R5445 (page 124)
லூக்கா 17:1-10
“”மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மைப் பாராட்டுவானாக.” – 1 கொரிந்தியர் 1:30
இந்தப் பாடமானது நான்கு பாகங்களைக் கொண்டதாகும்; ஒவ்வொன்றும் தனித்தனியான வேறுபட்டக் காரியமாகும். இவ்வார்த்தைகளுக்கு இடையிலான தொடர்பும் தெரிவிக்கப்படவில்லை, ஆனால் இவை பரத்திலிருந்து வரும் ஞானத்தை வெளிப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. இவைகளை வரிசையாகப் பார்க்கலாம்.
“”இடறல்கள் வராமல் போவது கூடாத காரியம்.” இடறல் என்ற வார்த்தையானது, தடுமாறி விழுதலை அல்லது கண்ணியில் சிக்குதலைக் குறிக்கின்றதாக இருக்கின்றது. இயேசுவின் அர்ப்பணம் பண்ணப்பட்ட பின்னடியார்களானவர்கள், சிறியவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர், காரணம் இவர்கள் புதிய சிருஷ்களென, தேவனுடைய சித்தத்திற்கு முழுமையான அர்ப்பணம் எனும் புதிய பாதையில் நடக்க ஆரம்பிக்க மாத்திரமே செய்துள்ளனர். இவர்களைக் கிறிஸ்துவுக்குள் குழந்தைகளானவர்கள் என்று பரிசுத்தவானாகிய பவுல் அழைக்கின்றார் (1 கொரிந்தியர் 3:1). “”பிள்ளைகளே” என்று பரிசுத்தவானாகிய யோவான் எழுதுகின்றார். இந்தக் குழந்தைப் பருவமானது, தொடர்ந்துக் காணப்பட்டுக்கொண்டிருக்கக்கூடாது. கிருபையிலும், அறிவிலும், அன்பிலும் வளர்ச்சி காணப்பட வேண்டும். குணலட்சணமானது பலமடைய வேண்டும்; இந்தக் குணலட்சணமானது, ஞானமானதாகவும், பலமுள்ளதாகவும், கண்ணியில் அகப்படுத்தப்படுவதற்குக் கூடாததாகவும் இருப்பது மாத்திரமல்லாமல், குறைவாய் வளர்ந்துள்ள மற்றவர்களுக்கு உதவி புரியக் கூடியதாகவும் காணப்பட வேண்டும்.
இவ்வாறாகச் சபையில் மிகவும் வளர்ந்தவர்கள் மூப்பர்களென, மூத்த சகோதரர்களென அழைக்கப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்கள், சகோதரர்கள் மத்தியில் கர்த்தரை அடையாளப் படுத்துகின்றவர்களாய் இருக்கின்றனர்; மேலும் சில சமயங்களில் பரலோக ஆறுதலும், ஆலோசனையும், கருத்துக்களும், கடிந்துக்கொள்ளுதல்களும் இவர்கள் மூலமாய், (சத்தியத்தில்) இளைய சகோதர சகோதரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. சாத்தான் இந்த யுகத்தின் அதிபதியாக இருப்பதினாலும், பெரும்பான்மையான மனுக்குலத்தை இவன் தன்னுடைய செல்வாக்கின் கீழ் வைத்துக்கொண்டு தப்பறைகள், மூடநம்பிக்கைகள், பாவங்கள் முதலானவைகளினால் குருடாக்கி வைத்துள்ளப்படியாலும், கண்ணியில் அகப்படுவதற்கு/இடறுவதற்கு வாய்ப்புகள் காணவேபடுகின்றது. “”தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்” (2 கொரிந்தியர் 4:4). “”என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு” என்று இயேசு குறிப்பிடுவதிலிருந்து, இங்கு இயேசு குழந்தைகளைப் பற்றிப் பேசவில்லை என்பது தெளிவாகுகின்றது.
