R1681 (page 239)
மத்தேயு 2:13-23
“”கர்த்தர் உன் போக்கையும் உன்வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.” சங்கீதம் 121:8
இப்பாடத்தில் கவனிக்க தகுந்த ஐந்து விசேஷமான கருத்துக்கள் உள்ளது. அவை,
1) தேவனுடைய தொலைநோக்குப் பார்வை மற்றும் முன்னேற்பாடு. தேவனிடம் காணப்படும் எதிர்க்காலத்தைப் பற்றின அறிவு, நம்முடைய புரிந்துக்கொள்ளுதலுக்கு அப்பாற்பட்டதாகும். எல்லைகளுடைய மனங்களுக்கு, எல்லைகளே இல்லாத மனதின் ஆழத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது. பிதாவாகிய தேவனுடைய ஞானம் மற்றும் அறிவு, அவருடைய அரசாட்சியில் உள்ள நெருக்கடிகளைத் தீர்க்க மிக வல்லமையுள்ளது என்று அறிந்துக்கொள்ளும் சிலாக்கியம் ஆறுதலாய் இருக்கின்றது. மேலும், மனுஷனுடைய கோபமோ, இருளின் அனைத்து அதிகாரங்களோ, கொஞ்சம் கூடத் தெய்வீகத் திட்டத்தைக் குலைத்துப் போட முடியாது என்பதை அறிவதும் ஆறுதலாய் உள்ளது. மேலும், இதே வல்லமைதான் அவருடைய ஆவிக்குரிய குமாரனை மாம்ச சுபாவத்தில் மாற்றினது; அதனோடு கூட இயேசு தம்மைக் காத்துக்கொள்ள முடியாத குழந்தைப் பருவம் முதல் உலகதிற்கான மீட்பிற்காக அவர் தம்மைப் பலிச் செலுத்த நியமிக்கப்பட்ட காலம்வரை அனைத்து எதிராளிகளிடமிருந்து அவரைப் பாதுகாக்கவும் செய்தது.
2) தேவதூதர்களின் ஊழியத்தை நாம் மறுபடியும் கவனிக்கிறோம். “”இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” (எபிரெயர் 1:14) “”தங்கள் நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்கத் தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்” (1 பேதுரு 1:12). ஆம், உண்மையில் அவர்கள் எந்த வேலையையும் செய்ய ஆயத்தமாய் இருக்கின்றார்கள்.
3) கர்த்தருடைய தூதனின் ஆலோசனைக்கும், எச்சரிப்புக்கும் யோசேப்பு மற்றும் மரியாள் காண்பித்த விசுவாசம் மற்றும் உடனடிக் கீழ்ப்படிதல் கவனிக்கப்படத்தக்கது. அவர்கள் கேள்வி கேட்கவோ அல்லது தயக்கமோ காண்பியாமல், கர்த்தருடைய கட்டளைக்கு உடனடியாக கீழ்ப்படிந்தார்கள். எகிப்துக்கு அவர்கள் புறப்பட்ட போதும், பாலஸ்தீனியாவுக்கு அவர்கள் திரும்பிய போதும் கர்த்தருடைய ஆசீர்வாதமும், பாதுகாப்பும் அவர்களோடு இருந்தது. மேலும் புதிய இராஜாவாகிய அர்கெலாயுவின் அதிகாரத்தினிடமிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கும் போதும், எருசலேமுக்கு அருகாமையில் உள்ள பெத்லகேமுக்குச் செல்வதற்குப் பதிலாக, நாசரேத்துக்குப் போகும் போதும், யோசேப்பு மற்றும் மரியாள் தாங்கள் இஸ்ரயேல் தேசத்தில் எங்குக் குடியிருக்க வேண்டும் என்பதைக் குறித்த தேவனுடைய வழிநடத்துதலை அலட்சியப்படுத்தவில்லை.
