R2660 (page 205)
மத்தேயு 18:1-14
“”சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.” – மத்தேயு 19:14
நமது இந்தப் பாடத்திற்காகத் தெரிந்தெடுத்துள்ள ஆதார வசனமானது மிகவும் பொருத்தமற்றதாகவும், தவறான கருத்தைக் கொடுக்கிறதுபோன்றும் தோன்றும். இது குழந்தைகள் பற்றியும், இவர்களுக்காகக் கர்த்தர் கொண்டுள்ள அனுதாபம் மற்றும் அன்பு பற்றியும் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. உண்மையில் மிகப்பெரிய நிலையில் காணப்படும் எந்த ஒரு மனுஷனோ (அ) ஸ்திரீயோ தங்களுடைய குழந்தைப்பருவத்தை அன்புடன்கூடிய அனுதாபத்துடனும், அக்கறையுடனும் பார்க்கமாட்டார்கள் என்று நாம் எண்ணமுடியாது; அந்தப் பருவம் பிரதிபலிக்கிற வாழ்க்கையின் வெற்றுத்தாள் போன்ற பக்கங்களைப் பார்க்கும்போது, இனிவரும் வாழ்க்கையில் எதிர்க்கொள்ளப்போகிற கஷ்டங்கள் குறித்தும், சோதனைகள் குறித்தும், ஏமாற்றங்கள் குறித்துமான உணர்வுகளுக்கு விழித்தெழுவார்கள்; மேலும் வாழ்க்கையின் அனுபவங்கள், போராட்டங்கள் மூலம் அடையப்போகும் வெற்றிகள் மற்றும் குணலட்சணங்கள் குறித்துமான நம்பிக்கையினாலும், ஆர்வத்தினாலும் விழித்தெழுவார்கள். இயேசு குழந்தைகளை நேசித்தார் என்பதிலும், வஞ்சனையற்றதும், தூய்மையானதுமாய்க் காணப்படும் அனைத்தையும் அவர் நேசித்தார் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை; மேலும், நம்முடைய ஆதார வசனமானது இக்கருத்தை மெய்யாக்கவும் செய்கின்றது.
தேவனுடைய இராஜ்யமானது, அறிவும், அனுபவங்களும் (அ) குணலட்சணத்தின் வளர்ச்சியில்லாமல் மரித்துப்போன குழந்தைகளைக் கொஞ்சமாகவோ (அ) முழுமையாகவோ உள்ளடக்கினதல்ல. இப்படியான குழந்தைகளைத் தேவனுடைய இராஜ்யத்தில் உள்ளடக்குவது தேவனுடைய நோக்கமாக இருந்திருக்குமாயின், 1,44,000 பேர் அடங்கிய “”சிறுமந்தையினரை” நிறைவு பண்ணுவதற்குக் கிட்டத்தட்ட 19 நூற்றாண்டுகள் தேவைப்பட்டிருந்திருக்காது; அதோடு கூட ஒருவர் இராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கென, நல்லதொரு போராட்டம் போராடப்பட வேண்டுமென்றும், ஜெயம் அடையவேண்டுமென்றும், “”சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்வதின்” மூலமாக ஆவியின் கனிகளை அடைய வேண்டுமென்றும், மாம்சத்தின் உபத்திரவங்கள் ஊடே, விரும்பி, மகிழ்ச்சியுடன் அனைத்திலும் கடந்துச் செல்ல வேண்டுமென்றும் கூறவும் பட்டிருக்காது. இந்தச் சுவிசேஷ யுக அழைப்பில் குழந்தைகளுக்குப் பங்கில்லை; எனினும் சபை நிறைவடைந்து, அது தேவனுடைய இராஜ்யமாக மகிமையடைந்த பின் உடனடியாகத் தொடரும், உலகத்திற்கான மாபெரும் ஆசீர்வாதத்தில், குழந்தைகள் நிச்சயமாகப் பங்கடைவார்கள்.
