R4711 (page 359)
மத்தேயு 26:31-35, 69-75
“”இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.”” 1 கொரிந்தியர் 10:12
கிறிஸ்துவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களிலேயே மிகவும் உதவியானவர்களில், ஒருவராக பரிசுத்தவானாகிய பேதுரு காணப்படுகின்றார். அவருடைய மனித சுபாவம், அதன் பலம் மற்றும் பெலவீனங்கள் குறித்ததான வேதவாக்கியங்களின் வெளிப்படுத்தல்களே, நமக்கான அவருடைய உதவியின் இரகசியமாகக் காணப்படுகின்றது. பன்னிரண்டு அப்போஸ்தலர்களிலேயே போதகரை, தேவனால் அனுப்பப்பட்ட மேசியா என்று முதலாவதாக அறிவித்தவர் இவரே ஆவார். பன்னிருவரில் இவர்தான் முதலாவதாக அவரை மறுதலிக்கவும் செய்தார். பன்னிருவரில் இவர் மாத்திரமே போதகரைக் காப்பாற்றுவதற்காக, தனது பட்டயத்தை உருவினவரும் ஆவார். மேலும், இவர் மாத்திரமே பின்னர் போதகரை அறியேன் என்று சூழுரைக்கவும் செய்தார். தெய்வீக ஏற்பாட்டின்படி, இராஜ்யத்திற்கான பரம அழைப்பின் கதவுகளைத் திறக்கும்படி, இவரிடமே திறவுகோல்கள் கொடுக்கப்பட்டது. பெந்தெகொஸ்தே நாளின்போது, இவர் வல்லமையின் திறவுகோல்களில் ஒன்றைப் பயன்படுத்தி, மகிமை, கனம் மற்றும் அழியாமைக்குள் பிரவேசிப்பதற்கான வழி திறக்கப்பட்டுள்ளதைக் குறித்து, தைரியத்துடன் யூதர்களுக்கு அறிவித்தார். கொஞ்சம் காலத்திற்குப் பிற்பாடு, நியமிக்கப்பட்ட காலத்தில், அதே பரம அழைப்பிற்கான கதவை, இவர் புறஜாதிகளுக்குத் திறந்து வைத்தார்; மேலும் இது இவர் கொர்நேலியுவுக்குப் பிரசங்கம் பண்ணி, அவர் முதல் புறஜாதியாக தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டபோது சம்பவித்தது. இச்சம்பவமானது, முற்காலங்களில் யூதர்களையும், புறஜாதிகளையும் பிரித்துவைத்திருந்த தடுப்புச் சுவரானது தகர்க்கப்பட்டதற்கான நிரூபணமாகவும் அமைகின்றது. இத்தகைய சகல அறிவையும், விசேஷமான வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்டிருந்தாலும், இந்த மாபெரும் மனுஷன் புறஜாதிகளுக்குப் போதுமான அளவு தேவனுடைய கிருபை கொடுக்கப்பட்டுள்ளது எனும் காரியத்தைப் பொருட்படுத்தாததுபோல, பாசாங்குச் செய்யும் அளவுக்கும் நடந்தும் கொண்டார். மேலுமாக, யூதர்கள் மற்றும் புறஜாதிகளுக்கு இடையில் வேற்றுமை கண்டு, கர்த்தருக்கு முன்பு அவர்கள் இருவரும் சரிசமமாகக் கருதப்படுவதைப் பொருட்படுத்தாதது போல பாசாங்குச் செய்யும் அளவுக்கும் போய்விட்டார்.
