R5521 (page 251)
மாற்கு 12:28-44
“”உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.”―லூக்கா 10:27.
நமது கர்த்தரைச் சிக்க வைக்கும்படி, நியாயசாஸ்திரிகள் நாடின நாளன்று, நமது கர்த்தரிடம் அநேகம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவரிடம் கேட்கப்பட்ட இறுதிக் கேள்வியைப் பற்றி இன்றைய பாடத்தில் நாம் பார்க்கப் போகின்றோம். சராசரியான கல்வியறிவைக் காட்டிலும் அதிகம் கொண்டிருந்த வேதபாரகரில் ஒருவன், இயேசுவிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளைக் கவனித்துக் கொண்டிருந்தான் மற்றும் அவைகளுக்கு நமது கர்த்தர் எவ்வளவு நன்றாய் உத்தரவு கொடுத்து வந்தார் என்பதையும் வேதபாரகன் உணர்ந்தவனாக இருந்தான். பின்னர் வேதபாரகன் ஒரு கேள்வியை முன்வைத்தான்; அநேகமாக இயேசுவைச் சிக்க வைக்க வேண்டும் என்றில்லாமல், நேர்மையுடனே இவன் இக்கேள்வியை முன்வைத்திருக்க வேண்டும். “”கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று?” வேதபாரகன் கேட்டான்; இவன் பத்துக் கற்பனைகள் தொடர்புடைய கேள்வியைக் கேட்டான். “”இஸ்ரயேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை” என்று இயேசு கூறினார் (மாற்கு 12:30).
நமது கர்த்தர் பழைய ஏற்பாட்டில் இடம்பெறும் வேதவாக்கியத்தைக் குறிப்பிட்டார் (உபாகமம் 6:4-5). இயேசுவின் இந்த வார்த்தைகள், புரிந்துக்கொள்ளும் விதத்தில் எத்துணை அருமையாய்க் காணப்படுகின்றது. இந்த நூற்றாண்டில்கூட யாரால், இவ்வளவு மாபெரும் சத்தியத்தை, இவ்வளவு சுருக்கமாய்க் கூற இயலும்? பரலோக ஞானமானது உபாகமம் 6:4-5 ஆம் வசனம் முதலாவதாக பேசப்பட்டப் போது வெளிப்படுகின்றது. இயேசு இதைக் குறிப்பிட்டபோதும், அதே பரலோக ஞானம்தான் வெளிப்பட்டது. இயேசு, எதையும் கூடச் சேர்க்கவில்லை, ஏனெனில் எதுவும் கூடச் சேர்க்கப்பட முடியாது.
அன்பின் அழுத்தத்தை, நாம் தினந்தோறும் மிகத் தெளிவாகப் பார்த்துக்கொண்டு வருகின்றோம். அன்பே பிரதானமான காரியமாகும்! முற்காலங்களின் விசுவாசப் பிரமாணங்களின்படி, அன்பிற்குப் பதிலாக பயமே, அச்சமே காணப்பட்டது; ஏனெனில் அண்ட சராசாரத்தின் சர்வ வல்லமையுள்ள தேவன், பெரும்பாலான மனுக்குலத்தார் நித்திய காலமாய்ச் சித்திரவதைப்பட வேண்டுமென்று, நோக்கங்கொண்டு, மனிதனுடைய சிருஷ்டிப்பிற்கு முன்னதாகவே சித்திரவதைக்கான மாபெரும் நரகத்தை ஆயத்தம் பண்ணி வைத்துள்ளார் என்று நமக்குக் கூறப்பட்டிருந்தது. ஆனால் இப்படியெல்லாம் விசுவாசப்பிரமாணங்களில்தான் காணப்படுகின்றது; வேதாகமமானது, மனிதனுடைய அனைத்து விசுவாசப் பிரமாணங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு நேரெதிர்மாறாக, தேவன் அன்பாக இருக்கின்றார் என்றும், அவர் வெளிச்சம் மற்றும் இரக்கத்தின் பிதாவாக இருக்கின்றார் என்றும், நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் அவரிடமிருந்தே வருகின்றது என்றும் கூறுகின்றது.
