R1915 (page 10)
லூக்கா 1:5-17
“நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கத்தரிசி எனப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம் பண்ணு… அவருக்கு முன்னாக நடந்து போவாய்.”- லூக்கா 1:76-77
இந்தப் பரிஜயமான சம்பவத்தைக் கவனிக்கையில், கர்த்தர் தம்முடைய மாபெரும் வேலையிலுள்ள பல்வேறு பாகங்களுக்கென்று, தாம் தெரிந்துக்கொண்ட பாத்திரங்களை ஆயத்தமாக்குவதில் காட்டும் மாபெரும் அக்கறையைக் குறித்து நாம் நினைப்பூட்டப் படுகின்றோம். ஆபிரகாமின் வாழ்க்கையானது விசுவாசத்திற்கும், பொறுமைக்குமான நீண்ட கால பயிற்சியாக இருந்தது; காரணம் அவர் விசுவாசத்தின் தகப்பனாக வேண்டும் என்பதேயாகும். மேலும், அவர் நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ் இருப்பவர்களுக்கும், புதிய உடன்படிக்கையின் கீழ் வருபவர்களுமான அவருடைய சகல ஜனங்களுக்கும் பொருத்தமான மாதிரியாய் இருப்பதற்கும், தேவனுக்கேயுரிய தகப்பன் ஸ்தானத்திற்கு நிழலாய் இருப்பதற்கும், ஆபிரகாமின் வாழ்க்கையானது விசுவாசத்திற்கும், பொறுமைக்குமான நீண்டகால பயிற்சியாக இருந்தது (ரோமர் 4:11-17).
மோசே, இஸ்ரயேலை வழிநடத்தும் தலைவனாக இருப்பதற்கும், இஸ்ரயேலுக்கு நியாயப்பிரமாணத்தை வழங்குவதற்கும், இஸ்ரயேலை நியாயம் விசாரிப்பதற்கும் விசேஷமாக ஆயத்தம் பண்ணப்பட்டார். மோசே இழிவான அடிமைத்தனத்தின் கீழும், மரணத்தீர்ப்பின் கீழும் பிறந்திருந்தாலும், இவர் தேவ வழிநடத்துதல் மூலம் பாதுகாக்கப்பட்டு, பதுக்கி மறைத்து வைக்கப்பட்டு இராஜ குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டார். அங்கு இவருடைய எதிர்க்கால வேலைகளுக்குப் போதுமான கல்வியறிவு வழங்கப்பட்டது. பின்னர், இவர் 40 ஆண்டுகள் மந்தைகளை மேய்க்கும்படி அனுமதிக்கப்பட்டார். இக்காலக்கட்டத்தில் தெய்வீகக் கிருபையினால் இவருடைய குணநலன்கள் பக்குவப்படுத்தப்பட்டது. மேலும் இவருடைய உணர்ச்சிவசப்படும் மனப்பான்மையும் பக்குவம் அடைந்தது. இவ்வாறாக தேவன் இஸ்ரயேலுக்குப் பயிற்சியளிக்கப்பட்டவரும், அனுபவசாலியுமான ஒருவரையே வழி நடத்தும் தலைவனாகக் கொடுத்தார். இதைப் போன்ற, ஆயத்தமாக்குதல்கள் மற்றவர்களின் விஷயத்திலும் கூட நடைப்பெற்றுள்ளது என்பதை, நம்மால் வேதாகம பதிவுகளிலும், வரலாறுகளிலும் பார்க்கக்கூடும். சாமுயேலின் விஷயத்தைப் பாருங்கள்; ஜெபத்தினால் பிறந்த இவர், குழந்தை பருவம் முதல் கர்த்தருக்கென்று அர்ப்பணிக்கப்பட்டு, ஏலியின் பராமரிப்பின் கீழ்க்கர்த்தருக்கான ஊழியத்தில் பயிற்றுவிக்கப்பட்டார். சிறு பருவத்திலே அழைக்கப்பட்ட பவுல், நியாயப்பிரமாணத்தின் கீழ்ப்போதிக்கப்பட்டுத் தேவன் பேரில் வைராக்கியம் உள்ளவராக இருந்தார். பக்தி வைராக்கியத்தில் தேவனுக்கு ஊழியம் செய்வதாக எண்ணிக் கொண்டு, பவுல் அறியாமையில் பரிசுத்தவான்களைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்தார்.