இப்பாடம் தொடர்பான விஷயத்தில் இவ்வசனம், கொஞ்சம் தவறான எண்ணத்தைக் கொடுக்கின்றதாக இருக்கும். காரணம், இவ்வசனத்தின் பின்பகுதியில் இடம்பெறும் சிறுபிள்ளைகள் உருவகமான விதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றதே ஒழிய சொல்லர்த்தமாக அல்ல கர்த்தர் தாழ்மையும், நம்பத்தக்கவர்களாய்க் காணப்படும் தம்முடைய சீஷர்களையே தேவனுடைய சிறுபிள்ளைகளாக, அதாவது பூமிக்குரிய பெற்றோர்கள் தங்களது சிறு பிள்ளைகள் மீது இரக்கங்கொண்டு, பேணுவது போன்று தேவன் இரக்கங்கொண்டு பேணும் தேவனுடைய பிள்ளைகளாக இங்குக் குறிப்பிடுகின்றார். இப்படியாக, இவ்வசனத்தில் மாத்திரமாகக் குறிப்பிடப்படாமல், புதிதாயுள்ள கிறிஸ்தவனும், கொஞ்சமே வளர்ச்சியடைந்துள்ள கிறிஸ்தவனும் குழந்தைகளுக்கும், பிள்ளைகளுக்கும் வேதவாக்கியங்களில் ஒப்பிடப்பட்டுள்ளதை நாம் பார்க்கின்றோம். “”சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்;” “”நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்” (1 கொரி. 14:20; 1 பேதுரு 2:3).
மறுரூபமான மலையிலிருந்து இறங்கி, கப்பர்நகூமுக்குப் பிரயாணம் பண்ணின பிற்பாடே இப்பாடத்தில் இடம்பெறும் சொற்பொழிவு நிகழ்ந்ததாகத் தோன்றுகின்றது. மாற்கு மற்றும் லூக்கா அவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதை ஒப்பிட்டுப்பார்க்கையில், போகிற வழியில் அப்போஸ்தலர்கள் மத்தியில், யார் பெரியவர் என்றும், கர்த்தர் வாக்களித்ததும், தாங்கள்பங்கடைவார்களென அப்போஸ்தலர்களால் நம்பிக்கை வைக்கப்பட்டதுமான இராஜ்யத்தில் யார் பெரியவராக (அ) மிகவும் கனத்திற்குரியவராக இருப்பார் என்றும் விவாதம் எழும்பியதை நம்மால் கிரகிக்க முடிகின்றது. அப்போஸ்தலர்கள் மத்தியிலேயே கர்த்தரோடுக் கூட மலையில் காணப்படுவதற்கு மூன்று பேர் மாத்திரம் விசேஷமாகத் தயவு பெற்றிருந்த காரியமே, அநேகமாக இந்த விவாதத்தைத் தூண்டியிருக்க வேண்டும். இவர்கள் மத்தியில் நடந்திட்ட இந்த விவாதம், இயேசுவின் காதுகளில் விழக்கூடாது என்று அடக்கமான தொனியில் அநேகமாகப் பேசினாலும், அனைவரிடமிருந்து பல்வேறு வாக்குவாதம் எழும்பினபோது, தொனி மிகுதியாயிற்று. கொஞ்சம் நேரத்திற்குப் பிற்பாடு வழியில் தமக்குப் பின்னாக வந்து கொண்டிருக்கும்போது, எதைக்குறித்து விவாதித்தார்களென அப்போஸ்தலர்களிடம் இயேசு கேட்டார். லூக்காவின் பதிவைப் பார்க்கையில், அப்போஸ்தலர்கள் பதில் கொடுக்காமல் இருந்தார்கள் என்றும், அவருடைய கேள்விக்கு விடையளிக்கவும், தங்களது சண்டையைச் சொல்லவும் விரும்பவுமில்லை என்றும் பார்க்கின்றோம்; அவர்கள் வெட்கப்பட்டார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனாலும், கர்த்தரிடமிருந்து விஷயத்தை மறைக்க முடியாது என்று அவர்கள் உணர்ந்ததினாலும், அதேசமயம் இவ்விஷயத்தில் கர்த்தருடைய முடிவைப் பெற்றுக்கொள்வதற்கு அவர்களில் சிலர் விரும்பியதினாலும், தங்களுக்காக இப்பிரச்சனையை முடித்துத் தரும்படிக்கு அவரிடம் கேட்டுக்கொண்டார்கள்.
