R4636 (page 204)
மத்தேயு 13:31-33; 44-52
“”தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.” – ரோமர் 14:17
பரலோக இராஜ்யம் பற்றியதான ஆண்டவருடைய உவமையானது, சீக்கிரத்தில் ஆரம்பிக்க இருக்கும் ஆண்டவருடைய ஆயிரம் வருஷம் இராஜ்யத்தில் அவரோடுகூட இருக்கும்படிக்கு, மனுக்குலத்தின் உலகத்தினின்று அவர் அழைக்கும் ஒரு வகுப்பார் தொடர்புடையது என்பதை நாம் நினைவில் கொண்டிருப்போமாக. சில சமயம் இந்த வகுப்பார் பரிசுத்தமான கோதுமைகள் மாத்திரமல்லாமல், களைகள் போன்றவர்களும் உள்ளடங்கினவர்களாகவும் பேசப்படுவதையும் நினைவில் கொள்வோமாக. இந்தப் பல்வேறு உவமைக் காட்சிகள் ஒரே காரியத்தைப் பல்வேறு கோணங்களிலிருந்து விவரிக்கின்றதாய் இருக்கின்றது. அதாவது, ஒரு கட்டிடத்தை வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும், உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் நாம் படம் பிடித்துக் காட்டுவது போலாகும்.
கடுகு விதை மிகச் சிறியதாய் இருந்தும், அது பெரிய செடியாக வளர்ந்து, ஆகாயத்தின் பட்சிகள் அதன் கிளைகளில் வந்து அடையத்தக்கதாக இருப்பதுபோல, இராஜ்யத்தின் சுவிசேஷமும் சிறிய ஆரம்பத்திலிருந்து, பெரிய அளவை அடையும் என விவரிக்கப்படுகின்றது. இது மரங்கள் மத்தியில் பெரிய மரமாக ஆகாமல், மாறாக செடிகள் அல்லது பூண்டுகள் மத்தியில் பெரியதாகக் காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறாக, கிறிஸ்துவினுடைய செய்தியானது ஆரம்பத்தில் ஏழைகளினாலும், இஸ்ரயேலிலுள்ள சிலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இறுதியில் அது முக்கியத்துவம் வாய்ந்த அளவுக்கு வளர்ந்தபடியால், அதின் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகள் வந்து கூடின. முந்தின உவமைக்கு நமது கர்த்தர் கொடுத்திட்ட விளக்கத்தில் பறவைகள், பொல்லாங்கனின் ஊழியக்காரருக்கு அடையாளமாக இருப்பதை நாம் நினைவில் கொள்வோமாக. ஆகவே, ஒருகாலத்தில் கிறிஸ்துவின் சபையானது உலகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அற்றதாகவும், சபையில் இருப்பது என்பது வெட்கமாகவும், அவமானமாகவும் கருதப்பட்டது என்றும், பிற்பாடு அது கனமுள்ளதாகவும், பிரம்மாண்டமானதாகவும் கருதப்படுவதினால், எதிராளியானவனின் ஊழியக்காரர்கள் இதன் நிழலின் கீழ்க் காணப்படுவதில் மகிழ்ச்சிகொள்வார்கள் என்றுமுள்ள விஷயங்களே இந்த உவமையின் விளக்கம் என்று முடிவு செய்வதற்கு ஏதுவாக வழிநடத்தப்படுகின்றோம். இந்த வளர்ச்சியை, வேதவாக்கியங்கள், பாபிலோன் என்று தெரிவிக்கின்றது, மற்றும் பல்வேறு கிளைகளையும், பிரிவுகளையும் கொண்டுள்ள கிறிஸ்துவின் பெயரளவிலான சபை முழுவதும, பாபிலோன் தன்மையில் காணப்படுகின்றது என்றும் [R4636 : page 205] தெரிவிக்கின்றது. “”அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்தஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று” (வெளிப்படுத்தல் 18:2). இதில் இடம்பெறும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கவனியுங்கள். இது சபையின் வெளித்தோற்றமான பெரிய வளர்ச்சியைச் சுட்டிக்காட்டுகின்றது, மற்றும் இந்த வளர்ச்சி அவளுக்கு நன்மையாகவும், மகிமை சேர்க்கின்றதாகவும் இராமல், எதிர்மாறாகவே இருக்கின்றது. இது பெயரளவிலான கிறிஸ்துவின் சபையாகும். கர்த்தருடைய ஆவி தவறாகக் காட்டப்பட்டாலும், சரியில்லாத வளர்ச்சிக் காணப்பட்டாலும், இறுதியில் சபையின் மாபெரும் தலையானவர் குழப்பதைச் சரிப்படுத்தி, தம்முடைய “”தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களை” மகிமைப்படுத்திப் பயன்படுத்துவார்.