அனைத்து அனுபவங்களிலும் பரிசுத்தவானாகிய பேதுரு அவருடைய இருதயத்தின் ஆழத்தில் தேவனுக்கும், சத்தியத்திற்கும், நீதிக்கும் உண்மையாய் இருக்கின்றார்; ஆனால் அவருடைய குணலட்சணங்களிலுள்ள களங்கம், தவறுகள், பெலவீனங்கள் ஆகியவை அவருடைய மாம்சத்தினுடையவைகளே தவிர, அவருடைய உண்மையான இருதயத்தின் நோக்கமாக இருந்ததில்லை என்பது வெளிப்படுகின்றது. போதகரை மறுதலித்ததின் காரணமாக அவர் மிகவும் மனங்கசந்து அழுதார். மேலும், புறஜாதிகளை ஏற்றுக்கொள்வதில் அவர் தவறினதால், மிகுந்த தாழ்மையுடன் தன்னை முழுமையாகத் திருத்திக்கொண்டார். பரிசுத்தவானாகிய பேதுருவின் மனித சுபாவத்தின் வெளிப்படுத்தல்கள், நம்மை அவர்பால் கவரச்செய்தது போன்றே, இஸ்ரயேலின் இராஜாவும், தீர்க்கத்தரிசியுமான தாவீதினிடத்திலும் நாம் கவரப்படுகின்றோம். தவறு செய்யாமல் இருக்க அவர் (தாவீது) ஒன்றும் பரிசுத்தவான் அல்ல. அவரை ஒரு சக மனிதனாகக்காண முடியாத அளவிற்கு, அவர் (தாவீது) மீதியான மனுக்குலத்திற்கு அப்பாற்பட்ட ஜீவியும் அல்ல. எனினும், அவரை வெறுக்கத்தக்க அளவுக்கு, அவர் மதிப்புக் குறைந்தவரும் அல்ல. தேவன் பேரிலும், நீதியின் பேரிலும் இருதயத்தில் அவர் (தாவீது) கொண்டிருந்த உண்மை குறித்த திரளான ஆதாரங்களானது, அவருடைய பெலவீனங்களை முழுமையாக ஈடு செய்கின்றதாக அமைகின்றது. இடறி விழுதல் மற்றும் சீர்ப் பொருந்துதல் குறித்ததான அவருடைய (தாவீது) அனுபவங்களினால், சங்கீதங்கள் மிகவும் நிரப்பப்பட்டிருப்பதினால், அவைகள் தேவனிடத்தில் உண்மை கொண்டிருக்கும் ஒவ்வொரு இருதயத்திலும், அதேசமயம் பாவம் மற்றும் பெலவீனத்தின் அனுபவங்களை வெவ்வேறு அளவுகளில் கொண்டிருக்கும் ஒவ்வொரு இருதயத்திலுமுள்ள, உள் உணர்ச்சியின் நரம்பைத் தொடக்கூடியதாக இருக்கின்றது.
நமது கர்த்தரின் ஆரம்ப பிரயாண நாட்களில், அவரோடுகூடக் காணப்பட்ட மனிதர்கள் மத்தியில் பேதுரு இன்றளவும் மிகவும் வசீகரிப்பவராகக் கருதப்படுகின்றார். பேதுருவைக் குறித்து, ஜி.சி. மோர்கன் (G. C Morgan) அவர்கள் இப்படியாகக் கூறுகின்றார்: “”பேதுருவுக்குள்ளாக, நமக்கொரு மாபெரும் மனிதன் புதிய ஏற்பாட்டில், வெளிப்படுத்தப்பட்டுள்ளான் என்று என்னால் இப்பொழுது நம்ப முடிகின்றது. ஒருவனை மாபெரும் மனுஷன் என்று கணிப்பது அவனுடைய சாதனைகளின் அடிப்படையிலோ அல்லது அவனுடைய தனித்துவமான ஒரு திறமையின்/பண்பின் அடிப்படையிலோ அல்லாமல், அவனுடைய மனித சுபாவத்தின் மிக ஆச்சரியமான [R4712 : page 359] வெளிப்படுத்தலின் அடிப்படையிலே என்று நான் கூறுகின்றேன். அறிவுடைய இந்த மனுஷன் தொடர்ந்து கண்மூடித்தனமாக/மடத்தனமாக தவறு செய்து கொண்டிருந்தார். உணர்ச்சிவசப்படும் இந்த மனுஷன், தான் உதவ வேண்டும் என்று விரும்பின, அதே காரணத்திற்கு எதிராக அவர் செயல்பட்டதினால் மிகுந்த குற்ற உணர்வுக்குள்ளாகவும் ஆனார்.””
