R5370 (page 377)
லூக்கா 8:1-3; 9:57-62; 10:38-42
“”மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்.” – மத்தேயு 25:40
இவ்வாராய்ச்சிக்கான ஆரம்ப வசனமானது, இயேசு பேசின சகல பிரசங்கத்திற்கான, திறவுகோலை நமக்கு அளிக்கின்றது. அவருடைய ஒரு செய்தி, தேவனுடைய இராஜ்யம் பற்றின நற்செய்தியாகும். இது இன்றும் நற்செய்தியாகவே உள்ளது. மேலும், கர்த்தருடைய ஜனங்களில் எவரேனும், தேவனுடைய இராஜ்யமே சபைக்கான நம்பிக்கை மற்றும் உலகத்திற்கான நம்பிக்கையின் மையமாகவும், சாரமாகவும் இருப்பதை இன்னமும் கற்றுக்கொள்ளவில்லையெனில், அவர் போதுமானளவுக்கு வேதாகமத்தை வாசித்து, நம்பிக்கைக்கொள்ளவில்லை என்பதே அர்த்தமாகும். யூதர்கள் இராஜ்யத்திற்கு ஆயத்தமாகக் காணப்படாததினால், அவர்கள் அந்த இராஜ்யத்தில், மேசியாவின் துணைவர்களாக இருப்பதிலிருந்து, தேசமாகவே புறக்கணிக்கப்பட்டு விட்டனர். ஆனால், அனைவரும் புறக்கணிக்கப்படவில்லை; ஆகவேதான், இயேசுவை ஏற்றுக்கொண்டிருந்தவர்கள் எத்தனை பேரோ, அவர்களுக்கு தேவனுடைய புத்திரர்கள் ஆகுவதற்குரிய சுதந்திரத்தை அவர் கொடுத்தார் என்று நாம் வாசிக்கின்றோம்; இந்தச் சுதந்திரத்தை, பெந்தெகொஸ்தே நாளில் வந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மற்றும் ஜெநிப்பித்தல் வாயிலாக அவர்கள் அடைந்தார்கள்.
இந்தத் தேவனுடைய புத்திரர்கள், ஒருவேளை உண்மையுள்ளவர்களாகக் காணப்படுவார்களானால், இவர்கள் இயேசுவுடன் காணப்படுவார்கள். அதாவது, இந்தப் பரலோக இராஜ்யத்தில் தேவனுடைய சுதந்தரர்களாகவும், இவர்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் உடன் சுதந்திரர்களாகவும் காணப்படுவார்கள். இவர்களுக்கான கனமும், ஆசீர்வாதமும் பெரியதாய் இருக்கும்; ஏனெனில், இவர்கள் தங்கள் ஆண்டவர் போன்றுக் காணப்படுவார்கள், மற்றும் அவர் இருக்கின்ற வண்ணமாக அவரைத் தரிசித்து, அவருடைய மகிமையில் பங்கடைவார்கள். இவைகள் மாத்திரமல்ல. ஒருவேளை இவர்கள் இந்த அன்பின் ஆவியை வளர்த்துக்கொள்வார்களானால், உலகத்தை ஆசீர்வதிப்பதும், சாபத்தை அப்புறப்படுத்துவதும், பாவம் மற்றும் மரணத்தின் சூழ்நிலைகளிலிருந்து மனுக்குலத்தைத் தூக்கிவிடுவதுமாகிய ஆண்டவருடைய மாபெரும் வேலையில், இவர்களும் இணைவதற்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
நிச்சயமாக இது நற்செய்திதான்! இதே நற்செய்திதான் ஆண்டவருடைய பிறப்பின்போது தூதர்களால் அறிவிக்கவும்பட்டது; “”தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” (லூக்கா 2:10). இது, இதுவரையிலும் தேவனுடைய ஊழியக்காரர்களும், ஊழியக்காரிகளுமான சபைக்கு மாத்திரமே நற்செய்தியாய் இருந்துள்ளது. ஆனால், இது சகல செவிடான காதுகள் திறக்கும்போதும், சகல குருடான கண்கள் திறக்கும்போதும், அனைவருக்கும் நற்செய்தியாகக் காணப்படும். மேலும், அவர்கள் மேசியாவின் இராஜ்யத்தினுடைய மகிமைகளைக் காண்பார்கள்.
