R3354 (page 122)
லூக்கா 12:35-48
“”எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள்.” (வசனம் 37)
சம்பவிக்கவிருக்கும் தம்முடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்து நமது கர்த்தர் போதனைகளைக் கூறின பிற்பாடு, மற்றும் மறுரூப மலையில் கொடுத்திட்ட தரிசனமானது மேலும் இப்படிப்பினையை அப்போஸ்தலர்களுக்கு வலியுறுத்தின பிற்பாடு, நமது கர்த்தர் தம்முடைய இரண்டாம் வருகையைக்குறித்தும், இரண்டாம் வருகை வரைக்குமான இடைப்பட்டக் காலத்தில் அப்போஸ்தலர்கள் கொண்டிருக்க வேண்டிய மனப்பான்மையைக்குறித்தும், அப்போஸ்தலர்களுக்கு [R3354 : page 123] விளக்க ஆரம்பித்தார். கர்த்தர் பூமியில் இல்லாதிருக்கும் காலங்களில், அவருடைய ஜனங்கள் தொடர்ந்து விழிப்புடன் காணப்பட வேண்டும். அவர்கள் அரைக்கட்டிக்கொண்டு இருப்பது என்பது, அவர்கள் எல்லா வேளைகளிலும் ஊழியத்திற்கு ஆயத்தமாய் இருப்பதை, அதாவது இராஜ்யத்திற்கு அடுத்த வேலைகளில் உற்சாகமாகப் பங்கெடுத்துக்கொள்வதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. அக்கால வழக்கத்தின்படி, தளர்வான நீண்ட வஸ்திரங்கள் பயன்படுத்தப்பட்டன, மேலும் வேலைகள் செய்யத்தக்கதாக, அரைகளில் கச்சைகள் கட்டப்பட்டது. ஓய்வு எடுக்கும்போது கச்சைகள் தளர்த்தப்பட்டன. ஆகவே அரைக்கட்டிக்கொண்டிருப்பதாக வசனப்பகுதிகளில் சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது, கர்த்தர் நம்மோடு பூமியில் இல்லாமல் இருக்கும் பொழுது, கர்த்தருடைய ஜனங்கள் தொடர்ச்சியாக ஊழியங்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் எனும் படிப்பினையைக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. நாம் இவ்வுலகத்திற்கடுத்தக் கவலைகளினால் அமிழ்த்தப்பட்டு, துக்கித்துக்கொண்டிருக்கக் கூடாது. மேலும் இவ்வாறாக தூங்கிக்கொண்டு, நமக்கென அளிக்கப்பட்ட கடமையைச் செய்வதைத் தவிர்த்தல் கூடாது.
கர்த்தருடைய வேலைக்காரர்கள் ஒவ்வொருவரும், ஒளியைச் சுமப்பவராக அடையாளப்படுத்தப்படுகின்றனர்; மேலும் அவருடைய நற்கிரியைகளைக் கண்டு மனுஷர்கள் பரலோகத்திலுள்ள பிதாவை மகிமைப்படுத்தும்படிக்கு ஏதுவாக, அவன் தன்னுடைய ஒளியை, மனுஷர்கள் முன்பாக பிரகாசிக்கப் பண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றான். இருளும், அறியாமையும், மூடநம்பிக்கையும், பாவமும் உலகத்தில் காணப்பட்டிருக்க, கர்த்தருடைய சீஷர்களுக்கு தெய்வீக வெளிப்பாடு, ஞானம் மற்றும் புரிந்துக்கொள்ளுதலுக்கான ஒளி அருளப்பட்டிருக்கின்றது; இந்த ஒளியானது இவர்களை மறுரூபமாக்கி, புதிய சிருஷ்டிகளாக ஆக்குவதோடுகூட, இவர்கள் வாயிலாக, இவர்களுடன் தொடர்புக்குள் வரும் அனைவருக்கும் பிரகாசிக்கின்றதாகவும் இருக்கின்றது என்பதே சித்தரிக்கப்பட்டுள்ளது. (மத்தேயு 5:14) “”நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கின்றீர்கள்” மாபெரும் ஒளியாகிய, ஆயிர வருட காலை வேளையின் மகிமையான சூரிய உதயம் இன்னமும் நடைபெறவில்லை என்பதும், காலை வேளைக்குக் காத்திருப்பவர்களாகவும், அதற்கு விழித்திருந்துப் பார்த்துக்கொண்டிருப்பவர்களாகவும், கர்த்தருடைய ஜனங்கள் இன்னமும் உலகத்தில் சிறு ஒளிகளாக, இருளின் மத்தியில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதும் இங்கு நாம் பார்க்கும் கருத்தாகும். இதற்கு இசைவாகவே தீர்க்கத்தரிசியின் வார்த்தைகளாகிய . . . (சங்கீதம் 30: 5) “”சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்” என்று காணப்படுகின்றது. இருள், அறியாமை மற்றும் பாவத்தின் இந்த இரவு வேளையானது, தகப்பனாகிய ஆதாமின் கீழ்ப்படியாமையினால் நம்முடைய சந்ததிமேல் வந்த மரண சாபத்துடன் ஆரம்பமானது; மேலும் சர்வ சிருஷ்டியானது காலைக்காக காத்திருந்து தேவனுடைய புத்திரர்களாகிய, கிறிஸ்து இயேசுவும், இராஜ்யத்தில் அவருடன் உடன் சுதந்தரர்களாக இருக்கும் அவருடைய சகோதரர் வெளிப்படுவதற்குக் காத்திருந்து, ஏகமாய்த் தவித்துக் கொண்டிருக்கின்றது.
