தம், அப்போஸ்தலரின் கூட்டத்தாருக்குப் பொதுவாக ஒரு பொருளாளர் நியமிக்க அவசியமாயிற்று. அதுவும், அந்தப் பொருளாளர் மிகச்சிறந்த வாணிக திறன்மிக்கவராகவும் இருப்பது அவசியமாயிற்று.
பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவராக இயேசு யூதாசைத் தெரிந்துக்கொண்டபோது, அவர் கேடான மனிதனாக இருந்தார் என்று சொல்வதற்கோ, நம்புவதற்கோ எவ்வித காரணங்களும் நமக்கில்லை. ஆனால் மிகுந்த சாதகமான செல்வாக்குகளின் கீழ் இருந்தபோதிலும், அதாவது, இயேசு மற்றும் மற்ற அப்போஸ்தலர்களின் தோழமை இருந்துகொண்டிருக்கும் போதும், இராஜ்யத்தின் செய்தி தொடர்ந்து அவர் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும் போதும், அவர் கேடான குணங்களை வளர்த்துக்கொண்டிருந்தார் என்று நம்புவதற்கு அனைத்துக் காரணங்களும் நமக்குக் காணப்படுகின்றன. எனினும் அவருடைய பின்மாற்றத்திற்கு ஓர் ஆரம்பம் இருந்தது. மேலும், யூதாசுக்கு, சுயநலம், பணத்தின் மீது பிரியம், பேராசை ஆகியவைகளின் அடிப்படையிலேயே சோதனை வந்தது என வேதவாக்கியங்கள் சுட்டிக்காண்பிக்கின்றன.
அந்தோ! எத்தனை நேர்மையான மனிதர்கள், பணத்தின் மீதான அன்பின் நிமித்தம், நீதியின் பாதையினின்று கெடுக்கப்பட்டுப் போய்விட்டனர்! பரிசேயர்களுக்கு எதிராக, இயேசு கூறின கடுமையான குற்றச்சாட்டுகளில் ஒன்று, அவர்கள் பணப்பிரியராக இருந்தார்கள் என்பதை நாம் நினைவுகூருகின்றோம். இன்றைய காலத்திலுள்ள அநேக கிறிஸ்தவர்களுக்கும், பிரச்சனை/இடர்பாடு பணத்தின் மீதான ஆசையின் அடிப்படையிலேயே உள்ளது என்று ஒருவேளை நிரூபித்துக்காட்டப்பட்டாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. “”பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது”” என்பது இன்றும் உண்மையாகவே உள்ளது (1 தீமோத்தேயு 6:10). மேலுமாக அப்போஸ்தலர் (இப்பண ஆசை எனும்) வஞ்சனையின் நிமித்தம், அநேகர் வேதனைகளாலே தங்களை உருவக்குத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் கூறுகின்றார்; எனினும் யூதாஸ் செய்ததுபோன்று எப்போதும் மிக அபாயகரமாக இருப்பதில்லை.