யோவான் ஸ்நானன் கூட ஓர் உதாரணமாவார். மற்றவர்களின் வாழ்க்கையில் நடந்தது போன்று, இவருடைய வாழ்க்கையிலும் ஆயத்தமாக்கும் விஷயங்கள், இவர் பிறப்பதற்கு முன்னதாகவே இவருடைய பெற்றோர்களின் இருதயத்தில் ஆரம்பித்தது. “அவர்கள் இருவரும் கர்த்தர் இட்ட சகல கற்பனைகளின் படியேயும், நியமங்களின் படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாய் இருந்தார்கள்” (வசனம்-6). வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறும் சீர்த்திருத்தவாதிகளைக் கவனித்துப் பாருங்கள். மேலும், அவர்களுக்குரிய அல்லது அவர்களுக்கு முன்பு உள்ள வேலைகளைக் குறித்து, அவர்கள் அறியாதிருக்கையிலேயே அவர்களை ஆயத்தமாக்கப்படுவதில் உள்ள வழிநடத்துதல்களையும் கவனித்துப் பாருங்கள். சுவிசேஷ யுகத்தின் சபையை, அவர்களின் ஆயிரவருட யுகத்திற்குரிய வேலைக்கென்று கர்த்தர் எவ்வாறு ஆயத்தப்படுத்துகின்றார் என்பதையும் கவனித்துப் பாருங்கள். மேலும், வரவிருக்கின்ற இராஜ்யத்தின் பூமிக்குரிய பாகத்தினுடைய வேலைகளுக்கென்று முற்பிதாக்களை எவ்வாறு கர்த்தர் ஆயத்தப்படுத்தினார் என்பதையும் கவனித்துப் பாருங்கள். மேலும், அவரால் “தெரிந்துக்கொள்ளப்பட்ட பாத்திரங்கள்” அனைத்தையும் கவனித்துப் பாருங்கள். “தெரிந்துக்கொள்ளப்பட்ட பாத்திரங்கள்” அனைத்தும் நியமிக்கப்பட்டுள்ள வேலைக்கென்று ஆயத்தமாக்கப்பட்ட பாத்திரங்களாகவே எப்போதும் இருக்கின்றனர். மேலும், பாத்திரம் தன்னைத்தானே ஆயத்தம் பண்ணாமல், தேவனே ஆயத்தம் பண்ணுகின்றார் என்கிற உண்மையானது, தெரிந்துக்கொள்ளப்பட்டவர் தான் செய்ய வேண்டிய வேலையை அறிந்துக்கொள்வதற்கு முன்னதாகவே, அவரில் ஆயத்தம் பண்ணும் விஷயங்கள் ஆரம்பித்து விடுகின்றதிலிருந்து விளங்குகின்றது.