“”புளிப்பு” பற்றின உவமையானது (33-ஆம் வசனம்) சபை தவறான நிலைக்குள் கடந்துப் போகும் முறைக்குறித்து விவரிக்கின்றது. எப்படி ஒரு ஸ்தீரி அப்பம் உண்டாக்க மாவுக்குள் புளிப்பை அடக்கி வைத்து, மாவு முழுவதையும் புளிக்கச் செய்வதைப் போன்று, கிறிஸ்துவின் சபை விஷயத்திலும் இப்படியாகவே காணப்படும். முழு விசுவாச வீட்டாருக்குரிய உணவும் புளிப்பாக்கப்படுகின்றது (அ) கெடுக்கப்படுகின்றது. முழு மாவுக்குள்ளும் கலக்கும் புளிப்பாகிய தவறான உபதேசமானது, ஒவ்வொரு பாகத்தினுடைய தூய்மையை ஏறக்குறைய கெடுத்துப் போடுகின்றதாய் இருக்கின்றது. இவ்வாறாக இயேசு மற்றும் அவருடைய அப்போஸ்தலர்களால் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு உபதேசமும், ஏறக்குறைய இருண்ட யுகத்தின் தப்பறைகளினால் திரிக்கப்பட்ட நிலையில் அல்லது தவறான நிலையில் இன்று வழங்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துவுடன் அவருடைய ஆயிரம் வருஷத்தின் இராஜ்யத்தில் உடன் சுதந்தரத்துவத்தை அடைவதற்காக விரும்பும் தன்மையானது, இந்த உவமையில் காட்டப்படுகின்றது. பொக்கிஷத்தைக் கண்டுபிடிக்கிறவன், அதன் மதிப்பை உணர்ந்தவனாக, அது தனக்கு வேண்டுமென விரும்புகின்றான், மற்றும் அதன் மீது கொண்டிருக்கும் அத்தகைய விசுவாசத்தினால், விலையேறப்பெற்ற பொக்கிஷம் காணப்படுகின்றது என அவன் நம்பின நிலத்தை வாங்குவதற்கென, தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்றுவிடுகின்றான். சுவிசேஷத்தின் செய்தியை உணர்கின்றவர்கள் மாத்திரமே, அதன் மகிமையான வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொள்வார்கள். ஒருவேளை நாம் தற்கால ஜீவியத்தினுடைய சந்தோஷங்களையும், அதன் இலட்சியங்களையும், வாய்ப்புகளையும் நேசிப்போமானால், இவைகளுக்காகவே நாம் ஊழியம் புரிகின்றவர்களாக இருப்போம். ஆனால், ஒருவேளை கிறிஸ்துவினுடைய இராஜ்யத்தில் அவருடன் பங்கடைவதற்கென, இந்த யுகத்தில் அளிக்கப்படும் சுவிசேஷத்தின் வாய்ப்பை நாம் புத்திக்கூர்வமாகக் கேட்டு, விசுவாசித்தால், நம்முடைய விசுவாசம் மற்றும் உணர்ந்துக்கொள்ளுதலுக்கு ஏற்ப, பரிசை அடைவதற்கான நமது சுயத்தைப் பலிச் செய்யும் வைராக்கியம் காணப்படும். இராஜ்யத்தின் சுவிசேஷத்தை விசுவாசிக்கின்றவர்கள், பரிசை தாங்கள் பெற்றுக்கொள்வதற்கு இந்த அவர்களுடைய விசுவாசமே, அவர்களுக்கு ஊக்கமாக விளங்குகின்றது. ஏனெனில், இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்வதற்கு, ஒருவர் கொண்டிருக்கும் பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் அனைத்தையும் இழக்க வேண்டியதாய் இருக்கும் மற்றும், ஒருவன் தான் பரிசை அடைவான் என்று விசுவாசம் கொள்ளவில்லை என்றால், அவன் தன்னிடத்திலுள்ள அனைத்தையும் பலிச் செலுத்திட நிச்சயமாய் விருப்ப மாட்டான். இவ்வுமையில் இடம்பெறும் நிலம் தேவனுக்குச் சொந்தமானதாகும். இங்குத் தேவன் பொக்கிஷத்தை வைத்துள்ளார். விலைக்கொடுத்து வாங்க விருப்பமுள்ள எவருக்கும் விற்கும்படி தேவன் அந்நிலத்தை வைத்துள்ளார். விலைக்கொடுத்து வாங்குபவர்கள் கர்த்தரும், கர்த்தரோடு அவருடைய பரலோக மகிமையில் பங்கடையத்தக்கதாக, பூமிக்குரிய