R4112 (page 8)
யோவான் 1:19-34
“”இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (வசனம் 29).
நமது கர்த்தர் தம்முடைய முன்னோடியைக் குறித்து, “”யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கத்தரிசி ஒருவனுமில்லை” என்று கூறுகின்றார் (லூக்கா 4:28). தீர்க்கத்தரிசி என்ற வார்த்தையின் அர்த்தமாவது, “”அதிகாரப்பூர்வமாய் அறிவிப்பவர்/பிரகடனம் செய்பவர்” ஆகும். எனினும் எதிர்க்காலத்தில் சம்பவிக்கும் விஷயங்களை மாத்திரம் அறிவிப்பவர்தான் தீர்க்கத்தரிசி என்று எடுத்துக்கொள்ளவுங்கூடாது. தரிசனங்கள் அறிந்துக்கொள்வதும் மற்றும் எதிர்க்காலத்திற்குரிய விஷயங்களை முன்னறிந்துகொள்வதுமாகிய தன்மைகளை உடையவர்களான ஞானதிருஷ்டிக்காரர் குறித்தும், தீர்க்கத்தரிசிகள் குறித்தும் வேதவாக்கியங்களில் நாம் பார்க்கின்றோம். தீர்க்கத்தரிசி என்பவர் போதிப்பவர் அல்லது பிரகடனம் செய்பவர்/அறிவிப்பவர் ஆகும். எனினும், அநேக உதாரணங்களில், இந்த இரண்டு பண்புகளும் சேர்ந்து ஒரே நபரிடத்தில் காணப்படுவதை நாம் பார்க்கலாம். யோவான் ஸ்நானனின் விஷயத்திலும் இப்படியாகவே உள்ளது. இவர் ஜனங்கள் மனந்திரும்ப வேண்டும் என்பதற்கான முக்கியமான செய்தியைக் கூறினதோடு, வரவிருக்கின்ற காரியங்களையும் கூறின தீர்க்கத்தரிசியாக இருந்தார். உதாரணமாக, இவர் நமது கர்த்தர்தான், உலகத்தின் பாவத்தை எடுத்துப் போடுகின்ற தேவ ஆட்டுக்குட்டி என்று முன்னறிவித்தார் என நாம் பார்க்கின்றோம். இன்னுமாக, கர்த்தர் தம்முடைய ஜனங்களைப் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியாலும் ஞானஸ்நானம் பண்ணுவார் என்றும் இவர் அறிவித்தார் என்று நாம் பார்க்கின்றோம். யோவானைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கத்தரிசி எவனும் இல்லை. காரணம், இவரைப்போன்று வேறு எவரிடத்திலும் கர்த்தருக்கான இப்படிப்பட்ட முக்கியமான பணி கொடுக்கப்படவில்லை. அநேகர் மேசியாவின் வருகைக் குறித்தும், அவர் கன்னிகையிடம் பிறப்பார் என்பது குறித்தும், கொல்லப்படபோகின்ற ஆட்டைப்போல் அவரும் நடத்தப்படுவதைக் குறித்தும், அவர் சிலுவையில் அறையப்படுவதைக் குறித்தும், அவருடைய உயிர்த்தெழுதல் முதலியவைகள் குறித்தும் முன்னறிவித்திருந்தாலும், தேவனுடைய குமாரனாகிய, மனுஷனாகிய கிறிஸ்து இயேசுவைக் குறித்து நேரடியாக முதலாவது அறிவிக்கும் மிகக் கனம் வாய்ந்த ஊழியம் யோவானுக்கே கொடுக்கப்பட்டது.
யோவானுக்குக் கொடுக்கப்பட்ட இந்தக் கனம் வாய்ந்த ஸ்தானத்தைக் குறித்து நாம் எண்ணும் அதேசமயத்தில், இக்காரியத்தைக் குறித்த ஆண்டவரின் வார்த்தையையும் நாம் நினைவுகூர வேண்டும்; “”ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்” (மத்தேயு 11:11). இவ்வசனத்தில், அப்போஸ்தலர்களுக்கும் மற்றும் இவர்களின் வார்த்தைகளின் மூலம் கர்த்தரை நம்பி, விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பின் வாயிலாக கர்த்தரோடு முக்கியமான உறவை [R4113 : page 9] ஏற்படுத்திக் கொண்ட அனைவருக்குமுள்ள கனம் விவரிக்கப்பட்டுள்ளது. தேவனுடைய ஸ்தானாபதிகளாக இருக்கும் இக்கனத்தைக் குறித்து நாம் எந்தளவுக்கு உணர்கின்றோமோ, அந்தளவுக்கு நமக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்புகள் மற்றும் சிலாக்கியங்களைப் பயன்படுத்துவதில் உண்மையாய் இருப்போமாக. மாம்சத்தில் வந்த கர்த்தரைப் பிரகடனப்படுவத்துவது யோவானுக்குக் கிடைத்த கனமாகும். மனுஷகுமாரனுடைய வந்திருத்தல் குறித்தும், பூமியிலுள்ள சகல குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காக ஸ்தாபிக்கப்படவிருக்கும் அவருடைய மகிமையான ஆளுகையைக் குறித்தும் பிரகடனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பது, நமக்கான மேன்மையாகும். சிறையில் அடைக்கப்படுவதும், மரிப்பதும், சிரச்சேதம் பண்ணப்படுவதும் தேவனுடைய அனுமதியாய் இருக்கும் பட்சத்தில் அதிலும் உண்மையாய் இருப்போமாக.
