R2437 (page 52)
யோவான் 7:14, 28-37
“”ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன்”
(வசனம்-37)
நம்முடைய கடந்த பாடத்தில் நாம் பார்த்துள்ளபடி, ஐயாயிரம் பேருக்குக் கர்த்தர் அற்புதகரமாகப் போஷித்தப் பிற்பாடு, ஜனக்கூட்டத்தார், நமது கர்த்தரை ஒரு மாபெரும் தீர்க்கத்தரிசியெனப் பிரகடனம் பண்ணிக்கொண்டு, அவரை வலுக்கட்டாயமாக இராஜாவாக்கிட முடிவு செய்தனர். எனினும் இது பிதாவினுடைய திட்டமல்லவென்று அவர் நன்கு அறிந்திருந்தார்; மரணத்திற்குக்கொண்டுச் செல்லும், பாவிகளால் ஏற்படும் விபரீதத்திற்கு தாம் ஆளாக வேண்டும் என்றும் இப்படியாகத்தான் தாம் சுதந்தரிக்கப்போகிற இராஜ்யத்தை அடையமுடியும் என்றும், தமக்கு வாக்களிக்கப்பட்ட இராஜ்யமானது, உலகத்திற்குரியதாகவும், தற்கால ஒழுங்குகள் மற்றும் ஏற்பாடுகளுக்குரியதாகவும் இருப்பதாயிராமல், மாறாக புதிய யுகத்திற்குரியதாக இருக்கும் என்றும் அவர் அறிந்திருந்தார். ஆகவே நமது கர்த்தர் தமது சீஷர்களைப் படகில் அனுப்பிவிட்டு, மலைக்குத் தனியே போய்விட்டார்; பிற்பாடு தண்ணீர் மீது நடந்து போய் தமது சீஷர்களை அடைந்தார்.
தம்மை இராஜாவாக்கிக்கொள்வதற்கென, தமது அற்புதத்தின் மூலம் அடைந்திட்ட பிரபலத்தைப் பயன்படுத்தும் எந்தப் பிரயாசமும் எடுக்கப்படாமல், இயேசு ஆறு மாதங்களுக்கு மேலாக கலிலேயாவில் பிரசங்கித்தும், போதித்தும் வந்ததுமான காரியம், அவருடைய சொந்த சகோதரர்களுடைய நம்பிக்கையைத் தளர்த்த ஆரம்பித்தது; காரணம் அதுவரையிலும் காணப்பட்ட அவர்களது அக்கறை விசுவாசத்தின் அடிப்படையை விட, பெருமையின் அடிப்படையிலேயே காணப்பட்டது. இப்பொழுதும் எருசலேமுக்குச் சென்று, கூடாரப்பண்டிகை அனுசரிக்க வேண்டிய வேளை வந்திருக்க, அதில் பங்குக்கொள்வதற்கென இயேசு எந்த விசேஷித்த ஆயத்தங்களையும் பண்ணாமல் இருப்பதை, அவருடைய சொந்த சகோதரர்கள் கவனித்தனர். அவருடைய வல்லமை பரீட்சிக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் ஆவலாய் இருந்தனர். “”ஒன்றில் எதையாகிலும் செய்து, முழு உலகத்தினுடைய பார்வைக்கு முன்னதாக உம்மை பெரியவராக்கிக்கொள்ளும் (அ) எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நீர் உம்மை மேசியா என்று கூறிக்கொண்டது ஏமாற்றுத்தனம் என ஒப்புக்கொள்ளும்” என்பதே அவர்களது மனநிலையாக இருந்தது. ஆகவேதான் அவர்கள், “”நீர் பண்டிகைக்குப் போகவில்லையா? உம்மைப் போன்று பேசுகிறவர்கள் எவராயினும் அவர்கள், இக்காரியங்களையெல்லாம் அந்தரங்கத்தில் செய்யக்கூடாது, மாறாக பிரபலமடைவதற்குரிய பெரிய வாய்ப்புகளையே நாட வேண்டும். உம்மிடத்தில் நித்தியஜீவன் இருக்கின்றது என்றும், அதை மற்றவர்களுக்கு உம்மால் கொடுக்கமுடியும் என்றும் நீர் எங்களிடத்தில் கூறுகின்றீர், ஆனால் உம்முடைய ஜீவனை அபாயத்திற்குள் ஆக்குவதற்கு நீர் பயப்படுவது போன்று தோன்றுகின்றது” என்ற விதத்தில் பேசினார்கள். “”அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்” (யோவான் 7:5).