தம்முடைய பின்னடியார்களிடம் காணப்பட வேண்டிய விழிப்பும், ஜாக்கிரதையாய் இருத்தலையும் குறித்து விவரிக்கும் வண்ணமாக, நமது கர்த்தர் ஓர் உவமையைப் பேசினார். வீட்டெஜமான் தன்னுடைய வீட்டில் தன்னுடைய மணவாட்டியைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு வரும் இரவு (அ) காலை வேளையில், வேலைக்காரர்கள் அதிகளவில் விழிப்பாய் இருப்பதற்கு (அ) வீட்டாருடைய நலனில் அதிகம் அக்கறையாய் இருப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுவது போன்று, வேறு எந்தத் தருணத்திலும், யூதர்கள் மத்தியில் எதிர்ப்பார்க்கப்படுவதில்லை. இந்த ஒரு விஷயத்தைத் தம்முடைய பின்னடியார்கள் தம்முடைய இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கும் போது, கொண்டிருக்க வேண்டிய விழிப்புத்தன்மையை விளக்குவதற்கு, கர்த்தர் தேர்ந்தெடுத்துக்கொண்டார். உண்மையைச் சொல்லப்போனால் இவ்வுவமையிலுள்ள வேலைக்காரர்கள், வேறொரு உவமையில் உள்ள மணவாட்டிகளாக இருக்கின்றனர்; ஆனால் காரியம் அங்கு வேறு கண்ணோட்டத்திலிருந்து விவரிக்கப்படுகின்றதாய் இருக்கின்றது. இங்குள்ள மிக முக்கியமான பாடம் என்னவெனில், ஊழியத்தில் கடுமையான முயற்சி காணப்பட வேண்டும், இன்னுமாக ஆண்டவருடைய நோக்கத்திற்கடுத்தக் காரியங்களில் விழிப்பாய்க் காணப்பட வேண்டும், இன்னுமாக அவருடைய இரண்டாம் வருகையைப் பற்றின அவருடைய வாக்குத்தத்தத்தின் மீது விசுவாசம் கொண்டிருக்க வேண்டும்; அவருடைய வருகையைப் பற்றின எதிர்ப்பார்ப்பானது, நேர்த்தியாய் ஊழியம் செய்வதற்குத் தூண்டுதலாக (அ) உதவியாக இருக்கின்றது. எஜமான் தன்னுடைய கூட்டத்தாருடன் திரும்பி வரும் போது, தான் வந்திருப்பதைத் தெரிவிக்கையில், கதவைத் திறப்பதற்கு ஆயத்தமாய் இருப்பதற்குப் பதிலாக ஒருவேளை வேலைக்காரர்கள் தூங்கிக் கொண்டிருப்பதை எஜமான் காண்பது என்பது எஜமான் மீதான வேலைக்காரர்களின் அன்பிலும், ஈடுபாட்டிலும், அக்கறையிலும் இருக்கும் குறைவை வெளிப்படுத்துகின்றதாய் இருக்கும்.
நம்முடைய கர்த்தருடைய இரண்டாம் வருகையின்போது அவருடைய உண்மையுள்ள ஊழியக்காரர்கள் அவர் வந்திருப்பதை உணர்ந்துக்கொள்வதற்கு முன்னதாகவே, அவர் வந்து காணப்பட்டிருப்பார் என்ற காரியத்தை இந்த உவமை தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. அவருடைய வந்திருத்தலானது, கதவுத் தட்டப்படுவதன் மூலமாக அறிவிக்கப்படும்; கதவைத் தட்டுதல் என்பது, ஏதோ விசேஷித்த ஊழியக்காரன் அல்லது ஊழியக்காரர்கள், ஒன்றின் வாயின் வார்த்தைகள் (அ) அச்சடிக்கப்பட்ட காகிதத்தின் வாயிலாக ஆண்டவருடைய பிரசன்னத்தின் சான்றுகளை முன்வைக்கப்படுவதன் மூலமான ஓர் அறிவித்தலைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. உதாரணத்திற்கு, காலத் தீர்க்கத்தரிசனங்கள் பற்றின வெளியீடானது, அந்தக் காலம் நிறைவேறியுள்ளதையும், சுவிசேஷ யுகத்தினுடைய இறுதியிலும், ஆயிர வருட யுகத்தின் ஆரம்பத்திலும் நடைப்பெறும் சம்பவங்களைக் குறிப்பிடும் சில தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளதையும், வேதவாக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சில அடையாளங்கள் நிறைவேறியுள்ளதையும் காட்டுகின்றது; இத்தகைய சாட்சிகளே, கதவு தட்டுதலின் வடிவில் காணப்படுகின்றது; இந்தக் கதவு தட்டப்படுதலின் சத்தமானது, அக்காலத்தில் விழித்திருக்கும் கர்த்தருடைய ஊழியர்களினால் கேட்கப்படும். ஊழியர்கள் இந்தக் கதவு தட்டுதலைச் செய்வதில்லை, மாறாக இந்தக் கதவு தட்டுதலையும், அறிவித்தலையும் பண்ணுவதற்குப் பயன்படத்தக்கதாக, அவர் தேர்ந்தெடுக்கும் சக்திகளையும், பிரதிநிதிகளையும் அவரே செயல்படுத்துவார்.