“”பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறபடியால் மனந்திரும்புங்கள்” என்று யோவான் அறிவித்தார்; அதாவது, பரலோக இராஜ்யத்திற்காக ஆயத்தமாகுங்கள், சீர்ப்பொருந்துங்கள் என்று அறிவித்தார். நமது கர்த்தர் இஸ்ரயேல் ஜனத்தாருக்கு அறுவடையாளராக இருந்து, கோதுமையைப் புடைத்து, பதரை அக்கினியில் போட்டுவிடுவார் என யோவான் முன்னறிவித்தார். “”அவர் (உங்களில் சிலரை) பரிசுத்த ஆவியினாலும் (உங்களில் மற்றவர்களை) அக்கினியினாலும் ஞானஸ்நானம் அருளுவார்” என்ற வார்த்தைகளையும், மேற்கூறிய கருத்தின் அடிப்படையிலேயே கூறினார். அந்தத் தேசத்தார் மத்தியில் நமது கர்த்தர் ஓர் அறுவடை வேலையைப் பண்ணினார், இதைக் குறித்து, “”நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன்” என்று தம் சீஷர்களிடத்தில் கூறினார் (யோவான் 4:38). இந்தத் தீர்க்கத்தரிசனங்கள் அப்படியே நிறைவேறியது. யோவான் 4:38-ஆம் வசனத்தின் வார்த்தைகளை நமது கர்த்தர் கூறின பிரகாரமே, அவர் இஸ்ரயேல் தேசத்திடத்தில் ஓர் அறுவடை வேலையை நிகழ்த்தினார். மூன்றரை வருடங்களாக அந்தத் தேசத்தாரிலுள்ள முதற்பலன்களைத் தமது சீஷர்களாக அறுத்து, சேகரித்தார். மேலும், இவர்கள் மீதே பெந்தெகோஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது. பிற்பாடு பதர் சுட்டெரிக்கப்படுவதற்கு முன்பு அதாவது, அக்கினியினால் ஞானஸ்நானம் கொடுக்கப்படும் காரியமாகிய எருசலேம் பட்டணமும், அதன் ஆலயமும், அதன் அனைத்தும் முற்றிலும் அழிக்கப்பட்டு கி.பி. 70-ஆம் ஆண்டில் தேசம் சிதறடிக்கப்படுவதற்கு முன்பு அப்போஸ்தலர்கள், மீதமானவர்களைச் சேர்த்துக் கொண்டார்கள். இதுபோலவே, இந்த யுகத்தின் அறுவடை காலத்தில் வாழ்ந்து கொண்டு, மனுஷ குமாரனின் வந்திருத்தலைக் குறித்து, அறிவிக்கிறவர்களுமாகிய நாமும் கூடப் பெயரளவிலான ஆவிக்குரிய இஸ்ரயேலர்களாகிய கிறிஸ்தவ மண்டலத்தில் தற்போது அறுப்பு பணி நடந்து கொண்டிருக்கின்றது என்றும், கோதுமை மணிகள் அனைத்தும் திரைக்கு அப்பால் களஞ்சியத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும், உலகத்தின் மீது, அதிலும் விசேஷமாகக் களை வகுப்பார் மீது, ஒரு ஜாதியார் மீதும் வந்திராத மகா உபத்திரவக் காலம் ஒன்று வரும் என்றும் அறிந்திருக்கின்றோம். அதாவது, பூமியின் சகல குடிகளையும் ஆசீர்வதிப்பதற்குரிய மேசியாவின் இராஜ்யமானது வல்லமையிலும், மகா மகிமையிலும் ஸ்தாபிக்கப்படுவதற்கான தெய்வீக ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று நாம் அறிந்திருக்கின்றோம்.