அவர்களுடைய சூழ்நிலையிலிருந்து, தம்முடைய சூழ்நிலை மிகவும் வேறுபட்டதாய் இருக்கின்றது, அதாவது அவர்களால் எந்த நேரத்திலும் செல்லக்கூடும், ஆனால் தாம் குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்றார் என்பதைச் சுட்டிக்காட்டும் வண்ணமாக நமது கர்த்தருடைய பதில் [R2437 : page 53] காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு எதிராக, அந்தத் தேசத்தின் மிகுந்த செல்வாக்குள்ள மற்றும் வல்லமையுள்ள வகுப்பாரின் கொலை பாதகமான விரோதத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தாம் அதைப் பெற்றுக்கொண்டுள்ளார்; அதாவது தாம் சத்தியத்திற்கென ஊழியம்புரியும்படிக்கு உலகத்திற்கு வந்து, அச்சத்தியத்திற்கு உண்மையாய் இருந்ததின் காரணமாக தாம் மற்றவர்களுடைய விரோதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். “”யூதர்கள் இயேசுவைக் கொலை செய்ய வகை தேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்து” வந்த காரியம் உண்மையாக இருப்பினும், அவர் மரண பயத்தினிமித்தம் இப்படிச் செய்யாமல், மாறாக “”தம்முடைய வேளை இன்னும் வரவில்லை” என்பதை உணர்ந்துக்கொண்ட காரணத்தினாலேயே ஆகும். ஆகவே பிதாவின் திட்டம் தொடர்புடையதாக, தாம் அறிந்திருந்தவைகளுக்குத் தம்மால் முடிந்தமட்டும் ஒத்துழைப்புக் கொடுப்பது தம்முடைய கடமை என்றும், தெய்வீகத் திட்டம் தடுக்கப்படாதபடிக்கு (தாம் யூதேயாவுக்குச் செல்லும் பட்சத்தில்) தம்மைக் காப்பாற்றும்படிக்கு, ஒரு விசேஷித்த அற்புதம் செய்ய அவசியம் ஏற்படுத்தும் வண்ணமாக, திட்டத்தை அலட்சியப்படுத்தாமல் இருப்பதும் தம்முடைய கடமை என்றும் அவர் உணர்ந்திருந்தார்.
(1) ஒருவேளை நமக்கு உலகத்திலிருந்து எதிர்ப்பு வரவில்லையெனில், அதற்குக் காரணம் நாம் நமது பிதாவின் வார்த்தைகளுக்கும், அவ்வார்த்தைத் தொடர்பாக நமக்கு நியமிக்கப்பட்டுள்ள பிதாவிற்கு அடுத்த ஊழியத்திற்கும் நாம் உண்மையற்றவர்களாகக் காணப்படுவதேயாகும்; காரணம் ஆண்டவருக்கு எப்படியோ, அப்படியே தம்முடைய பின்னடியார்களுக்கும் காணப்படும் என்று நமது ஆண்டவர் கூறியுள்ளார்; அதாவது நாம் உலகத்தாரல்லாததினால், நம்மை உலகம் பகைக்கும் என்றும், நமக்கு எதிராகப் பலவிதமான தீமைகளை உலகம் தவறாய்ப் பேசும் என்றும், நம்மைத் துன்பப்படுத்துபவர்கள், தாங்கள் தேவனுக்குத் தொண்டு செய்வதாக எண்ணிக்கொள்வார்கள் என்றும் நமது ஆண்டவர் கூறியுள்ளார். “”அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” (2 தீமோத்தேயு 3:12). நாம் இன்னமும் இந்தத் துன்ப காலத்தில்தான் காணப்படுகின்றோம்; மாபெரும் எதிராளியானவன் இன்னமும் (முழுமையாய்) கட்டப்படவில்லை. மேலும் இப்படிப்பட்ட எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நாம் காணப்படுவோமானால், அது நாம் தேவபக்தியாய் வாழவில்லை என்பதற்கு உறுதியான ஆதாரமாக இருக்கின்றது, அதாவது எதிராளியானவன் மற்றும் அவனுடைய குருடாக்கப்பட்டுள்ள ஊழியர்களின் விரோதத்தைத் தூண்டும் அளவுக்கு, நாம் இன்னதும் போதுமானளவுக்கு இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றவில்லை என்பதற்கான உறுதியான ஆதாரமாக இருக்கின்றது.
