R2635 (page 154)
மத்தேயு 9:35,10:8
“பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.” – மத்தேயு 10:20
எவ்விதமான இடையூறும் இல்லாமல், நமது கர்த்தர் பட்டணந்தோறுமுள்ள ஜெப ஆலயங்களில் இராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு ஏதுவாக, யூதர்கள் மத்தியில் நிலவியிருந்த சுதந்திரம் மாபெரும் பாராட்டிற்கு ஏதுவானதாகும். ஒருவேளை இன்றைய நாட்களில் உள்ள ஏதேனும் ஆலயங்களில், ஏதேனும் சபை பிரிவுகளில் கர்த்தர் போதிக்க முற்பட்டிருந்திருப்பாரானால், அவருக்கு அது மறுக்கப்பட்டிருக்கும் என நாம் நிச்சயமாக எண்ணுகின்றோம்; வேதவாக்கியங்கள் அறிவிக்கும் விஷயங்களைக் கடைப்பிடிப்பதில் இயேசு எவ்வளவுதான் உண்மையுள்ளவராக இருந்தாலும் சரி, மற்றும் அவருடைய போதனைகள் மிகவும் விளக்கமாகவும் / தெளிவாகவும் இருந்தாலும் சரி, இவைகள் இன்று பொறுப்பில் உள்ளவர்களுக்கு, அதாவது இராஜ்யம் தொடர்பான தங்களுடைய சொந்த கோட்பாட்டை உடையவர்களுக்கு, அதிலும் ஆராய்ச்சி பண்ணினால் நிலைநிற்க முடியாத கோட்பாட்டை உடையவர்களுக்கு, அதாவது தங்களுடைய பெலவீனம் வெளிப்படுவதை விரும்பாதவர்களுக்கு மிகவும் திருப்திகரமற்றவைகளாகவே காணப்படும். மத விஷயங்கள் தொடர்பான காரியங்களில் யூதர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படும் இப்படியான சுதந்திரமற்ற தன்மையானது, அவர்களுக்கே ஊறு விளைவிக்கின்றதாகக் காணப்படும். அதாவது, தற்கால அறுவடை செய்தியின் சந்தோஷமான சத்தத்தைக் கேட்கும் விஷயத்தில் கிறிஸ்தவர்களுக்கு மிகுந்த இடர்பாட்டைக் கொண்டு வருகின்றதாய் இருந்துவிடும்.
நமது கர்த்தர் அநேகரைச் சொஸ்தப்படுத்தினபோதிலும், இன்னும் பெருந்திரளான வியாதியஸ்தர்கள் சொஸ்தமடைவோம் என்ற நம்பிக்கையில், பல்வேறு திசைகளிலிருந்து வந்து அவரிடம் குவிந்தனர்; மேலும், இஸ்ரயேலின் இந்த மந்தைகளுக்காக அவர் மனதுருகினார் என்பதாக நாம் வாசிக்கையில், அவருடைய இரக்கம், அவருடைய பரிவு, அவருடைய அன்பு குறித்து ஆழமாய் உணர்ந்துக்கொள்ள முடிகின்றது; மேலும், பிதா கொடுத்த மகிமையை விட்டு, பரிசுத்தமான தேவதூதர்களையும் பிரிந்து, மனித நிலையை எடுக்கும் அளவுக்குத் தம்மைத் தாழ்த்தினவர், பெலவீனமானவர்களுக்காகவும், பாவிகளுக்காகவும், சீரழிந்துப் போனவர்களாகவும், வலி உடையவர்களாகவும் இருப்பவர்கள் மேல், மனதுருக்கம் கொள்வது குறித்து, நாம் ஆச்சரியம் அடையவில்லை; மாறாக, அவர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியாகவே இருந்துள்ளார் [R2635 : page 155] என்பதாக நாம் எண்ணுகின்றோம். இப்படியான