நன்மைகளை பலிச் செலுத்துவதில் அவரோடு இணைந்துக் கொள்ளும்படியான அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்பவர்களும் ஆவர். அதாவது, கர்த்தரும், ஆயிரவருஷ யுகத்தில் மனுக்குலத்தின் உலகத்தை ஆசீர்வதிப்பதற்கான சகல பொக்கிஷங்களைக் கொண்டு வருவதற்குரிய வேலையில் அவரோடு பங்கடையத்தக்கதாக, பூமிக்குரிய நன்மைகளைப் பலிச் செலுத்துவதில் அவரோடு இணைந்துக் கொள்ளும்படியான அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்பவர்களும் ஆவர். பொக்கிஷத்தைப் புதைத்து வைப்பது அவசியம், ஏனெனில் “”பன்றிகளுக்கு முன்பாக உங்களது முத்துக்களைப் போடாதீர்கள்” என்று நமது கர்த்தர் கூறியிருக்கின்றார். பன்றிகள் போன்றவர்கள் உங்களைப் புரிந்துக்கொள்ள மாட்டார்கள், உங்களை முட்டாள்களென எண்ணுவார்கள், மற்றும் அவர்களுடைய ஏமாற்றத்தில், உங்களைக் காயப்படுத்த முற்படுவார்கள். “”உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்குமுன்பாக உன்மட்டும் இருக்கட்டும்” (ரோமர் 14:22). பூமிக்குரிய விஷயங்களை நீங்கள் அவரிடத்தில் பலிச் செலுத்துங்கள் அந்தரங்கத்தில் பார்க்கின்ற உங்கள் பிதா, வெளியரங்கமாய் உங்களுக்குப் பலனளிப்பார்.
இன்றைய காலங்களைவிட முற்காலங்களில் முத்துக்கள் பொதுமக்களால் பெரிதும் விரும்பப்பட்டது. முத்து வியாபாரிகள் இந்த முத்துக்களை வாங்கி, முத்துக்கள் மிகவும் உயர்வாக மதிக்கப்படும் அங்காடிகளில் எடுத்துச் செல்வார்கள். இந்த உவமையில் முத்து வியாபாரிகளில் ஒருவர், அவர் அதுவரையிலும் பார்த்திராத மிகவும் உயர்வான ஒரு முத்தைக் காண்பதாக இடம்பெறுகின்றது. அந்த முத்து மிகவும் விலையேறப் பெற்றது எனக் கண்ட இவர், இந்த முத்தினுடைய உரிமையாளர் ஆகத்தக்கதாக, தன்னிடத்திலுள்ள மற்ற அனைத்து முத்துக்களையும், உடைமைகளையும் விற்பதில் மகிழ்ச்சிக் கொண்டார்.
உலகம் அளிக்கும் சகல வாய்ப்புகளைவிட, கிறிஸ்துவுடன் அவருடைய இராஜ்யத்தில் பங்கடைவதற்கான சுவிசேஷத்தின் வாய்ப்பானது மிகவும் பெரியது என்பதை இந்த உவமை காட்டுகின்றது. “”திரளான ஐசுவரியத்தைப் பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்துக்கொள்ளப்படத்தக்கது” (நீதிமொழிகள் 22:1) என்ற வேதவாக்கியம் தெரிவிக்கிறபடி, உலகத்தின் கனமும், நற்கீர்த்தியின் விளைவான கனமும், ஆஸ்தி, ஸ்தானம் ஆகியவற்றினால் வரும் கனமும் விரும்பத்தகுந்தவைகளே. ஆனால், நம்முடைய கண்கள் கர்த்தராகிய இயேசுவுடன் அவருடைய பரலோக மகிமையிலும், பூமியின் குடிகளை ஆசீர்வதிக்கும் வேலையிலும், அவருடைய உடன் சுதந்திரராகுவதற்கான இராஜ்யத்தின் வாய்ப்பாகிய, “”விலையுயர்ந்த ஒரு முத்தை” காண்கையில்/கண்டுபிடிக்கையில், இதுவே உலகத்தின் சகல கனங்கள், அந்தஸ்துகள் மற்றும் இன்பங்களைக் காட்டிலும் மிகவும் விலையேறப் பெற்றதென நாம் உணர்கின்றோம். இந்த முத்தை வாங்குவதற்குப் பாத்திரமானவர்கள், இதற்காக தங்களுடைய பூமிக்குரியக் காரியங்களைக் கொடுத்துவிடுவார்கள்; தங்களுடைய நல்ல பெயரைக்கூட ஒப்புக்கொடுத்துவிடுவார்கள்; இப்படியாக, நமது நல்ல பெயரையும் ஒப்புக்கொடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில், ஆண்டவர் இதைக்குறித்து