அக்கால கட்டத்தில் விழிப்பாய் இருந்து, கதவு தட்டும் சத்தத்தைக் கேட்டு, அதைப் புரிந்துக்கொண்டு, ஆண்டவரை வரவேற்பவர்களாகிய ஊழியர்களுக்கு, ஓர் ஆசீர்வாதம் வாக்களிக்கப்பட்டுள்ளது. 39-ஆம் வசனமானது, ஊழியர்களைத் தவிர வேறு எவரும் கதவு தட்டப்படுதலை உணர்ந்துக்கொள்ள மாட்டார்கள், அதாவது பொதுவான உலக ஜனமானது ஆண்டவர் திரும்பி வரும் வேளையை அறிவதில்லை, மாறாக அவருடைய ஊழியக்காரர்கள் மாத்திரமே அறிந்துக்கொள்வார்கள் என்பதைத் தெளிவாய்க் காண்பிக்கின்றது. எஜமானுடைய வருகைக்கெனக் குறிப்பிட்ட நேரம் எதுவும் சொல்லப்படவில்லை, மாறாக காலங்களையும், [R3355 : page 123] வேளைகளையும் அறிவது அவர்களுக்கடுத்த வேலை இல்லை என்பதும், மாறாக அவர்கள் முதலாம் ஜாமத்தில் மாத்திரமல்லாமல், இரண்டாம், மூன்றாம் ஜாமங்களிலும், எந்த ஜாமத்திலும் எஜமான் கதவைத் தட்டும் சத்தம் கேட்கையில், தாங்கள் உடனடியாகச் செயல்படத்தக்கதாகத் தொடர்ந்து விழிப்புடன் காணப்பட வேண்டும் என்பதும் தெளிவாகச் சுட்டிக்காட்டப்படுள்ளது. எஜமான் எப்போது வருவார் என்று ஊழியக்காரர்கள் ஒருபோதும் அறிந்துக்கொள்ளமாட்டார்கள் என்பதாகக் கருத்துத் தெரிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். அவருடைய வந்திருத்தலின் போது, விழிப்பாய்க் காத்திருந்து, கவனித்துக் கொண்டிருக்கும் தம்முடைய ஊழியர்கள் அனைவராலும் உணர்ந்துக்கொள்ளப்படத்தக்கதாக, அவர் கதவு தட்டுதலைத் தெரியப்படுத்துவார் என்பதே கருத்தாக இருக்கின்றது. கதவு தட்டப்படும் சத்தத்தை ஊழியர்களால் ஒருவேளை அறிந்துக்கொள்ள முடியாது (அ) சாத்தியம் இல்லை என்றால், கதவு தட்டுதலின் பயன் என்ன? கதவு தட்டுதல் என்பது வந்திருத்தலுக்கான சாட்சியாக இருக்கின்றது; ஊழியர்கள் முன்கூட்டியே அறிந்துக்கொள்ள முடியாது, மாறாக வந்திருக்கும் போதுதான் அறிந்துக்கொள்வார்கள்; அதுவும் கண்களினால் பார்க்காமல் அறிந்துக்கொள்வார்கள்.
இந்த ஊழியர்களுக்கான விசேஷித்த பலன் என்ன? (லூக்கா 12:37) “”அவர் அரைக்கட்டிக்கொண்டு (அவர்களுக்கு ஊழியக்காரனாகி) அவர்களைப் பந்தியிருக்கச் செய்து சமீபமாய் வந்து, [R3355 : page 124] அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்” என்று உவமை தெரிவிக்கின்றது. இது நமது கர்த்தருடைய இரண்டாம் வருகையில், அவருடைய வந்திருத்தலை அவருடைய ஊழியக்காரர்களில் எவரேனும் அறிந்துக்கொள்வதற்கு முன்னதாகவே வந்து இருப்பார் என்பதைத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. அவர் வந்தாகிவிட்டது என்ற அறிவிப்பைக் கொடுப்பார் (அ) கதவைத் தட்டுவார். அவரை எதிர்ப்பார்த்தும், கதவு தட்டப்படுதலுக்கு விழிப்பாய் இருந்தும், ஆயத்தமாய் இருந்தவர்கள் மாத்திரமே, கதவு தட்டப்படுதலைக் கேட்பவர்களாய்க் காணப்படுவார்கள். அவர்கள் விசேஷித்த ஆவிக்குரிய விருந்தைப் பெற்றுக்கொள்வார்கள். அது விசேஷமாய் இருக்கும், காரணம் அது விசேஷித்தத் தருணத்தில் கொடுக்கப்பட்டதினாலும் மற்றும் அவர்களுடைய அக்கறையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்தினதற்கான, விசேஷித்தமான பலனாக இருக்க நோக்கம் கொள்ளப்பட்டதினாலும் ஆகும். அது விசேஷமானது காரணம், வீட்டின் எஜமான், வீட்டிற்கு ஊழியக்காரனாக ஆகியுள்ளார், மேலும் கிருபை மற்றும் ஆசீர்வாதங்களில் சகல ஐசுவரியவான்களின் திறவுகோல்களையும்கொண்டு, அவர் தம்முடைய பொக்கிஷசாலையிலிருந்து, உணவு சாலையிலிருந்து பழையதும், புதியதும், பலமானதும், மென்மையானதுமான அனைத்தையும் வெளிக்கொண்டுவருவார். முன்பு ஒருபோதும் அருளப்படாத அளவுக்கு உண்மையுள்ளவர்கள், இராஜரிகமான விருந்தை நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள்.