இவ்விஷயம் தொடர்பாக, அவசியமாயிருந்த படிப்பினையைத் தம்முடைய உண்மையுள்ளவர்களுக்குக் கொடுக்கும்படியாக இதுபோன்றதான ஒரு வாய்ப்பை, நமது கர்த்தர் விரும்பியவராக இருந்தார். மேலும், தம்முடைய வழக்கத்தின்படி அதை விவரித்தும் கொடுத்தார். ஒரு சிறுபிள்ளையை அழைத்து, அதை நடுவில் உட்காரச்செய்து, இப்படியாக, குழந்தைப்போல் [R2660 : page 206] ஆகுகின்றவர்கள் மாத்திரமே, இராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் என்ற பிரமிக்கச் செய்யும் விஷயத்தைக் கூறினார். சீஷர்கள் சுபாவத்தின்படியான மனுஷர்களாகவும், பெரும்பான்மையாகக் கல்லாதவர்களாகவும் காணப்பட்டபடியால், இவர்கள் குழந்தை போன்ற எளிமை தன்மைக்குத் தொலைவாகக் காணப்பட்டு, மனதளவில் கௌரவமானவர்களாகக் காணப்படுவதற்கு நாடினவர்களாக இருந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை; இப்படியாக கௌரவமான மனதைக் கொண்டிருப்பது என்பது, தேவனுடைய இராஜ்யத்தில் சீக்கிரத்தில் இராஜரிக கனத்தை அடைவதற்கு எதிர்ப்பார்த்துக் காணப்படுபவர்களுக்குத் தகுதியானது, எனச் சுபாவப்படியான மனுஷனுக்குத் தோன்றும். கௌரவம், ஞானம், மதிநுட்பமுடையவர்களுக்குப் பதிலாக, எளிமையும், சாந்தத்தையும், குழந்தை போன்ற தன்மையும், போதிக்கப்படத்தக்க தன்மையும் உடையவர்களையே கர்த்தர் நாடுகின்றார் என்பதை அப்போஸ்தலர்கள் அறிந்தபோது, இது எத்துணை அதிர்ச்சியை அவர்களுக்குக் கொடுத்திருக்கும்.
எனினும் அப்போஸ்தலர்கள் விருத்திச் செய்துக்கொண்டிருந்த ஆவியை/சிந்தையைக் கண்டிக்கும் வண்ணமாக மாத்திரமே, நமது கர்த்தருடைய வார்த்தைகள் காணப்படாமல் இவ்விஷயத்தில் மாற்றம் வேண்டும் எனும் அறிவுரையைக் கொடுக்கும் படிப்பினையாகவுங்கூட இருந்தது. அதாவது, அவருடைய இராஜ்யத்தில் பங்கடைய விரும்புகின்றவர்களின் சார்பில், இத்தகைய மாற்றம் வேண்டுமானால் செய்வோம் என்றில்லாமல், மாறாக செய்ய வேண்டியது அவசியமாய் உள்ளது. மத்தேயு 18:3-ஆம் வசனத்தின் KJV மொழிப்பெயர்ப்பாகிய, “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளை” என்பதற்குப்பதிலாக Revised மொழியாக்கத்தின்படி, “”நீங்கள் மாறி/மறுபக்கமாகத் திரும்பி, பிள்ளைகளை” என்று நாம் வாசிக்கும்போது, தம்முடைய பின்னடியார்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென நமது கர்த்தர் விரும்பின உண்மையான கருத்தை நாம் அடைய முடியும்; “”மனந்திரும்பி (Convert)” எனும் வார்த்தை சரிவரப் பயன்படுத்தப்படாததால், அநேகர் இதன் சரியான அர்த்தத்தைப் புரிந்துக்கொள்ள தவறுகின்றனர். சீஷர்கள் இவ்விஷயத்தின் மீது தங்களது கவனத்தைத் திருப்பி, படித்து, மறுதிசையில் படிப்பினைகளைச் செயல்படுத்த வேண்டும். அதாவது, சாந்தம், தாழ்மை, குழந்தை தன்மைப்பற்றின படிப்பினைகளைச் செயல்படுத்த வேண்டும்; சாந்தத்திலும், இருதயத்தின் எளிமையிலும் யார் அதிகமாக வளர்ச்சியடைகின்றார்களோ, அவர்களே இராஜ்யத்தில் பெரியவராய் இருப்பார்கள் என்ற நமது கர்த்தருடைய அறிக்கையானது, எளிமைக்காகவும், சாந்தத்திற்காகவும் நாடுபவர்களுக்கு மாத்திரமே இராஜ்யத்தில் ஒரு பங்கு அருளப்படும் என்பதையும், சுயத்திற்காக நாடுபவர்களுக்கும், தற்பெருமையடித்துக் கொள்பவர்களுக்கும் இராஜ்யத்தில் எவ்வித பங்கும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.
