R1415 (page 190)
அப்போஸ்தலர் 1:1-12
“”இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.” ― அப்போஸ்தலர் 1:9
வசனங்கள் 1, 2. அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகத்தை எழுதினவர் லூக்கா ஆவார்; இதற்கு முன்பு இவர் எழுதின கட்டுரையானது, லூக்கா எழுதின சுவிசேஷம் என்று அழைக்கப்படுகின்றது.
வசனம் 3. லூக்கா 24-ஆம் அதிகாரத்தில், நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து வந்த நாற்பது நாட்களுடைய சம்பவங்கள், அநேகம் பதிவு செய்யப் பெற்றிருந்தாலும் அனைத்தும் சொல்லப்படவில்லை. அப்போஸ்தலர் 1-ஆம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள காரியங்களானது, சுவிசேஷ யுகத்தினுடைய ஆரம்ப வேலையை விவரிக்கிறதாயும் இருந்து, அந்த நாற்பது நாட்களளவும், நமது ஆண்டவரினால் கொடுக்கப்பட்டப் போதனைகள், “”தேவனுடைய இராஜ்யத்துக்குரியவைகள்” என்று நமக்குத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது.
லூக்கா அவர்கள் விரிவான விவரங்களை நமக்குக் கொடுக்கவில்லை; எனினும் சீஷர்களுக்கு அதிகமான அறிவுரைகள் தேவைப்பட்டிருக்குமென நாம் எண்ணுகின்றோம்; ஏனெனில் மேசியாவின் கீழ் இஸ்ரயேல், பூமியிலேயே பிரதான தேசமாக உயர்த்தப்படும் (இந்தத் தேசத்தை உலகத்திற்குத் தம்முடைய பிரமாணங்களை அறிவிக்கிற கருவியாக பயன்படுத்தி, இவ்விதமாக பூமியின் குடிகள் அனைத்தும், ஆபிரகாமின் சந்தத்திக்குள்ளாக ஆசீர்வதிக்கப்படும்) என்று யூதர்கள் அனைவரும் கொண்டிருந்த பொதுவான நம்பிக்கையை மாத்திரம் சீஷர்கள் கொண்டிராமல், இன்னுமாகக் கர்த்தருடைய மரணத்திற்கு முன்னதாக, கர்த்தர் பண்ணின விசேஷித்த வாக்குத்தத்தங்களையும் மனதில் கொண்டவர்களாய் இருந்தனர்; அதாவது அவர்கள், அவருடைய இராஜ்யத்தில், இஸ்ரயேலின் சிங்காசனங்களில் உட்காருவார்கள் என்று கர்த்தர் கொடுத்திட்ட வாக்குத்தத்தங்களையும் மனதில் கொண்டவர்களாய் இருந்தனர். சீஷர்கள் கிறிஸ்துவின் இராஜ்யத்தில் அவருடன் உடன்சுதந்தரர்களாகக் காணப்படத்தக்கதாக, தங்களுடைய தொழில்களைக் கைவிட்டு, சக மனிதர்களுடைய ஏளனங்களைச் சகிக்கும் அளவுக்கு, இராஜ்யத்தைப் பற்றியதான இந்த வாக்குத்தத்தங்கள், அவர்களுடைய மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாய் இருந்தது. ஆண்டவரும் அவர்களுடைய இந்த நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் உற்சாகமூட்டவே செய்தார். அந்த இராஜ்யத்தில் எவன் பெரியவனாய் இருந்து, அவருடைய வலது, இடது பக்கத்தில் இருப்பான் என்பது தொடர்புடைய அவர்களுடைய வாக்குவாதங்களுக்கு எதிராக மாத்திரமே, அவருடைய கடிந்துக்கொள்ளுதலும் காணப்பட்டது (மத்தேயு 18:1-4; மாற்கு 9:33-37; லூக்கா 22:24-26). [R1415 : page 191]
கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டபோது, சீஷர்களுடைய இந்த நம்பிக்கைகளும், எதிர்ப்பார்ப்புகளும் நொறுங்கிபோயின. ஆகவே தங்கள் கர்த்தர் உயிர்த்தெழுந்துவிட்டார் என்று அவர்கள் உணர்ந்துக்கொண்ட பிற்பாடு, அவர்களுடைய நினைவுகளும், கேள்விகளும் சரி, அவருடைய போதனைகளும் சரி, தேவனுடைய இராஜ்யத்துக்கடுத்தவைகளாகவே இருந்திருக்கும். இஸ்ரயேல் தேசமானது, அவருடைய இராஜ்யத்தில் உடன்சுதந்தரர் ஆகுவதிலிருந்து, புறக்கணிக்கப்பட்டு விட்டனர் என்று சீஷர்களுக்கு விளக்குவது அவசியமாய் இருந்தது, ஏனெனில் இஸ்ரயேல் தேசத்தார் சுபாவத்தின்படி ஆபிரகாமின் சந்ததியாராக இருந்திட்டாலும், அவர்களிடம் ஆபிரகாமுக்கிருந்த விசுவாசம் இல்லை; ஆகையால் அவர்கள் ஆபிரகாமுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தத்தின்படி, கிறிஸ்துவுடன் உடன் சுதந்தரர்களாக அங்கீகரிக்கப்பட முடியாது. கொஞ்சமாய் (கிட்டத்தட்ட ஐந்நூறு சகோதர சகோதரிகளாக) இருந்த உண்மையுள்ள சீஷர்களிடம், அவர்கள் இஸ்ரயேல் தேசத்தாரோடு சேர்ந்து புறக்கணிக்கப்படவில்லை என்றும், முன் தீர்மானிக்கப்பட்ட எண்ணிக்கையானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வரையிலும், இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதற்கான காலம் தாமதிக்க வேண்டியதாய் இருப்பினும், அவர்கள் இன்னமும் இராஜ்யத்தின் சுதந்தரர்களாகவே காணப்படுகின்றனர் என்றும் தெரிவிப்பது அவசியமாய் இருந்தது. அவர்கள் கனத்திற்கும், இராஜ்யத்தினுடைய வல்லமையின் மகிமைக்கும் உயர்த்தப்படுவது தாமதமாக நடைபெறும் என்றாலும், அவர்கள் வேகமாகவே பிதாவினால் அங்கீகரிக்கப்பட்டு, தேவனுடைய குமாரர்களெனவும், வருங்கால கிறிஸ்துவுடன் உடன் சுதந்தரர்களெனவுமான ஆவியின் ஆசீர்வாதங்கள் அருளப்படுவார்கள்.
ஆகையால், நாம் 4, 5-ஆம் வசனங்களை வாசிக்கிறபடி, அவர்களுக்கு யோவான் ஸ்நானனாலும், தம்மாலும் ஏற்கெனவே கூறப்பட்டவைகளைச் சுட்டிக்காட்டி, அவர்கள் எருசலேமிலேயே தங்கியிருந்து, புத்திரர்களாகவும், சுதந்தரர்களாகவும், தேவனுடைய ஆவியினால் ஜெநிப்பிக்கப்படும்படிக்கு எதிர்ப்பார்த்து, காத்திருக்கும்படி, அவர்களுக்கு அறிவுரைக் கூறினார். [1416 : page 191]
வசனங்கள் 6-8. “”சில நாளுக்குள்ளாக” அவர்கள் கிறிஸ்துவின் இராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் கூட, வருங்கால உடன்சுதந்தரர்களாக தெய்வீக அங்கீகரிப்பைப் பெற்றுக்கொள்வார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்ட பிற்பாடு, அவர்களுடைய இருதயத்தை அழுத்திக்கொண்டிருந்த கேள்வியைக் கேட்டார்கள்; அதாவது இராஜ்யத்தின் காரியம் என்ன? எங்களுடைய அங்கீகரிக்கப்படுதலோடுகூட, இராஜ்யமும் ஒரே வேளையில் வருமா? இராஜ்யமும் கொஞ்ச நாளுக்குள்ளாக வந்துவிடுமா? என்ற விதத்தில் கேள்வி கேட்டார்கள்.