இயேசுவின் பின்னடியார்களுக்கு, அதாவது அவருடைய சிறியவர்களுக்கு, அறியாமையினால் (அ) வேண்டுமென்றில்லாமல் இடறல் உண்டாக்குகின்றவர்களை இயேசு தண்டிப்பார் என்றோ, அநீதியாக குற்றம் தீர்ப்பார் என்றோ நாம் அனுமானிப்பதில்லை. தம்முடைய பின்னடியார்களை, தம்முடைய சிறியவர்களை, வஞ்சிப்பதற்கும், கண்ணியில் சிக்க வைப்பதற்கும், இடறச்செய்வதற்கும், சோர்வுபடுத்துவதற்கும், வேண்டுமென்றே முயற்சிப்பவர்களுக்கே, இயேசு எச்சரிப்பு வழங்குகின்றார் என்றே நாம் எண்ணிக்கொள்கின்றோம். கர்த்தருடைய பின்னடியார்களுக்கு எதிராக, துணிகரமாக மற்றும் வேண்டுமென்றே போடப்பட்ட திட்டங்கள் பற்றின சம்பவங்களை நாம் அனைவரும் கேட்டிருக்கின்றோம், மேலும் இதில் சாத்தான்தனமான ஆவியே காணப்படுகின்றது.
சில சமயம் தேவனுடைய உண்மையான ஜனங்கள் கூட, இவ்வாறாக சாத்தானுக்கான ஊழியங்களுக்குள் சிக்கிக்கொள்கின்றனர். “”மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?” (ரோமர் 6:16). தர்சு பட்டணத்துச் சவுல் கூட இவ்வாறாகக் கண்ணியில் சிக்கிக் கொண்டவராக, ஒரு குறிப்பிட்ட [R5445 : page 125] காலம் எதிராளியானவனால் பயன்படுத்தப்பட்டவராக இருந்தார்; மேலும் அறியாமையில், தான் இவைகளைச் செய்தபடியால் தேவன் தன்மேல் இரக்கம் காண்பித்ததாக சவுல் விளக்கம் அளிக்கின்றார். ஒருவேளை சவுல் வேண்டுமென்றே, துணிகரமாய் இவைகளைச் செய்திருப்பரானால், இவரை ஓர் அற்புதத்தை நிகழ்த்தி மீட்டுக்கொள்ளும் அளவுக்கு, இவரிடம் தேவன் இரக்கம் காட்டியிருந்திருக்கமாட்டார் என்று நாம் எண்ணுகின்றோம்; இன்னுமாக ஒருவேளை சவுல் இவைகளையெல்லாம் துணிகரமாய்ச் செய்திருப்பாரானால், அவர் தன்னுடைய துணிகரமான பொல்லாங்கான வழியிலேயே தொடர்ந்துக் காணப்பட்டிருந்திருப்பார் மற்றும் அவருடைய கழுத்தில் எந்திரக்கல் தொங்க விடப்பட்டு, அவர் கடலில் அமிழ்ந்துப் போவது சவுலுக்கே நலமாயிருந்திருக்கும் என்று நாம் எண்ணுகின்றோம்.
ஏனெனில் ஒரு மனுஷன் இப்படியாக கடலில் அமிழ்த்தப்படும் போது, தன்னுடைய தற்கால ஜீவியத்தை இழந்துப் போகிறவனாக மாத்திரமே இருப்பானே ஒழிய, மரணம் எனும் நித்திரையினின்று அவன் விழிக்கும்போது ஆயிரவருட யுகத்திலுள்ள எதிர்க்கால வாழ்க்கையை இழந்துப் போகிறவனாய் இருக்கமாட்டான். அப்போது அவன் கீழ்ப்படிதல் மூலமாய்ப் பிரகாசிக்கப்படுவதற்கான முழு வாய்ப்பையும், பாவம் மற்றும் மரணத்தினின்று விடுதலைக்கான முழு வாய்ப்பையும் பெற்றுக்கொள்கின்றவனாய் இருப்பான். ஆனால் இயேசுவின் பின்னடியார்களை, வேண்டுமென்றே துன்பப்படுத்துகிறவர்களாகவும், பின்னடியார்களை நீதியின் வழியினின்று பின்வாங்க செய்கிறவர்களாகவும் இருப்பவர்கள், தங்கள் சொந்த மனசாட்சியைத் தவறான வழியில் திருப்புபவர்களாய் இருப்பதினால், மற்றும் தங்களையே மிகவும் சீரழித்துக்கொள்வதினால், இவர்கள் கல்லறையிலிருந்து வெளியே வந்த பிற்பாடு, புதிய யுகத்தினுடைய நிபந்தனைகளுக்கு இசைவாக வருவதென்பது, இவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் வெளிச்சத்திற்கும், அறிவிற்கும் எதிராக பாவம் செய்பவர்கள் நித்திய ஜீவனுக்கான தங்களுடைய வாய்ப்புகளை அபாயத்திற்குள்ளாக ஆக்குகின்றனர்.