பரிசுத்தவானாகிய பேதுருவைக் குறித்து, சவுதோஸ் (Southouse) என்பவர் இப்படியாகக் கூறுகின்றார்: “”பேதுரு ஒரு சராசரியான மனுஷன் ஆவார். இக்காரணத்தினால் அவர் நமக்கும், அவரோடு கூட இருந்தவர்களுக்கும் (மற்ற அப்போஸ்தலர்களுக்கும்) கூடச் சரிசமமாவார். ஆனால், சராசரியான மனிதர்களுக்கும்கூட, அவர்களுடைய வாழ்க்கையில் சிறப்பான தருணங்கள் உண்டு. அதாவது பரிசுத்தவானாகிய பேதுருவின் விஷயத்தில், அவர் தண்ணீரின் மீது நடக்க முயன்றார். இவ்விடத்தில் தன்னால் முடியாத ஒரு காரியத்தைச் செய்ய முயன்றார். தனக்கு எவ்வித அனுபவமும் இல்லாத ஒன்றைச் செய்யும்படிக்குப் பேதுரு கடந்துப்போனார். நாம் அறிந்திருக்கும் ஆண்கள் மற்றும் ஸ்திரீகள் மீது நாம் கணநேரம் கண்ணோட்டம் இடுகையில், அவர்களின் திறமையின் அடிப்படையில் அவர்கள் இன்னென்ன காரியங்களைச் செய்துவிடுவார்கள் என்று தீர்க்கத்தரிசனம் கூறுவதுபோன்று கூறுவது, எப்போதும் (சாதகமாக) அப்படியே நடந்துவிடும் என்பது இல்லை என நாம் அறிந்திருக்கின்றோம். ஏனெனில் உலகத்திலேயே (திறமைகளில்) மிகக் குறைவான மனிதனால், அசாதாரணமான காரியங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது.””
பரிசுத்தவானாகிய பேதுருவைக் குறித்து, டாக்டர் டேவிஸ் (Dr. Davis) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்: “”பேதுரு புத்திக்கூர்மை உடையவர். மற்ற அப்போஸ்தலர்களைக் காட்டிலும் இவரே இயேசுவிடம் அநேக கேள்விகளைக் கேட்டுள்ளார். கேள்விகள் கேட்கும் தன்மையானது, புத்திக்கூர்மையின் வெளிப்படுத்தலாகும். கேள்வி கேட்பது என்பது, அறியாமையின் வெளிப்படுத்தலாகக்கூட இருக்கலாம். ஆனால், ஒருபோதும் கேள்வி கேட்காத மனிதன் நிச்சயம் அறிவாற்றலில் குறைவுபட்டவனாகவே இருக்கின்றான்… பேதுரு, நல்ல இருதயம் கொண்டவரும், துக்கத்தால் விம்மி அழுகிறவரும், சிந்திக்காமல் செயலாற்றுகிறவரும் ஆவார். அவருடைய பேரார்வம் எனும் பண்பிலே, அவருடைய நற்பண்புகளும், அவருடைய தவறுகளும், இரண்டும் பொதுவான வேரைக் கொண்டுள்ளது. பேதுருவிடம் அவசர செயல்பாடு எனும் களை இருக்கவே, இதனோடுகூட அவருடைய ஜீவியத்தில் கொழுந்துவிட்டு எரியும் அன்பு மற்றும் சத்தியத்தை [R4712 : page 360] உடனடியாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையாகிய அழகிய செடியும் மிகப் பலமாக வளர்ந்ததே, அவரிடத்தில் பாராட்டத்தகுந்த விஷயமாகும்.””