யூதாஸ் தனது ஆண்டவரை முப்பது வெள்ளிக்காசுகளுக்குக் காட்டிக்கொடுக்கும் அளவு பணப்பிரியனாக இருந்தார். அதாவது, கூலியின் அடிப்படையில் பார்க்கையில் முப்பது வெள்ளிக்காசு என்பது இருநூறு முதல் முன்னூறு டாலர்களுக்குள்ளான மதிப்பை உடையதாகும். இன்னும் வேறுசிலர் தங்கள் மனசாட்சியை விற்றுப்போடும் அளவிற்கு, ஆஸ்திகள் பெறும் பொருட்டு/சம்பாதித்துக்கொள்ளும் பொருட்டுப் பணப்பிரியராக இருக்கின்றனர். தப்பறைகளை ஆதரிப்பதின் மூலம், தங்கள் தொழிலில் நன்கு செழிப்படையலாம் என்று நம்பி, பணத்திற்காகச் சிலர் சத்தியத்தையும் விற்றுப்போட்டவர்களாக இருக்கின்றனர். சிலர் பணத்திற்காக, சபையையே விற்றுப்போட்டவர்களாக இருக்கின்றனர். மேலும், மனுஷனுடைய அங்கீகரிப்பைப் பெற்றுக்கொள்வதற்காக, தாங்கள் வாடகைக்காக/கூலிக்காக அமர்த்தப்பட்டிருக்கும் நபராக இருப்பதினால், தாங்கள் விசுவாசிக்காததைப் பிரசங்கிக்க விருப்பம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள். சிலர் தங்களுடைய தேசபக்தியை, பணத்தின் மீதான விருப்பத்தின் காரணமாக வியாபாரம் செய்து, தங்கள் தேசத்தையும் விற்றுப்போட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
பண ஆசையின் ஏமாற்றுத்தனமான சதிதாக்கத்திலிருந்து, ஒவ்வொருவரும் தங்களைக் காத்துக்கொள்வது மிகவும் அவசியமாய் உள்ளது. ஆனால், நாம் பணத்திற்கும், பண ஆசைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைத் தெளிவாகத் தெரிந்திருக்கிறவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், பண ஆசையே, அழிவையும் உண்டாக்கி, ஆத்துமாவை ஏமாற்றி, சிக்கவைக்க செய்கின்றதாகவும் காணப்படுகின்றது. பணம் என்பது கடின உழைப்பையும், கூலியையும், சேர்த்துவைத்தலையும் குறிக்கின்றது. மேலும், பணத்தைக்கொண்டு செய்யப்படக்கூடிய நன்மையினிமித்தம் அதற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். ஆனால், பணத்தின் மீது ஆசைக்கொள்வதோ, அதற்கு ஊழியம் புரிவதோ, அதனை விக்கிரகமாக பாவித்து வாழ்க்கையில் வைத்துக்கொள்வதோ, தேவனிடத்திலிருந்து நம்முடைய இருதயங்களைத் தூர விலகச் செய்யும்படிக்குப் பணத்திற்கு அனுமதிக் கொடுப்பதையோ நாம் செய்யக்கூடாது. இந்தப் பண ஆசையே யூதாசின் பயங்கரமான வீழ்ச்சிக்கான, அடிப்படை காரணம் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.
ஒரு தீர்க்கத்தரிசனத்தின் நிறைவேறுதல் – SUB HEADING
பணப்பையைச் சுமந்திருந்த யூதாஸ், ஒரு கள்வன் என்று சீஷர்கள் ஆரம்பத்தில் அறிந்துக்கொள்ளாமல், போகப்போகத்தான் அறிந்துக்கொண்டார்கள் (யோவான் 12:6). சீஷர்களுக்கென்று கொடுக்கப்பட்ட பணங்களைத் தனக்கென்று யூதாஸ் பயன்படுத்திக் கொண்டிருந்து, சில நியாயமாய்த்தோன்றும் சாக்குப்போக்குகளைக் கூறியிருக்க வேண்டும். ஏனெனில், பாவம் எப்பொழுதும் ஏமாற்றுகின்றதாய்க் காணப்படுகின்றது. சந்தேகத்திற்கு இடமின்றி அவர் இப்படியாகக் கூறியிருந்திருக்க வேண்டும்… “”நான் பணத்தைச் சேமித்து வைத்துள்ளேன். ஏனெனில், ஆண்டவருக்கும், நம் அனைவருக்கும் மிகுந்த பணத் தேவை ஏற்படும் ஒரு காலம் வரும் என எனக்கு தோன்றினதினாலேயாகும். அப்படியான ஒரு காலக்கட்டத்தில், வருங்காலத்தைக் கருதி நான் செய்ததை உணர்ந்துக்கொள்வீர்கள்” என்பதேயாகும். இப்படியாக, அவர் சிந்தித்துக் கொண்டிருந்தது, பணத்தின் மீதான அவருடைய ஆசையை அதிகரிக்கச் செய்துவிட்டது. மேலும், இந்த ஆசையானது, இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக திட்டம் போடத்தக்கதாக, அவருடைய உற்சாகமான வியாபார எண்ணங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மனதை, வழி நடத்தினது.