மனதுருக்கம் இல்லையெனில், அவரால் எப்படி நமது மீட்பராக இருக்க முடியும்? மற்றும் நம் பொருட்டு எப்படி அவர் பரலோக மகிமையைத் துறந்து வந்திருக்கக்கூடும்! அவர் இன்னமும் அப்படியாகவே இருக்கின்றார் என நாம் எண்ணுகையில், இது எத்துணை புதிய நம்பிக்கையை நமக்குக் கொடுக்கின்றதாக இருக்கின்றது? நமது பெலவீனங்களும், பூரணமின்மைகளும் ஒருபுறம் இருப்பினும், முழு உலகமாகிய தவித்துக் கொண்டிருக்கும் சிருஷ்டியின் பெலவீனங்களும், பூரணமின்மைகளும் இன்னொருபுறம் இருப்பினும், அதேசமயம் இயேசு மனதுருக்கம் கொண்டவராகவே இருக்கின்றார் என்பது எத்துணை புதிய நம்பிக்கையை நமக்குக் கொடுக்கின்றதாக இருக்கின்றது. அதுவும் தம்முடைய ஜனங்கள் மீது மாத்திரமல்லாமல், ஏற்றக்காலத்தில் பூமியின் குடிகள் அனைத்தின் மேலும் மனதுருக்கம் கொண்டிருந்து, பாவத்தினால் மனரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும், சரீர ரீதியாகவும் ஏற்பட்டுள்ள அழிவுகளினின்று குணமடைவதற்கான முழுவாய்ப்பும் அனைவருக்கும் அருளுவார். கர்த்தர், பிதா நியமித்துள்ள வேளைக்காக மாத்திரமே காத்துக்கொண்டிருக்கின்றார் என்பது எத்துணை புதிய நம்பிக்கையை நமக்குக் கொடுக்கின்றதாக இருக்கின்றது; பின்னர் வேளை வரும்போது, தம்முடைய உண்மையுள்ளவர்களோடு, அதாவது தம்முடைய இராஜ்ய வகுப்பாரோடு, ஆபிரகாமின் சந்ததியாகக் காணப்பட்டுத் திரும்பக்கொடுத்தலின் காலங்களில் தேவனோடு ஒப்புரவாகிக் கொள்வதற்கான முழு வாய்ப்புடனும், இதன் விளைவாக நித்திய ஜீவனை அடைவதற்கும் ஏதுவாக, பூமியன் சகல குடிகளையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
நாம் பார்த்துக் கொண்டிருக்கின்ற இப்பாடத்தின் காலத்தில், அவருடைய வேலை பரந்த அளவில் செயல்படவில்லை; இன்றுங்கூட அப்படியாகச் செயல்படவில்லை. இயேசுவின் நாட்களில் ஒப்புரவாகுதல் தொடர்பான அவருடைய செய்தியும், அவருடைய உதவியும் சுபாவத்தின்படியான மாம்சீக இஸ்ரயேல் வீட்டாராகிய தொலைந்துப்போன ஆட்டிற்கு மாத்திரமே கொடுக்கப்பட்டிருந்ததே ஒழிய, சமாரியர்களுக்கோ அல்லது புறஜாதிகளுக்கோ கொடுக்கப்படவில்லை. அதற்குப் பின் ஒப்புரவாகுதலின் ஆசீர்வாதமானது சமாரியர்கள் அல்லது புறஜாதியார்கள் மத்தியில் கேட்பதற்குச் செவியுடையவர்களாய் இருந்தவர்களுக்கு அருளப்பட்டது. அதாவது, இவர்களுக்கு இந்தச் சுவிசேஷ யுகத்தில் ஒப்புரவாகுவதற்கான சிலாக்கியம் கிடைத்தது; ஆனால், சிறியவர் முதல் பெரியவர் வரை கர்த்தரை அறிந்துக்கொள்வதற்கென, செவிடான காதுகளைத் திறப்பதற்கான மாபெரும் காலம் இனிவரும் ஆயிரவருஷம் யுகத்திலேயே ஆகும்.