இப்படியாக தம்முடைய சீஷர்கள் மத்தியில் தாழ்மை மனதை உடையவர்களுக்கும், கவனத்தை ஈர்க்கும் தன்மை இல்லாதவர்களுக்கும், தாம் இராஜ்யத்தின் உன்னதமான கனங்களையும், மதிப்புகளையும் அருளுவதாக இயேசு விவரித்தப் பிற்பாடு, தம்முடைய பின்னடியார்களாகிய இப்படிப்பட்ட “”சிறியவர்கள்” தொடர்பான ஒரு பொதுவான பாடத்தைக் குறித்துப் பேச, தொடர்ந்து முற்பட்டார்; அதாவது தம்முடைய நாமத்தில் இத்தகைய எளிமையான சீஷர்களை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும், தம்மையே ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படுவார்கள் என்று கூறினார்; இன்னுமாக இந்தச் சிறியவர்களில் அல்லது தாழ்மையுள்ளவர்களில் ஒருவரை இடறச் செய்கிறவர் அல்லது பாதிப்பை ஏற்படுத்துகின்றவர் இப்படியாக மிகவும் கடுமையான குற்றத்தைப் புரிவதால், ஜீவனை இழந்துப்போவது நலமாயிருக்கும் எனவும், ஏந்திரக்கல் கழுத்தில் கட்டப்பட்டு, கடலுக்குள் தள்ளப்பட்டு இப்படியாக தங்களது ஜீவனை இரட்சித்துக்கொள்வதற்கான சகல நம்பிக்கைகளையும் இழந்து, அழிக்கப்படுவது நலமாயிருக்கும் எனவும், இப்படியாகக் காத்தருடைய “”சிறியவர்களில்” சீஷர்களிலேயே தாழ்மையாய் இருப்பவர்களில், குழந்தை போன்றும், சாந்தத்துடனும், கர்த்தருடைய வழியைப் பின்பற்றுகிறவர்களில் ஒருவருக்கு, ஒருவன் பாதிப்பை ஏற்படுத்துவதைப் பார்க்கிலும், அவன் மீது இந்த மாபெரும் பேராபத்து வருவது நலமாயிருக்கும் எனவும் இயேசு கூறினார்.
இப்படியாகத் தாழ்மைக்குக் கர்த்தர் எவ்வளவு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றாரென நாம் காணும்போது, இது உண்மையான சீஷர்கள் அனைவரையும், இந்தப் பண்பை அன்றாடம் விருத்திச் செய்திட உற்சாகப்படுத்திட வேண்டும். அதாவது, இவர்கள் அதிகமாக மாபெரும் இராஜாவின் பார்வையில் நேர்மையுள்ளவர்களாகவும், கபடற்றவர்களாகவும், உண்மையில் தாழ்மையுள்ளவர்களாகவும் வளரத்தக்கதாகவும், வரவிருக்கும் இராஜ்யத்திற்குரிய உன்னதமான உயர்த்தப்படுதல்களுக்கு அதிகமதிகமாகத் தகுதியடைத்தக்கதாகவும், இப்பண்பை அன்றாடம் விருத்திச் செய்திட, உற்சாகப்படுத்திட வேண்டும். இந்தச் சாந்தமில்லாமல் எவரும் இந்த இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது என்பதைக் காண்கையில், கர்த்தருடைய ஜனங்கள் தாழ்மையாய் இருக்கும்படிக்கு, வேதவாக்கியங்கள் எங்கும் புத்திமதிக் கூறுவதைக் குறித்தும் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. “”ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” (1பேதுரு 