இயேசு குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டுத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டதை அறிந்த யூதாஸ், தனது தவறுக்காக மனவருத்தம் அடைந்தவராக, பிரதான ஆசாரியர்களிடம் பணத்தைத் திரும்பக்கொண்டு போய், தான் செய்த காரியத்தை திருத்தம் செய்ய விரும்பினவராக இருந்தார் என்று பதிவுகள் உள்ளன. அவர்களோ, அவரைக் கண்டு நகைத்து, அவர் ஒருவேளை குற்றமற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துள்ளார் என்றால், அது அவர் பாடு என்றும், அதைக் குறித்துத் தங்களுக்குக் கவலை இல்லை என்றும் கூறினார்கள். திருப்பிக் கொடுக்கப்பட்ட பணமானது, “”இரத்த பணமாக” இருந்தபடியினால், அவர்களால் அதை மீண்டுமாக ஆலயத்தின் நிதி இலாகாவிடத்தில் போட்டுவிடக் கூடாதிருந்தது. ஆகவே அவர்கள் அந்தப் பணத்தைக்கொண்டு, அந்நியரை அடக்கம் பண்ணுவதற்குக் குறைந்த விலையில் குயவனுடைய நிலத்தை வாங்கினார்கள். இப்படியாக, அவர்கள் மறந்துபோனதும், எரேமியாவினால் முன்னுரைக்கப்பட்டதுமான தீர்க்கத்தரிசனம் நிறைவேறினது. “”இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கத்தரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று”” (மத்தேயு 27:9,10).
[R5552 : page 302]
இயேசு குற்றவாளிக்குரிய தண்டனை தீர்ப்பிற்குள்ளானார் என்று யூதாஸ் கேள்விப்பட்டு, ஆச்சரியம் அடைந்தார் என்பது போன்று பதிவுகள் காட்டுகின்றது. இயேசு இக்கட்டான பரீட்சையில் கொண்டுவந்து நிறுத்தப்படும்போது, அவர் தம்மை மேசியா என்று உறுதிப்படுத்திக்கொண்டு, தமது சத்துருக்கள் மேல் ஜெயங்கொள்வார் என்று யூதாஸ் அனுமானித்திருக்க வேண்டும். யூதாஸ் தனக்கும் பங்குண்டு என்று நம்பிக்கைக்கொண்டிருந்த இராஜ்யத்தின் ஸ்தாபனத்தை, இப்படியாகத் துரிதப்படுத்தலாம் என்றே அநேகமாக எண்ணியிருக்க வேண்டும். இறுதியில், தன்னுடைய தவறுக்காகக் காரணம் தெரிவிக்கும்விதமாக, “”பாருங்கள் நமக்கு முப்பது வெள்ளி காசும் சேர்ந்துவிட்டது மற்றும் வேறு எந்த வழியிலும் காரியங்களை வேகமாக உச்சக்கட்டத்திற்குக் கொண்டுவர முடியாமல் இருக்க, நான் இப்படிச் செய்து உச்சக்கட்டத்திற்குக் கொண்டுவந்ததற்காக எனக்கு நீங்கள் நன்றி சொல்லலாம்”” என்றே யூதாஸ் கூறியிருந்திருப்பார். இவ்விதமாக யூதாஸ் ஒரு கதாநாயகனாகவும் திகழ்ந்திருக்க முடியும். அதேசமயத்தில் பொருளாதார ரீதியில், தனக்குள்ள ஞானத்தையும், இராஜ்யத்தில் மாபெரும் பொருளாளருக்குரிய ஸ்தானத்திற்கு/பதவிக்கு, தான் சரியான நபர்/பாத்திரவான் என்பதையும் நிரூபித்திருக்க முடியும். இப்படியாக திட்டங்கள் அவன் மனதில் இருக்க, நளதத் தைலம் குறித்த விஷயத்தில் காணப்பட்ட மரியாளின் செயல்பாட்டை இயேசு அங்கீகரித்தப்படியால், இயேசுவின் மீது யூதாசுக்குள் கொஞ்சம் கோபம் மூண்டது. இந்தக் கோபத்தினுடைய தாக்கத்தினிமித்தமாகவே, காட்டிக்கொடுப்பதற்கான ஒப்பந்தத்தைச் செய்யும்படிக்கு யூதாஸ் முதலாவதாக, ஆசாரியர்களையும், வேதபாரகர்களையும் தேடிச்சென்றார்.