உதவி வேண்டிய நிலையிலும், உதவியை விரும்பியும் காணப்படுபவர்கள் இருப்பது வரையிலும், கர்த்தருடைய குணலட்சணத்தில் ஒரு பாகமாக இந்த மனதுருக்கம் செயலாக்கத்தில் / அமலில் காணப்படும்; மேலும், இந்த மனதுருக்கமானது, உதவியை வாஞ்சிக்கிறவர்கள் அனைவரும் உதவியைப் பெற்றுத்தீரும் ஆயிரவருஷம் யுகத்தின் முடிவு வரையிலும் செயல்படும்; அவருடைய உதவியை வேண்டுமென்றே புறக்கணித்து விட்டவர்கள் மாத்திரமே ஆசீர்வதிக்கப்படாதவர்களாகக் காணப்படுவார்கள். ஆயிரவருஷம் யுகத்திற்குப் பிற்பாடு அவருடைய மனதுருக்கம் காண்பிக்கப்படுவது நிறுத்தப்படும். ஏனெனில், அதற்குப் பிற்பாடு மனதுருக்கம் அவர் கொள்வதற்கு அவசியம் இராது. ஏனெனில், கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய கிருபையின் மூலம், பூரணமாய் இருப்பவர்கள் தேவனிடத்தில் ஒப்புரவாகிவிடுவதால், அவர் மனதுருக்கம் கொள்வதற்கு அவசியம் இராது.
ஜனங்கள் மீது நமது கர்த்தர் கொண்டிருந்த மனதுருக்கத்தினிமித்தம், வியாதிகள் முதலியவைகளைச் சொஸ்தப்படுத்தும் வல்லமை தரிப்பிக்கப்பட்டவர்களாக, அவர் தமது பிரதிநிதிகளை அனுப்ப வேண்டியிருந்தது. மேலும், தம்முடைய எண்ணத்தைத் தமது சீஷர்கள் புரிந்துக்கொள்ளத்தக்கதாகவே, அவர்களிடம் அறுவடை மிகுதி என்றும், வேலையாட்கள் கொஞ்சம் என்றும், இவ்விஷயத்திற்காக அவர்கள் ஜெபம் ஏறெடுக்க வேண்டும் என்றும் கூறினார். அவர்களுடைய ஜெபம் கண்டிப்பாக பின்வருமாறு காணப்பட வேண்டும், அதாவது “”அறுவடையின் ஆண்டவரே, அறுவடையில் என்னை அறுக்கிறவனாக அனுப்பும்”; என்பதேயாகும். இயேசு தாமே அறுவடையின் ஆண்டவராக இருக்கின்றார்; முழுக் காரியமும் கர்த்தருடைய கரங்களில்தான் இருந்தது; மேலும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும், அறுவடை வேலையின் அதிகரிப்பைக் குறித்த அவருடைய எண்ணத்தையும், சிந்தையையும் உடனடியாகக் கிரகித்துக் கொண்டார்கள்; ஆகவே, அவர்களை இருவர் இருவராக அனுப்பி வைத்தார்; எனினும் அவருடைய சொந்த ஊழியத்தை அவரே எல்லைக்குட்படுத்தியிருந்தது போல, மாம்ச இஸ்ரயேலர்களுக்காக மாத்திரமே அவர்களது வேலையையும் எல்லைக்குட்படுத்தினார். ஏனெனில், தேவனுடைய அனைத்து உடன்படிக்கைகளும், வாக்குத்தத்தங்களும் மாம்சீக இஸ்ரயேலர்களுக்கே உட்பட்டதாயிருந்தது; மற்றும் பிதாவினால் நியமிக்கப்பட்ட ஏற்றவேளை வரையிலும் அதாவது, தீர்க்கத்தரிசியாகிய தானியேல் மூலம் விசேஷமாகக் குறிப்பிடப்பட்ட இஸ்ரயேலுக்கான கிருபையின் எழுபது வாரங்களுடைய முடிவில் அதாவது, நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டு, மூன்றரை வருடத்திற்குப் பின்வரையிலும், மற்ற ஜனங்களுக்கு வாய்ப்புத் திறக்கப்படுவதில்லை / வெளிப்படுத்தப்படுவதில்லை.