3 மற்றும் 4-ஆம் வசனங்களானது, மத்தேயு 18:15-22 வரையிலான வசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பிரசங்கத்தின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. இப்பிரசங்கத்தின் பாடமானது உலகத்தாருக்காய் அல்லாமல், இயேசுவின் பின்னடியார்களுக்குக் கொடுக்கப்பட்டதாய் இருக்கின்றது. இது பின்னடியார்கள்,அதாவது விசுவாச வீட்டாரிலுள்ள சகோதரர்களிடத்திலான, அவர்களது கடமையைப்பற்றிப் பிரதானமாய்த் தெரிவிக்கின்றதாக இருக்கின்றது இதற்கு அடுத்ததாக பரந்த கண்ணோட்டம் ஒன்றும் இருக்கின்றது. சில சமயங்களில் இந்தப் பரந்த கண்ணோட்டம் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. தேவைப்படும் பட்சத்தில் விஷயம் சபையாருக்கு முன்பு கொண்டுவரப்படலாம் என மத்தேயு 18-ஆம் அதிகாரத்தில் இடம்பெறும் சகோதரருக்கான ஆலோசனை பற்றின புத்திமதிகள், வேறு யாருக்காகவும் இல்லாமல், மாறாக சபைக்கே என்று நிரூபிக்கப்படுகின்றது.
இரக்கம் அதாவது அளவற்ற இரக்கம் பற்றினதே படிப்பினையாகும். அனைவருக்கும் இரக்கம், அதாவது தெய்வீக இரக்கம் தேவைப்படுகின்றது, காரணம் அனைவரும் பூரணமின்மையில் காணப்படுகின்றனர் என்பதே சம்பாஷணைக்கான அடிப்படையாக இருக்கின்றது; மேலும் இந்தக் கிருபையை/பண்பை நாம் வளர்த்துவதற்கு நமக்கு உதவத்தக்கதாக, நாம் எந்தளவுக்கு இந்தத் தேவனுக்கொத்த பண்பைச் செயல்படுத்த முயற்சிக்கின்றோமோ, அதன் அடிப்படையிலேயே நமக்கு அவருடைய தயவும், அவருடைய ஆசீர்வாதங்களும் காணப்படத்தக்கதாக கர்த்தர் ஏற்பாடு பண்ணியுள்ளார். “”உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும், துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே” (லூக்கா 6:35).
பரிசுத்தவானாகிய பவுலினால் “”பிசாசுகளின் உபதேசங்கள்” என்று அழைக்கப்படும் தவறான உபதேங்களினால், நம்முடைய முன்னோர்களும், நாமும் இவ்வளவுக்கு வஞ்சிக்கப்பட்டிருந்தது என்பது விநோதமாகவே தோன்றுகின்றது (1 தீமோத்தேயு 4:1). ஒரு காலத்தில் பரம பிதாவானவர் மன்னிப்பை ஒருபோதும் வழங்காதவர் என்றும், அவர் தம்முடைய மனித சிருஷ்டிகள் பாவம் செய்தபடியினால், அவர்களை மன்னிப்பதற்குப் பதிலாக, அவர்கள் மீதான பகையினால் முழுக்க நிரம்பப் பெற்றவராக இருக்கின்றார் என்றும், நாம் எண்ணி வந்தோம். பாவத்திற்கான தண்டனை (அ) சம்பளம், சித்திரவதை என்றும், அதுவும் நித்திய காலத்துக்குமான சித்திரவதையாக இருக்க வேண்டும் என்றும் நாம் விடாப்பிடியாய்க் கூறி வந்தோம். சகல கிருபைகளுக்கும் தேவனாய் இருப்பவரின், அதாவது இரக்கங்களின் பிதாவாக இருப்பவரின் உண்மையான குணலட்சணத்தை நாம் எவ்வளவு குறைவாகப் புரிந்திருந்தோம்!