இராஜ்யத்தில் பங்கடைவதற்குப் பாவம் தடையாக இருக்கும் என்றும், ஆகையால் அனைவரும் மனந்திரும்பி, தேவனோடு ஒப்புரவாக நாட வேண்டும் என்றும் யோவான் அறிவித்த விஷயம், தேவனுடைய பரிசுத்தமான ஜனங்கள் என்று தங்களையே கருதிக் கொண்டிருந்த சிலராகிய பரிசேயர், சதுசேயர், அவிசுவாசிகள் மற்றும் விமர்சகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவர்களில் சிலர் செவிசாய்த்து, தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு, சீர்ப்பொருந்தி வந்தாலும், வேறு சிலர் யோவானுடைய போதனைகள், அத்துமீறினவைகளாகவும், ஏற்றுக்கொள்ள முடியாதவைகளுமாகவும் இருக்கின்றது என மறுத்தார்கள். ஆபிரகாமின் சந்ததியாருக்கு, தேவன் இராஜ்யத்தை வாக்களித்துள்ளார் என்று அவர்கள் வாக்குவாதம் பண்ணினார்கள். தங்களையல்லாமல் வேறெவரும் ஆபிரகாமின் சந்ததி இல்லை என்றும், தங்களையல்லாமல் வேறெவரும் பரிசுத்தமானவர்கள் இல்லை என்றும், தங்களையல்லாமல் வேறெவரும் தகுதியானவர்கள் இல்லை என்றும், யூதர்களாகிய தாங்கள் பரிசுத்தமாய் இருக்கிறார்களோ, இல்லையோ, தங்களுக்கே இராஜ்யத்தின் வாக்குத்தத்தங்கள் சொந்தமானவைகள் என்றும் வாக்குவாதம் பண்ணினார்கள். ஏழைகளும், பாவிகள் என்று தங்களைக் குறித்து ஒத்துக்கொண்டவர்களும் மாத்திரமே யோவானின் சாட்சியை உண்மையில் ஏற்றுக்கொண்டார்கள். ஒருவேளை அந்தத் தேசத்தார் அனைவரும் யோவானின் செய்திக்குச் செவிசாய்த்து, அதை ஏற்றுக் கொண்டிருப்பார்களானால், அவர்களனைவரும் இயேசுவின்மேல் நம்பிக்கை வைத்திருந்திருப்பார்கள். ஆகவே, இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, நமது கர்த்தரின் சீஷர்களாகி, அவருடைய உயிர்த்தெழுதலின் பிற்பாடு, அவரைக் காணும் சிலாக்கியத்தையும் பெற்றிருந்த சுமார் 500 சகோதர சகோதரிகளில், பெரும்பாலானோர் யோவானின் செய்தியைக் கேட்டு, செவிசாய்த்து வந்தவர்களாகத்தான் இருக்க வேண்டுமென நாம் அனுமானிக்கின்றோம். மேலும், பெந்தெகோஸ்தே நாளன்று நடந்த சம்பவங்களினால் விசுவாசம் வைத்தவர்களிலும் கூட, பெரும்பாலானோர் யோவானின் செய்தியைக் கேட்டு, மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தை அவரிடம் பெற்றுக்கொண்டு, ஜீவியத்தில் சீர்ப்பொருந்தினவர்களே என்றும் நாம் அனுமானிக்கின்றோம். இவ்வாறாக உண்மையுள்ள இருதயம் உடையவர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்களாகவோ அல்லது குறைந்தவர்களாகவோ இருப்பினும், ஏழைகளாகவோ அல்லது ஐசுவரியவான்களாகவோ இருப்பினும், இவர்கள் ஆசீர்வதிக்கப்படத்தக்கதாகத் தெய்வீக ஏற்பாடுகளும்,பிரதிநிதிகளும் இணைந்து செயல்பட்டனர்.
யோவான் ஸ்நானன், மாம்சத்தில் வந்த நமது கர்த்தருக்கு முன்னோடி ஆவார். அதாவது, நமது கர்த்தர் சரியான விதத்தில் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாக, அவரைக் குறித்து அறிவிப்பதற்கும், வழியைச் செவ்வைப்படுத்துவதற்குமே யோவான் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், மேசியாவின் இராஜ்யத்திற்குரிய ஆயத்த வேலையை, வழியைச் செம்மைப்படுத்தும் வேலையைக் குறித்த தீர்க்கத்தரிசனத்தில் சொல்லப்பட்ட அனைத்தையும் யோவான் நிறைவேற்றவில்லை. “”கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடு முரடானவைச் சமமாக்கப்படும்” (ஏசாயா 40:3-4).
வேதாகமப் பாடங்களில் இரண்டாம் தொகுதியிலுள்ள (2nd Volume) 8-ஆம் அத்தியாயத்தில், நாம் சில விஷயங்களை முன்வைத்ததைக் குறித்து, நம் வாசகர்களுக்கு நினைப்பூட்டுகின்றோம். அதென்னவெனில், மாம்சத்தில் வந்த இயேசுவை மாம்சத்தில் இருந்த யோவான் அறிமுகப்படுத்தி, முன்னோடிக்குரிய பணியை இவ்விதமாக நிறைவேற்றினதுபோல, இந்தச் சுவிசேஷ யுகத்தில் மாம்சத்தில் இருக்கும் சபையானது நிஜமான எலியாவாக இருக்கின்றார்கள். இவர்களது பணி, மகிமையின் இராஜாவாகிய கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை அறிவித்து, அவருடைய ஆயிரம் வருஷம் அரசாட்சிக்கு வழியைச் செம்மைப்படுத்துவதாகும். இதைக் குறித்த செய்திகளை நீங்கள் அனைவரும் இரண்டாம் தொகுதியில் பெற்றிருப்பதினால், இதைக் குறித்த விளக்கத்திற்குள் நாம் போவதில்லை.