5:6). இப்படியாக, வேதவாக்கியங்களின் புத்திமதிகள் அனைத்தும் காணப்பட்டாலுங்கூட, கர்த்தருடைய ஜனங்கள் ஆகுகிறவர்களுக்கு, அவருடைய வழியில் ஓடுவதற்கென ஈடுபட்டுள்ளவர்களுக்கு, அவர்களுடைய மாம்ச சுபாவத்தின் தவறான திசையை நோக்கும் தன்மை காரணமாக, மற்றக் காரியங்களைக் காட்டிலும், இத்தாழ்மை தொடர்பான விஷயத்திலேயே அதிகமான சிரமத்தையும், அதிகமாகப் போராட வேண்டிய நிலைமையையும் கொண்டிருக்கின்றனர். தங்களைத் தாங்களே சிறியவர்கள் என்று எண்ணுகின்ற சிலர்; தங்களைக்குறித்துச் சகோதரர்கள் மிக உயர்வாக மதிக்க வேண்டுமென மிகவும் ஆவலோடு காணப்படுகின்றனர். கர்த்தருடைய அருமையான ஜனங்கள் அனைவரும், அதிலும் விசேஷமாக வழி நடத்துகின்றவர்களாய் இருப்பவர்களும், சபையை வழி நடத்துவதற்கும், சபைக்கு உதவியாக இருப்பதற்குமென இயல்பாகவே சில பண்புகளைப் பெற்றிருப்பவர்களும், இந்தப் பாடத்தை நன்கு [R2661 : page 206] கற்றுக்கொண்டு, மற்றும் இதிலிருந்து எப்படித் தாங்கள் கர்த்தருடைய தயவை அதிகமாகப் பெற்றுக்கொள்வதற்கும், அவருடைய இந்த நியமத்திற்கு ஏற்றாற்போல் காணப்படுவதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும்.
கர்த்தருக்கு உண்மையாய்ச் சொந்தமானவர்களின் பாதையில் இப்படியாக அநேக இடறலின் கற்கள் காணப்படும் என்றும், அதுவும் அவர்கள் “”சிறியவர்களாக,” தாழ்மையுள்ளவர்களாக இருப்பதற்கு ஏற்ப காணப்படும் என்றும் கர்த்தர் மிகவும் தெளிவாகத் தெரிவித்துள்ளார். இந்த இடர்பாடுகள், இந்தப் பரீட்சைகள், இந்த இடறல்கள் வருவது அவசியம் என்றும் கர்த்தர் தெரிவித்துள்ளார். தெரிந்துக்கொள்ளப்பட்ட சபை முழுவதும் முற்றிலுமாகப் பரீட்சிக்கப்படுவதும், குணலட்சணத்தில் வளர்ச்சியடைவதும், இப்படியாகப் பலவான்களாகவும், தேவனுடைய நேசக்குமாரனுக்கு ஒத்தச் சாயலுமாகி, சத்தியத்திற்காகப் பாடுபடுவதற்கான விருப்பம் கொள்ளத்தக்கவர்களாகுவதும், பரலோகத்தில் இருக்கும் பிதாவைத் தாங்கள் பிரியப்படுத்தத்தக்கதாகப் பூமிக்குரிய காரியங்களை மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் இழந்துவிடுவதும், இப்படியாகத் தாழ்மையையும், கீழ்ப்படிதலையும் வளர்த்திக் கொண்டு, இயேசுவின் அடிச்சுவடுகளை உண்மையாய்ப் பின்பற்றுகிறவர்களுக்கென மாத்திரம் பிதா வாக்களித்துள்ள, உயர்த்தப்படுதலுக்கு இவர்கள் போகப்போக ஆயத்தப்படுவதும் தெய்வீகச் சித்தமாக இருப்பதினால், இந்த இடறல்கள், இந்தப் பரீட்சைகள் அவசியமாய் உள்ளது.
