R5120 (page 327)
மாற்கு 8:27,9:1
“”நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து.” – மத்தேயு 16:16
நமது கர்த்தருடைய ஊழிய நாட்களில் ஒரு குறிப்பிட்ட காலம்வரையிலும், அவர் தம்முடைய சீஷர்களுக்குக்கூட தாம்தான் மேசியா எனத் தம்மைக்குறித்துக் கூறவில்லை. நமது கர்த்தர் ஞானமான வழியைத் தெரிந்துக் கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. “”அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும், ஒருக்காலும் பேசினதில்லை” என்று ஜனங்கள் கூறும்வரையிலும் அவர் ஒரு மாபெரும் போதகராக, ஜனங்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். “”மேசியா வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைப் பார்க்கிலும் அதிகம் செய்வாரோ?” (யோவான் 7:31) என ஜனங்கள் சொல்வது வரையிலும், அவர் ஜனங்களைச் சொஸ்தப்படுத்திக் கொண்டிருந்தார். அவர்தான் மேசியா என அவரே கூறுவதற்குப் பதிலாக ஜனங்களே அவரைக் குறித்துக் கூறுவது சிறப்பாயிருக்கும், மற்றும் அவரே அறிவிப்பதற்கு முன்னதாக, அவருடைய பின்னடியார்களின் மனதில் இந்த எண்ணம் படிப்படியாக உணரப்படுவது சிறப்பாயிருக்கும்.
எனினும் தம்முடைய சீஷர்கள் இதை அறிய வேண்டும் என்று கர்த்தர் எண்ணினார். மேலும், “”ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?” என்ற கேள்வியைக் கேட்டார். அதற்குப்பதிலாக, சிலர் அவரை மரணத்திலிருந்து எழுந்த யோவான் ஸ்நானன் என்றும், சிலர் அவரை மரணத்திலிருந்து எழுந்த எலியா என்றும், வேறு சிலர் அவரைத் தீர்க்கத்தரிசிகளில் ஒருவர் என்றும் எண்ணுவதாகக் கூறினார்கள்.
அடுத்ததாக, “”நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?” என்று கர்த்தர் கேட்டார். இதற்குப் பிரதியுத்தரமாக, “”நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று பரிசுத்த பேதுரு பதில் கூறினார். பேதுருவின் பதில் சரியானது என்று இயேசு கூறி, “”யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான். மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் என்று கூறினார் (மத்தேயு 16:17).
உடனடியாக இயேசு தமக்குப் பிரியமான பன்னிரண்டு சீஷர்களிடத்தில், தமக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள அனுபவங்களைக்குறித்து விவரிக்கத் தொடங்கினார்; அதாவது, எவ்வாறு இராஜ்யம் யூதர்களுக்கு அன்புடன் வழங்கப்பட்டது என்றும், எப்படி யூதர்களுடைய பிரதிநிதிகளாகிய மூப்பர்களும், பிரதான ஆசாரியர்களும் தம்மைப் புறக்கணிப்பார்கள் என்றும், எப்படி தாம் கொலை செய்யப்படுவார் என்றும், மூன்று நாளுக்குப் பின் மீண்டும் எப்படி தாம் உயிர்த்தெழுவார் என்றும் விவரிக்கத் தொடங்கினார்.
[R5120 : page 328]
இயேசு தம்முடைய மரணத்தைக்குறித்து, மிகவும் அழுத்தம் கொடுத்துத் தெரிவித்தார். மேலும், சீஷர்களும் அதைத் தெளிவாய்ப் புரிந்துக் கொண்டார்கள். யூதாஸ் கோபமும், ஏமாற்றமும் அடைந்தவராக, இப்படியாக இயேசு தம்முடைய எதிர்க்காலத்தைக்குறித்த கண்ணோட்டம் கொண்டிருப்பது என்பது கர்த்தருக்கும், அப்போஸ்தலர்களுக்கும் அவமானமாக இருப்பதாகக் கருதினார்; காரணம், இப்படியாகவெல்லாம் இயேசு எதிர்ப்பார்ப்புக் கொண்டிருப்பாரானால், அது அவருடைய போக்கை மாற்றி அமைக்கும், மற்றும் விரைவில் அவர் மேல் விபரீதத்தைக் கொண்டு வரும், மற்றும் கர்த்தரால் சீஷர்களுடைய மனதில் பதிய வைக்கப்பட்ட அவர்களது அனைத்து நம்பிக்கைகளையும் தகர்த்துவிடும் அதாவது கர்த்தரோடு அவருடைய சிங்காசனத்தில் உட்காருதல் முதலிய நம்பிக்கைகளைத் தகர்த்து விடுகின்றதாக இருக்கும் என யூதாஸ் கருதினார்.