ஆண்டவர் தம்முடைய பின்னடியார்களுக்குக் கற்றுக்கொடுத்ததும், கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் பயிலும் அனைவராலும் கற்றுக்கொள்ள வேண்டியதுமான மாபெரும் பாடம் என்னவெனில்… தேவன் பேரிலும், நீதியின் பேரிலும் கொழுந்துவிட்டு எரியும் அன்பும், வைராக்கியமும் இருக்கும் அதேசமயத்தில், நம்மிடத்தில் தன்னடக்கமும் காணப்பட வேண்டும்; அதாவது தெளிந்த புத்தியின் ஆவியைச் செயல்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும். கிறிஸ்துவின் பின்னடியார்கள், “”புறாக்களைப்போல் கபடற்றவர்களாகவும், சர்ப்பத்தைப்போல் வினாவுள்ளவர்களாகவும்”” இருக்கும்படி புத்திமதி அளிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய ஞானமானது, அவர்களுடைய நலனை மாத்திரம் கருதும் சுயநலநோக்கமுள்ளதாக இராமல், பரந்தமனப்பான்மையுடையதாக இருக்க வேண்டும். அதாவது, சகலருடைய நலனைக் கருதக்கூடியதாகவும், விசேஷமாகக் கர்த்தருடைய நோக்கங்களுக்கடுத்த நலனுக்காகவும், கர்த்தருடைய நோக்கத்தில் அவர் நமக்கு ஏதேனும் பங்களிப்புக் கொடுத்திருந்தாரானால், அதனுடைய நலனுக்காகவும் கருதக்கூடியதாக அவர்களுடைய ஞானம், பரந்த மனப்பான்மை உடையதாக இருக்க வேண்டும்.
இயேசு, தாம் காட்டிக் கொடுக்கப்படப்போகிற சோதனையான வேளைக்கு முன்பாக, தம்முடைய சீஷர்களிடத்தில், “”மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்”” (மத்தேயு 26:31,32).
உணர்ச்சிவசப்படும் பேதுரு, “”உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன்”” என்று கூறுகின்றார் (வசனம்-33). அந்தோ! இந்தத் தைரியமுள்ள மனிதன், தனக்கு முன்பு வரவிருக்கும் பரீட்சைகள் மற்றும் இடர்பாடுகளின் வீரியத்தை எவ்வளவு குறைவாக மதிப்பிட்டுப் புரிந்துக்கொண்டுள்ளார் (அ) தனது உணர்ச்சிவசப்படும் சுபாவத்தில் உள்ள பெலவீன பாகங்களை, எவ்வளவு குறைவாக மதிப்பிட்டுப் புரிந்துக்கொண்டுள்ளார். எனினும், ஒருவேளை இவர் போதகரை மறுதலித்து விட்டாரே என்று நாம் வருத்தம் அடைந்தோம் என்றால், பிற்காலங்களில் இயேசுதான் மேசியா என்று இவர் அறிக்கைப்பண்ணினதிலும், அவரிடத்திலான தனது உண்மையை எதுவும் அசைக்க முடியாது என்று இவர் அறிக்கைப்பண்ணினதிலும் வெளிப்பட்ட இவருடைய விசுவாசம், அன்பு மற்றும் வைராக்கியங்களைக் கண்டு நாம் களிகூர வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
விசேஷித்த விதத்தில் உண்மையும், அனல்/ஆர்வம் கொண்டவர்களையும்தான் சிக்கவைக்கும்படி எதிராளியானவன் மிகவும் விடாப்பிடியுடன் நாடுகின்றான். ஆகவேதான், அத்தருணத்தில் இயேசு பரிசுத்தவானாகிய பேதுருவிடம், “”சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்”” என்று விளக்கினார் (லூக்கா 22:31). அதாவது, “”என் மீது நீ கொண்டிருக்கும் உண்மையினின்று உன்னைப் புறம்பாக்கிப்போடவும், சீஷத்துவத்தின் பாதையினின்று உன்னை மனம் தளர்வடையச் செய்யவும், பயம் மற்றும் உன்னுடைய சொந்த பெலவீனத்தைக்கொண்டு உன்னை மூழ்கடித்துவிடவும் சாத்தான் உத்தரவு கேட்டுக்கொண்டான்”” என்று பேதுருவுக்கு விளக்கினார். பின்னர், “நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்” என்றும் இயேசு கூறினார் (லூக்கா 22:32). நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது என்னவெனில், அதே அன்பான ஆண்டவர் இன்னமும், அவருடைய உண்மையும், பாசமுமிக்க சகல