தெரிந்துக்கொள்ளப்பட்ட பாத்திரத்திற்கான, கனத்திற்குரிய ஊழியத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தேவன் ஆயத்தப்படுத்த விரும்பும் முக்கியமான விஷயம் இருதயத்தில் பரிசுத்தமாகும். அதாவது, தேவன் பேரிலும் அவருடைய நீதியின் பேரிலும், சத்தியத்தின் பேரிலும் பயபக்தி கொள்ளச் செய்வதும், மற்றும் பரிசுத்த மற்றதும், அசுத்தமானதுமான யாவற்றின் பேரிலும் வெறுப்புக் கொள்ளச் செய்வதுமாகும். “கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதன் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்” (ஏசாயா 52:11). கர்த்தருடைய வேலைகளில்….. சில பாகங்கள் தேவனுடைய ஞானத்திற்கும், வல்லமைக்கும் கனம் சேர்த்திட்டாலும், அவைகளில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித கனமும் சேர்ப்பதில்லை. சத்துருக்களுடைய கோபத்தைக்கூடத் தேவனை மகிமைப்படுத்தும்படிக்குத் தேவன் மாற்ற வல்லவராக இருக்கின்றார். மேலும், தம்முடைய நோக்கத்திற்காக தீமையை, நன்மையாக மாற்றவும் தேவன் வல்லவராக இருக்கின்றார். உதாரணமாக, சாத்தான் மற்றும் தீமை செய்கிறவர்களுடைய தீமையான உபாதிகள் தெய்வீக வல்லமையினால் தேவனுடைய நன்மைக்கு ஏதுவாக மாற்றப்பட்டு, தேவனுடைய சில நோக்கங்களுக்காக ஊழியம் செய்கின்றனவாக ஆகிவிடுகின்றன. மேலும், சில சமயம் தேவனுடைய [R1916 : page 10] பிள்ளைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், சிலசமயம் உலகத்தின் விஷயங்களில் சீர்த்திருத்தம் கொண்டுவரவும் உதவுகின்றன.
யோவான் ஸ்நானனுடைய பிறப்பு முதல், அவருடைய இருதயமானது தேவனுக்கும், பரிசுத்தத்திற்கும் இசைவாகக் காணப்படத்தக்கதாக, அவர் பிறப்பதற்கு முன்பாக அவரிடத்தில் செயல்பட்ட தெய்வீக ஆதிக்கமானது அவரை நடத்தினது. மேலும், அவர் வயது வந்த போது, நீண்ட நாட்களாய் இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட மேசியாவை, அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வேலைக்கு ஆயத்தமாகத்தக்கதாக, அவரது வாழ்க்கையின் பயிற்சியானது அவரை வழிநடத்தினது (வசனம்-15). அவரைக் குறித்து, “அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாய் இருப்பான்” என்று கூறப்பட்டுள்ளது. ஆம், யோவான் ஸ்நானன் மாபெரும் மனுஷனாகவும், ஒரு மாபெரும் பிரசங்கியாகவும், ஒரு மாபெரும் தீர்க்கத்தரிசியாகவும் இருந்தார். இவர் தீர்க்கத்தரிசிகள் எல்லோரிலும் பெரியவர் என்று இயேசு, மத்தேயு 11:11-ஆம் வசனத்தில் குறிப்பிடுகின்றார் என்றாலும், இவர் மனுஷருடைய பார்வையில் மகா பெரியவராகத் தென்படவில்லை. இவர், ஒருபோதும் ஏரோதின் அரண்மனையில் விருந்தினராக அழைக்கப்பட்டதில்லை என்றாலும், ஏரோதின் சிறைச்சாலைகளில் இவர் ஒரு கைதியாகக் காணப்பட்டார். இவர் யூதமத ஆலயங்களில் புகழ்மிக்க பேச்சாளராக இருக்கவில்லை என்றாலும், இவர் வனாந்தரத்திலே எழும்பும் கூக்குரலாகக் காணப்பட்டார். இவர் இரத்தாம்பரத்தினாலும், மெல்லிய பஞ்சு நூலினாலும், வஸ்திரத்தினாலும் தன்னைச் சிங்காரிக்கவும் இல்லை, தினந்தோறும் ஆடம்பரமாகச் செலவழிப்பவராகவும் இவர் இருக்கவில்லை. மாறாக, இவர் ஒட்டகத்தின் மயிரினாலான வஸ்திரத்தையும், தோல் கச்சையையும் தரித்தவராகவும், காட்டுத் தேனையும், வெட்டுக்கிளியையும் புசித்தவராகவுமே காணப்பட்டார். ஒரு சில காலங்கள் திரளான ஜனங்கள் இவருடைய பிரசங்கத்தினால் கவரப்பட்டு இருந்தாலும் கூட, வெகு சீக்கிரத்தில் இவர் ஜனங்களால் புறக்கணிக்கப்பட்டு, இராஜாவினால் சிறை வைக்கப்பட்டு, இறுதியில் சிறைக்குள் சிரச்சேதம் பண்ணப்பட்டார்.