சந்தேகத்திற்கிடமின்றி, அப்போஸ்தலர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தவர்களாக இருந்தர்கள். ஆனால், பரிசுத்தவானாகிய பேதுரு மாத்திரமே பேசுவதற்குத் துணிவு கொண்டு, பின்வருமாறு பேசினார்: “”ஆண்டவரே இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை. நாங்கள் அனைவரும் அறிந்திருக்கிறபடி, நீர் மேசியாவாக, இஸ்ரயேலின் சிங்காசனத்தை அடைவீர். பிற்பாடு உலகத்தின் சிங்கசானத்தையும் அடைந்து, மனுஷ சந்ததி முழுவதற்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டு வருவீர். மேலும், நீர் வாக்களித்துள்ள பிரகாரமாக, நாங்களும் உம்முடைய சிங்காசனத்தில் உம்மோடுக் கூட காணப்படுவோம்” என்றார்.
இப்படியாக, பரிசுத்தவானாகிய பேதுரு நடந்துக்கொண்டதின் காரணமாக அவர் தெய்வீகத் திட்டத்தையும், சித்தத்தையும் எதிர்க்கின்றவராக இருந்தார்; தெய்வீகத் திட்டத்திற்கு மையமாக இருக்கும் இயேசுவின் மரணத்தில்தான், முதலாவது சபைக்கும், அடுத்து இஸ்ரயேலுக்கும், இறுதியில் சகல ஜாதிகள், ஜனங்கள், பாஷைக்காரர்கள், கோத்திரத்தாருக்குமுள்ள பல்வேறு வாக்குத்தத்தங்கள் நிறைவேறும். இயேசுவை அவருடைய அர்ப்பணிப்பின் ஆரம்பத்தில் சாத்தான் தடைபண்ண முற்பட்டதுபோல, இப்பொழுதும் தம்முடைய பலியில், தாம் முழுமையாகப் பட்சிக்கப்படுவதைத் தடைப்பண்ணுவதற்கு ஏதுவாக (பேதுருவிடமிருந்து வெளிப்பட்ட) இந்தச் வார்த்தைகள் காணப்படுவதை இயேசு உணர்ந்தார்.
இவ்விஷயத்திற்கு மிகவும் அழுத்தம் கொடுக்கும் விதத்தில், இயேசு, பரிசுத்தவானாகிய பேதுருவை நோக்கி, “”எனக்கு பின்னாகப்போ சாத்தானே என்றும், உன்னுடைய வார்த்தைகள், தேவனுடைய திட்டத்திற்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மாறாக, மனித கணிப்பு மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறதைச் சுட்டிக்காட்டுகின்றது” என்றும் கூறினார். பிற்பாடு “”ஏற்ற காலத்திற்குரிய உணவாக” இன்னும் காணப்படாதிருந்த காரியத்தை எளிமையான விதத்தில் இயேசு, தம்முடைய பின்னடியார்களுக்குத் தெளிவுப்படுத்திட ஆரம்பித்தார்; அதாவது, அவருடைய வேலையின் எந்த ஒரு பாகத்திலும், அவருடன் பங்கடைய விரும்புகின்றவர்கள் மட்டுமே தாங்கள் கொண்டிருக்கும் பூமிக்குரிய அனைத்தையும் இழக்க வேண்டியிருக்கும் என்றும், தன்னைத்தான் வெறுத்து, தன்னுடைய சிலுவையை எடுத்துக்கொண்டு, மீட்பரின் அடிச்சுவடுகளைப் பின்தொடர வேண்டும் என்றுமுள்ள விஷயங்களை எளிமையான வார்த்தைகளில் இயேசு தம்முடைய பின்னடியார்களுக்குத் தெளிவுப்படுத்த ஆரம்பித்தார்.
யாரொருவர் தனது உரிமைகளைத் தக்க வைப்பதிலும், தற்கால ஜீவியத்தைப் பற்றிப்பிடிப்பதிலும் அக்கறைக் கொண்டிருந்து, அனைத்தையும் தியாகம் செய்திட விருப்பமற்று காணப்படுகிறாரோ அவர், சிலுவையைச் சுமந்துக் கொண்டு, பூமிக்குரிய நன்மைகளை முழுமையாகத் தியாகம் பண்ணுபவர்களாய் இருப்பவர்களுக்குக் கொடுக்கப்படும் மாபெரும் “”பரிசாகிய” திவ்வியச் சுபாவத்தை இழந்துவிடுவார். ஆனால், யாரொருவர் இயேசுவினிமித்தமாக தனது ஜீவனை உண்மையாக இழந்துபோவாரோ, அவர் அதனை இரட்சித்துக் கொள்வார். அதாவது, ஆவிக்குரிய தளத்தில் ஜீவனைப் பலனாகப் பெற்றுக்கொள்வார்.
இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் இதே கொள்கைதான், என்றென்றும் செயல்படும். அதாவது, யாரொருவர் சுயநலமாகக் காணப்பட்டு, தனது சொந்த ஜீவனையும், தனக்கான சுயநன்மைகளையும் அன்புகூருகிறாரோ, அவர் நித்தியஜீவன் பெறுவதற்குப் பாத்திரமாகக் கருதப்படுவதில்லை; ஆனால், யாரொருவர் கர்த்தருடைய காரணங்களுக்காக, தனது நன்மைகளைத் தியாகம் பண்ணுவாரோ, அவர் நித்தியஜீவன் பெறுவதற்கு ஏதுவாக குணலட்சணத்தில் பாத்திரமானவராகக் கருதப்படுவார்.
இயேசுவினால் நிறைவேற்றப்பட்ட மீட்பின் மூலமாக, ஒவ்வொரு மனுஷனுக்கும் தேவன் ஓர் எதிர்க்கால வாழ்க்கையை அளித்துள்ளார். ஆனால், தேவனால் நியமிக்கப்பட்டுள்ள வழியின் வாயிலாக, இந்த மாபெரும் ஆசீர்வாதத்தை ஏற்றுக்கொள்கின்றவர்களாகிய இருதயத்திலும், குணலட்சணத்திலும், ஜீவியத்திலும் உயர்தன்மையுள்ளவர்கள் மாத்திரமே எதிர்க்கால ஜீவியத்தை அடைவார்கள். ஒருவேளை மனுஷன் சுயநலத்துடன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலுங்கூட, இந்தச் சுயநலம் அவன் நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வதற்குப் பாத்திரமற்றுப் போகச் செய்திடும். மனுஷன் தன்னுடைய ஜீவனை இழந்துவிட்டு, அதற்கு ஈடாக என்னத்தை எடுத்துக்கொள்வான்? நித்திய மகிமையையும், நித்திய ஜீவனையும் இழக்கும் பட்சத்தில், மனுஷன் இந்த இழப்பிற்கு ஈடாக அல்லது ஆதாயமாக, சொற்பகாலமான தற்கால ஜீவியத்தின் ஆஸ்தியைக் (அ) கீர்த்தியை (அ) பிரபலத்தைக் கருதுவானோ? நிச்சயமாக இல்லை. தேவன் தம்முடைய குமாரன் வாயிலாக, எந்த ஒரு தளத்திலும் நமக்கு அருளப்போகும் நித்திய காலத்திற்குமுரிய ஜீவனை அடைவதற்கு, குணலட்சணத்தை வளர்த்தல் என்பது முற்றிலும் அவசியமான காரியமாக உள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
யாரொருவன் கர்த்தருடைய பின்னடியாராகி, ஆவிக்குரிய தளத்தில் நித்திய காலத்திற்குரிய ஜீவன் மற்றும் மகிமை எனும் பரிசை அடைய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றானோ, அவன் அனைத்தையும் முழு இருதயத்தோடே செய்ய வேண்டுமே ஒழிய, நயவஞ்சகமாக அல்லது இரகசியமாயல்ல. அவன் முழுமையாகவும், தைரியமாகவும், சரியான விதத்திலும், இயேசுவையும், அவருடைய வார்த்தைகளையும் ஒப்புக்கொள்ள வேண்டும். இயேசு தம்மையும், தம்முடைய வார்த்தைகளையும் சமநிலையில் வைத்துப் பேசுகின்றார். “”என்னைக் குறித்தும், என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுவானோ” என்று குறிப்பிடுகின்றார். இயேசுவின் வார்த்தைகள் என்பது, இயேசுவின் உபதேசங்கள் (அ) போதனைகளைக் குறிக்கின்றது. மனுஷர்கள் மத்தியில் பிரபலமில்லாமல் காணப்படும் காரணத்தினால், சத்தியத்தைக்குறித்து வெட்கப்படுவதும், தெய்வீகத் திட்டம் குறித்து வெட்கப்படுவதும், தேவனுடைய வார்த்தைகளின் போதனைகளென நாம் காண்பவைகளைக் குறித்து வெட்கப்படுவதும், கர்த்தரை அவமதிப்பதையும், அவருடைய தயவுக்கு நாம் அபாத்திரர்கள் என்று நிரூபிப்பதையும் குறிக்கின்றதாக இருக்கும்.