பின்னடியார்களுக்கு, அவர்களுடைய முன்னோர் வழிவந்த பெலவீனங்கள் எதுவாயிருப்பினும், அவர்களுக்கு உதவி செய்கின்றார் என்பதேயாகும். மேலும் இத்தகையவர்கள், அவருடைய அன்பில் நிலைத்தும், தங்களுடைய வைராக்கியத்தில் தொடர்ந்தும் கொண்டிருப்பார்களானால், அவர்களைப் பலமுள்ள பாத்திரங்களாக வளர்த்திவிடவும், அவர் வல்லவர் என்பதையும் கூட நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். சகலவற்றையும் அவர்களுடைய நன்மைக்கு ஏதுவாக மாற்ற, அவர் வல்லமையுள்ளவராக இருக்கின்றார்; அதாவது உண்மையுள்ளவர்களுக்கு கர்த்தர் வாக்களித்துள்ள பிரகாரம், அவர்களின் முன்னோர் வழிவந்த பெலவீனங்களையும் கூட, “”மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை” உண்டாக்குவதற்கு ஏதுவாக நன்மையாக மாற்றுவதற்கு அவர் வல்லவராக இருக்கின்றார்.
சேவல் கூவுவதற்கு முன்பு ஆண்டவர் தம்முடைய அன்புமிக்க, அதேசமயம் சிந்திக்காமல் செயல்படும் பின்னடியானுக்குரிய ஆபத்தை உணர்ந்தவராக, சேவல் கூவுவதற்கு முன்னதாக பேதுரு தன்னுடைய ஆண்டவரை மறுதலிப்பார் என்று எச்சரித்தார். இது, பரிசுத்தவானாகிய பேதுருவுக்கு உண்மையாக இருக்க முடியாததாக தோன்றியிருந்திருக்கும்! “”நான் உம்மோடே மரிக்க வேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன்”” என்று எவ்வளவு தைரியத்துடன் பேதுரு கூறினார். “”மீதமுள்ளவர்களும் அப்படியே சொன்னார்கள்” (மத்தேயு 26:35). அவர்கள் அனைவருடைய இருதயங்களும் நல்லவைகளாக இருந்தது. கர்த்தரும் அவர்களுடைய இருதயத்தைப் பார்த்தார். இப்பொழுது நம்முடைய பாடம் மத்தேயு 26:69-ஆம் வசனத்திற்குச் செல்கின்றது. ஆண்டவர் கைதுச் செய்யப்பட்டுவிட்டார். சிதறடிக்கப்பட்ட சீஷர்கள் தப்பி ஓடினார்கள். பிரதான ஆசாரியனின் குடும்பத்திற்குப் பரிசுத்தவானாகிய யோவான் நெருக்கமானவராக இருந்தபடியால், பரிசுத்தவானாகிய பேதுரு முற்றத்தில் நிற்க, பரிசுத்தவானாகிய யோவான் அரண்மனைக்குள்ளாகவே பிரவேசித்து நின்றார். அரண்மனையின் வேலைக்காரி பரிசுத்தவானாகிய பேதுருவை, இயேசுவின் சீஷர்களில் ஒருவராக அடையாளங்கண்டு, வெளிப்படையாகச் சத்தமிட்டுக் கூறினாள். ஆண்டவரின் நிலை தனக்கும் வந்துவிடும் என்று பயமடைந்த பரிசுத்தவானாகிய பேதுரு, தான் அவருடைய சீஷரில் ஒருவன் அல்ல என்று மறுத்து, அக்காரியத்தைக் குறித்துத் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் கூறிவிட்டார். கொஞ்ச நேரத்திற்குப் பிற்பாடு வேறொருவர் பரிசுத்த பேதுருவைக் குறித்து மீண்டும் அடையாளம் கண்டபோது, அவர் சத்தியம் செய்து, அதை மறுத்து, தனக்கு இயேசுவைத் தெரியாது என்றும் கூறினார். கொஞ்ச நேரத்திற்குள் முற்றத்தில் இருக்கும் அனைவர் மத்தியிலும் விஷயம் பரவத் தொடங்கி, அநேகர் வேலைக்காரியின் வார்த்தைகளை மெய் என்று ஏற்றுக்கொண்டு, பரிசுத்த பேதுருவுக்கு கலிலேயா பேச்சு வழக்கு காணப்படுகின்றது என்றும் கூறினார்கள். பரிசுத்தவானாகிய பேதுருவோ, தன்னுடைய மறுதலிப்பை உறுதிப்படுத்தும் வண்ணமாகச் சபிக்கவும் தொடங்கி, அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிடவும் செய்தார். இப்படிச் செய்த உடனே சேவல் கூவ ஆரம்பித்தது. அப்போது, பரிசுத்தவானாகிய பேதுரு, “”சேவல் கூவுவதற்கு முன்னதாக நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய்” என்று தன்னோடு பேசின ஆண்டவரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார்.