இன்னுமாக நம்மில் சிலர் நம்முடைய தப்பறைகளை நியாயப்படுத்தும் முயற்சியில், தேவன் அன்பானவராகவும், இரக்கமானவராகவும், நல்லவராகவும் இருந்தாலும், அவருடைய பின்னணியில் அவருடைய சிருஷ்டிகளைச் சித்தரவதைப்படுத்த வேண்டும் என்று கோரும் கடினமான பிரமாணம் ஒன்று காணப்படுவதாகவும், அவராலேயே தம்மை விடுவித்துக்கொள்ள முடியாத பிரமாணம் ஒன்றைக்கொண்டிருப்பதாகவும், மனுக்குலத்திற்கு இப்பிரமாணம் கொடுத்திட்ட தீர்ப்பை அவர் நிறைவேற்றத்தக்கதாக, அப்பிரமாணத்திற்குத் தேவன் கட்டுப்பட்டிருப்பதாகவும் நாமே அனுமானித்துக்கொண்டோம்.
இன்னும் சிலர் முழு மனுக்குலமானது, பிறப்பு மற்றும் இறப்பிற்குள்ளாக ஏதோ ஒரு கால கட்டத்தில், பாவத்திலிருந்து நீதிக்குத் திரும்புவதற்கும், பரிசுத்தவான்கள் ஆகுவதற்குமான முழு வாய்ப்பினைப் பெற்றுக்கொள்கின்றது என்ற கருத்தை நாம் கொண்டிருக்கத்தக்கதாக நம்மைத் தவறான வழியில் நடத்திவிட்டனர். இவைகளெல்லாம் எவ்வளவு கேலிக்கு இடமாக இருக்கின்றது எனச் சமீப காலத்திலேயே, வேத மாணவர்களாகிய நாம் அறிந்து வருகின்றோம். 4000 ஆண்டுகளாக ஒரு சிறு யூத ஜனத்தார் மாத்திரமே தேவனைப்பற்றின அறிவை உடையவர்களாகக் காணப்பட்டார்கள் அல்லது இவர்களுக்கே நித்திய ஜீவனுக்கான வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டன அலலது இவர்களுக்கே பாவம் மற்றும் அதன் தண்டனைப்பற்றின போதனையும் கொடுக்கப்பட்டுள்ளது என்று இப்போதுதான் நாம் அறிய வருகின்றோம். நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட யூதர்கள் கூட, சாத்தானால் குருடாக்கப்பட்டுள்ளனர் என இயேசுவும், அப்போஸ்தலர்களும் தெரிவித்தனர். இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களிடத்தில் பேசும்போது, [R5446 : page 125] ‘உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்” என்று கூறுகின்றார் (மத்தேயு 13:16). பெரும்பான்மையான யூதர்கள் பார்க்காதவர்களாகவும், கேட்காதவர்களாகவுமே காணப்பட்டனர். இது கிறிஸ்தவ மண்டலத்தின் பத்தில் ஒன்பது பங்கின் நிலைமையின் விஷயத்திலும், உண்மையாகக் காணப்படுகின்றது. பிற தேவர்களை வணங்குபவர்களைப்பற்றி நாம் சொல்லவே அவசியமில்லை.