(2) நமது ஆண்டவருக்கு விசேஷித்த எதிராளிகளாக இருந்தவர்கள் அவிசுவாசியான உலகத்தாராய் இராமல், மாறாக பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்கின்றார்கள் என்றும், தெய்வீகப் பிரமாணங்களில் முழுமையான ஈடுபாடு உள்ளவர்கள் என்றும் அறிக்கைப் பண்ணிக்கொண்டிருக்கும் உண்மையற்ற அவிசுவாசிகளே ஆவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமக்கும் இப்படியாகவே காணப்படும்; பெயரளவிலான கிறிஸ்தவர், சபைக்குப் புறம்பாக அல்லாமல் உள்ளுக்குள்ளாகவே நாம் நமக்கான விசேஷித்த எதிராளிகளையும், துன்பப்படுத்துபவர்களையும், அவதூறு பேசுகிறவர்களையும் பெற்றிருப்போம்.
(3) தேவையற்ற விதத்திலும், ஞானமற்ற விதத்ததிலும், நாம் நம்மை அபாயத்திற்குள் ஆக்கிக்கொண்டு, நம்மைப் பாதுகாக்கும்படிக்கு அற்புதமாய்க் கர்த்தர் இடைப்படுவார் என்று எதிர்ப்பார்க்கக்கூடாது எனும் பாடத்தை நமது கர்த்தருடைய மாதிரியிலிருந்து நாம் பெற்றுக்கொள்கின்றோம். நாம் சத்தியத்தை மறுதலித்து விடலாமெனச் சிந்திக்கவும் கூடாது, அதேசமயம் நம்முடைய ஜீவன்களைப் பாதுகாப்பதற்கான கடமையையும் நாம் கைவிட்டுவிடலாம் எனக் கருதவும் கூடாது; அதாவது கர்த்தரைப் போன்று காணப்பட வேண்டும். சரியான மற்றும் ஏற்றவேளை வந்தபோது, நமது கர்த்தர் பண்டிகைக்குப் போனார் என்றும், பயமில்லாமலும், தைரியத்துடனும் பேசினார் என்றும் நாம் பார்க்கின்றோம். ஆகவே ஜீவனைப் பாதுகாப்பதில் எச்சரிக்கையாய் நாம் இருப்பது என்பது, பயத்தின் விளைவினாலோ, தெய்வீக வழிநடத்துதலின் மீது நம்பிக்கையின்மையினாலோ, நமது கடமையை நிறைவேற்றுவதில் தைரியமின்மையினாலோ இராமல், மாறாக முடிந்தமட்டும் தெய்வீகச் சித்தத்துடன் ஒத்துழைக்க விரும்பும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் மாத்திரமே காணப்படுகின்றது.
தம்மைக் கொன்று போடும்படியான பரிசேயரின் மனநிலையை நமது கர்த்தர் அறிந்திருந்தார். இந்தப் பண்டிகையின் காலங்களில் எருசலேம், விருந்தாளிகளால் குவிந்துக் காணப்படும்போதும், அதுவும் பல ஆயிரங்கள் கலிலேயர்களாக இருக்கும் போதும் மற்றும் கர்த்தருடைய நண்பர்களும், தம்முடைய சீஷர்களாகிய கலிலேயர்களின் நண்பர்களும் காணப்படும் போதும், தமக்கு விரோதமாகச் செயல்படும் விஷயத்தில், பரிசேயர்கள் அதிகமாய்த் தயங்குவார்கள் என்றும் கர்த்தர் அறிந்திருந்தார். பண்டிகையின் ஆரம்ப நாட்களில், புனித பயணம் மேற்கொண்டவர்களுடைய வருகையின் காரணமாக நிகழும் சச்சரவுகளின் வேளையில் தம்மைக் கைதுச்செய்வதற்கும், அதிகாரிகள் மத்தியில் சில ஏற்பாடுகள் போய்க் கொண்டிருப்பதையும் அவர் அறிந்திருக்கக் கூடும். கர்த்தர் சூழ்நிலைக் குறித்த தம்முடைய மேம்பட்ட அறிவின்படி, ஜனங்கள் அனைவரும் எருசலேமுக்குப் போவது வரையிலும் தாம் செல்லாமல் இருந்து, பின்னர் போதனை, அற்புதங்கள் முதலியவைகள் எதையும் செய்யாமல், அமைதியாகப் பண்டிகைக்குப் போனார்.