உலகத் தோற்றத்திற்கு முன்னதாகவே, கிறிஸ்துவினுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமாகத் தேவனால் ஏற்பாடு பண்ணப்பட்டுள்ள தெய்வீக மன்னிப்புக் குறித்தும்கூட, வேதாகமம் நமக்குக் கூறுகின்றது. பாவங்களுக்கான இந்த மன்னிப்பு என்பது, இப்பொழுது உலகத்திலிருந்து அழைக்கப்படும் சபைக்கு மாத்திரமே உரியதாய்க் காணப்படாமல், இறுதியில் தேவனுடைய அன்பானது, அவருடைய சிருஷ்டிகள் அனைத்தினிடத்திற்கும் வெளிப்படுத்தப்படும் என்று வேதாகமம் நமக்குத் தெரிவிக்கின்றது; அதாவது மனுக்குலம் முழுவதும் தேவனுடைய அன்பு பற்றின அறிவிற்குள்ளாக ஏற்றக்காலத்தில் வந்து, பாவத்தைக் கைவிட்டு, தெய்வீக ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்டு, இப்படியாக மேசியாவின் இராஜ்யத்தின் கீழ், தகப்பனாகிய ஆதாமின் கீழ்ப்படியாமைக் காரணமாக இழக்கப்பட்ட சரீரம், மனம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றிலுள்ள பூரணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு,ம் மாபெரும் ஆசீர்வாதத்தை அடையத்தக்கதாக, இறுதியில் தேவனுடைய அன்பானது, அவருடைய சிருஷ்டிகள் அனைவரிடத்திலும் வெளிப்படுத்தப்படும் என்று நமக்கு வேதாகமம் தெரிவிக்கின்றது.
இயேசு இன்னுமாக, “”உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” (மாற்கு 12:31) என்று கூறினார். மீண்டுமாக, இத்தனை சொற்ப வார்த்தைகளுக்குள், எவ்வளவான காரியங்கள் உரைக்கப்பட்டுள்ளது என்று கண்டு பிரமிப்படைகின்றோம். சிறு விஷயங்கள் மாத்திரமே அடங்கப் பெற்றிருக்கும் நிலையில், எத்தனையோ புத்தகங்கள் பக்கம் பக்கமாக எழுதப்பெற்றுள்ளது. தம்முடைய சிருஷ்டிகளின் நன்மைக்கான அவருடைய அன்புடன் கூடிய வழிநடத்துதல்கள் மூலம் வெளிப்படும் இரக்கத்தையும், பரிவையும் கொண்டிருக்கும் ஒரு தேவனை வேதாகமம் வெளிப்படுத்துவதுபோன்று, வேறெந்த மதமும் காணப்படுவதில்லை. திருப்பி அன்பு செலுத்துவதைக் குறித்து வேறெந்த மதமும், கருத்துக்கூடக் கொடுப்பதில்லை. நம்முடைய சக மனுஷரிடத்தில் நாம் கையாள வேண்டிய இவ்வளவு ஓர் உயர்வான கொள்கையைக் குறித்து, வேறெந்த மதமும் கருத்தும் தெரிவிப்பதில்லை.
கிட்டத்தட்ட 4000 வருடங்களுக்கு முன்னதாக பழமை வாய்ந்த இந்தத் தேவனுடைய பிரமாணத்தை, யூதர்கள் வாயிலாக, மற்ற ஜனங்களும், ஜாதியாரும் அறிய வந்தார்கள் (உபாகமம் 4:6-8). ஆனால் எவரும் இதன் உண்மையான முக்கியத்துவத்தைக் கிரகித்துக்கொள்ளவில்லை. [R5521 : page 251] இந்தப் பிரமாணத்திற்குக் கொஞ்சம் நெருக்கமாக, கன்பியூசியஸ் (Confucius) அவர்கள் எழுதியுள்ளார்; அதென்னவெனில் . . . “”ஒருவன் தனக்கு மற்றவன் என்ன செய்யக்கூடாது என்று எண்ணுகின்றானோ, அதை அவன் மற்றவனுக்குச் செய்யாமல் இருப்பானாக” என்பதேயாகும்; ஓ! ஆனால் எத்துணை வித்தியாசமாய்க் காணப்படுகின்றது; கன்பியூசியஸ் அவர்களின் வார்த்தை செய்யாதே என்றுள்ளது, ஆனால் ஆண்டவருடைய வார்த்தை, “உன்னிடத்தில் நீ அன்புகூருவது போல் பிறனிடத்தில் அன்புகூருவாயாக” என்று உள்ளது.