எந்த ஒரு வேதவாக்கியங்களின் ஆதாரம் இல்லாமலும், வேதவாக்கியங்களுக்கு எதிராகவும், நம்மில் அநேகர், தற்போதைய வாழ்க்கையில் கிறிஸ்துவைப்பற்றிக் கேள்விப்படாதவர்கள் அனைவரும், இன்னுமாக அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றும் பரிசுத்த பின்னடியார்கள் ஆகாத அனைவரும், பிசாசுகளின் கரங்களில் நித்திய காலமாய்ச் சித்தரவதைப்படுவார்கள் என்ற கொடூரமான கூற்றை ஆதரித்தவர்களாகக் காணப்பட்டோம். இப்பொழுது கேட்பதற்குச் செவிகளை உடையவர்களாகவும், காண்கிறதற்குக் கண்களை உடையவர்களாகவும் இருந்து, கிறிஸ்து மூலமாய்த் தேவனுடன் உடன்படிக்கையின் உறவிற்குள் பிரவேசிப்பவர்களாகிய ஒரு சிறு வகுப்பாரே, இயேசுவின் அடிச்சுவடுகளில் நடக்கின்றவர்களாய் இருப்பார்கள் என்று வேதாகமம் போதிப்பதை, இப்பொழுது நாம் காண்கின்றோம். இவர்களுக்கு மாத்திரமே எதிர்க்கால ஜீவனை அடைவதற்கான அனைத்து வாய்ப்புகளும், தற்கால ஜீவியத்திலேயே முடிகின்றதாய் இருக்கின்றது. மீதமான மனுக்குலத்திற்கு நியாயத்தீர்ப்பின் காலங்களில், உயிர்த்தெழுதல் மூலமாகவே, எதிர்க்கால ஜீவியத்தைத் தேவன் அருள நோக்கம் கொண்டுள்ளவராக இருக்கின்றார்.
உயிர்த்தெழுதல் என்பது, சபை வகுப்பாருக்கு மாத்திரமே உரியதல்ல் சபைக்கு உரியது முதலாம் உயிர்த்தெழுதலாக இருக்கின்றது. உயிர்த்தெழுதல் என்பது, “”நீதிமான்களுக்கும், அநீதிமான்களுக்குமுரிய” ஒன்றாகும் (அப்போஸ்தலர் 24:15). சபை வகுப்பார் மகிமைக்கும், கனத்திற்கும், அழியாமைக்கும் உயிர்த்தெழுந்து வருவார்கள். அநீதிமான்கள் நியாயத்தீர்ப்பு அடைகிறதற்கும், ஒழுங்குப்படுத்தப்படுவதற்கும், நற்பலன்களை அடைகிறதற்கும், தண்டனை அடைகிறதற்கும், கல்லறைகளிலிருந்து உயிர்த்தெழுந்து வருவார்கள். மனுக்குலத்தார் இந்த நியாயத்தீர்ப்புகளையும், நித்திய ஜீவனை அடைவதற்கான வாய்ப்புகளையும் அடைவதற்கே, மேசியாவின் இராஜ்யம் தொடங்கி வைக்கப்படும்; இன்னுமாக ஜனங்களை வழிநடத்துவதற்கும், அவர்களுக்கு பலனைக்கொடுப்பதற்கும், நீதியாய்த் தண்டிப்பதற்கும் அவர் நியாயாதிபதிகளை நியமிக்கத்தக்கதாகவே, இப்பொழுது அவர் மாம்சத்திலிருப்பவர்கள் மத்தியிலிருந்து சபையை அழைக்கின்றார். “”பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?” (1 கொரிந்தியர் 6:2).
கண்மூடித்தனமாக நம்பப்படுகின்ற அநேகமான விஷயங்கள், இன்று விசுவாசம் என எண்ணப்பட்டு வருகின்றது. ஒருவர் நம்மிடம் வந்து சந்திரனானது, பாலாடையினால் உண்டாக்கப்பட்டுள்ளது என்று கூறுவாரானால், அவர் கூறுவதை நம்புவது என்பது கண்மூடித்தனமான நம்பிக்கையே ஒழிய, விசுவாசமல்ல. “”இப்படிப்பட்டவைகளைச் சொல்லுகின்றவன் யார்? என்றும், இக்காரியத்தைப்பற்றி நாம் அறிந்துள்ளவைகளைக் காட்டிலும், இவைகளைச் சொன்னவன் என்னதான் அறிந்திருக்கின்றான்?” என்றும் நாம் கேள்வி கேட்கிறவர்களாய் இருக்க வேண்டும். வேதாகமத்தில் பரிந்துரைக்கப்பட்டதான விசுவாசம் என்பது, தேவன் வாக்களித்துள்ளவைகள் தொடர்புடையதாய் இருக்கின்றது. இப்படியாக நாம் தேவனிடத்தில் விசுவாசங்கொள்ள வேண்டும், அதாவது அவர் பண்ணியுள்ள அவருடைய நல்ல வாக்குத்தத்தங்களை அவர் நிறைவேற்ற வல்லவரா என்று கேள்வி கேட்காத, சந்தேகிக்காத விசுவாசத்தைத் தேவனிடத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் உற்சாகப்படுத்தப்படுகின்றோம்.