மறக்கப்பட்டுப்போன நிலை உயிர்த்தெழுதலுக்கான நம்பிக்கையற்ற நிலை – SUB HEADING
யூதாஸ், பழியினின்று விலகிக்கொள்வதற்கான காரணங்களை நாம் இங்கு வைக்கப்போவதில்லை. தேவன் மற்றும் அவருடைய நோக்கங்களுக்கு எதிரான துரோகத்திற்கு, எவ்விதத்திலேயும் காரணங்கள்/சாக்குப்போக்குகள் வைக்க முடியாது. அக்கிரமம் பண்ணுகிற ஒவ்வொருவனும் முதலாவதாக தனது மனதில், தன்னுடைய தவறான போக்கை அங்கீகரித்துக் கொள்கின்றான் என்ற உண்மையை மாத்திரம் நாம் சுட்டிக்காட்டுகின்றோம். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், பாவத்திற்கான ஒவ்வொரு அடியும் எடுத்துவைக்கப்படுவதற்கு முன்பு மனதும், மனசாட்சியும் துணிகரம் கொள்கின்றது. ஆகவேதான் இயேசு, “”மனுஷகுமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்” (மத்தேயு 26:24).
தனது நண்பனை, தனது போதகரை, தான் தேவகுமாரன் என்று அங்கீகரித்துக்கொண்டவரை, இயேசு மூலம்தான் மேசியாவின் இராஜ்யம் வரும் என்று தான் நம்பிக்கொண்டிருந்தவரை காட்டிக்கொடுத்து, ஒப்புக்கொடுப்பதற்குரிய இத்தகையத்துணிகரமும், இத்தகையத்துரோகமும், மிகவும் கேடான/அகோரமான துரோகமாகும்/நயவஞ்சகமாகும்; மற்ற அனைத்து அப்போஸ்தலர்கள் போன்று, யூதாசும், இயேசுவின் அடிச்சுவட்டில் நடந்து வரவும், சத்தியத்திற்காகக் கொண்டிருக்கும் நேர்மையினிமித்தம் இயேசுவுக்கு வரும் பாடுகள், சோதனைகள் மற்றும் ஜனங்களால் தவறாய்ப் புரிந்துக்கொள்ளப்படுதல் ஆகியவைகளில் பங்கடையவும் அழைக்கப்பட்டிருந்தார். மேலும், யூதாஸ் உண்மையாய் இருக்கும் பட்சத்தில், உலகை ஆசீர்வதிப்பதற்கான பரலோக இராஜ்யத்தில், ஆண்டவரோடு பங்கடையவும் அழைக்கப்பட்டிருந்தார். மற்றவர்களோடு, யூதாசும் இராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்துள்ளார்; பிசாசுகளை துரத்தியுள்ளார், வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்தினார். மேலும், இவை யாவற்றையும் அவர் இயேசுவின் நாமத்தின் மூலம் செயல்படும் தேவனுடைய வல்லமையினாலேயே செய்தார். யூதாஸ் இரட்சகரின் கூடவே இருந்துள்ளார். மேலும், இயேசுவின் வாழ்க்கையினுடைய பரிசுத்தத்தையும், இயேசு எப்படித் தேவனுக்கு உண்மையாக இருந்தார் என்பதையும், யூதாஸ் அறிந்திருந்தார். ஆகவே இந்த அனைத்து விஷயங்களும் யூதாசினுடைய தவறையும், தவறுக்கான அவருடைய பொறுப்பையும் காட்டுகின்றது.