ஆண்டவருடைய பதில் கடிந்துகொள்ளுதலாகவோ அல்லது அவர்களது எதிர்ப்பார்ப்பிற்கு எதிர்மாறானதாகவோ அல்லது அவர்களது எதிர்ப்பார்ப்பினைத் திருத்தும் வண்ணமாகவோ காணப்படவில்லை. தேவனுடைய இராஜ்யம் முழுமையாய் ஸ்தாபிக்கப்படுவதற்குரிய காலங்களும், வேளைகளும், பிதாவுக்கு அடுத்த காரியம் என்றும், அக்காரியங்களை அவர்கள் அப்போது அறிந்துக்கொள்வது அவர்களுக்கு ஏற்றதாய் இராது என்றும், ஆனால் அவர்கள் மீது பரிசுத்த ஆவி வரும்போது, அதாவது இனி வேலைக்காரர்கள் என்றில்லாமல், அவர்களைக் குமாரர்களென முத்திரிக்கும் புத்திர சுவிகாரத்தின் ஆவியை அவர்கள் பெற்றுக்கொள்ளும்போது, அவர்கள் தேவனுடைய ஆழங்களைப் புரிந்துக்கொள்ளும் பெலனை அடைந்து, (படிப்படியாக) சகல சத்தியத்திற்குள்ளாகவும் நடத்தப்பட்டு, வரப்போகிற காரியங்களைக் குறித்து அறிவிக்கப்பெறுவார்கள் என்று மாத்திரமே கூறினார்; இன்னுமாக அவர்கள் உலகமெங்கும் அவருக்குச் சாட்சிகளாகக் காணப்பட வேண்டும்; அதாவது, அவர் அவர்களுக்குப் போதித்த சத்தியத்திற்குச் சாட்சிகளாகக் காணப்பட வேண்டும் என்றும் கூறினார்; அதாவது இயேசு உலகத்தின் இராஜாவாக இருக்கப் போகின்றார் என்றும், பிதாவாகிய தேவனுடைய அபிஷேகிக்கப்பட்டப் பிரதிநிதியாகக் காணப்படப் போகின்றார் என்றும், அவருடைய இராஜ்யத்தின் கீழ், சகல ஜாதிகளும், இராஜ்யங்களும் பணிவிடை செய்து, அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கும் என்றுமுள்ள சத்தியங்களுக்குச் சாட்சிப் பகருபவர்களாக அவர்கள் காணப்பட வேண்டும். உலகத்தை ஆசீர்வதிப்பதற்கான அவருடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுதல் தொடர்புடைய, தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அனைத்துமே உண்மை என்று அவர்கள் சாட்சிப் பகர வேண்டும்; இன்னுமாக இம்மாபெரும் காரியங்கள் நிறைவேற்றப்படுவதற்கு, நமது கர்த்தருடைய மரணமே வழிவகையாக இருக்கின்றது என்றும், மனுக்குலத்தின் பாவங்கள் மற்றும் பாவத்திற்கான தண்டனைகள் இரத்துச் செய்யப்படுவதற்கு முன்னதாகவும், பாவிகள் ஆசீர்வதிக்கப்பட்டு, தெய்வீகத் தொடர்பிற்கும், தயவிற்கும், சீர்ப்பொருந்தப்படுவதற்கு முன்னதாகவும், மேசியா உலகத்தின் பாவங்களுக்காக மரிப்பது அவசியமானது என்றுமுள்ள சத்தியங்களை அவர்கள் சாட்சிப்பகர வேண்டும். “”உம்முடைய இராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுவதுபோல, பூமியிலும் செய்யப்படுவதாக” என ஆண்டவர் கற்பித்துத் தந்த பிரகாரமாய், தொடர்ந்து ஜெபிப்பதற்கு விசுவாசிகளுக்கு அவர்கள் கூறவேண்டியவர்களாய்க் காணப்பட்டனர். அவருடைய வார்த்தைகளோ (அ) வாக்குத்தத்தங்களோ, எவைகளும் பொய்யானவைகள் அல்ல என்றும், வாக்களிக்கப்பட்டுள்ள காரியங்கள் அனைத்தும் “”ஏற்றவேளையில்” நிறைவேற்றப்படும் என்றும் அவர்கள் சாட்சிப்பகர வேண்டும்.