“”அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (மத்தேயு 10:1). இந்த வல்லமை / அதிகாரம் பரிசுத்தஆவியினுடைய வல்லமை/அதிகாரமேயாகும்; இது இவர்கள் பிற்பாடு பெந்தெகொஸ்தே நாளில், பிதாவிடமிருந்து பெற்றுக்கொண்ட அதே ஆவியாக இருந்ததெனினும், வேறுபட்டதாகவும் இருந்தது. இவர்களுக்கு அருளப்பட்ட வல்லமையானது, பரிசுத்த ஆவி அல்லது தேவனுடைய வல்லமை வெளிப்படுத்தின விதத்தில் வித்தியாசப்பட்டாலும், எப்போதும் இது ஒரே வல்லமைதான் என்ற விதத்தில் அது அதே வல்லமைதான். இவர்களுக்கு அருளப்பட்ட வல்லமையானது, நமது கர்த்தராகிய இயேசுவின் ஆவியாகவும், அவருக்கு அளவில்லாமல் அருளப்பட்டதுமான வல்லமையாக (அ) ஆவியாக இருக்கின்றபடியால், அது பரிசுத்தமானதுதான்; இப்படியாக அவரிடத்திலிருந்த ஆவியைத்தான், அப்போஸ்தலர்கள் தமது பிரதிநிதிகளாக இருந்து, தம்முடைய நாமத்தில் ஒரு வேலையைச் செய்யத்தக்கதாக, அப்போஸ்தலர்களுக்கு அந்நேரம் அருளினார்.
வியாதிகள் சொஸ்தமாக்கப்பட்டபோது, சொஸ்தம் உண்டாகத்தக்கதாக நமது கர்த்தர் இயேசுவிடமிருந்து உயிர் ஆற்றல் கடந்துப் போனது என்றும், இவ்விதமாக ஒவ்வொரு சொஸ்தமடைதலும், அவரிடமிருந்து அவருடைய சொந்த உயிர் ஆற்றலையும், அவருடைய சொந்த ஜீவனுக்கான சக்திகளையும் எடுத்துக்கொள்வதாக இருக்கின்றது என்றும் நாம் [R2636 : page 155] அனுமானிக்கின்றபடியினால், இச்சம்பவத்திலும் கூட வியாதியஸ்தர்களைச் சொஸ்தப் படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வல்லமை, இயேசுவின் வல்லமை என்றும், சீஷர்கள் தங்களுடைய சொந்த உயிர் ஆற்றலைக் கொடுக்காமல், அவர் அவர்களுக்கு, கொடுத்ததும், “”இலவசமாய்ப் பெற்றுக் கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” என்று அவர் கூறி பயன்படுத்தும்படிக்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுத்ததுமாகிய அவருடைய வல்லமையையே (உயிர் ஆற்றலையே) என்றும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். (சீஷர்கள்) தங்களுக்கு இழப்பாய் இராததும், ஆனால் இயேசுவுக்கு தினந்தோறும், ஒவ்வொரு மணி நேரமும் இழப்பாய் இருக்கின்றதுமாகியவைகளையே (வியாதிகள் சொஸ்தப்படுத்தும்போது) கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்வதன் மூலம், தினந்தோறும் நமது கர்த்தர் இவ்விதமாக தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்தார் என்ற இக்கருத்தை நாம் புரியும் போதுதான், மூன்றரை வருடங்களாகிய சுருக்கமான காலப்பகுதியில், அவருடைய பரிபூரணமான ஜீவன் எப்படி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை நம்மால் நன்கு புரிந்துக்கொள்ள முடியும்.
வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்துவதும், பிசாசுகளைத் துரத்துவதும், அப்போஸ்தலர்களின் ஊழியங்களில் ஒரு பாகமேயாகும். இவைகளோடுக்கூட அவர்கள் இராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டியிருந்தது. அதாவது, தேவனுடைய இராஜ்யம் சமீபித்துள்ளது என்ற நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டியிருந்தது; மற்றும் அற்புதங்களினால் உண்டாகும் செல்வாக்கானது, இச்சுவிசேஷத்தின் மீது கவனத்தை ஈர்க்கின்றதாகவும், இராஜ்யத்திற்காக ஜனங்களை ஆயத்தப்படுத்துவதற்காகவும், அதற்கு எதிர்ப்பார்த்திருக்கப் பண்ணுகின்றதாகவும் காணப்பட வேண்டும். ஆனால், பதிவுகளைப் பொறுத்தமட்டில், ஜனங்கள் அற்புதங்களுக்காகவும், சொஸ்தமாக்கப்படுவதற்காகவும் வாஞ்சித்தார்கள் என்றும், இராஜ்யம் தொடர்பான விஷயத்தில் அக்கறையற்றவர்களாகவும் காணப்பட்டர்கள் என்றும் நாம் பார்க்கின்றோம். இயேசுவிடமும், அவருடைய சீஷர்களிடமுமிருந்து சொஸ்தமடைதலை ஜனங்கள் பெற்றுக் கொள்ள விரும்பினார்கள். ஆனால், தேவனுடைய இராஜ்யம் எப்படி மற்றும் எப்பொழுது வரும் என்பது தொடர்பான தகவல் அறிய விரும்புகையில், வழக்கம்போல, ஜனங்கள் தங்களுடைய குருடான வழிகாட்டிகளையே தேடிச்சென்றனர்.
இஸ்ரயேல் முழுவதும் நடந்திட்ட இந்த ஊழியத்தினுடைய செல்வாக்கு/தாக்கம் முற்றிலும் வீணாகவில்லை என்றும், கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டதற்குப் பிற்பாடு, பெந்தெகொஸ்தே [R2636 : page 156] நாளில் பரிசுத்த ஆவி சீஷர்கள் மீது இறங்கின பிற்பாடு, இவர்கள் இராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பல்வேறு கோணங்களில் பிரசங்கித்து, கிறிஸ்துவுடன் இணையும்படி உத்தம இஸ்ரயேலர்கள் அனைவரையும் வரவேற்று, இவ்வாறாக அவருடன், இராஜ்யத்தில் உடன் சுதந்திரர்களாகும்படி வரவேற்றார்கள் என்றும் நாம் எண்ணுகின்றோம். கர்த்தருக்கென்று தங்களை அர்ப்பணம் பண்ணுவதன் மூலம் சபையாகிய, கருநிலையிலுள்ள இராஜ்யத்திற்குள் அநேகர் பிரவேசித்தார்கள்; இந்த அநேகருக்குள், சந்தேகத்திற்கிடமின்றி ஏற்கெனவே அற்புதங்களைக் கண்டும், கேட்டவர்களும் இருந்திருக்கக்கூடும். மேலும் இவைகளை, பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின் சில நாட்களுக்குள்ளாகவே பல்லாயிரம் பேர், கிறிஸ்தவர்களானார்கள் என்ற விஷயம் உறுதிப்படுத்துகின்றது.
யூத யுகத்தின் முடிவிலுள்ள அறுவடையானது, இந்தச் சுவிசேஷ யுகத்தின் அறுவடைக்கு நிழலாக இருக்கின்றது. அப்பொழுதுபோல இப்பொழுதும் இயேசு, அறுவடையின் கர்த்தராகவும், அவருடைய சீஷர்கள், கூட்டிச் சேர்க்கின்ற வேலையில் அவருடைய பிரதிநிதிகளாகவும் இருக்கின்றனர். அப்பொழுதுபோல இப்பொழுதும், சீஷர்களை நோக்கி, அறுவடை மிகுதி என்றும், வேலையாட்கள் குறைவு என்றும், மேலும் இவ்விஷயத்தில் நம்மிடம் ஒருவேளை அவருடைய ஆவி இருக்குமாயின், அவருடைய வேலைக்கு நம்மை அனுப்பும்படி நாம் அவரிடத்தில் வேண்டினால், நம்மை அவர் அனுப்பப் பிரியம் கொள்வார் என்றும் கூறுகின்றார். அநேகர் இன்று இப்படியாக தினந்தோறும் ஜெபித்து, அறுவடை வேலையில் தங்கள் கைக்கு அகப்படுவதைச் செய்வதற்குத் தினந்தோறும் நாடுகின்றவர்களாகக் காணப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்களை அவர்களுடைய ஊழியத்தில் வழிநடத்துவதற்கும், இவர்களுடைய சொந்த நன்மைக்காகவும், மற்றவர்களுடைய நன்மைக்காகவும் இவர்களுடைய பலன்களை/விளைவுகளை ஆசீர்வதிப்பதற்கும் கர்த்தர் கிருபையுள்ளவராக இருக்கின்றார். அன்று இப்படியாக சீஷர்கள் அனைவரும் ஜெபம் பண்ணி, அறுவடை வேலையில் சில பாகங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டதுபோல, இன்றும் கூட உண்மையுள்ள சீஷர்களனைவரும் இப்படியாக ஜெபம் பண்ணிக்கொண்டு, ஊழியத்தை/வேலையை எதிர்ப்பார்த்து, ஊழியத்திற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்துகின்றவர்களாகக் காணப்பட வேண்டும்.