நாம் கூறும் இவ்விஷயங்கள் ஏற்கெனவே நிறைவேறிவிட்டது. பழைய ஏற்பாட்டின் தீர்க்கத்தரிசனங்களில் குறிப்பிட்டுள்ளபடி, கர்த்தருடைய கதவைத் தட்டுதல் அல்லது அதிகாரப் பூர்வமான அறிவிப்பு, 1875-ஆம் வருடம் முதற்கொண்டு கொடுக்கப்படுகின்றது; மேலும் இன்னமும் கொடுக்கப்பட்டு வருகின்றது. உவமையில் கதவு தட்டப்படுதல் என்பது, ஒரு சில வினாடிகள்தான் செய்யப்பட்டது, ஆனால் இது நிறைவேறுவதற்குச் சில வருடங்கள் எடுத்துக்கொள்ளப்படும். (விசுவாச) வீட்டாரின் ஊழியக்காரர்கள் கவனித்துக்கொண்டு வருகின்றனர்; மேலும் ஒவ்வொருவனும் கர்த்தருடைய வந்திருத்தல் குறித்த உண்மைக்குத் தன்னுடைய இருதயத்தையும், மனதையும் திறக்கையில், வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதத்தின் நிறைவேறுதலை அடைகிறான், அதாவது ஆவிக்குரிய கொழுத்தப் பதார்த்தங்களுடைய விருந்தை அடைகின்றான், அதாவது தெய்வீகத் திட்டம் பற்றின உணர்ந்துக்கொள்ளுதலையும், புரிந்துக்கொள்ளுதலையும், மற்றும் முன்பு ஒருபோதும் இல்லாத அளவுக்கு ஆத்துமா போஷிக்கப்படுதலையும், பெலப்படுத்தப்படுதலையும் அடைகின்றான். ஊழியக்காரர்களுக்கு ஆண்டவர் ஊழியம் புரிவது என்பது, ஒட்டுமொத்தமாய் அனைவருக்கும் கொடுக்கப்படும் விருந்தாய் இராமல், தனிப்பட்ட விதத்திலான வேலையாகவே புரிந்துக்கொள்ளப்பட வேண்டும்; இக்காரியம் (வெளி 3: 20 “”இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் (தனிப்பட்ட ஒருவன்) என் சத்தத்தைக் (கதவு தட்டுதலைக்) கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்” என்ற வார்த்தைகளில் உறுதிப்படுகின்றது. இந்த வெளிப்படுத்தல் 3:20-ஆம் வசனம் என்பது, ஏழாம் காலக்கட்ட சபைக்கானச் செய்தியாகும்.
இரவு நேரத்தைக் கணக்கிடும் முற்காலத்து யூத முறைமையின்படி, இரண்டாம் ஜாமம் என்பது, பத்திலிருந்து இரண்டு மணி வரைக்கும் மற்றும் மூன்றாம் ஜாமம் என்பது, இரண்டிலிருந்து ஆறுமணி வரைக்குமாகக் காணப்படுகின்றது. எஜமான் எந்த ஜாமத்தில் வருவார் என எதிர்ப்பார்க்கப்படலாம் என்று உவமை தெரிவிப்பதில்லை. தாமதத்திற்கு ஏற்ப, ஊழியக்காரர்களின் உண்மை பரீட்சிக்கப்படுகின்றதாய் இருக்கின்றது. முதலாம் ஜாமத்தில் தூங்காமல் விழித்திருப்பது என்பது, அநேகருக்குச் சுலபமாய் இருக்கும், ஆனால் இரண்டாம் ஜாமத்தில், அநேகரால் விழித்திருக்க முடிகிறதில்லை, இன்னும் வெகுசிலரே மூன்றாம் ஜாமத்தில் விழித்திருப்பார்கள். உவமையிலுள்ள இக்காரியத்திற்கு இசைவாகவே, இன்று மணவாளனுடைய வருகை மற்றும் அவருடைய உண்மையுள்ள வீட்டாருக்குக்கொண்டு வரப்படும் இராஜ்யத்தின் மகிமையான காரியங்கள் தொடர்புடைய காரியங்களில், கிறிஸ்தவ ஜனங்கள் மத்தியில் தூக்கமயக்கம் காணப்படுவதை நாம் காண்கின்றோம். சீயோனில் அநேகர் தூங்கிக்கொண்டிருக்கின்றனர்; அநேகர் இவ்வுலகத்திற்கடுத்த கவலைகளினாலும், ஐசுவரியத்தின் மயக்கத்தினாலும் அமிழ்த்தப்பட்டுள்ளனர். உலகப்பிரகாரமான ஜனங்கள் மாத்திரமே வியாபாரத்தையும், பணத்தையும், இன்பங்களையும் தெய்வமாக ஆக்கிக்கொள்ளவில்லை, மாறாக இருதயத்தில் நீதியை விரும்புகின்றவர்களும், கர்த்தருடைய ஊழியர்களாகக் கருதப்படுவதற்கு விரும்புகிறவர்களும் கூட, கடுமையாக உலகத்தின் காரியங்களில் அமிழ்ந்து மூழ்கி காணப்படுகின்றனர். இவர்களுடைய இருதயங்கள் இவைகளினால் மிகவும் நிரம்பியுள்ளபடியினாலும், இவர்களுடைய மனங்கள் இன்பத்தின், தனிப்பட்டக் காரியங்களின் மற்றும் சபை மார்க்கத்தின் கனவுகளினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதினாலும், இவர்களால் கதவுத் தட்டப்படுதலைக் கேட்க முடிவதில்லை. இவர்கள் ஆண்டவருடைய வந்திருத்தலை அறிந்துக்கொள்வதில்லை; இவர்கள், கர்த்தருடைய ஜனங்களால் நீண்ட காலமாய்க் காத்திருக்கப்பட்டு, (மத்தேயு 6:10) “”உம்முடைய இராஜ்யம் வருவதாக” என உண்மையாய் ஜெபம் ஏறெடுக்கப்பட்டக் காரியம் தொடர்பான, இந்த அருமையான அறிவிப்பிற்கும் தங்களுடைய இருதயங்களைத் திறந்து வைக்கவில்லை. இதன் விளைவாக இவர்கள் நம்முடைய கர்த்தருடைய உவமையிலும், தானியேல் தீர்க்கத்தரிசனத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ள மாபெரும் ஆசீர்வாதத்தை இழக்கின்றவர்களாய் ஆகுகிறார்கள், “”ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்” (தானியேல் 12:12).