பண்டிகை வாரத்தின் நடுவில், அவர் ஆலயத்தில் ஜனங்களுக்குப் போதிப்பவராகக் காணப்பட்டார். பண்டிகையின் ஆரம்ப நாட்களில், அவருடைய சத்துருக்கள் அவரைத் தேடியும் அவர் வழக்கம்போல் வராமல் இருப்பதைக் குறித்து ஆச்சரியமடைந்தனர்; ஆனால் இப்பொழுது அவர் வெளியரங்கமாகவும், தைரியமாகவும், போதிப்பதையும் கண்டார்கள்; ஆனால் அவர்மேல் கைப்போடாமல் இருந்தனர், காரணம் அவர்கள் ஜனங்களினிமித்தம் பயந்திருந்தனர்; அவர் தங்களைப் போல் உறுதியற்ற நிலையில் இல்லாமல், உறுதியுடன், “”அதிகாரமுடையவராய் ஜனங்களுக்குப்” போதிப்பதை ஜனங்கள் அநேகம் பேர் உணர்ந்தவர்களாக, அவருடைய போதனைக்கு ஆதரவு கொடுக்கின்றனர் என்பதால் பரிசேயர்கள் அஞ்சினர். ஜனங்களில் அநேகர் கவரப்பட்டுள்ளனர் என்பதும், இயேசு செய்துள்ளதைக் காட்டிலும், மேசியா வரும்போது மாபெரும் அற்புதங்கள் செய்யப்படுமோ என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதும், இயேசு வெளியரங்கமாய்ப் பேசிக்கொண்டிருப்பதும், அதிகாரிகள் அவரைக் குறுக்கிடாததுமான காரியங்கள், “”இவர் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?” என்று கேட்பதற்குச் சிலரை வழிநடத்தினது.
தங்களது துணிவின்மையானது உண்மையில், தாங்கள் பகைக்கும் இயேசுவை அபிவிருத்திச் செய்வதைக் கண்டு, அதிகாரிகள் அவரைப் பிடித்துக் கொண்டுவரும்படிக்குச் சேவகரை அனுப்பிவைத்தார்கள்; இந்தச் சேவகர்களோ, அவருடைய உதடுகளிலிருந்து தேவதூஷணமான (அ) குழப்பம் ஏற்படுத்துவதற்கு ஏதுவான (அ) கலகத்திற்கு ஏதுவான ஏதாகிலும் வார்த்தைகள் வருவதைக் கேட்க வேண்டும் என்று எண்ணினார்கள் இல்லையேல் அவரைக் கைதுச்செய்யும் விஷயத்தில் சேவகர்கள் ஜனங்களுடைய கண்களுக்கு முன்னதாக குற்றம் புரிந்தவர்களாய்க் காணப்பட்டு விடுவார்கள்; ஆகவே அவரைக் கவனிக்கும்படிக்குக் காத்திருந்தனர். “”அவருடைய வாயினின்று புறப்பட்டு வந்த கிருபையான வார்த்தைகளினால்” சேவகர்கள் கவரப்பட்டவர்கள். ஆதலால் இயேசுவைக் கைதுச்செய்யாமல், அதிகாரிகளிடத்திற்குத் திரும்பிப்போய், “”அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை” என்று கூறினார்கள். இயேசு மேசியாவோ என்ற சந்தேகம் கொண்டிருப்பினும், அவர் தேவனால் அனுப்பப்பட்ட போதகர் என்று இருதயத்தில் நம்பிக்கைக்கொண்டிருந்த நிக்கொதேமு, ஆலோசனைச் சங்கத்தாரில் ஒருவராக இருந்தப்படியினால், தனது சத்தத்தை உயர்த்தி, அதிகாரிகளுடன் நட்பு முறையில் வாதிடத்தக்கதாக, அவர்களை நோக்கி: ஒரு மனுஷன் சொல்லுவதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான் (யோவான் 7:51). நீதிக்கான இந்த வேண்டுதலுக்கும் கூட, “”நீரும் கலிலேயனோ?” என்ற ஏளனப் பேச்சுப் பேசப்பட்டது. அவர்களுடைய கொலை பாதக முயற்சியில் அவர்கள் தோற்றதன் காரணமாகக் கோபத்துடன் கலைந்துப் போனார்கள்.