நம்முடைய முன்னோர்கள் மனிதர்கள் மீது, மிகுந்த நம்பிக்கை வைத்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் விசுவாசம் என்று நினைத்துக்கொண்டதெல்லாம், வெறும் கண்மூடித்தனமான நம்பிக்கையாகவே இருக்கின்றது. அவர்கள் இருண்ட காலத்தின் விசுவாசப் பிரமாணங்களை அப்படியே உள்வாங்கி விட்டவர்களாய்க் காணப்பட்டனர்; மேலும் எந்தளவுக்கு ஒரு கூற்று அர்த்தமற்றுக் காணப்பட்டதோ, அதில்தான் தங்களுக்கு அதிக விசுவாசம் இருப்பதாக எண்ணிக்கொண்டார்கள். மாறாக அவர்கள், “”நிரூபணம் எங்கே? இப்படியாகத் தேவன் எங்கே குறிப்பிட்டிருக்கின்றார்?” என்று சொல்லியிருந்திருக்க வேண்டும். விசுவாச பிரமாணங்களுக்கு ஆதரவு கொடுத்தவர்கள், தெளிந்த விசுவாசத்திற்கு எதிராக சந்தேகப்பட்டுக் கூக்குரலிட்டு, தெளிந்த விசுவாசமானது, மதங்களுக்கு எதிரான கொள்கை என்று கூறி, அநேக நேரங்களில், உண்மையுள்ளவர்களைக் கழுமரத்தில் கட்டி எரித்துப்போட்டனர். கர்த்தர் தம்முடைய வார்த்தைகளில், நமக்கு உறுதியளித்துள்ளவைகள் மாத்திரமே, நம்மால் விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே படிப்பினையாக உள்ளது; அதாவது நாம் தூய்மையான தேவ வார்த்தைகளை, அதாவது தவறான மொழிப்பெயர்ப்புகள் நீங்கப் பெற்றதும், இடைச் சொருகப்பட்ட வார்த்தைகள் நீங்கப் பெற்றதுமான தூய்மையான தேவ வார்த்தைகளை நாம் பெற்றிருப்பதில், கவனமாய் இருக்க வேண்டுமென்பதே படிப்பினையாக இருக்கின்றது.
இயேசுவின் சீஷர்கள், இயேசுவின் போதனைகளிலுள்ள மகத்துவங்களையும், நியாயப்பிரமாணத்திலும், தீர்க்கத்தரிசிகளினாலும் பதிவு செய்யப்பட்டுள்ளதும், தம்முடைய மேசியாவின் இராஜ்யம் தொடர்புடையதாய் இயேசுவினால் கூறப்பட்டதுமான ஆச்சரியமான காரியங்கள் நிறைவேறும் விஷயத்தில், வரவேண்டியிருக்கும் சிரமங்களையும் மனதில் பதியப் பெற்றுக்கொண்டார்கள். ஆகையால் தங்களுடைய விசுவாசத்தைப் பெருகப்பண்ணும்படிக்கு, சீஷர்கள், கர்த்தரிடத்தில் கேட்டுக்கொண்டார்கள். அதற்கு இயேசு கொடுத்தப் பதிலானது, நம்முடைய நாட்களில் பெரிதும் தவறாய்ப் புரிந்துக்கொள்ளப்படுகின்றது; “”அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்” (லூக்கா 17:6). இன்னுமொரு தருணத்திலும், இயேசு மலைகளைக் குறித்து இப்படியாகவே குறிப்பிட்டுள்ளார்; “”அதற்கு இயேசு: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்;” ’இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 17:20; 21:21). இன்னும் வேறு இரு தருணத்திலும், இயேசு இதைப் போன்றே மலைகள் தொடர்புடைய விஷயத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மலைகள், சமுத்திரத்தினிடத்திற்கு இடம்பெயர்ந்து போகத்தக்கதாக, யூதர்கள் பிரயாசம் எடுப்பதற்காக நிச்சயமாக ஆண்டவர் இவ்வார்த்தைகளைப் பேசவில்லை; [R5446 : page 126] மாறாக ஒருவேளை அவர்களுக்கு தேவனுடைய வல்லமையின் மீது சரியான விசுவாசம் இருந்து, மலைகளைக் கடலுக்கு இடம்பெயர்க்கும்படிக்குத் தேவன் அவர்களுக்குக் கட்டளையிட்டாரானால், அவர்கள் விசுவாசத்துடன் மலைக்குக் கட்டளையிடும்போது, மலை கடலுக்கு இடம்பெயர்ந்து செல்லும் என்பதை யூதர்கள் உணர்ந்துக்கொள்ளவே இயேசு விரும்பிட்டார். ஆனால் மலை (அ) மரம் தொடர்புடைய விஷயத்தில், தேவன் இப்படியாக எந்தக் கட்டளைகளையும் கொடுக்கவில்லை. ஆகவே இப்படியாக நாம் செய்ய முற்படுவதில், விசுவாசம் அடிப்படையாகக் காணப்படாது.