எனினும், யோவான் உண்மையிலேயே ஒரு மாபெரும் மனுஷனாக இருந்தார்; காரணம் அவர், “கர்த்தருடைய பார்வையில் மகா பெரியவராக இருந்தார்.” பட்டணத்தைக் கைப்பற்றுகிறவனைப் பார்க்கிலும் தன்னுடைய சொந்த ஆவியை தெய்வீக வார்த்தையின் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளுக்கு இசைவாக ஆளுபவனே பெரியவன் என்ற விதத்தில்தான், யோவான் ஸ்நானனும் பெரியவராக இருக்கின்றார் (நீதிமொழிகள் 16:32). பிறப்பிலும், சூழ்நிலைகளிலும் எளிமையான மனுஷனாகக் காணப்பட்டவரும், தன்னுடைய பெற்றோரின் உடன்பிறந்தோரின் மகனாகக் காணப்பட்டவருமான நாசரேத்தூரின் இயேசுவை, மேசியாவாக ஜனங்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரே வேலைக்கு என்று, தனது சகல மாம்சீக விருப்பங்களையும், நோக்கங்களையும்/இலட்சியங்களையும் அடக்கிவிட்டார். இயேசுவை அறிமுகப்படுத்தும் தனது வேலையை, தான் நிறைவேற்றின பின்னரே ஜனங்கள் சேர்க்கப்படுவார்கள் என்று யோவான் அறிந்திருந்தார் (ஆதியாகமம் 49:10). இப்படிச் செய்வதில் யோவான் பிரியமாக இருந்தார். மேலும், மாம்சத்தின்படி தனது உறவினனான இயேசுவுக்கு இவ்வேலையைச் செய்ததினிமித்தமும் தெய்வீக நோக்கத்தில், தீர்க்கத்தரிசனத்தில் தனக்கு உள்ள பங்கை நிறைவேற்றினபோதும் இவருடைய சந்தோஷம் சம்பூரணமாயிற்று என்று தெரிவித்தார் (யோவான் 3:29). எளிமையான நாசரேத் ஊரானாகிய இயேசுவில், யோவான் தன்னுடைய விசுவாசக் கண்களினால், தேவனுடைய குமாரனைக் கண்டபடியால் யோவான் ஜனங்களை நோக்கி, “என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல” என்றும், “இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றும், “அவர் பெருகவும், நான் சிறுகவும் வேண்டும்” என்றார் (லூக்கா 3:16; யோவான் 1:29 3:30).
இந்த எளிமையும் (சாந்தமும்), முழுமையான சுயத்தின் தியாகமும் மற்றும் தேவனுடைய நீதியான சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற இவருடைய ஒரே நோக்கமுமே/தெளிவான நோக்கமுமே யோவானைப் பெரியவராக்கிற்று. கர்த்தர் இவரைப் பயன்படுத்தத்தக்கதான இம்மாதிரியான இருதயத்தின் மனப்பான்மை இவரிடம் இருந்தபடியால், தீர்க்கத்தரிசிகள் எல்லோரிலும் இவர் பெரியவராகவும், மிகவும் கனம் பொருந்தினவராகவும் இருக்கும் சிலாக்கியம் இவருக்குக் கிடைத்தது. மேலும், இஸ்ரயேலுக்கும், உலகத்திற்கும் தேவனுடைய அபிஷேகம் பெற்ற குமாரனை, மீட்பரை, முழு உலகத்தின் எதிர்க்கால இராஜாவை அறிமுகப்படுத்துவதற்குத் தெரிந்துக்கொள்ளப்பட்ட சிலாக்கியம் இவருக்குக் கிடைத்தது. இவ்வாறாக, யோவான் ஸ்நானன் மாபெரும் மனுஷனாகவும், நீதி மற்றும் சத்தியத்தின் மாபெரும் பிரசங்கியாகவும், தீர்க்கத்தரிசிகள் எல்லோரிலும் பெரியவராகவும், தேவனுடைய இராஜ்யத்தில் பூமிக்குரிய பாகத்தின் சுதந்தரவாளிகளில் ஒருவராகவும் ஆனார்.