தேவனுடைய பிரமாணங்கள் தெய்வீகமானவைகள் என்று சொல்வதற்கு, உண்மையில் சில காரணங்கள் இருக்கவே செய்கின்றது. ஒருவேளை மனிதர்களால் இந்த மாபெரும் இரண்டு பிரமாணங்களுக்கு ஏற்ப வாழ முடிந்தால் மற்றும் வாழ விரும்பினால், முள்ளும் குறுக்கும், இடர்பாடுகளுமுள்ள இந்த உலகம் எத்துணை அழகுடையதாய் இருந்திருக்கும்; ஒவ்வொரு மனிதனும் பரம பிதாவைப் பிரதானமாய் அன்புகூர்ந்து, அவருக்கு முழு வல்லமையோடும், அனைத்துத் தாலந்துகளைக்கொண்டு ஊழியம் புரிவதும் மற்றும் தன்னை நேசிப்பது போலவே அயலானையும் நேசித்து, வாய்ப்புக் கிடைப்பதற்கேற்ப, அந்த அயலானுக்கு உதவிட நாடுவதும், இந்த இரண்டு மாபெரும் கற்பனைகளாக இருக்கின்றன! இப்படி இருக்குமானால், உலகம் பரதீசாக இருந்திருக்கும். ஆனால் மேசியாவின் இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்போது, உலகம் பரதீசாக இருக்குமென, நமக்கு வாக்களிக்கப்பட்டிருப்பதற்காக தேவனுக்கு நன்றி. [R5522 : page 251]
தெய்வீக ஏற்பாடானது, ஆதாமின் பாவத்திற்கு ஈடாக, கிறிஸ்துவின் மரணத்தை அருளினது போலவே, பாவம் மற்றும் மரணத்தினுடைய ஆளுகைக்கு ஈடாக, கிறிஸ்துவின் ஆளுகையையும் அருளியுள்ளது. சத்தியத்தையும், நீதியையும் இறுதியில் விரும்பி வாஞ்சிப்பவர்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டு, பூரணப்படுவார்கள் என்றும், நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும், தெய்வீக வாக்குத்தத்தங்களானது நமக்கு நிச்சயமளிக்கின்றது. தேவனுடைய பாதப்படியாகிய பூமியும், மேசியாவினுடைய ஆயிர வருட ஆளுகையின்போது மகிமைப்படுத்தப்படும் என்றும், இறுதியில் பாவத்தை விரும்பி, நீதியை நோக்கி முன்னேறுவதற்கு மறுப்புத் தெரிவிப்பவர்கள், ஜனங்கள் நடுவில் நின்று, இரண்டாம் மரணத்தில் அழிக்கப்படுவார்கள் என்றும், தெய்வீக வாக்குத்தத்தங்களானது நமக்கு நிச்சயம் அளிக்கின்றன. அப்போது “”உம்முடைய ராஜ்யம் வருவதாக உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:10) என்று கூறி நீண்ட காலமாய் ஏறெடுக்கப்பட்ட ஜெபத்திற்கு இணங்க, அந்தச் சந்தோஷமான நாட்கள் வரும். அப்பொழுது சகல முழங்கால்களும் முடங்கும் என்றும், சகல நாவுகளும் அறிக்கைப் பண்ணும் என்றும், முழுப் பூமியும், கர்த்தரின் மகிமையினால் நிரம்பும் என்றுமுள்ள வாக்குத்தத்தங்கள் நிறைவேறும்.
வேதபாரகன், இயேசுவின் பதிலிலுள்ள உண்மையை ஒப்புக்கொண்டான். “”அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத் தவிர வேறொரு தேவன் இல்லை. முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப்பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனப்பலி முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்” (மாற்கு 12:32-33).