“”திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்” (லூக்கா 12:39). திருடன் வருகிறவிதமான வருகைப் பற்றி இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது; மேலும் கன்னமிடவொட்டான் என்பதற்கான கிரேக்க வார்த்தையினுடைய அர்த்தம் “”உள்ளுக்குத் தோண்டுதல்” என்பதாகும். முற்காலத்தில் பெரும்பான்மையான வீடுகள் கல்லினாலோ, செங்கல்லினாலோ செய்யப்படாமல், காய்ந்த மண்ணினாலே கட்டப்பட்டன் இது கிட்டத்தட்ட மேற்குப் பகுதிகளிலும், மெக்சிகோவிலுமுள்ள சில முக்கிய இடங்களிலும் கட்டப்படும் அடோப் வீடுகள் (adobe houses) போன்றுக் காணப்படும். கதவின் வழியாக பலவந்தம் பண்ணி உள்ளே வருவதை விட, சுவரின் அருகே தோண்டுவதன் மூலம் சீக்கிரமாய் இம்மாதிரியான வீடுகளுக்குள் பிரவேசித்திடலாம். வீட்டெஜமான், கர்த்தரைக் குறிக்க முடியாது, ஏனெனில் வீடு, “”தற்கால தீமையான உலகத்தை,” தற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமுதாய அமைப்பைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. தற்கால அமைப்புகளுக்குச் சாத்தான், “”இவ்வுலகத்தின் தேவனாகவும்,” “”இவ்வுலகத்தின் அதிபதியாகவும்” இருப்பதினாலுங்கூட, இங்கு வரும் வீட்டெஜமான், சாத்தானாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இங்கு வரும் வீட்டெஜமான், பூமிக்குரிய அரசாங்கங்களைக் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதாவது தானியேல் கண்ட நாலாம் மிருகம் மற்றும் சிலையின் பத்து விரல்களாகிய பிரதிநிதிகளை, அதிகாரங்களைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது.
கர்த்தருடைய ஊழியர்கள் மத்தியில், விழித்திருக்கும் ஊழியக்காரர்களால் கேட்கப்படுவதும், அதே வேளையில், தூங்கியும், உலகக் கவலைகளில் அமிழ்த்தப்பட்டும் காணப்படும் அவருடைய ஊழியக்காரர்களால் கேட்கப்படாமல் இருப்பதுமாகிய கர்த்தருடைய இரண்டாம் வருகை மற்றும் கதவு தட்டுதலின் காரியமானது, முற்றிலுமாக உலகத்தாரால் அறிந்துக்கொள்ளப்படுவதில்லை. இவர்களைப் பொறுத்தமட்டில், அவருடைய வந்திருத்தல் என்பது, இவர்கள் நீண்ட காலமாய் எதிர்ப்பார்த்து, ஊழியம் செய்ய எஜமானாய் இருப்பதில்லை, மாறாக கர்த்தரை இவர்கள் எதிராளியாக கருதுவார்கள், ஏனெனில், அவர் இல்லாத வேளையில், இவர்கள் அவருடைய வீட்டை எடுத்துக்கொண்டு, அவருடைய வருகையின் நேரத்தை அறிந்திருப்பார்களானால், இவர்கள் ஏதாகிலும் விதத்தில் தங்களை வலுப்படுத்திக்கொண்டு, தற்கால அமைப்புகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், தொடர்ந்து நீடித்து நிலைத்திருக்கப் பண்ணுவதற்கும் முயன்றிருப்பார்கள்.
உலகத்தின் மீது திருடனாய் வருதல் என்பது அமைதியாய் வருதலை, ஆரவாரம் இல்லாமல், [R3355 : page 125] எவரும் அறியாதவாறு, சத்தமில்லாமல் அல்லது பறைசாற்றுவோன் இல்லாமல் வருதலைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. ஆண்டவர் தம்முடைய ஊழியக்காரர்களுக்குக் கதவைத் தட்டிக்கொண்டிருப்பது என்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது போன்று, பலவானுடைய வீட்டிற்குள் உடைத்துப் புகுவது என்பது அடையாளப்படுத்தும் தற்கால அமைப்புகள், அதாவது அரசியல், மதம், சட்டம், பொருளாதாரம் பற்றின அமைப்புகளுக்குள், உடைத்துப் புகுவதும் ஏற்கெனவே நடைபெற ஆரம்பமாகிவிட்டது. ஒட்டுமொத்த சமுதாய அமைப்பும் புதிய பிரபுவின் கட்டுப்பாட்டின் கீழ்க் காணப்படுகின்றது. அவர் தம்முடைய சேனைகளை ஏற்பாடு பண்ணிக்கொண்டிருக்கின்றார். மேலும் மனுஷனுடைய கோபம் தமக்குத் துதியை உண்டாக்குவதற்கும், சுயநலத்தின்மேல் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு அமைப்பையும் கவிழ்த்துவதற்குமாகிய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் செய்வார். விழுகை மிகபெரியதாய்க் காணப்படும். “”யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்.” ’உம்முடைய இராஜ்யம் வருவதாக” என அவருடையவர்கள் அனைவரும் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும், கர்த்தருடைய பிரம்மாண்டமான இராஜ்யத்தை, இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தருமானவர் அழிவுகளின்மேல் கட்டுவார்; மேலும் கர்த்தரால் இந்த இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்போது அது, “”சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டதாக” நிச்சயமாய் காணப்படும் (ஆகாய் 2:7).