வசனங்கள் 9-12. நமது கர்த்தருடைய பரமேறுதலானது, எவரும் பார்க்காமலேயே நடைப்பெற்றிருக்கலாம்; ஏனெனில் அவர் உயிர்த்தெழுந்தது முதல், அவர் ஓர் ஆவிக்குரிய ஜீவியாகக் காணப்படுகின்றார்; மற்றும் “”ஆவிக்கு மாம்சமும் எலும்பும் கிடையாது.” அவர் மாம்சத்தில் கொலையுண்டது உண்மைதான், ஆனால் அவர் ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார். அவர் ஆவியில் பிறந்திட்டார்; மரித்தோரிலிருந்து முதல் பிறந்தவரானார். மேலும் மாம்சத்தில் பிறந்தது மாம்சத்திற்குரியதாகவே காணப்படுவது போலவே, ஆவியில் பிறந்ததும் ஆவிக்குரியதாகவே காணப்படும்; மற்றும் ஆவியில் பிறந்தது, காற்றைப்போல் மனிதனுடைய கண்களுக்குத் தெரியாமலே வரும், போகும் (யோவான் 3:8). ஆனால் ஓர் ஆவிக்குரிய ஜீவியாக உயிர்த்தெழுந்திட்ட நமது கர்த்தர், தம்முடைய உயிர்த்தெழுதலை நிரூபிக்கும்படியாக பல்வேறு சரீரங்களை எடுத்து, பல்வேறு தோற்றங்களில் (சிலசமயம் சிலுவையில் அறையப்பட்டது போன்ற சரீரத் தோற்றத்திலும்) காட்சியளித்துத் தோன்றினார். ஆகவே அவர் தாம் உயிர்த்தெழுந்துள்ளார் என்ற உண்மையைத் தம்முடைய சீஷர்களுக்கு நிரூபிக்கத்தக்கதாக, அவர் பரமேறும் போதும், தம்மை ஒரு மாம்ச சரீரத்தில் அவர்களுக்குக் காண்பித்தார்.
கர்த்தர் பரமேறுவதற்கு முன்னதாக, நாற்பது நாட்களாக சீஷர்களோடு கூடவே காணப்பட்டார்; ஆனாலும் அவர்களுக்கு ஏழுமுறை மாத்திரமே கண்களுக்குப் புலப்பட்டார் என்றும், அதுவும் கொஞ்சம் நேரம்தான் கண்களுக்குப் புலப்பட்டார் என்றும், உலகத்தின் காரியத்தில் அவர் ஏற்கெனவே கூறின பிரகாரம், “”இன்னும் கொஞ்சம் காலத்திலே உலகம் என்னைக் காணாது” என்பதே நடந்தது என்றுமுள்ளவைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கர்த்தர் தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பிற்பாடு அவர் காட்சியளிக்கத் தோன்றின விதம் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல், “”அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்… பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்” என்று விவரிக்கின்றார் (1 கொரிந்தியர் 15:6-8). மாம்ச தோற்றத்தில், மரியாளுக்குத் தோட்டக்காரன்போல் தோன்றினவரும் இயேசுதான்; எம்மாவுக்கு இரண்டு சீஷர்கள் போய்க்கொண்டிருக்கையில்கூட அந்நியன்போல் தோன்றி வந்தவரும் இயேசுதான்; கதவுகள் பூட்டப்பட்டிருக்க, சீஷர்கள் நடுவில், ஆணி மற்றும் ஈட்டி ஊடுருவின சரீரத்தை, தம்முடைய உயிர்த்தெழுதலுக்கு நிரூபணமாக எடுத்துக்கொண்டு காட்சியளித்துத் தோன்றினவரும் இயேசுதான்; தாம் இப்பொழுது மிகவும் உயர்த்தப்பட்டுள்ளார் என்பதையும், மாம்சம் மற்றும் எலும்புகளுள்ள சரீரத்திலிருந்து வேறுபட்ட சரீரம் கொண்டுள்ளார் என்பதையும் அவர்களுக்கு காண்பிக்கத்தக்கதாக, அவர்கள் கண்கள் முன்னதாகவே மாம்சத்தையும், எலும்புகளையும் காற்றோடே கலக்கப்பண்ணி, அவர்கள் பார்வையிலிருந்து மறைந்து போனவரும் இயேசுதான். இனி