நடந்து கொண்டிருக்கின்ற தீர்க்கத்தரிசனத்தை நாம் பார்ப்போம்:-
யோவானுடைய ஊழியம், சொற்ப காரியங்களையே நிறைவேற்றியுள்ளது. அவருடைய ஊழியம் இரண்டு வருடங்களுக்கும் குறைவாகவே நீடித்தது. மேலும், அவருடைய ஊழியம் ஒரு தேசத்தில் சொற்பமான ஜனங்களிடத்திற்கே சென்று சேர்ந்தது. ஆனால், அதே செய்தியைதான் நிஜமான யோவானும், நிஜமான எலியாவுமாகிய மாம்சத்தில் இருக்கும் கிறிஸ்துவின் சபையானது உலகத்திற்குச் சாட்சி பகிர்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். உலகம், வனாந்தரமான நிலையிலுள்ளது என்பதும், இதன் குழப்பத்தை மாற்றி ஒழுங்கிற்குக் கொண்டு வருவதற்கு மாபெரும் இராஜா அவசியம் என்பதே அந்தச் செய்தியாகும். இச்செய்தியைக் கேட்பவர்கள், விருத்தசேதனம் உள்ளவர்களாக நடந்து, வனாந்தரத்தில் ஒரு நேரான வழியை வரவிருக்கிற இராஜாவுக்கு ஒரு பெரிய வழியை உண்டாக்க வேண்டும் என்பதே இச்செய்தியின் சாராம்சமாகும். இன்னுமாக ஆயிரம் வருஷம் அரசாட்சியில் இயேசுவும், சபையும் செய்யப் போகின்ற ஆளுகையின் முழு நோக்கமும், [R4113 : page 10] பிதாவாகிய தேவனுடைய பிரசன்னத்திற்கு உலகத்தை ஆயத்தப்படுத்துவதேயாகும். மேலும், உலகம்/பூமி பிதாவினால் பாவத்தினிமித்தம் தண்டிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட வனாந்தரமாக இருப்பதற்குப் பதிலாக, மீண்டும் அவருடைய பசுமையான பாதப்படி ஆகிவிடும் என்று தீர்க்கத்தரிசனம் விளக்குகின்றது.
இந்தத் தீர்க்கத்தரிசனத்தில் மாம்சத்திலுள்ள சபையின் வேலை மாத்திரம் குறிப்பிடப்படாமல், ஆயிரம் வருஷம் அரசாட்சியில் மகிமையிலிருக்கும் சபை மற்றும் கிறிஸ்துவின் வேலை கூடச் சுட்டிக்காட்டப்படுகின்றது/முன்னறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, “”பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு” (ஏசாயா 40:4); அதாவது, தாழ்த்தப்பட்டவர்கள் சீர்க்கேட்டிலிருந்து தூக்கி எடுக்கப்படுவதைக் குறிக்கின்றது. பாவத்தின் ஆளுகை காலத்தின் கீழ் உன்னதமான செல்வாக்கை உடையவர்களாக வாழ்ந்தவர்கள், நீதியின் இராஜ்யத்தில் தாழ்த்தப்படுவார்கள் எனும் விஷயம் அடையாள மொழியில், “”சகல மலையும், குன்றும் தாழ்த்தப்படும்” என்று இடம்பெறுகின்றது. பாவம் மற்றும் பூரணமற்ற தன்மையின் தற்காலத்திலுள்ள மாபெரும் விஷயங்கள் நேராக்கப்படும்/சரிச் செய்யப்படும்; மேலும், கரடுமுரடானவைகள் சமமாக்கப்படும்; இப்படியாக, சகலமும் திரும்பக் கொடுக்கப்படும் காலங்களின் வேலையினுடைய விளைவாக, இறுதியில் உலகத்தின் மனுக்குலமானது, தெய்வீகச் சித்தத்திற்கும், அன்பின் தெய்வீகப் பிரமாணத்திற்கும் இசைவாக வந்து, தெய்வீகப் பிரசன்னத்திற்கு நேராக திரும்புவதற்கு ஆயத்தமாய் இருப்பார்கள். இக்காரியங்களை, “”என் பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன்” என்ற வார்த்தைகள் அடையாளப்படுத்துகின்றது (ஏசாயா 60:13).
யோவான் ஸ்நானனிடம் கேட்கப்பட்டக் கேள்விகள் பின்வருமாறு: “”நீர்தான் மேசியாவோ?” இல்லையேல்; “”நீர் எலியாவோ?” இல்லையேல்; மோசேயினால் கூறப்பட்டுள்ள தீர்க்கத்தரிசி நீர்தானோ? இல்லையேல் (அப்போஸ்தலர் 3:21,23). “”பின்னே நீர் யார்?” ஏன் நீர் இப்படியாக வந்து, அதிகாரத்துடன்பேசுகின்றீர்?” இக்கேள்விகளுக்கான யோவானின் பதில், “நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமே;” “நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்” என்பதாகும் (லூக்கா 3:5,16). இவ்விதமாக, மேசியாவின் மகத்துவத்தைக் கூறி, அவரோடு தன்னை ஒப்பிடுகையில் தான் எவ்வளவு முக்கியத்துவம் அற்றவன் என்றும் யோவான் கூறுகின்றார். யோவான் அடையாளப்படுத்தும் நாமும் மகிமையான இராஜ்யம் குறித்து அறிவித்தல் தொடர்புடைய நமக்கான சிலாக்கியத்தின் விஷயத்தில், தாழ்மை சிந்தைக்கொள்ள வேண்டும். நம்மிடம் வேறு சிந்தை காணப்படுமாயின், இது நம்மை அவருடைய பிரதிநிதி மற்றும் ஸ்தானாபதிக்குரிய நிலைக்கு அபாத்திரராக்கிவிடும்.