“”அவன் விவேகமாய் உத்தரவு சொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார்” (மாற்கு 12:34). இயேசுவின் சீஷனில் ஒருவனாக ஆகத்தக்கதான நிலைமைக்கு மிக அருகாமையில் வேதபாரகன் இருக்கின்றான், என்ற அர்த்தத்தில் ஆண்டவருடைய வார்த்தைகள் காணப்படுகின்றது; அதாவது இராஜ்யத்தை எதிர்ப்பார்க்கிறவர்களில் ஒருவனாகவும், அதற்காக காத்திருப்பவர்களில் ஒருவனாகவும், அதற்காக முயற்சி செய்பவர்களில் ஒருவனாகவும், அதற்காக ஆயத்தப்படுபவர்களில் ஒருவனாகவும் வேதபாரகன் காணப்படுகின்றான் எனும் அர்த்தத்தில் ஆண்டவர் கூறினார். கபடற்ற இந்த உத்தம இஸ்ரயேலர்களைத்தான் இயேசு, இராஜ்யத்தின் சிலாக்கியங்களைப் புறஜாதிகளுக்குத் திறப்பதற்கு முன்னதாக யூத ஜனங்கள் மத்தியிலிருந்து சேர்த்துக்கொள்ள விசேஷித்த விதமாய் நாடினவராகக் காணப்பட்டார். மேசியா தம்முடைய வருகையில் வரும்போது, அவர் ஓர் இராஜ்ய வகுப்பாரைத் தெரிந்துக்கொள்வார் என்றும், அந்த வகுப்பாருக்குத் தெய்வீக வல்லமை அருளப்படும் என்றும் யூதர்கள் புரிந்திருந்தார்கள், இதைத்தான் இயேசுவும் செய்துகொண்டிருந்தார். இயேசுவின் வார்த்தைகளும், அவருடைய போதனைகளும் சிலரை இழுத்துக்கொண்டும், சிலரைத் துரத்தித் தள்ளிவிட்டுக்கொண்டும் இருந்தது. அனைத்து உண்மையுள்ளவர்களும், நேர்மையான இருதயம் கொண்டவர்களும் இந்த வாலிபனான வேதபாரகன்போல், இராஜ்யத்திற்குத் தூரமானவர்களாய் இல்லாமல் காணப்பட்டனர். ஒருவேளை இவர்களது நேர்மையும், உண்மையும், இவர்களைப் பிதாவின் சித்தத்தை அறிவதற்கும், செய்வதற்கும் வைராக்கியங்கொள்ளத்தக்கதாக வழிநடத்தியிருக்குமானால், இவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள். ஏனெனில், “”கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்” (சங்கீதம் 25:14).
எருசலேமின் ஆலயம் இன்னும் புதியதாகவே காணப்பட்டது; மற்றும் அதன் பராமரிப்பு முதலியவைகளுக்காக, பணம் தேவையாய்க் காணப்பட்டது. பணம் கொடுப்பதற்கான சிலாக்கியம் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது; மற்றும் ஜனங்களும் விருப்பத்துடனான இருதயத்தோடு கொடுத்து வந்தார்கள். ஜனங்கள் எவ்வளவுதான் தங்களுடைய முன்னோர்களுடைய பாரம்பரியத்தினால் தவறாய் நடத்தப்பட்டிருந்தாலும், எவ்வளவுதான் தங்களுடைய குருடரான மத வல்லுனர்களின் தவறான வழிநடத்தல் காரணமாய்க் குழப்பப்பட்டிருந்தாலும், ஜனங்கள் தேவனைச் சேவிக்க வேண்டுமென்றும், அவரைத் தொழுதுகொள்ள வேண்டுமென்றும், விருப்பம் கொண்டவர்களாக இருந்தனர். இது அவர்கள் ஆலயத்தின் வாசலில் இருந்த காணிக்கைப் பெட்டியில், பணங்களைக்கொண்டு வந்து, போடுவதில் காண்பித்த விருப்பத்தில் வெளிப்படுகின்றது.