ஒருபோதும் மாம்சமும் எலும்பும் கொண்டிராதவருமான இதே இயேசுதான், உயிர்ப்பிக்கிற ஆவியாக, [R1416 : page 192] தர்சு பட்டணத்தானாகிய சவுலுக்குக் காட்சியளித்தார்; ஆனாலும் இத்தருணத்திலோ, அவர் தம்முடைய ஆவிக்குரிய சரீரத்தை, மாம்ச சரீரத்தைக்கொண்டு திரையிடாமல், ஆவிக்குரிய ஜீவியினுடைய மகிமையை, சஷண நேரம் காண்பித்தார்; இதனால் சவுல், கீழே விழுந்து, தன்னுடைய பார்வையை இழந்தவனானார் (அப்போஸ்தலர் 26:13-14; 9:8). இவரே மரித்தோரிலிருந்து, ஓர் ஆவிக்குரிய ஜீவியாக எழுப்பப்பட்ட மகிமையடைந்த இயேசு ஆவார்; இராஜ்யத்திற்கடுத்த காரியங்களை இப்போது சீஷர்களுக்குப் போதிக்கத்தக்கதாக, அந்தத் தம்முடைய ஆவிக்குரிய சரீரத்தினுடைய மகிமைகளை, மாம்ச சரீரத்தின் கீழாக சீஷர்களிடமிருந்து திரையிட்டு மறைத்தார் (1 கொரிந்தியர் 15:40-44). ஆனால் அவர் தேவதூதர்கள் அறிவித்தப் பிரகாரம் மீண்டுமாக வருவார்.
அநேகர் அப்போஸ்தலர் 1:11-ஆம் வசனத்தின் காரியங்களினால் இடறல் அடைகின்றனர்; அதுவும் இரண்டாம் அட்வண்டிஸ்ட் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் நமது அருமையான சகோதரர்களே விசேஷமாய் இடறிப்போய்விடுகின்றவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் இவ்வசனம் “”Ye shall see him come in like manner as ye have seen him go” என்று இருப்பதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் வசனம் இப்படியாக இருப்பதில்லை. அன்று அவரைப் பார்த்திட்ட சீஷர்கள் எப்போதோ இறந்து போய்விட்டனர், அன்று இருந்த மற்றவர்களும் இறந்து போய்விட்டனர், ஆகையால் அவர் திரும்பி வரும்போது, இவர்களால் அவரைப்பார்க்க முடியாது. தேவதூதர்கள் அவர் வருவதை எவர்கள் பார்க்கப் போகின்றார்கள் என்று சொல்லவில்லை; மாறாக அவர் எந்த விதத்தில் போனதை அவர்கள் கண்டார்களோ, அந்த விதத்திலேயே அவர் திரும்ப வருவார் என்றுதான் தேவதூதர்கள் சொன்னார்கள்.
அவர் போன விதம் என்ன? என்று இப்போது பார்க்கலாம். அவர் பரமேறும் விதத்தில் குறிப்பிடத்தக்கதாய் என்ன இருக்கின்றது? இது எதுவாக இருப்பினும், இந்தக் குறிப்பிடத்தக்கதான விஷயமே, அவர் திரும்பி வரும்போதும் குறிப்பிடத்தக்கதாய்க் காணப்படும். அவர் உலகத்தால் பார்க்கப்படாத விதத்தில், உலகத்தால் அறியப்படாத விதத்தில், உலகத்தால் நம்பப்படாத வண்ணம், அமைதலான விதத்தில் பரமேறிச் சென்றுவிட்டார் என்பதை நாம் கவனிக்கின்றோம். எனினும் அவர் பரமேறின காரியம், சகோதரர்களால் அறியப்பட்ட காரியமே; மேலும் அவர் பரமேறின காரியமானது சகோதர சகோதரிகளால் பார்க்கப்பட்டது மற்றும் நம்பவும்பட்டது. ஆகையால் அவரது இரண்டாம் வருகையும் திருடன் வருகிற விதமாக இரகசியமாக, எவ்விதமான வெளியரங்கமாக வெளிப்படுத்துதல்கள் இல்லாமல், உலகத்தால் அறியப்படாமல், ஆனால் இருளில் இல்லாதவர்களாகவும், வெளிச்சத்தின் பிள்ளைகளென வெளிச்சத்தில் நடக்கிறவர்களாகவும் இருக்கும் சகோதர சகோதரிகளினால் மாத்திரமே அறியப்பட்டும் இருக்கும் (1 தெசலோனிக்கேயர் 5:1-5).