இயேசு தம்மை மாம்சீக இஸ்ரயேலர்களுக்கு ஒப்புக்கொடுக்கத்தக்கதாக மாம்சத்தில் காணப்பட்டார். இப்பொழுதுதோ அவர் ஆவிக்குரிய ஜீவியாக நிற்கின்றார். எனினும், அன்று போல் இன்றும் அவர் அடையாளம் கண்டுக்கொள்ளப்படவில்லை. அன்று கபடற்ற இஸ்ரயேலர்கள் மாத்திரம் அவரை அடையாளம் கண்டுக் கொண்டார்கள். இன்றும் அறுவடை முடிவடைவதற்கு முன்னதாக அனைத்து ஆவிக்குரிய இஸ்ரயேலர்களால் அவருடைய வந்திருத்தல், பரோசியா அடையாளம் கண்டுகொள்ளப்படும். விலையேறப் பெற்ற சத்தியத்தின் இந்த முத்துக்கள் உலகத்திற்கு முன்பாகவோ, அர்ப்பணம் பண்ணாதவர்கள் முன்னதாகவோ போடுவது நல்லதல்ல. கர்த்தருடைய வந்திருத்தல், தற்போது நடந்து கொண்டிருக்கும் அறுவடை வேலைகள், கோதுமைகள் விரைவில் களஞ்சியத்தில் சேர்க்கப்படும் மற்றும் களைகள் மீது விரைவில் உபத்திரவத்தின் நெருப்புக் [R4114 : page 10] கொளுத்தி விடப்படும் என்பது போன்றதான சத்தியங்கள் நீதியின் மீது பசிதாகம் உள்ள கபடற்ற இஸ்ரயேலர்களுக்கே உரியதாகும். ஆனால், இந்தச் சத்தியங்கள் அனைத்துப் புத்தியுள்ள கன்னிகைகளுக்கு ஏற்ற கால சத்தியங்களாகவும் அமைகின்றது.
நமது கர்த்தரின் வல்லமையும்/பலமும், மகத்துவமும், “”யூத கோத்திரத்து இராஜ சிங்கம்” என்ற அடையாள வார்த்தையினால் காட்டப்படுகின்றது. இவ்வடையாளம் ஆயிரம் வருஷம் அராசாட்சியில் இருக்கும் அவருடைய வல்லமையை எடுத்துக்காட்டுகின்றது. ஆனால், ஆட்டுக்குட்டி என்ற அடையாளம் அவருடைய பூமிக்குரிய ஊழியத்தையும், நமது பாவங்களுக்கான அவருடைய பலியையும் எடுத்துக்காட்டுகின்றது. அவர் ஒவ்வொரு விஷயங்களிலும், இறுதியில் மரணம்வரை, அதாவது சிலுவையின் மரணப் பரியந்தம், பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தக் காரியங்களானது, ஆட்டுக்குட்டியின் அம்சங்களுக்கு ஒப்பாகக் காணப்படுகின்றது. நமது பாவங்களுக்காக அவர் தம்மை ஒப்புக்கொடுத்த காரியம் தெய்வீக ஏற்பாட்டின்படி, பிதாவின் திட்டப்படி நடந்த காரணத்தினால் அவர் தேவ ஆட்டுக்குட்டியாகிறார். மனுஷனுடைய மீட்பராகும்படி, தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை அனுப்பினார் என்றும், பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற குமாரன் மகிழ்ச்சியாயிருந்தார் என்றும் வேத வாக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்த அனைத்து அருமையான கருத்துக்களும் “”தேவ ஆட்டுக்குட்டி” என்ற இந்த வார்த்தைக்குள் அடங்குகின்றது. மேலும், இவ்வடையாளம் நம்முடைய பாவங்களுக்காக பலிச் செலுத்தப்படுவதின் அவசியம் குறித்ததான கருத்துக்களை நமக்கு நினைப்பூட்டுகின்றது. மேலும், பலிச் செலுத்தப்படாமல் வேறு எந்த விதத்திலும் ஆட்டுக்குட்டியினால், உலகத்தின் பாவத்தைச் சுமக்கவோ, எடுத்துப் போடவோ முடியாது. தேவனுடைய கிருபையால் அவரை நம்முடைய மாபெரும் போதகராகவும், மேய்ப்பனாகவும் காண்பதோடு அவர் நம்பொருட்டு நம் பாவங்கள், தண்டனைகள் நீக்கம்/ரத்து செய்யப்படுவதற்காகப் பலியாகத் தம்மை ஒப்புக்கொடுத்ததின் வாயிலாக தேவனுடைய ஆட்டுக்குட்டியாகவும் இருந்தார் என்பதையும் காணத்தக்கதாக நம்முடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்கள் திறக்கப்பட்டிருப்பதினால் மகிழ்ச்சியடைகின்றோம். இயேசுவை, தேவ ஆட்டுக்குட்டி என்றும், பாவம் சுமப்பவர் என்றும் அடையாளம் கண்டு கொள்கின்றவர்கள் மாத்திரமே இந்தச் சுவிசேஷ யுகத்தின் விசுவாசிகளுக்கு அருளப்படும் விசுவாசத்தினாலுண்டாகும் நீதிமானாக்கப்படுதலைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், அவருடைய இரத்தத்தின் மீதான விசுவாசத்தினால் பெற்றுக்கொண்ட நீதியின் வஸ்திரத்தை யாரொருவர் இழந்து விடுகின்றரோ, அவர் அனைத்தையும் இழந்து விடுவார் என்ற உண்மையையும் நாம் மறந்துவிட வேண்டாம்.