இது கர்த்தருடைய அடிச்சுவட்டைப் பின்தொடரும் அடியார்கள் அனைவரின் விஷயத்திலும் முடிந்தமட்டும் காணப்பட வேண்டும்; அவர்களுடைய வார்த்தைகள் கிருபை பொருந்தினதாகவும், தன்னடக்கமுடையதாகவும், சத்தியத்தின் மீதும், அதனை விரும்பி நாடும் அனைவர் மீதுமான [R2438 : page 54] அன்பினால் நிரம்பின இருதயத்தின் வழிந்தோடுதலாகவும் காணப்பட வேண்டும். அவர்களுடைய வார்த்தைகள் எப்பொழுதும் நீதி மற்றும் நியாயத்தின் வரம்புகளுக்கு உட்பட்டதாகவும், கண்டிப்பாக கர்த்தருடைய வார்த்தைகளுக்கு ஒத்துப்போவதாகவும் காணப்பட வேண்டும். இப்படியாகவே ஜீவனுள்ள நிருபங்களாகிய அவர்களுடைய பழக்கவழக்கங்களும், அவர்களுடைய நடத்தைகளும் காணப்பட வேண்டும்; இதனிமித்தமாக அவர்களுடைய சத்துருக்களும் ஆச்சரியமடைந்து, அவர்கள் இயேசுவுடன் இருந்தவர்கள் என்றும், அவர்கள் இயேசுவினால் போதிக்கப்பட்டவர்கள் என்றும் அறிந்துக்கொள்வார்கள்.
தமது சத்துருக்களுடைய கொலைபாதக திட்டங்களைக் குறித்து மனதில் கொண்டவராகவும், மற்றும் இந்தத் திட்டங்களானது மனுஷகுமாரன் பாடுபட்டு, மரணத்திலிருந்து எழுந்திருப்பார் என்பதை அவருக்கு நினைப்பூட்டுவதாகவும், தம்முடைய ஓட்டத்தின் முடிவு வருவதற்குக் கிட்டத்தட்ட ஆறு மாதங்களே இருக்கின்றது என்பதை அறிந்தவராகவும், நமது கர்த்தர், “”இன்னும் கொஞ்சம் காலம் நான் உங்களுடனே இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்” என்றார். இஸ்ரயேல் மேல் கடந்து வரும் எனத் தம்முடைய அப்போஸ்தலர்களிடம் அவர் பிற்பாடு மத்தேயு 24-ஆம் அதிகாரத்தில் முன்னுரைக்கும் உபத்திரவங்களையும், அவர் தம்முடைய இரண்டாம் வருகையில் தம்மை இஸ்ரயேலர்களுக்கு மீண்டும் மேசியாவாக வெளிப்படுத்துவதற்கு முன்பு வரையிலும், இஸ்ரயேலர்கள் அநேக கஷ்டங்களைச் சகிக்க வேண்டும் என்பதையும் மனதில் கொண்டவராக, “”நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள்” என்று கூறினார். அக்காலம் தொடங்கி, உபத்திரவத்துடன் கடந்து வந்த 18 நூற்றாண்டுகளாக, யூதர்கள் மேசியாவைத் தேடிக்கொண்டிருந்தனர். காரணம் அப்போஸ்தலர் சொல்லுகிறது போன்று, “”அவருடைய முதலாம் வருகையின் போது, அதாவது அவர்களுடைய சந்திப்பின் நாளில் கர்த்தரை ஏற்றுக்கொண்டவர்கள் தவிர, மற்றவர்கள் கடினப்பட்டு இருக்கின்றனர்.” ஆகவேதான், நமது கர்த்தர், “”கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள்” என்றும் கூறினார் (லூக்கா 13:35). “”நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது. சுவிசேஷத்தைக் குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்துக்கொள்ளுதலைக் குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள். தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம்பெற்றிருக்கிறதுபோல, அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள். எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்” (ரோமர் 11:27-32).
தாம் போகிற இடத்திற்கு அவர்களால் வரமுடியாது என்று நமது கர்த்தர் கூறினபோது, அவர் ஏற்கெனவே இஸ்ரயேலின் கீழ்மட்ட வகுப்பார்களாகிய ஆயக்காரர்களுக்கும், பாவிகளுக்கும் பிரசங்கம் பண்ணிவருவது போல, அவர் இப்பொழுது பாலஸ்தீனியாவை நிரந்தரமாக விட்டுவிட்டு, கிரேக்கர்களாகிய புறஜாதிகள் மத்தியில் சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய் உபதேசம் பண்ணப்போகின்றாரோ என்னவோ, அதாவது பாலஸ்தீனியாவில் உள்ள யூதர்களுடைய மொழியாகிய சிரியன் மொழியில் அல்லாமல், கிரேக்க மொழியில் உபதேசிக்கப் போகின்றாரோ என்னவோ என ஜனங்கள் யூகிக்க முயற்சித்தனர். இங்குத் “”தொலைந்து” போனவர்கள் குறித்து, ஆங்கிலேய இஸ்ரயேர்கள் கொண்டிருக்கும் கோட்பாட்டின் தவறை நம்மால் பார்க்க முடியும். சிதறிக் காணப்பட்டிருந்த யூதர்கள், நமது கர்த்தருடைய நாட்களில் தொலைந்துப்போனவர்களாகக் கருதப்படவில்லை என்பது நிச்சயமே; மேலும் ஜனங்களுடைய இந்த வார்த்தைகள், “”சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்கள்” என்ற அப்போஸ்தலரின் வார்த்தைகளுக்கு முழு இசைவுடனே காணப்படுகின்றது. இந்தக் கோத்திரங்கள் முற்றிலுமாக ஒன்றுபட்டு, கலந்துவிட்டபடியால், இவர்களது கோத்திரங்களின் வித்தியாசங்கள் தொலைந்துப் போய்விட்டது எனும் அர்த்தத்தில்தான் இந்தக் கோத்திரங்கள் தொலைந்துப்போய்விட்டனர்; இன்றும் உலகில் மிகச் சொற்பமான யூதர்கள் மாத்திரமே, தங்களது மூதாதையர் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்று அறிந்து வைத்துள்ளனர்.