ஒரு சகோதரனிடம் ஒரு கேள்வி கேட்டப்போது, அவர் சரியான ஒரு பதிலைக்கொடுத்தார், அதாவது, “”ஒருவேளை தேவன் உங்களிடம் மதில் சுவரிலிருந்து குதித்துவிட சொல்வாரானால், நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டபோது, “”நான் குதித்துவிடுவேன்” என்று பதில் கூறினார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நாம் தேவனுடைய செய்தியைக் கேட்டுச் சரியாய்ப் புரிந்துள்ளோமா என்று உறுதிபடுத்துகிறவர்களாய் மாத்திரம் இராமல், தேவனுடைய வார்த்தைகளில், முற்றும் முழுமையாய் நம்பிக்கைக்கொள்கின்றவர்களாய் இருக்க வேண்டும். பின்னர் மலையை இடம்பெயர்க்கும் அளவிலான விசுவாசத்துடன் அவருடைய கட்டளையை நிறைவேற்றுவதற்கு முன்னேறிச்செல்கின்றவர்களாய் இருக்க வேண்டும். ஆனால் தேவன் முட்டாள்தனமான காரியங்களை (அ) தேவையற்ற மாற்றங்களைச் செய்யும்படிக்குக் கட்டளையிடுவதில்லை. மரங்களை வேரோடே பிடுங்குவதற்கான (அ) மலைகளை இடம்பெயர்க்கப் பண்ணுவதற்கான, இம்மாதிரியான கட்டளைகளைத் தேவன் கொடுப்பதில்லை. இப்படியாகச் செய்வதை மனிதன் தன்னுடைய புத்தியின்படி முடிவு எடுத்துக்கொள்ள, தேவன் விட்டுவிடுகிறாரே ஒழிய, அவர் இம்மாதிரியான கட்டளைகளையெல்லாம் கொடுப்பதில்லை. இப்படியாக மரத்தின் (அ) மலையின் விஷயத்தில், விசுவாசத்தினால் மலையை இடம்பெயர்த்துவிட்டதாக ஒரு மனுஷன் நம்மிடம் சொல்வானானால், நாம் அவனை நம்புகிறவர்களாக இருப்பது, கண்மூடித்தனமான நம்பிக்கையாகும். இப்படியான விதங்களில் தேவன் கிரியை செய்வதில்லை.