தெய்வீக வார்த்தைகள் எவ்வளவு அருமையாகவும், துல்லியமாகவும் காணப்படுகின்றது. யோவான் ஒரு யூதனாக இருந்தபடியால் தன்னுடைய வார்த்தைகளின் முழு விவரத்தையும் புரிந்துக் கொண்டிருப்பார் என்று நாம் எதிர்ப்பார்க்கக்கூடாது; காரணம், யூதர்கள் மேசியா முதலில் யூதர்களுடைய பாவங்களை எடுத்துப் போடுவார் என்றும், பின்னர் தாங்கள் தேவனுடைய இராஜரிக ஆசாரியக் கூட்டமாக இருந்து, உலகத்தை நீதியில் சீர்த்திருத்துவார்கள் என்றுமே விசேஷமாக எதிர்ப்பார்த்தார்கள். ஆனால், யோவான் உரைத்த வார்த்தைகள் யூதர்களுடைய எதிர்ப்பார்ப்பையும் மிஞ்சி விட்டது; அதாவது, புறஜாதியாரும் இவ்வார்த்தைகளில் உள்ளடங்குகின்றனர். இப்படிப்பட்ட தீர்க்கத்தரிசனமான வார்த்தையை உரைக்கும்படி நடத்தின பரத்திலிருந்து உண்டான ஞானத்தை இன்றைய காலத்து ஜனங்களும் கூடப் புரிந்துக்கொள்வதற்கு அரிதாக இருக்கின்றது. உலகத்தின் பாவங்கள் ஒருபோதும் எடுத்துப் போடப்படவில்லை என்றும், ஆதாமின் மீறுதல் காரணமாகவும், தனிப்பட்டப் பாவத்தின் காரணமாகவும் வந்த பாவ பாரத்தின் கீழ் உலகம் நித்திய சித்திரவதைக்குள் மூழ்கிவிடும் என்றுமுள்ள பொதுவான கருத்துக்கள் இன்று நிலவுகின்றது. உலத்தின் பாவத்தை எடுத்துப் போட்ட தேவ ஆட்டுக்குட்டியான இரட்சகரைக் குறித்து இன்றைய பெயர்க் கிறிஸ்தவ மண்டலமும், அதன் சபைகளும் எதுவும் அறிந்திருக்கவில்லை. அந்தோ! பாவப்பட்ட குருடான கிறிஸ்தவ மண்டலம்! இவர்கள் இவ்வசனத்தையும், இதற்கு ஒத்த மற்ற வசனங்களையும் வாசித்திருந்தாலும், அவைகளுக்குள் காணப்படும் உண்மையான ஆசீர்வாதங்களை அடையவேயில்லை/புரிந்துகொள்ளவில்லை. “”எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது” (1 தீமோத்தேயு 2:6). “”நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்” (1 யோவான் 2:2) என்ற அப்போஸ்தலர்களின் வார்த்தைகளை நாம் நினைவுகூருகின்றோம். “புமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” என்று கர்த்தர் சொன்னது உண்மையே (ஏசாயா 55:9). தேவன் பழிவாங்குகிறவராக இராமல், மனுஷனுடைய சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட அருமையான [R4114 : page 11] திட்டத்தையுடைய மாபெரும் தேவனாய் இருக்கிறபடியால் நாம் மகிழ்கின்றோம். “”இதினிமித்தம் நான் பரலோகத்திலும் புலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு……………………சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துக்கொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகலபரிபுரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்” (எபேசியர் 3:14,15, 18-19); நாம் புரிந்துக்கொள்ளுதலின் கண்களோடு பார்க்கையில் மேற்கூறிய அப்போஸ்தலரின் ஜெபத்தினுடைய நிறைவேறுதலைக் கண்டுக்கொள்ளலாம்.