பாதையில் இடறலின் கற்கள் அவசியமாய் இருந்தாலும், இப்படியாக இடறலின் கற்கள் வாயிலாகத்தான் சபையாகிய, கிறிஸ்துவின் சரீரம் பரீட்சிக்கப்படுவதாக இருந்தாலும், இதிநிமித்தம் பரிசுத்தவான்களுடைய பாதங்களுக்கு முன்பாக இந்த இடறலின் கற்களை வைப்பதற்கென, எதிராளியானவனின் வேலையாட்களாக (agents) தங்களை எதிராளியானவனுடைய செல்வாக்கிற்கு இரவல் கொடுத்துவிட்டவர்களை, (சபைக்கு அவசியமாய் இருந்த) இடறலின் கற்களைத் தூக்கிப்போட்டத்தற்கான (குற்ற) பொறுப்பிலிருந்து நீங்கலாகுவதில்லை. இவர்களுக்கான தண்டனையின் விதம் என்பதைத் துல்லியமாகக் குறிப்பிடாத விதத்தில், இத்தகைய பொல்லாப்புச் செய்கைக்காரர்கள், “”பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன்” என்று கூறினவரிடமிருந்து பலன் பெற்றுக்கொள்வார்கள் என்று நமது கர்த்தருடைய வார்த்தைகள் காணப்படுகின்றது.
ஆண்டவர் தம்முடைய அர்ப்பணிப்பின் வாக்குறுதியை நிறைவேற்றுவதிலிருந்து, அவரை மனம் மாற்ற பேதுரு முற்பட்டதின் வாயிலாக, பேதுரு தன்னையும் அறியாமல் இடறலின் கல்லாக [R2661 : page 207] இருந்ததுபோல, இன்றும் அநேகர் கர்த்தருடைய சிறியவர்களுக்கு முன்பாக, அவருடைய உண்மையுள்ள சிறுமந்தைக்கு முன்பாக இடறலின் கற்களைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். கர்த்தருடைய “”சிறியவர்களுக்கு” முன்பாக இடறலின் கற்களை வைப்பவர்கள், இன்றும் “”சிறியவர்களை” முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் சுயத்தைப் பலிச்செலுத்தும் பாதையாகிய இடுக்கமான வழியிலிருந்து, வழிவிலகச் செய்வதற்கே நாடுகின்றனர். அதாவது இடுக்கமான வழியைக் காட்டிலும், சுலபமும் மற்றும் தாழ்த்த வேண்டிய அவசியம் இல்லாத ஒரு வழியானது, இவ்வுலகப் போக்கிற்கு மிகவும் ஞானமுள்ளதாகவும், மிகவும் நாகரிகமானதாகவும், மிகவும் தந்திரமானதாகவும் இருக்கின்றது என்றும், அது இடுக்கமான வழியைப்போன்று நல்லதாக அல்லது இடுக்கமான வழியைக்காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கின்றது என்றும் அவர்களை வற்புறுத்த நாடுகின்றனர். இப்படியான பரீட்சைகள் அவசியமே. மேலும், இரட்சகரின் அடிச்சுவடுகளில் அதிகமாக நடக்காதவர்கள் அனைவரும், வெளியாக்கப்படவும் அவசியமாய் இருக்கின்றது. காரணம், தேவன் சிறுமந்தையினரை மாத்திரமே அதாவது, அவருடைய நேசக்குமாரனுடைய சாயலை உடையவர்களை மாத்திரமே தேடுகின்றார். மந்தையிலுள்ள எவரையும் திசைத் திருப்புகின்றவர்கள் மீது, அதாவது, எந்த விதத்திலாகிலும் கர்த்தருடைய ஜனங்களின் பாதையில் இடறலின் கற்களாக இருக்கின்றவர்கள், இடறுவதற்கான காரணிகளாக இருக்கின்றவர்கள் மீது, மாபெரும் பொறுப்புள்ளது.