கிறிஸ்துவின் பின்னடியார்கள் மத்தியில் சிலர், இயல்பாகவே முன்னேறுகிற தன்மையுடைவர்களாகவும், சிலசமயம் மிகவும் இறுமாப்புக்கொண்டவர்களாகவும், சண்டையிடுகிறவர்களாகவும் காணப்படுகின்றனர். அவருடைய சீஷர்கள் ஆனவுடனே, இந்தப் பண்புகள் உடனடியாக மாறிவிடுவதில்லை. பழையவைகள் படிப்படியாகக் கடந்துப் போகின்றன, மற்றும் பழையவைகள் கடந்துப்போன இடங்களில், புதியவைகள் வருகின்றன. அவருடைய சீஷர்கள் அனைவரும், அதிலும் விசேஷமாக இங்குக் குறிப்பிடப்படும் வகுப்பாரும் நினைவில் கொள்ள வேண்டிய படிப்பினை இப்பாடத்தில் கற்பிக்கப்படுகின்றது. இவர்கள் தங்களிடத்தில் நடப்பிக்கப்படும் தேவனுடைய கிருபையின் கிரியையானது, தங்களிடத்திலான தேவனுடைய தயை என்றும், அவருடைய கட்டளைகளுக்கான தங்களுடைய கீழ்ப்படிதலானது, பிரதானமாய்த் தங்களைச் சீர்ப்படுத்துவதற்கும், வளர்த்துவதற்கும் மற்றும் ஆசீர்வாதமான எதிர்க்கால ஜீவியத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் அவசியம் என்றும் இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இவர்கள், தாங்கள் கர்த்தருக்குச் செய்யும் ஊழியமும் ஒரு சிலாக்கியம் என்றும், தங்களுடைய ஊழியங்களினால், தேவனுக்கு நன்மை ஏதும் இல்லை என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.
நாம் இல்லாமலேயே தேவனால் எளிமையாகக் காரியங்களைச் செய்துவிட முடியும், அதாவது நம் மூலமாய்ச் செய்வதைக் காட்டிலும், அவரால் எளிமையாய்க் காரியங்களைச் செய்துவிட முடியும் என்ற விதத்தில், நாம் அனைவரும் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்களாய் இருக்கின்றோம். அவரால் தம்முடைய தேவதூதர்களையும் (அ) ஜீவியத்தின் பல்வேறு காரியங்களையும் பயன்படுத்த முடியும். நம்மில் எவரும் அவருடைய வேலைக்கும், அவருடைய மகிமைக்கும் அவசியமானவர்களாய்க் காணப்படுவதில்லை. மாறாக கர்த்தருடைய திராட்சத்தோட்டத்திற்குள் பிரவேசிப்பதற்கும், வேலை புரிவதற்குமான வாய்ப்பு என்பது, பிரதானமாக நம்முடைய சொந்த நன்மைக்குரியதாகவே இருக்கின்றது. இந்த ஊழியமானது, ஒருவிதமான சந்தோஷங்களை நமக்குக்கொண்டு வருகின்றது. இந்தச் சந்தோஷத்தை வேறெந்த விதத்திலும் நாம் பெற்றுக்கொள்ள முடியாது. திரைக்கு அப்பால் உன்னதமான ஊழியங்களைப் புரிவதற்கான தகுதிகளுக்கும், வளர்ச்சிக்கும் அவசியமான குறிப்பிட்ட அனுபவங்களை, இந்த ஊழியங்களானது நமக்குக்கொண்டு வருகின்றதாய் இருக்கின்றது.
“”கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு” என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார் (எபேசியர் 2:8). ஒருவிதத்தில் சொல்ல வேண்டுமெனில் விசுவாசமே நாம் வளர்த்த வேண்டிய காரியமாக இருக்கின்றது. எனினும் விசுவாசம் நம்மால் உண்டானதல்ல, அது தேவனுடைய ஈவாக இருக்கின்றது என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார்; ஆகையால் நம்முடைய விசுவாசத்தில் நாம் மேன்மை பாராட்டிக்கொள்வதற்கு வாய்ப்பில்லை. கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொண்டிராத எதை நாம் பெற்றிருக்கின்றோம்? தேவனுடைய வழிநடத்துதலானது, நமக்குக் கொடுத்திட்ட சில அறிவின் அடிப்படையில்தான், நம்மிடத்தில் அடிப்படையான ஆரம்ப விசுவாசங்கூடக் காணப்பட்டது; அதாவது சாதகமான பெற்றோரின் வளர்ப்பின் மூலமான தேவனுடைய வழிநடத்துதல் கொடுத்திட்ட சில அறிவின் அடிப்படையில்தான், நம்மிடத்தில் அடிப்படையான ஆரம்ப விசுவாசம் காணப்பட்டிருக்க வாய்ப்புண்டு.