இயேசு இப்படியாக இராஜ்யத்தை அறிவித்து வந்தபோது, அவர் யாரிடமும் பணத்தை வருந்தி கேட்கவில்லை. அவர் எவ்விதத்திலாவது பணத்தைக் கெஞ்சிக் கேட்டார் அல்லது பணத்தைத் திரட்டினார் என்ற கருத்து நமக்கில்லை. இதை வைத்தே, கிறிஸ்துவின் பின்னடியார்களும் பணத்தைக் கேட்காமல், தங்களுக்கு உள்ளதை அல்லது மற்றவர்களால் தானாக விரும்பிக் கொடுக்கப்படும் பணங்களையே பயன்படுத்த வேண்டும் என்று அநேகர் எண்ணுகின்றனர். எனினும், இது ஒவ்வொருவரும் தனக்குள் முடிவெடுக்க வேண்டிய காரியமாக உள்ளது.
சொஸ்தப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர், மகதலேனா மரியாள் ஆவாள்; இவளிடமிருந்து கர்த்தர் ஏழுப் பிசாசுகளைத் துரத்தினார். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், இன்று மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான விடுதிகளில் காணப்படும் அநேகரின் நிலையில்தான் இந்தப் பாவப்பட்ட ஸ்திரீயும் காணப்பட்டிருந்தாள். இவளுக்குப் பிரச்சனை உடலில் இல்லை; மாறாக, இவளை ஆட்கொண்டிருந்த ஏழு விழுந்துபோன தூதர்களின் தொல்லையே இவளுக்கான பிரச்சனையாக இருந்தது. வேதாகமத்தின் செய்தியை நம்புகின்றவர்கள், விழுந்துபோன தூதர்கள் இருக்கின்றார்கள் என்பதை நம்ப வேண்டும். அதாவது, இந்த ஆவிக்குரிய ஜீவிகளானது, இவைகளால் முடிந்தமட்டும் மனுக்குலத்தின் மீது தீமையான செல்வாக்குக் கொண்டிருக்கின்றது என்றும், இவைகள் மனதின் கட்டுப்பாட்டினால் எதிர்த்துப் போராடப்பட வேண்டும் என்றும் நம்பவேண்டும். மரியாள் ஆஸ்திகளுள்ள ஸ்திரீ போன்று தெரிகின்றது. பிசாசுகளின் வல்லமைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட மரியாள், இயேசுவுக்கு மிகவும் நன்றியுடன் காணப்பட்டபடியால், இயேசுவுக்கு ஒவ்வொரு சூழ்நிலையிலும் தன்னால் முடிந்தமட்டும் ஊழியம் புரிந்திட்டாள். வேறு கனமிக்க ஸ்திரீகளும் இயேசுவுக்கு உதவிச் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயேசு மிகுந்த வரங்களையுடையவராக இருக்கின்றார் என்றும், அவருடைய ஜீவியத்தின் தேவைகளெல்லாம் சந்திக்கப்படுகின்றபடியால், அவர் ஐசுவரியவானாக இருப்பார் என்றெண்ணி, சிலர் அவரிடத்திற்குக் கவர்ந்திழுக்கப்பட்டார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவன், கர்த்தரிடம், “”ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன்” என்று கூறினான். ஆனால், தம்மை (இயேசு) வரவேற்பதற்கு அநேக வீடுகள் தமக்கு இருந்திட்டாலும், தமக்கெனச் சொந்தமாக வீடு இல்லை என்றும், தம்மிடத்தில் எந்த ஆஸ்தியும் இல்லையென்றும் தெரிவித்தப் போதோ, இவனுடைய ஆவல் தணிந்துப் போய்விட்டது போன்று தோன்றுகின்றது. “”இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்” (லூக்கா 9:58). இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் காணப்படும் ஒரு தலைவரைப் பின்பற்றுவதற்கு மிகவும் உண்மையுள்ளவர்களே ஈர்க்கப்படுவார்களே ஒழிய, மற்றபடி எவரும் ஈர்க்கப்படுவதில்லை. ஆஸ்தி/ஐசுவரியம் அநேகரைக் கவர்கின்றது. ஆனால், தரித்திரம் சிலரையே கவர்கின்றது.
இன்னொருவன் இயேசுவினிடத்தில் பின்வரும் அர்த்தத்தில் கூறுகின்றான், “”ஆண்டவரே, உம்முடைய சீஷர்களில் ஒருவனாக என்னை நீர் எண்ணிக்கொள்ள வேண்டும்; ஆனால் எனக்குத் [R5371 : page 377] தகப்பன் இருக்கின்றார், மேலும் அவர் மரித்துப்போவது வரையிலும், அவரோடு நான் காணப்பட வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.” அதற்கு இயேசு கொடுத்த பதிலானது, பரம பிதாவின் நோக்கங்களுக்காக, நாம் ஏறெடுக்கும் ஒவ்வொரு ஊழியத்திற்கும் உரிய முக்கியத்துவத்தை நமக்கு வெளிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. “”அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்” (லூக்கா 9:60).