4) இந்தச் சூழ்நிலையில், அநேக தீர்க்கத்தரிசனங்களின் நிறைவேறுதலை நாம் காணலாம், அதாவது, அ) “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்பதாகும். இந்தத் தீர்க்கத்தரிசனம் இரண்டு அர்த்தங்களை உடையதாகும். இந்தத் தீர்க்கத்தரிசனம் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்ட இஸ்ரயேலையும், ஏரோதின் மரணத்திற்குப் பின்பு தேவனுடைய குழந்தையாகிய இயேசு, எகிப்திலிருந்து புறப்பட்டு வருவதையும் குறிக்கின்றது (யாத்திராகமம் 4:22,23; மத்தேயு 2:15). மேலும், எகிப்து உலகத்தையும் அடையாளப்படுத்துகின்றது. கிறிஸ்துவும் தேவனுடைய முழுச் சபையும் அழைக்கப்பட்ட, வாக்களிக்கப்பட்ட சந்ததியாய் இருக்கின்றார்கள். ஆ) நாசரேத்துக்கு வந்து குடியேறின சம்பவம், மற்றொரு தீர்க்கத்தரிசனத்தின் நிறைவேறுதலாக இருந்தது, “நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கத்தரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது” (மத்தேயு 2:23). பெத்லகேமில் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவமும், தீர்க்கத்தரிசனமாக உரைக்கப்பட்டிருந்தது (எரேமியா 31:15; மத்தேயு 2:17,18). இந்தத் தீர்க்கத்தரிசனங்கள் அனைத்தும் சகலத்தையும் அறிந்திருக்கும் தேவனுடைய அறிவைச் சுட்டிக்காட்டுகின்றது.
5) குழந்தையாய் இருந்த மீட்பரைப் பாதுகாக்க தேவன் எடுத்துக்கொண்ட பாதையும், முறையும், எவ்வித ஒழுங்குகளையும் மீறவில்லை என்பதும் கவனிக்கப்படத்தக்கது. தேவனுடைய கரத்தில் அனைத்து வல்லமைகள் இருந்தபோதிலும், அவர் ஏரோதைக் கொன்று போடவோ, அவனது அதிகாரத்தில் இடைபடவோ முற்படவில்லை. இத்தகைய அதிகாரங்களைத் தடைபண்ணுவதற்கான காலம், இன்னும் வரவில்லை. உலகத்தின் இராஜ்யங்களுக்கான [R1682 : page 239] காலமானது, புறஜாதியாரின் காலம் நிறைவேறும் அளவு நீடிக்கப்பட்டுள்ளது. இவைகள் தெய்வீகத் திட்டத்தை இடையூறு பண்ணாத வரையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் இடையூறு பண்ணும் பட்சத்தில், தேவன் அதற்குத் தடை விதிக்கின்றார் அல்லது நன்மைக்கு ஏதுவாக மாற்றுகின்றார்.
ஆனால், இங்குத் தேவன், இரட்சிப்பின் திட்டத்திற்கு மையமாக இருக்கும் தம்முடைய குமாரனைப் பாதுகாப்பதற்காகத் தலையிட்டார். ஆனால் இந்தக் குமாரன், உலகத்தின் மீட்பிற்காக தம்மைப் பலிச் செலுத்தும் காலம் வந்தபோது, இவ்வுலகத்தின், இருளின் அதிகாரிகளுடைய வழித் திறக்கப்பட்டது. பின்னர், அவர்கள் தேவனுடைய குமாரனைச் சிலுவையில் அறையும்படி அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஏனெனில், அநேகருக்கான ஈடுபலியாக தம்மை ஒப்புக்கொடுக்கவே அவர் உலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார். அவருடைய வேளை வந்தபோது, அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டார்கள் (மத்தேயு 20:28; யோவான் 2:4 7:6; லூக்கா 22:53). இராஜாவுடைய கோபத்துக்கு தப்பித்துக்கொள்ள முடியாத குழந்தைகள் குறித்த அழுகையும், புலம்பலும், தவிக்கும் சிருஷ்டிகளுக்கு அடையாளமாக இருக்கின்றது. இது, “”திரும்பக் கொடுத்தலின் காலங்கள்” வரும் வரையிலும் நன்மைக்கென்று அனுமதிக்கப்படும் விஷயங்களுக்கு அடையாளமாக இருக்கின்றது.
நம்முடைய ஆதார வசனம், ஆவிக்குரிய இஸ்ரயேலர்களாகிய, கர்த்தருடைய ஜனங்களுக்குரிய விசேஷித்த வார்த்தையாகும். புதுச் சிருஷ்டிகளாகிய அவர்கள், கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கும் வரையிலும், அவர்கள் தேவனால் பாதுகாக்கப்படுவார்கள்.
“