ஆட்டுக்குட்டி வந்திருந்தாக யோவான் ஸ்நானன் கூறியிருந்தபோதிலும், உலகத்தின் பாவத்தைப் போக்கும் வேலையானது எதிர்க்காலத்திற்குரிய வேலையாக இருக்கின்றது. இந்த வேலை இன்னும் நிறைவேறி முடியவில்லை. நமது கர்த்தர் ஆட்டுக்குட்டியாக மரித்தார். அவருடைய பலியும் பிதாவுக்குத் திருப்தியாய் இருந்தது. இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டு, மகிமைக்கும், வல்லமைக்கும் உயர்த்தப்பட்ட விஷயங்கள், பிதா இயேசுவின் பலியில் திருப்தியடைந்ததற்கான நிரூபணங்களாக இருந்தது. ஆனால், தெய்வீகத் திட்டத்தின்படி, உலகத்தின் பாவத்தை எடுத்துப்போடும் வேலையானது இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1) தேவனுடன் ஒப்புரவாகும்படியும், மன்னிப்பை அடையும்படியும், உண்மையும் நீதியுமான விஷயங்களோடு இசைவுக்குள் வருவதையும் விரும்பும் இருதயங்களிலிருந்து பாவத்தை எடுத்துப்போடுதல் ஆகும். இவர்கள் விசுவாசிகள் என்று அழைக்கப்படுகின்றனர். மேலும், இவர்களுடைய பாவங்கள் எடுத்துப்போடப்பட்டதாகவும் கருதப்படுகின்றது; அதாவது, அப்போஸ்தலரும், தீர்க்கத்தரிசியும் கூறுகிறப் பிரகாரம் கிறிஸ்துவின் நீதியினிமித்தம் உண்டான வஸ்திரத்தினால், தேவனுடைய பார்வைக்கு முன்பு இவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் தங்களுடைய ஓட்டத்தை முடிக்கும்போது அதாவது, நித்தியத்திற்குரிய ஜீவனுக்குள் பிரவேசிக்கத் தகுதியுள்ள உண்மையானவர்கள் என்ற நிலை வரும்போதே இவர்களுடைய பாவம் முற்றிலும் அகற்றப்படுகின்றது. இவர்களுக்கு அருளப்படும் புதிய சரீரத்தில் கறைகள் இருப்பதில்லை. மூடுவதற்குப் பாவமும் இருப்பதில்லை, அனைத்துமே அகற்றப்பட்டிருக்கும். பின்னர் உலகத்தை ஆசீர்வதிப்பதற்காக, கிறிஸ்துவும், அவருடைய மணவாட்டியாகிய மகிமையடைந்த சபையின் ஆளுகை, ஆயிரம் வருஷம் அரசாட்சியில் ஆரம்பிக்கும். அதாவது, பரலோகத்தின் இராஜ்யம், நீதியின் ஆளுகை ஆரம்பிக்கும். 2) ஆனால், இந்த ஆளுகை ஆரம்பிப்பதற்கு முன்பு… 18-நூற்றாண்டுகளுக்கு முன்பாக உலகத்தை மீட்டுக்கொண்ட தேவ ஆட்டுக்குட்டியானவர், தமது பலியின் புண்ணியத்தையும், தம்முடைய சரீர அங்கமாகிய சபையின் பலியையும் சேர்த்துப் பிதாவுக்கு முன்பு, சகல ஜனங்களுக்குரிய மாபெரும் பாவநிவாரண நாளின் இரண்டாம் பலியாகச் செலுத்துவார் (லேவி. 16-ஆம் அதிகாரம்).
கர்த்தர் பரலோகத்திற்குச் சென்று தம்முடைய பலியை ஒப்படைத்து, அதைப் பிதா ஏற்றுக்கொண்டு, விசுவாச வீட்டாராகிய சபையின் மீது ஆசீர்வாதம் வந்திறங்கினது போன்று, இந்த யுகத்தின் முடிவில் மாபெரும் பிரதான ஆசாரியனால் செலுத்தப்படும் இரண்டாம் பலியும், சகல ஜனங்களுக்கான பாவங்களுக்காகப் பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்படும். பின்னர் தெய்வீக மன்னிப்பும், ஆதாமின் பாவம் மற்றும் பெலவீனங்கள் விலக்கப்படுதலும் ஒவ்வொரு சிருஷ்டிக்கும் அருளப்படும். துணிகரமான தவறுகளுக்கே சிட்சைகள் வழங்கப்படும் (லூக்கா 12:47-48). ஆசீர்வதிப்பதற்காகவும், தூக்கிவிடுவதற்காகவும், கர்த்தர் மற்றும் அவருடைய கிருபையான திட்டங்கள் குறித்ததான அறிவிற்குள் கொண்டு வரப்படுகிற யாவருக்கும் உதவுவதற்காகவுமே ஆயிர வருஷம் அரசாட்சியின் சகல செல்வாக்குகளும் செயல்படுத்தப்படும். அடிகள், சிட்சைகள் கூட, நீதியின் விஷயங்களில் உலகத்தைத் திருத்துவதற்கும், உதவுவதற்குமேயாகும். இப்படியாக, ஆயிரம் வருஷம் யுகத்தின் முடிவில், உலகத்தின் பாவத்தை எடுத்துப் போட்ட தேவ ஆட்டுக்குட்டி மூலம், மனுக்குலத்திற்கான அருமையான, கிருபையான ஆசீர்வாதங்களும் நிறைவுபெறும். பொல்லாதவர்கள், ஜனத்தின் மத்தியில் இராதபடிக்கு அழிக்கப்படுவது தவிர, மற்ற யாவரும் மனித பூரணத்தை அடைவார்கள் (அப்போஸ்தலர் 3:23).