“”நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவுங்கூடாது” என்ற நமது கர்த்தருடைய வார்த்தையானது, வேறு ஒரு கண்ணோட்டத்தில் கவனிக்கப்படத்தக்கதொன்றாகும். அவர் ஓர் இராஜ்யத்தை ஸ்தாபிக்கப் போகின்றார் என்றும், அந்த இராஜ்யத்திற்குள் அவர்களால் வரக்கூடாது என்றுமுள்ள அர்த்தத்தில் அவர் பேசவில்லை, மாறாக தாம் பரலோகம் செல்வதாகவும், பரலோகத்திற்கு அவர்களால் வரக்கூடாது எனும் அர்த்தத்தில்தான் பேசினார். இது அவர் பிற்பாடு யோவான் 8:21-29 வரையிலான வசனங்களில் பேசியுள்ள காரியங்களில் உறுதிபடுகின்றது.
ஆனால் அவிசுவாசமான யூதர்கள் மாத்திரம், பரலோகம் போக முடியாதவர்கள் அல்ல. ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு மற்றும் பரிசுத்த தீர்க்கத்தரிசிகள் அனைவரும் பரலோகம் செல்லவில்லை என்று வேதவாக்கியங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன (அப்போஸ்தலர் 2:34; எபிரெயர் 11:39,40-ஆம் வசனங்களைப் பார்க்கவும்). மேலும் இதே வார்த்தைகள் நமது ஆண்டவரினால், தம்முடைய விசுவாசிகளாகிய பின்னடியார்களிடம் கூறப்படுகின்றது, “”பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்”; (யோவான் 13:33). கடந்த காலத்திலும், தற்போதைய காலத்திலும் உள்ள விசுவாசிகளால் நமது கர்த்தரிடத்திற்குச் செல்ல முடியாத காரணத்தினால், கர்த்தருடைய வார்த்தையின் மூலமாக சரியாகப் போதிக்கப்பட்டிருக்கும் அனைவரும், அவருடைய திரும்பி வருதலுக்காக, அவருடைய இரண்டாம் வருகைக்காக, மகிமையிலும், இராஜ்யத்தின் வல்லமையிலும் உள்ள அவருடைய வருகைக்காக, யோவான் 14:3-ஆம் வசனத்தின் வாக்குத்தத்தத்திற்கு ஏற்ப உண்மையில் எதிர்ப்பார்க்கின்றவர்களாய்க் காணப்படுகின்றனர்.
நமக்கு முன்பாக சுவிசேஷத்தில் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை, அநேகர் பார்க்கத் தவறிப்போய், இதற்குப் பதிலாக மாம்சீக இஸ்ரயேலர்களுடைய தவறான நம்பிக்கைகளாகிய, “”முன்னோர்களின் பாரம்பரியத்தைத்” தவிர, இன்னமும் அஸ்திபாரமற்ற நம்பிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்; அதாவது தாங்கள் மரிக்கும்போது தாங்கள் மரிக்காமல், அதுவரையில்லாத அளவுக்கு ஜீவனோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர்; அதாவது தேவனுடைய வார்த்தைகள் ஒன்றுகூட ஆதரிக்காததும், தேவனுடைய வார்த்தைகளில் உள்ள நியாயமான விஷயங்களுக்கு எதிர்மாறாய்க் காணப்படும் நம்பிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். “”(கர்த்தர் தம்முடைய சம்பத்தைச் சேர்த்துக்கொள்வதற்கும், தம்முடைய உண்மையுள்ளவர்களை ஏற்றுக்கொள்வதற்கும் இரண்டாம் வருகையில் வருவார் என்ற) இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” (1 யோவான் 3:3). உண்மை சுவிசேஷத்தின் இந்த நம்பிக்கையைக் காட்டிலும், உண்மையுள்ளவர்களாய்க் காணப்படுவதற்குத் தூண்டும், மாபெரும் தூண்டுதல் எதுவும் இல்லை.