இயேசு காணிக்கைப் பெட்டிகளின் முன்பாக உட்கார்ந்து இருந்து, எப்படி எல்லா நிலை ஜனங்களும் கொடுத்து வந்தார்கள் என்பதைக் கவனித்துக்கொண்டிருந்தார். ஒரு விதவை வந்து, இரண்டு காசைக் காணிக்கைப் பெட்டியில் போட்டாள்; இது பணப்புழக்கத்தில் இருந்த மிகச்சிறிய வெண்கல நாணயங்களாகும்; இந்த ஒரு காசின் மதிப்பு, சென்டில் எட்டில் ஒரு பாக மதிப்பாக (one-eight of a cent) இருந்தது. விதவையானவள் இதை ஆரவாரத்துடன் போட்டாள் என்று எண்ணுவதற்கு அவசியமில்லை; ஏனெனில் பெருமையடித்துக்கொள்ள முடியாதளவுக்கு இவை மிகச்சிறிய நாணயங்களாக/தொகையாக இருந்தது. இயேசு தெய்வீக வல்லமையினால் விதவையினுடைய நிலைமையையும், அவளுடைய காணிக்கையின் அளவையும் அறிந்துக்கொண்டார் என்று நாம் புரிந்துக்கொள்ளலாம். இதை வைத்து, இயேசு அப்போஸ்தலர்களுக்குச் சிறிய ஒரு பிரசங்கம் பண்ணினார். காணிக்கைப் போட்ட மற்றவர்களில் இந்த விதவையான ஸ்திரீயே, தேவனுடைய பார்வையில் அதிகம் கொடுத்தவளாக இருக்கின்றாள் என்று இயேசு கூறினார். இவள் தனக்கு உண்டாயிருந்த அனைத்தையும், அதாவது தன்னுடைய ஜீவியத்திற்கு உண்டாயிருந்த அனைத்தையும் போட்டுவிட்டாள் என்றும், மற்றவர்கள் தங்களுக்கு இருக்கும் திரளானவைகளிலிருந்து காணிக்கைக் கொடுத்தார்கள் என்றும், இந்த இழப்பு அவர்களுக்குப் பெரிய இழப்புமில்லை என்றும், அப்போஸ்தலர்கள் வியக்கத்தக்கதாக இயேசு கூறினார்.
இந்தச் சிறு சம்பவமானது பலிகளையும், ஊழியங்களையும் குறித்ததான கர்த்தருடைய மதிப்பிடுதலை நமக்குக் காட்டுகின்றது. நாம் செய்த (அ) செய்யப் போகின்ற பெரிய காரியங்களைக் கர்த்தர் உயர்வாய் மதிப்பதில்லை. நாம் கர்த்தருக்காகவும், அவருடைய நோக்கங்களுக்காகவும் அன்பும், ஈடுபாடும், சுயத்தைப் பலிச்செலுத்துதலும் கொண்டிருப்போமானால், உலகத்தின் பார்வைக்கு ஒரு பொருட்டாய் இராத, நமது ஜீவியங்களின் மிகச்சிறிய விஷயங்களும், மிகச்சிறிய பலிகளும், மிகச்சிறிய சுயத்தை வெறுத்தல்களும், ஆண்டவரின் பார்வையில் உயர்வானதாய் மதிக்கப்படும்.
இன்னுமாக கர்த்தரை மறுக்கிறதும், அபாத்திரத்தினால் இன்னும் சீக்கிரத்தில் அழிக்கப்படப் போகிறதுமான ஓர் அமைப்பிற்கே, இந்த ஸ்திரீ பணம் கொடுக்கிறாள் என்பதையும் கர்த்தர் அறிந்திருந்தார். மற்றவர்களுடைய நிலைமை என்னவாக இருப்பினும், கர்த்தர் காணிக்கை வழங்கினவரின் இருதயத்தையும், நோக்கத்தையும் பார்க்கின்றார் . . . “”இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்.” மாற்கு 14:8-ஆம் வசனத்தில் வருபவள் இயேசுவின் சீஷி ஆனாள் என்பதை நாம் அறிவோம். சுயத்தைப் பலிச்செலுத்துபவர்களை, கர்த்தர் தம்முடைய சீஷர்களாக ஆக்கிக்கொள்கின்றார்.