இப்படியாகப் பார்க்கும்போது, இடறல்கள் (அ) பரீட்சைகள் மற்றும் சோதனைகள் அனைவருக்கும் வர வேண்டியதேயாகும். இன்னுமாக இந்தப் பரீட்சைகள் என்பது, நமது பாதங்கள் போன்று நமக்கு உதவியாகக் காணப்படுபவைகளை அல்லது நமது வலது கண் (அ) வலது கரம் போன்று நமக்கு அருமையான இலட்சியங்களை (அ) பழக்கங்களை (அ) சிலாக்கியங்களை (அ) இன்பங்களைப் பலிச் செலுத்துவதாக இருக்கின்றது. இன்னுமாக நாம் இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமெனில் மேற்கூறியவைகள் ஜெயங்கொள்ளப்பட வேண்டும் என்று நமது கர்த்தர் வலியுறுத்துகின்றார். இதுவே இன்னொரு விதத்தில், “”நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது (அப்போஸ்தலர் 14:22). இயேசுவை விசுவாசித்தாலேயே இராஜ்யம் அருளப்படும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பவர்கள், வேதவாக்கியங்கள் கூறாத தவறான கருத்தைக் கொண்டவர்களாய் இருக்கின்றனர். தேவன் அங்கீகரிக்கத்தக்கதாக, சுயத்தைப் பலிச் செலுத்தும் ஏதேனும் காரியங்களை நாம் செய்வதற்கு முன்னதாக, நாம் நீதிமானாக்கப்படுவதற்கு, விசுவாசம் அவசியமாய் உள்ளது; ஆனால், ஒருவர் விசுவாசம் வைப்பதில் மாத்திரம் நிறுத்திவிட்டு, கிரியைகள் இல்லாமல், சுயத்தைப் பலிச் செலுத்துதல் இல்லாமல் காணப்பட்டால், இவர் இராஜ்யம் தொடர்புடைய அனைத்து நம்பிக்கைகளையும், சிலாக்கியங்களையும் இழந்துவிடுபவர் ஆகிறார். இராஜ்யத்தை அடைவதற்கு நாம் “”போராட வேண்டியுள்ளது.” “”நல்லதொரு போராட்டம் போராட வேண்டியுள்ளது.” “”நல்லப் போர்ச்சேவகனாய்த் தீங்கு அனுபவிக்க வேண்டியுள்ளது.” பாவ இன்பங்களை மாத்திரமல்லாமல், கர்த்தருடைய ஊழியங்களுக்கான நம்முடைய முழு ஈடுபாட்டையும், அவரோடு மரிப்பதாகப் பண்ணியுள்ள நம்முடைய உடன்படிக்கையையும் நாம் நிறைவேற்றுவதை குறிக்கிடும் அனைத்தையும் தறித்துப்போட விருப்பத்துடன் காணப்பட வேண்டியுள்ளது; “”தேவனுடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும், செய்கையையும் நம்மில் உண்டாக்கும் மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்கள் மற்றும் தேவையான பொழுதெல்லாம் காணப்படும் தெய்வீகக் கிருபை ஆகியவற்றின் உதவியால் பயத்தோடும், நடுக்கத்தோடும் நம்முடைய இரட்சிப்பை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
இராஜ்யத்தில் கை (அ) கண் (அ) பாதம் இல்லாமல் காணப்படுவார்கள் என்று நாம் புரிந்துக்கொள்ளக்கூடாது; மாறாக, இடறலாய் இருக்கும் கண் என்பது, நம்முடைய சுபாவ ஆசைகளுக்கு அழகானதாகவும், கவர்ச்சியானதாகவும், பூமிக்குரிய காரியங்களினிடத்தில் நம்மை ஈர்க்கின்ற விதமாகவும் நம்மைச் சூழ்ந்து வளைத்துக்கொள்ளும் விஷயங்களைக் குறிக்கின்றது; இடறலாய் இருக்கும் கரம் என்பது, உன்னதமான நம்முடைய ஆவிக்குரிய நலன்களுக்கு எதிராக செய்யும் காரியங்களைக் குறிக்கின்றது; இடறலாய் இருக்கும் கால் என்பது, சுயத்தைத் திருப்திப்படுத்தும் பாவத்தின் விலக்கப்பட்டப் பாதைகளில் செல்வதைக் குறிக்கின்றது; ஆகவே, இவைகளைத் தறித்துப்போடுவது என்பது, நாம் அனைத்துப் பூமிக்குரியவைகளை அனுபவித்துக் கொண்டு, நமது அழைப்பையும், தெரிந்துக்கொள்ளுதலையும் உறுதிப்படுத்துவதற்குத் தவறிப்போவதைப் பார்க்கிலும், குறிப்பிட்ட பூமிக்குரிய சிலாக்கியங்களையும், இன்பங்களையும் அனுபவிக்காமல் இருந்து, நித்தியத்திற்குரிய ஜீவனுக்கும், இராஜ்யத்தின் பங்கிற்குள்ளும் பிரவேசிப்பது நலமாயிருப்பதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது.