கூடாரப்பண்டிகையின் கடைசிநாள், எட்டாம் நாளாக இருக்கின்றது. பண்டிகையின் ஏழு நாட்களும், பலிச் செலுத்துதலுக்கென ஒதுக்கப்படுகின்றது; எழுபது காளைகள், பலிப்பீடத்தில் தகனிக்கப்படுகின்றன, மேலும் இது முழு உலகத்தின் சார்பாகப் பலிச்செலுத்தப்படுகின்றது எனப் புரிந்துக்கொள்ளப்படுகின்றது, ஆனால் எட்டாம் நாள், விசேஷமாக யூதர்களுக்குரிய நாளாக இருக்கின்றது; மேலும் இந்த எட்டாம் நாளானது, இந்த மகிழ்ச்சிகரமான நன்றி செலுத்துவதற்குரிய பண்டிகையிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கின்றது. இதைக் குறித்து கெய்கீ அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்…
“”அந்த முழு வாரமும், முழுப்பரபரப்புடன் காணப்படுகின்றது; மாபெரும் பலிப்பீடமானது வழக்கமாக உள்ள காலை மற்றும் மாலைக்குரிய பலிகள், ஓய்வுநாளின் பலிகளோடு கூடக் காளை, ஆட்டுக்கடா மற்றும் ஆட்டுக்குட்டிகளின் தகன பலிகளுடன், சகல வகையான எண்ணற்ற தனிப்பட்ட பலிகளுடன் கூடப் புகை எழுப்பிக்கொண்டு காட்சியளிக்கும். எருசலேமுக்குள் காணப்படும் ஒவ்வொரு பகுதியும், பள்ளங்களும், சரிவான நிலப் பகுதிகளும், மரங்களின் [R2438 : page 55] கிளைகளினாலும், பேரீச்சின் ஓலைகளினாலும், பின்னப்பட்ட கூடாரங்களினால் நிரம்பிக் காட்சியளிக்கும்.”
ஆனால் பிரதானமான நாள் என்று அழைக்கப்படும் பண்டிகையின் கடைசிநாளாகிய, விசேஷமான சந்தோஷத்திற்குரிய அந்நாளுக்கு விசேஷமான அம்சம் ஒன்று இருந்தது; அது தண்ணீர் வார்த்தல் பலியாகும்; மேலும் இந்த நாளில்தான், இந்தத் தண்ணீர் ஊற்றப்படுதல் தொடர்புடையதாக, நமது கர்த்தர் சத்தமிட்டு, “”ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன்” என்று கூறினார். சமாரியா ஸ்திரீயுடன் கர்த்தர் பண்ணின தனிப்பட்ட உரையாடலில் சொன்னது போலவே, இங்கு ஜீவத்தண்ணீரைக் கொடுப்பவராகத் தம்மை முன்வைத்தார். அவரை ஏற்றுக்கொள்கின்ற அனைவருக்கும் அவர் ஜீவ ஊற்றாகவும், சத்தியத்தின் ஊற்றாகவும், புத்துணர்வின் ஊற்றாகவும் காணப்படுகின்றார். ஒவ்வொரு மனித இருதயத்திலும் தாகங்கள், ஏக்கத்துடன் கூடிய வாஞ்சைகள் காணப்படுகின்றன் மேலும் இன்பம் (அ) பிரபலம் (அ) ஐசுவரியம் எனும் பூமிக்குரிய ஊற்றுகளிலிருந்து, இந்த ஏக்கங்களைத் தணிக்க நாடியுள்ள அனைவரும், இந்தப் பூமிக்குரிய ஊற்றுகள் தங்களைத் திருப்திப்படுத்தவில்லை என்று உணர்ந்துள்ளனர்; ஆனால் ஜீவத்தண்ணீரை, சத்தியத்தை, கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய கிருபையை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் மாத்திரமே, உண்மையில் திருப்திப்பண்ணும் பங்கைப் பெற்றிருக்கின்றனர். கர்த்தாவே, இந்தத் தண்ணீரை எங்களுக்கு எப்பொழுதும் தருவீராக!