கிறிஸ்துவின் சபையாக இருப்பவர்கள், அவரால் பிதாவுக்கு முன்னதாகக் குற்றமற்றவர்களாக நிறுத்தப்படுவதுவரையிலும் தொடர்ந்து, கிறிஸ்துவைத் தங்களுக்கான பரிந்து பேசுபவராகப் பெற்றிருப்பது அவர்களுக்கு அவசியமாகும். ஒருவேளை அவர் தங்களுக்காகப் பரிந்துப் பேசுவதை அவர்கள் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமெனில், அவர்கள் மனுஷர் மத்தியில் அவருடைய நோக்கத்தை ஆதரிக்கின்றவர்களாகவும், அவரைக்குறித்தும், அவருடைய உபதேசங்களாகிய, அவருடைய வார்த்தைகள் குறித்தும் வெட்கமடையாமலும் காணப்பட வேண்டும் (கொலோ. 1:22).
தம்முடைய சீஷர்கள் செய்ய வேண்டிய ஓர் அர்ப்பணிப்பைச் செய்திடாத மற்றத் தேசத்தார் பற்றிக் கர்த்தர் குறிப்பிடுவதை வைத்து, நமது கர்த்தர் இவ்வார்த்தைகளை விசேஷமாகச் சீஷர்களுக்குக் கூறினார் என்பது தெரிகின்றது. மற்றவர்கள், “”விபச்சாரமும் பாவமுமுள்ள சந்ததியாகக்” கூறப்படுகின்றனர். கிறிஸ்துவின் பின்னடியார்கள் சத்தியத்தின் வெளிச்சத்தை, உலகத்திற்கு உயர்த்திப் பிடிக்க வேண்டும். மேலும், இப்படியாக உண்மையாய்ச் செய்யும்போது, இவர்கள், கர்த்தர் தமது பிதாவின் மகிமைப் பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களுடன் வருகையில், ஏற்றவேளையில், கர்த்தர் இயேசுவினால் அங்கீகரிக்கப்படுவார்கள்; இவர்களை அங்கீகரிப்பதில் கர்த்தர் இயேசு வெட்கமடையமாட்டார்; இவர்களைக் கர்த்தர் தம்முடைய பிதாவுக்கும், பரிசுத்த தூதர்களுக்கும் முன்பும் நிறுத்துவார்.
பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னதாகக் கேட்கப்பட்ட இதே மாபெரும் கேள்வியானது, இன்றும் மாபெரும் கேள்வியாக இருக்கின்றது. யார் இந்த இயேசு? சிலர் கூறுவது போன்று, அவர் ஒரு நல்ல மனுஷனாகவும், மிகவும் திறமிக்கப் போதகராகவும் மாத்திரம் இருந்திருப்பாரானால், அவர் கிறிஸ்து அல்ல. ஏனெனில், கிறிஸ்துவிடம் இந்த அனைத்துப் பண்புகளும் காணப்பட்டாலுங்கூட, இதிலும் மேலானவரே கிறிஸ்து ஆவார். கிறிஸ்துவாக இருப்பதற்கு, அவர் அனைவருக்காகவும், தம்மையே மீட்கும் பொருளாகக் கொடுத்திட்ட மனிதனாகிய கிறிஸ்து இயேசுவாக இருந்திருக்க வேண்டும். “”மற்றும் இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது” (1 தீமோத்தேயு 2:5-6). இது அவர் சாதாரணமான பிறப்பைக் கொண்டிராமல் மாறாக, பரத்திலிருந்து பிறந்தவராக, அசாதாரணமான பிறப்பைப் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது; ஏனெனில், அவர் சாதாரணமான விதத்தில் பிறந்திருப்பாரானால், அவரும் ஆதாமின் மற்றக் குமாரர்களைப்போன்று, மரணத் தீர்ப்புக்குக் கீழ்ப்பட்டவராக இருந்து, தம்மையோ (அ) மற்றவர்களையோ இரட்சிக்க முடியாதவராகக் காணப்பட்டிருந்திருப்பார். ஆனால், அவர் கிறிஸ்துவாக, தேவனால் அனுப்பப்பட்டவராக ஒவ்வொரு மனுஷனுக்காகவும் மரணத்தை ருசி பார்க்கும்படிக்குப் பிதாவின் மகிமையைத் துறந்து, மாம்சமாக்கப்பட்டவராக இருப்பாரானால் அப்பொழுது, நாம் அவரை உலகத்திற்கான மாபெரும் மீட்பராக பார்க்க வேண்டும். அதாவது, மனுக்குலத்தை மரணத்தீர்ப்பிலிருந்து விடுவிப்பதற்கும், ஆதாமுக்கும், அவருடைய சந்ததிக்கும் உயிர்த்தெழுதலைச் சாத்தியமாக்குவதற்குமென ஈடுபலியாக (அ) சரிநிகர், சமான பலியாக ஆகிடுவதற்குமென மரிக்க வேண்டியது அவசியமாய் இருந்த, உலகத்திற்கான மாபெரும் மீட்பராக அவரைப் பார்க்க வேண்டும்.