யோவானின் செய்தியில் எவ்வித சுயநலமும் இல்லை. சுயநலமே, அநேக கர்த்தருடைய ஜனங்கள் முன்னேற முடியாமலும், மற்றவருக்கு ஆசீர்வாதமாயும், சத்தியத்திற்குச் சாட்சியுமாய் கர்த்தரால் பயன்படுத்த முடியாத வண்ணம் இடறிவிழுதலின் கல்லாகக் காணப்படுகின்றது. இயேசு தன்னிலும் பெரியவர், தன்னைக்காட்டிலும் அவரே முக்கியமானவர், காரணம், இயேசு (தன்னிலும் முதன்மையானவராக) தனக்கு முன்பாகவே காணப்பட்டார் என்று யோவான் அறிவித்தார். இயேசு யோவானைக்காட்டிலும் (முதன்மையானவராக) முன்னதாக இருந்ததற்கான காரணம், இயேசு பிதாவோடு மனுஷனாக வருவதற்கு முன்னதாகவே இருந்தார் என்பது மாத்திரமல்லாமல் அவர் பரிபூரணமாயும் இருந்தார்; ஆனால் யோவானோ மற்ற மனுஷரைப் போன்று பூரணமற்ற மாம்சமானவராகவே காணப்பட்டார்.
“”நானும் அவரை அறியாதிருந்தேன்” (யோவான் 1:31) என்று யோவான் கூறின வார்த்தைகளிலிருந்து, யோவானுக்கு, இயேசுவோடு பழக்கமில்லை என்று நாம் தவறாய்ப் புரிந்துக்கொள்ளக்கூடாது; காரணம், அவர்கள் உடன் உறவினர்கள் என்று பதிவுகள் தெரிவிக்கின்றது. மாறாக, இயேசுதான் மேசியா என்று அவர் அறிந்திருக்கவில்லை. யோவான் இயேசுவைத் தனது உறவினராகவும், அருமையான சிறுவனாகவும், அருமையான புருஷனாகவும் அறிந்திருந்தார். மேலும், அவர் பாவமில்லாதபடியால், தான் கொடுக்கும் ஞானஸ்நானத்தை எடுக்கக்கூடாது என்றளவில்தான் இயேசுவைக் குறித்து அறிந்திருந்தார். ஆனால், தமது ஞானஸ்நானத்தின் மூலமே, தம்மால் பிதாவின் சித்தம் நிறைவேற்ற முடியும் என்றும், எல்லா நீதியையும் நிறைவேற்ற வேண்டும் என்று கூறி வற்புறுத்தினதாலேயே, யோவான் அவரைத் தண்ணீரினால் ஞானஸ்நானம் பண்ணினார். அத்தருணத்தில்தான், இயேசுவே மேசியா என்று யோவான் தேவனிடத்திலிருந்து அடையாளம் பெற்றுக்கொண்டார். யோவான், தான் மேசியாவையும், அவருடைய இராஜ்யத்தையும் அறிவிக்க வேண்டும் எனவும், யார் மேல் பரிசுத்த ஆவி புறா போல் இறங்குகின்றதோ, அவரே மேசியா என்று அறிந்துக்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தார். ஆனாலும், தான் ஞானஸ்நானம் கொடுக்கும் ஒருவரிடத்தில்தான் இவ்வடையாளம் வெளிப்படும் என்று யோவான் எதிர்ப்பார்க்கவில்லை. கர்த்தர் மேல் ஆவி இறங்கின போது, யோவான் பிரமிப்படைந்து, இயேசுதான் மேசியா, தேவ ஆட்டுக்குட்டி, தேவனுடைய குமாரன் என்று ஜனங்களுக்கு அறிவித்தார். இயேசுவே பிதா என்று அறிவிக்காமல், அவரைத் தேவனுடைய குமாரன் என்றே யோவான் அறிவித்தார். இப்படியே இயேசுவும், அப்போஸ்தலர்களும் அறிவித்தார்கள். மேலும், இதற்கு இசைவாக நம்முடைய சாட்சியும் காணப்பட வேண்டும். இயேசு சபைக்காக ஜெபம் பண்ணினபோது அதாவது, பிதாவும், தாமும் ஒன்றாய் இருப்பதுபோல, சபையும் ஒன்றாய் இருப்பார்களாக என்று ஜெபம் பண்ணினதின் வாயிலாக விவரித்தவைகளை அதாவது, பிதா யாரென்றும், குமாரன் யாரென்றும், அவர்களுக்கிடையே நிலவின உறவையும், ஒற்றுமையையும், நாம் புறக்கணித்து விடக்கூடாது. அவர்கள் இருவரும் ஒருவரல்ல. மாறாக, இருதயத்திலும், நோக்கத்திலுமே ஒன்றுபட்டிருந்தார்கள்.”