“கர்த்தருடைய பார்வையில் பெரியவனாக” இருக்க நாடும் ஒவ்வொருவருக்கும் இங்கு எவ்வளவு நன்மைக்கு ஏதுவான பாடங்கள் காணப்படுகின்றது. இது அப்போஸ்தலரின் ஞானமான எச்சரிப்பை நமக்கு நினைப்பூட்டுகின்றது. அதாவது, “ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” (1 பேதுரு 5:6). சிலுவையின் பாதையும், தாழ்மையின் பாதையும், அவமானத்தின் பாதையும், சுயத்தைத் தாழ்த்தும் பாதையுமே கிரீடத்திற்குரிய பாதையாகவும், தேவனிடத்திலிருந்து மாத்திரமே வரும் உண்மையான கனத்திற்கு நேரான பாதையாகவும் இருக்கின்றது. பூமியிலிருந்து கடந்துபோய்விட்ட சீசர்கள், ஏரோதுகள், அலெக்ஸ்சாண்டர்கள், நெப்போலியன்கள், யூதமத பரிசேயர்கள், வேதபாரகர்கள், வேத பண்டிதர்கள், [R1916 : page 11] ரபீகள் ஆகிய பூமியின் மகா பெரியவர்களின் கனம் இப்பொழுது எங்கே போயிற்று? போப்புகள், கண்காணிகள், போப்பின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் இவர்களுடைய நாட்களில் பொருமையாய்ச் செழித்தோங்கின பாதிரிகளின் கனம் எங்கே? இவர்கள் அனைவரும் வெறுமையான நிலைக்கு வந்துள்ளனர். மேலும், இவர்கள் ஆயிரம் வருடத்தில் நியாயத்தீர்ப்பின் நாளில் வெட்கமடைந்து, இவர்களின் கனம் உரிந்து போடப்படும் நிலமைக்கு வருவார்கள். ஆனால், “கர்த்தருடைய பார்வைக்கு முன்பாக மகா பெரியவர்களாகக் காணப்படுகிறவர்களாகிய” அந்த உண்மையுள்ளவர்கள், இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தில் வல்லமையிலும், மகிமையிலும், கனத்திலும் உயர்த்தப்படுவார்கள்.
“உங்களில் பெரியவன் சிறியவனைப் போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப் போலவும் இருக்கக்கடவன்” என்ற பாடம் நம்முடைய இருதயத்திற்குள் நிலைத்து நிற்பதாக (லூக்கா 22:26). இப்போது தாழ்த்தபடுவதற்குப் பொறுமையோடு ஒப்புக்கொடுப்போமாக மற்றும் உண்மையுள்ள யாவருக்குள்ளும் வெளிப்படப்போகும் மகிமைக்காகச் சந்தோஷத்துடனும், நம்பிக்கையுடனும் காத்திருப்போமாக. இது பலன்கள் கொடுக்கப்படுவதற்கான காலமாகவோ, இடமாகவோ இராமல், ஒழுங்குகள் கற்றுக்கொள்வதற்கும், ஊழியம் செய்வதற்கும், குணலட்சணங்களை வளர்த்துக்கொள்வதற்கும் எதிர்க்காலத்தில் உயர்த்தப்படுவதற்கு ஏதுவான ஆயத்தமாக்குதல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், கறைதிரையற்றவர்களாக நம்மை நிறுத்துவதற்கு ஆயத்தமாக்குவதற்கும், நம்முடைய மீட்பரோடு உடன்சுதந்தரர்களாகும்படிக்கு ஆயத்தமாக்குவதற்குமே இது இடமாகவும், காலமாகவும் உள்ளது.
16 மற்றும் 17-ஆம் வசனத்திற்குரிய விளக்கங்களை அறிந்துக்கொள்வதற்கு வேதாகம பாடங்கள் (Volume) இரண்டாம் தொகுதி, 8-ம் அத்தியாயத்தைப் பார்க்கவும்.