அந்தோ பரிதாபம்! பரிசுத்தவானாகிய பேதுரு தன்னுடைய நிலைநிற்கும் தன்மையின் மீது மிகுந்த நிச்சயமும், தனது நேர்மையின்/உண்மையின் மீது மிகுந்த நம்பிக்கையும் கொண்டவராக இருந்தார். அவர் தன்னைக் குறித்துப் பெருமையாய்ப் பேசின அதே விஷயங்களிலேயே, அவர் எதிராளியானவனால் சிக்க வைக்கப்பட்டார். இயேசு திரும்பி, பேதுருவைப் பார்த்தார் என்று வேறொரு பதிவு கூறுகின்றது! அந்தப் பார்வை போதுமானதாகும். அப்பார்வையானது, பரிசுத்தவானாகிய பேதுருவின் உத்தம இருதயத்திடம், ஆயிரமாயிரமான காரியங்களை/விஷயங்களைப் பேசிவிட்டது. அது கோபத்தின் பார்வையாகவோ அல்லது இகழ்ச்சியின்/வெறுத்து ஒதுக்கும் பார்வையாகவோ இருந்திருக்காது என்பதில் நமக்கு நிச்சயமே. அது அன்புடன்கூடிய அனுதாபத்தின் பார்வையாகவே இருந்தது. அது பரிசுத்தவானாகிய பேதுருவின் இருதயத்தை உருக்கிற்று/கரையப்பண்ணிற்று. அவர் வெளியே போய், மனம் கசந்து அழுதார். எதிராளியானவனின் சோதனைகளினாலும், பெலவீனங்களினாலும், குறைபாடுகளினாலும் நெருக்கப்பட்டிருக்கின்ற, இன்றைய காலத்தில் காணப்படும் ஆண்டவரின் பின்னடியார்களுக்கு, பரிசுத்தவானாகிய பேதுருவின் அனுபவங்களிலிருந்து வரும் பாடம் எச்சரிப்பாக விளங்குகின்றது; அதாவது பின்னடியார்கள் கர்த்தரிடத்தில் நம்பிக்கைக் கொண்டவர்களாக, உதவிக்காகக் கர்த்தரையே நோக்க வேண்டுமே ஒழிய, சுய/தன்நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கக்கூடாது என்பதேயாகும். வீழ்ந்த நிலையில் இன்று காணப்படுபவர்களுக்கும், பரிசுத்தவானாகிய பேதுருவின் அனுபவங்களிலிருந்து, கர்த்தர் வைக்கும் அனுதாபம் மற்றும் இரக்கம் குறித்ததான ஒரு பாடமும் உள்ளது. வீழ்ந்த நிலையில் இருப்பவர்களும் கூடத் தங்களுடைய அக்கிரமங்களுக்காக மனம் கசந்து அழுது, மனந்திரும்பி, தங்களுடைய அனுபவங்களின் மூலம், நன்மை (படிப்பினை) பெற்றுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும்.