யூதாஸ் தற்கொலை செய்துகொண்ட விஷயமும், இயேசுவின் வார்த்தைகளுடைய நிறைவேறுதலைக் காட்டுகின்றது; அதாவது தான் பிறவாதிருந்தால் நலமாயிருக்கும் என்று யூதாஸ் எண்ணினார். தற்கொலை செய்து கொள்ளும் ஒவ்வொருவரும், இதே வார்த்தைகளைத்தான் கூறியிருக்கின்றார்கள். எனினும், தற்கொலை செய்துள்ள மற்றவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அவர்கள் அறியாமையினாலேயே இப்படிச் செய்துகொண்டார்கள். மேலும், கிறிஸ்து அனைவருக்காகவும் மரித்தும் உள்ளார். ஆகவே இப்போது (அறியாமையினாலே தற்கொலை பண்ணினவர்கள், மற்றவர்களோடுகூட நித்திய ஜீவன் பெற்றுக் கொள்வதற்கான ஆசீர்வாதத்தையும், வாய்ப்பையும் நிச்சயமாகப் பெற்றுக கொள்வார்கள்.
ஆனால் யூதாசின் விஷயத்திலோ, அவர் ஏற்கெனவே இந்த வாய்ப்புகள், சிலாக்கியங்கள் மற்றும் அறிவு பெற்றுக்கொண்டதினாலும், ஒளி மற்றும் அறிவிற்கு எதிராக பாவம் செய்துள்ளபடியாலும், இந்த அனைத்து ஆசீர்வாதங்களும், வாய்ப்புகளும் அவருக்குத் தள்ளுபடியாகிவிட்டது. யூதாஸ் தனக்கான இடத்திற்குப் போய்விட்டார் என்று வாசிக்கையில், அது யூதாஸ் (அ) வேறு எவரும் பாவத்திற்கான தண்டனையாக நித்திய காலமாய்ச் சித்திரவதை பண்ணப்படுவார்கள் என்று பொருள்படுவதில்லை. மாறாக அவருக்கான இடம் என்பது, மறக்கப்பட்டுப்போன நிலையாகும்; நம்பிக்கை ஏதுமற்ற மறக்கப்பட்டுப்போன நிலையாகும்; அதாவது உயிர்த்தெழுதலின் வாய்ப்பற்ற நிலையாகும். அவர் சாதாரணமான புத்தியில்லாத மிருக ஜீவன் போன்று செத்துப்போனார். இன்னுமாக, இத்தகைய சிலாக்கியங்களை அனுபவித்த ஒரு நபர், எதிர்க்காலத்தில் ஏதாகிலும் வாய்ப்புப் பெற்றுக்கொள்வாரா என்ற விவாதமும் பேசப்பட வேண்டியதில்லை (அப்போஸ்தலர் 1:25)
இரண்டு பதிவுகளுக்கும் இடையிலான ஒற்றுமை – SUB HEADING
யூதாசின் முடிவு குறித்து வேதவாக்கியம், அவர் போய் நாண்டுகொண்டு செத்தார் என்று கூறுகின்றது (மத்தேயு 27:5). வேறு ஒரு வாக்கியம் இப்படியாக இருக்கின்றது, “”அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று”” (அப்போஸ்தலர் 1:18). இந்த இரண்டு பதிவுகளையும் இசைவுபடுத்துவது எளிது. இரண்டு பதிவுகளுமே உண்மை. தூக்குப்போடுவதற்கென்று, யூதாஸ் செங்குத்தான பாறையின் மேலுள்ள மரத்தின் கிளையைத் தெரிந்துக்கொண்டார். ஒருவேளை பாரபளுவினிமித்தம் கயிறு அறுந்துவிட்டதால், யூதாஸ் தலைக்கீழாக விழுந்து, வயிறு வெடித்து, குடல் சரிந்துபோய்ச் செத்திருப்பார் என்பதை நம்மால் உணர்ந்துக்கொள்ள முடிகின்றது.