தெய்வீகக் கண்ணோட்டத்தின்படி முழு உலகமும் ஏற்கெனவே மரித்துவிட்டதாகக் காணப்படுகின்றது. ஆதாமின் மீது செலுத்தப்பட்ட மரணத் தீர்ப்பானது, அவருடைய அனைத்துப் பிள்ளைகளையும் உள்ளடக்கியது. ஜீவன் கொடுப்பவராகிய இயேசுவுடன் தற்காலத்தில் தொடர்புக்குள் வந்தவர்களையே, வேதவாக்கியங்கள் ஜீவனுடையவர்கள் என்று தெரிவிக்கின்றன. இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமான கண்ணோட்டத்தில் ஜீவனைப்பார்க்க வேண்டும் என்று ஆண்டவர் சுட்டிக்காட்டுகின்றார். பூமிக்குரிய காரியங்களைக் கவனிப்பதற்கு, உலகத்தில் அநேகர் காணப்படுகின்றனர்; இராஜ்யத்தை அறிவிப்பதற்கும், இராஜ்ய வகுப்பாரைச் சேர்ப்பதற்குமான மாபெரும் மற்றும் மிக முக்கியமான வேலையைச் சிலரே செய்ய முடியும்.
இதுதான் உலகத்திலேயே மிக முக்கியமான வேலையாகும். காரணம், இது தேவனுடைய வேலையாக இருக்கின்றது. மேலும், இவ்வேலையில் ஈடுபடுகின்றவர்கள், தேவனுடன் உடன் வேலையாட்களாகக் காணப்படுகின்றனர். தேவனுடைய இராஜ்யமே பிரசங்கிக்கப்பட வேண்டுமென்றும், இதற்காகவே பலிச் செலுத்த வேண்டுமென்றும், மீண்டுமாகக் கவனிப்போமாக. அந்தோ பரிதாபம்! இந்தப் பிரசங்கம் இந்தக் காலத்தில் மிகவும் குறைவாகக் காணப்படுவது எவ்வளவு விநோதமாகத் தோன்றுகின்றது! வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், இயேசுவும், அவருடைய சீஷர்களும் கொடுத்திட்ட சுவிசேஷச் செய்தியானது தொலைந்துப் போய்விட்டது, மறக்கப்பட்டுவிட்டது, புறக்கணிக்கப்பட்டுவிட்டது. ஆண்டவரும், அவரால் நியமிக்கப்பட்டவர்களும் முதலாம் வருகையின் காலத்தில் பிரசங்கித்த அதே செய்தியைப் பிரசங்கிப்பதற்குரிய மாபெரும் சிலாக்கியத்திற்கு, வேத மாணவர்கள் அனைவரும் விழித்துக்கொள்வதற்கு இது காலம் அல்லவா?
“”பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்” (லூக்கா 9:61-62). நாம் மற்றவர்களை நியாயம் தீர்க்கக்கூடாது. மாறாக, நாம் ஒவ்வொருவரும் [R5371 : page 378] நம்மையே நிதானித்துக்கொள்ள வேண்டும். எனினும், அநேகர் பின்னாகத் திரும்பிப்பார்த்து, ஜீவியத்திற்கான சமுதாய வசதிகளுக்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது மாத்திரமல்லாமல், இதோடு கூட உலகத்தின் அநேக இன்பங்கள், அற்பத்தனமான காரியங்கள் மற்றும் ஆடம்பரங்களில் பாய்கின்றார்கள்/மூழ்குகின்றார்கள் அல்லவா? இக்கேள்வி சோதித்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். நம்மில் எத்தனை பேரை, கர்த்தர் இராஜ்யத்திற்குத் தகுதியானவர்கள் என்று கருதுவார்? சமீபத்தில் வாசலருகே வந்துள்ளதென நாம் நம்பும் மகிமையான மேசியாவின் இராஜ்யத்தில் கர்த்தரோடு கூட இருப்பதற்கென, நம்மில் எத்தனை பேரைத் தகுதியுடைவர்கள் என்று கர்த்தர் கருதுவார்? இங்கு ஒரு கொள்கைக் காணப்படுவது போன்று தோன்றுகின்றது. இராஜ்யத்தின் மீதான கவனத்தில் மூழ்காமலும், அதன் ஆசீர்வாதங்களை விரும்பாமலும், மற்றவர்கள் மீது ஆசீர்வாதங்களை வழங்குவதில் பங்கடைய விரும்பாலும் இருப்பவர்கள், மனுக்குலத்திற்குச் செய்யப்பட வேண்டும் என்று அவர் வடிவமைத்துள்ள வேலையை நிறைவேற்றுவதற்கென உயிர்த்தெழுதலுக்குப் பாத்திரமாய்க் காணப்படமாட்டார்கள்.