“”நித்திய அக்கினி” மற்றும் “”நரகத்தின் அக்கினி” என இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகள் அடையாளமான வார்த்தைகளேயாகும்; மேலும், இது துணிகரமான பாவிகளுடைய பாவத்தின் சம்பளமாகிய அழிவையே குறிக்கின்றது; அதாவது, “”அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்” (2 தெசலோனிக்கேயர் 1:10). இவ்விடத்திலும் சரி, மற்ற வேதவாக்கியங்களிலும் சரி, பயன்படுத்தப்பட்டுள்ள அக்கினி என்பது சித்திரவதையைக் குறிக்காமல், அழிவையே குறிக்கின்றது என்பதை, “”நரகம் குறித்து வேதவாக்கியங்கள் கூறுவது என்ன?” என்ற துண்டு பிரசுரத்தில் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்னுமாக, “”இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.” அதாவது, தேவனுடைய இந்தத் தாழ்மையானவர்களை அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள் என்ற எச்சரிப்பை நமது கர்த்தர் கொடுக்கின்றார். உலகத்தின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கையில் இவர்கள் எளிமையானவர்கள் போலும், முக்கியத்துவம் அற்றவர்கள் போலும் தோன்றலாம். ஆனால், இவர்கள் தேவனுடைய தோழர்கள்; ஆம், இவர்கள் தேவனுடைய பிள்ளைகள்; இவர்களைத் தேவன் பராமரிக்கின்றார்; ஆகவே, இவர்களுக்குப் பாதகம் பண்ணுகின்றவர்கள், பரலோகத்திலுள்ள இவர்களுடைய பிதாவைப் பரியாசம் பண்ணி, எதிர்க்கின்றவர்களாய் இருப்பார்கள். இன்னுமாகத் தம்முடைய சிறியவர்களுக்கும், தம்முடைய உண்மையுள்ள மற்றும் தாழ்மையுள்ள சிறுமந்தையினர் ஒவ்வொருவருக்கும், பிதாவின் சந்நிதியில் எப்பொழுதும் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது என்றும் நமது கர்த்தர் நமக்கு உறுதியளிக்கின்றார். கர்த்தருடைய ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாதுகாக்கும் தேவதூதர் காணப்படுகின்றார்; மேலும், இவர்களுடைய நலனுக்கடுத்த காரியங்களை மாபெரும் இராஜாவின் கவனத்தில் கொண்டுவரும் விஷயத்தில், எவ்விதமான தாமதமும் காணப்படாது என்று நாம் புரிந்துக்கொள்கின்றோம். கிறிஸ்துவின் சரீர அங்கத்திலுள்ள தாழ்மையானவர்கள், மோசமாக நடத்துவதற்கும் (அ) எவ்விதத்திலாகிலும் அலட்சியம் செய்தவதற்கும், இழிவாகக் கருதுவதற்கும் முற்படுகிறவர்களுக்கு, எத்தகைய ஒரு கருத்து இங்கு முன்வைக்கப்படுகின்றது! இந்தத் தாழ்மையுள்ளவர்கள் தெய்வீகப் பராமரிப்பிற்கும், கவனிப்பிற்கும் விசேஷமாக உரியவர்கள் என்றும், இவர்கள் கர்த்தருக்குச் சொந்தமானவர்களானபடியால் சகலமும் நன்மைக்கு ஏதுவாய் இவர்களுக்கும் நடக்கும் என்றுமுள்ள காரியம், இந்தத் தாழ்மையுள்ளவர்களுக்கும் எத்துணை படிப்பினையாக உள்ளது!
கடைசி நான்கு வசனங்கள் இப்பாடத்திற்குச் சம்பந்தப்பட்டவை அல்ல. மேலும், இது வேறொரு பாடத்தில் இடம்பெறுவதினால், இவ்வசனங்களுக்கு இப்பாடத்தில் விளக்கம் கொடுப்பதை நாம் தவிர்த்துவிடுகின்றோம்.