இப்பாடத்தின் சாரமானது 40-ஆம் வசனத்தில் சுருக்கமாய்த் தெரிவிக்கப்பட்டுள்ளது; “”அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்” (லூக்கா 12:40). மனுஷகுமாரனுடைய வருகையின் வேளையைக் குறித்து எவரும் அறிந்திருக்கமாட்டார்கள். முன்கூட்டியே அறிந்துக்கொள்ளும் விதத்தில், அவ்வேளை தெரிவிக்கப்படவில்லை. அவர் கதவைத் தட்டுதலே, அவருடைய பிரசன்னத்திற்கான முதல் சுட்டிக்காட்டுதலாகும். இப்படியாகவே நிறைவேறியும் உள்ளது; கர்த்தருடைய வருகை எப்போது நடக்கும் என்று நம்மில் எவரும் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை; வருகை சம்பவித்தப் பிற்பாடே, நாம் கதவு தட்டப்படுதலைக் கேட்டோம்; அதாவது பழைய ஏற்பாட்டின் தீர்க்கத்தரிசனங்களின் வாயிலான அவருடைய சத்தமானது, நாம் ஏற்கெனவே அறுவடை காலத்திலும், மனுஷகுமாரனுடைய பிரசன்னத்தின் நாட்களிலும் காணப்படுகின்றோம் என்பதை நமக்குத் தெரிவிக்கின்றது. “”நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரனின் வந்திருத்தலின் காலத்திலும் நடக்கும்” என்ற கர்த்தருடைய வார்த்தைகள் நிறைவேறியுள்ளது (மத்தேயு 24:37). நோவாவின் நாட்களில் சம்பவிக்கயிருந்த சம்பவங்களைக் குறித்து, உலகமானது அறியாமையில் இருந்து, அறியாமையில் புசித்தும், குடித்தும், நட்டும், கட்டியும் காணப்பட்டது போன்று, மனுஷகுமாரனுடைய வந்திருத்தலின் உண்மையைக்குறித்த அறியாமையில் காணப்பட்டு, ஜீவியத்தின் அன்றாட காரியங்களை வழக்கம் போல நடத்திக்கொண்டிருப்பார்கள் என்னும் கருத்தையே மேற்கூறப்பட்டுள்ள வசனம் தெரிவிக்கின்றது. “”சகோதரர்கள்” மாத்திரமே கதவு தட்டும் சத்தத்தைக் கேட்டு, வந்திருத்தலை உணர்ந்துக்கொண்டு, ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.
பன்னிரண்டு பேருக்கு மாத்திரமாகவா அல்லது சீஷர்களாகும் அனைவருக்கும் இந்த உவமை பொருந்துமா, இல்லையா என்று பேதுரு கேட்டார். இயேசு, “”பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்?” (லூக்கா 12:42) என்று பதிலாகக் கொடுத்தப்போது, இக்கேள்வியைப் புறக்கணித்தவராகக் காணப்பட்டார். உவமையைப் புரிந்துக்கொள்வதற்கான சரியான வேளை வரும்போது, உவமையானது, கேள்விக்கான பதிலைத் தெளிவாய் முன்வைக்கும் என்பதே கருத்தாகும்; அதாவது உவமையானது நிறைவேறும் காலத்தில், கர்த்தர் இக்காரியங்களை, தம்முடைய ஊழியக்காரர்கள் அனைவரின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு, விசுவாச வீட்டாரில் ஓர் ஊழியக்காரனை நியமிப்பார் என்பதும், இக்கட்டளைகளை நிறைவேற்ற வேண்டிய அந்த ஊழியக்காரனுக்குச் சில பொறுப்புகள் இருக்கின்றது என்பதுமாகும். ஒருவேளை அந்த ஊழியக்காரன் இவைகளை உண்மையாய்ச் செய்வாரானால், மாபெரும் ஓர் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்; ஆனால் ஒருவேளை உண்மையாய்ச் செய்யவில்லை என்றால் கடுமையான தண்டனையை அடைவார். ஒருவேளை அந்த ஊழியக்காரன் உண்மையாய் இருந்தாரானால், தனது வேலையைத் தொடர்ந்து செய்யலாம். ஆனால் ஒருவேளை உண்மையில்லாமல் இருப்பாரானால், அவ்வூழியக்காரன் தள்ளப்பட்டு, வேறொருவன் அந்த ஸ்தானத்தையும், அந்த ஸ்தானத்திற்கான பொறுப்புகளையும் எடுத்துக்கொள்வான் என்பதும் கருத்தாகும்.
நமது கர்த்தருடைய வார்த்தைகள், பல பேர் அடங்கிய விசாரணைக்காரர்களைக் குறிப்பதாக அர்த்தங்கொள்வதற்கு நாம் முற்படலாம், அதாவது இவ்வுமையில் குறிப்பிடப்படும் விசாரணைக்காரன், குறிப்பிட்ட சகோதரர்களின் எண்ணிக்கையுடைய வகுப்பாரைக்குறிப்பதாக [R3356 : page 125] அர்த்தங்கொள்வதற்கு நாம் முற்படலாம். இப்படியாக அர்த்தங்கொள்ள முற்படும் விஷயத்தில், அநேக சிக்கல்களும் ஏற்படுகின்றது.