இதற்கும் மேலாக, கிறிஸ்து எனும் வார்த்தையின் அர்த்தம் அபிஷேகம் பண்ணப்பட்டவர் ஆகும். அபிஷேகிக்கப்பட்ட கர்த்தர் மாபெரும் இராஜாவாகவும், தீர்க்கத்தரிசியாகவும், ஆசாரியராகவும் இருப்பார் என்றும், அவருடைய இராஜ்யம் ஆயிரம் ஆண்டுகள் காணப்படும் என்றும், பாவத்தையும், பாவத்தை விரும்புகின்றவர்களையும் அவரது இராஜ்யம் அழித்துவிடும் என்றும், தேவனுடன் நல்உறவுக்குள் திரும்ப விரும்பும் மனுக்குலத்தை அவரது இராஜ்யம் தூக்கிவிடும் என்றும் வேதாகமம் தெரிவிக்கின்றது. வேதவாக்கியங்களின்படி, இந்த இயேசுவே, மேசியா ஆவார். அவருடைய தற்கால வேலை என்பது, அவருடைய மகிமையான இராஜ்யத்தில் அவரோடு உடன் சுதந்திரர்களாக இருக்கத்தக்கதாக ஒரு மணவாட்டி வகுப்பாரைச் சேர்த்துக்கொள்வதேயாகும். இந்த இராஜ்யமானது, தெரிந்துக்கொள்ளப்பட்ட சபை முதலாம் உயிர்த்தெழுதலின் மகிமையான மாற்றத்தில் நிறைவடைந்த பிற்பாடு, உடனடியாக ஸ்தாபிக்கப்படும்.
மேசியாவைக்குறித்து நீங்கள் என்ன எண்ணுகின்றீர்கள்? அவருடைய மகிமையிலும், இராஜ்யத்திலும் அவருடன் காணப்படத்தக்கதான இந்த அவருடைய அழைப்பைக்குறித்து என்ன எண்ணுகின்றீர்கள்? சுயத்தை வெறுத்தல், சுயத்தைப் பலிச்செலுத்துதல் எனும் விலையைக்குறித்து நீங்கள் என்ன எண்ணுகின்றீர்கள்? மாபெரும் பலனைக்குறித்து நீங்கள் என்ன எண்ணுகின்றீர்கள்? அர்ப்பணிப்பைப் பண்ணியுள்ளவர்கள் நிபந்தனைகளை மறுபடியும் சிந்தனைச் செய்து பார்க்கக்கடவர்கள்; இந்த அர்ப்பணிப்பை இன்னமும் பண்ணாதவர்கள், தீர்மானம் எடுத்துக்கொள்வதற்கு முன்னதாக, ஒருவேளை தாங்கள் சீஷர்களானால், தங்களுடைய பாதையில் நேர்மையுடனும், உண்மையுடனும் காணப்படுவதற்கும், புத்தியாய்ச் செய்வதற்குமென, இயேசு சொன்னது போன்று, “”உட்கார்ந்து, செல்லுஞ்செலவைக் கணக்குப் பார்க்கக்கடவன்.”
“”கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய பரம அழைப்பைப் புரிந்துக்கொள்பவர்கள் மாத்திரமே, தாங்கள் அர்ப்பணிப்புப் பண்ணினது முதல், ஆரம்பித்த ஓட்டத்தைப் பொறுமையுடன் ஓடுவதற்கு அவசியமான உற்சாகத்தைப் பெற்றிருப்பார்கள். மேலும், ஓட்டத்தை உண்மையாய் ஓடுகிறவர்கள் மாத்திரமே பரிசை அடைவார்கள்; மேலும், மாபெரும் பரிந்துப் பேசுபவரின் உதவியால் மாத்திரமே, ஒருவரால் அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமாக ஜெயங்கொள்பவராகுவதற்கும், முற்றிலும் ஜெயங்கொள்பவராகுவதற்கும் முடியும்.