அன்றும், இன்றுமுள்ள அறுவடை வேலையின் முறைகள் சற்று வித்தியாசமாக இருப்பினும், கிட்டத்தட்ட ஒன்றுதான். தற்காலத்து அறுவடை என்பது, மாம்சீக இஸ்ரயேலர்கள் விஷயம் அல்ல மற்றும் அறுவடையில் அறுக்கிறவர்களின் கைகளில் கொண்டு வரப்படும் ஆசீர்வாதங்கள், பூமிக்குரிய ஆசீர்வாதங்களும் அல்ல, அதாவது, சரீரப் பிரகாரமான நோய்களின் சுகப்படுத்துதல்கள் அல்ல. மாறாக இவைகளைப் பார்க்கிலும், மேலான ஆசீர்வாதங்கள் ஆகும். அதாவது, மாம்ச கண்களைத் திறப்பதைப் பார்க்கிலும், புரிந்துக்கொள்ளுதலின் கண்கள் திறக்கப்படுவது என்பது மேலான ஆசீர்வாதமாகும்; மாம்ச காதுகள் திறக்கப்படுவதைப் பார்க்கிலும், கர்த்தருடைய மாபெரும் திட்டம் தொடர்பான காரியங்களில் செவிட்டுத் தன்மை அகற்றப்படுவது மிக விலையேறப் பெற்ற உதவியாகும். அன்றைய காலத்தைப் பார்க்கிலும், இன்று இராஜ்யம் அளிக்கப்படும் காரியம் மிகவும் உறுதியாக உள்ளது, மற்றும் அன்றைக்கு விட இன்றைக்கு மிகத் தெளிவாகவும் விவரிக்கக்கூடும். ஏனெனில், இராஜ்யம் வெகு சமீபமாய் இருக்கின்றது, வெகு அண்மையில்/வாசலருகில் காணப்படுகின்றது; மேலும், தற்கால அமைப்புகள் மாற்றிப் போடுவதற்கு ஏதுவாக, அசைக்கப்படுவதையும் உலகத்தாரால் பார்க்க முடிகின்றது; மற்றும் அசைக்கப்பட முடியாத உண்மையுள்ளவைகள் கர்த்தருடைய நீதியின் ஆளுகையின் கீழ் நிலைவரப்படுத்தப்படும்.
இன்று இந்தச் சுவிசேஷ யுகத்திற்கான விளைந்த கோதுமையைத் தேடும், அறுவடை வேலையாட்கள் ஒவ்வொருவரும், யூத அறுவடையின்போது காணப்பட்ட வேலையாட்களுக்குச் சொல்லப்பட்டுள்ள “”பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்” என்ற வார்த்தைகளை நினைவில் கொள்ள வேண்டும் (மத்தேயு 10:20). அற்புதகரமாகப் பேசும் வல்லமைகள் நமக்கு அருளப்படும் என்று நாம் எதிர்ப்பார்க்கக்கூடாது. மாறாக, சத்தியம் மற்றும் அதன் ஆவியினால் நாம் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்; அப்பொழுது நாம் பேசுவது நம்முடைய சொந்த ஞானத்திற்குரியதாக இராது; நாம் அறிவிப்பது நமது சொந்த திட்டமாகவும் இராது. மாறாக, பரத்திலிருந்து வருகின்ற ஞானத்தையும், நமது தேவனாகிய கர்த்தருடைய திட்டத்தையுமே பேசுகின்றவர்களாக உண்மையில் காணப்படுவோம்.