(1) விசாரணைக்காரன் என்பதைச் சபையில் ஒரு வகுப்பாராக அனுமானித்துக்கொள்வது என்பது, விசுவாச வீட்டாருக்கு, உடன் ஊழியர்களுக்கு இந்த விசாரணைக்காரன் ஏற்றக்கால சத்தியத்தை வழங்குவதினால், மீதமான சபை ஜனங்களிடமிருந்து இந்த விசாரணைக்காரன் வகுப்பார் தனிப்பட்டவர்களாக, அதிகாரமுடைய வகுப்பாராக அல்லது சபை குருமார் தொகுதியாகக் (clerical class) கருதப்பட வேண்டியிருக்கும் நிலையைக்குறிப்பதாய் இருக்கும். கிறிஸ்துவின் சபையானது குருமார் (clergy) தொகுதியையும், மற்றும் பொது ஜனங்கள் (laity) தொகுதியையும் உடையதல்ல, மாறாக, “”நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கின்றீர்கள்” என்றும், “”கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கின்றார்” என்றுமே நாம் வாசிக்கின்றோம் (மத்தேயு 23;10; கலாத்தியர் 3:28). அந்த ஏற்றவேளையில் கர்த்தர் தம்முடைய சபையில் ஓர் அங்கத்தைப் பயன்படுத்துவார் என்றும், அந்த ஓர் அங்கத்தைக் கருவியாகப் பயன்படுத்தி, அக்காலத்திற்கு ஏற்ற செய்திகளையும், ஆவிக்குரிய போஷாக்குகளையும் அனுப்பி வைப்பார் என்றும் எடுத்துக்கொள்வது என்பது கொள்கைக்கு எதிரான காரியமாக இராது; ஏனெனில் முற்காலங்களில், அநேக வேளைகளில், கர்த்தர் இவ்விதமாய்த் தனிப்பட்ட நபர்களைப் பயன்படுத்தியிருக்கின்றார். உதாரணத்திற்குப் பேதுரு, பரலோக இராஜ்யத்தின் திறவுகோல்களைப் பெந்தெகொஸ்தே நாளிலும், பின்னர் கொர்நேலியுவின் வீட்டிலும் பயன்படுத்தினார் என்றும் பார்க்கின்றோம்; மேலும் இரண்டு இடங்களிலும் விசேஷித்த சத்தியங்களைக் கொடுப்பது தொடர்புடைய விஷயத்தில், பேதுரு விசேஷித்த ஊழியக்காரனாகப் பயன்படுத்தப்பட்டார். இதனிமித்தம் பேதுரு, சபையின் மீதோ, மற்ற அப்போஸ்தலர்கள் மீதோ கர்த்தராக/ஆண்டவராக இருக்கவில்லை, மாறாக ஓர் ஊழியக்காரனாகவே இருந்தார்.
(2) விசாரணைக்காரன் எனும் வார்த்தையை, ஒரு கூட்டமான கர்த்தருடைய ஜனங்களுக்கு நாம் பொருத்த முயற்சித்தாலும், இவ்வுமையில் குறிப்பிடப்பட்டுள்ளப்படி அநேகம் விஷயங்கள், ஒரு கூட்டத்தாருக்குப் பொருந்துவதில்லை. உதாரணத்திற்கு, 43-ஆம் வசனத்தில் இடம்பெறும், “”அந்த ஊழியக்காரன்” எனும் வார்த்தைகளானது பொது மொழிப்பெயர்ப்பில் “”that faithful” என்றும் திருந்திய மொழிப்பெயர்ப்பில் (Revised) “”that faithful Steward” என்றும் இடம்பெறுகின்றது; ஒரு தனிப்பட்ட நபரைக் குறிப்பதாகவே கூறப்பட்டுள்ளது; அதிக எண்ணிக்கையானவர்களைக் குறிப்பதாகக் கூறப்படவில்லை. இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள ஊழியக்காரன் சரீரத்தின் மற்ற அங்கங்களாகிய, தன்னுடைய சக ஊழியக்காரர்களுக்கு உணவு வழங்குவதாகக் கூறப்பட்டிருக்கின்றபடியினால், விசாரணைக்காரன்/ஊழியக்காரன் என இந்த உவமையில் இடம்பெறும் வார்த்தையானது தனிப்பட்ட நபரையே குறிக்கின்றதாய் இருக்கின்றது. பேதுருவைக்குறித்து நாம் தெரிவித்தது போலவே, பேதுரு விசேஷமாக பயன்படுத்தப்பட்ட காரணத்தினால் பேதுரு, சகோதரர்களுக்கு எஜமானராய்/ஆண்டவராய் இல்லை. இதைப் போன்று, இவ்வுமையில் குறிப்பிடப்படும் நபரும் ஆண்டவராகவோ (அ) எஜமானராகவோ (அ) சர்வாதிகாரியாகவோ [R3356 : page 126] இருப்பதில்லை. ஒருவர் மாத்திரமே, இவ்வுமையில் சொல்லப்பட்டுள்ள ஊழியக்காரன் ஆகுவதற்குச் சிலாக்கியம் அடைவாரே ஒழிய, இந்த ஸ்தானத்தை விரும்பும் அனைவரும், “”அந்த ஊழியக்காரன்” ஆகுவதில்லை என்பதே நம்மால் சொல்ல முடிந்த காரியமாக இருக்கின்றது. “”அந்த ஊழியக்காரன்,” ஒருவேளை உண்மையுள்ளவராகக் காணப்படுவாரானால், உண்மையில் அவர் வீட்டாருக்கு ஏற்ற கால உணவை அளிப்பது போலவே, ஏற்ற கால சத்தியத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் வழங்குவதற்கு அதிகதிகமாய்ப் பொறுப்பளிக்கப்படுவார். நியமிக்கப்பட்ட இந்த ஊழியக்காரனிடத்தில் உண்மையில்லாதிருந்தால், அவருடைய ஊழியத்திலிருந்து பின்வாங்கி போய்விடுவதைக் குறிக்கின்றதாய் இருக்கும்; இன்னுமாக வேலையானது அவரிடமிருந்து, அவருக்குப் பின்வரும் இன்னொருவருக்குச் சென்றுவிடும்.