கூடாரபண்டிகையின் கடைசி நாளாகிய, பிரதானமான நாளைக் குறித்த ஒரு சுவாரசியமான பதிவை, திறமிக்க எழுத்தாளர் எடல்செய்ம் அவர்கள் பதிவு செய்துள்ளார்:-
“”வழிபாட்டில் பங்குக்கொள்வதற்கென, விடியும் நேரத்தில் தங்களது “”கூடாரங்களை” விட்டு, பண்டிகையின் கடைசி நாளாகிய, பிரதானமான நாளில் புறப்படும் எண்ணற்ற ஜனங்களில், ஒருவராக நாமும் காணப்படுகின்றோம் என வைத்துக்கொள்வோம். பிரயாணிகள் அனைவரும் விழா வரிசையில் காணப்பட்டனர். ஒவ்வொருவனும் தனது வலது கரத்தில் ஆற்றலரிகளையும், பேரீச்சத்தின் ஓலைகளையும் தூக்கிச் செல்கின்றான். “”முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும், பேரீச்சின் ஓலைகளையும், தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்” (லேவி 23:40). ஓவ்வொருவனும் இடது கையில் எலுமிச்சை வகையைச் சேர்ந்த பாரடைஸ் ஆப்பிள் என இன்று அழைக்கப்படும் கனிகளைத் தூக்கிச் செல்கின்றான். இப்படியாகக் கைகளில் வைத்திருக்கும் விழா கூட்ட ஜனங்கள், மூன்று கூட்டமாகப் பிரிவர். இந்த மூன்றில், ஒரு கூட்டத்தார், இசையின் சத்தம் ஒலிக்கும்போது, ஆலயத்திலிருந்து ஊர்வலமாய்ப் புறப்படுகின்றனர். இவர்களுக்குப் பின்னாக மூன்று (log/pint) பின்ட் தண்ணீர் கொள்ளும் பொன்னினால் ஆன பெரிய பானையைச் சுமந்தவராக ஓர் ஆசாரியன் போவார். இவர்கள் ஆலயத்திற்குத் தெற்கேயுள்ள பள்ளத்தாக்கிலுள்ள சீலோவாம் குளத்திற்குப் போவார்கள். இந்தக் குளத்திலிருந்து ஆசாரியன் பொன்னினாலான பானையில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு, அதை ஜனங்களின் ஆரவார குரல்கள் மற்றும் பூரிகைகள் மற்றும் கைத்தாளங்களின் ஒலியின் மத்தியில் ஆலயத்திலுள்ள பிரகாரத்திற்குக்கொண்டு வருவார். இப்பண்டிகையில் களிகூருதல் மிகவும் பெரியதாகக் காணப்படுவதினால், இந்தப் பண்டிகைக்கும், இதிலிருந்து வேறுபட்ட மற்றப் பண்டிகைகளிலும் ஒருபோதும் கலந்துக்கொள்ளாதவர்களுக்கு, களிகூருதல் என்றால் என்ன என்பது தெரியாது என ரபிக்கள் கூறுவதுண்டு. அன்றாட காலை பலிச் செய்யும் பொருட்டு, தகன பலிச் செலுத்தப்படுவதற்கான துண்டுப்பாகங்கள் மாபெரும் பலிபீடத்தில் வைக்கையில், தண்ணீரண்டைக்குப் போன கூட்டம் திரும்பத்தக்கதாக, நேரம் சரியாய்க் கையாளப்படுகின்றது. பொன்னினாலான பானையிலுள்ள தண்ணீர், பலிப்பீடத்தின் மீது ஊற்றப்படுகின்றது. உடனடியாக சங்கீதம் 113 முதல் 118 அடங்கிய மாபெரும் (Hallel) வாழ்த்திப் புகழுதல், இசையுடன் கூட, மென்மையான குரலில் பாடப்படுகின்றது. இந்த விழாவின் காலை வழிபாடு முடியும்போது, அந்நாளுக்குரிய விசேஷமான பலிகளை ஆசாரியர்கள் ஆயத்தப்படுத்துகையில், வழிபாடுகளுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கப்படுகின்றது. இந்தத் தருணத்தில் ஆலயம் முழுவதும் கேட்குமளவுக்குச் சத்தமாக இயேசுவின் குரல் தொனித்தது. அவர் அங்கு நடந்த வழிபாடுகளைக் குறுக்கிடவில்லை, காரணம் வழிபாடுகள் அப்பொழுதுதான் முடிந்தது; அவ்வழிபாட்டிற்கான அர்த்தத்தையே அவர் விளக்கினார்; அவர் அவ்வழிபாட்டினை நிறைவேற்றினார்.