மத்தேயு 5:11,12-ஆம் வசனங்களில் கூறியுள்ளார், “”என்னிமித்தம் உங்களை [R4637 : page 205] நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கத்தரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.” இப்படியாக விலைக் கொடுத்து இராஜ்யத்தைப் பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள், இராஜ்யத்திற்குப் பாத்திரமானவர்களல்ல. “”நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று” அப்போஸ்தலர் கூறினார் (அப்போஸ்தலர் 14:22). மேலும் இப்படியாக நீதிக்காகவும், சத்தியத்திற்காகவும், பரம அழைப்பிற்குக் கீழ்ப்படிந்ததின் காரணமாகவும் உபத்திரவங்களைச் சகிக்க விருப்பம் உள்ளவர்களே ஜெயங்கொள்பவர்கள் ஆவர். மேலும் இந்த “”ஜெயங்கொள்கிறவர்களுக்கு” மாத்திரமே கர்த்தர் மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்களையும் கொடுத்துள்ளார். “”ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்” (வெளிப்படுத்தல் 3:21).
இராஜ்யத்தைப் பற்றின மற்றொரு உவமையில், வலை சுவிசேஷ செய்தியை அடையாளப்படுத்துகின்றது. ஒரே ஒரு வகை மீன்தான் விரும்பப்படுகின்றது. ஆனால், வலையோ சகலவிதமான மீன்களையும் வாரிக்கொள்கின்றது. எல்லா வகை மீன்களும், இராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் உடன் சுதந்தரத்தைச் சுதந்தரிக்கப் போவதில்லை. ஆகவேதான் இந்த யுகத்தின் முடிவானது, உவமையில் காண்பிக்கப்படுகின்ற பிரகாரம் புடமிடுகின்ற, பிரித்தெடுக்கின்ற காலமாக இருக்கின்றது. விரும்பத்தக்கதான மீன்கள் கூடைகளில் சேர்க்கப்படும், மீதமான மற்ற மீன்களோ இராஜ்யத்திற்குப் பாத்திரம் அற்றவைகள் எனக் கடலில் வீசப்படும்; இராஜ்யத்திற்குப் பாத்திரமல்ல என்றாலும், வேறு நோக்கத்திற்கு இவைகள் பயன்படாதவைகள் அல்ல. இராஜ்யத்திற்குப் பாத்திரமற்றவர்கள் என்று (சுவிசேஷ யுகத்தில்) கருதப்பட்ட அந்த வகுப்பார் கிறிஸ்துவின் ஆயிரம் வருஷம் ஆளுகையின் போது ஆசீர்வதிக்கப்படுவார்கள், மற்றும் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வதற்குப் பாத்திரமாய்க் கருதப்படலாம்.
கோதுமை மற்றும் களைகள் உவமையில் வரும் அக்கினிச் சூளை மற்றும் அழுகையும், பற்கடிப்பும் இந்த யுகத்தை முடித்து, ஆயிரம் வருஷம் இராஜ்யத்திற்கு அதாவது, விடாமல் பத்தொன்பது நூற்றாண்டு காலங்களாகச் சபையால் ஜெபம் பண்ணப்படும் பூமியில் ஸ்தாபிக்கப்படப் போகும் இராஜ்யத்திற்கு இடமளிக்கும் மகா உபத்திரவக் காலத்திற்கு அடையாளமாக இருக்கின்றது. “”உம்முடைய இராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போன்று பூமியிலும் செய்யப்படுவதாக” இது எத்துணை இராஜ்யமாக இருக்கும்! “”பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்” (லூக்கா 12:32). மனுக்குலத்தின் மத்தியில் பரலோகத்தின் ஆளுகையை ஸ்தாபிப்பதற்கே இந்த இராஜ்யம் செயல்படுகின்றது!
இராஜ்யம் தொடர்பான காரியங்களினால் போதிக்கப்பட்டுள்ள அனைவரும், இதற்கு இசைவாகத் தங்களுடைய காரியங்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற கர்த்தருடைய புத்திமதியுடன் நம்முடைய பாடம் நிறைவுப்பெறுகின்றது.