(லூக்கா 12:44) “தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான்” என்ற 44-ஆம் வசனத்தின் வார்த்தைகளானது, எதிர்க்கால மகிமைகள் மற்றும் கனங்கள் விஷயத்திற்குப் பொருந்தும் என்பதாக எடுத்துக்கொள்ளப்படாமல், மாறாக இந்த அறுவடை வேலையில் பாதுகாக்கப்பட வேண்டிய (அ) விநியோகிக்கப்பட வேண்டிய கர்த்தருடைய சத்தியங்களை வழங்குவது தொடர்புடைய விஷயங்களில் மாத்திரமே விசாரணைக்காரனாகப் பொறுப்புக் கொடுக்கப்படும் என்றே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லப்பட வேண்டுமெனில், இந்த அறுவடைக்கான ஏற்றக் கால சத்தியத்தை வழங்குவதற்கான கர்த்தருடைய அந்த விசாரணைக்காரன், ஒருவேளை உண்மையுள்ளவராக, தாழ்மையுள்ளவராக, எச்சரிக்கையுள்ளவராகக் காணப்படுவாரானால், அந்த விசாரணைக்காரன் தொடர்ந்து அப்படியாக காணப்பட்டு, அறுவடையின் முடிவு வரையிலும், வீட்டாருக்கான ஊழியத்தில், கர்த்தரால் அதிகமதிகமாய்ப் பயன்படுத்தப்படுவார்.
அந்த ஊழியக்காரன் ஆண்டவர்/எஜமான் போன்று செயல்படக் கூடாது (அ) கருதப்படக் கூடாது என்பது 45-ஆம் வசனத்தில் தெளிவாய்ச் சுட்டிக் காண்பிக்கப்படுகின்றது; இந்த வசனமானது, அந்த ஊழியக்காரன் தன்னுடைய ஸ்தானத்தைத் தவறாய்ப் பயன்படுத்தினால், பின்னிட்டு விழுந்துபோவான் என்பதைக் காட்டுகின்றது. இக்காலத்திலேயே, கர்த்தருடைய பொக்கிஷ சாலையிலிருந்து, ஏற்ற கால சத்தியத்தைச் சபையாருக்குக் கொடுப்பதற்கும், சபையாருக்காக ஊழியம் செய்வதற்குமென உண்மையாய்ப் பிரயாசம் எடுக்கும், சபையின் ஊழியக்காரர்கள் விஷயத்தில், சபையார் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தேவனுடைய சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுவதற்கு நாடினவர்களிடமிருந்தும், கர்த்தருடைய வசனத்திற்குப் பதிலாக தங்களுடைய சொந்த ஞானத்தையோ அல்லது மற்ற மனுஷர்களுடைய ஞானத்தையோ வழங்க முற்படுகிறவர்களிடமிருந்தும்தான் சபைக்கு எப்போதும் ஆபத்துகள் எழும்பியுள்ளது.
47, 48-ஆம் வசனங்கள், அந்த ஊழியக்காரன் எந்தளவுக்குக் கர்த்தருடைய சித்தத்தைப் பற்றின அறிவைப் பெற்றிருக்கிந்றாரோ, அந்தளவுக்கு அந்த ஊழியக்காரன் பொறுப்புடையவராக இருக்கின்றார் என்பதையும், அதிகமான அறிவும், வாய்ப்பும் கொடுக்கப்பட்டபடியால், அதிகமாய் எதிர்ப்பார்க்கப்படும் எனும் கொள்கையின் அடிப்படையில் கர்த்தர் அவ்வூழியக்காரனைக் கையாளுவார் என்பதையும் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது.
இந்தப் புத்திமதியானது மற்ற ஊழியக்காரர்களுக்குப் படியளந்து கொடுக்கும் அந்த ஓர் ஊழியக்காரனுக்குப் பொருந்துவதாய் இருந்தாலும், உணவு (அ) உக்கிராணத்துவம் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ஊழியனுக்கும் கூட இதே கொள்கைகளைப் பொருத்தலாம் (மத்தேயு 24:45-51). ஒவ்வொருவனும் எதைப் பெற்றிருக்கின்றானோ (அ) பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை அடைந்துள்ளானோ, மேலும் எந்தவிதத்தில் ஆசீர்வாதத்தைப் பயன்படுத்தியுள்ளானோ, அவ்வளவாய்ப் பொறுப்புடையவனாவான். இன்று, இப்படிப்பட்ட கர்த்தருடைய மாபெரும் கிருபையின் கீழ் வாழ்ந்தும், ஏற்ற கால சத்தியத்தின் வெளிச்சத்தை அனுபவித்துக்கொண்டும், இருக்கும் நமக்கு, அவர் தம்முடைய சத்தியத்தின் களஞ்சியத்திலிருந்து எடுத்து இப்பொழுது வழங்கிக்கொண்டிருக்கும் பழையதும், புதியதுமானவைகளை அதிகமதிகமாய் உணர்ந்துக்கொண்டு, நன்றி சொல்வதற்குரிய அனைத்துக் காரணங்களையுடைய நமக்கு……. ..மற்றவருக்குச் சத்தியத்தை வழங்குவதற்கான சிலாக்கியத்தை அடைந்துள்ள நமக்கு……. ..அவரைப் பற்றின அறிவிற்கு ஏற்ப பொறுப்புக் காணப்படுகின்றது. நாம் உண்மையுள்ளவர்களாய் இருப்பதற்கும், நமது கர்த்தர் ஊழியக்காரனாகவும், தேவனுடைய குமாரனாகவும் இருந்தார் என்பதை நினைவில் கொள்வதற்கும், புத்திரர்களாகியுள்ள நாம், தேவனுடைய பலவகையான கிருபைகளுக்கு விசாரணைக்காரர்களாகவும் உண்மையுள்ள ஊழியக்காரர்களாகவும் இருப்பது என்பது உச்சக்கட்டமான நமக்கான சிலாக்கியமாக இருக்கின்றது என்பதை நினைவில் கொள்வதற்கும், கர்த்தர் நமக்கு உதவிச் செய்வாராக.