மார்த்தாள் மற்றும் மரியாள் சம்பவத்துடன் பாடம் நிறைவடைகின்றது. இருவரும் இரட்சகரை அன்புகூர்ந்தார்கள். ஆனால், இவர்கள் இருவரும் தங்களது அன்பை வித்தியசமாக வெளிப்படுத்தினார்கள். மார்த்தாளையும், கர்த்தருடைய சௌகரியத்திற்காக உணவை அளிப்பதில் அவள் கொண்டிருந்த கவனத்தையும் இயேசு நிராகரிக்கவில்லை; மாறாக, ஜீவனுக்கான அருமையான வார்த்தைகளைக் கேட்கும்படிக்கு மரியாளை தம் பாதத்தண்டைக்கு ஈர்த்திட்ட, மரியாளின் ஆவியையே அவர் விசேஷமாகப் பாராட்டினார். மரியாள் நல்ல பங்கைத் தெரிந்துக்கொண்டாள் என்று இயேசு கூறினார். ஆகவே, நாம் அவருடைய வார்த்தைகளுக்கு உண்மையான கவனம் செலுத்தும் போதும், அவருடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவதற்கும், வழிநடத்தப்படுவதற்கும் நாடும்போதும், அவர் விசேஷமாகப் பிரியங்கொள்வார் என்பதை, ஆண்டவருக்காக நாம் ஊழியம் செய்கையில், நாம் மனதில் வைத்துக்கொள்வோமாக.
இன்றைய பாடமானது, நமது கர்த்தருடைய ஊழிய நாட்களின் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏறெடுக்கப்பட்ட விசேஷமான ஊழியங்கள் பற்றியதாகும். அங்கீகரிக்கப்படத்தக்கதான ஊழியங்களானது, அங்கீகரிக்கப்படத்தக்கதான துதியைப்போன்று, கர்த்தரிடத்தில் கொண்டிருக்கும் அன்பின் பலனாக வந்திட வேண்டும். அவரை அதிகமாய் அன்புகூருகின்றவன், அதிகமாய் ஊழியம் செய்வான். இவ்வகையான ஊழியங்களைச் சம்பளங்களால் விலைக்கு வாங்கவும் முடியாது, அதேசமயம் இதைத் துன்புறுத்தல்களால் தடைப்பண்ணவும் முடியாது.
கர்த்தர் இயேசுவுக்காகத் தனிப்பட்ட விதத்தில் ஊழியம் புரிவதற்கான சிலாக்கியம் பெற்றவர்கள், நிச்சயமாக உன்னதமான சிலாக்கியமே அடைந்துள்ளனர். எனினும், கர்த்தரினால் தம்முடைய சகோதரர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்குச் செய்யப்படும் ஊழியங்கள், உண்மையில் கர்த்தருக்குச் செய்ததாகவே இருக்கின்றது என்று ஆதார வசனத்தில் காணப்படும் பொதுவான கொள்கையானது உண்மையே ஆகும். அவ்வூழியத்தைக் கர்த்தர் தமக்குச் செய்ததாகவே ஏற்றுக்கொள்கின்றார். இக்கருத்து எத்துணை விலையேறப்பெற்றக் கருத்தாகும்! கர்த்தருடைய வார்த்தைகளை உண்மையாய் நம்புகின்றவர்கள், தங்களுடைய சகோதரர்களுக்குப் புரிந்திடும் ஊழியங்களில் வைராக்கியமாய்க் காணப்பட வேண்டும். அப்போஸ்தலர் கூறுவதுபோன்று, கிறிஸ்து நம் அனைவருக்காகவும் மரித்ததுபோன்று, நாமும் சகோதர சகோதரிகளுக்காக நம்முடைய ஜீவியங்களை/ஜீவனை ஒப்புக்கொடுக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.