எனினும், அவருடைய மரணம் குறித்த விஷயம் அவ்வளவு முக்கியத்துவம் காட்டப்பட வேண்டியதில்லை. அவருடைய ஆத்துமா மரித்துவிட்டது என்றும், இதன் விளைவாக அவருக்குத் தேவனிடத்திலும், கிறிஸ்துவிடத்திலும் இருந்த தொடர்பை அவர் இழந்துவிட்டார் என்றும், எதிர்க்கால வாழ்க்கைக் குறித்ததான சகல நம்பிக்கையும் இழந்துவிட்டார் என்றுமான விஷயங்களைக் கவனிப்பதே முக்கியமானதாகும். எனினும், கடைசி நேரமளவும் ஆண்டவர் அவரிடத்தில் பெருந்தன்மையுடன், அவருடைய ஒவ்வொரு அடிகள் முதற்கொண்டு, கடைசி கிரியைவரை யூதாஸ் நினைத்துப் பார்ப்பதற்கும், வருந்துவதற்கும் ஏதுவான ஒவ்வொரு வாய்ப்பையும் கொடுத்தவராகவே காணப்பட்டார்.
பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவர் இயேசுவைக் காட்டிக்கொடுப்பார் என்று தேவன் ஆரம்பம்/ஆதி முதல் அறிந்தவராக இருந்தும், இரத்த பணத்தின் மூலம் நிலம் வாங்கப்படும் எனும் விஷயம் ஏற்கெனவே தீர்க்கத்தரிசனமாக முன்னுரைக்கப்பட்டிருந்தும், இவைகள் யூதாஸ் வீழ்ச்சியடைவதற்கு அவன்தான் காரணம் என்ற குற்றத்திற்கான பொறுப்பிலிருந்து, அவனை விடுவிப்பதில்லை. தேவனுடைய முன்னறிவு யூதாசைப் பாதிப்பிற்குள்ளாக்காமல், அவனுடைய [R5553 : page 302] சொந்த தவறான கிரியையே அவனைப் பாதிப்பிற்குள்ளாக்கிற்று. இப்படியே, அனைவருக்கும் காணப்படுகின்றது. ஆரம்பம் முதல் யார் யார் ஓட்டத்தில் நின்றுவிடுவார்கள் என்று தேவன் அறிந்திருப்பது, நம்மைப் பாதிப்பதில்லை. காரணம், நாம் மீறும்போதும், பேராசைகொள்ளும்போதும், பாவத்திற்கு நம்மை நாமே ஒப்புக்கொடுக்கும்போதும், நாம் என்ன செய்வோம் என்று மாத்திரமே தேவன் அறிந்திருக்கிறாரே ஒழிய, இப்படித் தேவன் அறிந்திருக்கிற காரியத்தினால் நமக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை.
இயேசு, தம்மை யார் காட்டிக்கொடுப்பார் என்று முன்னதாகவே அறிந்திருந்தார் என்ற சாட்சியானது, இவ்விஷயத்தை அவர் யூதாசைத் தெரிந்தெடுத்தப்போதே அறிந்திருந்தார் என்று அர்த்தமாகாது. தம்முடைய சீஷர்களில் ஒருவன் தம்மைக் காட்டிக்கொடுப்பான் என்று வேதவாக்கியங்களில் குறிப்பிட்டிருந்ததை அவர் அறிந்திருந்தார். மேலும், யூதாசிடம் ஆரம்பம் முதலே பாவம் மற்றும் பேராசையின் திசையில் விலகிப்போகும் மனப்பான்மை தென்பட்டதினால், யூதாசுதான் நம்பிக்கை துரோகத்திற்கு ஏதுவான கிரியை செய்யக்கூடிய நபராக இருப்பார் என்று இயேசு அறிந்துக்கொண்டார் என்றபோதிலும், வார்த்தை மூலமாகக்கூட இயேசு யூதாசைத் தவறு செய்தலுக்கு நேராக நடத்தாமல், மாறாக, அவரை எச்சரிக்கவே செய்தார்.